🏠 வணக்கம் காப்பகம் நன்றி

தேடல் 🔎



புதிய பதிவுகளை பெற ✉



தலைப்புச் செய்தி...

இந்தப்பதிவிற்கு வைத்திருக்க வேண்டிய தலைப்பு //2020 வல்லரசு ஒரு கனவா ? (பகுதி 2)// இதுவும் இது செய்தி...!

நாடு எனும் முந்தைய பதிவில் சொன்னது போல், "ஒரு நாட்டின் அரசனைக் கடவுளுக்குச் சமானம் என்கிறார் ஐயன்" என்பதைக் குறிப்பிட்டு விட்டுத் தொடர்கிறேன்... முதல் பகுதியில் குறள் அதிகாரத்தைக் கூறிய திரு. வே. நடனசபாபதி ஐயா அவர்களுக்கும், திருமதி. கோமதி அரசு அம்மா அவர்களுக்கும் நன்றி...

பதிவில் வரும் அதனால் என்பதை உலகப்பொதுமறையில் ஆராய்ந்தால், அதனால் இவ்வாறு இருக்க வேண்டும் என்றுள்ள, கீழுள்ள ↓ அதிகாரத்தை வாசிக்க வேண்டாம்... ஏனென்றால்...



"குறள்களையும் எழுதுங்கள்" என்று கூறிய நண்பர்கள் விருப்பப்படி, 'அரசிற்கு' சொன்னதின் (381-385) முதல் 2020 வல்லரசு ஒரு கனவா...? பதிவிலும் இணைத்து விட்டேன் என்பது கூடுதல் செய்தி...! சரி, இந்தப்பதிவிலும் குறள்கள் எங்கே உள்ளதென்றால், ஒவ்வொரு அதனால் கீழுள்ள [] கேள்விக்குறிக்கு மேல் சுட்டியைக் கொண்டு சென்றால் வாசிக்கலாம்... அதைச் சொடுக்கினால் கேட்கலாம்...

விருப்பமுள்ளவர்கள் அனைவரும் ஆய்வு செய்ய வேண்டிய குறிப்புகள் சில :-
ஔவையார் தனிப்பாடல் திரட்டு 32 ∫ பட்டினத்தார் – திருத்தில்லை 7, திருவேகம்பமாலை 15, பொது 40 ∫ மெய்கண்ட தேவர் – சிவஞானபோதம் – சூத்திரங்கள் 5,7,11 ∫ திருவாசகம் – திருச்சதகம் 12, பிடித்தபத்து 3 ∫ திருமந்திரம் – உபதேசம் 142, கேள்வி கேட்டமைதல் 301, கால சக்கரம் 766, திருவடி பேறு 1598, இதோபதேசம் 2103, ஞானகுரு தரிசனம் 2658, மோன சமாதி 2937 ∫
அனைத்திற்கும் மேலாக உதவி செய்தது நம் தாத்தாவின் குறள்கள் சில:-

திருக்குறள் அதிகாரங்கள் – கடவுள் வாழ்த்து 10, புலால் மறுத்தல் 259, ஊழ் 373, கல்வி 398, கேள்வி 411-420

அரசனுக்கு :- நீதி வேண்டி யார் வந்தாலும், காண்பதற்கு ஆடம்பரத்துடன் பரோபகாரத்துடன் சர்வாதிகாரியாக ஏளனத்துடன் நடந்து கொள்வதும், அகங்காரத்துடன் மிதமிஞ்சிய இறுமாப்புடன், சகலமும் தானென்று பேசும் பண்பாடு உடைய மடையனின் ஆட்சிப் பரப்பு விரைவில் சுருங்குவதோடு, வாழத் தகுதியற்ற நிலம் என இந்த உலகமே தூற்றும்...
அதனால்...
காட்சிக் கெளியன் கடுஞ்சொல்லன் அல்லனேல்
மீக்கூறும் மன்னன் நிலம் 386

காண்பதற்கு எளியனாய், கண்டபோது இன்சொல் தருபவனாய் உள்ள அரசனே, உலகோரால் போற்றப்படுவான்...


