ஆணுக்கு கற்பு உண்டா...?

வணக்கம் நண்பர்களே... தலைப்பின் விடையை அறியத் திருக்குறளில் பெருந்தக்க எனும் சொல்லும், யாவுள எனும் சொல்லையும் ஆராய்வோம்... அதற்கு முன் ☊கீழுள்ள பாடலை கேட்கப்போகிறீர்களா...? நல்லது ஆனால் இந்தப்பாடலுக்கு, நான்கு வருடத்திற்கு பின்பு வந்த பாடலை முடிவில் கொடுத்துள்ளேன்... அதையும் தவறாமல் கேட்டு விடுங்கள்...! பாடலில் தான் எத்தனை மாற்றம்...!!
வரிகளை சிறிதே மாற்றியுள்ளேன்...!!!
குறைவான ஒலியில் வைத்துக்கொண்டு, கீழ்காணும் பாடல் வரிகளை பாடுபவர்களுக்கு நன்றிகள்...

= நல்ல ஆண்மகன்; மிக நல்ல ஆண்மகன்

- தாய்நாட்டு நாகரிகம் பேணி நடப்பவன் எவனோ அவனே = | விடி வெள்ளி முளைத்து சேவல் கோழி கூவிடும் வேளை - தன் மேனி குளித்து அழுக்கு நீங்கத் துவைக்கணும் துணிகளை... பள்ளிக்கூடம் செல்ல வேணும் காலையும் மாலை - நல்ல பழக்க வழக்கத்தோடு குறளைப் படிப்பவன் எவனோ அவனே = | அம்மாவுக்கு உதவியாக ஆக்கி பழகணும் - சோறாக்கி பழகணும், அடுப்பை மூட்டிக் கூட்டிப் பெருக்கி இடுப்பை வளைக்கணும்... அப்பா சொல்லும் அறநெறியில் தப்பாதிருக்கணும் - தினம் அச்சம் பயிர்ப்பு மடமை நாணம் அமைந்தவன் எவனோ அவனே = | பிறந்த இடத்தில் புகுந்த துணையை இகழக்கூடாது – கொண்ட துணைவியோடு வம்புச் சண்டை போடக் கூடாது... இகழ்ச்சியாக எவரையுமே எண்ணக்கூடாது - பண ஏற்றத்தில் இறுமாந்திடாமல் இருப்பவன் எவனோ அவனே = | பொட்டு வைத்து கோலங்கூடப் போடத் தெரியணும் - புத்தி புகட்டும் நாட்டுப் பாடல் கூடப் பாடத் தெரியணும், கஷ்டம் வந்தபோதும் மானம் தன்னை காக்கணும் - தன் மனைவி சுகத்தை நாளும் பேணும் கணவனும் எவனோ அவனே =


© மணமகள் உடுமலை நாராயண கவி C.R.சுப்புராமன் T.A.மதுரம் @ 1951 ⟫

பெரியோர்களே... சான்றோர்களே... →வேத உபநிடதங்கள்,← →மனுநூலும் கீதையும்← உட்படப் பலவற்றும் அடியேனுக்கு எதுவும் தெரியாது... அவற்றை எதையும் வாசிக்கவில்லை; எதையும் ஆழ்ந்து ஆய்வு செய்ய விருப்பமும் இல்லை... இனி தொடர்வோம்... குறளை முழுக்கக் கற்று உணர்ந்தவர்கள், ஐயன் எந்தளவு பெண்மையைப் போற்றுபவர் என்பதை அறிவர்... குறைகள் சொல்பவர்கள் இல்லாமலா...? அவற்றில் சில → // ஆணினப் பார்வையிலிருந்து கூறப்படும் புகழுரை {ம்... அப்புறம் ?} // பெண்ணை ஆணுக்கு நிகராக நிறுத்திய பாராட்டும் தன்மை இல்லை {என்னவொரு வில்லத்தனம்...!} // கற்புக் குணம் கொண்டிருந்தால் மட்டுமே பெருமையுடையவளா...? {பெறகு என்னடா வேணும்...?} ஆணுக்கு இதுபோல எங்காவது கட்டுப்பாடுடன் கூடிய விதி சொல்லியிருக்கிறாரா...? {அடேய், அது தெரியாமத் தான் கேள்வி கேட்டுட்டு இருந்தியா...?} || {வசனம் உதவி - நகைச்சுவை நடிகர் வடிவேலு - நன்றி} || அனைத்திற்கும் பதிலாக "பெருந்தக்க" என்று இரண்டே குறளில், பெண்மையின் சிறப்பை பற்றி அற்புதமாகச் சொல்லியுள்ளதை அறிவதோடு, ஆணின் கற்பிற்கு எதை எடுத்துக்காட்டாச் சொல்லியுள்ளார் என்பதையும் அறிவோம்...

