🏠 வணக்கம் காப்பகம் நன்றி

தேடல் 🔎



புதிய பதிவுகளை பெற ✉



2020 வல்லரசு ஒரு கனவா...?

அரசியல் அரிச்சுவடி கற்றுக்கொள்ள...
முக்கியமாகப் பெண் குழந்தைகளுக்குக் கற்றுக்கொடுக்க...


அரசிற்கு : முப்படைகளையும் மேலும் ஆற்றல் மிக்கதாக்குவதற்குப் பதிலாக, அவற்றைப் பலிகடா ஆக்குவதன் மூலமும் அரசியல் லாபம் பெறுவது, நாட்டுப்பற்று வந்துவிடாத அளவிற்கு மக்களை மூடனாக மாற்றுவது, நாட்டின் அனைத்து வளத்தையும் பெருக்குவதைத் தவிர்த்து, இருப்பதையும் பலவகைகளில் சுரண்டி பாழாக்குவது, காம கொடூர சுயநல அமைச்சர்களைத் தேர்ந்தெடுத்து, அவர்களின் நலம் ஒன்றே அறிந்து செயல்படுவது, துன்பத்தில் உதவாது மகிழ்ச்சியடையும் அண்டை மாநில நட்பைப் பேணுவது, முன்னும் பின்னும் வேலியே உயிரை எடுக்க வைக்கும் வகையில் அரணை பயன்படுத்துவது - இந்த ஆறு சிறப்புகளும் உடையதே அரசுகளில் அ'சிங்கம் போன்றது...!

அதனால்...
381. படைகுடி கூழ்அமைச்சு நட்பரண் ஆறும்
உடையான் அரசருள் ஏறு

படை, குடிமக்கள், உணவு, அமைச்சர், நண்பர், காவல் என்ற ஆறும் பெற்றவன் அரசருள் சிறந்தவன்...


கேவலப்பட்டாலும், அநீதியையும் பகைமையையும் துணிவுடன் தொடர்ந்து செய்வது, வேண்டாதவர்க்கு வேண்டாததை வரைமுறையில்லாமல் கொடுப்பது, பிரச்சனை என்றால் ஓடி ஒளியும் அறிவு அற்றலாக இருப்பது, ஆபத்து வந்த பின் அதைப் பேராபத்தாக்க, தளராத ஊக்கத்துடன் செயல்படுவது - இந்த நான்கு பண்புகளிலும் சிறிது கூட குற்றம் குறையில்லாமல், ஆளுவோரின் இயல்பாக இருப்பதே அழியப் போகும் அரசுக்குரிய தகுதிகளாகும்...!

அதனால்...
382. அஞ்சாமை ஈகை அறிவூக்கம் இந்நான்கும்
எஞ்சாமை வேந்தர்க் கியல்பு

துணிவு, கொடை, அறிவு, முயற்சி ஆகியன, குறையாமல் இருப்பவனே மன்னவன் ஆவான்...


கொடுமைகளைச் செய்வதில் சிறிதும் சோர்வே இல்லாமல் விரைவாகச் செய்வது, அந்த கொடூரங்களையும் மற்றும் அறிவார்ந்த அனைத்தையும், அனைவரும் அறியாவண்ணம் கல்வியையும், கல்விக் கூடங்களையும் சிதைத்து, மூட நம்பிக்கைகளைப் பெருக்குவது, நல்லவை எதிர்த்தாலும் தீயவற்றைச் செய்வதற்கு, எந்த விலையும் கொடுத்து, 'மதம்'கொண்ட துணிவுடன் செயல்படுவது - இந்த மூன்று குணங்களும் நாட்டை சீரழிக்கும் ஆளுவோர் அரசைவிட்டு விலகக்கூடாது...!

அதனால்...
383. தூங்காமை கல்வி துணிவுடைமை இம்மூன்றும்
நீங்கா நிலனான் பவர்க்கு

சோம்பலின்மை, கல்வி, அஞ்சாமை முதலிய மூன்று குணங்களும், அரசர்க்கு இன்றியமையாம்...


ஆட்சி முறைக்குரிய அறத்தையும் தூக்கி குப்பையில் எரிந்து விட்டு, அவற்றை தங்களுக்கேற்றவாறு மாற்றி பாசிசத்தைத் தொடர்வது, அறத்துடன் நடப்பதையெல்லாம் தன் நாட்டிலிருந்து படிப்படியாகக் குறைத்து வேரறுப்பது, கோழைத்தனத்தில் தவறாமல் நின்று, குறையே வந்துவிடாத அளவிற்கு அவமானத்தைப் பெருமையாக மதிப்பது - இவை தான் மானங்கெட்ட அரசின் மதிப்பாகும்...!

