புத்தக வாசிப்பு என்பது...


"களவும் கற்று மற" என்று சொல்கிறார்களே... திருட்டைக் கூட கற்றுக்கொண்டு பிறகு மறந்து விடு என்று அர்த்தமா...? இது ரொம்ப தவறாச்...சே...! "களவும் கற்க மற" என்று இருக்க வேண்டுமோ...? தவறு என்பது தவறிச் செய்வது, தப்பு என்பது தெரிந்து செய்வது (2) தவறு செய்தவன் திருந்தப் பார்க்கணும், தப்புச் செய்தவன் வருந்தியாகணும் ! நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி - இந்த நாடே இருக்குது தம்பி... (படம் : பெற்றால் தான் பிள்ளையா) முன்னோர்கள் சொன்னதில் தவறா...? தப்பா...?

மனச்சாட்சி தம்பி, பெரியோர்கள் சரியாத்தான் சொல்லியிருக்காங்க... நாம எடுத்துக் கொண்டது தான் தவறு... இல்லை இல்லை தப்பு...! பிறருக்குச் சொந்தமான பொருளை "சூது" முறையில் ஏமாற்றி எடுத்துக் கொண்டாலும் அதுவும் திருட்டு தான்... நம்ம வள்ளுவர் "சூது"ங்கிற அதிகாரத்திலே :


கவறும் கழகமும் கையும் தருக்கி
இவறியார் இல்லாகி யார்.
(குறள் எண் 935)
சிறு விளக்கம் : சூதாடு கருவியையும், சூதாடுமிடத்தையும், தனது ஆடும் கைத்திறனையும் பெருமை பேசிக் கொண்டு, சூதை விடாது பற்றிக் கொண்டிருப்பவர், தனது செல்வமெல்லாம் இல்லாமல் போய்விட்டது என்றே எண்ணலாம்...

கவறு = சூதாடும் கருவி, கழகம் - சூதாடும் இடம் - இந்த இரண்டையும், தம் கைகளையும் நம்பி மேல் சென்றவர்கள் ஒன்றும் இல்லாதவராய் ஆகி விடுவார்கள்... திருட்டும், சூதும் செய்வது கைகள்... "இவ்விரண்டையும் கையில் தொடாமல் இரு" என்பதே பெரியோர்கள் சொன்ன அறிவுரை... "களவும் கவறு மற" என்பதே சரி...

ஹேஹே... இன்றைக்கெல்லாம் தாயக்கட்டைகள் தேவையில்லை... கண்களும், புன்னகையும் உட்பட அனைத்தும் சூது...! கரன்சி நோட்டு கட்டு - கண்ணை ரெண்டும் மறைக்குது... நாயி வித்த காசு கூட லொல்லு லொல்லுனு குரைக்குது... காசு பணம் துட்டு மணி மணி... காசு பணம் துட்டு மணி மணி...→படம் : சூது கவ்வும்←இப்போ என்னை... அதாவது சில புத்தகங்களை வாசிக்கும் போது பல சூதுகள் கவ்வுதே ஏன்...?

பண்டித ஜவஹர்லால் நேரு அவர்கள், நம் நாட்டின் பிரதமராக இருந்த போது, ஒருமுறை சென்னைக்கு வந்த போது, வாசிப்பதற்கு அந்த மாதத்தில் வெளியாகியிருக்கின்ற மிக முக்கியமான புத்தகத்தை நூலகத்திலிருந்து தருவித்து தருமாறு கேட்க, உடனே அதிகாரிகள் வாகனத்தை எடுத்துக் கொண்டு, சென்னையிலிருக்கின்ற மிகப் பெரிய நூலகமான கன்னிமாரா நூலகத்திற்கு சென்று, புத்தகத்தை நூலகம் வாங்கப்பட்டு விட்டதை உறுதி செய்து விட்டு, நூலக அலமாரிகளில் தேடிப் பார்த்து, அங்கில்லை என திகைத்தவுடன், உடனே நூலக அதிகாரிகள் அந்த நூலை யாரேனும் எடுத்துச் சென்றுயிருப்பார்கள் என்பதை அறிய, புத்தகம் வழங்கும் பேரேட்டில் தேடினால், அந்தப் பேரேட்டில் நூலில் பெயரை எழுதி ஒருவர் கையெழுத்துயிட்டு விட்டு எடுத்து சென்றிருப்பது யார் தெரியுமா...?

எவ்வளவு பெரிய வரி ! கேட்ட கேள்விற்கு பதிலில்லை,ம்... மேலே சொல்லு !

C.N.அண்ணாதுரை... பேரறிஞர் அண்ணாதுரையின் பெயர் தான் அது...! மிகப் பெரிய எழுத்தாளரும், அறிஞரும், பிரதருமான நேருஜி அவர்கள் விரும்பிய அந்தப் புத்தகத்தை, அவரைப் போலவே விரும்பி அவருக்கு முன்னேயே படிக்க எடுத்துச் சென்றிருக்கிறார் அறிஞர் அண்ணா... நல்ல புத்தகங்களை வாசிக்கும் எண்ணங்களில் அறிஞர்கள் ஒத்துப் போவது சகஜம் தானே...?

அதனால் தான் அவர்கள் அறிஞர்கள்... நல்லதையே வாசிக்க வேண்டும் இல்லையெனில் நேரம் வீண் என்பதை அவரவர் அனுபவமும் வயதும் ஒரு நாள் சொல்லும்...!


