🏠 வணக்கம் காப்பகம் நன்றி

தேடல் 🔎



புதிய பதிவுகளை பெற ✉



எண்ணென்ப...

அனைவருக்கும் வணக்கம்... முந்தைய →கணக்கியல்← பதிவில், ஒன்று முதல் எழுபது கோடி வரை எண்களைக் கொண்ட குறள்கள் பற்றிய ஆய்வும் செய்ய வேண்டும் என்று சொல்லியிருந்தேன்... அதற்கான முன்னோட்டம் இந்தப் பதிவு... திருக்குறளில் பயன்படுத்தப்பட்டுள்ள எண்களை - அதாவது எண்களின் சொற்களை முதலில் அறிந்து கொள்வோமா...?


ஒன்று,
87. இனைத்துணைத் தென்பதுஒன்று இல்லை விருந்தின் துணைத்துணை வேள்விப் பயன்.
109. கொன்றன்ன இன்னா செயினும் அவர்செய்த ஒன்றுநன்று உள்ளக் கெடும்.
111. தகுதி எனஒன்று நன்றே பகுதியால் பாற்பட்டு ஒழுகப் பெறின்.
128. ஒன்றுஆனும் தீச்சொல் பொருட்பயன் உண்டாயின் நன்றாகா தாகி விடும்.
221. வறியார்க்குஒன்று ஈவதே ஈகைமற் றெல்லாம் குறியெதிர்ப்பை நீர துடைத்து.
232. உரைப்பார் உரைப்பவை எல்லாம் இரப்பார்க்குஒன்று ஈவார்மேல் நிற்கும் புகழ்.
233. ஒன்றா உலகத்து உயர்ந்த புகழல்லால் பொன்றாது நிற்பதுஒன்று இல்.
334. நாளென ஒன்றுபோற் காட்டி உயிர்ஈரும் வாளது உணர்வார்ப் பெறின்.
344. இயல்பாகும் நோன்பிற்குஒன்று இன்மை உடைமை மயலாகும் மற்றும் பெயர்த்து.
380. ஊழிற் பெருவலி யாவுள மற்றுஒன்று சூழினுந் தான்முந் துறும்.
438. பற்றுள்ளம் என்னும் இவறன்மை எற்றுள்ளும் எண்ணப் படுவஒன்று அன்று.
758. குன்றேறி யானைப்போர் கண்டற்றால் தன்கைத்துஒன்று உண்டாகச் செய்வான் வினை.
773. பேராண்மை என்ப தறுகண்ஒன்று உற்றக்கால் ஊராண்மை மற்றதன் எஃகு.
800. மருவுக மாசற்றார் கேண்மைஒன்று ஈத்தும் ஒருவுக ஒப்பிலார் நட்பு.
831. பேதைமை என்பதுஒன்று யாதெனின் ஏதங்கொண்டு ஊதியம் போக விடல்.
839. பெரிதினிது பேதையார் கேண்மை பிரிவின்கண் பீழை தருவதுஒன்று இல்.
875. தன்துணை இன்றால் பகைஇரண்டால் தான்ஒருவன் இன்துணையாக் கொள்கவற்றின் ஒன்று.
932. ஒன்றுஎய்தி நூறுஇழக்கும் சூதர்க்கும் உண்டாங்கொல் நன்றெய்தி வாழ்வதோர் ஆறு.
934. சிறுமை பலசெய்து சீரழிக்கும் சூதின் வறுமை தருவதுஒன்று இல்.
1006. ஏதம் பெருஞ்செல்வம் தான்துவ்வான் தக்கார்க்குஒன்று ஈதல் இயல்பிலா தான்.
1007. அற்றார்க்குஒன்று ஆற்றாதான் செல்வம் மிகநலம் பெற்றாள் தமியள்மூத் தற்று.
1035. இரவார் இரப்பார்க்குஒன்று ஈவர் கரவாது கைசெய்தூண் மாலை யவர்.
1080. எற்றிற் குரியர் கயவர்ஒன்று உற்றக்கால் விற்றற்கு உரியர் விரைந்து.
1202. எனைத்துஒன்று இனிதேகாண் காமம்தாம் வீழ்வார் நினைப்ப வருவதொன்று இல்.
1216. நனவென ஒன்றுஇல்லை ஆயின் கனவினால் காதலர் நீங்கலர் மன்.
1271. கரப்பினுங் கையிகந் தொல்லாநின் உண்கண் உரைக்கல் உறுவதுஒன்று உண்டு.
1273. மணியில் திகழ்தரு நூல்போல் மடந்தை அணியில் திகழ்வதுஒன்று உண்டு.
1274. முகைமொக்குள் உள்ளது நாற்றம்போல் பேதை நகைமொக்குள் உள்ளதுஒன்று உண்டு.
1325. தவறிலர் ஆயினும் தாம்வீழ்வார் மென்றோள் அகறலின் ஆங்குஒன்று உடைத்து.