அதனால்...
384. அறனிழுக்கா தல்லவை நீக்கி மறனிழுக்கா
மானம் உடைய தரசு

அறநெறி தவறாமல், குற்றங்கள் அற்று முறைதவறாது காப்பவனே அரசனாவான்...


பொய் புரட்டுகளை முதலீடு செய்து பரப்புவதில், பெருங்கூட்டத்தை நியமித்திருப்பதால், நிதி வருவதற்கான வாய்ப்பே இல்லாத வழிகளை உருவாக்கித் திணறுவது, முன்பே உருவாக்கி வைத்திருந்த நிதி வழிகளைச் சீர்திருத்தாமல், மேலும் அதைச் சிதைப்பது, சிதைத்தவற்றையாவது ஒழுங்குபடுத்தத் தெரியாததால், அதையும் பிறர் அறியாமலும் கவராமலும் வைத்திருப்பது, வைத்திருப்பதை மக்களுக்கு எந்த வகையிலும் உதவாதவாறு, தங்களுக்காக மட்டும் செலவிடுவது - இவை தான் கையாலாகாத அரசின் இலக்கணமாகும்...!

அதனால்...
385. இயற்றலும் ஈட்டலும் காத்தலும் காத்த
வகுத்தலும் வல்லது அரசு

பொருள் வருவாய் அறிந்து, பொருள் ஈட்டிக்காத்து, நாட்டுநலம் புரிபவனே அரசன்...


'அரசனுக்கு' ? அடுத்த ஆண்டில்...! 20:20

வல்லரசு நல்லரசு நனவாகும் கனவுகள் (24x7) வரவேற்கப்படுகின்றன...!

புதிய பதிவுகளை பெறுதல் :


தொடர்புடைய எண்ணங்களின் வண்ணங்கள் சில :


முகநூல் மூலம் கருத்துக்களை பகிர :

கருத்துகள்

  1. சூப்பர் டிடி. ரொம்ப நாள் கழிச்சி நெத்தியடியா ஒரு பதிவு. வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  2. நண்பர்களுக்கு வணக்கம்... ஏற்கனவே செங்கோன்மை, கொடுங்கோன்மை அதிகாரங்களை குறளின் குரலாக பகிர்ந்து கொண்டு விட்டேன்... அதனால் இந்தப் பதிவு, அதிலுள்ள குறள்களின் விளக்கங்கள் அல்ல... இவை இன்னமொரு அதிகாரத்தின் முதல் ஐந்து குறள்களின் எதிர்க்குரல்...! கருத்து தெரிவித்த ஏழு நண்பர்களுக்கும் நன்றி...

    பதிலளிநீக்கு
  3. நாட்டின் நிலையை அழகாக, படிப்படியாக விவரித்த விதம் அருமை ஜி.

    நானும் எப்பொழுதும் சொல்வது வல்லரசு என்பதைவிட நம்நாடு நல்லஅரசு ஆகவேண்டும்.

    இப்பதிவில் எங்கேனும் சுட்டி இருக்கிறதா ? இருப்பதுபோல் தெரியவில்லை.
    (காரணம் நான் அலைபேசி வழியாகவே கருத்துரை இடுகிறேன்)

    அதனால.... நான் நோட்டோதான்.

    பதிலளிநீக்கு
  4. அறிந்து தெரிந்து புரிந்துகொள்வது உங்கள் பாணியில் தரப்படும்போது எளிதாகிவிடுகிறதே.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி ஐயா... நேற்று உங்களின் விக்கிபீடியா பதிவுகளை வாசித்துக் கொண்டிருந்தேன்... அது போல் எழுத வேண்டும் என்று பலநாள் ஆசை... வியாபார சூழ்நிலையால் முடிவதில்லை...

      ஆனால், விக்கிபீடியாவால் ஒரு தொழிற்நுட்பம் கற்றுக் கொண்டேன்... சுட்டியை கொண்டு சென்றால், இணைப்பின் மேலே மேற்கோளாக வருவது போல் (ToolTip) செய்ய வேண்டும் என்று, முயற்சி செய்து, சில பதிவுகளை செய்தும் உள்ளேன்... ஆனால், அவ்வாறு செய்த பதிவுகளை கைபேசியில் வாசிக்கும் போது, மேற்கோளாக மறைத்து வைத்ததும் வருகிறது...

      நேற்று ஒரு பதிவை மாற்றினேன்... கைபேசியிலும் சரியாக வருகிறது... அந்தப் பதிவின் தலைப்பு : முயற்'சிக்காமல்' முடியாதென்று சொல்லாதே... நன்றி ஐயா...

