ஔ...

அனைவருக்கும் வணக்கம்...// திருக்குறளின் நூலமைப்பானது 7 என்ற எண்ணுக்கு அதிமுக்கியத்துவம் கொடுக்கும் விதத்தில்தான் அமைக்கப்பட்டுள்ளது. அதேவேளையில், திருக்குறளின் நூலமைப்பானது 3, 4, 9, 10 என்ற எண்களுக்கும் முக்கியத்துவம் கொடுத்தே அமைக்கப்பட்டுள்ளது. இவை தற்செயலாக நடைபெற்றதா? இல்லையா? என்பது பற்றியும், இவ்வெண்கள் எங்கேனும் தமிழரின் வாழ்வியலில் நெறிமுறைகளில் முக்கியத்துவம் பெற்றுள்ளனவா? இல்லையா? என்பது பற்றியும், இந்த எண்கள் ஒரு குறிப்பிட்ட போதனையில் முக்கியத்துவம் பெறுவதாக இருந்தால், அது எது ? என்பதையும் இன்றுவரை ஆய்வாளர்கள் ஆராய்ந்து, எதனையும் கூறவில்லை. //

மேற்கண்ட வரிகள் விக்கிப்பீடியாவில் திருக்குறளும் எண் குறித்த தகவல்களும் எனும் பகுதியில் உள்ளவை... இதைப் பற்றிய சிந்தனையால், முற்றுப் பெறாத சில முந்தைய பதிவுகளான மறதி மற்றும் கொம்பில்லா குறள்கள் பற்றிய சில பதிவுகளை வாசித்து இருப்பீர்கள்... சரி, திருக்குறள் பற்றிய கோப்புகளைக் கேட்டவுடன் அனுப்பிய நம் தமிழ்க் கணினியன் நீச்சல்காரன் திருமிகு. ராஜா அவர்களுக்கும், நம் அறத்தமிழ் வித்தகர் திருமிகு. கரந்தை ஜெயக்குமார் ஐயா அவர்களுக்கும், இதே போல் ஒரு அளவிற்கு மேல் புலனத்தில் அனுப்ப முடியவில்லை என்று, 119 கோப்புகள் உள்ளடங்கிய ஓர் இணைப்பை அனுப்பிய, நம் வலைப்பூ அண்ணாச்சி முனைவர் திருமிகு. அ. கிருஷ்ணமூர்த்தி ஐயா அவர்களுக்கும், இனி இந்தப் பதிவின் மூலம், திருக்குறள் கணக்கியல் சார்ந்த இணைய இணைப்பையும், தன்னிடம் உள்ள கோப்புகளை (pdf) அனுப்பி உதவப் போகிறவர்களுக்கும், நன்றி... ஆய்வு செய்ய இருக்கும் வருங்கால தலைமுறைக்கு உதவும் எண்ணத்தில் தொடர்கிறேன்...
"கற்பதற்குத் துணையாக யாரும் துணையாக இருக்க வேண்டிய அவசியமில்லை" என 'திற...' பதிவில் ஐயனிடம், கல்வி அதிகாரத்தில் அதிகாரமாகப் பேசினதால், அதன் அடுத்த குறளுக்கு விளக்கம் கேட்டு ஐயனைக் கூப்பிடுவது முறையல்ல அல்லவா...? அதனால், "எண்ணும் எழுத்தும் கண்ணெனத் தகும்" என்றுரைத்த ஒளவை பாட்டியின், கொன்றை வேந்தன் தமிழ் நீதி நூல் மூலம் ஆரம்பிக்கிறேன்... சில நொடிகளில் எழுத்துக்களின் வகைகளைக் கணக்கிடும் பரம்பல் கொண்ட →சுளகு,← இதே போல் குறள் வெண்பா யாப்பினை கணக்கிடும் →அவலோகிதம்,← மற்றும், செய்யும் தவற்றை எச்சரிக்கும்படி செய்ய வைக்கும் Excel துணையோடு, முயற்சியும் பயிற்சியும் கொண்ட மனதுடன்...! அனைத்தையும் விட முக்கியமாகக் கருத்துரைக்கும் அன்பர்களின் ஊக்கமும் ஆதரவும்...

