🏠 வணக்கம் காப்பகம் நன்றி

தேடல் 🔎



புதிய பதிவுகளை பெற ✉



முத்துப்பல் சிரிப்பென்னவோ...



முந்தைய பதிவுகள் :
அறத்துப்பால் : சிரிக்க சிரிக்க... மானிட லீலை...!

பொருட்பால் : துன்பம் நேர்கையில்... கிசுகிசு...! அகநக... நகைவகையர்...

உலகம் சிரிக்கிறது...! நற்குடிப் பிறப்பு... இருட்டினில் வாழும் இதயங்களே...

காமத்துப்பால் : மெல்ல நகும்...


114. நாணுத்துறவுரைத்தல் : 1140. யாம்கண்ணின் காண நகுப அறிவில்லார் யாம்பட்ட தாம்படா வாறு

பைத்தியக்காரத்தனமாக ஒருவன் நடந்து கொண்டால் அவனைப் பார்த்து ஏளனமாகச் சிரிப்பது மற்றவர் இயல்பு... இங்கு காதலன் மடலேறி வருவதைப் பார்க்கும் மக்கள் அவனை அறிவு திரிந்த ஒருவனை நோக்குவதுபோல் பார்த்துச் சிரிக்கின்றனர்... "சிரிப்பவர்கள் சிரிக்கட்டும், என்வலி எனக்குத் தானே தெரியும்...! நான் பட்ட இந்தக்காதல் துன்பத்தை அவர்களும் அடையாததால்தான், அறிவில்லாதவர் என் எதிர் நின்றே சிரிக்கின்றனர்" என்று சினம் மேலிடக் காதலன் கூறுகிறான்...

இன்று நேற்று வந்ததெல்லாம், நாளை மாறலாம்... நீரில் தோன்றும் நிழல்களைப்போலே, நிலையில்லாமல் போகலாம்... நான் பார்த்து ஒன்றாகக் காணலாம், நீ பார்த்து வேறாக மாறலாம்... தெரிவது ஒன்று - புரிவது ஒன்று, மெய் அன்பு பொய்யென்று தோன்றும் போது - யார் சிரித்தால் என்ன...? இங்கு யார் அழுதால் என்ன...? தெரிவது என்றும் தெரிய வரும், மறைவது என்றும் மறைந்து விடும் :-

© இதயத்தில் நீ வாலி M.S.விஸ்வநாதன் 🎤 P.B.ஸ்ரீனிவாஸ் @ 1963 ⟫


118. கண்விதுப்பழி(த்)தல் : 1173. கதுமெனத் தாநோக்கித் தாமே கலுழும் இதுநகத் தக்க துடைத்து

தொழில் தொடர்பாகச் சென்றுள்ள கணவரின் பிரிவினால் ஏக்கமுறும் மனைவி கணவரைக் கண்ணால் காணமுடியவில்லையே என்று துயருறுகிறாள்... அவரை நினைக்க நினைக்க. அடக்கமுடியாமல் கண்ணீர் பெருகுகிறது... விரைந்து அவரைக் காணும் துடிப்பினால் அரற்றுகிறாள்... 'மாய்ந்து மாய்ந்து தலைவனைப் பார்த்து மகிழ்ந்ததும் இதே கண்கள்தான்; அவனைக் காணாமல் கண்ணீர் மல்குவதும் இதே கண்கள் தாமே என எண்ணுகிறாள்... கண்ணீர் உகுக்கும் கண்மேல் அவள் சினம் திரும்புகிறது... "நீ தான் என் துயரத்துக்கெல்லாம் காரணம்; அன்றைக்கு அவரை வேகமாகப் பார்த்துத் தீரா அன்பு கொண்டுவிட்டதால்தானே இன்றைக்குப் பிரிவினைத் தாங்கமுடியாமல் அழுகிறாய்?" என்று அவள் தன் கண்ணைக் கடிந்து கொண்டு "இதை எண்ணினால் சிரிப்புதான் வருகிறது" என்று கண்களைப் பழிப்பது போன்று நொந்து கொள்கிறாள்...

