🏠 வணக்கம் காப்பகம் நன்றி

தேடல் 🔎



புதிய பதிவுகளை பெற ✉



மெல்ல நகும்...



முந்தைய பதிவுகள் : சிரிக்க சிரிக்க... மானிட லீலை...! துன்பம் நேர்கையில்... கிசுகிசு...! அகநக... நகைவகையர்... உலகம் சிரிக்கிறது...! நற்குடிப் பிறப்பு... இருட்டினில் வாழும் இதயங்களே...

சிரிப்பில் உண்டாகும் ராகத்திலே பிறக்கும் சங்கீதமே... அது வடிக்கும் கவிதை ஆயிரம் - அவை எல்லாம் உன் எண்ணமே - என் கண்ணே பூ வண்ணமே...
குறிப்பு ① : குறிப்பறிதல் அதிகாரம் என்று குறளின் குரல் பதிவுகள் : அஅ... இஇ... (1)அஅ... இஇ... (2)
குறிப்பு ② : காலிங்கர் உரையின்படி இந்தப் பதிவில் வரும் குறள்கள் அனைத்தும் குறிப்புணர்தல் அதிகாரம் : அறிதலா...? உணர்தலா...?

1094. யான்நோக்கும் காலை நிலன்நோக்கும் நோக்காக்கால் தான்நோக்கி மெல்ல நகும்

காதலர்களுக்கிடையே காதல் அரும்பிவிட்டாலும், வாய்ப்பேச்சு இன்னும் தொடங்காத நிலையில், அவர்கள் இருவருக்கும் ஒருவரை ஒருவர் பார்க்க வேண்டும், பார்த்துக் கொண்டே இருக்க வேண்டும் என்ற ஆவல் இருக்கும்... ஆனால் பெண்ணியல்பான நாணம் காதலியைத் தடுக்கின்றது... அவன் பார்த்தாலும் பார்க்கட்டும், ஆனாலும் நாம் பார்க்கக்கூடாது என்று அவள் நினைக்கிறாள்... ஒரு பார்வை விளையாட்டு தொடங்குகிறது... அது என்ன...? காதலன் தனக்குள் சொல்லிக் கொள்வதாக :- "நான் அவளைப் பார்க்கும்பொழுது தலைகவிழ்ந்து நிலத்தைப் பார்த்துக்கொண்டு இருக்கிறாள்... நான் அவளைப் பார்க்காது இருக்கும்போது அவள் என்னைப் பார்த்து மெதுவாகச் சிரிக்கிறாள்..." என்னப்பா இது, காதலியைப் பார்க்காது இருக்கும்போது, பின் எப்படிக் காதலி தன்னைப் பார்ப்பதும் மெதுவாகச் சிரிப்பதும் காதலனுக்கு எப்படித் தெரியும்...? அது தான் நோக்காக்கால்...! :- "பார்க்காதவனைப் போல் பார்த்தல்...!" இது கண்ணிற்கு உரித்தான கலை...! இதை இன்றைக்கு நவீன புகைப்படக்கருவியின் கண் (கைப்பேசியும் கூட), ஒருவரை மட்டும் துல்லியமாகவும் மற்றவர்களை மங்கலாகவும் புகைப்படமாக எடுக்க முடியும்... ஆமாம் இதெப்படி அன்றைக்கே தாத்தாவிற்குத் தெரியும்...?