இரண்டால்,
875. தன்துணை இன்றால் பகைஇரண்டால் தான்ஒருவன் இன்துணையாக் கொள்கவற்றின் ஒன்று.


இரண்டின்,
662. ஊறொரால் உற்றபின் ஒல்காமை இவ்விரண்டின் ஆறென்பர் ஆய்ந்தவர் கோள்.
674. வினைபகை என்றிரண்டின் எச்சம் நினையுங்கால் தீயெச்சம் போலத் தெறும்.
1022. ஆள்வினையும் ஆன்ற அறிவும் எனஇரண்டின் நீள்வினையால் நீளும் குடி.


இரண்டு,
393. கண்ணுடையர் என்பவர் கற்றோர் முகத்திரண்டு புண்ணுடையர் கல்லா தவர்.
1247. காமம் விடுஒன்றோ நாண்விடு நன்னெஞ்சே யானோ பொறேன்இவ் விரண்டு.


இரண்டும்,
19. தானம் தவம்இரண்டும் தங்கா வியன்உலகம் வானம் வழங்கா தெனின்.
392. எண்ணென்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண்டும் கண்ணென்ப வாழும் உயிர்க்கு.
402. கல்லாதான் சொற்கா முறுதல் முலையிரண்டும் இல்லாதாள் பெண்காமுற் றற்று.
455. மனந்தூய்மை செய்வினை தூய்மை இரண்டும் இனந்தூய்மை தூவா வரும்
581. ஒற்றும் உரைசான்ற நூலும் இவையிரண்டும் தெற்றென்க மன்னவன் கண்.
760. ஒண்பொருள் காழ்ப்ப இயற்றியார்க்கு எண்பொருள் ஏனை இரண்டும் ஒருங்கு.
992. அன்புடைமை ஆன்ற குடிப்பிறத்தல் இவ்விரண்டும் பண்புடைமை என்னும் வழக்கு.


இருபுனலும்,
737. இருபுனலும் வாய்ந்த மலையும் வருபுனலும் வல்லரணும் நாட்டிற்கு உறுப்பு.


இருமனம்,
920. இருமனப் பெண்டிரும் கள்ளும் கவறும் திருநீக்கப் பட்டார் தொடர்பு.


இருமை,
23. இருமை வகைதெரிந்து ஈண்டுஅறம் பூண்டார் பெருமை பிறங்கிற்று உலகு.


இருவினை,
5. இருள்சேர் இருவினையும் சேரா இறைவன் பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு.


இருவேறு,
374. இருவேறு உலகத்து இயற்கை திருவேறு தெள்ளிய ராதலும் வேறு.


மூவர்,
589. ஒற்றெற் றுணராமை ஆள்க உடன்மூவர் சொற்றொக்க தேறப் படும்.


