🏠 வணக்கம் காப்பகம் நன்றி

தேடல் 🔎



புதிய பதிவுகளை பெற ✉



சிரிக்க சிரிக்க...

சிரிப்பு - இதன் சிறப்பை சீர்தூக்கிப் பார்ப்பதே நமது பொறுப்பு... மனம் கருப்பா வெளுப்பா என்பதை எடுத்துக் காட்டும் கண்ணாடி சிரிப்பு - இது களையை நீக்கி கவலையைப் போக்கி மூளைக்குத்தரும் சுறுசுறுப்பு... சிந்திக்கத் தெரிந்த மனிதக் குலத்துக்கே சொந்தமான கையிருப்பு - வேறு ஜீவராசிகள் செய்ய முடியாத செயலாகும் இந்த சிரிப்பு...



மனிதர்களுக்கென்றே உண்டான அரிய சுவையான நகைச்சுவை பற்றி திருக்குறளில் ஐயன் என்ன சொல்கிறார் என்பதை அடியேனும் பொறுப்புடன் தொடர்கிறேன்... நகை, நகும், நகுக, நக, நகல், நகுதல் எனத் திருக்குறள் முழுவதும் உள்ளவற்றை 'கணக்கியல்' செய்தபின், இவற்றை தொடர்ந்து பதிவு செய்ய 'எண்ணி'யுள்ளேன்... நகை என்ற சொல்லுக்குச் சிரிப்பு, மகிழ்ச்சி, ஒளி, புன்னகை, பொன்னகை எனப் பல பொருட்கள் உண்டு... உலக நடைமுறையில் பேசப்படுகின்ற, உடலால் நிகழ்த்தப்படுகின்ற செயல்கள் பலவற்றைக் கண்டு சிரிக்கின்றோம்... அவை கிண்டல், நையாண்டித்தனம், கோமாளித்தனம், கிறுக்குத்தனம் எனப் பலவுண்டு... இவ்வாறு மனதின் தொடர்பு இல்லாமலேயே சிரித்து மகிழ்வதெல்லாம் நகைச்சுவை என்ற பெயர் பொருந்தாது... உடல் வளர்ச்சிக்கும், உள்ளம் மகிழ்தலுக்கும் பெருங் காரணமான நகைச்சுவையின் ஆழ்ந்த கருத்தையும் பயனும் உட்படப் பலவற்றைக் கொண்டதைக் குறள்களில் அறிவோம்... மனதில் தோன்றுவதைச் சொல்வது முகம்... 71. குறிப்பறிதல் : 706. அடுத்தது காட்டும் பளிங்குபோல் நெஞ்சம் கடுத்தது காட்டும் முகம் என்பதற்கு 'அகத்தின் அழகு முகத்தில் தெரியும்' என்று எளிதாக விளக்கம் அறியலாம்...

71. குறிப்பறிதல் : 707. முகத்தின் முதுக்குறைந்தது உண்டோ உவப்பினும் காயினும் தான்முந் துறும் :- இன்பமோ துன்பமோ, மகிழ்வோ வருத்தமோ, பிடித்ததோ பிடிக்காததோ, விருப்பமோ வெறுப்போ - எதையும் அறிவு மிக்க முகம் முந்திக் கொண்டு அவ்வுணர்வுகளைக் காட்டி விடும்... முதுக்குறைந்தது என்றால் அறிவு மிக்கது... 'சிறுமுதுக் குறைவிக்குச் சிறுமையுஞ் செய்தேன்' - கொலைக்களக் காதை 68 : சிறிய வயதில் முதிய அறிவைக் கொண்ட உனக்கும், குறை உண்டாகும்படி சிறுமை செய்தேன் - சிலப்பதிகாரத்திலும் 'அறிவுமிக்கது' என்ற பொருளிலேயே ஆளப்பட்டுள்ளது... சரி, அறிவு மிக்க முதல் நகைக்குச் செல்வோம்... பாடல்கள் மேலும் சிந்திப்பதற்கு...!

