🏠 வணக்கம் காப்பகம் நன்றி

தேடல் 🔎



புதிய பதிவுகளை பெற ✉



கயமை...

அனைவருக்கும் வணக்கம்... நூற்றியெட்டு (108) மருத்துவ அவசர ஊர்தி (Ambulance) - இன்று இதன் ஒலி கேட்டாலே மனதில் பதட்டமும் வேண்டுதலும் இன்ன பலவும் தோன்றுகின்றன... திருக்குறள் அதிகாரங்களை மறைமொழியாக பேசின ஒரு காலத்தில், "நூற்றியெட்டை மறவாதீர்கள், எப்போதும் விழிப்பாயிருங்கள், உங்கள் உள்ளத்தில் அவற்றை நுழைய விடாதீர்கள்... உங்கள் உள்ளத்தில் மட்டுமல்ல, வீட்டில், வீதியில், நாட்டில், நகரில் உள்ள எவ்விடத்திலுமே இவற்றை நுழையவிடாதீர்கள்... எங்கேனும் கண்டு விட்டால் உடனே விலகுங்கள்..." என்று பேசியுள்ளார்கள்... அந்த 108 என்ன...?


காமத்துப்பாலுக்கு முன் பொருட்பால் இறுதியில் 'கயமை' என்று நூற்றியெட்டாவது (108) அதிகாரமாக முடிகிறது... இதற்கு முந்தைய 1070 குறள்களையும் கற்ற பின்னும் அறமும், ஒழுக்கமும், இன்னபிற நற்பண்புகளையும் கைவரப் பெறாதவனை இகழ்வாராகி, 'கயமை' என்னும் இழி தலைப்புத் தாங்கி பத்து குறள்கள் உள்ளதென்றால் காரணம் என்ன...? அவற்றில் சில :

அவரன்ன ஒப்பாரி யாங்கண்ட தில் - வடிவத்தால் மக்களைப் போலவே காட்சிதருவதில் மிகச்சிறந்தவர் கயவர்... திருவுடையர் நெஞ்சத்து அவலம் இலர் - மனத்தில் எதைப்பற்றியும் கவலை கொள்ளாத கயவர், நெறியறிந்த மக்களைக் காட்டிலும் சிறந்தவர் போல்வர்... அவருந்தாம் மேவன செய்தொழுக லான் - விருப்பம் போல் இயங்குவதால் கயவரும் தேவரும் நிகரானவர்கள்... தாம் கேட்ட மறைபிறர்க்கு உய்த்துரைக்க லான் - தாம் கேட்ட மறைபொருளை ஊரறிய செய்வதால் கயவர், அறையும் தோற்பறைக்கு ஒப்பாவர்... கொடிறுடைக்கும் கூன்கையர் அல்லா தவர்க்கு - கயவர் தம்மை தாக்குவோருக்கன்றி பிறர்க்கு ஒன்றும் உதவ மாட்டார்... உற்றக்கால் விற்றற்கு உரியர் விரைந்து - தன்னலம் கருதி விரைந்து தம்மைப் பிறர்க்கு விற்றே அடிமையாவர் கயவர்...

கயவர் வேறு, தீயவர் வேறு என்பது ஐயன் கருத்து... தீயோர்கள், நல்லதோ கெட்டதோ ஒன்றைச் செய்யும் ஆற்றல் படைத்தவர்கள்... கயவர்களுக்கு அந்த ஆற்றலும் இருக்காது... அவர்கள் தீமையைச் செய்ய எண்ணுவார்கள், சொல்வார்கள், தீமை செயலை செய்ய வைத்து விட்டு தீயோர்கள் எனவும் சொல்வார்கள், தீயோர்க்கும் கீழானவர்கள்... இவ்வுண்மையைத் தான் கூறினார்... இவ்வாறு மேலே மீதம் உள்ள 5 குறள்களில் வரும் கயவர்களை அறியலாம்... தூய்மையான, தெளிவடைந்த, கயமைத்தனம் இல்லாமல் அவரவர் மனசாட்சியை உட்படுத்தி, உறவினர்கள், நண்பர்கள், அதிகாரிகள், நாட்டின் தலைவர்கள் என யாராகவும் இருந்தாலும் கண்டறியலாம்... இவை ஒரு புறம் இருக்கட்டும்...

