🏠 வணக்கம் காப்பகம் நன்றி

தேடல் 🔎



புதிய பதிவுகளை பெற ✉



கணக்கியல்...

அனைவருக்கும் வணக்கம்... திருக்குறளிலுள்ள எழுத்துக்களைக் கணக்கிட்டுப் பார்க்க வேண்டும் என்கிற எண்ணம், குறளின் குரல் பதிவுகள் எழுதுவதிலிருந்து உண்டு... நேரம் கிடைக்கும் போதெல்லாம், முப்பால், இயல்கள், அதிகாரங்கள், குறள்கள், என அவ்வப்போது அனைத்திலும் உள்ள எழுத்துக்களைக் கணக்கிட்டும் வைத்துள்ளேன்... வெறும் எண்கள் மட்டும் அடங்கிய பல கோப்புகளை (Excel files) எவ்வாறு எப்படி எழுத்தாக மாற்றி, விளக்கமாகப் பதிவு எழுதிப் பகிர்ந்து கொள்வது என்று எண்ணிக் கொண்டிருக்கின்றேன்... காரணம் இன்றைய சூழலாக இருந்தாலும், தேடலும் ஆய்வும் பதிவைத் தொடர்ந்து, ஒரு முன்னோட்டமாக இந்தப்பதிவைத் தொடர்கிறேன்...
திருக்குறள் எழுத்துக்களின் கணக்கியல் மூலம், முந்தைய சில பதிவுகள் எவ்வாறு உருவானது...? என்பதைச் சற்றே திரும்பிப் பார்க்கிறேன் : பொச்சாவாமை அதிகார குறள்களின் உரைகளை எழுதிய பலரும், பொச்சாப்பு என்பதைத் தவறாக மறதி என்று உள்ளதைக் கண்டு திகைத்து, திருக்குறள் முழுக்க தேட வைத்து, பொச்சாப்பு எனும் சொல், மிதப்பின்மை என்று தெளிவாகத் தெரிய வைத்தது... → திருக்குறளின் சிறப்பெழுத்து... 'ற' என உள்ள சொற்களைத் தேடும்போது, இவறல் எனும் சொல்லைக் கண்டுபிடித்தது முக்கியமாக நினைக்கவிடாமல், நம் நாட்டின் வெங்கோலன் தலைமையைக் கண்டுபிடிக்க உதவியது... முப்பால் வாரியாக கொம்பில்லா குறள்களை அறிய வைத்ததுடன், | கற்றுக் கொண்டதை மூளையின் மூலையில் வைத்துச் செயல்படுத்து, அதை மனதில், "என்னமோ பெரிசா சாதனை" செய்ததாக நினைத்து கொம்பு முளைக்க ஆரம்பித்தால் வெட்டி விடு... இல்லையெனில் "எல்லாம் எமக்குத் தெரியும்" எனும் கொம்புள்ள மனிதனிடம் மாட்டிக் கொள்வாய்... | என்று, பகா வழி வாழ்க்கைக்கான வழியைக் காட்டியது... திருக்குறள் அதிகாரங்களின் கடையெழுத்து மூலம் அதன் கட்டமைப்பை, மை , மறைமொழி , ஆல் எனப் பிரிக்க வைத்து வியக்க வைத்தது...! இதனால் காமத்துப்பாலின் குறிப்பறிதல் அதிகாரத்தை குறிப்புணர்தல் என அறிதலா ...? உணர்தலா...? என்று கேள்வி கேட்க வைத்தது... பொறை எனும் இரண்டே எழுத்தின் மூலம், நிலமே சுமையாகக் கருதும் மூவரைக் கண்டு கொள்ள வைத்தது... அதே போன்று கயவனை மனிதன் என்று கூறாமல், கீழ் என்று இரண்டே எழுத்தையும், ஐயனின் உள்ளக்கொதிப்பையும் உணர முடிந்தது...

