🏠 வணக்கம் காப்பகம் நன்றி

தேடல் 🔎



புதிய பதிவுகளை பெற ✉



கீழ்...

அனைவருக்கும் வணக்கம்... பிற மொழிகளால் மொழி பெயர்க்க முடியாத பல தமிழ்ச் சொற்களில், மக்களின் இயல்பைக் குறிப்பிடும் சொல் ஒன்று "சான்றாண்மை" மற்றொன்று "கயமை" என்பதாகும்... சான்றாண்மை என்பது உயர்ந்த தன்மையின் முடிவான எல்லையையும், கயமை என்பது இழிந்த தன்மையின் கடையான எல்லையையும் காட்டும்... இதனைத் தமிழ் மக்கள் கண்ட அளவிற்குப் பிற மக்கள் காணவில்லை என்பதோடு, தமிழ் கண்ட அளவிற்குப் பிற மொழிகளில் இல்லை என்பதால், இவற்றை மொழிபெயர்க்கும் ஆற்றலை அவை இழந்து நிற்கின்றன... இது தமிழ் மக்களுக்கு, தமிழ் மொழிக்கு மட்டுமே உள்ள பல தனிச் சிறப்புகளில் ஒன்று... முந்தைய கயமை பதிவில் கயவர்களை இரண்டே எழுத்தில் குறிப்பிடுகிறார் என்று முடித்திருந்தேன்... தொடர்கிறது...


இழிந்த குணத்திலும் ஓர் இழிந்த தன்மையைக் கொண்ட கயமைக் குணம் உடைய மக்களையே ஐயன் கயவர் எனக் குறிப்பிடுகிறார்... இதன் வெளிப்படையான பொருள் கீழானவன், தாழ்ந்தவன், இழிந்தவன், கயவன், என்பன... இச் சொற்களால் கூறினாற் கயவனை ‘மனிதன்’ என ஒப்புக்கொண்டதாக ஆகிவிடும் என்பதால், அவ்வாறு கூற விரும்பாமல் ஐயன் அதனைக்  கீழ்  என்று அஃறிணைப் படுத்தியே கூறிவிட்டார்...

1074. அகப்பட்டி ஆவாரைக் காணின் அவரின் மிகப்பட்டுச் செம்மாக்கும் கீழ் - எவ்வித பண்புகளும் இல்லாத கீழோன் தன்னைக் காட்டிலும் ஒழுக்கமற்றவரைக் கண்டால், "அவரிலும் தான் மேல்" என்று இறுமாப்பு கொள்வான்...! || "கீழ்கள்" என்று பன்மையிலும் : 1075. அச்சமே கீழ்களது ஆசாரம் எச்சம் அவாவுண்டேல் உண்டாம் சிறிது - இன்றுவரை பிறப்பில் மேலானவன் என உயர்வு தாழ்வு காணும் கயமைத்தனம் கொண்ட சில கீழ்களும், குறைவான எண்ணிக்கையிலிருந்தாலும் அங்கங்கே கூட்டமாகச் சேர்ந்து வாழும்... இதுகளிடத்தில் ஐயன் உரைத்த ஒழுக்கமுடைமை என்பது அடியோடு இருக்காது... எப்போதாவது சிறிது காணப்பெற்றால் அது அடி விழும், தண்டனை கிடைக்கும் என்ற அச்சத்தினாலோ அல்லது பொருள் முதலிய எதுவும் கிடைக்கும் என்ற ஆசையினாலோ தான் இருக்குமேயன்றி, அதன் இயல்பாக இருக்காது... || 1078. சொல்லப் பயன்படுவர் சான்றோர் கரும்புபோல் கொல்லப் பயன்படும் கீழ் - சான்றோரிடம் சொல்லினாலே நல்லது செய்வார்கள்; கீழ்களை நையப் புடைத்தால் தான் பயனைப் பெற முடியும்...