ஆண் பிள்ளையிடமும், பெண் செல்லத்திடமும் நாம் நடந்து கொள்வதைப் போலவே தான் தாத்தாவும்...! பெண்களுக்கு அறிவுரை கூறும்போது மிகக் கனிந்தும், உண்மையைச் சிறப்பித்தும் கூறுவார்... ஆடவருக்குக் குறள் முழுக்கவே பல அறிவுரைகள் கூறினாலும், துணைவியை தவிர பிற பெண்களை விரும்பும் பொறுக்கியை, ‘அறிவில்லாதவன்’, ‘பிணம்’ ‘பழி நீங்காதவன்’ என்றெல்லாம் கடுஞ் சொற்களால் திருத்துவார் நம் தாத்தா...!

வாழ்க்கைத்துணை அதிகாரத்தில் குறள் 54. பெண்ணின் பெருந்தக்க யாவுள கற்பென்னும் திண்மைஉண் டாகப் பெறின் முதலில் இங்குப் பெண் என்ற சொல்லுக்கு மனைவி என்று பொருள் கொள்வதே பொருத்தமாக இருக்கும்... அதிகாரம் வாழ்க்கைத் துணைநலம் என்பதற்காக மட்டும் அல்ல... இதில் அடுத்து வரும் குறள் 58-ல் "தனக்கே உரியவனாகக் கணவரைப் பெற்று பேரன்பு உடையவராக இருந்தால், அது சொர்க்கமாக்கும் புகழ் உலகில் பெருஞ் சிறப்புப் பெறுவர்" என்பதினால், இல்லாள் என்றே பொருள் கொள்ள வேண்டும்...

'கற்பென்னும் திண்மை' என்பது கல் போன்ற திண்ணிய மன உறுதி உடையதாய், எவ்வித இடர் வந்தாலும் இம்மியும் அசைந்து கொடுக்காத கல் போன்ற தன்மை உடையது கற்பு... ஒருவனுக்கு ஒருத்தி என்ற மரபில் கற்புக்கு மிகுந்த சிறப்பு கொடுத்துள்ளார் நம் தாத்தா... அவர் கொடுத்த மிக உயர்ந்த இடம் என்னவென்றால், கற்புள்ள மனைவியைக் காட்டிலும் சிறந்தவர் எவருமில்லை; அவளே பெருந்தகை... அவ்வளவு தான் குறள் 54-ன் சுருக்கமான விளக்கம்... இனி அதில் உள்ள சிறப்பான சொல்லை வைத்து ஆய்வை தொடங்குவோம்...