மேலுள்ள ஒவ்வொரு பதிவும் திருக்குறள் முழுக்க தேடிச் சரி பார்த்து எழுதியவை... அவ்வாறு இல்லையெனில், எடுத்துக்காட்டாகக் கொம்பில்லா குறள்கள் பதினேழு (17) தான், "பொறை" எனும் சொல் உள்ளவை எட்டு (8) குறள்கள் தான், எனத் தவறாகி இருக்கும்... "எண்ணென்ப" என்று எண்ணிற்கு முக்கியத்துவம் கொடுத்த ஐயன், முப்பாலில் ஒவ்வொரு எழுத்தின் எண்ணிக்கை அல்லது சொற்களையும் கணக்கிட்டே கட்டமைத்திருப்பார் என உறுதியாக நம்புகிறேன்... அந்த ஆய்வை தான் விரிவாகத் தொடர விரும்புகிறேன்... இன்னொரு ஆய்வு, ஒன்று முதல் எழுபது கோடி வரை எண்களைக் கொண்ட குறள்கள் பற்றியது... சரி, இதோ கணக்கியலைச் செய்வதற்குக் காரணமான குறளும் அதில் ஒரு கணக்கியலும் :-

 னை ழுத்தென் வ்விண்டும் ண்ணென் வாழும் யிர்க்கு

இதன் குறள் எண் 392 → இந்த எண் ஏழால் வகுபடும்; இது போல் 1330 குறள்களிலும் ஏழால் வகுபடும் குறள்கள் மொத்தம் 190 உள்ளன... 190 குறள்களின் எண்கள் : 7, 14, 21, ↭, 1330 வரை உள்ள எண்களின் கூட்டுத்தொகை : 127015 → இதன் கூட்டுத்தொகை (1+2+7+0+1+5=16 = 1+6=7) அல்லது மூல எண் : 7 மற்றும் 127015 என்ற எண்ணும் ஏழால் வகுபடக்கூடியது...! சரி இந்த 190 எண்களுக்கும் மூல எண் உண்டு அல்லவா...? அவற்றின் கூட்டுத்தொகையாக வருவது 952 → இதன் மூல எண்ணும் 7 (9+5+2=16 = 1+6=7) மற்றும் 952 என்ற எண்ணும் ஏழால் வகுபடக்கூடியது...! இது திருக்குறளின் அதிமுக்கியத்துவம் வாய்ந்த எண் 7 என ஏழின் மகிமை சொல்லும் ஒரு மிகச்சிறிய கணக்கு தான்...! ஆனால் அந்த 190 குறள்கள் எவை...? இதற்கும் ஆய்வு தேவை - ஏன்...? :-

உலக இயக்கத்திற்குக் கணக்கு தான் முதன்மை... "எண்"ணங்களுக்கும் அடிப்படை அதே...! திருக்குறள் சீர்களில் பல வேறுபாடுகள் இருந்தாலும், பலரின் ஆய்வில் விளக்கங்கள் உண்டு; ஆனால் குறள் வைப்பு முறையில் அவ்வாறு இல்லை... ஐயனின் குறள் வைப்பு முறையிலும் ஒரு பொருள் இருக்கும் என்பதை உறுதியாக நம்புகிறேன்... ரஷ்ய நாட்டுக் கிரெம்ளின் மாளிகையில், அணுவும் துளைக்க முடியாத சுரங்கப் பாதுகாப்புப் பெட்டகத்தில் வைக்கப்பட்டுள்ள திருக்குறள் நூலில், குறள் வைப்பு முறை சரியாக இருக்குமோ...? உலகில் ஒரே அற நூலான திருக்குறள், சில உரையாசிரியர்கள் தான் சார்ந்துள்ள மதம் சார்ந்து விளக்கமளித்து பலவகையில் சிதைத்துள்ளதை, பலரின் ஆய்வின் கோப்புகளின் மூலம் அறியலாம்... அதற்குத் திருக்குறள் கூறும் அறம் அறிந்தால், மனிதத்தைக் கொல்லும் மமதையும் மதத்தையும் ஒழிக்கலாம்... இந்த 'எண்ணென்ப' குறளின் எண் மட்டும் மணக்குடவர் முதல் பரிமேலழகர் வரை மா(ற்)றவில்லை என்பதில் மகிழ்ச்சி...!

