🏠 வணக்கம் காப்பகம் நன்றி

தேடல் 🔎



புதிய பதிவுகளை பெற ✉



எதிர்பாராததை எதிர்பாருங்கள்...!


முந்தைய பதிவின் இணைப்பு இங்கே சொடுக்கவும் அதில் முடிவில் ஒரு வரி :-

காலம் தருகிற நெருக்கடி, வாழ்வின் தேவை தருகிற நெருக்கடிகள், நம்மை நல்லவராக்குமா...? இல்லை, கெட்ட வழியில் தள்ளி விடுமா...?

இதற்குப் பதில் சொல்லப் புத்தரின் ஒரு நிகழ்வைச் சொல்கிறேன், சுருக்கமாக...

கௌதம புத்தர் தந்து சீடர்களுடன், தனது ஊருக்கு அருகில் உள்ள ஊருக்கு வந்துள்ளதாக அறிந்தார் ஒரு தாய்... அவருக்கு ஒரே மகன், வயது 24... அதற்குள் அவனுக்குச் சமுகத்தில் உள்ள எல்லா கெட்ட பழக்கங்களும் அத்துப்படி...! அவனை எப்படிச் சொல்லித் திருத்த முயன்றாலும், திருந்துவதாக இல்லை... அவனது தந்தைக்கும் தினமொரு துயரம்... புத்தரிடம் அழைத்துச் சென்றால், அவனைத் திருத்தி விடலாம் என்று, மகனை அழைத்துக் கொண்டு சென்றார் தாய்...

புத்தர் அமைதியே வடிவமாக அமர்ந்திருந்தார்... தாயையும் மகனையும் அன்பொழுகப் பார்த்தார்... வந்த காரணத்தை அவரிடம் கூறினார்... மகனைக் கொஞ்ச நேரம் கூர்ந்து பார்த்த புத்தர், "காலம் கடந்து விட்டது, இனிமேல் உன் மகனை எதுவும் செய்ய முடியாது, அவனது ஆயுட்காலம் நாளையோடு முடிவடையப் போகிறது, இனி ஒருநாள் அவன் திருந்தி வாழ்ந்தால் என்ன...? வாழாவிட்டால் தான் என்ன...?" என்று சொன்னார்... பதறிப் போன தாய், "என் ஒரே மகனுக்கு இன்னும் ஒரு நாள் தான் வாழ்வா...?, வேறு எதாவது செய்து அவன் உயிர் வாழ முடியாதா..?" என்று கேட்டார்... "நாளை மாலை அழைத்து வாருங்கள்..." சொன்னார் புத்தர்... மறுநாள் மாலை உயிர் போகப்போகும் பதற்றத்தில், மகனும் தாயும் புத்தர் முன் வந்து நின்றனர்...

"இந்த ஒரு நாளில் என்ன செய்தாய்...?" மகனிடம் கேட்டார் புத்தர்... "உயிர் போகப் போவதால், இதுவரை நான் செய்த தவறுகளை எல்லாம் நினைத்துப் பார்த்து வருந்தினேன், பாவங்களுக்கான மன்னிப்பைக் கேட்டு கடவுளிடம் மன்றாடினேன்... இந்த ஒரு நாளில், நான் எந்த தீய செயலும் செய்யவில்லை..." என்றான் மகன்... பரிதாபத்தோடு தாய் புத்தரைப் பார்த்தார்... "தாயே, உன் மகனுக்கு ஆயுள் முடிய இன்னும் நிறையக் காலம் இருக்கிறது... அவர் திருந்த வேண்டும் என்பதற்காகவே, அவன் ஒரு நாளில் சாகப்போகிறார் என்று சொன்னேன்... இதோ உன் திருந்திய மகனை உன்னோடு அழைத்துச் செல்..." என்றார் புத்தர்...