19. புறங்கூறாமை : 182. அறனழீஇ அல்லவை செய்தலின் தீதே புறனழீஇப் பொய்த்து நக

அறத்தை அறக்கடவுளாக ஐயன் சித்தரித்ததை திருக்குறளிலே ஒரு சொல் பதிவில் சிறிது அறிந்தோம்... ஆனால், நல்லது கெட்டது தெரியாமல் அறநெறியை மீறித் தவறு செய்து, அறம் என்றே ஒன்றுமில்லையென கூறிக்கொண்டு, அறத்தை அழித்து / ஒழித்து / கெடுத்து / சிதைத்து வாழும் கொடியவர்களை விடத் தீங்கானவர்கள் யார்...? சிரித்த முகத்துடன் நம்மிடத்தில் பழகுபவர்களை எல்லாம் நல்லவர்கள் என்று எண்ணிவிடக்கூடாது... மனதுள் ஒன்றை வைத்து புறம் ஒன்றைப் பேசுபவர்கள், ஒருவனை அவன் இல்லாதபோது பொய்யானவற்றைச் சொல்லி எள்ளி நகையாடுவது சாதாரணமாகி, அவ்வாறு புறம் கூறித் திரிகின்றவர்களின் எண்ணிக்கையும் அதிகம், அவர்களைத் தொடர்பவர்களும் அதிகம்...! புறங்கூறுதலே ஒரு தீய செயல் என்கிற போது, தாம் யாரைப்பற்றிப் புறம்பேசினாரோ அவரைக் காணும்போது, பொய்யாகச் சிரித்துப் பேசுதலை, பொய்யாகப் பழகும் போலித்தனமான செயல் என்பதை விட வஞ்சக எண்ணமும் செயலும் உடையவர்கள்... எனவே அறத்தைச் சிதைத்துச் செய்யும் தீதைவிட ஒருவனைக் காணாத இடத்து இகழ்ந்து மகிழ்ந்துவிட்டு, நேரில் காணும்போது பொய்யாகச் சிரித்துப் பழகுவது...

கதை கட்ட ஒருவன் பிறந்துவிட்டால், கண்ணகி வாழ்விலும் களங்கமுண்டு... காப்பாற்றச் சிலபேர் இருந்து விட்டால், கள்வர்கள் வாழ்விலும் நியாயமுண்டு... கோட்டுக்குத் தேவை சிலசாட்சி, குணத்துக்குத் தேவை மனசாட்சி - உன் குணத்துக்குத் தேவை மனசாட்சி... உலகம் ஆயிரம் சொல்லட்டுமே - உனக்கு நீதான் நீதிபதி... மனிதன் எதையோ பேசட்டுமே - மனசை பார்த்துக்க நல்லபடி - உன் மனசை பார்த்துக்க நல்லபடி... மயிலைப் பார்த்து கரடியென்பான், மானைப் பார்த்து வேங்கையென்பான், குயிலைப் பார்த்து ஆந்தையென்பான், அதையும் சில பேர் உண்மையென்பார்... யானையைப் பார்த்த குருடனைப் போல்...



© அருணோதயம் கண்ணதாசன் K.V.மகாதேவன் 🎤 T.M.சௌந்தரராஜன் @ 1971 ⟫


19. புறங்கூறாமை : 187. பகச்சொல்லிக் கேளிர்ப் பிரிப்பர் நகச்சொல்லி நட்பாடல் தேற்றா தவர்

யாராக இருந்தாலும் மகிழ்ந்து பேசி நட்புக் கொள்ளும் தெளிவு இல்லாதவர்களின் கொடிய சிந்தனை என்ன...? மேலே சொன்ன அறம் அறியா புறங்கூறி வல்லவர்கள், நல்ல பல நெருங்கிய நண்பர்களையும் பகையாகப் பிரிந்து போகும்படி செய்துவிடுவார்கள்... தானும் நட்பின் சிறப்பை சற்றும் உணராது, பலரோடு பழகி நட்பாக வாழ வகை அறியாதவர்கள்... நட்பிலும் இன்றைய கேடுகெட்ட அரசியலைத் திணிப்பவர்களும் அதிகம்...! இதன் மூலம் அறிந்து தெரிந்து புரிந்து கொள்ள வேண்டியது என்னவெனில், மகிழ்ந்து பேசி நட்புடன் வாழ்பவர் புறங்கூறமாட்டார் என்பதும், அனைவருடன் சிரித்துப் பேசி நட்புடன் வாழ வேண்டுமென்றால் புறங்கூறலை விலக்கக் கற்றுக்கொள்ள வேண்டும் என்பதும் உறுதியாகிறது...