யாவுள = எவை இருக்கின்றன... குறள் 54-ல் 'யாவுள' என்பது வினாவா...? பதிலா...? என்பதை ஆய்வு செய்ய யோசிக்கும் போது, வினாவையும் எழுப்பி அதுவே பதிலாகவும் உள்ளது என சொல்லாராய்ச்சி சொல்வதால், அதை விட்டு விடுவோம்...! மற்ற குறள்களில் அந்தந்த அதிகாரத்திற்கு ஏற்ப பொருள் மாறுபடும் என்பதைச் சிறிது அறிவதற்காக :-

ஊழிற் பெருவலி யாவுள மற்றொன்று சூழினுந் தான்முந் துறும் (ஊழ் 380)
மதிநுட்பம் நூலோடு உடையார்க்கு அதிநுட்பம் யாவுள முன்நிற் பவை (அமைச்சு 636)
செயற்கரிய யாவுள நட்பின் அதுபோல் வினைக்கரிய யாவுள காப்பு (நட்பு 781)

380 பேராற்றல் படைத்த இயற்கையின் விதியை தடுக்க நீ எந்த வழியை நினைத்தாலும், உனக்கு முன்னாடியே அங்கு வந்து நின்று செய்ய வேண்டியதை, 'வைச்சி செய்வேன்' சிறப்பாக... விஞ்ஞானிகளா நலம் தானே...?!
636 ஓகோ அப்படியா; இயற்கையான நுண்ணறிவோடு நூலறிவு இருக்கும் என்றெதிரே நிற்க, ஏதாவது சூழ்ச்சியான நுட்பம் இருக்கிறதா...? 'என்கிட்டே' மட்டும் எதுவும் நடக்காது... எதையும் சமாளிக்க எனக்குத் தெரியும்...!
781 அடடா... இப்படிப்பட்ட அமைச்சர்களுடன் நட்பு உண்டாக்கிக் கொள்வது போல் அரிய செயல்கள் எதுவும் இல்லை... இதை விடப் பாதுகாப்பு கிடையாது...! தீநுண்மியாவது, வெட்டுக்கிளியாவது, வாழப் பழகிக் கொள்வோமில்லே...!

அடுத்து, சிலர் பெருந்தக்க என்பதை ஏடு பெயர்த்தெழுதியவரால் நேர்ந்த பிழை என்று சொல்லி 'பெறுந்தக்க' என்று சொன்னதும் உண்டு... ஆனால் அதை ஏற்றுக்கொள்ள முடியாததற்குக் காரணம், அடுத்ததாக வரும் ஒரு குறளை அறிவோம்... தன் கணவனைவிடச் செல்வத்திலோ - சொல் வாக்கிலோ, அழகிலோ - உடல் கம்பீரத்திலோ, கல்வியிலோ - இன்னும் பிற சிறப்புக்களிலோ, சிறந்த வேறு ஒரு ஆணை கண்டாலும், அவனிடத்து மனம் செலுத்த மாட்டார் பெண் எனும் பெருந்தகை... 1137. கடலன்ன காமம் உழந்தும் மடலேறாப் பெண்ணிற் பெருந்தக்க தில் ← இதைச் சொல்வது மடலேறுவேன் எனச் சொல்லும் காதலன் சொல்வது....! இந்த இணைப்பிற்குச் சென்று பெண்ணின் சிறப்பை மேலும் அறியலாம்... இனி பதிவின் தலைப்பிற்கு வருவோம்...

கேடு கெட்ட சாதிய அடிப்படையிலான நம் நாட்டில், பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா செய்தொழில் வேற்றுமை யான் (972) என்று சொன்ன அதே பெருமை அதிகாரத்தில், 974.ஒருமை மகளிரே போலப் பெருமையும் தன்னைத்தான் கொண்டொழுகின் உண்டு என்று கூறியுள்ளார்... "தன் கணவனை அன்றிப் பிறரிடம் மனத்தாலும் உறவு கொள்ளாத பெண்களின் சிறப்பைப் போல, சிறந்த நெறிகளிலிருந்து தவறி விடாமல் தன்னைக் காத்துக்கொண்டு வாழும் ஆடவனுக்கே பெருமை உண்டு...!" என்று ஆணின் கற்பிற்குக் கூட எடுத்துக்காட்டாகச் சொல்லப்படுவதே பெண்ணின் சிறப்பைத் தான்...! தாத்தாவின் நுட்பத்தைப் பார்த்தீர்களா...? ம்... சரி வாருங்கள்...