மூவர்க்கும்,
41. இல்வாழ்வான் என்பான் இயல்புடைய மூவர்க்கும் நல்லாற்றின் நின்ற துணை


மூன்றன்,
360. காமம் வெகுளி மயக்கம் இவைமூன்றன் நாமம் கெடக்கெடும் நோய்.
684. அறிவுரு வாராய்ந்த கல்விஇம் மூன்றன் செறிவுடையான் செல்க வினைக்கு.


மூன்றின்,
688. தூய்மை துணைமை துணிவுடைமை இம்மூன்றின் வாய்மை வழியுரைப்பான் பண்பு.


மூன்று,
682. அன்பறிவு ஆராய்ந்த சொல்வன்மை தூதுரைப்பார்க்கு இன்றி யமையாத மூன்று.
941. மிகினும் குறையினும் நோய்செய்யும் நூலோர் வளிமுதலா எண்ணிய மூன்று.


மூன்றும்,
383. தூங்காமை கல்வி துணிவுடைமை இம்மூன்றும் நீங்கா நிலன்ஆள் பவர்க்கு.
952. ஒழுக்கமும் வாய்மையும் நாணும்இம் மூன்றும் இழுக்கார் குடிப்பிறந் தார்.
1085. கூற்றமோ கண்ணோ பிணையோ மடவரல் நோக்கமிம் மூன்றும் மூன்றும் உடைத்து


நாற் கூற்றே,
950. உற்றவன் தீர்ப்பான் மருந்துழைச் செல்வானென்று அப்பால்நாற் கூற்றே மருந்து.


நான்கின்,
501. அறம்பொருள் இன்பம் உயிரச்சம் நான்கின் திறந்தெரிந்து தேறப் படும்.
743. உயர்வகலம் திண்மை அருமைஇந் நான்கின் அமைவரண் என்றுரைக்கும் நூல்.


நான்கும்,
35. அழுக்காறு அவாவெகுளி இன்னாச்சொல் நான்கும் இழுக்கா இயன்றது அறம்.
146. பகைபாவம் அச்சம் பழியென நான்கும் இகவாவாம் இல்லிறப்பான் கண்.
382. அஞ்சாமை ஈகை அறிவூக்கம் இந்நான்கும் எஞ்சாமை வேந்தர்க் கியல்பு.
390. கொடையளி செங்கோல் குடியோம்பல் நான்கும் உடையானாம் வேந்தர்க் கொளி.
513. அன்பறிவு தேற்றம் அவாவின்மை இந்நான்கும் நன்குடையான் கட்டே தெளிவு.
605. நெடுநீர் மறவி மடிதுயில் நான்கும் கெடுநீரார் காமக் கலன்.
953. நகைஈகை இன்சொல் இகழாமை நான்கும் வகையென்ப வாய்மைக் குடிக்கு.


நான்கே,
766. மறமானம் மாண்ட வழிச்செலவு தேற்றம் எனநான்கே ஏமம் படைக்கு.


ஐந்தடக்கல்,
126. ஒருமையுள் ஆமைபோல் ஐந்தடக்கல் ஆற்றின் எழுமையும் ஏமாப் புடைத்து.


ஐந்தவித்தான்,
6. பொறிவாயில் ஐந்தவித்தான் பொய்தீர் ஒழுக்க நெறிநின்றார் நீடுவாழ் வார்.
25. ஐந்தவித்தான் ஆற்றல் அகல்விசும்பு ளார்கோமான் இந்திரனே சாலுங் கரி.


ஐந்தின்,
27. சுவைஒளி ஊறுஓசை நாற்றமென ஐந்தின் வகைதெரிவான் கட்டே உலகு.
343. அடல்வேண்டும் ஐந்தின் புலத்தை விடல்வேண்டும் வேண்டிய வெல்லாம் ஒருங்கு.


ஐந்து,
738. பிணியின்மை செல்வம் விளைவின்பம் ஏமம் அணியென்ப நாட்டிவ் வைந்து.


ஐந்துசால்,
983. அன்புநாண் ஒப்புரவு கண்ணோட்டம் வாய்மையொடு ஐந்துசால் ஊன்றிய தூண்.