      நீக்கு
  5. கண்டு பிடிக்க முடியவில்லை. எந்த அதிகாரம்? கம்பராமாயணம் எழுதியது சேக்கிழார் என்று கூறும் அரசர்கள் இருக்கும் வரை இது எல்லாம் செவிடன் காதில் சங்கு ஊதியது தான்.
     Jayakumar

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தமிழகத்திற்கு முதலிடம்...! ஹா... ஹா... பெருமை கொள்வோம்... அடுத்த பதிவில் எந்த அதிகாரம் என்று சொல்லி விடுகிறேன் ஐயா...

      நீக்கு
  6. ஜோதிஜி அண்ணன் அவர்கள் : குறள் என்பது எப்போது பயன்படும்? தொடக்கத்தில் மனப்பாட பகுதி. அடுத்த கட்டத்தில் கொஞ்சம் விசயம் இருக்குமோ என்று நம்பிக்கையில் பார்ப்போம். 50 வயதுக்கு மேல் இந்தக் குறள்கள் ஏதாவது ஒரு வகையில் நம் வாழ்க்கையில் நடக்கும் நிகழ்வுகள் மூலம் ஆச்சரியப்படுத்திக் கொண்டேயிருக்கும். அப்படித்தான் உங்களின் குறள் விளக்கங்கள் என்னை ஆச்சரியப்பட வைக்கின்றது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கைபேசியில் வெளியிடும் போது, உங்களின் கருத்துரை தவறுதலாக நீக்கி விட்டேன்... மன்னிக்கவும்... அனைத்து விதமாக சிறிய பெரிய பகிர்வுகளும் எழுதும் பலரும், முடிவில் ஒரு குறளை சொல்லியாவது முடிப்பார்கள்... "அவர்கள் வள்ளுவம் முழுவதும் வாசித்து இருந்தால்...?" என்று பலமுறை நினைப்பதுண்டு...!

      நீக்கு
  7. இறைமாட்சி, குற்றம் கடிதலில் வருகிறதா? நீங்கள் சொல்லுவது?

    ஆட்சி முறைக்கு உரிய அறத்தில் தவறாமல் அறமல்லாதவற்றை நீக்கி . வீரத்தில் குறைவு படாத மானத்தை உடையவனே சிறந்த அரசன் (தலைவன்) ஆவான்.

    பதிலளிநீக்கு
  8. அருமை ! பணிச்சுமை காரணமாக லேட் வருகை அய்யா.

    பதிலளிநீக்கு
  9. கொடையும், இரக்க குணமும், செங்கோன்மையும், ஏழ்மையான மக்களை காத்தாலும் ஆகிய நாங்கையும் உடைய வேந்தன்(தலைமை) வேந்தர்க்கெல்லாம் ஒளிமிக்க விளக்காவான்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அருமை... அடுத்த பதிவில் அவை வரும்... உங்களின் முந்தைய கருத்துரையை பிறகு வெளியிடுகிறேன்... நன்றி அம்மா...

      நீக்கு
  10. அமைச்சு

    தெரிதலும் தேர்ந்து செயலும் ஒருதலையாச்
    சொல்லலும் வல்லது அமைச்சு.

    அறனறிந்து ஆன்றமைந்த சொல்லானெஞ் ஞானறும்
    திறனறிந்தான் தேர்ச்சித் துணை

    பதிலளிநீக்கு
  11. திருக்குறளில் உங்கள் ஈடுபாடும், புலமையும் பிரமிக்க வைக்கிறது. வாழ்த்துகள் தனபாலன்.

    பதிலளிநீக்கு
  12. 'இறைமாட்சி' அதிகாரத்தில் உள்ள குறட்பாக்களைத் தானே குறிப்பிடுகிறீர்கள்?

    பதிலளிநீக்கு
  13. அதனால்... மிக நல்லதொரு பகிர்வு அண்ணா...
    வல்லரசாக வேண்டாம் முதலில் நல்லரசு ஆகட்டும்.
    இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள். நன்றி.

    பதிலளிநீக்கு
  14. ஒரு அரசு செய்யக்கூடாத செயல்களின் பட்டியல் நீளம்

    பதிலளிநீக்கு
  15. கலராக்கிப் போட்ட எழுத்துக்களில் ஏதும் லிங் இணைச்சிருக்கிறீங்களோ எனப் பார்த்தேன் அப்படி இல்லை.

