🏠 வணக்கம் காப்பகம் நன்றி

தேடல் 🔎



புதிய பதிவுகளை பெற ✉



அகநக...



முந்தைய பதிவுகள் : சிரிக்க சிரிக்க... மானிட லீலை...! துன்பம் நேர்கையில்... கிசுகிசு...!

இன்பத் துன்பம் இரண்டிலும் பாதிப்பாதி இருவரும் - பகிர்ந்து கொண்டு பழகினோம்... கண்ணாடி முன்னால் நின்று பார்த்தாலுமே - என் விழி காண்பது அவன் முகம் என்று வாழ்ந்த - ஒரு நண்பனின் கதை இது ↑ ↓


79. நட்பு : 784. நகுதற் பொருட்டன்று நட்டல் மிகுதிக்கண் மேற்சென்று இடித்தற் பொருட்டு

நண்பர்கள் கூடிச் சிரித்து மகிழ்வதுதான் நட்பா...? அவ்வாறு மகிழ்ந்து காலம் தள்ளுவதுதான் நண்பர்களுக்கு அழகு என்று பலரும் எண்ணுவது இயல்பு... நட்பாளர்களுக்கு வேறு ஒரு கடமையும் உள்ளது என்கிறார் ஐயன்...! குற்றமான, ஒழுக்கக்கேடான எண்ணங்களால், அறமற்றச் செயல்களில் ஈடுபடுகிறான் என்று தெரிந்தால், உடனே அவனைக் கடிந்துரைத்து, நேர்வழியில் நெறிப்படுத்தித் திருத்த வல்லது தான் நட்பு... அப்படிச் செய்யா விட்டால் அது நட்பு அல்ல... தவற்றை எடுத்துக்காட்டி இடித்துரைப்பதற்கு நட்புறவுக்கு முழு உரிமை உண்டு... நட்பின் அழகிற்கு :- மேற்சென்று :- நண்பன் செல்லும் பாதை தீக்குணங்களைக் கொண்டது என்று அவன் தானே அறியாமல் இருக்கலாம் அல்லது பின்னாளில் பெரும் தீங்கு நேரும் என்று உணராமலும் இருக்கலாம்... அறநெறி அல்லாத செய்கைகளிலிருந்தால், உடனே விரைந்து சென்று :- இடித்தல் :- நண்பனுக்கு மென்மையாகக் கூறும் அறிவுரைகளோ ஆலோசனைகளோ காதில் வாங்கவில்லை என்றால் கடுஞ்சொற்களால் தவற்றிலிருந்து நண்பனை மீட்க வேண்டும்... "தானே பட்டுத் திருந்தட்டும்...", "அவன் கேட்டால்தான் அறிவுரை சொல்வோம்..." - என்பதெல்லாம் நட்பு அல்ல... இதெல்லாம் நடக்குமா...? ஏன் முடியாது...? நண்பன் எனும் இடத்தில் நம்முள் இருக்கும் நண்பனை (மனதை) இடித்துரைத்துத் திருத்தும் வல்லமை படைத்தவரால் முடியும்...

அவனவன் நெஞ்சிலே - ஆயிரம் ஆசைகள்... அழுவதும் சிரிப்பதும் - ஆசையின் விளைவுகள்... பெரியவன் - சிறியவன்... நல்லவன் - கெட்டவன்... உள்ளவன் - போனவன்... உலகிலே பார்க்கிறோம்... எண்ணமே சுமைகளாய் - இதயமே பாரமாய்...
தவறுகள் செய்தவன் - எவனுமே தவிக்கிறான் - அழுகிறான்...

அந்த நாள் - ஞாபகம் - நெஞ்சிலே - வந்ததே - நண்பனே3


© உயர்ந்த மனிதன் வாலி M.S.விஸ்வநாதன் 🎤 T.M.சௌந்தரராஜன் @ 1968 ⟫


79. நட்பு : 786. முகநக நட்பது நட்பன்று நெஞ்சத்து அகநக நட்பது நட்பு

வெறும் முகத்தில் மட்டும் மலர்ச்சி காட்டி நட்புச் செய்வது மட்டும் நட்பாகாது... சிரித்த முகமும், உள்ளத்து மகிழ்ச்சியும் என்பதை "நகையும் உவகையும்" முந்தைய நகை நான்கில் அறிந்தோம்... அது போல் நண்பர்கள் இருவரது மனங்களும் உள்ளுக்குள் மகிழும்படியாகப் பழகிக்கொள்வதே நட்பாகும்... இதற்கு இருவரின் உள்ளங்களும் பொருந்தவேண்டும்... தனக்கான காரியும் நடக்கும் வரை, அகம் மலராமல் முகத்தால் மட்டும் மலர்வதுபோல் நடித்து நண்பர்களாகக் காட்டிக் கொள்பவர்கள் உலகில் ஏராளம், தாராளம்...! நட்பிற்கு அழகு :- நண்பர்களின் அகமும் முகமும் ஒரு சேர மகிழ்வதே...