காதலியை எதிர்கொண்டபோது காதலன் துணிவுடன் சற்று அருகே சென்று நிற்கின்றான்... ஆனாலும் பேசுவதற்குப் பயம்... தன் காதலை மறுத்துவிட்டால் என் செய்வது எனும் பயம்...! இப்படி காதலன் மனம் தவிப்பதைப் புரிந்துகொண்டு காதலி புன்முறுவல் பூத்திருக்கலாம்... "நான்தான் குறிப்புக் காட்டிவிட்டேனே...! இன்னுமா காதலன் உணரவில்லை...? ஏன் காலத்தை வீணாக்குகிறான்...?" என்று நினைத்துக் காதலி நகைத்திருக்கலாம்... காதலின் நாணமும் புன்முறுவலும் அவள் காதலனை உளமார விரும்புகின்றாள் என்பதனை அறியச்செய்கின்றன... பெண் தன் இயல்பான குணத்தால் எதையுமே வெளிப்படையாகக் காட்ட மாட்டார்கள்... தனது உணர்வுகளை மறைமுகமாகத் தனது மௌனத்தின் மூலமோ, அல்லது சில சைகைகள் மூலமோ வெளிப்படுத்துவார்கள்... காதலனைக் கள்ளத்தனமாகப் பார்த்த வெட்கக் களிப்பில் தனக்குள் புன்முறுவல் பூக்கிறாள்... காதலி காதலனைக் கண்ட மகிழ்ச்சியாலே புன்னகை புரிகிறாள் என்பதையும், காதலன் மேல் ஈடுபாடு கொண்டு காதல் உறவை விரும்புகின்றாள் என்பதையும் மெல்ல நகுதல் பேசாமல் சொல்லியது...! அந்த மெல்ல நகும் தான் எத்துணை அழகு...!

உன்னை நான் பார்க்கும் போது - மண்ணை நீ பார்க்கின்றாயே... விண்ணை நான் பார்க்கும் போது - என்னை நீ பார்க்கின்றாயே... நேரிலே பார்த்தால் என்ன...? - நிலவென்ன தேய்ந்தா போகும்...? புன்னகை புரிந்தால் என்ன...? - பூமுகம் சிவந்தா போகும்...? நேற்று வரை நீ யாரோ...? - நான் யாரோ...? இன்று முதல் நீ வேறோ...? - நான் வேறோ...?



© வாழ்க்கைப் படகு கண்ணதாசன் விஸ்வநாதன்-ராமமூர்த்தி 🎤 P.B.சீனிவாஸ், P.சுசீலா @ 1965 ⟫


1095. குறிக்கொண்டு நோக்காமை அல்லால் ஒருகண் சிறக்கணித்தாள் போல நகும்

இப்பொழுது நேருக்கு நேர் அவனை முழுமையாகப் பார்க்காமல், காதலன்மீது கடைக்கண் வீசி, வேறு எங்கோ பார்ப்பது போல் முகம் காட்டிக்கொண்டு ஒரு விழிப் பார்வையால் அவனை நோக்கித் தனக்குள்ளே சிரித்து மகிழ்கிறாள்... பொருள் பொதிந்த காதல் கலந்த ஓரக்கண் பார்வையை காதலனை நோக்கிச் செலுத்தியதும், காதலி சிறக்கணித்துச் சிரித்ததும், அவளது எண்ணத்தில் அவனே நிறைந்திருக்கிறான் என்பதைக் குறிப்பாகக் காட்டித் தன் காதலை ஐயத்திற்கு இடமின்றி முழுமையாகத் தெரிவிக்கிறாள் என காதலன் உணர்கிறான்... இங்கு இடைவெளி முற்றிலும் குறைந்து உள்ளங்கள் ஒன்றுபடும் நிலை காட்டப்படுகிறது... ஒருகண் சிறக்கணித்தாள் :- ஒரு கண்ணைச் சுருக்கிச் சிமிட்டினாற் போலப் பார்த்தல்...

என்றும் பேசாத தென்றல் இன்று மட்டும் காதில் வந்து - இன்பம் இன்பம் என்று சொல்வதும் என்ன...? ஓர விழிப்பார்வையிலே உள்ளதெல்லாம் சொல்லிவிட்டு, ஒன்றும் தெரியாததுப்போல் கேட்பதும் ஏனோ...? நெஞ்சில் குடியிருக்கும் அன்பருக்கு நானிருக்கும் - நிலைமை என்னவென்று தெரியுமா...? நினைவை புரிந்து கொள்ள முடியுமா – என் நினைவை புரிந்து கொள்ள முடியுமா...? கண்ணில் குடியிருக்கும் காதலிக்கு நானிருக்கும் - கவனம் என்னவென்று தெரியுமா...? கருத்தை புரிந்துகொள்ள முடியுமா – என் கருத்தை புரிந்துகொள்ள முடியுமா...?