மேற்கண்ட குறள்களின் விளக்கங்களைப் பலரும் நகைச்சுவைக்குப் பயன்படுத்திச் சொல்வார்கள்; கேட்பவர்களும் வெடிச்சிரிப்பு சிரித்து கை தட்டுவார்கள்...! தீயவொரு மனிதன் திருந்த வேண்டும் என்று இடித்துரைக்கும் போது, அவன் சிரித்தாலும் அவன் பக்கத்தார் சிரித்தாலும் என்ன ஆவோம்...? அடக்க முடியாத கோபமோ அல்லது "இந்த மடவனைத் திருத்த முன் வந்தோமே" என்று நம்முள் வருத்தமும் நாணமும் கொள்வோம்... உலகின் ஒரே அறநூலான திருக்குறளைப் படைத்த ஐயனுக்கு...? ஒரு நிமிடம் இதே எண்ணத்துடன் → இலக்கியச் செழுமை வாய்ந்த, பொருள் நயம் மிக்க, கற்பனைக் களஞ்சியமாகத் திகழ்வது காமத்துப்பால்... அவற்றில் உள்ள திருக்குறள் ஒவ்வொன்றும் பேச்சுபோல யாரேனும் ஒருவர் கூற்றாக உள்ளது... அதில் காதலன் உரைக்கேட்டு சொல்லிச் சிரித்தால் கேட்பவருக்கும் சிரிப்பு வரும்... ஏனெனில் காமத்துப்பால் குறள்கள் முழுவதும் காட்சிகளாக நம் கண் முன்னும் விரியும் ஒரு நாடகம்... ஆனால், அறம் பொருட்பால்களின் எல்லை அதிகாரமாகிய கயமைத் தலைப்பே ஐயனின் மனக்கொதிப்பு எல்லைக்கோர் அறிகுறி... அதில் பத்து குறள்களும் ஐயன் நெஞ்சில் வெடித்த எரிமலை...

செல்வம் உடையவனுக்கு அவனுக்குப் பின்னும் அச்செல்வம் பயன்படலாம் என்பதால், செல்வம் உடையானோடு மாய்வதில்லை... கல்வியறிவுடையவன் மாய்ந்தால் அவனோடு கற்றவை அனைத்தும் ஒழிந்து போகும்... கற்ற அறிவுகளை வாழுங்காலத்தே பயன்படுத்தியாக வேண்டும்... இது பொருளுடைமைக்கும் கல்வியறிவுடைமைக்கும் உள்ள ஒரு பெரும் வேறுபாடு... அதாவது மனிதனின் புறவுடைமைக்கும் அகவுடைமைக்கும் இடைப்பட்ட வேற்றுமை எனலாம்... ஆனால் செல்வத்தின் பயன், தான் அனுபவித்தாலும் பிறர்க்குக் கொடுத்தல் சிறந்தது... கொடுக்க கொடுக்கத் தான் பெற்ற செல்வத்திற்கே மதிப்பு வரும்... கல்வியறிவுடையவன் உரைத்தலினும் ஒழுகல் சிறந்தது... | 391. கற்க கசடறக் கற்பவை கற்றபின் நிற்க அதற்குத் தக | கற்றவர்களின் மதிப்பு அக்கல்வியறிவுகளைத் தன் வாழ்வில் முதலில் செயலாக்கம் செய்ய வேண்டும்... அதன்பின் பகிர்ந்தால் மேலும் புதியன கற்பது தொடரும்... மேலும் அக்கல்வியறிவு அழியாமல் விரிவடைந்து பரவித் தொடரவும் செய்யும்... திருக்குறளில் அதிகமாக 25 அதிகாரங்களைக் கொண்ட இயல், அரசு இயல்... அதிலுள்ள அரசியல் எவ்வித அரசியலுக்கும் எக்காலத்திற்கும் பொருந்தும்... எடுத்துக்காட்டாக :-

திருக்குறள் எழுத்துக்களின் கணக்கியல் மூலம் தான் இவறல் என்ற சொல்லையும் அறிந்தேன்... ஒரு குறளின் ஏழு சீர்களையும் ஆய்வு செய்து எழுதிய முதல் பதிவு... இதிலொரு ஒரு சிறப்பு என்னவென்றால், அதன் அனைத்து விளக்கங்களும் நம் வெங்கோலனுக்கு பொருந்துகிறது...! அவனைச் சூழும் கூட்டத்தையும் ஐயன் சொல்லியிருப்பது தான் வியப்பின் மேல் வியப்பு...! வெங்கோலன் cares fund - மக்களுக்கு உதவுமா...? இல்லையா...? என்பது தெரியாது... அதைப்பற்றிய கணக்கியல் யாரும் அறியவே முடியாது என்பது தான் கயமைத்தனம்...! அப்படியில்லை என்பவர்கள் 108 அல்லது அடிமைகள்... நல்லவேளை இன்றைக்கு உலகமே புரிந்து கொண்டு, வேறு வகையில் உதவுவதில் மகிழ்வே என்றாலும்...

