🏠 வணக்கம் காப்பகம் நன்றி

தேடல் 🔎



புதிய பதிவுகளை பெற ✉



அறிதலா...? உணர்தலா...?

அனைவருக்கும் வணக்கம்... கடந்த மூன்று பதிவுகளாகத் திருக்குறளின் அதிகாரங்கள் பகுப்பு முறையையும், அதில் சில அதிகாரங்களின் பெயர் மாறுபாட்டினை உரையாசிரியர்கள் எடுத்துக் கொண்டதையும் அறிந்தோம்... அதில் ஒன்று : பொருட்பால் அமைச்சியலில் 71-ம் அதிகாரமும், காமத்துப்பால் களவியலில் 110-ம் அதிகாரமும், ஒரே பெயர் - குறிப்பறிதல் - சரி தானா...?



நீண்ட நாட்களாகத் திருக்குறள் எழுத்துக்களின் கணக்கியலில் ஆய்வு செய்து கொண்டிருக்கும் போது, இதைப் பற்றி யாரேனும் எழுதியுள்ளார்களா என்று இணையத்தில் தேடிய போது கிடைத்தது, இதழ் எனும் வலைப்பூ... திருமிகு அவர்களுக்கு நன்றி... அந்தப் பதிவின் படி :
ஔவை பாட்டியின் மூதுரையிலிருந்து ஒரு பாடல் : கவையாகிக் கொம்பாகிக் காட்டகத்தே நிற்கும் அவையல்ல நல்ல மரங்கள் - சபை நடுவே நீட்டோலை வாசியா நின்றான் குறிப்பு அறிய மாட்டாதவன் நன் மரம்... - விளக்கம் : கவையாகப் பிரிந்து, கொம்புகளாக விரிந்து, காடுகளில் நிற்கும் அந்த மரங்கள் நல்ல மரங்கள் அல்ல. பலரும் கூடியிருக்கும் மன்றத்தில் “படித்துச் சொல்” என்று நீட்டிய ஓலையை வாய்விட்டுப் படிக்காமலும், அதில் எழுதப்பட்டுள்ளவற்றின் குறிப்பினை அறிந்துகொள்ள மாட்டாமலும் நிற்பவன்தான் நல்ல மரம்... 'அணுவைத் துளைத்து ஏழ் கடலைப் புகட்டிக் குறுகத் தறித்த குறள்' என்று ஔவை பாட்டியால் புகழப்பட்ட திருக்குறளில் ஒரே பெயரில் இரு அதிகாரம் வருவது சரி தானா...? முதலில் அமைச்சியலில் குறிப்பறிதல் :-

702. ஐயப் படாஅது அகத்தது உணர்வானைத் தெய்வத்தோடு ஒப்பக் கொளல்
703. குறிப்பிற் குறிப்புணர் வாரை உறுப்பினுள் யாது கொடுத்தும் கொளல்
705. குறிப்பிற் குறிப்புணரா வாயின் உறுப்பினுள் என்ன பயத்தவோ கண்
708. முகம்நோக்கி நிற்க அமையும் அகம்நோக்கி உற்ற உணர்வார்ப் பெறின்
709. பகைமையும் கேண்மையும் கண்ணுரைக்கும் கண்ணின் வகைமை உணர்வார்ப் பெறின்

702 : ஒருவர் மனத்தில் உள்ளதைச் சந்தேகமே இல்லாமல் தெளிவாக உணர்ந்து கொள்ளும் ஆற்றல் உடையவர்கள், மனிதனே ஆனாலும் தெய்வத்திற்குச் சமம்...! 703 : பிறரின் முகக் குறிப்பைக் கொண்டே உள்ளக் குறிப்பை அறியும் வல்லமை உள்ளவரை, எதைக் கொடுத்தாலாவது தம்முடன் இருத்திக் கொள்ள வேண்டும்...! 705 : உறுப்புகளுள் சிறந்த கண்களால் ஒருவரின் குறிப்பைக் கண்டு அவரின் மனக்கருத்தை அறியாதவர்களின் கண்கள் இருந்தும் என்ன நன்மை...? 708 : முகத் தோற்றத்தால் ஒருவருக்கு நேர்ந்ததை உணர்பவரைத் துணையாக அடைந்தால், எதுவும் பேசாமல் அவர் முன் நின்றாலே போதும்...! 709 : மற்றவர்களின் பார்வை மாறுவதை வைத்தே அவர்களின் மனக்கருத்தை அறியும் ஆற்றல் உடையவர்களுக்கு, அவர்களின் கண்கள் சொல்வது நட்பா? அல்லது பகையா? என்பதை மிகச் சரியாகக் கணித்து விடுவார்கள்...!

