நெருக்கடி...

(படம் : இருவர் உள்ளம்) உருகி விட்ட மெழுகினிலே ஒளியேது...? உடைந்து விட்ட சிலையினிலே அழகேது...? பழுதுபட்ட கோவிலிலே தெய்வமேது...? பனி படர்ந்த பாதையிலே பயணமேது...? இதய வீணை தூங்கும் போது பாட முடியுமா...? இரண்டு கண்கள் இரண்டு காட்சி காண முடியுமா...?

சொன்னது நீதானா...? சொல் சொல் சொல் என் மனமே...! பாட முடியாதுன்னு சொல்றது சரி, இரண்டு காட்சி ஏன் காணமுடியாது...?

அடேய் மனக்கண்ணால் நான் சொல்ற எல்லாத்தையும் நீ செய்றேயா...? எத்தனை தப்பு செஞ்சிட்டு, அடிபட்டு மிதிபட்டு திருந்துறே...றோம்...!

உங்கிட்ட தப்ப முடியுமா...? இன்னைக்கு எந்த சிக்கல்லே மாட்டி விடப் போறே...?

அதே... அதே தான்... ஒரு விசயத்தை இப்படி செய்யலாம் என்று நினைத்தால் ஒரு சிக்கல்... அந்தப்பக்கம் அதைவிட ஒரு பெரிய சிக்கல் என்ன செய்றது...?

அமைதியா இருக்க வேண்டியது தான்... சிக்கல் இல்லாமல் இருந்தால் தான் சிக்கல்...!

என்னது இந்தக் காலத்தில் அமைதியா...? அது தான் மிகப்பெரிய சிக்கலே...! சரி, இந்த சிக்கல்கள் எல்லாம் ஏன் வருது...?

நம்ம மேலே நமக்கே நம்பிக்கை இல்லாதப்போ, வெட்டி வீராப்புலே, அதனாலே யார் பேச்சையும் கேட்கிறதில்லேங்கிற சமயத்திலே, நமக்கு பிடிச்ச மாதிரி நடக்கும்ங்கிற அதீத எதிர்ப்பார்ப்பிலே - இப்படி பல இருக்கு... இருந்தாலும், நாமே ஒரு முடிவு எடுக்க வேண்டும்ன்னு ஒரு நிலைமை வரப்போ தான் சிக்கலின் ஆரம்பம்... கூடவே பயம், தடுமாற்றம், பதட்டம் போன்ற தம்பிகளும், அண்ணன் கோபம் அவர்களும் நமக்கே தெரியாமல் நம்முடன் வந்து உறவாடும்...!

க்கும்... நாமே முடிவு எடுத்தா தானே, நம்மோட பலமும் பலவீனமும் நமக்கே தெரியும், அது நல்லதிற்கு தானே...? ஆனா, இந்த சிக்கல்கள் எல்லாம் சேர்ந்து நம்மை ஒரு நெருக்கடிக்கு தள்ளி விடுகிறதே, ஏன்...? அதுவும் இந்த அவசர உலகத்தில் அதிகமாயிடுச்சே, ஏன்...?

எதற்கு(ம்) பொறுமை தேவை...?(!) பலசில நெருக்கடிகள் நம்மை செயல்பட வைக்கும்... சிலபல நெருக்கடிகள் சோர்ந்து போய் உட்காரவும் வைத்து விடும்...

இது தெரியாதா...? குழப்பமே அங்கே தானே...! நெருக்கடிகள் ஒருவரை நல்லவரா மாற்றுமா...? அல்லது கெட்டவரா மாற்றுமா...?

இது சிக்கலான கேள்வியாச்சே... ம்... அவரவர் தேர்ந்தெடுக்கும் பாதையைப் பொறுத்து...! கரடுமுரடான பாதை அமைந்து விட்டாலும், கிடைப்பது அனுபவம்... அந்த அனுபவம் தான் நம்மை திருத்தி, மற்றவர்களை திருத்தும் ஆற்றல் பிறக்கும்...

