🏠 வணக்கம் காப்பகம் நன்றி

தேடல் 🔎



புதிய பதிவுகளை பெற ✉



குரல்வழிப் பதிவேற்றம்...!

அனைவருக்கும் வணக்கம்... புதுக்கோட்டையில் நடந்து முடிந்த இணையத் தமிழ்ப்பயிற்சி முகாமில், நடந்தவற்றை இங்கே சொடுக்கி காணலாம்... அதில் இப்பதிவின் தலைப்பை மட்டும் இன்றைக்குப் பேசப்போகிறேன்...! திருமிகு முத்துநிலவன் ஐயா அவர்களுக்கும், நம் நண்பர் நீச்சல்காரன் ராஜாராம் அவர்களுக்கும் நன்றி... எனது பாணியில் பதிவிற்குச் செல்வோமா...?

பலருக்கும் இதைப் பற்றி அறிந்து தெரிந்து புரிந்து பயன்படுத்திக் கொண்டு இருக்கலாம்... இருந்தாலும் சிலருக்கு உதவும்...! கைப்பேசியை, பேசியாக மட்டும் பயன்படுத்துகிறேன்... சுருக்கமாக : பயணத்தில் - வியாபார நோக்கத்திற்காக - இனி வாசிக்கப் போகும் நுட்பங்கள் உட்பட பலதும் - கைப்பேசி எனக்கு ஒரு சின்ன கணினி...!

மலர் இருந்தால் மணம் இருக்கும் தனிமையில்லை... செங்கனி இருந்தால் சுவை இருக்கும் தனிமையில்லை...2 கடல் இருந்தால் அலை இருக்கும் தனிமையில்லை...2 நாம் காணும் உலகில் ஏதும் தனிமை இல்லை... தனிமையிலே... தனிமையிலே இனிமை காண முடியுமா...? வாங்க முடியுமா-ன்னு பார்ப்போம்...

1) குரல்வழிப் பதிவேற்றம் (கைப்பேசி) : இதற்கு உங்கள் கைப்பேசியில் Play store சென்று, Gboard-யை தரவிறக்கம் (download) செய்ய வேண்டும்...(இதே போல் பல 'ஆப்'புகள் Apps ! உள்ளன என்பதை அறியவும்) "உங்கள் வீட்டுப்பத்திரம் எங்கே வைத்துள்ளீர்கள்...?" - என்பதைத் தவிர, மற்றதற்கெல்லாம் Allow கொடுத்து விட்டால், நிறுவி விடலாம்... இதற்குப் பாதுகாப்பும் செய்யலாம்... இது வேண்டாமே என்று தவிர்க்கிறேன்... அதுவுமில்லாமல், இப்போது வரும் சமீபத்திய கைப்பேசிகளில், Google voice typing-ம் இணைந்தே வருகிறது... கல்லூரி படிக்கும் உங்கள் குழந்தைகளிடம் கேட்டால், அழகாகச் சொல்லிக் கொடுப்பார்கள்...! அல்லது கீழுள்ளவற்றில் இரண்டாவது நுட்பத்தை (translate.google.com) பயன்படுத்தலாம்... அடுத்த பகுதிக்கு விரைவோம்...!

2) குரல்வழிப் பதிவேற்றம் (கணினி) : நாம் தமிழில் பேசுவதை, கணினி எழுத்துக்களாக மா(ற்)றுவதை தான் பார்க்கப் போகிறோம்... அதற்குத் தேவை, பலவற்றை இலவசமாகத் தரும் Google உலாவி-க்கு (browser) செல்லவும்... முகவரி இடத்தில் (Address bar) docs.google.com (← இங்கும் கொடுக்கலாம்) என்று தட்டச்சு செய்யவும்... உங்களின் வலைப்பக்க மின்னஞ்சல் முகவரி (Gmail id) மற்றும் கடவுச்சொல் (Password) கொடுத்து உள்ளே செல்லவும்... தங்களிடம் இருக்கும் Microphone-யை கணினியில் இணைக்கவும்... அதை இணைக்கும் இடம் அநேகமாக இளஞ்சிவப்பு நிறமாக இருக்கும்... இணைத்தவுடனேயே அதற்கான செய்தி கணினியில் வரும்... அதை ஏற்றுக் (Ok) கொள்ளுங்கள்...