மேற்கண்ட ஐந்து குறள்களில் உணர்தல் என்ற சொல் வருவதால் இந்த அதிகாரம் ‘குறிப்புணர்தல்’ என்று இருந்திருக்குமா...? தாத்தா அப்படியா பெயர் வைத்திருப்பார்...? இருக்காது...! இங்குச் சொல்லப்படுபவை யாவும் ஒரு தலைமைக்கும், அவரோடு வேலை செய்வோர்க்கும் கூறியவை ஆகும்; எனவே தலைமையின் குறிப்பை உணர்ந்து செயல்பட வேண்டும்... ஏதேனும் தவறு நேர்ந்தால் அது அவர்களின் தலைக்கே உலைவைத்துவிடும்... ஏனெனில் அறிதல், உணர்தல், இவ்விரு சொற்களும் ஒரே கருத்தைத் தருவதுபோல தோன்றினாலும் வெவ்வேறு கருத்து உடையது... அறிதல் தெரிதல் புரிதல் - இவற்றிற்கும் உணர்தல் வேறு...! எனவே தலைமையின் முகக்குறிப்பை, சைகையை, சொற்களின் உட்கருத்தை உணர்ந்தால் மட்டும் போதாது; நன்கு ஆராய்ந்து அறிந்த பின்பே செயல்பட வேண்டும்... எனவே பொருட்பாலில் 71-ம் அதிகாரத்திற்குக் குறிப்பறிதல் என்றே பெயர் வைத்திருப்பார்...!

இன்பத்துப்பால் 110-ம் அதிகாரம் : களவு நிலைக் காதலில் முன்பின் அறிந்திராத ஆணும் பெண்ணும் ஒருவரை ஒருவர் பார்க்கும் கணத்தில் நிகழும் உணர்ச்சி மற்றும் உணர்வுகளின் பரிமாற்றத்தை விவரிக்கிறது... அந்த அதிகாரத்தின் கடைசிக் குறளில் : 1100. கண்ணொடு கண்இணை நோக்கொக்கின் வாய்ச்சொற்கள் என்ன பயனும் இல - கண்கள் பலவற்றை உணர்ந்து பேசிக் கொண்டிருக்கும் போது, காதலர்கள் ஒருவரோடு ஒருவர் பேசவேண்டியதில்லை... உணர்வின் மூலம் காதல் கனிவதைக் கூறிய தாத்தா இந்த அதிகாரத்தை ‘குறிப்புணர்தல்’ என்றே வைத்திருக்க வேண்டும்; அதனைத் திருக்குறளுக்கு உரையெழுதிய காலிங்கரின் உரை மிகத்தெளிவாகக் காட்டுகிறது... மேலும் பல அதிகாரங்களின் பெயர் மாற்றங்களை கணக்கியலில் அறிவோம்...
"அன்றைக்கு அப்படி - இன்றைக்கு இப்படி" என்பதை அஅ... இஇ... என்று இவ்விரு அதிகாரங்களைக் குறிப்பறிதல் என்று நினைத்து... அதன்பின் இணைத்து... குறளின் குரலாகவும் எழுதி உள்ளேன்...! அஅ...இஇ...[1]அஅ...இஇ...[2] இவ்விரு இணைப்புகளிலும் வாசிக்கலாம்... இங்கு கேட்கலாம் : 110. குறிப்புணர்தல் அதிகாரத்தின் குறள் - அதன் விளக்கம் - குறளுக்கேற்ப பாடல் கொண்ட ஒரு கேட்பொலி... நன்றி...


புதிய பதிவுகளை பெறுதல் :


தொடர்புடைய எண்ணங்களின் வண்ணங்கள் சில :


முகநூல் மூலம் கருத்துக்களை பகிர :

கருத்துகள்

  1. ஒருவன் மனதில் இருப்பதை சந்தேகமில்லாமல் தெரிந்து கொள்ளும் ஆற்றல் உடையவர்கள் மனிதர்களே ஆனாலும் தெய்வத்திற்கு சமம்..

    திருவள்ளுவர் இப்போது இருந்திருந்தால் பேஸ்புக்கை தெய்வம் என்று சொல்லி இருப்பார். காரணம் அதன் மூலம்தான் மனித மனத்த்தில் என்ன இருக்கிறது என்பதை அறிந்து கொள்ள முடிகிறது

    பதிலளிநீக்கு
  2. எனக்கு என்ன ஆச்சரியம் என்னவெனில் இருபது வயதிற்குள் ஆண் பெண் சந்திக்கும் போது உருவாகும் உணர்வுகளும் 50 வயதில் அது மாறுபட்டு நிற்கும் நிகழ்வுகளையும் எப்படி ஒரே பார்வையில் எழுத முடிந்தது? ஏறக்குறைய (ஒரு தலைமுறை 33 வருடங்கள்) மூன்று தலைமுறை எண்ணங்களை ஒருவரால் இந்த அளவுக்கு எழுத முடியுமா? என்பது ஆச்சரியமே?