ஒரு கிளையில் ஊஞ்சல் ஆடும் - இரு மலர்கள் நீயும் நானும்... பிரியாமல் நாம் உறவாடலாம்... ஒரு விழியில் காயம் என்றால் - மறு விழியும் கண்ணீர் சிந்தும்... உனக்காக நான் எனக்காக நீ... இரண்டு கைகள் இணைந்து வழங்கும் இனிய ஓசை - இன்றும் என்றும் இருக்க வேண்டும் - எனது ஆசை ஹே ஹே... நண்பனே எனது உயிர் நண்பனே... நீண்ட நாள் உறவிது - இன்று போல் என்றுமே தொடர்வது...

© சட்டம் வாலி கங்கை அமரன் 🎤 S.P. பாலசுப்பிரமணியம், மலேசியா வாசுதேவன் @ 1983 ⟫

நகை தொடரும்...

புதிய பதிவுகளை பெறுதல் :


தொடர்புடைய எண்ணங்களின் வண்ணங்கள் சில :


முகநூல் மூலம் கருத்துக்களை பகிர :

கருத்துகள்

  1. ​நல்ல குறள்கள். நல்ல பாடல்கள். நட்பைப் பற்றி பேச நிறைய இருக்கிறது. அனுபவங்கள் இரண்டு பக்கமும்!

    பதிலளிநீக்கு
  2. நட்பும் நகையும் உறுதியாகக் கூறும் குறள்கள்.

    மேற்சென்று இடித்தல் இந்த நாட்களில்
    செய்தால் நன்றுதான். கேட்பவர்களும் அதே
    போல எடுத்துக் கொள்ள வேண்டும். நட்பின் கடமையை
    எடுத்துரைக்கும் குறள்களுக்கு ஏற்ற இனிய பாடல்கள்.
    என்றுமே மறக்க இயலாதவை.
    மிக நன்றி அன்பு தனபாலன்.

    பதிலளிநீக்கு
  3. திருக்குறள் ஓவியம் அருமை.
    நட்பு பற்றி சொல்லி இருப்பதற்கு ஏற்ற ஓவியம்.

    மிக அருமையாக நட்பைபற்றி சொல்லும் குறள், நல்ல பாடல் தேர்வு.
    முதல் பாடல் கேட்டேன், அடுத்த பாடல் கேட்க முடியவில்லை.
    அகமும் முகமும் மலரும் நட்பு அமைவது பாக்கியம்.
    நண்பரை நல்ல வழியில் நடத்தும் நட்பு கிடைப்பதும் பாக்கியம்தான்.
    பதிவு அருமை.

    பதிலளிநீக்கு

  4. நட்பைக் குறித்த
    ஐயனின் குறள்களும், பாடலில் வந்த குரல்களும் மிகவும் பொருத்தமாக இருந்தது ஜி.

    பதிலளிநீக்கு
  5. நட்பு..திருக்குறள் வழியாக அதிகம் லயித்து ரசித்தேன். என் நண்பர்களால் நான் தவறான பாதைக்குச் செல்லாமல் இருக்க முடிந்தது. பல நண்பர்கள் என் அறிவுரையால் தம்மைத் திருத்திக்கொள்வதுண்டு. அப்போது மனம் விட்டுப் பேசிய காலம். மனதில் எதையும் வைத்துக்கொள்வதில்லை. இப்போதோ நிலை வேறு.இக்காலகட்டத்தில், இப்போதைய தலைமுறைக்கு இவ்வாறான நட்பு கிடைக்கின்றதா என்ற கேள்விக்கு விடைகாண்பது சிரமமே.

    பதிலளிநீக்கு
  6. இரண்டுமே நல்ல கருத்துகள். இடித்துரைத்தல் நட்பின் அழகு. ஆனால் இப்போது கேட்டால்தான் அறிவுரை இல்லை என்றால் இல்லை என்றும், ரெண்டு மூணு தடவை கேட்டப்ப சொன்னேன் ஆனா நாம சொன்னத கேட்கலை எனவே இனி எந்த உதவியும் அறிவுரையும் சொல்லமாட்டேன் என்ற ரீதியிலான சிந்தனைகள் தற்போது அதிகமாகியிருப்பதைக் காணலாம். பேசாமல் விலகுபவர்களும் உண்டு.

    நட்பு பற்றி சொல்ல நிறைய இருக்கு டிடி. சென்ற தலைமுறை இன்றைய தலைமுறை என்று... பெர்சனல் ஸ்பேஸ் அதிகரிக்க அதிகரிக்க இதெல்லாம் மறைந்துவிடுகிறது.