என்னது திருத்தும் ஆற்றலா...? அது அந்தக்காலம்... நான் கேட்கிறது இந்தக்காலம்... நம்மை நாமே திருத்திக்கொள்ள முடியவில்லை... இதிலே அடுத்தவங்களை... ஹெஹெ... ஹேஹே... நீ பேசுறது உன்னோட மனசுகிட்டேங்கிறத மறந்துட்டே...!

விட்டுடுப்பா, உன் சிந்தனைக்கே வர்றேன்... சரி, நெருக்கடிகள் என்பவை யாவை...?

எனக்கு தெரிந்து நேர நெருக்கடிகள், தேவை நெருக்கடிகள், இவைகள் நம்மை நெருக்கியடித்துக் கொண்டிருப்பவை... இந்த நேரத்திற்குள் சாதிக்க வேண்டும், இலக்கை அடைய வேண்டும் என்று காலம் தருகின்ற நெருக்கடிகள்... பணம், படிப்பு, வேலை சம்பாத்தியம் போன்றவை நமக்கு தேவைகள் தருகிற நெருக்கடிகள்... அவசரகதியில் குறிப்பிட்ட காலத்திற்குள் வகுக்கப்படுகிற இலக்குகளை அடைய வேண்டுமென்றால், எப்படியும் முடித்தாக வேண்டுமென்றாலே நெருக்கடிகள் ஆரம்பித்து விடுகிறது... அதற்கு நாம் எப்படி இருக்க வேண்டும்...?

32 வெள்ளைப்பூக்களும் பூத்துக்கொண்டிருக்க வேண்டும்... அதாவது புன்னகை...! முறைக்காதே, அவசரத்திலும் கோபத்திலும் எடுக்கும் முடிவுகள், நெருக்கடிகளை அதிகப்படுத்தும்... அதனால் நல்லவராக மட்டும் இருந்தால் போதாது, வல்லவராகவும் இருக்க வேண்டும்...

வல்லவன் கையில் நல்லவன் பொம்மை... உள்ளவன் முன் இல்லாதவன் பொம்மை... அல்லும் பகலும் உழைப்பவன் பொம்மை... தினம் அல்லல் பட்டு அலைபவன் பொம்மை... அன்பின் அணைப்பில் அனைவரும் பொம்மை... ஆசை வார்த்தையில் அறிவும் பொம்மை... இன்பச் சோலையில் இயற்கை பொம்மை... அந்த இயற்கை அமைப்பில் எதுவுமே பொம்மை... + படத்தின் பெயரும் பொம்மை...

// தாயின் மடியில் பிள்ளையும் பொம்மை... தலைவன் முன்னே தொண்டனும் பொம்மை... கோயிலில் வாழும் தெய்வமும் பொம்மை - அதை கும்பிடும் மனிதர் யாவரும் பொம்மை... நீயும் பொம்மை நானும் பொம்மை... நெனச்சு பாத்தா எல்லாம் பொம்மை... // சிரிக்கச் சொன்னா, அழுகை பாட்டிற்கு போறே... விசயத்திற்கு வா...

சிக்கல்கள் சேர்ந்து நெருக்கடிகள் அதிகமாகி அழுதாலும், அதன்பின் ஒரு தெளிவு பிறகும் என்பது தெரியாதா...? சரி, ஆனா வல்லவராக முயற்சிக்கும் பட்சத்தில், நல்ல குணங்களிருந்து சில சமயம் வழுக்கி விடவும் வாய்ப்புகள் ஏற்பட்டு விடுமே...! காலம் தருகிற நெருக்கடி, வாழ்வின் தேவை தருகிற நெருக்கடிகள், நம்மை நல்லவராக்குமா...? இல்லை, கெட்ட வழியில் தள்ளி விடுமா...?

இதற்கு பதில் சொல்ல...

இது போல் சிந்தனை பதிவுகள் எனது வலைப்பக்க draft-ல் இருக்கும்... எனக்கு இருக்கும் நெருக்கடியில் ஒன்றை தட்டி விட்டு உள்ளேன்... தொடரும்...