ஐந்துடன்,
632. வன்கண் குடிகாத்தல் கற்றறிதல் ஆள்வினையோடு ஐந்துடன் மாண்டது அமைச்சு.


ஐந்தும்,
24. உரனென்னும் தோட்டியான் ஓரைந்தும் காப்பான் வரனென்னும் வைப்பிற்கோர் வித்து.
271. வஞ்ச மனத்தான் படிற்றொழுக்கம் பூதங்கள் ஐந்தும் அகத்தே நகும்.
675. பொருள்கருவி காலம் வினையிடனொடு ஐந்தும் இருள்தீர எண்ணிச் செயல்.
939. உடைசெல்வம் ஊண்ஒளி கல்விஎன்று ஐந்தும் அடையாவாம் ஆயங் கொளின்.


ஐம்புலத்தாறு,
43. தென்புலத்தார் தெய்வம் விருந்தொக்கல் தானென்றாங்கு ஐம்புலத்தாறு ஓம்பல் தலை.


ஐம்புலனும்,
1101. கண்டுகேட்டு உண்டுயிர்த்து உற்றறியும் ஐம்புலனும் ஒண்தொடி கண்ணே உள.


ஐயுணர்வு,
354. ஐயுணர்வு எய்தியக் கண்ணும் பயமின்றே மெய்யுணர்வு இல்லா தவர்க்கு.


ஆறு,
381. படைகுடி கூழ்அமைச்சு நட்பரண் ஆறும் உடையான் அரசருள் ஏறு.
787. அழிவி னவைநீக்கி ஆறுய்த்து அழிவின்கண் அல்லல் உழப்பதாம் நட்பு.
932. ஒன்றுஎய்தி நூறுஇழக்கும் சூதர்க்கும் உண்டாங்கொல் நன்றெய்தி வாழ்வதோர் ஆறு.
943. அற்றால் அறவறிந்து உண்க அஃதுடம்பு பெற்றான் நெடிதுய்க்கும் ஆறு.


எழுநாள்,
1269. ஒருநாள் எழுநாள்போல் செல்லும்சேண் சென்றார் வருநாள்வைத்து ஏங்கு பவர்க்கு.
1278. நெருநற்றுச் சென்றார்எம் காதலர் யாமும் எழுநாளேம் மேனி பசந்து.


எழுபிறப்பும்,
62. எழுபிறப்பும் தீயவை தீண்டா பழிபிறங்காப் பண்புடை மக்கட் பெறின்.
107. எழுமை எழுபிறப்பும் உள்ளுவர் தங்கண் விழுமந் துடைத்தவர் நட்பு.


எழுமை,
107. எழுமை எழுபிறப்பும் உள்ளுவர் தங்கண் விழுமந் துடைத்தவர் நட்பு.
126. ஒருமையுள் ஆமைபோல் ஐந்தடக்கல் ஆற்றின் எழுமையும் ஏமாப் புடைத்து.
398. ஒருமைக்கண் தான்கற்ற கல்வி ஒருவற்கு எழுமையும் ஏமாப் புடைத்து.
538. புகழ்ந்தவை போற்றிச் செயல்வேண்டும் செய்யாது இகழ்ந்தார்க்கு எழுமையும் இல்.
835. ஒருமைச் செயலாற்றும் பேதை எழுமையும் தான்புக் கழுந்தும் அளறு.


எண்குணத்தான்,
9. கோளில் பொறியின் குணமிலவே எண்குணத்தான் தாளை வணங்காத் தலை.


பயன்படுத்தப்படவில்லை பத்தடுத்த,
450. பல்லார் பகைகொளலிற் பத்தடுத்த தீமைத்தே நல்லார் தொடர்கை விடல்.
817. நகைவகைய ராகிய நட்பின் பகைவரால் பத்தடுத்த கோடி உறும்.


நூறு,
932. ஒன்றுஎய்தி நூறுஇழக்கும் சூதர்க்கும் உண்டாங்கொல் நன்றெய்தி வாழ்வதோர் ஆறு.