    கீதா

    பதிலளிநீக்கு
  7. உண்மையான நட்பிற்குத்தான் இத்தனை அவசியங்களும் ஆராதனைகளும்! சாதாரண நட்பிற்கு அர்த்தமே வேறு! உண்மையான நட்பைப்பற்றி பெரியவர்கள் பலரும் பலவிதமாக, அழகாகச் சொல்லியிருக்கிறார்கள்! ஆனால் இந்தக்காலத்தில்? பூதக்கண்ணாடி கொண்டு தான் உண்மையான நட்பைத் தேடிப்பார்க்க வேண்டும்!
    எது எப்படியிருந்தாலும் நான் நல்லதையே தான் சொல்லுவேன் என்று திருக்குறள்கள் மூலம் நல்லனவற்றைத் தொடர்ந்து எழுதி வரும் உங்கள் நல்ல முயற்சிக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்!!

    பதிலளிநீக்கு
  8. வணக்கம் சகோதரரே

    வழக்கம் போல் அருமையான பதிவு. நட்பு பற்றி ஐயனின் திருக்குறளின் விளக்கத்துடன் தெளிவாக அழகாக கூறியுள்ளீர்கள். உண்மை... உண்மையான நட்பு உள்ளத்திலிருந்துதான் வர வேண்டும். "தோள் கொடுப்பான் தோழன்" என்பது போல், மற்றவனின் இன்பத்தில் மட்டும் பங்கேற்காமல், அவனின் துன்பங்களையும் அறிந்து உதவிக்கரம் தந்து செயல்படுவதே நல்ல நட்பு.

    நெருங்கிய நட்புகளில் ஒருவன் தீயவழிகளில் அறிந்தறியாமல் சென்று அல்லல்கள் படும் போது நமக்கென்ன எனறிராமல், அவனுக்கு தேவையான அறிவுரைகளை கூறி அவனுக்கு ஏற்படும்/ஏற்பட்ட இன்னல்களை அகற்ற முயற்சிகள் செய்ய வேண்டும் என்பதை அழகாக கூறியுள்ளீர்கள். ஆனால் இப்போது காலங்கள் மாற மாற உண்மையான இந்த நட்பு உள்ளங்களில், சுயநலங்களினால் விரிசல் கண்டு மாறி வருகிறதென்பதும் உண்மை. முன்பு போல் நல்ல நட்புகள் கிடைப்பதும் இப்போதைய மனிதர்களுக்கு ஒரு மாபெரும் வரம். பாடல்கள் அருமை. நட்போடு பழையனவற்றைப் பேசி அளவளாவும் முதல் பாடல் மட்டுந்தான் கேட்க முடிந்தது.நல்ல கருத்துக்களுடனான அருமையான தங்களின் இந்த பதிவுக்கு மிக்க நன்றிகள்.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  9. நட்பு பற்றிய பதிவு அருமை. நட்பின் இலக்கணம் பற்றி எவ்வளவோ சொல்லலாம் ஆனால் உண்மையான நட்பு என்பது நீங்கள் பதிவில் சொல்லியிருப்பது போலத்தான்.

    உங்களின் முந்தைய பதிவும் வாசித்தேன் அதுவும் அருமை

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
  10. முதல் பாடல் கேட்கும்போது கடந்தகால நட்பு நெஞ்சில் நிழலாடியது...
    இரண்டாவது பாடல் திறக்கவில்லையே அது ஏனோ?...
    நல்ல நட்பு கற்பை போன்றது ... பதிவு அருமை...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சரி செய்து விட்டேன்... நன்றி... கோமதி அரசு அம்மாவும் தகவல் அனுப்பி இருந்தார்கள்... இன்று தான் சரிபார்க்க முடிந்தது... அவர்களுக்கும் நன்றி...

      நீக்கு
  11. வணக்கம் தனபாலன். இரண்டாவது பாடல் கேட்டேன். இப்போது கேட்க முடிகிறது.
    பாடல் மிக அருமை. நட்பு மிகவும் இனிமையானது. சிறு வயது நட்பு காலம் முழுவது தொடர்ந்தால் மிகவும்
    கொடுத்து வைத்தவர்கள்.
    உண்மையான நட்பு தொடரும் காலம் கடந்தும்.
    அருமையான குறள் பதிவுகள் தொடர வாழ்த்துக்கள்.
    வாழ்க வளமுடன்..

    பதிலளிநீக்கு
  12. நட்பு பற்றிய அருமையான குறள் விளக்கம் டிடி

    பதிலளிநீக்கு
  13. உண்மையான நட்புக்கு இலக்கணமாக திருக்குறளை பதிவிட்டது அருமை...

    பதிலளிநீக்கு


  14. நட்பு பற்றிய பதிவு அருமை.. ஆனால் இங்கு கூறியபடி பேஸ்புக் நட்புகளை இடித்துரைத்து திருத்த முயல்வது தவறாகத்தான் இருக்கும்

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

நகுதற் பொருட்டன்று நட்டல் மிகுதிக்கண்
மேற்சென்று இடித்தற் பொருட்டு. (குறள் 784)

நட்புச் செய்துகொள்வது நண்பரோடு சிரித்து மகிழ்வதற்காக மட்டும் அல்ல. மிகுதியாகத் தவறு செய்யும்போது, அவரைக் கடிந்து திருத்துவதற்கே ஆகும்.