'குடி'மகனைப் பற்றி ஒரு பாடலைக் கேட்போம்... ☊ மறக்காமல் குறைவான ஒலியில் வைத்துக்கொண்டு, கீழ்க்காணும் பாடல் வரிகளைப் பாடுபவர்களுக்கு நன்றிகள்...!


= கெட்ட ஆண்மகன்; புத்தி கெட்ட ஆண்மகன்

- தன் இஷ்டம் போல அலைந்து வாழ்வை இழப்பவன் எவனோ அவனே | காலை எட்டரை மணி அடிக்கும், எருமை போலத் தூங்குவான் - டஜன் இட்லி தின்னு காப்பி குடிச்சி ஏப்பம் போடுவான் - சட்டி பானை தொட்டுக் கழுவக் கையும் நடுங்குவான் - வலுச் சண்டை போட்டு சிண்டைப் பிடிக்கும் மூடனும் எவனோ அவனே | மனைவி கழுத்தை நெருக்கிப் பிடுங்கிக் கடனை வாங்குவான் - காசைக் கண்ட படிக்குத் தண்டச் செலவில் காலி ஆக்குவான் - மனைவி வீட்டுச் சொத்தை எல்லாம் மிரட்டி வாங்குவான் - நல்ல மட்டுமரியாதை மானம் விட்டவன் எவனோ அவனே | அதிகப் பேச்சுக்காரன், பெரும் ஆணவக்காரன், அவன் யாருக்கும் அஞ்சாத அடங்காப் பிடாரன் - சதிக்குண்டான பண்பில்லாத சாகசக்காரன் - தமிழ்த் தாயின் குலத்துப்பேரைக் கெடுக்கும் தறுதலை எவனோ அவனே =


© மங்கையர் திலகம் உடுமலை நாராயண கவி S.தட்சிணாமூர்த்தி T.V.ரத்தினம் @ 1955 ⟫

புதிய பதிவுகளை பெறுதல் :


தொடர்புடைய எண்ணங்களின் வண்ணங்கள் சில :


முகநூல் மூலம் கருத்துக்களை பகிர :

கருத்துகள்

 1. கால இடைவெளி, கால மாற்றங்கள், சிந்தனை மாற்றங்கள், தலைமுறை இடைவெளி, விருப்பங்கள் எண்ணங்கள் தலைகீழாக மாறுதல் போன்றவற்றை சோதிக்கும் பொருட்டு மகள்கள் மகளின் தோழிகளுடன் உரையாடும் போது நான் புரிந்து கொண்டது கடந்த ஒரு வருடத்திற்குள் இருப்பவர்களை அதிகபட்சம் நினைவில் வைத்து பேசுகின்றார்கள். ஆறு மாதத்திற்குள் விருப்பமாய் வைத்து உள்ளார்கள். கடந்த ஒரு வாரம் என்பதனை உடனடியாகச் சொல்கின்றார்கள். ஆனால் நீங்க சமீப காலம் 1950 என்கிற நிலைக்கு பின்னோக்கி அழைத்துச் செல்லும் போது நல்ல பெண்மணி நல்ல பெண்மணி என்ற வார்த்தையைக் கேட்கும் என் மூத்த அண்ணன் கூட இந்த சமயத்தில் பிறக்கவில்லையே என்பதனைத்தான் முதலில் யோசிக்கின்றேன்.

  பதிலளிநீக்கு
 2. வணக்கம் ஜி
  மிகப்பழைய பாடலிலிருந்து நல்ல கருத்து ஆனால் இக்காலத்து பெண்களுக்கு இவைகள் வெகுதூரம்.

  ஆணுக்கும் கற்பு உண்டு என்பதே எமது எண்ணம். அதுவும் இக்காலத்தில் எல்லா வகையிலும் பெண்கள் போட்டி போடும்போது கண்டிப்பாக இவைகள் அவசியமானவையே...