(படம்: பந்த பாசம்) நித்தம் நித்தம் மாறுகின்றதெத்தனையோ... நெஞ்சில் நினைத்ததிலே நடந்தது தான் எத்தனையோ... கோடு போட்டு வாழ்ந்தவர்கள் எத்தனையோ... கொண்ட குறியும் தவறி போனவர்கள் எத்தனையோ...

நண்பர்களே... தங்களின் கருத்து என்ன...?

புதிய பதிவுகளை பெறுதல் :


தொடர்புடைய எண்ணங்களின் வண்ணங்கள் சில :


முகநூல் மூலம் கருத்துக்களை பகிர :

கருத்துகள்

 1. 32 பல்லும் வெளிக்கிட்டால் அந்த முகம் மண்டையோடு போல பயமுறுத்தாதா? மேலாறு கீழாறு பற்களே அந்த வேலையை (சிரிப்பின் அழகைத்) செய்துவிடுமே.

  பதிலளிநீக்கு
 2. கால நெருக்கடி, வாழ்வின் தேவைகள் நெருக்கடி நல்லவர்கள் பெரும்பாலானவர்களை மாற்ற முடியாது.

  சங்கு சுட்டாலும் வெண்மை தரும்.

  பதிலளிநீக்கு
 3. எந்த நெருக்கடியிலும் நான் நிலை பிறழ்ந்ததில்லை!...

  காலம் என்னைத் தடம் மாற்றிக் கெடுக்கவில்லை..
  புடம் போட்டு எடுத்திருக்கின்றது...

  பதிலளிநீக்கு
 4. அருமையான பதிவு வேலை நெருக்கடியிலும் பதிவு போட்டு அசத்தி விட்டீர்கள்.
  வாழ்த்துக்கள்.
  அவரவர் வாழ்க்கையை அவரவர் தான் வாழ்ந்தாக வேண்டும் உண்மை.
  பொறுமையும், நம்பிக்கையும் வாழ்வில் வேண்டும். நெருக்கடியை சமாளிக்கும் வல்லமையும் வேண்டும். நல்லவனாக மட்டும் இருந்தால் போதாது வல்லவனாக இருக்க வேண்டும் என்று நீங்கள் சொல்வது சரிதான்.
  உங்கள் பதிவை நிதானமாய் படிக்க வருகிறேன்.
  காலை வேலைகள் நேர நெருக்கடி பின்னர் வருகிறேன்.

  பதிலளிநீக்கு
 5. ஜி பல நேரங்களில் நானும் இப்படி மனசாட்சியுடன் பேசிக்கொள்வேன், சில நேரங்களில் (இப்போது பல நேரங்கள் தனிமைதான்) வாய் விட்டு பேசுகிறேன்.

  வேறு மாதிரி தவறாக நினைத்து விடாதீர்கள்

  நீங்கள் விவாதிப்பது பாடல்களின் வழி
  நான் விவாதிப்பது வார்த்தைகளின் வழி

  நிச்சயமாக நான் வெற்றிகளையும், தோல்விகளையும் கண்டு இருக்கிறேன்.

  ஆனால்

  நிச்சயமாக வெற்றிக்கான பலன்கள் பிறர் சார்ந்ததும், தோல்விக்கான பலன்கள் என்னைச் சார்ந்ததுமாக அமைவதும்தான் இதில் ஆச்சர்யம்.

  ஒருவேளை விதியின் அமைப்பின்படியே எனது சிந்தை செல்கிறதோ... என்னவோ...

  இப்பதிவு ஏனோ இனம் புரியாமல் எனக்கு மிகவும் பிடித்து இருக்கிறது.

  தொடர்ந்து வரட்டும் ஜி
  டிராப்ட் பதிவுகள்...

  பதிலளிநீக்கு
 6. நமக்குப் பிடிச்ச மாதிரி எல்லாம் நடந்து விடுகிறதா? எங்கே? நடந்ததை விரும்பி விட வேண்டியதுதான்.