இந்தப் பக்கத்தில், வலது புறம் கீழ் சற்றே பெரிய என்று தெரிவதற்கு மேல் சுட்டியை (mouse) கொண்டு சென்றால், தெரியும் (Create new document ) பென்சில் icon-யை சொடுக்கினால், Untitled document எனும் பக்கத்திற்கு வந்து விடுவோம்... மேலே உள்ள Tools என்பதைச் சொடுக்கி, Voice Typing என்பதைத் தேர்வு செய்யுங்கள்... இடது பக்கத்தில் சற்றே பெரிய Microphone-யை காண்பீர்கள்... அதற்கு மேலே English (US) என்பதைச் சொடுக்கி, தமிழ் (இந்தியா) என்பதைத் தேர்வு செய்யவும்...

அந்த Microphone அருகே சுட்டியைக் கொண்டு சென்றால், Voice typing help இருப்பதைச் சொடுக்கினால், வலது பக்கம் உதவி Help-என்று ஒரு சிறிய பக்கம் திறக்கும்... அதை நன்றாகப் படித்துவிட்டு மூடி விடலாம்... அதில் படித்தவற்றை விட, இதை இனி பயன்படுத்தும் போது அதிகம் அறியலாம்... இப்போது Microphone-யை சொடுக்குங்கள்... அது இளஞ்சிவப்பு நிறமாக மாறி, நீங்கள் தமிழில் பேசுவதை எழுதத் தயாராக உள்ளது...!

கண்மணி... அன்புள்ள... காதலன்... நான்... நான் எழுதும் லெட்டர்... ச்சி... மடல்... இல்ல கடுதாசி வெச்சுக்கலாமா...? வேணாம் கடிதமே இருக்கட்டும்... படி... !?!

என்னங்க ஆச்சி உங்களுக்கு...? ஒன்னு FM ரேடியோவிலே பாட்டு, இல்லேன்னா கம்பியூட்டரிலே பாட்டு... இதென்ன வஜனம்...? ஸ்கைப்புலே பேசுறத விட்டு பல வருசமாச்சே...! மானிட்டர் மேலே கேமராவும் இல்லே... தலையிலே வேற ஹெட்போனும் மைக்கும்...! அப்பப்போ எதைப்பார்த்து சிரிக்குறீங்க...? குணா கமல் மாதிரியே ஆயிட்டிங்களா...? காய்ச்சல் ஏதும் இல்லையே...?

இல்லேம்மா இது, இது... பேசிப் பேசி எழுத வைக்கிறது...! டீ போட்டு தாயேன்...!

அபிராமி... அபிராமி... எங்க ஊரு அபிராமி கோவில் அம்மனை கூப்பிட்டேன் நண்பர்களே...! தனிமையிலே இனிமை காண முடிகிறது...! கணினியிடம் பேசுவது குறள் அல்லது பாட்டு... குறள் வழி பதிவேற்றம் தான் எனக்குச் சரியாக வரும்...! யாருக்கு இது பயன் தரலாம் என்பதை, கீழே நண்பர்களிடம் பேசியுள்ளதை வாசிக்கும் போது அறியலாம்... சரி இப்போது, நீங்கள் பேசுவது எவ்வாறு இருக்க வேண்டும் என்பதற்காகத் தான், மேலே ஒரு எடுத்துக்காட்டு... உங்களின் இணைய இணைப்பின் வேகத்திற்கு ஏற்ப நல்லதொரு தமிழில் பேசவும்... சிறிது நேரம் அமைதியாக இருந்தால், Sorry, didn't hear that. என்று சொல்லும்...! மீண்டும் microphone-யை சொடுக்கிப் பேசவும்... அதே சமயம் இந்தப் பக்கத்தை விட்டு, வேறு பக்கத்திற்கு (tab) சென்றாலும் microphone தானாகத் தனது தொடர்பைத் துண்டித்துக் கொள்ளும்...!

அப்புறம் நடுநடுவுலே மானே, தேனே, பொன்மானே இதெல்லாம் போட்டுக்குற மாதிரி, எல்லாவற்றையும் பேசின பிறகு, அங்கங்கே வேண்டிய அனைத்து நிறுத்தற் குறிகள் (punctuation) மற்றும் பத்தி பிரிப்பது உட்பட அனைத்தையும் நீங்கள் தான் செய்ய வேண்டும்... நீங்கள் செய்யும் மாற்றங்கள் அனைத்தையும், அவ்வப்போது Google Docs தானே சேமித்துக் கொள்ளும், கவலை வேண்டாம்... இந்த கோப்பிற்கு (file) ஒரு பெயர் வைப்போமா...? மேலே File என்பதைச் சொடுக்கி, Rename-யையும் சொடுக்கி, பெயர் இடவும்... (Voice Typing - சரி தானா...?) இதே போல் இன்னொரு கோப்பு உருவாக்க வேண்டும் என்றால், File என்பதைச் சொடுக்கி, New என்பதில் Document-யை தேர்வு செய்யவும் - இது தேவையில்லை என்று நினைக்கக் காரணம் :-