ஆயிரம்,
259. அவிசொரிந்து ஆயிரம் வேட்டலின் ஒன்றன் உயிர்செகுத் துண்ணாமை நன்று.


கோடி,
337. ஒருபொழுதும் வாழ்வது அறியார் கருதுப கோடியும் அல்ல பல.
377. வகுத்தான் வகுத்த வகையல்லால் கோடி தொகுத்தார்க்கு துய்த்தல் அரிது.
816. பேதை பெருங்கெழீஇ நட்பின் அறிவுடையார் ஏதின்மை கோடி உறும்.
817. நகைவகைய ராகிய நட்பின் பகைவரால் பத்தடுத்த கோடி உறும்.
954. அடுக்கிய கோடி பெறினும் குடிப்பிறந்தார் குன்றுவ செய்தல் இலர்.
1005. கொடுப்பதூஉம் துய்ப்பதூஉம் இல்லார்க்கு அடுக்கிய கோடியுண் டாயினும் இல்.
1061. கரவாது உவந்தீயும் கண்ணன்னார் கண்ணும் இரவாமை கோடி உறும்.


எழுபது கோடி,
639. பழுதெண்ணும் மந்திரியின் பக்கத்துள் தெவ்வோர் எழுபது கோடி உறும்.

இவை ஓரிரு ஆய்வாளர்கள் செய்த ஆய்வின் தொகுப்பு .. எடுத்துக்காட்டாக எண் 1 :- "இந்த குறள்களிலெல்லாம் எண் 1 வருகிறது" என்று வெறும் குறள்களின் எண்களை மட்டுமே தந்துள்ளார்கள்... அவர்கள் கொடுத்த குறள் எண்கள் மூலம், அந்தந்த குறளுக்குச் சென்று, அதில் எண்களைக் குறிப்பிடும் சொற்களைத் தொகுத்துக் கொடுத்துள்ளேன்... சில எண்களின் சொற்கள் ஒரேயொரு குறளிலும் உண்டு; சில குறள்களில் வெவ்வேறு எண்களின் சொற்களும் உண்டு... ஆனால் முழுவதையும் ஆய்வு செய்யவில்லை... "ஒவ்வொரு பூக்களுமே சொல்கிறதே..." அதுக்கென்ன இப்போ...? கணக்கென்றால் போராடும் போர்க்களமே தான்...! "பூவ எடுத்து ஒரு மாலை தொடுத்து வெச்சேனே என் சின்ன ராசா...!" குறள்களில் எண்களைப் பற்றிய ஆய்வில் பாட்டு தேவையா மனமே...? அதெப்படி 'பூக்களுமே' வரும்...? எந்தப் பூவை எடுத்து 'ஒரு' மாலை...? - இப்படி தவறுகள் சொல்ல நீ நினைப்பாய் - நான் "எண்"ணுகிறேன்...! திரைப்படப் பாடலுக்கான ஆய்வா இது...? சரி சரி எண்ணு... பாடல்களில் உள்ள "ஒவ்வொரு / ஒரு" - இவை எண் ஒன்றை (1) குறிக்குமா...?-ன்னு கேட்க வந்ததற்குக் காரணம் என்னான்னா... அதை நான் சொல்கிறேன்... நண்பர்களே... ஆய்வாளர்கள் கொடுத்துள்ள எண் தொகுப்பில், சில குறள்களில் மட்டுமே எண்களின் பயன்பாடு, எண்களையே குறிப்பிட்டுச் சரியாக உள்ளது... இதற்குத் தான் பாட்டு...! "ஒவ்வொரு குழப்பமுமே சொல்கிறதே... கணக்கென்றால் தெளிவொன்று வந்திடுமே" என்பதைச் சரி பார்க்க, ஒரேயொரு குறளில் இருப்பதாகச் சொல்லப்படும் எட்டு (8) பற்றிய சிறிய ஆய்வை எழுது...!