இந்த நிகழ்வில் நான் எடுத்துக் கொள்வது (1) தாய் தந்தை என்பது நேரம் காலம் → பலவற்றை எனக்குக் கற்றுக்கொடுத்துக் கொண்டே வருகிறது... (2) புத்தரின் போதனை என்பது ஒரு கல்வி → இது போல் பலரால் பலவற்றைக் கற்றுக்கொண்ட அறிவின் நோக்கம், என்னை மட்டும் மாற்றி, எனக்கு மட்டும் பயன்படுமாறு இருக்கக்கூடாது என்பதே எனது நோக்கம்... (3) அந்த பையனின் ஒரு நாள் சிந்தனை என்பது என் உள்மனம் → எந்நேரமும் எனக்குள் பேச வேண்டிய அதன் நோக்கம் பதவி

என்னைக் கூப்பிட்ட மாதிரி இருந்தது..! என்னுடைய கருத்தையும் கேள் : "அவசரத்தில் திருந்தினாலும் ஆனந்தமாக வாழலாம், நெருக்கடிகளிலும் நல்லவராகத் தலை நிமிரலாம்"-ன்னு புரிகிறது... அப்புறம் சிலவற்றைச் சுருக்கக்கூடாது.... ப த வி என்றால் - சித்திரு னித்திரு விழித்திரு... ஆமா, போன பதிவிலேயும் காணாம்...? இங்கேயும்...! ஏதாவது குறள்...? ஒன்றையும் காணாமே...?

பொறு மனமே பொறு... நண்பர்களே... நெருக்கடியான நேரத்தில் எந்தவொரு பெரிய முடிவும்... ம்ஹிம்... முடிவே எடுக்கக்கூடாது என்பதே என் முடிவு... நொடிக்கு நொடி மாற்றம் ஏற்படும் இன்றைய உலகம் நமக்குச் சொல்வது ஒன்றே ஒன்று தான்; அது இந்தப்பதிவின் தலைப்பு... இனி கீழே உள்ளவை, என் வாழ்வில் இதுவரை நடந்த சில நிகழ்வுகளை நினைத்துப் பார்த்தேன்... ஒவ்வொன்றையும் பற்றிச் சொல்லப் பல பதிவுகள் பகிர வேண்டும்... அதனால் அவற்றைச் சுருக்கினேன்... அட...! அவை ஓரளவு குறளின் குரலாக இருந்தது...!! எதிர்பார்க்கவே இல்லை...! அதனால் பதவி என்று, இந்தப் பதிவிற்கு வைத்த தலைப்பையும் மாற்றி விட்டேன்...!

(படம் : சலங்கை ஒலி) உலக வாழ்க்கை நடனம், நீ ஒப்புக்கொண்ட பயணம்... அது முடியும்போது தொடங்கும், நீ தொடங்கும்போது முடியும்...2 மனிதன் தினமும் அலையில், அலையும் குமிழி - தெரியும் தெரிந்தும் மனமே, கலங்காதிரு நீ...2 தாளம் இங்குத் தப்பவில்லை யார் மீதும் தப்பு இல்லை... கால்கள் போன பாதை எந்தன் எல்லை...! தகிட ததிமி தகிட ததிமி தந்தானா...
இதய குறளின் குரலில் எனது தில்லானா :-

ஒரு சமயம் நெருக்கடிக்கு மேல் நெருக்கடியான நேரம் எனக்கு...! அந்த நேரத்திலே ஒரு சின்ன உதவி கிடைத்தது... ம் இப்ப நினைச்சா கூட, அதுக்கு ஈடுயிணை எதுவுமே கிடையாது... அந்த வழிகாட்டிகள் போலவே நாமும் வாழ வேண்டும் எனும் உறுதியோடு, அவர்களின் வழியே செல்லும் எனக்கு :-
102. காலத்தி னால்செய்த நன்றி சிறிதெனினும்
ஞாலத்தின் மாணப் பெரிது

