பகா வழி...!

அனைவருக்கும் வணக்கம்... சமீப காலமாக நம் நாட்டில் நடப்பதைப் பற்றி திருக்குறள் உண்டா...? பகா எண்களைப் போல் மனிதர்கள் உண்டா...?
(அகர முதல எழுத்தெல்லாம் → அகர முதல எழுத்துஎல்லாம்)


கொம்பில்லா மனிதம் என்று தொடங்கிய பதிவில், முகநூல் கருத்துரைப்பெட்டியில் எதிர்பார்த்த கருத்துரை ஒன்று வந்தது: // புணர்ச்சி விதிப்படி புணர்த்தியெழுதினால் கொம்பு வரும்... // என்று சொன்ன அண்ணாச்சியைப் பலவகையிலும் தொடர்பு கொள்ள முயன்றேன்... இரு வாரங்களுக்குப் பின் அவரே தொடர்பு கொண்டு பேசினார்... மதுரை மற்றும் புதுக்கோட்டையில் நடந்த வலைப்பதிவர் சந்திப்பில் 'நாம் சந்தித்துள்ளோம்' என்றார்... அட...! உரிமையோடு கூடிய மனித உறவுகளில் உயரிய வகையான நட்புறவைச் சொல்லும் "பழைமை" அதிகாரக் குறள்களின் குரல்கள், மனதில் வந்து மகிழ்வூட்ட வைத்த முனைவர் திருமிகு. ஐயா அவர்களுக்கு நன்றி... புணர்ச்சி இலக்கணம் பற்றி இருந்தாலும், எனும் வலைப்பூவில், தமிழ் பேசும், எழுதும் அனைவருக்கும் புரியும் வகையில், சிறு சிறு பதிவுகளாக 20 உள்ளன; ஆர்வமுள்ளவர்கள் அறிந்து தெரிந்து புரிந்து கொள்ளலாம்...

மேலும் ஒரு மகிழ்வான தகவல் : எனும் சொல்லாய்வுக் கருவியில், தமிழ் இலக்கண மாத்திரை கணிக்கும் வசதி அறிமுகப்படுத்தி உள்ளார் நம் நீச்சல்காரன் திருமிகு. அவர்களுக்கும் நன்றி...
கொம்பில்லா குறள்களின் பதிவுகளாக, மனித வாழ்வியலுக்கு அவசியமான குறள்களும், ஐம்புலன்களையும் அடக்கி ஆள வேண்டிய குறள்களும், வற்றாத ஆறு போல இருக்க வேண்டிய குறளுமாக மொத்தம் 18 குறள்கள் அறிந்தோம்... ஒவ்வொரு மனிதனும் இவற்றையெல்லாம் பெறுவதும் இயற்கையே; அவற்றை அடைய வைப்பதும் தாய்மையின், தந்தையின் ஒரு சிறப்பே... ஆனால் இதனால் மனதில் முளைக்கும் கொம்பை நீக்கும் மருந்து தேவை; இதோ : அறத்திற்கு வித்தாகும் அறிவுத்தமிழில், அன்பிற்கு உரமேற்றும் அழகுத்தமிழில், இனிமையை விருந்தாக்கும் இன்பத்தமிழில், வாய்விட்டுப் படித்தால் ஒருவகை ஒலிநயம் உருவாகும் இசைத்தமிழில், மனித மனத்தில் வாழ்வு முழுவதும் தெறித்து வீழ வேண்டிய வீரத்தமிழில், சிற்றறிவுடையவனாயிருந்தும் தன்னைப் பேரறிவு உடையவனாக மதித்து செருக்குடன் நடப்பதை விவரிக்கும் 85.புல்லறிவாண்மை அதிகாரத்தில், அவ்வாறு தனக்கும் தன் மனதில் உருவாகும் செருக்கு எனும் கொம்பை முதலில் எச்சரிக்கும் நட்பு இயலில், திருக்குறளிலே மிக அதிக தமிழ் இலக்கண மாத்திரையில் ஒலிக்கும் இலக்கணத்தமிழில், ஒரு கொம்பில்லா குறள் :