பாடுபட்டுகாத்த நாடு கெட்டுப் போகுது - கேடுகெட்ட கும்பலாலே - இங்க சூடுபட்ட மடமை கூடுகட்டி வாழுது மூடர்களின் தலைகளிலே - பெரும் சூடுபட்ட மடமை கூடுகட்டி வாழுது மூடர்களின் தலைகளிலே - வேடிக்கையான பல வித்தையைக் கண்டு பயந்து - வேதனையில் மாட்டிக்கிடும் வீணராலே2 - வாடிக்கையாய் நடக்கும் வஞ்சகச் செயல்களுக்கு - வாழ இடமிருக்கு மண் மேலே - இன்னும் வாழ இடமிருக்கு மண் மேலே - நாம பாடுபட்டகாத்த நாடு கெட்டுப் போகுது - கேடுகெட்ட கும்பலாலே - இங்க சூடுபட்ட மடமை கூடுகட்டி வாழுது மூடர்களின் தலைகளிலே... © விக்கிரமாதித்தன் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் S.ராஜேஸ்வர ராவ் 🎤 T.M.சௌந்தரராஜன் @ 1962 ⟫


மனக்கண்ணில் ஐயன் :- "ஒவ்வொரு மனிதனும் அறத்துடனும் அன்பாகவும் பண்பாகவும் வையத்துள் வாழ்வாங்கு வாழ வேண்டுமென ஆயிரத்தெழுபது (1070) குறள்களை எழுதினேன், அனைத்தையும் கற்றபின்னும், கற்றவன் யாதொரு பண்பிலும் திருந்தாமல் இருக்கக் கண்டேன்..." மேலும் அவர் பேசியதையும், கயவர்களை இரண்டே எழுத்தில் குறிப்பிட்டு, ("அது" என்ன...?) அவர் நெஞ்சு கொதிக்கச் சொல்வதையும் அடுத்த பதிவில் தொடர்கிறேன்... நன்றி...

புதிய பதிவுகளை பெறுதல் :


தொடர்புடைய எண்ணங்களின் வண்ணங்கள் சில :


முகநூல் மூலம் கருத்துக்களை பகிர :

கருத்துகள்

  1. அன்பு தனபாலனுக்கு
    இனிய காலை வணக்கம். என்றும் நலமுடன் இருங்கள்.

    அரசியலில் நுழைந்தவர்கள் அனைவரும் தாங்கள்
    பலனடையவே பார்க்கிறார்கள். அவர்கள் குறள் வழி நடந்த
    காலம் சென்று வருடங்கள் ஆகிறது.

    கோடிக்கணக்கில் பணத்தில் உருளுபவர்கள்
    பாவம் ஏழையையா கவனிக்கப் போகிறார்கள்.

    பட்டுக்கோட்டையார் பாடல் எப்பொழுதும் போல் இனிமை.
    நன்றி மா.

    பதிலளிநீக்கு
  2. 108 தெருவில் போகும் ஒலி கேட்டாலே நீங்கள் சொல்வது போல் வாய் பிரார்த்திக்க ஆரம்பித்து விடும். இறைவா இந்த வாகனத்தில் போகிறவர்கள் நலமாக இருக்க வேண்டும் இறைவா என்று.

    திருக்குறள் படிக்க 13 நாள் போதும் என்று திரு கி.ஆ.பெ. விசுவநாதம் அவர்கள் பேசியது படித்தேன். அருமையான பதிவு மறைமொழி பதிவு.
    நான் டிசம்பர் மாதம் இணையம் வரவில்லை அதனால் படிக்கவில்லை இப்போது படித்தேன்.

    பதிலளிநீக்கு
  3. கயவருக்கும், தீயவருக்கும் உள்ள வேற்றுமைகள் படித்தேன்.
    தீயோர்க்கும் கீழானவர்கள் கயவர் என்று அய்யன் சொன்னதை அருமையாக சொல்லி விட்டீர்கள்.
    பொருளுடைமைக்கும், கல்வியறிவுடைமைக்கும் உள்ள ஒரு பெரும் வேறு பாடு

    புறவுடமைக்கும், அகவுடைமைக்கும் இடைபட்ட வேற்றுமை எல்லாம் அருமையாக தமிழ் ஆசிரியர் போல இன்னும் விளக்கமாய் எடுத்து சொல்லிய பதிவு அருமை.
    பகிர்ந்த பாடல் அருமை.

    சேமித்து வைத்து கொள்ளகூடிய பதிவு.
    அன்பாகவும், பண்பாகவும் வையத்தில் வாழ்வாங்கு வாங்க திருக்குறள் நாள்தோறும் படிக்கவைக்க சிரந்த பதிவு.
    வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  4. வழக்கம்போலவே அருமையான பதிவு.  பொருட்செல்வம் எடுக்க  எடுக்கக் குறையும்.  அறிவுச்செல்வமோ எடுக்க எடுக்க ஊறி அதிகமாகும்.