1079. உடுப்பதூஉம் உண்பதூஉம் காணின் பிறர்மேல் வடுக்காண வற்றாகும் கீழ் - பொறாமைக்காரர்களுக்கு மற்றவர் எவரும் பொன், பொருள், நிலம், வாகனம் என வசதியாக வாழ்வது பிடிக்காது... ஆனால் கீழுக்கு அதுவும் தேவையில்லை; நல்லதொரு துணியை உடுத்தி, வெறுஞ்சோற்றை உண்பதைக் காண்பதே போதுமானதாம்; உடனே குறை கூறத் தொடங்கி விடுமாம்...! உடுத்திய துணி உடற் புண்ணை மறைப்பதற்காக இருக்கலாம், அதே போல் உண்டது உணவாக இல்லாமல் மருந்தாகவும் இருக்கலாம், அதைக் காணுகின்ற கீழ், அவற்றை உணவும் உடையும் என்றே எண்ணி மனம் பொறுக்காதாம்... இக்கீழ்களைப் பொறாமைக்காரர்களுக்கும் கீழ் என்பதே "உடுப்பதூஉம் உண்பதூஉம் காணின்" ஆனால் எதற்கும் உதவாத இக்கீழிடத்தில் ஒரு வலிமை உண்டு... ஒருவர்மீது மற்றவரிடம் குறைகூறி, அதை அவர் நம்பும்படி செய்துவிடுவது...! அதாவது ஒருவர்மீது குறை கூறுவதற்கு அவர்கள் உண்மையாகவே தவறு செய்திருக்கவேண்டும் என்பதில்லை தானே...? ஏனெனில், பழிபாவங்களுக்கு அஞ்சி நடக்கவேண்டுமே என்ற கவலை எப்போதும் கீழுக்கு இருக்காது... அதனால் இல்லாத குறையைக்கூடக் கற்பனை செய்து கூறி, எவரையும் நம்பவைத்துவிடுவது கீழின் வலிமை...! இதே போல் இல்லாத, நடக்கவே முடியாத நிறைகளையும், நம்பவைத்துவிடுவது மதவாத பாசிச கீழ்களின் வலிமை...! எப்பேர்ப்பட்ட வலிமை பார்த்தீர்களா நண்பர்களே...? என்னது, இது தான் நம் நாட்டில் நடக்கிறதா...?! சரி இதுவே "பிறர்மேல் வடுக்காண வற்றாகும் கீழ்"
திருக்குறள் எழுத்துக்களின் கணக்கியல் படி "கீழ்" என்ற சொல் பத்து (10) இடங்களில் வருகிறது... அவற்றில் இழி குணம் என்ற பொருளில் இங்கு வந்த சொற்கள் நான்கிலும், எந்த ஒன்றையும் மக்களின் வேறு எந்தக் குணத்திற்கும் வழங்காமல், கயமைக் குணத்திற்கே ஐயன் கட்டமைத்து உள்ளார்... அறத்துப்பாலில் சொல்லாமல், பொருட்பாலிலும்கூட முதலில் இடையிற் கூறாமல் கடைசி அதிகாரமாகவே கூறியிருப்பதிலிருந்து, கயவர்களை ஐயன் கீழ்களுக்கெல்லாம் மிக்க கீழாகக் கருதியிருக்கிறார்... கயமைக் குணம் உடையவரைத் தவிர்க்க கற்றுக் கொள்ளுவதும், நம் உள்ளத்திலேயே அக் குணம் தோன்றுவதாக நமக்குத் தோன்றினால் வெட்கித் தலைகுனிந்து உடனே மாற்றிக் கொள்வதே நல்ல பண்பாகும்... பகா வழி பதிவின் குறளும், மனக்கண்ணில் ஐயன் பேசப் போகும் குறளின் படியும், எனது வாழ்வில் நடந்த இரண்டை மட்டும் சொல்கிறேன்...