வழி சரியா இருந்தாலும், இனி கஷ்டகாலம் தான்னு உறுதியா தெரிஞ்சி போச்சி... முடிந்தளவு சமாளித்தாலும், மனசிலே இருக்கிற அன்பை, எனக்குக் காண்பித்தவர்கள் அம்மா, சகோதரிகள், மனைவி, மகள்... கொஞ்சக் காலம் கழிச்சி புரிஞ்சி, கஷ்ட காலங்களும் இருகோடுகள் தத்துவத்தை உணர்த்தி தெளிஞ்ச எனக்கு :-
243. அருள்சேர்ந்த நெஞ்சினார்க்கு இல்லை இருள்சேர்ந்த
இன்னா உலகம் புகல்

என்னதான் தெளிவா இருக்கிறதா நினைச்சிக்கிட்டாலும், சில பல நேரம் ஒண்ணுமே புரியாமல் பல குழப்பங்கள்... அந்த மாதிரி நேரத்திலே "நேர்மையும் உழைப்புமே" என்று வாழும் எனது அப்பா சொல்றது உட்பட (சின்ன வயசிலே என்னைக்கு கேட்டேன்...?), பலரின் நல்ல கருத்துக்களை நினைத்துப் பார்த்தால், மனதில் ஒரு சக்தி பிறக்கும்... படித்த புத்தகங்களின் சிந்தனைகள், கை கொடுக்கும் எனக்கு :-
414 கற்றிலன் ஆயினும் கேட்க அஃதுஒருவற்கு
ஒற்கத்தின் ஊற்றாம் துணை

படிச்சா மட்டும்...? செயல்லே...? தடுமாற்றம் - இதுவா ? அதுவா...? துவண்டு போன மனதை மாற்றம் செய்ய, புதுசா வித்தியாசமா எதாவது செய்து பார்ப்பேன்... (வலைப்பூவில் எல்லாம் சும்மா...!) ஆர்வத்துடன் சில செயல்களைச் செய்யும் போது, வெற்றியோ தோல்வியோ, திருப்தி வரும்வரை விட்றதில்லை... அப்போ மனதில் தோன்றும் ஒருவித பெருமையையும் அடக்கிக் கொள்ளும் எனக்கு :-
975. பெருமை உடையவர் ஆற்றுவார் ஆற்றின்
அருமை உடைய செயல்

எதிரிகள் அதிகம்...! ஆமாங்க... எனக்குப் பிடிக்காதது எல்லாம் எதிரிகள் தானே...? ஹா... ஹா... எதிரிகள் இருந்தால் தானே வாழ்க்கையிலும் சுவாரசியம்...? நெருக்கடி வரப்போ, என்னோட பலம் தெரிஞ்ச அவங்க பக்கத்திலேயே போறதில்லை... ஆனா என்னோட பலம் + பலவீனத்தை அறிஞ்ச ஒரேயொரு எதிரியை மட்டும் விலக்கியும் வைக்கலை... இந்தப்பதிவிற்கும் அவர் தான் காரணம்...! என்னுடைய முக்கியமான எதிரி யாருன்னு உங்க எல்லோருக்கும் தெரியும்...! பதிவின் முடிவிலும் பாட்றார் :-
876. தேறினும் தேறா விடினும் அழிவின்கண்
தேறான் பகாஅன் விடல்


பார்க்கத் தெரிந்தால் பாதை தெரியும்... பார்த்து நடந்தால் பயணம் தொடரும்... பயணம் தொடர்ந்தால் கதவு திறக்கும்... கதவு திறந்தால் காட்சி கிடைக்கும்... காட்சி கிடைத்தால் கவலை தீரும்... கவலை தீர்ந்தால் வாழலாம்... வாழ நினைத்தால் வாழலாம்... வழியா இல்லை பூமியில்...? ஆழக்கடலும் சோலையாகும்... ஆசையிருந்தால் நீந்தி வா...!© பலே பாண்டியா கண்ணதாசன் விஸ்வநாதன்-ராமமூர்த்தி P.சுசீலா @ 1962 ⟫

நண்பர்களே... நெருக்கடி பற்றிய உங்களின் அனுபவம் என்ன...? நன்றி...