    பதிலளிநீக்கு
  16. ///
    அரசியல் அரிச்சுவடி கற்றுக்கொள்ள...
    முக்கியமாகப் பெண் குழந்தைகளுக்குக் கற்றுக்கொடுக்க...///

    ஹா ஹா ஹா உண்மைதான் ஆனா எனக்கெல்லாம் ஏனோ தெரியவில்லை அரசியல் என்றாலே ஒரு அலர்ஜி:)

    பதிலளிநீக்கு
  17. வணக்கம் சகோதரரே

    அருமையான பதிவு. எதெல்லாம் தவறான பாதைக்கு வழிகாட்டுகிறதோ, எதெல்லாம் தீங்கு வரக்கூடிய செயல்களுக்கு அஸ்திவாரமாக அமைகிறதோ, எதெல்லாம் வாழும் போதும் நலமில்லாமல் செய்து பிறகும் பூண்டோடு அழித்து விடக்கூடிய அரக்க குணங்களை சுட்டிக் காட்டுகிறதோ அதையெல்லாம் குறிப்பிட்டு அழகாய் ஒரு எ. காட்டாய் கூறி, "இவையெல்லாம் இவ்வருடத்தின் கடைசி குப்பை குளங்களாய் போகட்டும்" அதனால், இனிவரும் நாட்களின் தொடக்கம் நல்ல மனங்களை மட்டும் வெளிப்படுத்தட்டும் என்ற ரீதியில் மிக அழகான "கொடுங்கோண்மை" பதிவு. உதாரணங்களுடன் இனிவரும் பகுதிகளையும் காண ஆவலாக உள்ளேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  18. நாடும் வீடும் நல்ல சிந்தனைகளால் செயல்களால் பொலிவு பெறட்டும்..

    திருக்குறள் வாழ்க..
    தெய்வப்புலவர் வாழ்க...

    பதிலளிநீக்கு
  19. வல்லரசா, நல்லரசா என்கிற கேள்வி வந்தால் இரண்டும் என்பதே பதிலாக இருக்கும்!

    பதிலளிநீக்கு
  20. உடைத்து எழுதினால் உங்கள் கோபம் வெளிப்பட்டு விடுமோ என்று பூடகமாக எழுதியிருக்கிறீர்கள். உங்கள் பதிவால் திருக்குறளை தேடி படிக்கிறோம். இவைகளை  இளைய தலைமுறைக்கும் செல்ல வேண்டும்.  

    பதிலளிநீக்கு
  21. திருக்குறளை கெட்டியாக பிடித்திருக்கும் நீங்கள், அதற்குள் நுழைந்து ஆழமாகத் தேடுகின்ற அற்புதமான நோக்கத்தை கொண்டிருக்கின்றீர்கள். இதுவே உங்கள் சிறப்பு

    பதிலளிநீக்கு
  22. கடந்த ஆண்டுகளில் நம் நாடு ”ஆளுவோரால்” நடத்தப்படுகின்ற ”அரசால்” போகின்ற பயணத்தை திருக்குறளை துணைக்கு வைத்துச் சொல்லி இருக்கிறீர்கள். உங்கள் எழுத்தை வாசித்து முடித்ததும் திருவள்ளுவர் நல்லரசுக்கும், நல்லாட்சிக்கும் சொல்லி உள்ள அளவுகோலை அறிய மனம் முனைகிறது. ஒரு கல்லில் இர்ண்டு மாங்காய்கான தூண்டுதல் அற்புதம்!

    பதிலளிநீக்கு
  23. ஹாஹ்ஹாஹா! நல்ல ஆட்சியாளர்கள் இப்படியெல்லாம் இருக்கக்கூடாது என்றுதான் வள்ளுவர் எழுதியிருப்பார். ஆனால் நீங்கள் அதைச் சற்று மாற்றி கெட்ட ஆட்சியாளர்கள் இப்படித்தான் இருக்க வேண்டும் என்று எழுதியது ரசிக்கத்தக்கது. ஆக தற்பொழுது மத்தியிலும் மாநிலத்திலும் வள்ளுவர் வழிப்படி நடக்கும் ஆட்சிதான் நடைபெற்று வருகிறது. அதனால்தான் இன்று அவர்கள் புதிதாக வள்ளுவரைச் சொந்தம் கொண்டாடத் தொடங்கியிருக்கிறார்கள் போலும்.

    பதிலளிநீக்கு
  24. இனிய 2020 ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு
  25. உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். மிக அருமையான பதிவு தனபாலன் பாராட்டுக்கள்

    பதிலளிநீக்கு
  26. Happy New Year

    அருமை

    www.nattumarunthu.com
    nattu marunthu kadai online
    nattu marunthu online

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

நகுதற் பொருட்டன்று நட்டல் மிகுதிக்கண்
மேற்சென்று இடித்தற் பொருட்டு. (குறள் 784)

நட்புச் செய்துகொள்வது நண்பரோடு சிரித்து மகிழ்வதற்காக மட்டும் அல்ல. மிகுதியாகத் தவறு செய்யும்போது, அவரைக் கடிந்து திருத்துவதற்கே ஆகும்.