கோளில் பொறியின் குணமிலவே எண்குணத்தான் தாளை வணங்காத் தலை - எண்குணத்தான் என்பதற்கு 'எண்ணப்பட்ட குணங்களை உடைய' இறைவனைக் குறிக்கும் என்போர் சிலர்... அன்பர்கள் எண்ணும் அல்லது நினைக்கும் குணங்களையுடையவன் என்ற பொருள் தருவது... இதை எண்ணத் தகுந்த, பாராட்டத்தக்கக் குணங்களை உடையவன் என்றும், பலகாலும் எண்ணி எண்ணி இன்புறத்தக்கக் குணங்கள் கொண்டவன் என்றும், மனிதர்கள் இறைவனது பெருமைகளை எண்ணி முயன்று அக்குணங்களைப் பெறவேண்டும் என்றும் கூறுவதுண்டு... எண்பொருள வாகச் செலச்சொல்லி.... (424), எண்பதத்தால் ஒரா முறைசெய்யா மன்னவன்... (548), எண்பதத்தால் எய்தல் எளிதென்ப.... (991) - ஆகிய குறள்களைச் சான்றாகக் காட்டி இவற்றில் 'எண்' என்பது எளிய என்ற பொருளில் ஆளப்பட்டுள்ளதால், அறிந்துணர்வதற்குரிய எளிமையான குணங்களையுடையவன் இறைவன் என்பதால் அணுகுதற்கு எளியவனாகி அனைத்து மனிதர்களின் குறைகளைச் செவிமடுப்பவன் என்றுரைப்போர் சிலர்... எட்டு குணங்கள் கொண்ட இறைவன் என்று பொருள் கொள்வோர் பலர்...! அவை என்னென்ன...? பலரின் புரிதல்களைத் தனிப் பதிவில் பிறகு காண்போம்...!
கடவுளுக்கு எண்ணி எட்டே எட்டு குணங்கள் மட்டும் தானா...? கடவுளையே எட்டுக் குணங்கள் கொண்டவன் என்றொரு எல்லைக்குள் கொண்டுவர முடியுமா...? கடவுள் எண்ணிக்கையில் அடங்குதற்கரிய குணங்களை உடையவரா...? இல்லையா...? பலரின் குறள் உரைகள், அவரவர் சமயம் சார்ந்த சமயக் கருத்துக்களே உள்ளது... சுற்றி வளைத்து முடிவில் "ஐயன் நம்மவர்" என்று சமயச் சாயம் பூசுவதிலேயே நோக்கம் கொண்டோர் பலர்... ஐயனின் உள்ளக்கருத்தை அறிந்து தெரிந்து புரிந்து கொள்வோர் சிலர்... ம்... மனிதன் மனிதனாக வாழ, முப்பாலை வழங்கிய மனிதனே ஐயன்... இதற்கு முந்தைய எட்டு குறள்களில் உள்ள குணங்களைக் கொண்டவனே கடவுள், அதனால் ஒன்பதாவது குறளாக உள்ளது என்று சொல்வோரும் உண்டு... அடடே என்னே கணக்கு...!☺️ மணக்குடவர், பரிப்பெருமாள் →உரைகளின் படி← இது பத்தாவது குறள்...! பரிதியார் 8, காலிங்கர் 5 அடடா இதென்ன கணக்கு...?☹️ இதன் அதிகாரம் கடவுள் வாழ்த்து - முதல் தலைப்பையே ஆய்வு செய்த பலரும் ஒவ்வொன்று சொல்கிறார்கள்...! இந்த தலைப்பில் மட்டுமே கடவுள் எனும் சொல், குறள்களில் இல்லை... குறள்களில் வரும் இறை, இறைவன், தெய்வம் ஆகியவற்றின் பொருள் வெவ்வேறு...! சரி, எண்கள் அனைத்தும் எழுத்து வடிவத்திலிருந்ததையும் ஆய்வு செய்ய வேண்டும்... அதோடு இது ஒரு நீண்ட ஆய்வு என்பதால் பொறுமையாகச் செய்வோம் என்று முடிவெடுத்து விட்டாலும்...