மட்டமான பேச்சு தன் வாயைக் கெடுக்குதுங்க - அது வெட்டித்தனமாய் கேக்கிறவங்க காதையும் கெடுக்குதுங்க... சந்திலும் பொந்திலும் வாதம் - அதால் தலைவலி மருந்துக்கு லாபம் - அந்த ஜாடையிலே சில கேடிகள் செய்வது சட்டையின் பைகளைக் கெடுக்குதுங்க... கும்பல் சேர்த்து வம்பு வளர்த்து குடும்பத்தைக் கலைக்குதுங்க - பெருங் குழப்பமாக்கியே சண்டைகள் மூட்டி பொழப்பையும் கெடுக்குதுங்க... புரளியும் வதந்தியும் மூட்டி - ஒரு பொய்யை நூறாகக் கூட்டி - கரும் பூதமென்றும் சிறு பேய்களென்றும் - பல பாதையில் மூளையைக் கெடுக்குதுங்க... அறையில் வளர்ந்து வெளியில் பறந்து அவதிப் படுத்துதுங்க - ஊரை அவதிப் படுத்துதுங்க - அது அரசியல் வரைக்கும் நாக்கை நீட்டியே அமைதியைக் கெடுக்குதுங்க... பாழும் பொய்யென்று காட்டி - உடல் மாயக் கூடென்று கூட்டி - உயர் வானத்திலே பரலோகத்தைப் பாரென மனதையும் அறிவையும் கெடுக்குதுங்க...



© மகனே கேள் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் M.S.விஸ்வநாதன் 🎤 A.L.ராகவன், ஜிக்கி @ 1965 ⟫

உண்மை பட்டுக்கோட்டையாரே... ம்... சிரிப்பு வருது சிரிப்பு வருது... சிரிக்க சிரிக்க சிரிப்பு வருது...!
நகை தொடரும்...

புதிய பதிவுகளை பெறுதல் :


தொடர்புடைய எண்ணங்களின் வண்ணங்கள் சில :


முகநூல் மூலம் கருத்துக்களை பகிர :

கருத்துகள்



  1. தலைவரே பேசாமல் திண்டுக்கல் தனபாலன் என்பதற்கு பதிலாக திருக்குறள் தனபாலன் என்று உங்கள் பெயரை மாற்றிக் கொள்ளுங்கள்

    பதிலளிநீக்கு
  2. நமக்கு உதவிய உதவும் நல்ல நட்புக்களை அரசியல் நிலைப்பாடுகள் காரணமாக பலர் குறிப்பாக தமிழகத்தில் இழக்க ஆரம்பித்து இருக்கிறார்கள், பலருக்கு சந்தணத்தைவிட சாக்கடை முக்கியமாக இருக்கிறது

    பதிலளிநீக்கு
  3. திருக்குறள் ஓவியம் அருமை.
    பதிவும், பகிர்ந்த பாடல்களும் மிக அருமை.

    சிரிக்க தெரிந்தால் போதும் பாடல் நினைவுக்கு வருது. சிரிக்க தெரிந்தால் துயர் நெருங்காது என்பர்கள்.

    நீங்கள் சொல்வது போல் நகைச்சுவை காட்சி எல்லாம் சிரிப்பு ஆகுமா? நல்ல அறிவு மிக்க நகைச்சுவை வேண்டும் தான்.

    வெளியில் ஒன்று உள்ளத்தில் ஒன்றாய் வைத்துக் கொண்டு சிரிப்பதும் சிரிப்பு ஆகாதுதான்.



    பகிர்ந்த பாடல்கள் இரண்டும் அருமையான பாடல்கள்.

    இப்படி பட்டவர்களால் இடுக்கல்களை (துன்பத்தை) வெல்ல மனதை திடமாக வைத்துக் கொள்ள


    இடுக்கண் வருங்கால் நகுக அதனை
    அடுத்தூர்வது அஃதொப்பது இல்

    பாடி மனதை திட படுத்திக் கொள்ள வேண்டும்.வாழ்த்துக்கள்.



    பதிலளிநீக்கு
  4. அமைப்பு மிக மாறியிருக்கிறது - நன்று. அடுத்தது காட்டும் பளிங்கு எனக்கு பிடித்த குறள்.

    பதிலளிநீக்கு
  5. மகனே கேள் பாடல் இதுவரை கேட்டதில்லை.  உலகம் ஆயிரம் சொல்லட்டுமே அருமையான பாடல்.  சிரிப்பு...   மற்ற எந்த உயிரினத்துக்கும் இறைவன் வழங்காத சிறப்பு.  அதைக் கூட சரியாய் பயன்படுத்தாமல் இருக்கிறேன் நான்!