  அதேநேரம் இன்றைய சமூகத்தில் இருபாலருமே இவைகளை ஒரு பொருட்டாக மதிக்கவில்லை என்பதையும் இங்கு பதிவு செய்கிறேன் - கில்லர்ஜி

  பதிலளிநீக்கு

 3. //கற்பு நிலையென்று சொல்ல வந்தார்
  இரு கட்சிக்கும் அது பொதுவில் வைப்போம்//

  //ஆணெல்லாம் கற்பை விட்டுத் தவறு செய்தால்
  அப்போது பெண்மையும் கற்பழிந்திடாதோ//

  பதிலளிநீக்கு
 4. ஒருவன் சீர்நெறி சிதறாமல் வாழ்வானேயானால் அவன் எய்தும் (அகச் )சிறப்புகளை உரைக்கவும் முடியாது.. உணர்த்தவும் முடியாது.. முடியாதது.. உணரத் தான் இயலும்....

  பதிலளிநீக்கு
 5. தலைப்புக்கு///
  இதில் என்ன சந்தேகம்?.. :)

  ஆணுக்குக் கற்பு போனால் வெளியே தெரிய நியாயமில்லை, ஆனால் பெண்ணுக்குத் தெரிந்துவிடுகிறது...

  கற்பென்பது உடலில் இல்லை, மனதால் ஒருவரை தப்பாக எண்ணினாலே கற்பு இழந்தமைக்குச் சமனாகும்..

  அழகிய போஸ்ட்... பாட்டுக்கள்தான் மிக மிக ஆதிகாலமாகப் பார்த்துப் போடுறீங்களே ஹா ஹா ஹா..

  பதிலளிநீக்கு
 6. திருக்குறள் ஓவியம் மிக அருமை.

  பாடல் பகிர்வு 1955ல் வந்த பாடல் நன்றாக இருக்கிறது. நிறைய தடவை கேட்டு இருக்கிறேன்.
  அதையே நீங்கள் மாற்றி ஆண்மகனுக்கு எழுதி இருப்பது மிக அருமை. பாடலையும் கேட்டேன்.
  கற்பு ஒழுக்கம் என்பது எல்லாம் இருவருக்கும் பொதுதான்.
  அருமையான கருத்துக்களை உடைய பதிவு.
  தாத்தாவின் மதிநுட்பம் மிக அருமை.
  அதை அழகாய் எடுத்துசொன்ன உங்கள் மதிநுட்பம் சிறப்பு.
  நல்ல பெண்மணி பாடல்தான் கேட்டு இருக்கிறேன்.
  கெட்டபெண்மணி பாடலை இப்போதுதான் கேட்கிறேன்.  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அருமையான பாடல்கள். நல்ல இசை. நீங்கள் கொடுத்திருக்கும் மாற்றும் அமைப்பாக இருக்கிறது தனபாலன்.
   கற்பென்பதைப் பொதுவில் வைப்போம் என்று தானே சொல்லி இருக்கிறார்கள்.
   பிறன் மனை நோக்காப் பேராண்மை மட்டுமே
   போதும்.
   காலத்தில் அழியாத நல்ல பாடல்களிப்
   பதிவிட்டு மகிழச் செய்கிறீர்கள்.
   மிக மிக நன்றி.
   தாத்தாவைப் போற்றும் பேரனாக என்றும் வளமுடன் இருங்கள்.

   நீக்கு
 7. வணக்கம் சகோதரரே

  பதிவு வழக்கம் போல் அருமை. கற்பு எனப்படுவது ஆண், பெண் இருவருக்கும் பொதுவானவைதான். அதை உணர்ந்தவன் என்றுமே நல்ல உள்ளம் பெற்ற மனிதனாக நடந்து கொள்ளுவான். அது நிச்சயம்.

  அந்த கால பழைய பாடல்களும், அதன் விளக்கமும், பாடல்களுக்கு நீங்கள் தந்திருக்கும் வரி மாற்றங்களும் அருமை.