© குலமகள் ராதை கண்ணதாசன் K.V.மகாதேவன் T.M.சௌந்தரராஜன் @ 1963 ⟫

சினிமா ஸ்டாருங்க படங்களை போட்டா - தெருவில் பேப்பர் கிடைக்கலே (2) அதில் சிரிப்பு கார்ட்டூன் காதல் கேசுகள் - சேர்த்தால் பிஸினசு மொடையிலே (2) உலகம் இதிலே அடங்குது உண்மையும் பொய்யும் விளங்குது (2) கலகம் வருது தீருது அச்சுக் கலையா நிலமை மாறுது (2) காதல் கதைகள் படிப்பதற்கென்றே வாலிபர் கூட்டம் வாங்குது (2) அந்தக் கதையில வருவத மனசில நெனச்சி ராத்திரி பகலா ஏங்குது (2) வானொலி, தொலைக்காட்சி, சினிமா, கைபேசி, இணையம் என அறிவியல் வளர்ச்சியில் ஊடகங்கள் வளர்ந்து கொண்டே போகும் போது, புத்தக வாசிப்பு என்பதே படுபயங்கர பாதாளத்திற்கு சென்று விட்டது அல்லது தூங்கி விட்டது என்பதே எனது ஏக்கம்...!

மனச்சாட்சி, அப்படித்தான் பரவலாக பேசிக் கொண்டிருக்கிறோம்... குடும்பத்தில் நாளிதழ் வாசிப்பு குறைந்து விட்டது, அதிலும் காட்சி ஊடகங்களின் அபரிமிதமான தாக்கங்களால், வீட்டில் பெண்களுக்கு புத்தக வாசிப்பு என்பது இல்லாமலே போய் விட்டது... குழந்தைகள் பள்ளிப்பாடங்கள் படிப்பது கூட கடமைக்கே என்றெல்லாம் பேசி விவாத்திக்கிறோம்...

அன்றைக்கு படிக்காத பள்ளிப் பாடங்களை இன்றைக்கு பெற்றோர்கள் தான் முதலில் படிக்கிறார்கள் என்பது இன்றைய நிலை...! அவை நல்லது... (வேறு வழி...?) நாம் தான் முதல் ஆசிரியர்கள்... அப்புறம் ஆண்கள் பல தரப்பட்ட புத்தகங்களை வாசித்து, அவனுக்கு கூட பிரயோசனமில்லாமல் போகுதே... பெண்கள் வாசித்தால் அந்த தலைமுறையையே வாசிக்க வைக்குமே...

கேள்வி மட்டும் கேளு...! அந்த உண்மையை பிறகு பேசலாம்...! நாளிதழ், வாரயிதழ், மாதயிதழ் என உற்பத்தி குறைந்து போய் இருக்கிறதா...? என்று பார்த்தால், அது தான் இல்லை... புதிய புதிய இதழாய் சஞ்சிகைகள் பெருக்கிக் கொண்டே தான் போகின்றன... புத்தகங்களின் வளர்ச்சியோ அபரிமிதமான வளர்ச்சியை தான் எட்டி உள்ளது... விலையோ அதனை விட...! ஆங்காங்கே நடக்கும் புத்தக திருவிழாவில் புத்தகங்கள் கோடிக் கணக்கில் விற்றுத் தீர்ந்து கொண்டிருக்கின்றன... திருவிழா கூட்டம் போல மக்கள் வந்து வாங்கி திரும்புகின்றனர்... அப்படியானால் ஊடகங்களின் வளர்ச்சியால் புத்தகங்களின் வாசிப்பு குறைந்து விட்டது என்று சொல்வதை ஏற்றுக் கொள்ள முடியுமா...? இது ஒரு சிக்கலான கேள்வி...?

என்னது ஒரே ஒரு கேள்வியா...? விழாவிற்கு வரும் வருகை அளவிற்கு புத்தகங்கள் விற்பனை ஆகுகின்றனவா...? "கேள்விப்பட்டதில்" புத்தக விலையை விட, வயிறும் நிரம்பவில்லையாம்... விலை அப்படி...!

வயிற்றுக்கு உணவில்லை என்றால் வரலாறே மாறிப்போகும்...! அதனால் "செவிக்குஉணவு இல்லாத போழ்து சிறிது வயிற்றுக்கும் ஈயப் படும்."

செவிச்சுவை உணராம வாயின் சுவைக்காக மட்டுமே வாழும் மக்கள் இருந்தா என்ன...? செத்தா என்ன...? இரண்டும் ஒன்னு தான்னு நீ சொன்ன கேள்வி அதிகாரத்தில் கடைசி குறள்...! இப்போ எனது கேள்வி குரல்கள் : வாங்குகிற புத்தகங்களை சிரத்தையோடு வாசிப்பவர்கள் எத்தனை பேர்...? அப்படி வாசிப்பதனால் கிடைத்த ரசனைகளை / சுவாரஸ்யங்களை / "ஸ்பெஷல்" இன்ப துன்பங்களை நண்பர்களிடம் பகிர்ந்து கொள்வதோ அல்லது புத்தகம் வாங்க வசதி இல்லாதவர்களிடம் தருவது எத்தனை பேர்...? இல்லையென்றால் பலரும் வாசித்து பயன் பெறட்டும் என்று அவ்வப்போது ஊரிலிருக்கும் நூலகத்தில் ஒப்படைப்பது எத்தனை பேர்...? இவைகளை விட வாசிப்பின் மூலம் கிடைக்கும் நற்சிந்தனைகளை வாழ்வில் நடைமுறைப் படுத்த முயற்சிக்கிறோமா...? இல்லை "வாங்கின புத்தகங்களில் எத்தனை சதவீதம் நம் வாழ்க்கைக்கு பயன்படக் கூடியவை...?" என்றாவது சிந்திக்கிறோமா ? சிந்தித்தால் - அதன்படி வாழ்வை வளப்படுத்துகிறோமா...?

என்றாவது என்பது எந்த நாள் என்றும் எடுத்துக்கொள்ளலாம் தானே...? பதில்கள் சொன்னால் மீண்டும் என்னை சூது கவ்வும்... ஹிஹி... உனது கேள்விகள் அவரவர் மனம் சம்பந்தப்பட்டவை, இருந்தாலும் வேறுவிதமாக ஒரு கருத்துக்கணிப்பு நடத்தி விடலாம்... சரியா...?

நண்பர்களே, "புத்தக வாசிப்பு என்பது..." பற்றிய உங்களது எண்ணங்களை கருத்துப்பெட்டியில் சொல்லுங்கள்... நன்றி...