© இரும்புத்திரை பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் S.V.வெங்கட்ராமன் 🎤 T.M.சௌந்தரராஜன், P.சுசீலா @ 1960 ⟫


1098. அசையியற்கு உண்டாண்டோர் ஏஎர்யான் நோக்கப் பசையினள் பைய நகும்

கொன்றைவேந்தன் 67 : பையச் சென்றால் வையந் தாங்கும் :- ஒருவன் தகுதியான வழியில் நடந்தால் உலகத்தார் அவனை மேலாகக் கொள்வார்கள்...! இதையும் கவனத்தில் கொள்ள வேண்டும் நண்பர்களே...(!) "பைய" என்னும் சொல் இன்றும் தென்மாவட்டங்களில் "மெல்ல" என்ற பொருளிலேயே பெருவழக்காக உள்ளது...! சரி காதல் கொண்ட இருவரது சந்திப்பு தொடர்கிறது... "என் காதலி நடந்து வரவில்லை, காற்றில் அசைந்து வருகிறாள்... மயில்போல் அசைந்து வருபவள் என்னைப் பார்த்ததும் என் மேல் கொண்ட அன்பினால் நெகிழ்ச்சியுண்டாகி அவள் ஓசைப்படாமல் மெல்லச் சிரிப்பாள்... அப்பொழுது அது அவளுக்கு ஓர் புதுப் பொலிவு தருகிறது...! ஆகா...!" - காதலன் :-

புன்னகையில் ஒரு பொருள் வந்தது :- பூ முகத்தில் தங்க நிறம் வந்தது - கன்னியைப் போல் புது கனி வந்தது - கண்களிலே நாணம் ஏன் வந்தது...? பொட்டு வைத்தாள் அவள் முகத்திலே - புள்ளி வைத்தாள் எந்தன் மனத்திலே - கட்டி வைத்தாள் என்னை இடையிலே - கன்னமிட்டாள் அன்ன நடையிலே...



© பவானி கண்ணதாசன் M.S.விஸ்வநாதன் 🎤 T.M.சௌந்தரராஜன் @ 1967 ⟫

நகை தொடரும்...

புதிய பதிவுகளை பெறுதல் :


தொடர்புடைய எண்ணங்களின் வண்ணங்கள் சில :


முகநூல் மூலம் கருத்துக்களை பகிர :

கருத்துகள்

  1. இன்று மிகவும் ரசிக்க வைக்கும் குறள்கள்.  காதலின் சுவையும் சுவாரஸ்யமும்.  பவானி பாட்டு கேட்டு நாளாகி விட்டது.  நினைவு படுத்தி விட்டீர்கள்.

    பதிலளிநீக்கு
  2. பதிவு வழக்கம் போல அருமை.
    மெல்ல நகும் , ஒரு கண்சிறக்கணித்தாள், பைய
    இவைகளுக்கு பாடல்கள் தேர்வு மிக அருமை.
    பாடல்களை விரும்பி கேட்டேன்.
    திருக்குறள் ஓவியம் நன்றாக இருக்கிறது.

    வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  3. மூன்று குறள்களுக்கான உங்கள் விளக்கங்கள் மிகவும் நன்று. அதிலும் முதல் - ரசிக்கத் தகுந்த ரசனை!

    தொடரட்டும் உங்கள் குறள் ஆராய்ச்சி.

    பதிலளிநீக்கு
  4. திருக்குறளும் அதற்கேற்ற திரைப்படப் பாடல்களும் அருமை. நன்றி.

    பதிலளிநீக்கு
  5. பயமும், குறிப்பறிதலை உணர்ந்து கொள்ளாத மக்கு நிலையும்தான் எண்ணற்ற காதல்களை முறித்துவிட்டது என்றே நிணைக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  6. அன்பின் தனபாலன்,

    காணும் வரை நீ எங்கே நான் எங்கே...
    எத்தனை அருமையான வரிகள்.
    கண்ணதாசன் பிழிந்து கொடுத்த ரசம்,அழகான காதல் ஓவியமாக மலர்ந்திருக்கிறது உங்கள் பதிவில். ஓவியர் அவர்களின் வரைவு அமிர்தம்.
    அந்தப் பொட்டு வைத்த முகமும்., காதலனின் புன்னகையும் அழியாத காவியங்கள். மனம் நிறை பாராட்டு அவர்களுக்கு.