  "நல்ல பெண்மனி" பாடல் கலைவாணர் துணைவியின் அற்புத குரலில் ஏற்கனவே பல முறைகள் கேட்டு ரசித்ததுதான்.. ஆனால் அடுத்தப் பாடல் இப்போதுதான் கேட்டேன். இதுவும் இனிய இசையில், ஆழமான பொருளுடன் மிகவும் நன்றாக உள்ளது திருவள்ளுவரின் குறளுக்கேற்ப இன்றைய பாடல்களின் பொருளை அழகாய் உணர்த்தியமைக்கு உங்களுக்கு நன்றி.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
 8. நான் உங்க பதிவை கவனமாக வாசிக்கவில்லை. ஏன்னா உங்க தலைப்பு பற்றி பலவாறு யோசித்து இருக்கேன். விவாதிச்சு இருக்கேன்.

  கடவுள், கற்பு, மதம் எல்லாம் நாம் உருவாக்கியவை. மனிதனை பண்படுத்த. அதனை வரையுறுக்கும் முறை மாறிக் கொண்டே போகும்- காலத்திற்கேற்ப.

  பெண்களுக்கே கற்பு எல்லாம் தேவை இல்லைனுதான் நினைக்கிறாங்க இப்போ உள்ள பெண்ணியவாதிகள். அப்போ ஆண்களுக்கு அது இல்லைனுதான் நம்புறாங்க. பெண்கள் ஆண்கள் செய்வதை காரணம் காட்டி தானும் தவறு செய்வதுதான் "பெண்ணியம்". ஆக ஆண்கள் பெண்கள் அற்ப ஆசையை தீர்க்க உதவுறாங்க.

  என்னை எடுத்துக்கோங்க, நான் என் வாழ்க்கை துணை தவிர யாருடனும் உடலுறவு வைத்துக் கொண்டதில்லை. ப்ரி மாரிட்டல் செக்ஸ்லாம் வைத்துக் கொண்டதும் இல்லை. குஷ்பு, சுஹாஷுனி எல்லாம் ஆம்பளைங்க யோக்கியமானு கேட்டதும், நீ ஊர் மேஞ்சா உலகமே மேஞ்சதுனூ நினைக்கக் கூடாதுனு எரிச்சலும் கோபமும்தான் வந்தது. இதை வைத்து எனக்கு கற்பு இருக்குனு நான் சொல்ல வர வில்லை, சிவகுமார் மாதிரி ஆட்கள் கோபப்படுவது எனக்கு புரியுதுனு சொல்ல வர்ரேன். அதே போல் சுகாஷினி குஷ்பு அவங்களுக்கு வக்காலத்தூ வாங்கியவர்கள் எல்லாம் பல ஆண்கள் உணர்வுகள புரிந்து கொள்ளவில்லை.

  ஒரு அம்மா ஒரு பதிவு எழுதுச்சு. ஆம்பளைங்கல ஊர் மேயாதவன் எவன் இருக்கான்? அப்படி எவனாவது இருந்தால் இந்த கல்லை எடுத்து என் மேல் எறினோ என்ன எழவோ, ஒரூ வீர வசனம் எழுதுச்சு. நான் கல்லை எடுக்கிறேன்னு பின்னூட்டத்தில் சொன்னேன். அந்த பின்னூட்டம் வரவே இல்லை. இவ்ளோதான் இவர்கள் புரிதல் நம்பிக்கை. நான் பொய் சொல்றேன் னுதான் அந்தம்மா மட்டும் இல்லை இங்கே உள்ள அனைவரும் நினைப்பாங்க. இதுதான் ஆணின் நிலைப்பாடு. காரணம்? ஆண்கள்தான். மனிதர்களில் பலவகை, ஆண்களில் பலவகை. ஒரு சிலர் என்னை மாதிரி வாழ்நாள் பூராம் ஒரு பெண்ணிடம் மட்டும் உடலால் வாழ்ந்து சாகத்தான் செய்றாங்க. அவங்களுக்கு கற்பு இருக்குனு சொல்ல வில்லை. பலவை ஆண்கள். பலவகை அனுபவம். பொத்தாம் பொதுவாக ஆணையோ பெண்ணையோ யாரும் விமர்சிக்க முடியாது. ஆனால் உலகம் எப்படினா இப்போ குஷ்புவும் சுஹாஷினியும் ப்ரிமாரிட்டல் செக்ஸ் வச்சுக்கிட்டங்கனா அது அவங்க பர்சனல் லைஃப். ஆம்பளைங்கள்ல எவன் ப்ரி மாரிட்டல் செக்ஸ் வச்சுக்கல்ல?னு கேட்பது தன் வாழ்க்கையை நியாயப் படுத்த முயலும் சுய நலம். அதுபோல் பேசுவது தவறு. ஏன்னா உஅலகம் மிகப் பெரியது. உனக்கு புரியாதது தெரியாதது எத்தனையோ இருக்கு.

