🏠 வணக்கம் காப்பகம் நன்றி

தேடல் 🔎



புதிய பதிவுகளை பெற ✉



ஆமைபோல்...


மனதிற்கு வழிகள் என்ன...? வாய், கண், மெய், செவி, மூக்கு... இந்த ஐம்புலன்களின் வேலை...? முறையே சுவை, ஒளி, ஊறு, ஓசை, நாற்றம் என்னும் உணர்வுகள்...! உணர்வுகளின் வேலை...? எதையும் நுகரவேண்டும் என்ற மன எழுச்சி உணர்வுகளுக்குப் பின்னே தான் பிறக்கிறது...! மன எழுச்சியால் நுகர்தல் கூடாதா...? இல்லை, இது புலனின்பங்கள் ஐந்தையும் அடியோடு ஒழிப்பதிலிருந்து வேறானது... அது என்ன...? ஐம்புலன்களுக்கு அடிமைப் படாமல் மனம் ஆணையிட்டு ஐம்புல இன்பங்களைத் துய்ப்பதே மன அடக்கம்....! அடங்குமா..? தன் வசப்படுத்தி விட்டால் உலக இன்பங்களை அனுபவிக்கலாம்... நடக்குமா...? பொறியடக்கம் என்பது வஞ்சகமாக அவற்றை அடக்கி வைத்தல் அல்ல... தீவினைகள் புரியாமல், தீவினைகளால் தனக்கு ஊறு வராமற் பாதுகாத்துக் கொள்ளுதற்காகவே... இதனால் பயன்...? எதிலும் அளவு இருந்தால் உலகில் "இருக்கும் வரை இன்பமே...!" இனி சொல்லாய்வு :

இந்தக் குறளிலுள்ள ஒருமை, எழுமை...? பலரும் : ஒருமை என்றால் ஒரு பிறப்பு; எழுமை என்றால் ஏழு பிறப்பு...! பரிதியும் பரிப்பெருமாளும் இவற்றுக்குப் பொருள் கூறவில்லை...! சிறப்பாக உள்ள உரை...? காலிங்கர் 'ஒருமையுள்' என்ற சொல்லுக்கு 'ஒருவழிப்பட்ட உள்ளத்திலே' எனப் பொருள் கொண்டதே... வேறு எளிமையான விளக்கம்...? ஏழெட்டு, நாலைந்து என்னும் பேச்சு வழக்குபோல...! எழுமை பற்றிய தகவல்...? இந்த சொல் சங்ககால இலக்கியங்களிலும், மற்ற பதினெண்கீழ்க்கணக்கு நூல்களிலும் பயிலப்படவில்லை...! திருக்குறளில்...? ஒருமை, எழுமை, இவ்விரு சொற்களும் சேர்ந்து, 126, 398, 835 குறள்களில் வரும்... உண்மைப்பொருளை அறிந்து கொள்ள வேண்டுமென்றால்...? ஒருமை மட்டும் உள்ள 974-வது குறளையும், எழுமை மட்டும் உள்ள 538-வது குறளையும், கணக்கியல் பதிவில் சொன்னது போல் திருக்குறள் முழுவதிலும் இவ்விரு சொற்களை ஆய்வு செய்ய வேண்டும்...