ஏதோ இதுவரையில் 33 அதிகாரங்களைக் குறளின் குரலாக, எளிமையாக அனைவரும் புரிந்து கொள்ளும் வகையில், (நீங்கள் தான் சொல்ல வேண்டும் நண்பர்களே...!) பதிவு செய்துள்ளேன்... ஒரு அதிகாரத்தில் ஒரு குறளுக்கும் அதற்கடுத்த குறளுக்கும் சற்றே குழப்பத்துடன் தொடர்பு ஏற்படுத்தி எழுதியுள்ளேன்... ஆம், இந்த குறளுக்கு அடுத்து அந்த குறள் இருந்தால் தொடர்பு சரியாக இருக்கும் என்று நினைத்திருக்கிறேன்... இதைப் பற்றிய தகவல்கள் அல்லது ஆய்வுக் கட்டுரைகள் எங்கும் இல்லை; கணக்கியல் பற்றிய ஆய்வும் இல்லை... சரி, "இதோ இந்த 190 குறள்கள் உலக மனிதர்களின் வாழ்வியல் நியதிகளை உயர்த்திப்பிடிப்பவைகளாக உள்ளன" என்று பல வலைத்தளங்களில் உள்ளது போல் என்னால் உறுதியாகச் சொல்ல முடியாது...! காரணம் உரையாசிரியர்களின் குறள் வைப்பு முறை அப்படி...! முருகா...! என்ன செய்யலாம்...? 1330 குறள்களையும் கற்பதே உத்தமம்... எவ்வாறு...? திருக்குறள் கற்றல் என்பது உரைகட்கு அடிமைப் படாமல் ஐயன் நெஞ்சறிந்து கற்க... தன் வாழ்நிலையோடும் காலநிலையோடும் பொருந்திக் கற்க... கற்றபின் கற்றதன் படி நிற்க வேண்டும் என்ற செயல் முனைப்போடு கற்க... ஆனாலும் கணக்கியல் தொடரும்...

புதிய பதிவுகளை பெறுதல் :


தொடர்புடைய எண்ணங்களின் வண்ணங்கள் சில :


முகநூல் மூலம் கருத்துக்களை பகிர :

கருத்துகள்

  1. திருக்குறளில் மூழ்கி முத்துகளைக் கரை கொண்டுவந்து சேர்த்துக் கொண்டிருக்கிறீர்கள்.  தொடரட்டும் உங்கள் ஆராய்ச்சி.

    பதிலளிநீக்கு
  2. திருக்குறளை தமிழறிஞர்கள்கூட இவ்வளவு ஆராய்ந்திருப்பார்களா எனத் தெரியவில்லை. இவற்றைத் தொகுத்து எடிட் செய்து கிண்டில் பதிப்பாக வெளியிடுங்கள். நிச்சயம் வரவேற்பு இருக்கும்.

    பதிலளிநீக்கு
  3. //1330 குறள்களை கற்பதே உத்தமம் //

    அருமை.
    //வாழ்நிலையோடும், காலநிலையோடும் பொருந்திக் கற்க ... கற்றப்பின் கற்றதின் படி நிற்க
    வேண்டும் என்ற செயல் முனைப்போடு கற்க//

    முடிந்தவரை குறள் வழி நடக்க முயற்சி செய்கிறேன்.

    மிக அருமையாக இருந்தது உங்கள் தேடலும் ஆய்வும்.
    உங்கள் ஆய்வு தொடர வாழ்த்துக்கள்! வாழ்க வளமுடன்.
    திருக்குறள் நூல் ரஷ்ய நாட்டுக் கிரெம்ளின் மாளிகையில் அணுவும் துளைக்க முடியாத பாதுகாப்பு பெட்டகத்தில் இருப்பது அறிந்து மகிழ்ச்சி.