புதிய பதிவுகளை பெறுதல் :


தொடர்புடைய எண்ணங்களின் வண்ணங்கள் சில :


முகநூல் மூலம் கருத்துக்களை பகிர :

கருத்துகள்

  1. புத்தர் கதை, புத்தரின் பொன்மொழிகள் எல்லாம் அருமை.
    வாழ்க்கை தினம் தினம் நமக்கு பாடம் கற்றுக் கொடுத்துக் கொண்டுதான் இருக்கிறது.
    இதய குறள் அருமை.
    காலத்தில் தேவைபட்ட உதவி செய்தவர்கள் போற்றத்தக்கவர்கள்.
    கஷ்டகாலத்தில் உறுதுணையாக இருக்கும் குடும்ப உறவுகள் பெற்றவர்கள் கொடுத்து வைத்தவர்கள்.
    நல்லோர் வாக்கும், நல்ல புத்தகங்களும் எப்போதும் கை கொடுக்கும்.
    விடா முயற்சிக்கு வெற்றி நிச்சயம் உண்டு. பெருமையும் படலாம். நம்மால் முடிகிறதே என்று.
    நம்மைபற்றி நம்மைவிட யாருக்கு தெரியும்?
    வாழ்வு நம் கையில்
    பகிர்ந்த திருக்குறள்களும், சினிமா பாடலும் அருமை.
    நெருக்கடி காலங்களில் உதவிய நட்பும், குடும்பமும் . நம் மன உறுதியும் என்றும் வேண்டும் எல்லோருக்கும்.
    வாழ்க வளமுடன்.

    பதிலளிநீக்கு
  2. புத்தர் பொய் சொன்னாலும் அதற்கு உயர்ந்த நல்லதொரு காரணம் இருக்கிறது.

    இன்றைய அவசிய, அவசியமற்ற தேவைகள் மனிதனை கெட்ட வழியில்தான் கொண்டு செல்கிறது காரணம் அவ்வழியில் மக்கள் அதிகம் உள்ளனர்.

    நல்ல வழியில் காற்றாட இடம் (வெறிச்சோடி) கிடக்கிறது.

    ஜி அலைபேசியில்தான் படிக்கிறேன் நிறைய விளம்பரங்கள் வந்து படிப்பதற்கு இடையூறாக இருக்கிறது.

    நல்லதொரு பாடத்திற்கு நன்றி ஜி

    பதிலளிநீக்கு
  3. இடைவெளி கூடுதல் ஆனாலும் இந்தப் பதிவு ஒன்றுக்கு மூன்று முறை வாசிக்க வைத்தது. இதை எழுத தயக்கம் உண்டாகி இருக்கவேண்டும், ஆனாலும் எழுதுவோம் என்று எழுதி இருக்கிறீர்கள். புத்தர் சொன்ன பொய்மை 
    பொய்மையும் வாய்மை யிடத்த புரைதீர்ந்த
    நன்மை பயக்கும் எனின்.

    என்று இருந்தது.

    பதிலளிநீக்கு
  4. எப்போதும் போலவே அருமையானதொரு பதிவு வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  5. அன்பு தனபாலன், அருமையான பதிவு.
    குறள்களும், அதற்கான சந்தர்ப்பங்களும்
    எல்லோர் வாழ்க்கையிலும் வந்து போகின்றன.
    கண்ணதாசன் வரிகள் எப்பொழுதும் வாழ்விற்கு
    வலிமை சேர்க்கும்.

    துன்பம் நேர்கையில் யாழ் எடுத்தது போல வலிமை கொண்டவர்கள்
    மற்ற பெரியோரின் நற்சிந்தனைகள நினைத்துத் தெளிய வேண்டும்.

    நல்வாழ்வு வளம் பெற என்றும் வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  6. நெருக்கடி நிலை என்பது ஒன்று இல்லை. மனமுதிர்ச்சி பொறுத்து ஒவ்வொருவருக்கும் வெவ்வேறு விதமாக மாறுபடும்.

    பதிலளிநீக்கு
  7. புத்தரின் வாக்கியமும் கதையும் மிக அழகு...
    உண்மைதான் வாழ நினைத்தால் வாழலாம்... நம் கையில்தான் உள்ளது.