இதெல்லாம் சரி, தாத்தாவின் திருக்குறள் அறிமுகத்திற்கு முன்னே ஆரம்ப பள்ளியில் ஒளவை பாட்டி ஆத்திசூடி தான்...! அப்போது "எண் எழுத்து இகழேல்" என்றார்... பாட்டிகள் சொல்லைத் தட்டாதே... ஆமாம், இரண்டு பாட்டிகளுமே சொன்னவற்றின் வரிசை எண் = = திருக்குறளின் அதிமுக்கியத்துவம் வாய்ந்த எண்ணான மிகப்பெரிய ஓர் இலக்க பகா எண்...! முப்பால், இயல்கள், அதிகாரங்கள், குறள்கள் இவற்றின் எண்களின் கணக்கியல் சற்றே எளிது... ஆனால் இவற்றின் எழுத்துக்களின் கணக்கியல்...? ஒன்றிக்கு மேல் பலமுறை பயன்படுத்திய சொற்களின் எண்ணிக்கையும் தாத்தா எவ்வாறு கட்டமைத்துள்ளார் என்பதை அறிவது தான் நமது முதல் முயற்சி...! பயிற்சியால் தோல்வி கிடைத்தாலும் வருங்கால ஆய்வாளர்களுக்கு வெற்றி...?! சரி, ஒளவையாரா...? அவ்வையாரா...? ஒள...? / அவ்...? ஒளவியம் பேசேல்...!

தாத்தாவும், 169. அவ்விய நெஞ்சத்தான் ஆக்கமும் செவ்வியான் கேடும் நினைக்கப் படும்" என்கிறார்; ஆமாம், பொறாமைப்பட்டுக் கொண்டே இருக்கிறவன் எல்லாவற்றிலும் வளர்ந்து கொண்டே இருக்கிறானா...? பொறாமையே இல்லாத நல்லவன் கெட்டுப் போகின்றானா...?

"நான் நல்லவன்" என்று வீட்டுக்குள்ளேயே சோர்ந்து போய் உட்கார்ந்து கொண்டால் அனைத்து செல்வமும் தானா வருமா...? தன்னைப் பற்றி அவரவர் மனதோடு ஒளவியம் பேசினால், முயற்சியும் பயிற்சியும் கூடும்...! அது மட்டுமில்லாமல் இந்தக் குறளையும் விரிவாகப் பேச அழுக்காறாமை அதிகாரத்தில் உள்ள மற்ற குறள்களின் குரலைப் பேச வேண்டும்; முந்தைய குறள் "167. அவ்வித்து அழுக்காறு உடையானைச் செய்யவள் தவ்வையைக் காட்டி விடும்" - இதில் ஒளவித்து, தௌவை என்று வரக்கூடாதா...?

தாத்தா தமிழில் பயன்படுத்தாத ஓர் உயிரெழுத்து "" என்று உலகமெங்கும் அனைத்து ஆவணங்களிலும் இருக்கிறதே...!