வாயைத் திறந்து பேசினாலே, பிரபஞ்சமே கொதித்து அழிந்து போகும் அளவிற்குப் பொய்யை மட்டும் சொல்லி, மக்களை ஏமாற்றியும் அடிமையாக்கி நாசமாக்கவும், மக்களைக் காப்பது போலக் காவு வாங்கும் ஆற்றல் பெற்ற கயவனுக்கு, எண்ணிய எல்லாவற்றையும் இந்த உலகமே எதிர்க்கும்...
அதனால்...
இன்சொலால் ஈத்தளிக்க வல்லார்க்குத் தன்சொலால்
தான்கண் டனைத்திவ் வுலகு 387

இன்சொல்லுடன், மக்கள் தேவை நிறைவேற்றும் ஒருவனுக்கு, உலகம் தன்சொல் வழிபட்டு நிற்கும்...


நீதி நெறிமுறைகளை வழங்காமல், நாட்டை பல துண்டுகளாகப் பிரித்துப் பாழாக்கி, மக்களைப் பட்டினியால் சாக வைத்தும், மேலும் பல வகையில் துன்புறுத்தும் ஈவு இரக்கம் இல்லா மூடன், பிறப்பில் ஒரு மனித உயிர் என்றாலும், மக்களின் பிடித்த பீடை என இழிவு பட்டு தானே அழிந்து போவான்...
அதனால்...
முறைசெய்து காப்பாற்றும் மன்னவன் மக்கட்கு
இறையென்று வைக்கப் படும் 388

குறை தீர்த்து, பசி இல்லாமல் மக்களைக் காக்கும் மன்னன், கடவுளுக்கு சமானம்...


காது குடையும் அளவிற்கு அனுபவம் வாய்ந்த பெரியோர்களின் அறிவுரை ஆலோசனைகளைக் கேட்காமல் புறந்தள்ளி விட்டு, தனது அரசு செய்த குற்றங்களைத் திருத்தப் பொறுமை இல்லாமல், அவற்றின் தீமையை ஊக்குவித்து மேலும் தவறு செய்யும் அயோக்கியனுக்கு, இந்த உலகமே பொறுமை இழந்து வெகுண்டு எழும்...
அதனால்...
செவிகைப்பச் சொற்பொறுக்கும் பண்புடை வேந்தன்
கவிகைக்கீழ்த் தங்கும் உலகு 389

அறிவுடையார் நன்மொழிகள் தனக்கு வெறுப்பாயினும், பொறுத்து ஏற்றால், குடிமக்கள் அவர் ஆட்சியை ஏற்பர்...


மக்களின் அமைதியான வாழ்வின் அழிவிற்கு வேண்டியதைத் தாராளமாக வழங்குவது, துளி கூட ஈவு இரக்கம் இல்லாமல் எப்போதும் ஆணவத்துடனும் அகம்பாவத்துடனும் பேசுவது, அநீதி மேலோங்கும்படி சர்வாதிகாரத்தை யோசிக்காமல் அவசர அவசரமாகத் தொடர்வது, மக்களை எல்லாவற்றிலும் நம்ப வைத்து ஏமாற்றி நட்டாற்றில் விடுவது - இந்த நான்கும் உடையவன், பிரகாசிக்கும் ஒளி படைத்த அரசர்க்கெல்லாம், திரி அணைந்த விளக்கைப் போல் விளங்கும் கொடுங்கோலன்...
அதனால்...
கொடையளி செங்கோல் குடியோம்பல் நான்கும்
உடையானாம் வேந்தர்க் கொளி 390

கொடுத்தலும், அன்பும், நீதியும், காத்தலும் ஆகிய பண்புடைய அரசனே, வேந்தருள் விளக்கு ஆவான்...


நல்லதொரு பாடலை கேட்போமா...?