    பதிலளிநீக்கு
  5. ஒருவன் அயோக்கியன் என்று தெரிந்தும் அவனைப் புனிதப்படுத்த நினைப்பவர்கள் ஆகச் சிறந்த அயோக்கியர்களே...//

    இதுதான் காலங்காலமாக நிகழ்கிறது பொருத்தமான குறள் விளக்கங்களோடு பதிவு அருமை.

    பதிலளிநீக்கு
  6. இறுதியில் கலரில் சொன்ன வரிகள் உண்மையே....ஜாக்கிரதை இந்த அயோக்கியர்கள் உங்களது நட்பு வட்டத்தில் இருக்க கூடும்.. அவர்கள் உங்களிடம் சொல்லுவது தன்பாலன் நீங்கள் ரொம்ப நல்லவர். நீங்கள் தவறான தகவல்களை படித்து குழம்பிக் கொள்கிறீர்கள் அதிலிருந்து நீங்கள் வெளியே வந்தால் அறிவீர்கள் புறிவீர்கள் என்று சொல்லுவார்கள்

    பதிலளிநீக்கு
  7. கயவர் தீயவர் வேறுபாட்டை வள்ளுவன் மூலம் உணர்த்தியது சிறப்பு

    பதிலளிநீக்கு
  8. சிறப்பான பதிவு. விளக்கங்களும் நன்று.

    பதிலளிநீக்கு
  9. 1077 கயவர் தம்மை தாக்குவோருக்கன்றி பிறர்க்கு உதவ மாட்டார். என்று உள்ளது. தாங்குவோர் என்றிருக்க வேண்டும் என நினைக்கிறேன். ஆனால் சாத்தான் வேதம் ஓதுகிறது. பொதுக்கூட்டங்களில் திருக்குறளை சுட்டிக் காட்டுகிறது. 
    Jayakumar

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கயவரைத் தாங்குவோர் (பாராட்டுவோர்) என்றால் அவரும் கயவராகத் தான் இருக்க முடியும்... ஈகைக் குணமில்லாத கயவர்கள், தன்னிடம் வந்து அழுது கெஞ்சி உதவி கோரும் எவர்க்கும், தனது எச்சில் கையைக்கூட உதற மாட்டாதாம்... ஆனால், தன்னையே அடித்து உதைக்கவரும் முரடர்கட்கு நிறையக் கொடுத்து உதவுமாம்... ஏனிந்த அஃறிணை (?) உட்பட, இடையில் விட்டுப்போன குறள்களின் விளக்கத்தை அடுத்த பதிவில் அறியும்போது, தெரிந்து விடும் ஐயா... நன்றி...

      நீக்கு
  10. கயவர் தீயவர் வேறுபாடு அறிந்தேன் ஐயா
    நன்றி

    பதிலளிநீக்கு
  11. அயோக்கியனை யோக்கியனாக வழிமொழிபவனே ஆகச்சிறந்த அயோக்கியன்... ஆகா அருமை ...

    பதிலளிநீக்கு
  12. கயமை பற்றிய குறட்பாக்கள் உங்கள் விளக்கத்தில் மனதில் ஆழமாக பதிகின்றன

    பதிலளிநீக்கு
  13. கயமை குறித்த குரல் விளக்கம் அருமை. ரகசியம் காக்காமல் ஊரறிய கூறி மகிழும் எவருமே கயவர் எனும் விளக்கமும் அருமை. கயவர் வேறு கள்வர் வேறு என தெளிவு படுத்தியமை சிறப்பு. கல்விச்செல்வத்தை பயன்படுத்தாமல் போனால் அதனால் எந்த பயனும் பிற்காலத்தில் ஏற்படாது எவருக்கும் பயன்படாது.. உண்மைதான்.108 அவசரமாக அறிந்துகொள்ளவேண்டிய ஒன்றுதான்.

    பதிலளிநீக்கு
  14. கயவருக்கும் தீயவருக்கும் உள்ள வேற்றுமைகளை மிக அழகாக விளக்கியிருக்கிறீர்கள்! முழுப்பதிவுமே மிக அருமை!!
    தொடர்ந்து நல்லதை சொல்லி வரும் உங்களின் நல்ல மனதுக்கு அன்பான வாழ்த்துக்கள்!!

    பதிலளிநீக்கு
  15. அரசியல்வியாதிகளை நத்தி பிழைப்பவர்களை நன்றாய் சொன்னீர்

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

நகுதற் பொருட்டன்று நட்டல் மிகுதிக்கண்
மேற்சென்று இடித்தற் பொருட்டு. (குறள் 784)

நட்புச் செய்துகொள்வது நண்பரோடு சிரித்து மகிழ்வதற்காக மட்டும் அல்ல. மிகுதியாகத் தவறு செய்யும்போது, அவரைக் கடிந்து திருத்துவதற்கே ஆகும்.