புதிய பதிவுகளை பெறுதல் :


தொடர்புடைய எண்ணங்களின் வண்ணங்கள் சில :


முகநூல் மூலம் கருத்துக்களை பகிர :

கருத்துகள்

 1. வாசிக்காத நாட்கள் எல்லாம் சுவாசிக்காத நாட்கள் என்பர்.
  அறிஞர் அண்ணாதுரை அவர்கள், அமெரிக்காவில் அறுவை சிகிச்சைக்காக அனுமதிக்கப் பட்டிருந்தபோது, அறுவை சிகிச்சையினை ஒரு நாள் தள்ளிப் போடும்படி மருத்துவரை வேண்டினார். காரணம் படித்துக் கொண்டிருந்த புத்தகத்தை, முழுமையாய் படித்து முடிப்பதற்காக
  நூல்களை வாசிப்போம்
  அருமையான பதிவு ஐயா நன்றி
  தம +1

  பதிலளிநீக்கு
 2. நேரு புத்தகத்தைத் தேட,அப்புத்தகத்தை அண்ணா எடுத்துச் சென்றிருந்தார் என்ற செய்தி முன்னரே படித்துள்ளேன். தங்களின் எழுத்து நடை மூலமாகப் படித்தபோது இன்னும் ரசித்தேன். பீடல் காஸ்ட்ரோ அதிகம் படிக்கும் வழக்கம் உள்ளவர். (அண்மையில் காலமான) வெனிசுலா அதிபரான சவேசுடன் தொலைபேசியில் காஸ்ட்ரோ பேசும்போது அவர் என்ன புத்தகம் படிக்கிறார் எனக் கேட்க, அதே கேள்வியை அவரும் இவரிடம் கேட்க இருவரும் ஒரே ஆசிரியர் எழுதிய புத்தகத்தைப் படித்துக்கொண்டிருந்ததைப் பற்றிப் படித்தேன். வாசிப்புக்கு இணை எதுவுமில்லை.

  பதிலளிநீக்கு
 3. வாசிப்பு குறைஞ்சுதான் போச்சு. ஆறு கோடித்தமிழர் வாழும் இடத்தில் குறைஞ்சது ஒரு சதம் ஆட்கள் புத்தகம் வாங்கி வாசிச்சாலும் ஆறு லட்சம் பிரதிகள் விற்குமே. ஆனால் வெறும் ஆயிரம் புத்தகம் ஒரு பதிப்புன்னு போட்டு அதுலே முக்கால்வாசி விக்காமக் கிடக்குன்னுல்லே கேள்விப்படுகிறோம்:(

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. 300 புத்தகம் அச்சடித்தால் கூட முக்கால்வாசி திருப்பிதான் எடுத்துக்கிட்டு போறாங்களாம் டீச்சர். அதான் கொடுமையா இருக்கு.

   நீக்கு
 4. //அன்றைக்குப் படிக்காத பள்ளிப் பாடங்களை இன்று பெற்றோர்கள்தான் முதலில் படிக்கிறார்கள்// உண்மை, உண்மை!!

  புத்தகம் படிக்கும் பழக்கம் சிறுவயதிலேயே ஏற்பட்டு விட்டால் பாடங்களைக் கூட ரசித்துப் படிக்கலாம்.

  எனக்கும் இதேபோல கேள்விகள் வந்ததால்தான் சில கேள்விகள் கேட்டு ஒரு பதிவு இட்டிருந்தேன்.

  பதிலளிநீக்கு
 5. பெண்களின் வாசிப்புத்திறன் அதிகரிக்கவேண்டும். கட்டுரை நல்லாயிருக்கு.

  பதிலளிநீக்கு
 6. என்னது கழகம் - சூதாடும் இடம் . அண்ணாச்சி பாத்து
  நாம் தமி'ல'க கலக கண்மணிகள் கலகத்திற்கு வந்துவிடப்போகிறார்கள்.

  பதிலளிநீக்கு
 7. ஊடகங்களின் துணையால்தான் புத்தகங்கள் வாசிக்கும் பழக்கம் அசூர வேகத்தில் சென்று கொண்டு இருக்கிறது. சென்னை புத்தகக் காட்சி அரங்கில், ஊடகங்களுக்கென ஒரு பிருத்தோயகமான அறை உருவாக்கப்பட்டு, நிருபர்கள் அங்கிருந்துவாரு செய்திகளை வழங்கினர். புத்தகக் காட்சி நடந்த அனைத்து நாட்களும் பத்திரிகைகள் வரிந்துக்கட்டிக் கொண்டு ஒரு பக்கத்தை அதற்காக செலவிட்டன. இதில் டிவியும் ரேடியோவும் அடங்கும்!.

  பதிலளிநீக்கு
 8. ஊடகங்கள் நிச்சயமாக புத்தகங்கள் விற்கப்படுவதற்கும்/வாசிக்கப்படுவதற்கும் துணை புரிகின்றன.

  நாம் வாசிக்கும் பழக்கத்தை உருவாக்கிக் கொண்டால், மதிப்பெண்களுக்காகப் படிப்பதும் சுவாரஸ்யமாகிவிடும்.

  உங்கள் கேள்விகளுக்கு ...பதில் யெஸ் யெஸ் என்பதே இங்கிருந்து....பகிர்கின்றோம். புத்தகங்களை மட்டுமல்ல, இந்து பதிவுகளில் வாசிப்பதில் சுவைத்ததையும் பகிர்கின்றோம்...இதோ தங்களடுடைய இந்தப் பதிவு உட்பட.....

  அருமையான பதிவு டிடி ...