© தங்க ரத்தினம் அ.மருதகாசி K.V.மகாதேவன் P.சுசிலா @ 1960 ⟫

இன்னொருவர் தயவெதற்கு - இந்நாட்டில் வாழ்வதற்கு...? இல்லையென்ற குறையும் இங்கே - இனிமேலும் ஏன் நமக்கு...? | கன்னித்தாய் காவேரி எந்நாளும் துணையிருக்க, கைகளிலே உழைப்பதற்கு பலமிருக்க திறமிருக்க... பொன் விளையும் வளமுடைய கண்ணான நிலமிருக்க, புகழுடனே உலகையாண்ட இனம் என்ற பெயரிருக்க... | எண்ணத்தால் இமயம்போல் உயர்ந்துவிட்ட மனமிருக்க, லட்சியமே உயிராகக் கொண்டாடும் குணமிருக்க... முன்னேற்றப் பாதையிலே அறிவோடு நாம் நடக்க, கண்ணோட்டம் கொண்டவர்கள் வழிகாட்டி காத்திருக்க... வந்தாரை வரவேற்று வாழவைத்த தென்னாடு... வள்ளுவனார் பொதுமறையை வழங்கிய நம்நாடு... இந்நாளில் பிறர் கையை எதிர்பார்த்து வாழுவதா...? எந்நாளும் துயர் மேகம் நம்மீது சூழுவதா...?

வ╱ல்╱ல╱ர╱சு - நல்லரசு நனவாகும் கனவுகள் (24x7) கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன...!

ஒரு நாட்டின் அரசன் எப்படி இருக்க வேண்டும் என்பது உட்படக் குறளில் பலவற்றும் வரையறுக்கப்பட்டது என்பதும், நயவஞ்சக அரசர்கள் அவைகளை அறிந்தால், அவர்களுக்கே அது பிரச்சினையை விளைவிக்கும் என்பதும், அதனால் திருக்குறளை வாசிக்கத் தகுதியில்லாத அரசர்கள் உட்படப் பலரையும் ஏமாற்றியே வாழும் நபர்களும் திருக்குறளைப் போற்றி புகழாமல் இருந்தனர் என்பதும், தரித்திரம் பிடித்த அவர்களுக்குத் தண்டனை அறம் உறுதியாகக் கொடுக்கும் என்பதையும் அனைவரும் அறிவர்...

சில மாதங்களுக்கு முன் ஐயனைக் கொண்டாடியவர்கள், இந்தப்பதிவில் சொன்ன "கொடுங்கோல் அரசனைப் போல் உள்ளவனைக் கொண்டாடுவது ஏன்...?" என்பதற்கான பதில்கள் (24x7x...!...) வரவேற்கப்படுகின்றன...! நன்றி...


புதிய பதிவுகளை பெறுதல் :


தொடர்புடைய எண்ணங்களின் வண்ணங்கள் சில :


முகநூல் மூலம் கருத்துக்களை பகிர :

கருத்துகள்

  1. ஆஆஆஆஆஆஆ மீதான் இங்கின 1ஸ்ட்டூஊஊ:))..

    வழமைபோல பாடல்களைத்தான் நான் கேட்டேன், 25 இல் பாடல் வருகுதில்லை, செக் பண்ணவும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. 25-ல் பாடல் கேட்கிறதே... அலைபேசியில்.

      நீக்கு
    2. இப்போ வருகிறது கில்லர்ஜி, என் கொமெண்ட் பார்த்து டிடி திருத்தி இருப்பார், சொல்லாமல் இருக்கிறார் கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) ஹா ஹா ஹா...

      நீக்கு
    3. ஹா... ஹா... அப்படி இருந்தால் உடனே சொல்லி இருப்பேன்... ஏனென்றால், அந்த குறளின் விளக்கம் தான் இன்றைய சூழலுக்கு மிகவும் முக்கியம்... இந்தப்பதிவின் மையக்கருத்தும் அதே... இன்னொரு முக்கிய தகவல் என்னவென்றால், சென்ற வருடம் இதன் முதல் பகுதியில், கேட்பொலி தரவேற்றம் செய்யும் போதே, 10 குறள்களின் கேட்பொலிகளையும் தரவேற்றம் செய்து விட்டேன்... அதனால் இதில் எவ்வித சந்தேகமும் வர வாய்ப்பில்லை... இந்த கேள்விக்குறி கேட்பொலி நுட்பத்தில் ஒரே ஒரு பிரச்சனையை அறிவதற்கு முன்...