  பதிலளிநீக்கு
 7. நாமே முடிவெடுக்க வேண்டி இருந்தால் பதட்டம்தான். ஆனால் அது பலவகையில் நல்லது. நல்ல முடிவும் எடுக்கலாம். எடுத்தபின் யாரையும் குறை சொல்லவும் வேண்டாம்!

  பதிலளிநீக்கு
 8. நெருக்கடிகள் "சித்தார்த்தர்களையே" தடுமாற வைக்கும் காலம் இது! என்ன நெருக்கடியிருந்தாலும் சரியான முடிவு எடுக்காவிட்டால்...

  பதிலளிநீக்கு
 9. பல நேரங்களில் தெளிவு பிறக்கும் நேரம் காலம் கடந்திருக்கும்!

  பதிலளிநீக்கு
 10. அலை மீது தடுமாறுதே சிறு ஓடம்..
  சுமை தாங்காமலே கரை தேடும்
  சென்று சேரும்வரை இவர் பாவம் பாவம்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஜன்னல் எங்கும் கண்கள் பார்க்கின்றதே - ஏதோ சொல்லிச் சிரிக்கும்...
   தர்மம் பேசும் இந்த ஊர் உள்ளதே - சாகும் முன்பே எரிக்கும்...
   தானாய் ஏணி தரும் மேலே ஏறவிடும் - மீண்டும் ஏணி பறிக்கும்...
   ஆ ஆ ஆ ஆ…தடுமாறும் இங்கு நியாயங்கள் - இதன் நியாயங்கள்...
   கண்ணீரில் தள்ளாடும் (அனைவரும்) தீபங்கள்...

   நீக்கு
  2. பதிவு ஒரு ஆச்சரியம் என்றால் இருவரும் பாடுவது ஆனந்தம்.

   நீக்கு
 11. நம்ம மனசோட நாமளே பேசறது ஒரு அலாதியான விஷயம்தான். அதை ரொம்ப நல்லாவே நீங்க செஞ்சிருக்கீங்க. உங்களுடைய பதிவில் பின்னூட்டத்தில் காட்ட விரும்பும் பகுதிகளை காப்பி, பேஸ்ட் செய்ய முடிவதில்லை. ரைட் க்ளிக் டிசேபிள் செய்துவிட்டீர்கள் போலிருக்கிறது. அந்த வசதி இருந்தால் இன்னும் விரிவாக கருத்துரை எழுத வசதியாக இருக்கும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஏனெனில், அது பல காரணங்களுக்காக... அதில் முக்கியமானதில் கடைசியாக வருவது ஒன்று... (கவனிக்க கடைசியாக) : அது பதிவு திருட்டு... நன்றி ஐயா...

   நீக்கு
 12. அவசரகாலத்தில் நெருக்கடியில் எடுக்கும் முடிவுகள் சரியாக இருக்காது.
  நல்லவர்கள் அவசர முடிவு எடுக்க மாட்டார்கள்.

  பதிலளிநீக்கு
 13. டிடி பல சமயங்களில் நம் மனசாட்சியே நம்மை எச்சரிக்கும்.(உள் மனது) ஆனால் அதையும் மீறி சில சமயங்களில் இந்த மற்றொரு மனது இருக்கிறதே அது வந்து கொஞ்சம் ஓவர் தன்னம்பிக்கையில் ஒரு முடிவு எடுக்கும் அல்லது இப்படிச் செய் என்று சொல்லும். அதை அப்படியே ஏற்றுக் கொண்டு செய்தால் பிறழும். கொஞ்சம் அதையும் ஆராய்ந்து செய்தால் நல்ல முடிவு எடுக்க இயலும் தான்.