  பதிலளிநீக்கு
 9. ஐயா, புத்தகச்சந்தையில், குப்பைகள் மலிந்து விட்டன. விற்பனை அதிகரித்திருக்கிறது என்பது உண்மையே. வாங்குவோரில் பெரும்பகுதியினர், புத்தகங்களை படிப்பதில்லை. தங்கள் வீட்டு அலமாரியில் வைத்து பெருமைப்படுவதற்காகவே பலர் புத்தகம் வாங்குகின்றனர். படிப்பதற்கு புத்தகம் வாங்குவோர் வெகு சிலரே.
  மறைந்த பெரியவர் நாமக்கல் என்.பி.ராமசாமி, தன் வீட்டில் 30 ஆயிரம் புத்தகங்கள் சேகரித்து வைத்திருந்தார். அவையனைத்தும், அவர் ஊர் ஊராக, நாடு நாடாக சென்று வாங்கியவை. தன்னிடம் இருக்கும் ஒவ்வொரு புத்தகம் பற்றியும், அது கூறும் கருத்துப்பற்றியும், அவரால் விளக்க முடியும். தான் வாங்கிய அனைத்து புத்தகங்களையும் அவர் படித்திருக்கிறார் என்பது அவரது பேச்சில் இருந்து அறிய முடியும். தன் வாழ்நாளில் சேகரித்த புத்தகங்கள் அனைத்தையும், எரிக்கப்பட்ட யாழ்ப்பாண நூலகத்தை மீண்டும் உருவாக்க வழங்குவதாக அறிவித்தார் அவர். அத்ததைய மாமனிதர்கள், அரிதானவர்கள்.

  பதிலளிநீக்கு
 10. வணக்கம்
  அண்ணா.

  நல்ல பதிவு.. யாவரும் வாசிக்க வேண்டிய பதிவு.. சிலர் புத்தகத்தை வேண்டி அழகு பார்ப்பார்கள் சிலர் புத்தகத்தை வேண்டி அறிவைத் தேடுவர்கள்...
  தேடல் உள்ள உயிர்களுக்கே தினமும் பசியிருக்கும் என்ற பாடல் அடிதான் நினைவுக்கு வந்தது.. அழகாக சொல்லியுள்ளீர்கள் பகிர்வுக்கு நன்றி த.ம11

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  பதிலளிநீக்கு
 11. வாசித்தல் - அதுவே சுவாசித்தல்!..

  தேவாரத்திலும் அப்பர் பெருமான் - பேசாத நாள் எல்லாம் பிறவா நாள்!.. என்கின்றார்.

  இதைத்தான் -

  வாசி வாசி என வாசித்த தமிழின்று
  சிவா சிவா என சிந்தை தனில் நின்றது - என்றார் கவியரசர்.

  வாசிப்பதனால் மட்டுமே வாழ்வு வளமாகும். நலமாகும்.

  நல்லதொரு கருத்தினை முன்வைத்த -
  அன்பின் தனபாலனுக்கு மிக்க நன்றி..

  பதிலளிநீக்கு
 12. வாசிப்பு என்பது சுவ்வாசிப்பு என்றநிலைக்கு மாறவேண்டும் . நம்மக்கள் இன்னும் புத்தக திருவிழாக்களுக்குச்சென்றால் கல்கி , சாண்டில்யன் , சுஜாதா தாண்டி வேறு புத்தகங்களுக்கே செல்லமாட்டேன் என்று அடம்பிடிக்கிறார்கள் . ஏன் பதிவுலகையே எடுத்துக்கொள்ளுங்கள் . வலைப்பதிவில் எழுதுவோர்களுக்கே , எழுத்தாளர்களே கமெண்ட் சொல்லும் அபத்தநிலைக்குத்தானே தமிழர்கள் தள்ளப்பட்டிருக்கிறார்கள் . இந்நிலை மாறவேண்டும் . இன்றைய நிலையில் மக்கள் தங்களின் வாசிப்பை பன்மடங்கு பெருக்கினால் ஒழிய நாட்டின் முன்னேற்றம் என்பது கவலைக்குறியாய் தானிருக்கும் .
  நானும் வாசிப்பைப்பற்றிய ஒரு பதிவை எழுதலாம் என்றிருந்தேன் . ஆனால் அதைவிடச்சிறப்பான பதிவாய் தங்களுடையது அமைந்துள்ளது . நன்றி அண்ணா .
  தம+

  பதிலளிநீக்கு
 13. நெட்டில் படிப்பதற்கே ஆயிரம் விஷயங்கள் ,அதற்கே நேரம் போதவில்லை .இளைய தலைமுறை புத்தகம் வாங்கிப் படிக்காததற்கு இதுவும் முக்கிய காரணம் !
  த ம 9

  பதிலளிநீக்கு
 14. வாசிப்பு அறிவை வளர்ப்பது மட்டுமல்ல நல்ல மனித நேயத்தையும் பண்பையும் வளர்க்கும் அல்லவா. ஆனாலும் புத்தக வாசிப்பு நிச்சயம் குறைந்திருக்கும் ஏனெனில் பொழுது போக்குக்காக வாசிப்பவர்கள் t. v பார்க்கும் வசதி வந்தவுடன் அதைக் கைவிட்டு இருப்பார்கள். இப்போது இணைய தளம் உண்மையில் வாசிப்பு குறைந்து தான் போயிற்று ம்.ம்..ம் திசை மாறிய பறவைகள் ஆனோம்.

  பதிலளிநீக்கு
 15. நல்ல புத்தகங்களைப் படிக்கவேண்டும். இல்லையென்றால் நேரம் வீண், மற்றும் பெண்கள் வாசித்தால் தலைமுறைக்கே பயன்படும் என்று அருமையாக கூறியுள்ளீர்கள்.

  பதிலளிநீக்கு
 16. மூன்று புத்தகங்கள் வெளியிட்டேன். போட்ட பணத்தை எடுப்பதற்குள் கண்முழி பிதுங்கிவிட்டது!

  நன்றி தனபாலன்.

  பதிலளிநீக்கு
 17. வாசிப்பை நேசிக்க வேண்டும். அருமையான கருத்து

  பதிலளிநீக்கு
 18. செவிக்குணவு இல்லாத போது சிறிது வயிற்றுக்கும் ஈயப்படும்.ஊடகங்களில் பொழுது போக்க முடியவில்லை என்றால் போனால் போகட்டும் என்று ஏதாவது வாசிக்க படும் என்பதே தற்போதைய உண்மை நிலை.