அப்படியா சரி, முதலில் நீ சொன்ன குறளில் 'நினைக்கப்படும்' என்றால் ஆராயப்படும்; ஓ...! இக்குறளுக்கு முடிவு கூறாமல் விட்டுவிட்டாரா ஐயன்...? இல்லை; "உலகியல் நமக்குச் சொல்லும் பாடம் என்னவென்றால், அறத்திற்கு எதிரானதாகத் தோன்றும் நிலைமை ஒரு காலகட்டத்தில் முடிந்து போகாமல் தொடர்ந்து இருந்துகொண்டே இருக்கும்; காலத்துக்குத் தகுந்தவாறும், மாறிக்கொண்டே இருக்கும் சூழ்நிலைகளுக்கேற்பவும் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டு இருப்பதை ஆராயப்படும்; அது மேலும் ஆராயப்படவேண்டும்; ஆனால் அது அத்தை நோக்கியே தவிர, செல்வங்களுக்காகவே வாழ்ந்தும் அழிந்தும் போனவர்களை நினைக்கப்படுவதற்காக அல்ல...!" என்கிறார் ஐயன்... இதையே இன்றைய அரசியலுக்கு யோசித்தால் சிந்தனை அலர் தெறிக்கும்...! சரி, அலரறிவுறுத்தல் அதிகாரத்தில் உள்ள குறள்கள் :
1143. உறாஅதோ ஊரறிந்த கௌவை / கவ்வை அதனைப் பெறாஅது பெற்றன்ன நீர்த்து
1144. கௌவையால் / கவ்வையால் கவ்விது காமம் அதுவின்றேல் தவ்வென்னும் தன்மை இழந்து
1147. ஊரவர் கெளவை / கவ்வை எருவாக அன்னைசொல் நீராக நீளும்இந் நோய்
1148. நெய்யால் எரிநுதுப்பேம் என்றற்றால் கௌவையால் / கவ்வையால் காமம் நுதுப்பேம் எனல்
1150. தாம்வேண்டின் நல்குவர் காதலர் யாம்வேண்டும் கெளவை / கவ்வை எடுக்கும்இவ் வூர்

'கெளவை' வருவதால், 1147-வது குறட்பாவினுள் வெண்டளை அல்லாத நிரையொன்றிய ஆசிரியத்தளையும், 1150-வது குறட்பாவினுள் வெண்டளை அல்லாத கலித்தளையும் பயின்று வருவதாக யாப்பு →மென்பொருள்← கூறி, அவற்றைக் 'கவ்வை' என மாற்றுகிறது...! எனது சந்தேகம் அல்லது கேள்வி : தாத்தா (க்+ஔ=கௌ) உயிர்மெய்யெழுத்தை பயன்படுத்தி உள்ளாரா...? இல்லை உலகமெங்கும் அனைத்து ஆவணங்களிலும், பயன்படுத்தாத 37 எழுத்துக்களில், "கௌ" இல்லை என்பதால், "கௌ"-வை பயன்படுத்தி உள்ளார் என்று ஏற்றுக் கொள்வதா...? மொத்த குறள்களின் எழுத்துக்களை (கிட்டத்தட்ட 40,000 +/-) கணக்கியல் மூலம் சரி பார்க்கும் போது, பகா எண்களைக் கொண்டு கட்டமைத்த கணக்கியல் சரியாக வரவில்லை...! இதுவும் மேலும் ஆராயப்படவேண்டும்...!

தகவல் 1 : மேற்கண்ட குறள்களை இணையத்தில் நகல் எடுக்கும் போதும் |ஒ-ள, கெ-ள| என்றே இருக்கிறது; |ஔ, கௌ| என்று ஓரெழுத்தாக இல்லை...! (தமிழ்க் கணினியன் கவனத்திற்கு : சில புதிய தமிழ் எழுத்துருக்களைப் பயன்படுத்தும் போது, என்பதை ஓரெழுத்தாக தட்டச்சு செய்தால் பதிவில் தோன்றுவதில்லை...!)
தகவல் 2 : தமிழார்வமுள்ள நுட்பியலாளர் →திருமிகு. இராம.கி← ஐயாவின் வளவு வலைப்பூ பதிவில் ஓர் விளக்கம் உள்ளது... நன்றி....

புதிய பதிவுகளை பெறுதல் :


தொடர்புடைய எண்ணங்களின் வண்ணங்கள் சில :


முகநூல் மூலம் கருத்துக்களை பகிர :

கருத்துகள்

 1. அருமை ஜி

  வியக்க வைக்கின்றீர்கள.

