இவறல்...

தலைப்பில் உள்ள சொல், திருக்குறளில் எங்கெல்லாம் வருகிறது...? மற்றும் விளக்கங்கள்...


432.இவறலும் மாண்பிறந்த மானமும் மாணா உவகையும் ஏதம் இறைக்கு

இந்தக் குறள் பொருட்பாலில், அவசியம் அனைவரும் கற்றுணர வேண்டிய அரசியல் எனும் இயலில் வருகிறது... அரசியலில் முதல் அதிகாரத்தை, ஒரு நாட்டின் தலைவன் எவ்வாறு இருக்க வேண்டும் என்று ஆராய்ந்த போது எழுதிய →இறைமாட்சி← பதிவுகள்... அதன்பின், கல்வி, கல்லாமை, கேள்வி, →அறிவுடைமை← ஆகிய அதிகாரங்களை அடுத்து ஆறாவதாக, 'குற்றங்கடிதல்' எனும் அதிகாரத்தில் வருகிறது... சிறந்த பொருளியல் கொள்கையை வெளிப்படுத்தும் இந்த அதிகாரம், குற்றமின்மையே வாழ்க்கையின் பொருள், குற்றமில்லா வாழ்வே என்றும் சிறப்பு என்பதையும் காட்டுகிறது... இனி 432-வது குறளின் சொல்லாய்வு :

இவறல் : இந்த சொல்லிற்கு 'பற்றுள்ளம் என்னும் இவறன்மை' என்று இதன்பின் வரும் 438வது குறளிலும், இவறியான் என்று 437வது குறளிலும் ஐயன் விவரித்துள்ளார்... வரிப்பணம் போன்ற பொதுப் பொருள் மற்றும் பொது நிதி ஆகியவற்றின் மீது கொள்ளப்படும் பற்றுள்ளம் பற்றியதே 'இவறல்' எனப்படும்... ஒரு நாட்டின் தலைவன் என்ற காரணத்தால், வந்த அனைத்து செல்வங்களையும் தனக்கென பயன்படுத்தவோ, பெருக்கவோ செய்யாமல், அவற்றைப் பொதுநலம் கருதி நாட்டுக்காக, குடிமக்களுக்காகப் பயன்படுத்தக் கடமைப்பட்டவன்... செலவு செய்யவேண்டியவற்றுக்குச் செலவிட்டே ஆகவேண்டும்... வஞ்சக மனப்பான்மையுடன் 'முடியாது' - 'இல்லை' என்று அப்பொருட்கள் மேல் பற்றுக் கொண்டு விடாப்பிடியாக இருக்கும் குற்றத்தை இவறல் எனப்படும்... செங்கோலனுக்கு தகுதி இல்லாதவன், கொடுங்கோலனாகி, வெங்கோலனாக தனக்கு முழு உரிமை இருந்தும் வெஃகிய மனம் கொண்டு, செலவு செய்யாமல் தேக்கி வைத்துக் கொள்ளும் மனநிலையைக் குற்றமாகும் என்கிறார் ஐயன்...

மாண்பு இறந்த மானம் : இதனை - பெருமை கடந்த மானவுணர்ச்சி / வறட்டுக் கௌரவம் / போலியான அல்லது பொய்யான மானவுணர்ச்சி / அளவு கடந்து மானவுணர்ச்சி பேசுவது / பெருமையற்ற செயல்களை உயர்வாக நினைத்துச் செருக்கு அடைவது - இவ்வாறு எனலாம்... ஒரு நாட்டின் தலைவனுக்கு வஞ்சனையற்ற தூய தொண்டு மனப்பான்மை தேவை... 'தொடங்கிய செயல்கள் அனைத்தும் நன்மையே தராது' என்று தெரிந்தும், எடுத்த செயலை முடித்தே தீருவேன் என்ற பொய்யான மான உணர்ச்சி கொண்டு, செருக்குடன் வீண் பெருமைக்காகப் பிடிவாதமாக அறமற்ற செயல்களைத் தொடர்வதில் நன்மை ஏதுமில்லாமல், மக்களையும் நாட்டையும் சீரழிவாக்கும்... இத்தகைய போலியான மானம் தலைவனிடமிருந்து நீங்கவேண்டிய குற்றமாகும் என்கிறார் ஐயன்...