  பதிலளிநீக்கு
 19. கழகம் இதன் பொருள் சிந்திக்க வைப்பதாயிருக்கிறது. :)

  விவாத்திக்கிறோம் = உண்மைதான் விவாதித்து ஆத்திக்கிறோம் இப்பிடித்தான் இருக்கும்னு. :)

  புத்தக வாசிப்பு பெருகணும்னா தரமான புத்தகங்கள் வரணும்னு சொல்றீங்க ரைட்டு :)

  பதிலளிநீக்கு
 20. புத்தக வாசிப்பு என்பது:
  நீங்கள் சொல்லும் நாலு காரணங்களுமே உள்ளன.

  அந்தந்த புத்தகங்களைப் பொருத்தது.

  அட... சும்மா... பொழுதுபோக்கிற்காக...
  குமுதம், ஆ.விகடன் துக்ளக் போன்றவை.

  இரவில் தூக்கம் வர உதவும் தூக்க மாத்திரையாக... ..
  அந்தக் காலத்து இலக்கியங்கள். குறிப்பாக கவிதைகள். ஆங்கிலம், இந்தி, தமிழ் எல்லாவற்றிலும்.

  அறிவை மேம்படுத்தும் தேடுதலின் ஆர்வத்திற்காக...
  லான்செட், சயின்ஸ் டுடே, மஞ்சரி, கலைமகள் கட்டுரைகள்.

  மன இறுக்கத்தை நீக்கி எழுச்சி பெறும் எண்ணத்திற்காக.....
  ஜென் கதைகள்..
  சுப்பு தாத்தா.
  பின் குறிப்பு: இதில் டி.டி. எங்கே சேர்ப்பது ?!! All.

  பதிலளிநீக்கு
 21. அருமையான தகவல். வீட்டில் இருக்கும் போது படிக்க தேரிந்த அனைவரும் ஏதேனும் படித்துக்கொண்டு இருந்தனர். இன்றோ தொலைக்காட்சி (தொல்லைக்காட்சி) மட்டும் தான் நம்மை ஆக்கிரமித்துள்ளது.
  பதிலளிநீக்கு
 22. வாசிப்பின் முக்கியத்துவம் பற்றி யோசிக்க வைக்கும் கட்டுரை....

  பதிலளிநீக்கு
 23. ஒரு சமூகத்தை நல்ல வாசிப்புக்கு பழக்கிவிட்டால் மற்ற பொறுப்புகள் அனைத்தும் தானாக வந்துவிடும். மிக அருமையான, அவசியமான பதிவு.

  நன்றி
  சாமானியன்
  saamaaniyan.blogspot.fr

  பதிலளிநீக்கு
 24. இணையத்தில் அநேகம் பேர் புத்தகத்தை ‘படிப்பதால்’ புத்தகங்களை வாங்கி படிக்கும் வழக்கம் குறைந்துவிட்டது. எப்படி தொலைக்காட்சி வந்தாலும் வானொலி உபயோகம் மங்கவில்லையோ அதுபோல இணையம் இருந்தாலும் புத்தகத்தை வாங்கிப் படிக்கும் வழக்கமும் குறையாது.

  பதிலளிநீக்கு
 25. வாசிப்பு இன்னும் அதிகரிக்க வேண்டும்....தான் நல்ல கட்டுரை அனைவரும் வாசிக்க வேண்டிய பதிவு இது. நன்றி சகோ
  தம +1

  பதிலளிநீக்கு
 26. புத்தகங்களை எழுதிக் குவிக்கவும் வாங்கிக் குவிக்கவும் எத்தனை ஆயிரம் பேர் வந்தும் வாசிப்போர் எண்ணிக்கை உயர்வதில் தான் இருக்கிறது சூட்சுமம். அன்றும் இன்றும் வாசிப்பை விரும்பி நூலகம் செல்வோர் சென்றுகொண்டு தான் இருக்கின்றனர். அறிதலையும் புரிதலையும் தரும் ஒவ்வொரு நூலும் ஒரு ஆசிரியர் நமக்கு.

  எம்மைப் போன்ற இல்லத்தரசிகள் நாளிதழ்கள் வார இதழ்களும் வாசிக்க நேரம் ஒதுக்க முடியும். வாசிக்கிறோம். வாழ்வாதாரத்துக்காக ஆதாயப் பணி சுமக்கும் பெண்கள்...? யாருக்கும் இயல்பான ஆர்வமே நேரம் தரத் தக்கது.

  பள்ளிக் காலத்தில் இருந்தே பாட நூல்கள் தவிர்த்து ஏனைய நல்ல நூல்கள் வாசிக்கப் பழக்குவது பெற்றோர் கையில். அதற்கு அடிப்படையில் அவர்கள் வாசிப்போராக இருத்தல் அவசியம்.

  'களவும் கற்று மற ' என்பதற்கு அகப்பாடல்கள் பற்றிய வகுப்பில் எங்கள் பேராசிரியர் களவு(காதல்) வாழ்வில் ஈடுபட்டு கற்பு வாழ்வு புகுமாறு மணம் புரிந்த தலைமகன் மறுபடி களவில் ஈடுபடாமல் கற்போடு திகழ வேண்டும் என்றொரு அர்த்தம் சொன்னார். தங்களுடையதும் ஏற்புடையதாகவே இருக்கிறது சகோ...

  'களவும் கத்தும் அற' என்றொரு மேடைப் பேச்சில் (கத்து-கொலை செய்தல்) கேட்டிருக்கிறேன். எப்படியோ... மூத்தோர் சொல் அமிழ்தே.

  பதிலளிநீக்கு
 27. இளைய தலைமுறைக்கு வாசித்தலின் இனிமையை நாம் உணர வைக்கத் தவறிவிட்டோமோ என்று தோன்றுகிறது. புத்தகங்களின் விலையையும் காரணமாகச் சொல்லலாம்.