கண்ணாற கண்டகாட்சி, கானல் நீராய் மாறிப்போமோ...? என் உள்ளம் கொண்ட இன்பம், என்னை விட்டு நீங்கிபோமோ...? கண்ணீரே சொந்தமாகும், காலம் வந்து சேருமோ...? கலையாத துயர் மேகம், என் வாழ்வில் என்றும் சூழுமோ...? எந்நாளும் வாழ்விலே - கண்ணான காதலே... என்னென்ன மாற்றமெல்லாம் காட்டுகின்றாய் - ஆசை நெஞ்சிலே...

© விடிவெள்ளி அ.மருதகாசி A.M.ராஜா 🎤 P.சுசீலா @ 1960 ⟫


128. குறிப்பறிவுறுத்தல் : 1274. முகைமொக்குள் உள்ளது நாற்றம்போல் பேதை நகைமொக்குள் உள்ளதொன் றுண்டு

அரும்பிலிருந்து மலராகி உதிர்வது வரை உள்ள பதிமூன்று படிநிலைகள் : (1) அரும்பு – அரும்பும் நிலை, (2) நனை – அரும்பு வெளித்தெரியும் நிலை, (3) முகை – முத்துப்போன்ற வளர்ச்சி நிலை, (4) மொக்குள் – நாற்றத்தின் உள்ளடக்க நிலை, (5) முகிழ் – மணத்துடன் முகிழ்த்தல், (6) மொட்டு – கண்ணுக்குத் தெரியும் மொட்டு, (7) போது – மொட்டு மலரும்பொழுது காணப்படும் புடைநிலை, (8) மலர்- மலரும் பூ, (9) பூ – பூத்த மலர், (10) வீ – உதிரும் பூ, (11) பொதும்பர் – பூக்கள் பலவாகக் குலுங்கும் நிலை, (12) பொம்மல் – உதிர்ந்து கிடக்கும் புதுப் பூக்கள், (13) செம்மல் – உதிர்ந்த பூ பழம்பூவாய்ச் செந்நிறம்பெற்றழுகும்நிலை

ஊருக்கு கணவன் திரும்ப வந்தபின் மனைவியின் எண்ணத்தில் காதல் விம்மி நிற்கிறது... உள்ளம் முழுக்க மகிழ்ச்சி இருந்தாலும் அதை முழுவதுமாக வெளிக்காட்டாமல் புன்னகை மட்டும் காட்டுகிறாள்... அது நகைமொக்குள் என்று அழைக்கப்பட்டு அரும்பு மணத்துடன் முகிழ்ப்பதற்கு முன்னால் உள்ள நிலையுடன் ஒப்பிடப்பட்டது... மலரப் போகின்ற மொட்டில் இருக்கும் மணம்போல மனைவியின் நகைமுகிழ்ப்பில் ஒரு குறிப்பு உண்டு...!

செவ்வல்லி கை தொட்டு - சிலை வண்ண மெய் தொட்டு - சந்தித்த இன்பங்கள் நூறல்லவோ... கண்ணா உன் தோள் தொட்டு - கதை சொல்லும் நாள் தொட்டு - காணாத ஆனந்தம் வேறல்லவோ... முத்தங்கள் இட சொல்லவோ - சத்தங்கள் வரும் அல்லவோ... இந்த மோகம் யார் தந்ததோ... முத்துப்பல் சிரிப்பென்னவோ... முல்லைப்பூ விரிப்பல்லவோ... தங்கப்பாளம் போல் உந்தன் அங்கமோ...

© பூக்காரி பஞ்சு அருணாச்சலம் M.S.விஸ்வநாதன் 🎤 T.M.சௌந்தரராஜன், P.சுசீலா @ 1973 ⟫

நகை முற்றும்... கருத்திட்ட அனைவருக்கும் நன்றிகள் பல...