மாணா உவகை : இதனை - நன்மை தராத மகிழ்ச்சி / அளவிறந்த மகிழ்ச்சி / வேண்டாத மகிழ்ச்சி / எளியவர்களை அடக்கியதால் பிறந்த மகிழ்ச்சி / வீணானவற்றுக்கும் தீயவற்றுக்கும் மகிழ்வது / தான் செய்த சிறிய செயல்களை வைத்துக்கொண்டு, அவற்றை பெரிய செயல்களாக முடித்துவிட்டதாகச் சொல்லி, மகிழ்ச்சியடையும் பெருமையற்ற தன்மகிழ்வு / கள்ளுண்ணல் மற்றும் காமம் போன்றவற்றில் எல்லைகடந்த பெருமகிழ்ச்சியில் திளைப்பது / தன் அதிகாரத்தை வெளிப்படுத்தும் விதமாகப் பொருந்தாத செயல்களைச் செய்து மற்றவரைத் துன்புறுத்தி மகிழ்ச்சி காண்பது / குற்றமான காரியங்களைச் செய்தோ, செய்யச் சொல்லியோ அல்லது குற்றங்களை மறைக்க மகிழ்ச்சி காட்டுவது / எளியவர்களை இகழ்ந்து அதில் மகிழ்ச்சி காண்பது - என சிறுமை தரக்கூடிய களிப்பு எல்லாம், எந்தவொரு மனிதனுக்கும் குற்றமாகும்... இழிவு தரக்கூடிய இவற்றையெல்லாம் களையப்படிய வேண்டிய குற்றங்களே தவிர, அற்ப பெருமை கொண்டு மகிழ்வதற்கல்ல என்கிறார் ஐயன்...

இறைக்கு : தனிமனிதனிடம் இருந்து ஒரு நாட்டின் தலைவன் வேறுபட்டவன்... மக்களுக்கு நன்மை தரும் பலவித பொறுப்புகளை நிறைவேற்றக் கடமைப்பட்டவன்... மேற்கண்ட இக்குற்றங்கள் விலக்கப்படாவிட்டால், அது அவனது தனி மதிப்பு பாதிப்பதுடன், பொதுநலன் வெகுவாகக் கேடு விளைவிக்கும்... இந்த அதிகாரத்தின் குறள் விளக்கங்கள், பொதுமக்களை விட, பெரும்பான்மை ஒரு நாட்டின் தலைவனுக்கும் மற்றும் பல தலைமைகளுக்கும் பொருந்தும்... தனக்கு உரிமையில்லாத பொருளின் மேல் பற்றுள்ளம், சிறப்பில்லாத மான உணர்ச்சி, தகாத மகிழ்ச்சி ஆகியன, ஒரு நாட்டின் தலைவன் நீக்கியே ஆகவேண்டிய குற்றங்கள் என்பதால், இறைக்கு எனக் கூறுகிறார் ஐயன்...© மலைக்கள்ளன் தஞ்சை ராமையா தாஸ் S.M.சுப்பையா நாயுடு T.M.சௌந்தரராஜன் @ 1954 ⟫

எத்தனை காலம் தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே - இன்னும் - எத்தனை காலம் தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே - இந்த நாட்டிலே - நம் நாட்டிலே... சத்தியம் தவறாத உத்தமன் போலவே நடிக்கிறார்(2) - சமயம் பார்த்துப் பல வகையிலும் கொள்ளை அடிக்கிறார்(2) - பக்தனைப் போலவே பகல் வேசம் காட்டி - பாமர மக்களை வலையினில் மாட்டி - எத்தனை காலம் தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே - சொந்த நாட்டிலே - நம் நாட்டிலே... இதற்கு மேல் பாடலில் வரும் வரிகள், வருங்காலத்தில் கேட்டு இன்புற மட்டுமே... நன்றி...

குறள்: 935 - இவறியார் - ஒரு சிறிய சிந்தனைப் பதிவு : →புத்தக வாசிப்பு என்பது...

குறள்: 1002 - இவறும், குறள்: 1003 - இவறி - ஒரு குறளின் குரல் பதிவு : →எதை வைச்சி என்னை நினைப்பாங்க...?

புதிய பதிவுகளை பெறுதல் :


தொடர்புடைய எண்ணங்களின் வண்ணங்கள் சில :


முகநூல் மூலம் கருத்துக்களை பகிர :

கருத்துகள்


 1. இதுவரை அறியாத சொல் மட்டுமல்ல..அவசியம் அறிந்திருக்க வேண்டிய சொல் இது...இன்றைய சூழலில் யாரிடமும் இத்தன்மை இல்லாத காரணத்தால் இச் சொல்லும் வழக்கொழிந்ததோ என எண்ண வைக்கிறது

  பதிலளிநீக்கு

 2. /இவறல்/
  குறித்த விளக்கம் அறிந்தேன் ஜி

  வழக்கம்போல் பதிவு ஸூப்பர்...

  பதிலளிநீக்கு
 3. வணக்கம் சகோதரரே

  அருமையான பதிவு. "இவறல்" என்ற அந்த பொருள் அறியாத சொல்லுக்கு தாங்கள் கொடுத்துள்ள பொருள் விளக்கமும், பின் அந்த குறளில் வரும் ஏனைய சொற்களுக்கு அருமையான விளக்கங்களும் தந்திருப்பது படித்து மிகவும் மகிழ்ச்சியுடன் தெளிவுற்றேன்.

  அருமையான விளக்கங்களுடன் பொருத்தமான பாடலையும் கேட்டு ரசித்தேன். நீங்கள் ஒவ்வொரு குறள்களுக்கும் தரும் பெருந்தொண்டு பாராட்டத்தக்கது. இந்த மாதிரி தங்கள் வாயிலாக ஒவ்வொரு குறளுக்கும், குறளமுதம் பெற நாங்களும் மிகவும் கொடுத்து வைத்திருக்க வேண்டும். பகிர்வுக்கு மிக்க நன்றிகள்.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு 4. இவறல் பற்றிய உங்கள் விளக்கம் மிகச் சிறப்பு. வழக்கம் போல கவரும் பதிவுதான்.