  பதிலளிநீக்கு
 28. என்னிடம் ஒரு ப்ளாக் ப்யூட்டி இருக்கு. இதுதான் நல்லா வேலை செய்யும் தூக்கமாத்திரை. நோ சைட் எஃபெக்ட்:-))))

  பதிலளிநீக்கு
 29. நான் படிக்க ஆரம்பித்ததே இணையதளத்தின் மூலம்தான். புத்தகம வாங்கி படிப்பதற்கெல்லாம் எம்மிடம் துட்டு லேது....அப்படியே புத்தகம் வாங்கினாலும் என்னால் படித்திருக்கவும் முடியாது.

  பதிலளிநீக்கு
 30. அருமையான பகிர்வு அண்ணா...
  சிந்திக்க வைக்கும் பகிர்வு.

  பதிலளிநீக்கு
 31. வாசிப்பு ஒரு போதை போல ஆனால் இன்று அது வீழ்ந்துகிடப்பது போலத்தான் உணரமுடிகின்றது. அழகான கருத்துப்பகிர்வு.

  பதிலளிநீக்கு
 32. ஆம் நண்பரே அண்ணாத்துரை அவர்கள் சொன்னது போல் வாசிக்காத //நாட்கள் சுவாசிக்காத நாட்கள்// 80 உண்மையே

  என்னைப்பொருத்தவரை நூல்களை மட்டுமல்ல பதிவுகளையும் கூட மனம் ஒன்றிப்படிப்பேன் அப்படி உடன்பாடு இல்லையனில் படிக்காமல் போய் விடுவேன் இதுதான் எனது 2 ½ வயது முதல் நான் வகுத்துக்கொண்ட பாணி

  மேலே நான் போட்டி வாக்கில்கூட மெஜாரிட்டியில்தான் வாக்கு போட்டு இருக்கிறேன் 80 வாக்கு போ பிறகுதான் அறிந்து கொண்டேன் அருமையான முயற்சி வாழ்த்துகள் நண்பரே,,,

  வாசிப்போம் அதில் இனிய தமிழை (சு)வாசிப்போம்.
  தமிழ் மணம் 19

  பதிலளிநீக்கு
 33. இணையதளத்தில் கொட்டிகிடக்கும் விஷயங்களை படிப்பத்ற்கே நேரம் இருப்பதில்லை என்பது முக்கிய காரணம். இணையத்தில் எவ்வளவு கெட்ட விஷயங்கள கொட்டிக் கிடக்கின்றனவோ அதைவிட மிக மிக மிக அதிகமாக நல்ல விஷயங்களும் கொட்டிக் கிடக்கின்றன. அதனால்தான் இப்படி ஒரு மாயை தோற்றம் தோன்றுகிறது. நான் இந்தியாவில் இருந்த வரை ஒரு புத்தக புழுதான். ஆனால் அமெரிக்கா வந்த பின் பெரும்மாற்றம் காரணம் புத்தகங்கள் எளிதில் கிடைக்கவில்லை அப்படி கிடைத்தாலும் மிக அதிக விலையில்தான் கிடைக்கிறது இந்தியாவில் 100 ரூபாயுக்கு விற்கும் புத்தகத்தை நான் வாங்க வேண்டுமானால் குறைந்தபட்சம் 10 டாலர் ஆகிறது சரி இந்தியாவரும் போது வாங்கலாம் என்றாலும் பெட்டியில் அதை வைத்து எடுத்து வருவதற்கு இடம் இல்லை என்பதுதான் உண்மை மேலும் 24 மணிநேரமும் இணைய வசதி இருப்பதால் இணையத்தில் எல்லா விஷயங்களையும் படிப்பது எளிது மேலும் அதை படிப்பத்ற்கே நேரம் இல்லைதான்

  பதிலளிநீக்கு
 34. புத்தக வாசிப்பு என்பது வெறும் பாடநூல் வாசிப்பு என சுருங்கும் ஒரு தலைமுறையை காண நேர்கிறது. கண்ட புத்தகத்தை படித்தால் cut-off கிடைக்குமா என்ன ?? என்பதே அறிவார்ந்த பெற்றோர் சிந்தனையாய் இருக்கிறது. இதுபோலும் பதிவுகள் பரவலாக சிந்தனையை தூண்டும் அண்ணா, அருமை.

  பதிலளிநீக்கு
 35. Sir, what you said was right, but I feel the reading is now shifted to the digital world now. Old days we were reading books, but now in the internet we were reading it.
  But, you have taken the right topic at right time and it gives a thinking that what should be read and why it should be read.
  As always, the blog was so good and enjoyed reading !

  பதிலளிநீக்கு
 36. வாசிப்பு திறனை வளர்ந்து கொள்வது நல்லது. நல்லதை நாடி படிக்க வேண்டும் என்பதும் உண்மை.
  பாடல் பகிர்வு அருமை.
  செய்திகள் எல்லாம் மிக மிக அருமை.
  வாழ்த்துக்கள்.

  நாங்கள் எங்கள் குழந்தைகளுக்கு சிறு வயதிலிருந்தே புத்தகங்கள் வாசிக்க வாங்கி கொடுத்து, அவர்களை புத்தகங்களை நேசிக்க வைத்து விட்டோம். வீட்டுக்கு வரும் உறவினர்கள் குழந்தைகள், நண்பர்கள் எல்லோருக்கும் புத்தகங்கள் தான் பரிசு கொடுப்போம்.

  பதிலளிநீக்கு
 37. வாசிப்பை நேசிப்போம் , ஒவ்வொரு நூலகத்திலும் புத்தகம் என்ற பெயரில் அதிக குப்பைகள் தான் வெளியாகிறது.எழுத்தாளர்களின் எழுத்தின் தரம் தாழ்ந்து விட்டதாக தோன்றுகிறது.