நீங்கள் இதுவரை எழுதிய (பேசின) அனைத்தையும் சுட்டியால் தேர்வு செய்து விட்டு, Copy (Ctrl-c)-செய்தோ அல்லது Cut (Ctrl-x)- -செய்தோ, எழுதினது (01) வலைப்பதிவிற்காக என்றால், உங்களின் வலைப்பக்கம் சென்று New post என்பதைச் சொடுக்கி அங்கு paste செய்யவும்... எழுதினது (02) கருத்துரையாக இருந்தால், நண்பர்களின் வலைப்பக்க கருத்துரைப் பெட்டிக்குச் சென்று, அங்கு paste... எழுதினது (03) முகநூலுக்காக (Facebook) என்றால், அங்குச் செல்லவும்... எழுதினது (04) புலனத்திற்காக (WhatsApp-பிற்காக) என்றால்... கொஞ்சம் பொறுங்க... கணினியில் புலனத்தை கொண்டு வந்து விடுவோம்...!

இப்போது உலாவியின் அடுத்த பக்கத்தை மீண்டும் சொடுக்கி, (tab) web.whatsapp.com (← இங்கும் கொடுக்கலாம்) என்று தட்டச்சு செய்யவும்... அடுத்து என்ன செய்ய வேண்டும்...? என்று அங்கு 3 வரிகளில் சொல்லப்பட்டதை போல் செய்யவும்... Keep me signed in என்பதற்கு முன்னுள்ள சிறு பெட்டியில் (Check box) ஒரு டிக் இது போல் → செய்து விட்டால், அடுத்த முறை கணினியைத் திறந்த பின், 3 வரிகளில் சொல்லப்பட்டதைச் செய்யத் தேவையில்லை... இந்தப் பக்கம் சென்றாலே, நம் கைப்பேசியில் உள்ள WhatsApp நம் கணினிக்கு வந்து விடும்... இல்லே, புரியலே, படத்தோட ஒரு பதிவு வேண்டும் என்பவர்களுக்கு இதோ இணைப்பு : WhatsApp-ஐ கம்ப்யூட்டரிலும் பயன்படுத்தலாம் நன்றி நம் இனிய நண்பர் தமிழ்வாசி பிரகாஷ்...

© பாசமலர் கண்ணதாசன் விஸ்வநாதன்-ராமமூர்த்தி 🎤 K.ஜமுனா ராணி @ 1961 ⟫
வரிகள் மாற்றப்பட்டுள்ளது !


பாட்டொன்று பாடினேன்... பரவசமானேன்... நானதை எழுதவில்லை... ஹோய்... திரையின் முகத்தைப் பார்த்தார் ஒருவர்... நானதை எழுதவில்லை...2 // நான் சொன்ன வார்த்தை அவர் மட்டும் கேட்டார்... எழுதினார் பேசவில்லை ஹோய் எழுதினார் பேசவில்லை... அவர் எழுதிய வார்த்தை நான் மட்டும் பார்த்தேன்... சிரித்தேன் காணவில்லை ஹோய் சிரித்தேன் காணவில்லை... இருவர் நினைவும் மயங்கியதாலே... யாரோடும் பேசவில்லை யாரோடும் பேசவில்லை... பேசி முடிந்தது; பதிவும் வந்தது; பேசின DD-ன் உள்ளம் மலர்ந்தது... நாடகம்போலே தூது நடந்தது - கணினியின் மைக்காலே...! டிங்...!

இப்போது இந்த உரையாடல் மூலம் சிலவற்றை நீங்கள் அறியலாம்..!.

(தில்லையகத்து) சகோதரி கீதா அவர்களுக்கு முதலில் நன்றி... இந்தப்பதிவிற்கு நீங்க தான் காரணம்... இனி உங்கள் பதிவுகள் அதிகம் வரும் தானே...? இல்லை நீண்ட நீண்ட கருத்துரைகள் அதிகமாகுமா...? எதுவென்றாலும் மகிழ்ச்சி...

எங்கள் Blog ஸ்ரீராம் ஐயா, உங்களின் அன்பிற்கு முதலில் நன்றி... பலரையும் ஒருங்கிணைத்து, இன்றைக்கு வரைக்கும் தினமும் வலைப்பக்கத்தை உயிர்ப்புடன் வைத்திருக்கும் உங்களுக்கு, காத்திருக்கு பெரிய வேலை...! பல பதிவுகள் வந்து உங்களின் மின்னஞ்சல் நிறையும் பாருங்கள்... இனி நீங்கள் "யாருடைய பதிவை என்று போடுவது ?" என்று தான் இருக்க வேண்டும்... என்னது...? நானா...? escape...!