    பதிலளிநீக்கு
  6. சிரிப்பு - மிகவும் தேவையான ஒரு விஷயம். இருக்கும் கஷ்டங்களில் சிரிக்க முடிந்தால் நல்லதே!

    சிறப்பான பதிவு. பாராட்டுகளும் வாழ்த்துகளும்.

    பதிலளிநீக்கு
  7. சிந்திக்க வைக்கும் பதிவு. நன்றி

    பதிலளிநீக்கு
  8. கலைவாணர் அவர்கள் பாடிய கலகலப்பான பாடலுடன் பதிவு..

    சிறப்பான செய்திகளுடன் செம்மையான தொகுப்பு...

    வாழ்க குறள் நெறி.

    பதிலளிநீக்கு
  9. அன்பின் தனபாலன் ,
    அருமையான குறள்களும்,
    சிறந்த பாடல்களும் ,அறிவு செறிந்த
    வார்த்தைகளும் பதிவை அலங்கரிக்கும் போது

    முழு உரையும் மணக்கிறது.
    கூடா நட்புகளை அறிவது எப்படி என்று
    உணர்த்தும் ஐய்யனை உங்கள் எழுத்தில் கண்டு வாழ்வை
    படிக்கிறேன்.

    உள்ளத்திலிருந்து நட்பே நமக்குக் கிடைக்கட்டும்.
    நலமுடன் இருங்கள்.அப்பா.

    பதிலளிநீக்கு
  10. கதைகட்ட ஒருவன் பிறந்துவிட்டால்
    கண்ணகி வாழ்விலும் களங்கமுண்டு...

    கோர்ட்டுக்கு தேவை சில சாட்சி... நம்
    குணத்துக்கு தேவை மனசாட்சி...

    பதிலளிநீக்கு
  11. வணக்கம் சகோதரரே

    எப்போதும் போல் அருமையான பதிவு.
    பதிவின் முதலில் துவக்கிய பாடலே மிகவும் நன்றாக உள்ளது. ஆம்... வேறு ஜீவராசிகள் செய்ய முடியாத இந்த சிரிப்பு மனித குலத்துக்கே உரியது.

    பொய்முகம் இல்லாத உண்மையான நட்புள்ளத்தோடு ஒருவரோடு ஒருவர் பழக வாய்ப்பதே ஒரு நல்ல வரம். அதன் உண்மையை வள்ளுவராரின் திருக்குறள் எடுத்தியம்பும் பாங்கை பதிவில் சுட்டிக் காட்டியது சிறப்பு.

    திருக்குறளில் எந்த சிறப்பான நல்ல கருத்தை தான் வள்ளுவர் எடுத்தியம்ப தவறவில்லை.? ஒரு மனிதனுக்குண்டான கடமைகள், பொறுப்புக்கள், தீயவையை புறந்தள்ளுதல், பழகுவதற்கு உரிய நட்பறங்கள் இல்லற தர்மங்கள் என அத்தனை நற்குணங்களையும், ஒருங்கே ஈரடியில் விளக்கி காட்டி மனித வாழ்வியலோடு ஒன்றுவதுதான் ஐயனின் மணியான குறள்கள்.

    பகிர்ந்த இருபாடல்களும், பதிவின் சாரமும் அருமை. முதல் பாடல் அடிக்கடி கேட்டுள்ளேன். இரண்டாவது பாடல் வரிகளுடன் இன்றுதான் கேட்டு ரசித்தேன் வழக்கம் போல் சிந்திக்க வைக்கும் ஒரு நல்ல பதிவின் பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  12. சிரிக்க மட்டுமல்ல, சிந்திக்கவும் வைத்த பதிவு.

    பதிலளிநீக்கு
  13. திருக்குறள் உங்களின் ரத்தத்தோடு ரத்தமாக கலந்துவிட்டது. விவரிப்பு வழக்கம்போல் மிகச் சிறப்பு.

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

நகுதற் பொருட்டன்று நட்டல் மிகுதிக்கண்
மேற்சென்று இடித்தற் பொருட்டு. (குறள் 784)

நட்புச் செய்துகொள்வது நண்பரோடு சிரித்து மகிழ்வதற்காக மட்டும் அல்ல. மிகுதியாகத் தவறு செய்யும்போது, அவரைக் கடிந்து திருத்துவதற்கே ஆகும்.