849. காணாதான் காட்டுவான் தான்காணான் காணாதான் கண்டானாம் தான்கண்ட வாறு

குறளின் குரல் : இன்றைய மத மூர்க்கர்களும் முதலையும் கொண்டது விடாது...! அறிவுடையவனாகத் தன்னைக் காட்டிக் கொண்டு, 'தான் கண்டதே அறிவு' என்று சாதித்த பிழையானவற்றையும் சரியென்றே வன்மையாகப் பேசும் இயல்புடையவன்; இதனால் மனவளர்ச்சி தடைப்பட்டு, உண்மை என்னவென்றே மேலும் ஆய்வு செய்து உணராது, 'தான் கற்றது உலக அளவு' என்று எண்ணிக்கொண்டு தவறானவற்றையே வலியுறுத்தித் திரிவான்... 'தனக்கு எல்லாம் தெரியும்' என்று முரண்டு பிடிப்பவன், தான் அறிந்தவற்றையே மட்டுமே அறிந்தவன் ஆவான்...! இவ்வாறு எண்ணிலடங்கா கொம்புகளைத் தலையில் ஏற்றுக் கொண்டு மாறின புல்லறிவாளனிடம் மற்றொருவன் வந்து, ஒரு பொருளை எத்துணை விரிவாகவும் தெளிவாகவும் விளக்கியும் சொல்ல முயல்பவன், தன்னையும் அறிவற்ற நிலைக்கு ஆளாக்கிக் கொள்வான்...!
சில குடும்பத்தில் அல்லது இன்றைக்கு அன்றாடம் நம் நாட்டில் நடப்பதை ஐயன் சொல்லி இருக்கிறார்...! சரி, மொத்தம் கொம்பில்லா 19 குறள்களைப் போல் வாழ்தல் » உன்னை வெல்ல உன்னால் மட்டுமே முடியும் என, எதையும் சாதிக்க நினைக்கும் இளைய தலைமுறைக்கு எட்டுத்திக்கும் பிரகாசிக்க வைக்கும் ஒரு வழி காட்டல்...! » இயற்கையாலும், தன்னாலும் மட்டுமே முறியடிக்கப்படும் வல்லமையுடன் வாழ்ந்த - வாழ்கிற - வாழப் போகிற மனிதர்களுக்கு பகா வழி...! » ஒன்றாலும் தன்னாலும் மட்டுமே வகுபடும் பகா எண் = 19 சரி, இதன் மூல எண் = 1 ஆம் ஒன்று...! பகு எண்ணும் அல்ல... பகா எண்ணும் அல்ல... கணக்கியலில் மேலும் அறிவோம்... நன்றி...


© மகாதேவி பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் விஸ்வநாதன்-ராமமூர்த்தி T.M.சௌந்தரராஜன் @ 1957 ⟫

குறுக்கு வழியில் வாழ்வு தேடிடும் குருட்டு உலகமடா, இது கொள்ளையடிப்பதில் வல்லமை காட்டும் திருட்டு உலகமடா- | இருக்கும் அறிவை மடமை மூடிய இருட்டு உலகமடா, வாழ்வில் எந்த நேரமும் சண்டை ஓயாத முரட்டு உலகமடா- | விளையும் பயிரை வளரும் கொடியை வேருடன் அறுத்து விளையாடும்2, மனம் வெந்திடும் தோட்டக்காரனிடம், மிரட்டல் வார்த்தைகள் ஆடும், பல வரட்டு கீதமும் பாடும் - வித விதமான பொய்களை வைத்துப் புரட்டும் உலகமடா- | அன்பு படர்ந்த கொம்பினிலே ஒரு அகந்தை குரங்கு தாவும், அதன் அழகைக் குலைக்க மேவும் - கொம்பும் ஒடிந்து கொடியும் குலைந்து, குரங்கும் விழுந்து சாகும்2 - சிலர் குணமும் இதுபோல் குறுகிப் போகும் கிறுக்கு உலகமடா-

- = தம்பி தெரிந்து நடந்து கொள்ளடா; இதயம் திருந்த மருந்து சொல்லடா ⇶  திருக்குறள்  நன்றி...