      இந்தப் பதிவில் முடிவில் உள்ள பாடலில் (Audio Player) கேட்பொலி play பொத்தான் தெரியும்... அதை சொடுக்கினால் பாடலைக் கேட்கலாம்... ஆனால், இணைய இணைப்பு குறைவாக உள்ளவர்களுக்கு அதை சொடுக்கும் போது, ஓடுகிறதா இல்லையா என்பதை எளிதாக அறியலாம்... எவ்வாறு என்றால் :- play பொத்தான் pause பொத்தானாக மாறும்... அத்துடன் (கைபேசியாக இருந்தாலும், கணினியாக இருந்தாலும்) Speaker பொத்தான் தெரிவதை வைத்து அறிய முடியும்...!

      ஆனால் இந்த கேள்விக்குறி கேட்பொலி நுட்பத்தில் Speaker பொத்தான் தெரிவதை வைத்து மட்டுமே அறிய முடியும்... இதன் மூலம் உங்களின் இணைய இணைப்பின் தரத்தை அறிந்து தெரிந்து புரிந்து உணரலாம்... அதற்காக இணைய இணைப்பாளர்களிடம் (Internet Service Provider) சண்டை போட வேண்டாம் என அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்... நன்றி...

      நீக்கு
    4. ஆஆஆஆஆஆ டக்கெனப் பழியைத்தூக்கி டமால் என இணையத்தில் போட்டு விட்டாரே ஹா ஹா ஹா....

      நீக்கு
  2. வணக்கம் ஜி
    தொழில்நுற்பம் வழக்கம்போல் பிரமிப்பு ஊட்டுகிறது.

    அலைபேசியில் விரலில் தொட்டவுடன் அனலாய் அலறும் குறள் அருமை.

    ஐயன் சொல்லி இருப்பதை பார்த்தால் குறள் படித்து புரிந்தவனுக்கு மட்டுமே ஆட்சியமைக்கும் தகுதி உண்டு என்பது போலிருக்கிறதே...

    ஆனால் நது மன்னர்களும், அவரது சகலைகளும் பெரும்பாலும் கைநாட்டு கைலாசமாகத்தானே நாம் தேர்வு செய்து இருக்கிறோம்.

    ஒருவேளை நீங்கள் குறிப்பிடுவது நமது நாட்டை தவிர்த்து மற்ற தேசங்களுக்காகவோ...

    நன்றி - கில்லர்ஜி

    பதிலளிநீக்கு
  3. ஒரு நாட்டின் அரசன் எப்படி இருக்க வேண்டும் என்பது உட்பட குறளில் பலவற்றும் வரையறுக்கப்பட்டது என்பதும், நயவஞ்சக அரசர்கள் அவைகளை அறிந்தால், அவர்களுக்கே அது பிரச்னையை விளைவிக்கும் என்பதும், அதனால் திருக்குறளை வாசிக்க தகுதியில்லாத அரசர்கள் உட்பட பலரையும் ஏமாற்றியே வாழும் நபர்களும் திருக்குறளை போற்றி புகழாமல் இருந்தனர் என்பதும், தரித்திரம் பிடித்த அவர்களுக்கு தண்டனை அறம் உறுதியாக கொடுக்கும் என்பதையும் அனைவரும் அறிவர்...