எழுமை என்றால் ஏழு பிறப்பா...? எழுபிறப்பும் என்றே 62, 107 குறள்களில் வரும்... இதில் 107-வது குறளில் எழுமை எழுபிறப்பும் என்றே ஆரம்பிக்கும்... மற்றபடி ஏழு பிறப்பு என்பது சமயம் சார்ந்த நம்பிக்கைகளால் உண்டானவை...! அதனால் என்ன...? அறம் பொருள் இன்பம் எனும் உறுதிப் பொருட்களைத் திருக்குறளில் நம்பிக்கையுடன் காணலாம்...! வீடு பேறு...? அறத்துடன் வையத்துள் வாழ்வாங்கு வாழ்ந்தாலே போதுமானது...! எல்லா பேறும் பெயரும் தானே வரும்... அதற்கு என்ன செய்ய வேண்டும்...? திருக்குறள் வீட்டில் இருக்க - படிக்க - செயல்படுத்த வேண்டும்... இந்த "மந்திரம் தந்திரம் எந்திரம்" என்று மூழ்கினால்...? தாத்தாவின் எழுத்தாணியை வாங்கி குத்துவேன்...! உறுதிப் பொருளுக்குச் சான்று...? "அடக்கம் அமரருள் உய்க்கும்" என்று இவ்வதிகாரத்து முதல் குறளில் எழுதிய தாத்தா, அதற்கு மாறாக இதே அதிகாரத்தில் ஐம்புலன்கள் அடக்கினால் ஏழு பிறப்புகள் உண்டு என்று பொருள்பட எழுதியிருக்க மாட்டார்...! அப்படியென்றால்...? ஏழு பிறவி இருக்கும் என்றால் ஒரு பிறவியில் ஐம்புலன்களை அடக்கி ஏன் சிரமப்பட வேண்டும்...? சரி, ஒருவேளை அவ்வாறே அடக்கி வாழ்ந்தவனுக்கு ஏழு பிறப்புகள் எதற்கு வேண்டும்...? ஆனாலும் ஆமையின் மெய்யடக்கம் மனிதனுக்குச் சிரமம்...! அது என்ன...? ஆமைகள் எந்தவிதத் தீங்கும் செய்வதில்லை... ஒரு ஆமையின் வாழ்நாள் தோராயமாக 80, அரிதாக 200, வியப்பாக 250, 344 ஆண்டுகள் வரை வாழ்கின்றன... சிறப்பாக ஏதேனும்...? நூறாண்டுகள் ஆன ஆமைகளின் ஈரல், நுரையீரல், சிறுநீரகம் ஆகியவற்றை ஆராய்ந்ததில், அவை இளம் ஆமைகளின் உறுப்பைப் போலவே இருந்துள்ளதாக ஆய்வு சொல்கிறது... ஆனால் மனிதனுக்கு...? சரி நம் ஆய்வு முடிந்ததா...?

இல்லை... இந்த குறளிலுள்ள எண்களைப் பற்றி...? ஓரளவு விளக்கமாகப் பேசி இருந்தாலும், எண்ணென்ப பதிவை வாசித்தவர்கள் புரிந்து கொள்வார்கள்... மேலும் விளக்கம் சொல்லலாம்... இந்தக் குறள், ஒன்று, ஐந்து, ஏழு, என மூன்று பகா எண் கொண்ட குறள் என்று இணையத்தில் பலகாலமாகச் சுற்றிக் கொண்டிருப்பது சரியா...? சுற்றுவது கூட அதிக வருத்தம் தரவில்லை... ம்... பிறகு...? ஐந்தும் ஏழும் பகா எண்கள்... ஆனால் ஒன்று (1) பகு எண்ணும் அல்ல பகா எண்ணும் அல்ல...! முருகா...! சரி, இந்தப் பதிவு "எண்ணென்ப" பதிவுக்குத் துணைப் பதிவா...? இல்லை... மூன்றாவது ஒரு முன்னோட்ட பதிவு... என்ன அது...? இணையத்தில் 'திருக்குறள் சிறப்புகள்' எனத் தொடரும் தவறுகளைத் திருத்த அல்லது தடுக்க...! ஆனாலும் இதற்கு வழிகாட்டியாக இருந்தோர்க்கு நன்றி... புள்ளி விவரங்களைப் பற்றியே தன் ஆய்வின் முடிவாக ஒருவர் சொன்னது என்ன...? பொய் இரண்டு வகைப்படும்... ஒன்று பொய்... இன்னொன்று புள்ளி விவரம்...! ஏன்...? ஆய்வாளர் "மெய்ப்பொருள் காண்பது அறிவு" என வரும் இரண்டு குறள்களில் சொன்னது போல் ஆய்வை செய்திருப்பார்...! அதேபோல் தொடர்வோம்... நன்றி...

புதிய பதிவுகளை பெறுதல் :


தொடர்புடைய எண்ணங்களின் வண்ணங்கள் சில :


முகநூல் மூலம் கருத்துக்களை பகிர :

கருத்துகள்

  1. என்னைப் பொறுத்த வரை மோடியின் பேச்சும் அவர் செய்த சாதனைகள் என்று நண்பர்கள் பக்கம் பக்கமாக எழுதும் பதிவுகளும்தான்

    பதிலளிநீக்கு
  2. ஆழ்ந்த ஆராய்ச்சி.  மனதில் பதிகிறதோ இல்லையோ, நீங்கள் எழுதும்போது படித்து வைத்துக் கொள்கிறேன்.  நீங்கள் கட்டாயம் இதை ஒரு புத்தகமாகக் கொண்டு வாருங்கள்.  அனைவருக்கும் ரெபரென்ஸுக்கு உதவும்.