G.M.B. ஐயா வணக்கம், ஒற்றை விரலால் பதிவு செய்யும் தங்களுக்கு, உங்களின் பேரன் / பேத்தி மேலே சொன்ன தொழினுட்பத்தைச் செய்து கொடுத்தால், பதிவு எழுத எளிதாக இருக்குமே என்று யோசித்துக் கொண்டிருக்கிறேன்...

அண்ணன் ஜோதிஜி அவர்களுக்கு, எங்கெங்கும் நோக்கினும் ஜோதியாக... முகநூலில் மூழ்கி முத்தெடுத்துக் கொண்டிருக்கும், போனாப்போகுது வலைப்பக்கத்திலும் அதைப் பகிர்ந்து கொள்ளும் அண்ணனுக்கு வணக்கம்.. மனதில் ஏற்கனவே பேசினதை அல்லது பேசிக் கொண்டிருப்பதை, கடகட-வென தட்டச்சுப் பலகையில் விளையாடுவதை நேரில் பார்த்துள்ளேன்... திருத்தம் வேறு அவ்வளவாக கிடையாது... "தினம் பல வலைப்பதிவு" என்கிற உங்களின் எண்ணம் நிறைவேற... இனி பேசுவீர்களா...? இந்த நுட்பத்தைச் செய்து விட்டுச் சொல்லுங்கள்... நன்றி...

இனிய நண்பர் கில்லர்ஜி வணக்கம் ஜி... என்னுடைய அழைப்பை ஏற்றுப் பயிற்சி முகாமிற்கு வந்தமைக்கு மிக்க நன்றி... கைப்பேசியிலேயே பதிவு எழுதும் ஜி, குரல்வழிப் பதிவேற்றம் பற்றி தங்களின் கருத்து ? புதிய குழுமத்தில் நாம் பேசியிருந்தாலும்; அடடா ! இப்போது தான் ஞாபகம் வருகிறது; சொல்லி விடுகிறேன்; மீண்டும் நன்றி ஜி...

நண்பர்களே... கீழுள்ள பெயரில் புலனத்தில் ஒரு குழுமம் (WhatsApp Group) ஆரம்பித்துள்ளோம்... முழுக்க முழுக்க கணினி சம்பந்தப்பட்ட சந்தேகங்களை அங்குக் கேட்கலாம்... (Blogspot, Website, WhatsApp, YouTube, Instagram, Wikipedia, etc.,) உங்களின் கேள்விற்குத் தகுந்த பதில்கள் அளிக்க வல்லுநர்கள் பலர் அந்த குழுமத்தில் உள்ளார்கள்... உங்களின் கேள்விகளால் அனைவருக்கும் பயன்...

→ dindiguldhanabalan@yahoo.com ← மின்னஞ்சல் அனுப்புக

இந்த முறையையும் செய்து (ரசித்துப்) பாருங்களேன்...! உலாவியின் இன்னொரு tab-ல் translate.google.com/ (← இங்கும் சொடுக்கலாம்) என்று தட்டச்சு செய்யவும்... திறக்கும் பக்கத்தில் இடது புறமுள்ள பெட்டியில் உள்ள download arrow mark (v)-போல் இருப்பதைச் சொடுக்கி, தமிழ் மொழியைத் தேர்ந்தெடுக்கவும்... அதே போல் வலது புறமுள்ள பெட்டியிலும், உங்களுக்குப் பிடித்த மற்றொரு மொழியைத் தேர்ந்தெடுக்கவும்... இடது புறமுள்ள பெட்டியில் உள்ள Microphone-யை சொடுக்கி, பேசுங்க... பேசுங்க... உலாவியின் எந்தப்பக்கத்திற்குச் சென்றாலும், பேசிட்டே இருங்க... இப்போ இருங்க, எழுத்து வரம்பு 5000-மேலே போயிடுச்சி...! இப்போ அருகே இருக்கிற Speaker-யை சொடுக்குங்க... நீங்க பேசினதையெல்லாம் கணினி பேசும்... வலது புறம் பெட்டியிலுள்ள Speaker-யை சொடுக்கி, நீங்கள் தேர்ந்தெடுத்த மற்றொரு மொழியில் பேசுவதையும் கேட்கலாம்... சேமிக்க...? முதல் முறையில் சொன்னது போல்... ok ? OK

© பாலும் பழமும் கண்ணதாசன் விஸ்வநாதன்-ராமமூர்த்தி 🎤 T.M.சௌந்தரராஜன், P.சுசீலா @ 1961 ⟫
வரிகள் மாற்றப்பட்டுள்ளது !