  ஆமா, கற்புனா என்னங்க? மனத் தூய்மை என்பதெல்லாம் ஏட்டுச் சுரைக்காய். :) உடல் தூய்மை ஓரளவுக்கு பாஸிபில்தான். ஆணுக்கும் சரி, பெண்ணுக்கும் சரி.

  பதிலளிநீக்கு
 9. நல்லதொரு பதிவு .நல்லபெண்மணி பாட்டை படத்தை தூர்தர்ஷனில் சின்னப்பிள்ளையா இருந்தப்போ பார்த்தது .
  அந்த குறள் ஓவியம் துடைப்பத்தால் அடிப்பவர் கூட சேர்ந்து நாயும் துரத்தும் சித்திரம் நல்லா இருக்கு .நம்மூரில் இந்த கற்பு என்ற வார்த்தையை வைத்து எத்தனை விஷயங்கள் நடந்திருக்கு அப்பப்பா !!சில நேரத்தில் காமப்பிசாசுகளுக்கு இரையாகும் அப்பாவிகளை கற்பு போச்சே என்று சொல்றவங்களை தீயிட்டு கொளுத்தணும் .இதைப்பற்றி எழுதணும்ன்னா நிறைய எழுதலாம் . இத்துடன் நிறுத்துகிறேன் .

  பதிலளிநீக்கு
 10. சிறப்பு. ஆணுக்கும் பெண்ணுக்கும் கற்பு பொதுவில் வைப்போம். நல்ல பாடல் .

  பதிலளிநீக்கு
 11. காலம் காலமாக பெண்களுக்கு மட்டும் சொல்லப்பட்டு வந்த அறிவுரைகள் தான் நீங்கள் இணைத்திருக்கும் பாடல்களிலும் சொல்லப்பட்டிருக்கின்றன. ஆனால் அதை அப்படியே மாற்றி ஆண்களுக்கும் சொல்லியிருப்பது பாராட்டுக்குரியது.

  ஆண் பெண் இருவரும் சமம் என்பது வெறும் ஏட்டளவிலேயே இருக்கிறது. அதனால்தான் கற்பு என்று சொல்லும்போது அதை பெண்களோடு சம்பந்தப்படுத்திப் பார்க்கும் இழிகுணம் நம்மிடையே உள்ளது. கற்பு என்பது இருவருக்கும் பொது என்பதே என் கருத்தும்.

  பதிலளிநீக்கு
 12. நல்ல பாடல்கள் ஓர் ஆண் மகன் எப்படி இருக்க வேண்டும் என்று சொல்லியிருப்பது சிறப்பு. பதிவு நல்ல பதிவு

  துளசிதரன்

  பதிலளிநீக்கு
 13. டிடி பதிவும் பாடல்களும் அருமை. ஓவியம் ரொம்ப நல்லாருக்கு. அந்தப் பெண்மணி துடைப்பம் தூக்கினால் பாருங்க நாலுகால் செல்லமும் துரத்த வருது. கற்பு என்று சொல்ல வந்தால் நான் கொஞ்சம் குமுறிவிடுவேன் ஹா ஹா ஹா ஹா...அதைப் பற்றி பேச வேண்டும் என்றால் நிறையவே இருக்கு. கற்பு என்பது ஆண் பெண் இருபாலாருக்கும் பொதுவே.