  கீதா

  பதிலளிநீக்கு
 14. நாமே முடிவு எடுக்க வேண்டிய நிலையில்//

  மனதைக் கொஞ்சம் அமைதிப் படுத்திக் கொண்டு, அதாவது மனதில் எந்த எண்ண ஓட்டமும் இருக்கக் கூடாது...வெற்றிடமாக அதில் ஒன்றே ஒன்று மட்டும் நுழைய அனுமதி உண்டு...நம் மனதில் பதிந்து போன இறைவன்/வி பிரார்த்தனை செய்துவிட்டு முழுவதையும் ஒப்படைத்துவிட்டால் தெளிவு பிறக்கும். எனது அனுபவம் இது. ஒவ்வொருவரின் அனுபவமும் வித்தியாசமாக இருக்கலாம்.

  நெருக்கடிகள் வரும் போது சோர்வுக்கென்ன பஞ்சம்? எல்லாம் கலந்து கட்டி நம்மை கிரிக்கெட் க்ரவுன்ட் என்று நினைத்து சிக்ஸர் பௌன்ட்ரி என்று அடித்து ஆடும். பின்னே சோர்வு வராம இருக்குமா?

  அதற்குத்தான் நான் செய்வது மேலே சொன்னது...

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அப்பா அம்மா இருக்கும் வரை, அவர்களின் மதிப்பை யாரும் உணரும் வாய்ப்பு கிடைப்பதில்லை... அதனால் தான் கூறினேன் : // நாமே ஒரு முடிவு எடுக்கும் நிலை //

   நீக்கு
 15. நெருக்கடிகள் பல பிம்பங்களில் பூச்சாண்டி காட்டும் தான். நீங்கள் சொல்லியிருப்பது போல பொறுமை பொறுமை!! ஹிஹிஹி இதுதானே நம் வசப்படமாட்டேங்குது..

  எத்தனை நெருக்கடி வந்தாலும் அதைக் கடந்து வருவதில் தான் இருக்கிறது மகிழ்ச்சி. வாழ்க்கை என்பது ஹர்டில் ரிலே. ஒன்றைத் தாண்டுவோம் அடுத்து ஒன்று ரெடியாக இருக்கும் வாம்மா வா என்று வரவேற்கும்.

  அனைத்தையும் கடந்து வரும் போது மூப்படைந்து....

  நெருக்கடிகள் கற்றுத் தரும் பாடங்கள் நிறைய. விலைமதிப்பில்லாதவை. நாம் கூர்ந்து நோக்கினால் மட்டுமே விளங்கும். இல்லை என்றால் அதுவும் போய்விடும். நமக்குத்தான் நட்டம்.

  எனவே நெருக்க்டடிகள் கற்றுத் தரும் பாடங்களைக் கவனித்துப் பொறுமையுடன் கையாண்டால் ஓரளவு கடந்துவிடலாம்.

  ஆனால் நம்மையும் மீறி வரும் நெருக்கடிகள்?!!

  அவ்வளவுதான் இறைவா டோட்டல் சரண்டர்.

  எத்தனையோ நெருக்கடிகள்...நல்ல காலம் மனம் கலங்கியதில்லை.

  நல்லதொரு பதிவு டிடி..

  கீதா

  பதிலளிநீக்கு
 16. வ்ல்லவராக முயற்சி செய்யும் போது ஆம் குணங்கள் மாறக் கூடும். அதற்குத்தான் சொல்லுவது நாம் வல்லமை படைத்தவர் ஆயினும், நம் மீதே நம்பிக்கை இருந்தாலும் கர்வம் மேலிடாமல் ஆணவம் தலை தூக்காமல் இருக்கத்தான் அந்தப் பரம்பொருள் அவ்வப்போது குட்டிவிடுகிறான்...அதனால் தான் நம்மை மீறிய சக்தி ஒன்று இருக்கு என்று அர்ப்பணிக்கச் சொல்வது. நமக்கு ஒரு தலைவன் இருக்கிறான் அவனுக்குப் பதில் சொல்லியாகணுமே என்று..