    பதிலளிநீக்கு
  8. புத்தரின் சிந்தனை நன்றாக உள்ளத்தில் தைத்தது.
    வள்ளுவர் வாக்கும் தங்கள் விளக்கமும் எனக்குப் படிப்பிக்கிறது.

    பதிலளிநீக்கு
  9. வாழ்க்கை சைக்கிளை பேலன்ஸ் செய்து ஓட்டுவது போலத்தான் போகும் வழியில் மேடு பள்ளங்கள் வரும் அதை கவனித்து ஒட்டுவது சைக்கில் ஒட்டுபவரின் கையில் இருக்கிறது நன்றாக ஒட்டத் தெரிந்தவர் சரியான இடத்தை சென்று அடைகிறார்கள் சில பேர் கஷடப்பட்டு அடைகிறார்கள் மற்றும் சிலர் கிழே விழுந்து சிரு பாதிப்புடன் செல்லுகிறாகள் சிலர் நல்லா அடிபட்டு அங்கேயே கிடக்கிறார்கள் அவ்வளவுதான்

    பதிலளிநீக்கு
  10. வணக்கம் சகோதரரே

    நல்ல பதிவு. புத்தரின் போதனைகளும், அவர் சம்பந்தபட்ட கதையும் நன்றாக உள்ளது. மனதின் தன்னம்பிக்கைதான் வாழும் வழியை தீர்மானிக்கிறது. அந்த நம்பிக்கைக்கு பலம் சேர்ப்பது கடவுளின் நாமாவளிகள். மனது சோர்வடையாமல் இருக்கவும் கடவுளின் அருள் பூரணமாக வேண்டும். கூடவே இந்த மாதிரி துணையாக வரும் பொருத்தமான குறள்களும், பெரியவர்களின் வழிகாட்டலும், "வாழ நினைத்தால் வாழலாம்" என்ற தன்னம்பிக்கை பாட்டும் வாழ்வில் சோர்வில்லாமல் வாழும் பலத்தை அதிமாக்கித் தரும். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  11. புத்தர் தொடர்பான நிகழ்வு மிக அருமை.

    வாசிக்கத் தந்தமைக்கு மிக்க நன்றி தனபாலன்.

    பதிலளிநீக்கு
  12. ஒரு உண்மையை உங்களிடம்பகிர்கிறேன் பலமுறை படித்தும் விள்ங்கியதை விட விளங்காததே அதிகம் சொல்லியதை விட விளங்கிக் கொள்ளசொல்லாமல் விடுவதே அதிகம் என்று தோன்றுகிறது மன்னிக்கவும்

    பதிலளிநீக்கு
  13. நல்லதொரு கதை..
    குறள் நெறியுடன் கவியரசரின் பாடல்.. பதிவில் வழங்கியதற்கு மகிழ்ச்சி...

    பதிலளிநீக்கு
  14. புரை தீர்ந்த நன்மை என்பதாலேயே புத்தர் Aஅவ்வாறு சொல்லியிருக்கிறார்.Pபதிவு அருமை நண்பரே

    பதிலளிநீக்கு
  15. புத்தர் பற்றி புனையப்பட்டிருக்கும் கதை நல்ல படிப்பினையைச் சொல்கியது. சில மனித மனங்கள் 'ஆ...  அப்போ இன்று என் கடைசி நாளில்லையா' என்று நினைத்து மறுபடியும் அவன் மனம் எனும் குரங்கு மரத்திலேறிவிடும்!

    பதிலளிநீக்கு
  16. .நெருக்கடிகள் பற்றி விவரித்து வாழ வழிகாட்டியிருக்கிறீர்கள் . நன்று .

    பதிலளிநீக்கு
  17. புத்தரின் மொழிகள் என்றும் ஒரு பாடத்தைத் தரும் என்பதை நான் அறிந்துள்ளேன்.