உறவினர்களின் தொடர்புகளை 'இகல்' அதிகார 10 குறள்களும் மேம்படுத்தும்... நண்பர்களுக்கு, நட்பு, நட்பாராய்தல், பழைமை, தீ நட்பு, கூடாநட்பு என 50 குறள்களும் வழிகாட்டும்... சரி, அனைத்து மக்களுக்கும் பொதுவான நாட்டின் தலைவர்கள் வேறு... இறைமாட்சி உள்ள செங்கோலாட்சி செய்ய வேண்டியவன், கொடுங்கோலனாக மாறும்போதும் கொண்டாடிக் கொண்டு இருப்பவன் அடிமை... கொடுங்கோலன் வெங்கோலனாக ஆனபின்பும் அதே மனநிலையுடன் மகிழ்ந்தால், அது கயவன் என்பதை விடக் கீழ்களுக்கெல்லாம் மிக்க கீழ்... இதனால் இந்த கீழுக்கு, நல்லவற்றைக் காண்பதில் கண்கள் குருடாகி விடுவதால் பாராட்டும் குணமும் அற்றுப் போய், ஒப்பீடு எனும் குணத்தால் ஏதேனும் குற்றம் சொல்லவே அலைந்து திரிந்து கொண்டிருக்கும்... இது கீழ் செல்லும் வழி... மேலும் பல்வேறு பொய்யான தரவுகளையும் சான்றுகளையும் வைத்துக் கொண்டு திரியும் இதுபோலுள்ள கீழிடம், அறிவுரையோ ஆலோசனையோ என்று தெளிவாக விளக்கிச் சொல்லச் செல்பவன், கீழின் தொற்று பரவி, தானும் கீழ் ஆகி விடுவான்... இதைத் தவிர்க்கச் செல்ல வேண்டும் → பகா வழி...! பதிவை வாசிக்காதவர்கள் இணைப்பைச் சொடுக்கி குறளும் விளக்கமும் அறியலாம்... சரி, ஐயன் மனம் நொந்து இயற்றிய அதிகாரங்கள் பேதைமை, புல்லறிவாண்மை, கயமை... இதோ மனக்கண்ணில் அவரின் உள்ளக்கொதிப்பு :

"ஒவ்வொரு மனிதனும் அறத்துடனும் அன்பாகவும் பண்பாகவும் வையத்துள் வாழ்வாங்கு வாழ வேண்டும் என்று நினைத்து ஆயிரத்தெழுபது (1070) குறள்களை எழுதினேன், அனைத்தையும் கற்றபின்னும், கற்றவன் யாதொரு பண்பிலும் திருந்தாமல் இருக்கக் கண்டேன்... 823. பலநல்ல கற்றக் கடைத்து மனநல்லர் ஆகுதல் மாணார்க் கரிது என்னும் வேண்டாக் கருத்திற்கு விழைந்த இலக்கானேன்... இவன் மனிதனல்ல, விலங்கல்ல, மரமுமல்ல; கயமை என்னும் புத்தம்புதிய பிறவி எடுத்தவன்... பிறரை வஞ்சித்து வாழவே மக்களுடம்பு போர்த்து வந்த போலியன்... பேதையிற் பேதை... புல்லறிவாளனுக்கும் கீழான கீழ்..."

© பாண்டித் தேவன் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் C.N. பாண்டுரங்கன், மீனாட்சி சுப்பிரமணியம் சந்திரபாபு @ 1959⟫ சொல்லுறதைச் சொல்லிப்புட்டேன் - செய்யுறதைச் செஞ்சுடுங்க... நல்லதுன்னா கேட்டுக்குங்க - கெட்டதுன்னா விட்டுடுங்க... முன்னாலே வந்தவங்க என்னென்னமோ சொன்னாங்க, மூளையிலே ஏறுமுன்னு முயற்சியும் செஞ்சாங்க...2 ஒண்ணுமே நடக்காம உள்ளம் நொந்து செத்தாங்க... என்னாலும் ஆகாதுன்னு எனக்கும் தெரியுமுங்க... முடியிருந்தும் மொட்டைகளாய், மூச்சிருந்தும் கட்டைகளாய், விழியிருந்தும் பொட்டைகளாய், விழுந்துகிடக்கப் போறீங்களா...? முறையைத் தெரிஞ்சு நடந்து, பழைய நினைப்பை மறந்து, உலகம் போற பாதையிலே உள்ளம் தெளிஞ்சி வாரீங்களா...?2 சித்தர்களும் யோகிகளும், சிந்தனையில் ஞானிகளும், புத்தரோடு ஏசுவும், உத்தமர் காந்தியும் - எத்தனையோ உண்மைகளை எழுதி எழுதி வச்சாங்க, எல்லாந்தான் படிச்சீங்க என்னபண்ணி கிழிச்சீங்க...?2