  பதிலளிநீக்கு
 38. இந்நாடுகளில் உள்ளதுபோல சிறுகுழந்தையிலிருந்தே வாசிப்பு பழக்கத்தினை ஏற்படுத்த வேண்டும்.சிந்தனையை தூண்டும் நல்லதொரு அருமையான பதிவு. நன்றி.

  பதிலளிநீக்கு
 39. திடீர்னு இது நினைவுக்கு வந்துச்சு.
  இங்கே எங்க நூலகத்தில் மூணு மாசக் குழந்தைக்குக்கூட அங்கத்தினர் அட்டை வாங்கிக்கலாம். பாத் டப்பில் குளிக்கும்போதும் நனைஞ்சாலும் ஒன்னும் ஆகாத வகைகளில் படம் போட்டதும், போர்டு புக் என்று சொல்லப்படும்வகைகளும் குழந்தைகளுக்காகவே வாங்கி வைப்போம். குழந்தைகளுக்கான உள்ளூர் நூலகத்தில் 14 வருசம் வாலண்டியர் லைப்ரேரியனா வேலை செஞ்சுருக்கேன்.

  புத்தகமும் பழக்கமும் இங்கே பாருங்க நேரமிருந்தால். எழுதியே பத்து வருசமாச்சு.
  http://thulasidhalam.blogspot.com/2005/05/blog-post_09.html

  பதிலளிநீக்கு
 40. அவர்கள் உண்மைகள் சொல்வதை வழிமொழிகிறேன். நெட்டில் பல பல விஷயங்கள் குவிந்து கிடக்கின்றன.அவற்றை படிப்பதற்கே நேரம் போதவில்லை.
  அன்புடன்
  கலாகார்த்திக்

  பதிலளிநீக்கு
 41. "களவும் கவறும் மற."அடேடே... அற்புதம் நண்பரே.

  இந்தப் பதிவு திரும்பத் திரும்ப படிக்கவேண்டிய பதிவும்.

  மறுபடி, மறுபடி இந்தப் பக்கத்திற்கு வருவேன் - புதுப் புது சிந்தனைக் கேள்விகளோடு.

  நன்றி. God bless you

  பதிலளிநீக்கு
 42. வாசிப்பு உன்னை ஆக்கும் சுகவாசி.
  மிக நல்ல கருத்துகள் கொட்டியுள்ளீர்கள் டிடி.
  இனிய நன்றி.
  வேதா. இலங்காதிலகம்.

  பதிலளிநீக்கு
 43. "களவும் கற்று அற" என்பதுதான் இப்படி ஆயிடுச்சுனு ஒரு சிலர் சொல்றாங்க. புத்தகம் படிக்க எல்லாம் யாருக்கும் பொறுமை இல்லைங்க. ஒரு பதிவர் கதை எழுத ஆரம்பிச்சா 100 ஹிட் தான் கிடைக்கும். அதிலும் முழுசா வாசிச்சவனுக ரெண்டு பேரா இருக்கும். அதில் ஒண்ணு கதை எழுதிய ஆசிரியர், இன்னொருவர் அவரோட இண்டிமேட்.

  சினிமா, அரசியல், அடிதடி, வன்மம், காமம் கலந்த எழுத்துக்குத்தான் தமிழன் முக்கியத்துவம் கொடுக்கிறான். அதையும் மேலோட்டமாகத் தான் படிப்பது..தேவையான பகுதியை மட்டும்தான் வாசிக்கிறது..

  விஷுவமல் மீடியா (டி வி)வும் அதன் டாமினேஷனும் இதற்கு முக்கியக்காரணம்னு நெனைக்கிறேன்.

  ஜெயகாந்தன் எழுதிய காலத்திலேயே டி வி சீரியல் எல்லாம் வந்து இருந்ந்தால், அவர் கதைகளும் நம் மக்களுக்கு போயி சேர்ந்து இருக்காதுனு நெனைக்கிறேன்..ஆக அந்தக்காலத்து எழுத்தாளர்கள் எல்லாம் "அதிர்ஷடசாலிகள்"னு சொல்லி ஆறுதல் அடஞ்சுக்கவும் செய்யலாம். :)

  பதிலளிநீக்கு
 44. நல்ல அலசல். வாசிப்பு பழக்கம் உள்ளவர்கள் வாசித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்.
  த.ம.24

  பதிலளிநீக்கு
 45. நல்ல நல்ல புத்தகங்களை நம்பி இந்த நாடே இருக்குது கம்மி

  பதிலளிநீக்கு
 46. பொதுவான புத்தக வாசிப்பு அதிலும் பெண்கள் படித்தால் ஒரு தலைமுறையே படித்தது மாதிரி என்பது உண்மையான உண்மை. அது எப்படி வலைச்சித்தரே, உங்களுக்கு மட்டும் சொல்லவரும் எல்லாவற்றுக்குமே திருக்குறளும் கிடைக்குது, அதே மாதிரி திரைப்படப்பாட்டும் கிடைக்குது! மயக்கும் நடை உங்களுடையது!

  பதிலளிநீக்கு
 47. அன்புள்ள அய்யா,

  புத்தகம் வாசிப்பது... வாங்குவது... தங்களின் கருத்து அனைவரையும் சிந்திக்க வைப்பதாக இருக்கிறது...! நேரும்... அண்ணாவும் நல்ல படைப்பாளர்கள்... வாசகர்கள்!

  புத்தகத் திருவிழாவின் போது... மக்கள் அதிகமாகக் கூடுவதும்... புத்தகங்கள் அதிகம் விற்பனையாவவும்... மகிழ்ச்சியான விசயம். வாசிக்கும் பழக்கம் இன்னும் குறையவில்லை என்பதையே காட்டுகிறது.

  நாட்டுக்கு மிகவும் நல்லது. அறிவு வளரட்டும்... ஆற்றல் பெருகட்டும்...!
  நன்றி.
  த.ம.25

  பதிலளிநீக்கு
 48. ”களவையும் கற்று மற” என்றவர்கள் “சினிமாவையும் பார்த்து மற” என்று சொல்லாமல் விட்டுவிட்டார்கள்.