    பதிலளிநீக்கு
  18. பகிர்ந்திருக்கும் குறள்கள், பாடல்கள், புத்தரின் கதை எல்லாமே மிகவும் அருமை!
    /" பார்க்கத்தெரிந்தால் பாதை தெரியும், பாதை தெரிந்தால் பயணம் தொடரும்"/ கண்ணதாசனின் வரிகளுடன் முடித்திருக்கிறீர்கள். உண்மையில் அது தான் வாழ்க்கை. மனசென்பது மகா சமுத்திரம் என்ற ஒரு வாக்கியமுண்டு. வேண்டாதது எல்லாவற்றையும் அதில் போட்டு அமிழ்த்தி விட்டு, ஆழத்திலிருந்து வெளி வந்து விட வேண்டும்.

    பதிலளிநீக்கு
  19. தலைப்பில் எழுத்துப்பிழை உள்ளது. [ எதிர்பாராதது]
    தங்களிடமுள்ள அக்கறையில் சொன்னேன். இதை பிரசுரிக்கத்தேவையில்லை.

    பதிலளிநீக்கு
  20. புத்தரின் வாழ்க்கையில் நடந்த சம்பவம் அருமை! உங்கள் வாழ்க்கையில் நீங்கள் சந்தித்த சம்பவங்கள் ஒவ்வொன்றுக்கும் ஒரு திருக்குறளை பொருத்தமாய் இணைத்திருக்கிறீர்கள். 

    பதிலளிநீக்கு
  21. சிறப்பு. நீண்ட காலத்துக்குப் பின் வலைத் தளத்தில் சந்திக்கிறோம். அன்று வலைத்தளத்தில் எழுதிய பலர் இப்போது எழுதுவதில்லை. காலத்தை நோவதா, எழுதாதவர்களை நோவதா? நல்ல பதிவு. புத்தரின் கதை பிடித்திருக்கிறது.

    இன்று மட்டுமே வாழ்க்கை என எண்ணி சிறப்பாக வாழ வேண்டும்.

    https://sigaramclick.blogspot.com/

    பதிலளிநீக்கு
  22. புத்தர் சொன்ன வழி - சிறப்பான வழி.

    உங்கள் வாழ்க்கை தொடர்பு படுத்தி சொன்ன குறள் விளக்கங்கள் சிறப்பு.

    தொடரட்டும் பதிவுகள்.

    பதிலளிநீக்கு
  23. பாடல் அருமை, புத்தரின் போதனையும் குறள் விளக்கங்களும் அருமையோ அருமை :)

    பதிலளிநீக்கு
  24. வழமைபோல் கருத்துச் செறிவுடன் தொழிற்நுட்ப மேன்மையும்..இரசித்துப் படித்தேன்.வாழ்த்துகளுடன்..

    பதிலளிநீக்கு
  25. புத்தர் கதை அருமை.....இருந்தாலும் ஒரு சின்ன நெருடல்.... புத்தரே..! பொய் சொல்லிட்டாருப்பா என்றுதான் ...

    பதிலளிநீக்கு
  26. நல்ல தொகுப்பு.. புத்தர் கதை, குறள் -தங்கள்அனுபவங்கள் -- நல்ல அருமையான பதிவு நன்பரே.

    பதிலளிநீக்கு

  27. புத்தர் பற்றிய நிகழ்வைப் படிக்கும்போது

    ‘பொய்மையும் வாய்மை யிடத்த புரைதீர்ந்த
    நன்மை பயக்கும் எனின்.’

    என்ற குறளை மேற்கோள் காட்டுவீர்கள் என நினைத்தேன். ஆனால் ஐந்து குறட்பாக்களைத் தந்து அசர வைத்துட்டீர்கள். பாராட்டுகள்!

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

நகுதற் பொருட்டன்று நட்டல் மிகுதிக்கண்
மேற்சென்று இடித்தற் பொருட்டு. (குறள் 784)

நட்புச் செய்துகொள்வது நண்பரோடு சிரித்து மகிழ்வதற்காக மட்டும் அல்ல. மிகுதியாகத் தவறு செய்யும்போது, அவரைக் கடிந்து திருத்துவதற்கே ஆகும்.