நண்பர்களே... சில குறளின் குரல் பதிவுகளில் குறளுக்கேற்ப திரைப்படப் பாடல்களைக் கேட்க, இதயம் அல்லது ஏதேனும் ஒரு குறியீட்டைச் "சொடுக்கவும்" என்று சொல்லியிருப்பேன்... இங்கேயும் மேலுள்ள தொகுப்பில் கட்டம் கட்டியுள்ள எண்களுக்கு அடுத்துள்ள எண்களின் சொற்களில், அவை இடம் பெற்றுள்ள குறள்கள் உள்ளது... இந்த வலை நுட்பத்திற்குப் பெயர் : "மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன...?" அழகர் மலை அழகா ? இந்தச் சிலை அழகா ? பாடலின் இனிமையால் கேள்விகள் மாறி விட்டது...! சரியான கேள்விகள் :- எண்களின் சொற்கள், எண்களைத் தான் குறிக்கிறதா...? இல்லையா...? என்பதை ஆய்வு செய்ய விருப்பமுள்ளவர்கள், எண்களின் சொற்களைச் சொடுக்கி, பதம் பிரித்த சொற்களை ஆராய்ந்து அறியலாம்...!

எண்ணிற்கு ஒருபடி முக்கியத்துவம் கொடுத்த முப்பாலையே கணக்கியலில் உட்படுத்திப் பார்த்தால், அதன் ஒவ்வொன்றின் கூட்டுத்தொகை அல்லது மூல எண் என்னவாக வரும்...? அதிமுக்கியத்துவம் வாய்ந்த 7? ഽ முக்கியத்துவம் வாய்ந்த 3? 4? 9? 10? ഽ பகா எண் ? ഽ பகு எண்ணும் பகா எண்ணும் அல்லாத 1? → இதே கேள்விகள் தான், திருக்குறளில் பயன்படுத்தப்பட்டுள்ள எண்களின் ஆய்விற்கும் முடிவாக இருக்கும் என்று எண்ணுகிறேன்... ஆய்வு தொடரும்... நன்றி...

புதிய பதிவுகளை பெறுதல் :


தொடர்புடைய எண்ணங்களின் வண்ணங்கள் சில :


முகநூல் மூலம் கருத்துக்களை பகிர :

கருத்துகள்

  1. எண்குணத்தான் எனும் வார்த்தைக்கான பொருள் யோசிக்க வைக்கிறது.

    பதிலளிநீக்கு

  2. தங்களது ஆய்வுகள் எங்களுக்கும் பல நல்ல விளக்கங்களை தரும்.
    தொடரட்டும் ஜி

    பதிலளிநீக்கு
  3. அருமையாக இருக்கிறது பதிவு.
    ஆழ்ந்து படிக்க வேண்டும் பொறுமையாக.
    நிறைய செய்திகள் இருக்கிறது.
    நல்லதொரு ஆய்வு .
    ஆய்வு தொடர வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  4. எண்குணத்தான் பல பொருள்! நல்ல விளக்கங்கள் டிடி.

    உங்கள் ஆய்வு தொடர வாழ்த்துகள். நீங்கள் சொல்லியிருக்கும் அந்தச் சொற்களின் மீது வைத்தாலும் குறளிற்குச் செல்லவில்லை டிடி.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. // குறள்களின் எண்கள் உள்ளது // என்று தான் பதிவில் சொல்லியுள்ளேன்... அந்தந்த குறள் எண் மூலம் குறளுக்கு சென்று ஆய்வு செய்யலாம்... இந்தப் பதிவில் பயன்படுத்தியுள்ள வலை நுட்பம் புதியது மட்டுமில்லாமல், அடுத்த ஒரு ஆய்வுப் பதிவிற்கு வேறு விதமாக அமையும்... எவ்வாறு இது வேலை செய்கிறது என்கிற விதத்தில் இந்த நுட்பமும் ஒரு முன்னோட்டம்....!