    சில மாதங்களுக்கு முன் ஐயனை கொண்டாடியவர்கள், இந்தப்பதிவில் சொன்ன "கொடுங்கோல் அரசனை போல் உள்ளவனை கொண்டாடுவது ஏன்...?" என்பதற்கான பதில்கள் (24x7x...?...) வரவேற்கப்படுகின்றன...! நன்றி.///


    அரசன் வேறு பிரதமர் வேறு.... பிரதமரை அரசனுக்கு இணைய என்று சொல்ல முடியாது ஆனால் தெய்வத்திற்கு இணை என்று வேண்டுமானால் பூஜிப்போம்

    நாங்க ஐயனை கொண்டாடுவோம் கோ கொரோனா என்று கைதட்டுவோம் விளக்கு ஏற்றுவோம் மக்கள் சுகர் பேஷ்ன்டாக ஆகிவிடக் கூடாது என்று 1000 கிலோ மீட்டர் நடக்க வைப்ப்போம்.....காரணம் நாங்க அறிவார்ந்த சமுகமுங்க....ஆனால் எங்ககிட்ட அன்பும் இரக்கமும் இல்லைங்க.. அதனால் நாங்க அப்படிதாங்க எங்களை இத்ற்கும் மேலயும் கேள்வி கேட்டா தனபாலனை தப்லீக்பாய் என்று கூப்பிடுவோமுங்க

    பதிலளிநீக்கு
  4. பாடலில் 'இருக்க' என்று பாடப்பட்டிருப்பதெல்லாம் இல்லாமல் ஆகி விட்டதோ, அண்ணா?
    குறள் கருத்துகள் அருமை. கேள்விக்குறி மேலே பதிலாகக் குறள் - பிரமாதம் அண்ணா.

    பதிலளிநீக்கு
  5. திருக்குறள் வழி அரசியல் நடக்கவேண்டும்

    பதிலளிநீக்கு
  6. கொடுங்கோல் அரசனைப் போலுள்ளவன் என்பது எங்குமே இயல்பாகி விட்ட நிலையில் வேறு வழியில்லாமல் ஏற்கவேண்டியுள்ளதே.

    பதிலளிநீக்கு
  7. அருமை..இக்காலத்தவருக்கு மட்டுமின்றி எக்காலத்திற்கும் ...பொருந்தும்படி ...

    பதிலளிநீக்கு
  8. அரசன் எப்படி இருக்க வேண்டுமென திருவள்ளுவர் சொல்லி சென்றது இன்றைய ஆட்சியாளர்களுக்கும் பொருந்தும்தானே?!

    பதிலளிநீக்கு
  9. சிறப்பான பகிர்வு. குறள் வழி சொன்ன விஷயங்கள் சிறப்பு. தொடரட்டும் உங்கள் தொழில்நுட்ப அதிசயங்கள். பாராட்டுகள்.

    பதிலளிநீக்கு
  10. அரசன் என்று சொல்வதற்கு பதில் ஆள்பவர்கள் என்று சொல்லியிருக்கலாம். சிறப்பான தொழில் நுட்பப் பதிவு.

    பதிலளிநீக்கு
  11. ஓரு குறள் ஒலிக்கும் போது அடுத்த குறளைத் தட்டினால் அதுவும் ஒலிக்கின்றதே. முதல் குறள் ஒலி நிற்பதில்லை. இரண்டு குறள் ஒலி ஒலிக்கும் போது மூன்றாவது குறளைத் தட்டினால் அதுவும் ஒலிக்கின்றது. இதை மாற்ற வேண்டுமே?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அண்ணே... அவசர உலகம் என்று கேள்விப்பட்டுள்ளேன்... இன்று தான் அதை அறிந்து கொண்டேன்... ஹா... ஹா... ஒரு குறளும் அதற்கான விளக்கமும் 'ஒலிப்பது' அதிகபட்சம் இரு நிமிடங்களே...!

      உங்கள் கருத்துரைப்படி விளக்கம் என்னவென்றால், அடுத்த குரலை / குறளை தட்டுவதற்கு முன், முதலில் தட்டியதை மீண்டும் ஒருமுறை தட்டினால் நின்று விடும்...!