புதிய பதிவுகளை பெறுதல் :


தொடர்புடைய எண்ணங்களின் வண்ணங்கள் சில :


முகநூல் மூலம் கருத்துக்களை பகிர :

கருத்துகள்



  1. வள்ளுவரும் அழகாக எழுதி சென்று இருக்கிறார் அதன் அதனை பலரும் எல்லோரும் புரியும்படியாக விளக்கவுரையும் எழுதிவிட்டார்கள் நீங்களும் இந்த காலத்திற்கு ஏற்ப மிக அழகாக எழுதி சொல்லி வருகிறீர்கள் ஆனால் அதனை புரிந்து கொண்டு நடப்பவர்கள்தான் இல்லை

    பதிலளிநீக்கு
  2. பதிவும் , பாடலும் அருமை.



    ஐயன் மனக்கொதிப்புடன் சொன்னது சரிதான்.அவனை எதனுடனும் ஒப்பிட முடியாதுதான்,

    கயமை புத்தம் புது பிறவி எடுத்தவன்.

    பதிலளிநீக்கு
  3. கீழ் என்ற சொல் ஈறாக வந்த குறள் விளக்கம் அருமை.
    கீழ் என்ற சொல் பத்து இடங்களில் வருவதாகவும் மேலும் தங்கள் ஆய்வினைத் தொடருங்கள்.
    நாமும் தொடர்ந்து படிக்க வருவோம்

    பதிலளிநீக்கு
  4. இழி குணமும், கயமை குணமும் கொண்டவர்க்கு ஐயன் குறிப்பிடும் பெயர் கீழ் என்பதனை இன்றுதான் தங்களால் அறிந்தேன்
    நன்றி ஐயா

    பதிலளிநீக்கு
  5. கயவன் என்று சொல்லும் போது மனிதன் என்றாகிவிடும் என்பதால் கீழ் என்று இரண்டெழுத்தில் அஃறிணைப்படுத்திச் சொல்லியது அதனினும் தாழ்ந்த நிலை என்ற பொருள் பொதிந்து வருகிறது கயமை/கயவன் என்பது ...புதிய விளக்கம் அறிய முடிகிறது டிடி உங்களின் இப்பதிவிலிருந்து.

    நல்ல விளக்கம், பாடல்களும் வழக்கம் போது அருமை

    கீதா

    பதிலளிநீக்கு
  6. வழமை போல சிறப்பாக எழுதி இருக்கிறீர்கள் தனபாலன். பாராட்டுகளும் வாழ்த்துகளும்.

    பதிலளிநீக்கு

  7. கீழ் என்ற வார்த்தை எவ்வளவு கீழானது என்று அறிந்தேன் ஜி.

    பதிலளிநீக்கு
  8. அருமை யான இரு சொற்களின் பொருள் அறிந்தேன். தமிழனாக பெருமை கொள்ள வைக்கும் பதிவு

    பதிலளிநீக்கு
  9. தமிழ் மொழிக்குள்ள மற்றொரு தனிச்சிறப்பு என்னவென்றால் ஒவ்வொரு எழுத்துக்கும் ஒவ்வொரு தனிபட்ட பொருள் உண்டு. இது தமிழுக்கு மட்டுமேயுள்ள தனிச்சிறப்பு.

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

நகுதற் பொருட்டன்று நட்டல் மிகுதிக்கண்
மேற்சென்று இடித்தற் பொருட்டு. (குறள் 784)

நட்புச் செய்துகொள்வது நண்பரோடு சிரித்து மகிழ்வதற்காக மட்டும் அல்ல. மிகுதியாகத் தவறு செய்யும்போது, அவரைக் கடிந்து திருத்துவதற்கே ஆகும்.