      நீக்கு
    2. வலை நுட்பத்தை மாற்றி, குறள் எண்களோடு அதன் குறள்களையும் சேர்த்து விட்டேன்... மிக்க நன்றி...

      நீக்கு
  5. விரிவான விளக்கமான ஆய்வு. தொடருங்கள் உங்கள் ஆய்வினை.

    வாழ்த்துகள்

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
  6. வியப்பாக இருக்கிறது ஐயா
    தங்களின் ஆய்வு தொடரட்டும்

    பதிலளிநீக்கு
  7. எண்ணாத எண்ணம் எல்லாம் எண்ணுக்குள்ளே..
    எட்டுக்குள்ளே தொட்டுக் கொள்ளும் வண்ணம் அது
    நெஞ்சுக்குள்ளே!..

    பதிலளிநீக்கு
  8. கடவுளை வரையறுத்தது நாம்தானே. மனிதர்களுக்கு இந்த கடவுள் வேண்டாமென்றால் வேறு கடவுளை அவர்தம் நம்பிக்கையால் தேர்ந்தெடுக்க முடியும். ஆம் அதனால்தான் அவர் எக்கடவுள் என வரையறை செய்யவில்லை. அன்று 8 குணங்கள் இருப்பதாக மணக்குடவர் உரையெழுதினார்.

    ஆயினும் தங்கள் குறள் ஆய்வு தனித்தன்மை வாய்ந்தது. தொடரட்டும் தங்கள் பணி. வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  9. எத்தனை எத்தனை ஆய்வுகள்... குறள் மீது உங்களுக்கு இருக்கும் ஆர்வம் பிரமிக்க வைக்கிறது தனபாலன். பாராட்டுகளும் வாழ்த்துகளும்.

    பதிலளிநீக்கு
  10. மலைக்க வைக்கும் ஆராய்ச்சி நண்பரே. பாராட்டுக்கள்

    பதிலளிநீக்கு
  11. "எண் குணத்தான்" என்பதற்கு நீங்கள் கொடுத்துள்ள பல பொருள்களை இப்போதுதான் அறிந்து வியக்கிறேன். புதிய கருத்தை பதிய வைத்ததற்கு நன்றி...

    அப்புறம் ஒன்றை சொல்ல மறந்துவிட்டேன். ஆரம்பத்தில் இருவர் இது "ஆறு"... இல்லவே இல்லை இது "ஒன்பது" என்று மல்லுகட்டிக்கொண்டு நிற்கிறார்களே ... இவர்களின் சண்டையை சுப்ரீம் கோர்ட்டே வந்தாலும் தீர்த்துவைக்க முடியாது போலுள்ளதே தனபாலன் ஐயா அவர்களே ?!! ...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹா... ஹா... நன்றி... அடுத்தவர் பக்கம் சென்று ஆராயும் பழக்கம் இல்லாததையும் குறிக்கும்... ஆனால் இதை "நாமும் நம் மனமும்" என்கிற கோணத்தில் ஆராய்ந்தால், நமது பலவீனம் உட்படப் பலவற்றையும் உணரலாம்...

      நீக்கு
  12. உங்கள் ஒவ்வொரு போஸ்ட்டும் என்னை வியக்க வைக்கிறது, பலது புரிகிறது பலது புரிவதில்லை.. அதற்கு நான் இன்னும் படிக்கோணும்போல:)).

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

நகுதற் பொருட்டன்று நட்டல் மிகுதிக்கண்
மேற்சென்று இடித்தற் பொருட்டு. (குறள் 784)

நட்புச் செய்துகொள்வது நண்பரோடு சிரித்து மகிழ்வதற்காக மட்டும் அல்ல. மிகுதியாகத் தவறு செய்யும்போது, அவரைக் கடிந்து திருத்துவதற்கே ஆகும்.