    பதிலளிநீக்கு
  4. தங்களது குறள் ஆராய்ச்சி தொடரட்டும் ஜி.

    வாழ்க வளமுடன்...

    பதிலளிநீக்கு
  5. திருக்குறளைப் பற்றிய நல்ல ஆராய்ச்சி. எவரும் முன்னெடுக்காத ஒன்று என்று புரிகிறது. உங்கள் ஆய்விற்கு வாழ்த்துகள் வெற்றி பெறட்டும்!

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
  6. டிடி நான் கணக்குல ரொம்ப ரொம்ப ரொம்ப சுமார். சராசரிக்கும் மிக மிகக் குறைவு. எனவே எண்ணியல் பற்றிய உங்க கணக்கு மண்டையில் ஏற சிரமப்பட்டது. மீண்டும் வாசித்துக் கொண்டேன். கணக்குப் புரியவில்லை என்றாலும் பொருள் புரிந்தது.

    உங்கள் ஆய்வு அருமை டிடி. தொடரட்டும் உங்கள் ஆய்வு. அதுவும் இதுவரை யாரும் செய்யாத ஆய்வு என்பதால் நீங்கள் ஆராய்ச்சிக் கட்டுரையாக வெளியிடலாம்.

    கடைசியில் சொன்னதும் சிறப்பு. வாழ்த்துகள் பாராட்டுகள்

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நம் முனைவர் ஜம்புலிங்கம் ஐயா அவர்களும், ஆய்வுக் கட்டுரை, மின்னூல், இன்னும் பலவிதமான ஆலோசனைகள் தந்தார்கள்... எண்கள் மட்டும் கொண்ட அட்டவணை பட்டியல்களுடன், எழுதப் போகும் பதிவுகள் வெளியிடும் போது, "இவை பலரும் சேர்ந்து விவாதித்தும், கணக்கிட்டும் செய்ய வேண்டியவை" என்று தாங்களும் சொல்வீர்கள் என்று நம்புகிறேன்... இயல்கள் / அதிகாரங்கள் / குறள்கள் - இவற்றில் எதை முதலில் ஆவணப்படுத்தலாம் என்று எண்ணிக் கொண்டிருக்கையில், பாகற்காய் முதலில் சாப்பிடுவது போல், முதலில் குறள்கள்...

      நீங்கள் நினைப்பது போல் திருக்குறளின் எழுத்துக்கள் கணக்கு மிக மிக எளிது... ஓரிரு நிமிடங்களே...! அதற்கு முக்கிய காரணம், நம் நீச்சல்காரனின் சுளகு எந்தளவு எனக்கு இதில் உதவுகிறது என்பதைச் சொல்ல வார்த்தைகள் இல்லை... அதையும் பதிவு செய்வேன்... நன்றி...

      நீக்கு
  7. இதெல்லாம் தங்களுக்கே கை வந்த கலை!.. அருமை...

    பதிலளிநீக்கு
  8. ஏற்கெனவே கணக்கென்றால் எனக்கெல்லாம் மணிக்கணக்கா உதறல் எடுக்கும். இதில் வகுத்தல் பெருக்கல் கழித்தலா... அதுவும் நம்ம திருக்குறளிலா... கிழிஞ்சுது கோதாவரி ... ஐ ஆம் எஸ்கேப் ...

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

நகுதற் பொருட்டன்று நட்டல் மிகுதிக்கண்
மேற்சென்று இடித்தற் பொருட்டு. (குறள் 784)

நட்புச் செய்துகொள்வது நண்பரோடு சிரித்து மகிழ்வதற்காக மட்டும் அல்ல. மிகுதியாகத் தவறு செய்யும்போது, அவரைக் கடிந்து திருத்துவதற்கே ஆகும்.