  தங்களது குறளாராய்ச்சி தொடரட்டும் ...

  பதிலளிநீக்கு
 2. அசத்துகின்றீர்கள். சில புதிய தமிழ் எழுத்துருக்களைப் பயன்படுத்தும்போது எழும் சிக்கலை முதன்முதலாக சாதாரண தட்டச்சுப் பொறியிலிருந்து, கணிப்பொறிக்கு மாறிய காலத்தில் எதிர்கொண்டு அதிகம் சிரமப்பட்டேன்.

  பதிலளிநீக்கு
 3. தனபாலன் உங்களது திருக்குறள் பற்றிய பதிவுகலை பார்க்கும் போது எனக்கு தோன்ருவது இதுதான்..நீங்கள் எழுதுவதை பல்கலைகழத்தில் ரிஜிஸ்டர் பண்ணிவிட்டு தொடர்ந்து எழுதினால் இறுதியில் நீங்கள் டாக்டர் பட்டம் எளிதாக் பெறலாம் என்பதுதான்

  பதிலளிநீக்கு
 4. மிக மிக அருமையான ஆய்வு.
  ஆராய்ச்சித் துறையில் வெற்றி பெற்றவர் நீங்கள்.
  நாங்கள் ஔவையார் என்று தான் சொல்வோம்.

  பதிலளிநீக்கு
 5. வணக்கம் சகோதரரே

  பதிவு அருமையாக உள்ளது. சிறந்த ஆராய்ச்சிகள் நடத்தி நீங்கள் செவ்வனே எழுதிய பதிவு. உங்கள் ஆராய்ச்சிகள் "எப்படி இதெல்லாம் சாத்தியம்" என பிரமிக்க வைக்கின்றன. குறள்களைப் பற்றியும், ஐயனின் எழுத்தாற்றல் பற்றியும் ஆராய்ந்து இவ்வளவு தெளிவாக கூறுவதற்கும் நிறைய திறமைகள் உங்களிடம் இருக்கிறது. அந்த அசாத்தியமான திறமைகளுக்கு எனது பணிவான வணக்கங்கள். பாராட்டுக்கள். பகிர்வுக்கும் மிக்க நன்றி.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
 6. குறளோடு குறளாய் இணைந்து, நாளும் குறளையே சிந்தித்து,
  குறளையே சுவாசித்து வாழும் தாங்களின் குறள் ஆய்வுப் பார்வை
  போற்றுதலுக்கு உரியது ஐயா

  பதிலளிநீக்கு
 7. மிக அருமையாக இருக்கிறது பதிவு.
  எவ்வளவு ஆராய்ச்சி செய்து இருக்கிறீர்கள்!
  பள்ளியில் மனப்பாடமாக சில குறள் அதன் அர்த்தம் படித்தது.
  இப்போதும் நாளும் ஒரு அதிகாரம் படித்தாலும் நினைவில் வைத்துக் கொள்ள கஷ்டபடுகிறேன்.
  நீங்கள் எவ்வளவு நினைவாக அனைத்தையும் சொல்கிறீர்கள்.
  உங்களுக்கு பாராட்டுக்கள், வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 8. அண்ணா, செம ஆராய்ச்சி! ஆர்வமாக இருக்கிறது அண்ணா. நீங்கள் முனைவர் பட்டம் பெற்றபின் நான் உங்களிடம் மாணவராகச் சேர்ந்து கொள்கிறேன். :)
  இப்போவே விண்ணப்பப் படிவம் கொடுத்தாச்சு.

  பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

நகுதற் பொருட்டன்று நட்டல் மிகுதிக்கண்
மேற்சென்று இடித்தற் பொருட்டு. (குறள் 784)

நட்புச் செய்துகொள்வது நண்பரோடு சிரித்து மகிழ்வதற்காக மட்டும் அல்ல. மிகுதியாகத் தவறு செய்யும்போது, அவரைக் கடிந்து திருத்துவதற்கே ஆகும்.