  சமீபகாலத்தில் கேட்ட பல பாலியல் கொடுமைகள்...அப்போது அப்பெண்களின் கற்பு பற்றி பேசுவது ச்சே என்றிருக்கும்....அந்த கிராதகர்களை என்ன செய்ய வேண்டும் என்றால்....வேண்டாம்...நான் இங்கு எதுவும் சொல்லவில்லை. நீங்கள் பாடலின் அர்த்தத்தை மாற்றி ஆண்களுக்குச் சொல்லியிருப்பது சிறப்பு.

  கீதா

  பதிலளிநீக்கு
 14. ஐயா! பெண்ணியவாதிகளின் கூரிய குற்றச்சாட்டுகளிலிருந்து வள்ளுவப் பெருமானைக் காப்பாற்ற விழையும் உங்கள் முயற்சி சுவையானது! ஆனால் கட்டுரையில் நீங்கள் குறிப்பிட்டுள்ளபடி, வள்ளுவர் ஆணுக்கும் ஒழுக்க நெறிகளைச் சொல்லியிருக்கிறார் என்பதை அறியாதவர்கள் மட்டும் ஐயனைக் குறை சொல்லவில்லையே ஐயா? உங்களைப் போலவே குறளில் ஆழங்காற்பட்டவர்களும் இத்தகைய குற்றச்சாட்டுகளை முன்வைக்கிறார்களே!

  மேலும் இன்னொரு தகவல் பிழையையும் பணிவன்புடன் சுட்டிக்காட்ட விரும்புகிறேன். தன் கணவனை விடப் பல வகைகளிலும் சிறந்த வேறு ஆணைக் கண்டாலும் பெருந்தகைமை கொண்ட பெண் அவனிடத்தில் மனதைச் செலுத்த மாட்டார் என்பதைக் கூற "கடலன்ன காமம் உழந்தும் மடலேறாப் பெண்ணின் பெருந்தக்கதில்" எனும் குறளைச் சுட்டிக்காட்டியிருக்கிறீர்கள். ஆனால் மடலேறுதல் என்பது காதல் கொள்ளும் பருவத்தில் இருக்கும் இளம் பெண் தொடர்பானதுதானே தவிர மணமான பெண்ணை அது குறிக்காது. எனவே அதைத் திருத்திக் கொள்ள வேண்டுகிறேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. முன்னோட்டம் பதிவில் இருந்து வாசிக்கவும் ஐயா... மடலேறுதல் பற்றிய விளக்கங்களை, அடுத்தடுத்து வரும் பதிவுகளில் உள்ளன...

   நீக்கு
 15. திருக்குறள் மற்றும் சினிமாப் பாட்டு இவைகளின் கருத்து ஒப்புமை ஆய்வு சூப்பர்

  பதிலளிநீக்கு
 16. கற்பு என்பது ஒழுக்கம்
  ஆணுக்கும் கற்புண்டு
  ஒருவனுக்கு ஒருவள் என வாழ்தல்
  நல்லொழுக்கம் - ஆங்கே
  மின்னுமாம் கற்பு!

  பதிலளிநீக்கு
 17. கற்பு என்றால் ஒழுக்கம் என்றுதானே அர்த்தம்.....அந்த ஒழுக்கம் குறைந்ததால் வந்தததுதானே கேடு!!

  பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

நகுதற் பொருட்டன்று நட்டல் மிகுதிக்கண்
மேற்சென்று இடித்தற் பொருட்டு. (குறள் 784)

நட்புச் செய்துகொள்வது நண்பரோடு சிரித்து மகிழ்வதற்காக மட்டும் அல்ல. மிகுதியாகத் தவறு செய்யும்போது, அவரைக் கடிந்து திருத்துவதற்கே ஆகும்.