  பதிலளிநீக்கு
 5. இதுவரை கேட்டிராத, அறிந்திராத சொல். அருமையான விளக்கம்.

  பதிலளிநீக்கு
 6. 438 வது குறளுக்கு நீங்கள் கொடுத்த விளக்கம் மிக அருமை.
  யாருக்கும் உதவாமல் பொருளின் மீது பற்று கொண்ட ஈயாத்தன்மை , குற்றங்களுள் பெருங்க்குற்றம்தான்.
  அதுவும் வீட்டை, நாட்டை ஆளும் தலைவனுக்கு இருந்தால் நல்லது ஒன்றும் நடக்காதுதான்.

  மான்பு இறந்த மானம் சொற்பிரயோகம் அருமை, அதன் விளக்கம் மிக அருமை
  தன்னை உயர்த்தி மற்றவர்களை தாழ்த்தி பேசுதலும் ஆகாதுதான்.

  மாணா உவகை, இறைக்கு விளக்கம் எல்லாம் அருமை.

  தலைவனுக்கு வேண்டிய நற்பண்புகளும், நீக்கவேண்டிய குணங்களையும்
  ஐயன் சொன்னது போல் கடைபிடித்தால் நாட்டுக்கு நல்லதுதான்.

  பகிர்ந்த பாடல் நல்லபாடல்.  பதிலளிநீக்கு
 7. எனக்கு மட்டும் தகுதி இருந்தால் முனைவர் பட்டம் உங்களுக்கே நண்பரே.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பட்டம் கொடுப்பதற்கு, பல்கலைக் கழகத்தில் இருக்க வேண்டும் என்று அவசியமில்லை நண்பரே.
   முனைவர் பட்டம் எதற்கு.
   குறள் நெறிச் செல்வர் என்று பட்டம் கொடுத்துவிடுவோம்,
   நான் முன்மொழிகிறேன். தாங்கள் வழிமொழியுங்கள்
   குறள் நெறிச் செல்வர் வாழ்க, வாழ்க

   நீக்கு
 8. இவறல்
  அறியாத சொல் அறிந்தேன்
  பொருள் அறிந்து வியந்தேன்

  பதிலளிநீக்கு
 9. இவறல்- ஐயன் சொல்... நிகழ்காலத்தில் ஆளும் ஒருவரை குறிக்கிறது.......

  பதிலளிநீக்கு
 10. இவறல்...
  இது வரை கேட்டிராத சொல்.
  அறந்தையார் கொடுத்திருக்கும் அன்பு பட்டத்தை நானும்
  ஆதரிக்கிறேன்.
  உங்களைப் போல வள்ளுவப் பெருந்தகையைப்
  பற்றி எடுதுச் சொல்ல வேறு யாரும் இல்லை.
  இன்று நடப்பதை அன்று சொன்ன
  பெருந்தகையின் கருத்தை
  மலைக்கள்ளன் பாடல் வழியாக மீண்டும் உணர்கிறோம்.
  உலகெங்கும் உள்ள அனியாய அரசியல்
  பிழைத்தவர்களைச் சாட கையில் சாட்டை வைத்திருக்கும் வள்ளுவரே
  காக்க வேண்டும்.
  மிக நன்றி அன்பு தனபாலன்.

  பதிலளிநீக்கு
 11. நல்லதொரு சொல் - அதற்கான விளக்கமும் நன்று.

  பாடல் - எத்தனை அர்த்தம் பொதிந்த பாடல் - எல்லா காலங்களுக்கும் பொருந்தும்.

  பதிலளிநீக்கு
 12. இதுவரை நாமறியா தமிழ் சொல் இவறல் ... அறிய வைத்ததற்கு நன்றி !!!

  பதிலளிநீக்கு
 13. ‘இவறல்’ என்ற சொல்லுக்கு சரியான விளக்கம் தந்தமைக்கு நன்றி! திருக்குறளை தங்களைப்போல் படித்து ஆராய்ந்தவர்கள் வெகு சிலரே. எனவே திரு கரந்தை ஜெயக்குமார் அளித்த ‘குறள் நெறிச் செல்வர்’ ‘என்ற பட்டத்திற்கு தகுதியானவர் தாங்கள் தான். எனவே அவர் சொன்னதை நான் வழிமொழிகின்றேன். குறள் நெறிச் செல்வர் வாழ்க! வாழ்க!!

  பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

நகுதற் பொருட்டன்று நட்டல் மிகுதிக்கண்
மேற்சென்று இடித்தற் பொருட்டு. (குறள் 784)

நட்புச் செய்துகொள்வது நண்பரோடு சிரித்து மகிழ்வதற்காக மட்டும் அல்ல. மிகுதியாகத் தவறு செய்யும்போது, அவரைக் கடிந்து திருத்துவதற்கே ஆகும்.