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இதுவரை என் வாழ்வில் நடந்தவற்றை தொகுத்துக் கொண்டிருக்கின்றேன்... அவற்றை குறளோடு சொல்ல முடியுமா..? என்றும் யோசிக்கிறேன்... இதன் தொடர்ச்சியாக அடுத்த பதிவை இனி எழுத வேண்டும்... உங்கள் கருத்துரையிலும் ஒரு அருமையான கருத்தும் உள்ளது... அற்புத குறளும் உள்ளது... நன்றி சகோதரி...

   நீக்கு
 17. வணக்கம் சகோதரரே

  நெருக்கடி தரும் வாழ்வை பற்றி நமக்கும் நம் மனதுக்குமான சுவையான அலசல். தாங்கள் சொல்லிய ஒவ்வொரு வார்த்தைகளும் அனுபவம் மிகுந்தவை. ரசித்தேன். எந்த ஒரு பிரச்சினைக்கும் எப்போதும் முதலில் நம் மனதோடுதானே போராடுகிறோம்.பொதுவாக நல்லவர்கள் நல்லவிதமாகத்தான் நெருக்கடியை முறியடிக்கப் பார்ப்பார்கள்.அதற்கு மாறாக விதி மாறது நின்றால் நல்லவர் என்ற பெயரும் சற்றே புரட்டி விடும் அபாயமும் உண்டு. இதில் தெய்வபலம் அதிர்ஷ்டவசமாக அவர்களுடன் சேர்ந்தால் வல்லவராக மாறவும் சாத்தியமுண்டு. தங்கள் பதிவு நிறைய சிந்திக்க வைக்கிறது. பகிர்வுக்கு மிக்க நன்றி..

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
 18. நெஞ்சில் நினைப்பதிலே நடப்பதுதான் எத்தனையோ//

  சித்தம், நெஞ்சம் இரண்டும் பேசும் பேச்சு.
  நானே என்று எடுத்த முடிவுகள்
  நன்மையும் ....பிறருக்கு,
  கடுமை எனக்கு என்று நிகழ்ந்திருக்கின்றன.
  நெருக்கடிகள் இல்லாத வாழ்வில் சுவை ஏது.
  மீண்டும் மீண்டும் சுடப் படுவதால் பொன் பொலிகிறது.

  புத்தன் சித்தம் போலத் தடுமாறாமல் இருக்கும் புத்தி
  யாரிடமாவது இருக்கிறதா.

  ஆசை வழி போகும் மனம் அவதியுறும்.
  அறிவு வழி போக மனம் ஆசைப் படாது.

  அன்பு தனபாலன், நன்மை பெற்று நலமே வாழ்க.
  மிக அருமையான பதிவு,.

  பதிலளிநீக்கு
 19. அவரவர் மனதில் நடக்கும் போராட்டம். முடிந்தவரை பல சூழல்களை, எதிர்மறை நிலையிலும்கூட, நிலை பிறழாமல் சமாளித்துள்ளேன் என்பதை நினைக்கும்போது பெருமையாக உள்ளது.

  பதிலளிநீக்கு
 20. ‘நீலமலைத் திருடன்’ திரைப்படத்தில் திரு T.M.S அவர்கள் பாடும் ‘சத்தியமே லட்சியமாய்க் கொள்ளடா’ என்ற பாடலில் வரும்

  ‘எத்தனையோ மேடுபள்ளம் வழியிலே - உன்னை
  இடரவைத்து தள்ளப் பார்க்கும் குழியிலே
  அத்தனையும் தாண்டி காலை முன் வையடா - நீ
  அஞ்சாமல் கடமையிலே கண் வையடா’

  என்ற வரிகள் நினைவுக்கு வருகின்றன. எனவே தங்கள் பணியை தொடருங்கள். சிக்கல்கள் இருந்தாலும் அவைகள் தீர்ந்துவிடும்.

  பதிலளிநீக்கு
 21. மனதோடு ஒரு பேச்சு. இப்படிப் பேசிக் கொள்வது சில சமயங்களில் நன்மை பயக்கும்...

  நல்லதொரு பகிர்வு தனபாலன்.