    பதிலளிநீக்கு
  3. இவ்வாறு அறிவது சற்று சிரமம்தான். இருந்தாலும் என் அனுபவத்தில் ஒரு செய்தி. குறிப்பிட்ட சிலரை முதல் முறையாகக் காணும்போது (அவரின் பழக்கவழக்கம், நடை உடை பாவனை, அணுகும் முறை, அவருடைய கண்கள் நம்மை நோக்கும் நிலை ஆகியவற்றின் அடிப்படையில்) அவர்களைப் பற்றிய எதிர்மறை எண்ணங்களே என்னுள் தோன்றும். பொதுவான அதனை நான் அனைவரிடமும் பரிமாறிக்கொள்வதில்லை. மிக நெருக்கமாகப் பழகும் நண்பரிடம் பகிர்வேன். பல ஆண்டுகள் கழித்து அவரின் குணம் நான் நினைத்தவாறே உள்ளது என்று அந்த நண்பர் கூறி இவ்வாறாக உங்களால் எப்படி நுணுக்கமாக உணரமுடிகிறது என்று வியப்பார்.

    பதிலளிநீக்கு
  4. "நீட்டோலை வாசியா நின்றான்" என்பதற்கு நீங்கள் கொடுத்துள்ள விளக்கம் தவறானது.

    "கிறு", "கின்று", "ஆநின்று" ஆகிய மூன்றும் நிகழ்கால இடை நிலைகள். (இவற்றுள் "ஆநின்று" வழக்கொழிந்து போயிற்று.) எனவே, "நீட்டோலை வாசியா நின்றான்" என்பது ஓலையை வாசிக்காமல் நின்றான் எனப்பொருள் படாது; அது "ஓலையை வசிப்பவனின்" என்றே பொருள் படும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கவை போன்ற கிளைகளையும், நீண்டு வளர்ந்ததிருக்கும் போத்துகளையும் உடையதாகி, காட்டில் செழித்து வளர்ந்திருக்கும் மரங்கள் எல்லாம் நல்ல மரங்கள் அல்ல... கற்றோர் நிறைந்த அரங்கத்தில், ஒருவர் தருகின்ற ஓலைச் சுவடியைப் படித்துப் பார்த்து, அதில் உள்ள கருத்துகளை எடுத்துரைக்க வல்லமை இன்றி, வெளிறிய முகத்துடன் நிற்பவனும், மற்றவர்கள் என்ன விரும்புகிறார்கள் என்பதை அவர்களது முகக் குறிப்பைப் பார்த்துச் செயல்படாதவனுமே காட்டில் உள்ள மரங்களை விட மேலான மரங்களாகும்...!

      தங்கள் சொன்ன "ஓலையை 'வசி'ப்பவனின்" அடுத்து என்ன பொருள் ஐயா...?

      நீக்கு
  5. மனதில் உள்ளதை மறைத்தே பலர் பேசினாலும் அவர்கள் உள்ளக் கருத்தை அறிந்து கொள்ளக் கூடியவர்கள் இருக்கிறார்கள்.

    பதிலளிநீக்கு
  6. வணக்கம் ஜி
    தங்களது தேடுதல் வியப்பாக தொடர்கிறது... வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு


  7. வணக்கம்
    அண்ணா

    குறள் பற்றி சிறப்பாக சொல்லி உள்ளீர்கள் படித்து மகிழ்ந்தேன் வாழ்த்துக்கள்

    நன்றி
    அன்புடன்
    ரூபன்

    பதிலளிநீக்கு
  8. வணக்கம் சகோதரரே

    தங்களின் திருகுறள் ஆராய்ச்சிகள் சிறப்பாக உள்ளது. "குறிப்பறிதல்" பாடல்களும் அதன் விளக்கங்களும் அருமை. வாசித்து பொருளுணர்ந்து மகிழ்ந்தேன்.

    இறுதியில் கேட்பொலி தொகுப்பும் மிக அருமை. கேட்க கேட்க திகட்டவில்லை. . நீங்கள் திருவள்ளுவருக்கு, அவரின் புலமைக்கு செய்யும் தொண்டு சாலச் சிறந்தது. உங்களின் இந்த ஆராய்ச்சி தொகுப்புக்கள் பொக்கிஷமாக நல்ல விதத்தில் பாதுகாக்கப்பட வேண்டியவை. பாராட்டுக்கள். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  9. அருமை நண்பரே வழக்கம் போல. தொடரட்டும் தங்களின் ஆராய்ச்சி

    பதிலளிநீக்கு
  10. தங்களுக்கும் மற்றும் இணைய நண்பர்களுக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!!!.

    பதிலளிநீக்கு
  11. மனதில் உள்ளதை பேசத் தெரியாதவர்களும் உள்ளனரே...!! அதற்கு அய்யன் குறள் உண்டா...தலைவரே...!!

    பதிலளிநீக்கு
  12. அருமையான ஆய்வுக் கண்ணோட்டம்

    ஔவையுடன் வள்ளுவரும் சொல்லிவைச்சதை
    விளங்கவைத்த அறிஞரே!
    தங்கள் பணி தொடர வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  13. அறிதல் உணர்தல் அருமையான விளக்கம். நன்றி

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

நகுதற் பொருட்டன்று நட்டல் மிகுதிக்கண்
மேற்சென்று இடித்தற் பொருட்டு. (குறள் 784)

நட்புச் செய்துகொள்வது நண்பரோடு சிரித்து மகிழ்வதற்காக மட்டும் அல்ல. மிகுதியாகத் தவறு செய்யும்போது, அவரைக் கடிந்து திருத்துவதற்கே ஆகும்.