கொம்பில்லா மனிதம்...

அனைவருக்கும் வணக்கம்... திருக்குறள் பற்றி விக்கிப்பீடியாவில் உள்ள சிலவற்றை, சுவையான தகவல்கள் எனும் இடத்திற்கே →இங்கே← சொடுக்கிச் சென்று வாசிக்கலாம்...


கொம்பில்லா அறத்துப்பால் குறள்களின் குரல்

எந்த ஒரு நீர் ஆதாரத்திற்கும் விண்ணிலிருந்து வரும் மழையால், உயிர்கள் வாழவும் உலகம் இயங்கியும் வருகின்றன... அந்த நீரே குடிப்பதற்கும் உணவுக்கும் பயன்படும் இந்த அமிழ்தத்தை, சாவா மருந்து என்று உணர வேண்டும்...

அந்த அமிழ்தம் குன்றாது வருகை தராமல், வருவாய் வளம் குறைந்தால், வேளாண் தொழில் இல்லை... மழை எனும் விதை இல்லையென்றால் உழுபயனின் விளைவாகிய உணவுமில்லை... உணவில்லையென்றால் உயிர்களுமில்லை...!

இந்த அமிழ்தினால் விளைந்த குறள் எனும் மரத்திலே, மனித வாழ்விற்குத் தேவையான அனைத்து பயன்களும், அறம் பொருள் இன்பம் எனும் முப்பழங்களும் இருக்கும் போது, மற்ற காய்கள் எதற்கு...?

ஒருவர் வாழ்ந்து மறைந்த பின், அவரது நடுவுநிலைமைக்கான தகுதி என்பது அவரின் நற்பண்புகளுக்காக வந்த இரக்கம் எனும் புகழா? அல்லது நேர்மையற்ற குணங்களால் உண்டான பழிச்சொற்களா? என்பதால் நிர்ணயிக்கப்படும்...

நேர்மையாய் வாழ்கின்ற மிகப்பெரிய சாதனை செய்தவருக்கு, நன்னெறியில் நடந்து கொள்கின்ற நல்லொழுக்கத்தை விடச் சிறப்பு தருவது மற்ற எதுவுமில்லை... அதன் மேன்மையை உயிரினும் சிறந்ததாகப் பேணிக் காக்கவும் வேண்டும்...

ஒழுக்கத்திற்கு ஈடாகாத, ஈகை, வீரம், கல்வி மிகுதி, செல்வ மிகுதி, இன்னமும் பல ஆற்றல்களால் சிறப்புப் பெறலாம்... ஆனால் அவை எல்லோருக்கும் எப்பொழுதும் ஒரே சீராக அமையாமல், கூடியும் குறைந்தும் மாறி மாறிச் செல்லும்... எப்படி மாறினாலும் எந்தச் சூழலிலும் மற்றவர்களுக்கு உதவிடும் எண்ணத்தை உறுதியாகக் கொண்டவர்கள், எத்தகைய தடைகள் வந்தாலும் இந்த சமுதாயத்திற்குச் செய்ய வேண்டியதை முயன்று செய்து கொண்டே தான் இருப்பார்கள்...

அவ்வாறு தன்னால் முயன்று பொருளைக் கொடுக்கும்போது, வாங்குபவர்களின் முகத்தில் மலர்ச்சி தோன்றும் வரையில், துன்பம் அடையும் ஈகையாளர்கள் இருக்கிறார்கள்... இதுவல்லவோ இரக்கம் எனும் நிலையான புகழ்...!

"காக்கை குருவி எங்கள் ஜாதி - நீள் கடலும் மலையும் எங்கள் கூட்டம்..." என்று ஆடிப்பாடி களிக்கக்கூடிய குற்றமற்ற பார்வை எய்தியவர்களும் இருந்தார்கள்... 'எது பொய்? எது உண்மை?' என்று ஆய்ந்துணர்ந்து, பொருள் அல்லாதவற்றைப் பொருள் என்றுணர்ந்த அவர்களின் தூய்மையான தெளிவான உலகப் பார்வையால், உள்ளத்தில் மெய்யுணர்வு பெற்று, மேன்மையான இன்பம் அடைந்தவர்கள்...

அந்த இன்பத்தை வேரறுக்க, எல்லா உயிர்களுக்கும் எக்காலத்தும் ஒழியாத துன்பத்தைத் தோற்றுவிப்பதற்குக் காரணமான விதை தான் பேராசை...! அது இருந்தால், துன்பம் எனும் நிழல் தொடர்ந்து வருவதை அறியாமல், தன்னலம் பெருகி தீவினை செய்தும், எல்லா வழிகளிலும் பொருள் சேர்க்க வைக்கும்... உலகியல் வாழ்வில் பெரு விருப்பம் தோன்றுவது இயற்கை என்றாலும், அதை அடக்கினால் துன்பமே அண்டாது விலகிவிடும்...