  பதிலளிநீக்கு
 22. நெருக்கடியிலும் வாழ்வில் ஓர் அலசல் பாடல்கள் தேர்வு மிக அருமை படித்தேன் ரசித்தேன் வாழ்த்துக்கள் தனபாலன்

  பதிலளிநீக்கு
 23. சிறப்பான பகுப்பு ஆய்வுப் பதிவு
  உள்ளங்களில் உள்ளதை அலசி
  சரியான எண்ணங்களை - அவரவர்
  எண்ணிக்கொள்ள உதவும் பயிற்சி இது!

  பதிலளிநீக்கு
 24. அழகாக உள்ளது மனசாட்சியுடனான உரையாடல். அடுத்த பதிவிற்காக ஆவலாக காத்திருக்கிறோம்

  பதிலளிநீக்கு
 25. நெருக்கடிகளால்தான் நம்மை நாமே உணர்கிறோம். நம்மைச் சூழ்ந்திருப்பவர்களையும் உணர்கிறோம். முடிவு நல்லதோ கெட்டதோ, அனுபவம் கிடைக்கிறது. வாழ்க்கைப் பாட அனுபவம். அதுதான் முக்கியம். பொம்மை பாடல் எனக்கு மிகவும் பிடித்த பாடல். சிந்தனைப் பகிர்வுக்கு நன்றி தனபாலன்.

  பதிலளிநீக்கு
 26. எழுதுவதில்லையே என்று என்னை உசுப்பினீர்கள். இப்போது நீங்கள் எழுதுவதில் சுணக்கம் ஏற்பட்டிருக்கிறதே! வாத்தியாரே, இது தகுமா? சீக்கிரம் அடுத்த பதிவு போடுங்கள். காத்திருக்கிறோம்!

  பதிலளிநீக்கு
 27. மனதுக்கு மட்டுமல்ல எல்லாருக்கும் சொன்னது போலிருக்கிறது. ஒவ்வொரு வார்த்தையும் உண்மை. தொடருங்கள் சகோ

  பதிலளிநீக்கு
 28. உங்களின் பதிவுகளின் மூலம் பாட்ல்களின் தத்துவங்கள் அழகாக வந்து விழும். குரளும் சரி தத்துவமும் சரி வாழைப் பழத்தில் ஊசி நுழைப்பதைப் போல் சொல்லிச் செல்வீர்கள்

  பதிலளிநீக்கு
 29. "அது இருந்தா இது இல்லே...இது இருந்தா அது இல்லே ..."
  அது இருக்கும்பொழுது இதைத் தேடினால் நெருக்கடி, இது இருக்கும்பொழுது அதைத் தேடினால் நெருக்கடி; இந்த நெருக்கடி வேண்டாம் என்று ஒதுங்கினாலும் உலகம் தரும் நெருக்கடி ...உலகைத் தள்ளிவைத்து உலகைப் படைத்தவனை முன்வைத்தால் இல்லை நெருக்கடி!
  சிந்திக்க வைத்துவிட்டீர்கள் அண்ணா..நானும் பாடல் சொல்லிட்டேனே, பாருங்கள் அது உங்கள் காற்று :))

  பதிலளிநீக்கு
 30. பழைய பாடல்களின் மடியில்
  ஒரு நாள்முழுக்கக்கிடந்தேன்,

  பதிலளிநீக்கு
 31. You're an astoundingly talented blogger. I have joined your feed and envision searching for a more noteworthy measure of your marvelous post. Furthermore, I have shared your site in my casual associations!
  OFFICE.COM/SETUP
  OFFICE.COM/SETUP
  MCAFEE.COM/ACTIVATE

  பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

நகுதற் பொருட்டன்று நட்டல் மிகுதிக்கண்
மேற்சென்று இடித்தற் பொருட்டு. (குறள் 784)

நட்புச் செய்துகொள்வது நண்பரோடு சிரித்து மகிழ்வதற்காக மட்டும் அல்ல. மிகுதியாகத் தவறு செய்யும்போது, அவரைக் கடிந்து திருத்துவதற்கே ஆகும்.