    பதிலளிநீக்கு
  7. திரு. வலிப்போக்கனின் நோக்கும் அருமை.
    குறிப்பறிதல் இல்லாத அறியாமையால்
    வாடிவிடும் சில காதல்கள். மிக உண்மை.

    பதிலளிநீக்கு
  8. இரும்புத்திரை பாடல் நெஞ்சை அள்ளும்.

    அதையும் குறளுக்கு ஏதுவாகக் கொடுத்திருக்கும் உங்கள்
    சீர் நோக்கு மிக மிகச் சிறப்பு.
    வள்ளுவப் பெருந்தகையை சரியாக உணர இது போலக்
    கருத்துரையும் இசையும் என்றும் வேண்டும்.
    மனம் நிறை நன்றி தனபாலன்.

    பதிலளிநீக்கு
  9. புன்னகையில் ஒரு பொருள் வந்தது
    ஆஹா எத்தனை அருமையான பாடல்.!!!!!!!!!!

    கண்ணவனே அவன் கணவனே....சிறப்பான
    பாடலைத் தேர்ந்தெடுத்ததும் அருமை.
    இதுதான் உண்மையான காதல்.
    நல்ல இசை விருந்தும், குறள் விருந்தும்
    மனதுக்கு நிறைவு.

    பதிலளிநீக்கு
  10. வணக்கம் சகோதரரே

    வழக்கம் போல் அருமையான பதிவு. முதல் இரண்டு பாடல்கள் அடிக்கடி கேட்டவை. நோக்காக்கால்...வரிகளுக்கு அழகான பொருள் பொதிந்த பாடல் வெகு பொருத்தம். மூன்றாவது பாடல் இப்போதுதான் கேட்கிறேன். அனைத்தும் குறள்களுக்கு ஒத்துப் போவது போல் தேர்ந்தெடுத்து தந்த முறை அருமை. முதல் குறளுக்கு ஏற்ற படமும் அருமை. பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  11. குறள் களும், குறள்களின் பொருள் கொண்டு எழுந்த பாடல்களும் அருமை

    பதிலளிநீக்கு
  12. காதல் இனிக்குதய்யா!!!! ஹாஹாஹா...அருமையான ரசிக்கும்படியான பதிவு.

    பைய!!! ஆஹா எங்கூர்! பைய போ என்று, பைய பேசு என்றும் எங்கள் வழக்காடல்கள் அங்கு சென்றால் எனக்கு வந்துவிடும்.

    நோக்காக்கால்// பாக்காதது போலப் பார்த்தல் ஆஹா காதலுக்கே உரிய பார்வை...அட! ஐயன் ரசித்து எழுதியிருக்கிறார்!

    கீதா

    பதிலளிநீக்கு
  13. அண்ணா, அருமையான பதிவு எப்பொழுதும் போல! தாத்தாவுக்கு எப்படித் தெரியும் என்ற கல்வி நகைக்க வைத்தது..தாத்தா கில்லாடி தான் என்று :) இரும்புத்திரை மற்றும் பவானி பாடல்களை இப்போதுதான் அறிந்து கொண்டேன், நன்றி அண்ணா. எப்படித்தான் சரியாகப் பாடல்களை இணைக்கிறீர்கள் என்று எப்பொழுதுமே வியப்பு தான்! நீங்கள் கண்டிப்பாக முனைவர் பட்டத்திற்கு முயற்சி செய்ய வேண்டும் அண்ணா.

    பதிலளிநீக்கு
  14. காவியம் படைத்த குறளுக்கு
    தூரிகைகள் படைத்த ஓவியம் மிக அருமை...

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

நகுதற் பொருட்டன்று நட்டல் மிகுதிக்கண்
மேற்சென்று இடித்தற் பொருட்டு. (குறள் 784)

நட்புச் செய்துகொள்வது நண்பரோடு சிரித்து மகிழ்வதற்காக மட்டும் அல்ல. மிகுதியாகத் தவறு செய்யும்போது, அவரைக் கடிந்து திருத்துவதற்கே ஆகும்.