      வீட்டில் ஒரு பக்கம் F.M.ரேடியோ கேட்டுக்கொண்டே கிரைண்டர் சத்தம் ஓடும்...! இன்னொரு பக்கம் டி.வி யில் 5.1 Home Theater யுடன் சமீபத்திய பாடலின் அலறல்...! இதில் சோதனை தளத்தில் வெளியிட்ட இந்தப்பதிவில் உள்ள கேட்பொலியை தட்டினால், அப்போதும் இதன் இனிமை மட்டுமே எனக்கு கேட்கும்...! அப்புறம் சாப்பாடு...?

      செவுக்குண வில்லாத போழ்து சிறிது
      வயிற்றுக்கும் ஈயப் படும்

      நீக்கு
  12. சிறப்பான பதிவு. ஆட்சி செய்பவர்கள் எப்படி இருக்க வேண்டும் என்பதை குறள்கள் வழி சொல்லி அதற்கேற்ற பாடல்களையும் இணைத்து வியக்க வியக்கும் தொழில்நுட்பத்துடன் சொல்லியிருப்பது பாராட்டத்தக்கது.

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
  13. நெட் தொல்லையால் சில பாடல்கள் மட்டுமே கேட்க முடிந்தது டிடி. கேட்ட வரை பாடல்கள் தேர்வும், நாட்டை ஆள்பவர்கள் எப்படி இருக்க வேண்டும் என்று தாத்தா சொல்லியிருப்பதையும் சொல்லி விளக்கியமை சிறப்பு. தொழில்நுட்பம் அசத்துகிறது!

    கீதா

    பதிலளிநீக்கு
  14. வணக்கம் சகோதரரே

    இன்றைய பதிவும் அருமை. நல்லதொரு ஆட்சியை ஒரு அரசன் எப்படி நடத்த வேண்டுமென்பதை அப்போதே ஐயன் திறம்பட தம் ஒவ்வொரு குறள்களிலும் விளக்கியுள்ளது கண்டு வியப்படைந்தேன்.

    உங்கள் தொழிற்நுட்பங்களினால் அதை மேம்படுத்தி அழகாக நாங்கள் படித்துணருமாறு தந்திருக்கும் உங்களின் திறம்மிகும் கலையைக் கண்டு மிகவும் மகிழ்வடைந்தேன்.

    இது போல் குறளுக்கு தகுந்த விளக்கம் சொல்ல உங்களையன்றி வேறு எவராலும் முடியாது. பதிவுக்கு பதிவு உங்களின் தொழிற்நுட்ப ங்கள் பிரமிக்க வைக்கிறது. பதிவு அருமையாக உள்ளது. பாடலும் பதிவிற்கு பொருத்தமாக பி. சுசிலா அவர்களின் இனிமையான குரலில் கருத்துடன் அருமையாக உள்ளது. பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  15. வணக்கம் சகோதரரே

    திருக்குறள் சொல்லும் குரல் (டி. எம். எஸ்? இல்லை மாதிரியும் உள்ளது. ) இணையான ராகத்துடன் கணீரென்று கவர்கிறது. கூடவே குறளுக்கு விளக்கம் சொல்லும் குரலும் கம்பீரம். ஆனால் யார் என்று கணிக்க முடியவில்லை. இதையும் கருத்தில் குறிப்பிட மறந்து போனேன். பதிவு அருமை.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  16. அருமை. நீண்ட நாட்களுக்குப் பிறகு வலைப்பதிவின் பக்கம் வருகிறேன். தொடர்ந்து வள்ளும் பேசும் தங்கள் பதிவை கண்டதில் மகிழ்ச்சி நண்பரே.

    பதிலளிநீக்கு
  17. திருக்குறள் ஓவியம் இல்லையே இந்த பதிவில்.
    இம்முறை தொழில் நுட்பம் வியக்க வைக்கிறது. கேள்விக்குறிபக்கம் போனால் குறளும் , அர்த்தமும், கேள்விக்குறியை சொடுக்கினால் திருக்குறளை அழகாய் பாடுகிறார் ஒருவர், பொழிப்புரை சொல்பவரும் அருமையாக சொல்கிறார்கள்.
    அவர்கள் பெயரை குறிப்பிடுங்கள்.