புதிய பதிவுகளை பெறுதல் :


தொடர்புடைய எண்ணங்களின் வண்ணங்கள் சில :


முகநூல் மூலம் கருத்துக்களை பகிர :

கருத்துகள்

 1. பட்டுக்கோட்டையாரின் அற்புதமான (கொம்பில்லாத) பாடலை முடிவில் கொண்டு வந்து இணைத்தது அருமை ஜி.

  பதிலளிநீக்கு
 2. பொருத்தமான பாடலுடனான பதிவு சிறப்பு டிடி..
  கீதா

  பதிலளிநீக்கு
 3. அருமையான பதிவு. சொல்லிய விஷயங்கள் எல்லாம் மிக அருமை.
  பாடல் மிக பொருத்தம். எத்தனை காலம் ஆனாலும் மனிதன் மாறவில்லை என்று தெரிகிறது.

  பதிலளிநீக்கு
 4. இந்த உலகம் திருடர்கள் பூமியாகின்றது! அருமையான பாடல் டிடி!

  பதிலளிநீக்கு
 5. கொம்பில்லா குறள்.. தங்களின் ஆராய்ச்சி என்றும் பாராட்ட தக்கது நண்பரே.
  என்றும் தொடரட்டும் உங்கள் பணி

  பதிலளிநீக்கு
 6. சிந்திக்க வைக்கும் கருத்துகள். பொருத்தமானபாடல்.

  பதிலளிநீக்கு
 7. பட்டுக்கோட்டையாரின் பாடல் வரிகள்தான் இன்று உண்மையாகிக் கொண்டு வருகிறது...!!

  பதிலளிநீக்கு
 8. 849 குறள் பிரமாதமான குறள். இதுவரை இதனை யாரும் எடுத்தாண்டதாக நினைவில் இல்லை.

  பதிலளிநீக்கு
 9. பேசும் போது சொல்கிறேன். இந்த 7 எண் குறித்த சூட்சமத்தை. ஆச்சரியமானது.

  பதிலளிநீக்கு
 10. நல்ல பதிவுக்கு ஏற்ற பொருத்தமான பாடல். எப்படித்தான் உங்களுக்கு இவை உதிக்கிறதோ? என்னும் வியப்பை அடக்க முடியவில்லை.

  பதிலளிநீக்கு
 11. வணக்கம் சகோதரரே

  நல்ல பதிவு. திருக்குறள்களின் ஆராய்ச்சியில் உங்களை மிஞ்ச எவருமில்லை. ஒவ்வொரு பதிவிலும் அதற்கேற்ற பொருத்தமான பாடல்களையும் தேர்ந்தெடுக்கிறீர்கள். இன்றைய பதிவும் அருமை. பதிவிற்கேற்ற பாடலும் அருமை. கருத்துரைக்க வருவதற்கு கொஞ்சம் தாமதமாகி விட்டது. மன்னிக்கவும். பகிர்வுக்கு மிக்க நன்றி.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
 12. "காணாதான் காட்டுவான் தான்காணான் காணாதான் கண்டானாம் தான்கண்ட வாறு" ஆகா அருமையான குறள். சொல்நயம், பொருள்நயம் அனைத்தும் செறிந்த அற்புதமான குறள் ... அறிய தந்ததற்கு நன்றிகள் பல ....

  பதிலளிநீக்கு
 13. வழமைபோல பதிவு அருமையாக உள்ளது, எனக்கும் வழமைபோல பாதிதான் புரிஞ்சிருக்குது:)

  பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

நகுதற் பொருட்டன்று நட்டல் மிகுதிக்கண்
மேற்சென்று இடித்தற் பொருட்டு. (குறள் 784)

நட்புச் செய்துகொள்வது நண்பரோடு சிரித்து மகிழ்வதற்காக மட்டும் அல்ல. மிகுதியாகத் தவறு செய்யும்போது, அவரைக் கடிந்து திருத்துவதற்கே ஆகும்.