கொம்பில்லா குறள்கள்

011. வானின்று உலகம் வழங்கி வருதலால் தான்அமிழ்தம் என்றுணரற் பாற்று - 2.வான்சிறப்பு-1.பாயிரவியல்-☀
014. ஏரின் உழாஅர் உழவர் புயல்என்னும் வாரி வளங்குன்றிக் கால் - 2.வான்சிறப்பு-
100. இனிய உளவாக இன்னாத கூறல் கனிஇருப்பக் காய்கவர்ந் தற்று - 10.இனியவைகூறல்-2.இல்லறவியல்-★
114. தக்கார் தகவிலர் என்பது அவரவர் எச்சத்தாற் காணப் படும் - 12.நடுவு நிலைமை-
131. ஒழுக்கம் விழுப்பந் தரலான் ஒழுக்கம் உயிரினும் ஓம்பப் படும் - 14.ஒழுக்கமுடைமை-
218. இடனில் பருவத்தும் ஒப்புரவிற்கு ஒல்கார் கடனறி காட்சி யவர் - 22.ஒப்புரவறிதல்-
224. இன்னாது இரக்கப் படுதல் இரந்தவர் இன்முகங் காணும் அளவு - 23.ஈகை-
352. இருள்நீங்கி இன்பம் பயக்கும் மருள்நீங்கி மாசறு காட்சி யவர்க்கு - 36.மெய்யுணர்தல்-3.துறவறவியல்-☄
361. அவாஎன்ப எல்லா உயிர்க்கும் எஞ்ஞான்றும் தவாஅப் பிறப்பீனும் வித்து - 37.அவா அறுத்தல்-

அடுத்த பகுதி பொருட்பால்...

புதிய பதிவுகளை பெறுதல் :


தொடர்புடைய எண்ணங்களின் வண்ணங்கள் சில :


முகநூல் மூலம் கருத்துக்களை பகிர :

கருத்துகள்

 1. குறள்களின் குரல் அருமை.
  பகிர்ந்த குறள்கள் எல்லாம் மிக அருமை.

  "காக்கை குருவி எங்கள் ஜாதி -நீள் கடலும் மலையும் எங்கள் கூட்டம்"

  பாரதியின் நினைவு நாளில் அவரையும் நினைவு கூர்ந்து விட்டீர்கள்.

  மிக அருமையான பதிவு.

  பதிலளிநீக்கு
 2. சிறப்புக் குறட்பா தொகுத்து விளக்கி
  மறக்காமல் மீட்க உணர்ந்து
  (ஒரு விகற்பக் குறட்பா)

  அருமையான படைப்பு இது
  பாராட்டுகள்.

  பதிலளிநீக்கு
 3. கொம்பில்லா குறள்கள் சிறப்பு அதுபோல்
  வம்பில்லா மனிதமும் சிறப்பே.

  பதிலளிநீக்கு
 4. வணக்கம் சகோதரரே

  வழக்கம் போல மிக அருமையான பதிவு. நிறைய விஷயங்களை அதுவும் தெரியாத விஷயங்களை பதிவில் குறிப்பிட்டிருந்தது சிறப்பாக உள்ளது. குறள்களும் அதன் விளக்கங்களும் மிகவும் நன்றாக உள்ளது.
  முதலில் கொடுத்திருந்த சுட்டியும், படித்தறிய பயனுள்ளது. அற்புதமான தகவல்களை பகிர்ந்தமைக்கு மிக்க நன்றிகள்.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
 5. கொம்பில்லா மனிதனிடம் வம்பு இருக்காது என்று ஒரு பாடல் வரி.. நிணைவுக்கு வருகிறது... புத்தரும் அன்றே சொன்னார் ஆசையே அனைத்து துன்பத்திற்கு காரணம் என்று.... எனது பார்வை --- இல்லாதவர்கள் ஆசைபட்டால் துன்பம் வந்து சேரும் . ஆனால் அதிகாரத்தில் உள்ளவர்கள் மற்றும் ஆட்சியாளர்கள்- பணக்காரர்கள் ஆசைபட்டால்.. பொன்-பெண் - பொருள் -பணம் எல்லாம் வந்து சேரும் என்பதுதான் நடப்பு நிலைமை..

  பதிலளிநீக்கு
 6. கொம்பு...நம் தமிழின் சிறப்புகளில் ஒன்று. திருக்குறளில் அலசி ஆய்ந்து பகிர்ந்த விதம் அருமை.

  பதிலளிநீக்கு

 7. இங்கே சொடுக்கி உள்ளே சென்றேன் பிரமிப்பான தகவல்கள்.

  பதிலளிநீக்கு
 8. வழமை போலவே சிறப்பான வகையில் பகிர்ந்து கொண்டிருக்கிறீர்கள். வாழ்த்துகளும் பாராட்டுகளும்.

  பதிலளிநீக்கு
 9. கொம்பு
  தங்களின் ஆய்வுப் பார்வைப் போற்றுதலுக்கு உரியது

  பதிலளிநீக்கு
 10. சுவாரசியமான தகவல்கள்தான். த வரிசையில் தா,தீ, தவிர இதர ஒரு சொல் வார்த்தைகளை பகிர்ந்தமைக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 11. அறியாததை அறிந்தேன். கொம்பில்லா குறள்களை அறியவைத்தமைக்கு நன்றி!

  பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

நகுதற் பொருட்டன்று நட்டல் மிகுதிக்கண்
மேற்சென்று இடித்தற் பொருட்டு. (குறள் 784)

நட்புச் செய்துகொள்வது நண்பரோடு சிரித்து மகிழ்வதற்காக மட்டும் அல்ல. மிகுதியாகத் தவறு செய்யும்போது, அவரைக் கடிந்து திருத்துவதற்கே ஆகும்.