    பதிலளிநீக்கு
  18. திருக்குறள் ஒரு வாழ்வியல் வழிகாட்டி அதில் எல்லா மக்களும் எப்படி வாழ வேண்டும், எப்படி வாழ்க்கூடாது என்றும் சொல்லி இருக்கிறார்.

    தினம் காலை ஒரு அதிகாரம் படித்து வருகிறேன்.
    இன்று நான் படித்த அதிகாரம் 'அருளுடைமை.'

    மன்னியிர் ஓம்பி அருள் ஆள்வாற்கு இல்லென்ப
    தன்னுயிர் அஞ்சும் வினை.

    உயிர்னங்களைக் காத்து அவைகளிடம் இரக்கம் காட்டி
    வாழ்பவனுக்குத் தன் உயிரைக் குறித்து அஞ்சுகின்ற தீவினைகள் இல்லை.

    ஆள்பவர்களும், மக்களும் அருள் உடையவாரக இருந்து விட்டால் மருதகாசி பாடலில் சொன்னது போல் துயர் மேகம் சூழலாது.

    பகிர்ந்த மருகாசி பாடல் கேட்டது இல்லை கேட்டேன்.
    மிக அருமை.

    பதிலளிநீக்கு
  19. கொடுங்கோல் அரசனைப்போல் உள்ளவரை கொண்டாடுவதற்கு இரு காரணங்கள். ஒன்று பயம். மற்றொன்று அவரை துதிபாடுவதால் கிடைக்கும் வருமானம்.
    பெரும்பாலோர் உண்மையில் உள்ளுக்குள் வெறுத்தாலும் அரசின் அடக்குமுறைக்கு பயந்து வெளியே கொண்டாடுவதுபோல் நடிக்கிறார்கள்.
    மற்றும் சிலரோ ஆட்சியில் இருப்போர் கொடுங்கோல் ஆட்சி செய்தாலும் தங்களுக்கு ‘எந்த வழியில்’ வருமானம் வருமென்றாலும் அதற்காக ஆட்சியாளர்களை தலையில் தூக்கி வைத்து ஆடுவார்கள்.
    உண்மையில் மனதார கொடுங்கோல் அரசரைப்போல் உள்ளவரை கொண்டாடுவோர் யாரும் இல்லை என்பதே உண்மை.

    இந்த பதிவின் தொழில் நுட்பம் வியக்க வைக்கிறது. பாராட்டுகள். எனது பெயரைக் குறிப்பிட்டதற்கும் நன்றி!

    பதிலளிநீக்கு
  20. ஒருவனை ஏமாற்ற வேண்டுமானால் அவனது ஆசையை தூண்டவேண்டும்... பொய்யன் தூண்டிவிட்டான் ஆசை பட்டவர்கள் மாட்டிகிட்டார்கள்... இவர்களோடு ஆசைபடாதவர்களும், வேதனை படுவதுவதான் கொடுமைிலும் கொடுமை..

    பதிலளிநீக்கு
  21. பதிவு மிக அருமை ... "காது குடையும் அளவிற்கு அனுபவம் வாய்ந்த பெரியோர்களின் அறிவுரை ஆலோசனைகளை கேட்காமல்" இந்த சொற்றொடர் புதுமையாக உள்ளதே ... "மறைபொருள் விளக்கம் " என்பது புரிகிறது ... நன்றி !! ...

    பதிலளிநீக்கு
  22. இது அரசர் கதையல்ல
    அரசர் அறிந்து அரசாள வேண்டிய பதிவிது
    சிறந்த வழிகாட்டல்

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

நகுதற் பொருட்டன்று நட்டல் மிகுதிக்கண்
மேற்சென்று இடித்தற் பொருட்டு. (குறள் 784)

நட்புச் செய்துகொள்வது நண்பரோடு சிரித்து மகிழ்வதற்காக மட்டும் அல்ல. மிகுதியாகத் தவறு செய்யும்போது, அவரைக் கடிந்து திருத்துவதற்கே ஆகும்.