புதிய பதிவுகளை பெறுதல் :


தொடர்புடைய எண்ணங்களின் வண்ணங்கள் சில :


முகநூல் மூலம் கருத்துக்களை பகிர :

கருத்துகள்

  1. திருக்குறள் ஓவியம் அருமை.
    குறள் விளக்கம் அருமை.
    முதல் இரண்டு பாடல் பிரிவு துன்பத்தை கூறுகிறது.
    கடைசி பாடல் மகிழ்ச்சியான பாடல்கள் நல்ல தேர்வு.

    பதிலளிநீக்கு
  2. மூன்றுமே முத்தான பாடல்கள்.  அழகாக குறள்களுடன் பொருத்தி உள்ளீர்கள்.

    பதிலளிநீக்கு
  3. வணக்கம் சகோதரரே

    பதிவு அருமையாக உள்ளது.
    வழக்கம் போல் குறள்களையும், அதன் விளக்கமாக திரைப்பட பாடல்களையும் இணைத்த விதம் அருமையாக உள்ளது. மற்றும் ஒவ்வொன்றுக்கும் நீங்கள் எழுதிய விளக்கங்களை ரசித்துப் படித்தேன்.

    ஒரு மலரின் ஆரம்ப நிலை முதல், அது உதிரும் நிலை வரை தந்த சொல் விளக்கம் நன்றாக உள்ளது. திருக்குறள் ஓவியமும் அழகாக உள்ளது.

    இதுவரை திருக்குறளில் ஒவ்வொரு அதிகாரங்களிலும், சிறந்த முறையில் "திருக்குறளில் நகைசுவை" என்ற தலைப்பில் நீங்கள் தொகுத்து தந்த உங்களது அருமையான முயற்சிகளுக்கு என்னுடைய மனமார்ந்த பாராட்டுக்கள், வாழ்த்துகள். இந்த உங்கள் பதிவு தொகுப்பின் மூலம் பல விஷயங்களை நானும் தெரிந்து கொண்டமைக்காக உங்களுக்கு என் நன்றிகள்.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன். .

    பதிலளிநீக்கு
  4. ஓவியம், தேர்ந்தெடுத்த குறள்கள், அதற்கான பாடல்கள், விளக்கம் என அனைத்தும் சிறப்பு.

    பதிலளிநீக்கு
  5. பாடல் வரிகள் மிகவும் பொருத்தமாக இருக்கிறது ஜி

    பதிலளிநீக்கு
  6. இனிய தீப ஒளித்திருநாள் வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  7. குறள் விளக்கமும் அதற்கான பாடல் தேர்வும் அருமை.

    பதிலளிநீக்கு
  8. நகை முற்றும் என்பது சிறிது வருத்தம்தான். ...

    பதிலளிநீக்கு
  9. இத்தளமும் உங்களுக்கு பிடிக்கலாம். 

    http://interestingtamilpoems.blogspot.com/


    Jayakumar

    பதிலளிநீக்கு
  10. ஆக ,, சென்ற ஆண்டே எழுதுவதை விட்டு விட்டீர்களா? நீங்களுமா ,,?

    பதிலளிநீக்கு
  11. https://www.writersatheesh.com/2021/06/blog-post.html - பறவையினங்களின் தமிழ் பெயர்கள் - பயன்படுத்திக் கொள்ளுங்கள்

    பதிலளிநீக்கு
  12. மூன்றும் அருமையான பாடல்கள் சகோ. பொருத்திய விதம் சிறப்பு

    பதிலளிநீக்கு
  13. அனைத்து நல் உள்ளங்களுக்கும் "சயின்டிபிக் ஜட்ஜ்மென்ட்" நிறுவனத்தின் மகிழ்ச்சி பொங்கும் "ஆங்கில புத்தாண்டு" நல்வாழ்த்துக்கள்...

    "Happy New Year 2023" Wishes from "Scientific Judgment" to all friends...

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

நகுதற் பொருட்டன்று நட்டல் மிகுதிக்கண்
மேற்சென்று இடித்தற் பொருட்டு. (குறள் 784)

நட்புச் செய்துகொள்வது நண்பரோடு சிரித்து மகிழ்வதற்காக மட்டும் அல்ல. மிகுதியாகத் தவறு செய்யும்போது, அவரைக் கடிந்து திருத்துவதற்கே ஆகும்.