  பதிலளிநீக்கு
 49. நல்ல பதிவு தனபாலன்.

  எனது வாக்கினையும் பதிவு செய்தேன்!

  பதிலளிநீக்கு
 50. தவறு செய்தவன் திருந்த பாக்கனும்--- எதோ நூத்துல ஒன்னுதானுங்க திருந்துக...தலைவரே...

  பதிலளிநீக்கு
 51. வாசிப்பது பெற்றோரிடம் இருந்து துவங்க வேண்டும் அண்ணா..நான் என் மகனைக் கருத்தரித்ததில் இருந்து அவனுக்குப் படிக்கிறேன்..சத்தமாகப் படிப்பேன். பிறகு அவன் பிறந்து வீட்டிற்கு வந்த நாள் முதல் வாசிப்பேன்...இன்றைக்கு அவன் ஒரு புத்தகப் புழு..பல விசயங்களை அவன் புட்டு புட்டு வைக்கும்பொழுது உள்ளம் பூரிப்பேன்..ஆனால் சில சமயங்களில் "இப்போ புத்தகத்த எடுத்தேனா என்ன ஆகும் தெரியாது " என்று கோபமாகவும் சொல்வேன் :)
  பள்ளிகளிலும் வாசிப்புத் திறனைக் கண்டுபிடித்து அதற்கேற்ப நூல் கொடுப்பார்கள்..
  நல்ல பதிவிற்கு நன்றி அண்ணா..'களவும் கவறு மற' அறிந்து கொண்டேன்.

  பதிலளிநீக்கு
 52. ஆனால் நிகழ்காலத்திய உண்மை மிக கசப்பானவை...
  வாசிப்பு தற்பொழுது இணையத்தையே மையமாக கொண்டு இயங்கத்தொடங்கிவிட்டது....
  நூல்கள் மூலம் வாசித்தனுபவிப்பது மிக அருமை... மிக்க அருமையான பகிர்வு ஐயா. வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 53. இந்தக் காலத்தில் கேட்ட லஞ்சம் கொடுக்கலைன்னா தவறு என்று சொல்லப்படுகிறது. தலைவரே.......

  பதிலளிநீக்கு
 54. An analysis has to be taken up in this regard and I am happy to see that you have taken the initiative for this.

  பதிலளிநீக்கு
 55. ப்பால்,

  புத்த வாசிப்பு குறித்த அருமையான பதிவு.

  புத்தக வெளி ஈட்டாளர்கள் பெரும் லாப நோக்கத்துடனே அவற்றை வெளியிடுவதும் புத்தக வாசித்தலின் எண்ணிக்கையை வெகுவாக பாதிக்கின்றது என்று நினைக்கின்றேன்.

  அறிஞர் அண்ணாவின் புத்தக வாசிக்கும் வழக்கம் கடைபிடிக்கவேண்டிய "கண்ணியமான" "கடமையை "வாழ்வில் பின்பற்றவேண்டும்; அதே சமயத்தில் புத்தகங்களின் விலையையும் "கட்டுப்பாட்டில்" வைத்திருக்க அரசு உதவவேண்டும்.

  புத்தகங்களை படித்தவர்கள் அதன் பயன்பாட்டை மற்றவர்களோடு பகிர்ந்துகொள்வதும், வாங்கமுடியாதவர்களுக்கு கொடுத்து படிக்க உதவுவதும், பலருக்கும் பயன்தரும் வகையில் பொது நூலகங்களுக்கு கொடுப்பதும் அறமாகும்.

  அப்படி இல்லையென்றாலும் கூட, படித்த சன்மார்க்க கருத்துக்களை தமக்குள்ளாக தியானித்து வாழ்வியல் பாதையினை செப்பனிட்டுகொள்வதால் தனிமனித ஒழுக்கம், அறிவு மேம்பட்டு அது சமூக நலனுக்கு, தேச ஒற்றுமைக்கு, சமய நல்லிணக்கத்துக்கு பலம் சேர்க்கும் எனும் கருத்துக்களை அழகாக பகிர்ந்தமைக்கு நன்றிகள். பாராட்டுக்கள்.

  நட்புடன்

  கோ

  பதிலளிநீக்கு
 56. உள்ளத்திற்கு நிறைவு தரும் செயலாக வாசிப்பைக் கருதலாம்.
  சிறந்த திறனாய்வுப் பார்வை
  தொடருங்கள்

  பதிலளிநீக்கு
 57. புத்தங்களை மட்டும் வாசிப்பதன் மூலம் அறிவு பெருகுமா என்பதை நம் தாத்தன் விளக்குவதைப் பாருங்கள்.

  நுண்ணிய நூல்பல கற்பினும் மற்றுந்தன்
  உண்மை யறிவே மிகும்.

  பதிலளிநீக்கு
 58. வாசிப்பதை பற்றி ஒரு சிறந்த பதிவு. நானும் ஓட்டு போட்டுவிட்டேன்.
  இந்த தலைமுறையினருக்கு அதன் பயன் தெரியாமல் போகிறதே என்று ஒரு ஏக்கம் இருக்கத்தான் செய்கிறது.

  பதிலளிநீக்கு
 59. வாசிப்பு பற்றி அருமையானதோர் அலசல். இங்கு கருத்துச்சொல்லியுள்ள பலரின் கருத்துக்களை வாசித்தலிலேயே ஒருசில உண்மை நிலவரங்களை அறிந்துகொள்ள முடிகிறது.

  பகிர்வுக்கு நன்றிகள்.

  பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

நகுதற் பொருட்டன்று நட்டல் மிகுதிக்கண்
மேற்சென்று இடித்தற் பொருட்டு. (குறள் 784)

நட்புச் செய்துகொள்வது நண்பரோடு சிரித்து மகிழ்வதற்காக மட்டும் அல்ல. மிகுதியாகத் தவறு செய்யும்போது, அவரைக் கடிந்து திருத்துவதற்கே ஆகும்.