    பதிலளிநீக்கு

  3. வழக்கம்போல் குறள்களின் விளக்கம் சிறப்பு.

    ஆமைபற்றிய தகவல்கள் பிரமிப்பாக இருக்கிறது.

    தொடர்கிறேன்...... ஜி

    பதிலளிநீக்கு
  4. பதிவு அருமை.படம் நன்றாக இருக்கிறது.

    ஆமை போல் தலைப்பின் விளக்கம் அருமை.
    எதிலும் அளவு முறை இருந்தால் உலகில் இருக்கும் வரை இன்பமே என்று சொன்னது உண்மை.
    உங்கள் ஆராய்ச்சி தொடரட்டும் வாழ்த்துக்கள்.

    திருக்குறள் படிக்க வேண்டும், செயல்படுத்த வேண்டும் என்று சொன்னது அருமை.

    பதிலளிநீக்கு
  5. 10 நம்பரை அழுத்தில் பழைய மை பகுதியை படித்தேன்.
    மை பதிவில் கடைசியாக சொன்னது அருமை.ஆமைகளை அறிவுடைமையுடன் அறிந்து
    புரிந்து கொண்டால் வாழ்வு சிறக்கும் என்பது உண்மையே!

    பதிலளிநீக்கு

  6. வணக்கம்

    தலைப்புக்கு ஏற்றார்போல் வள்ளுவரின் குறள் அடியில் அற்புதமாக சொல்லி உள்ளீர்கள்அற்புதமாக சொல்லியுள்ளீர்கள் வாழ்த்துக்கள் அண்ணா

    நன்றி
    அன்புடன்
    ரூபன்

    பதிலளிநீக்கு
  7. திருக்குறள் ஆராய்ச்சி சிறப்பு

    பதிலளிநீக்கு
  8. முறையான மெய்யறிவில் திளைத்திருப்பவருக்கு ஐந்தடக்கல் என்பது எளிய காரியமே...

    பதிலளிநீக்கு
  9. வணக்கம் சகோதரரே

    வழக்கம் போல் குறள் ஆராய்ச்சி நன்றாக உள்ளது. நல்ல தெளிவான விளக்கங்களுடன் சொல்லியிருக்கும் முறையை படித்து ரசித்தேன். சிறப்பாக குறள்களை அலசி தெளிவாக எளிதில் புரியும்படி கூறும் உங்களுக்கு என் வாழ்த்துகளும் பாராட்டுகளும். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  10. ஐந்தையும் அடக்கினால் அகிலமும் அடங்கும்,
    பைந்தமிழ் நாவில் களிநடம் புரியும்...,
    சிந்தையும் சிறக்கும் சினமது மறக்கும்,
    பிந்தைய வாழ்வும் பெரும்பேறாகுமே!!!

    பதிலளிநீக்கு
  11. வழக்கம் போல் தங்களின் ஆராய்ச்சியும் பதிவும் சிறப்பு

    பதிலளிநீக்கு
  12. குறளின்பால் தங்கள் ஈடுபாடு அளப்பரியது, வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  13. ஆமை என்பது இலக்கியத்தில் மட்டுமில்லை ஃ பெங் சுய்யிலும் முக்கியத்துவம் வகிக்கிறது ஆமை என்பது ஒரு ஃபெங் சுய் சின்னமாகும்,
    இது ஸ்திரத்தன்மையையும் கெட்ட அதிர்ஷ்டத்திற்கு எதிரான பாதுகாப்பையும் குறிக்கிறது. .
    தங்களின் ஆய்வு சிறப்பாக உள்ளது

    பதிலளிநீக்கு
  14. இன்றைய சூழ் நிலையில் எல்லோரும் ஆமையாக முடியுமா..? என்ற கேள்விதான் எழுகிறது

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

நகுதற் பொருட்டன்று நட்டல் மிகுதிக்கண்
மேற்சென்று இடித்தற் பொருட்டு. (குறள் 784)

நட்புச் செய்துகொள்வது நண்பரோடு சிரித்து மகிழ்வதற்காக மட்டும் அல்ல. மிகுதியாகத் தவறு செய்யும்போது, அவரைக் கடிந்து திருத்துவதற்கே ஆகும்.