சொல்லென்றும் மொழியென்றும் பொருளென்றும் இல்லை; பொருளென்றும் இல்லை... சொல்லாத சொல்லுக்கு பதிவேதும் இல்லை; பதிவேதும் இல்லை... ஒன்றோடு பத்தாக பதிவு சேர்ந்த பின்னே; பதிவு சேர்ந்த பின்னே... ம்ம்...ம்ம்... இணையங்கள் நமையன்றி வேறேதும் இல்லை; வேறேதும் இல்லை... ம்ம்...ம்ம்... நான் பேச நினைப்பதெல்லாம் - நீ பேச வேண்டும்... நாளோடும் பொழுதோடும் - பதிவெழுத வேண்டும்; பதிவெழுத வேண்டும்... ம்ம்...ம்ம்... ம்ம்...ம்ம்... ம்ம்...ம்ம்...

ம்ம்...ம்ம்... கருத்துரையில் பேசுங்க நண்பர்களே... நன்றி...

நண்பர்களிடம் பகிர்ந்து கொண்டதற்கு நன்றி

புதிய பதிவுகளை பெறுதல் :


தொடர்புடைய எண்ணங்களின் வண்ணங்கள் சில :


முகநூல் மூலம் கருத்துக்களை பகிர :

கருத்துகள்

  1. //உங்கள் வீட்டுப்பத்திரம் எங்கே வைத்திருக்கிறீர்கள்?" தவிர மற்றதிற்கெல்லாம்...//

    ஹா... ஹா...   ஹா...    ஆனாலும் நான் இந்த 'ஆப்' பக்கம் எல்லாம் போவதில்லை DD.  நிறைய இடத்தை வேறு அடைத்துக்கொள்ளும்!

    பதிலளிநீக்கு
  2. ஆமாம், குழந்தைகள் நம்மைவிட  அப்டேட்டாக இருக்கிறார்கள்.  நிறைய விஷயங்கள் மகன்களிடம் கேட்டால் சொல்லிக்கொடுப்பர்கள்.

    பதிலளிநீக்கு
  3. வாட்சாப்ப் பதிவுகளில் குரல் வழி டைப்பிங் கொஞ்ச நாட்கள் முன்பு ரொம்ப பிரபலமாக இருந்து, நிறைய பேர்கள் அதை முயற்சித்துப் பார்த்துக் கொண்டிருந்தார்கள்.  இப்போது அலுத்து விட்டது!

    பதிலளிநீக்கு
  4. எனக்கு இதில் என்ன கஷ்டம் என்றால் குரல் வழி சேமித்தபின் அதில் எடிட் செய்வது...    இங்கேயே பாருங்கள்...   குறள்வழி என்று வருகிறது.  நீங்களே அப்படிக் கொடுத்திருக்கலாம்.  அல்லது ஒருவேளை குரல் வழி என்று சொல்லி அது குறள்வழி ஆகியிருக்கலாம்!  பாட்டொன்று கேட்டேனென்று வரவேண்டும்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நம் தமிழ் உச்சரிப்புக்கேற்ப எழுதுகிறது...! பல இடங்களில் கண்டிப்பாக திருத்தம் செய்ய வேண்டும்... அப்புறம் பாடல் வரிகள் முழுவதுமே (பல இடங்களில்) மாற்றமாக இருக்கும்...! ஏனெனில் Google docs எழுதுவதை பார்த்து பாடியது...! ஹா... ஹா... நன்றி...

      நீக்கு
  5. இனி எங்களுக்கு பதிவுகள் அனுப்புவோருக்கு வசதி என்று சொல்கிறீர்கள்...    நல்லது...   நிறைய பதிவுகள் வரட்டும்.  படங்கள் இணைப்பதும் பார்த்தாலே இணைக்கும்படி ஒரு ஆப் வந்தால் நன்றாகஇருக்கும்!

    பதிலளிநீக்கு
  6. எஸ்கேப்பா...  எவ்வளவு நாட்களானாலும் உங்களிடமிருந்தும் ஒரு கதை எதிர்பார்த்துக் கொண்டே இருப்பேன்...  

    பதிலளிநீக்கு
  7. வழக்கம்போல உங்களிடமிருந்து உபயோகமான ஒரு பதிவு.   அதுவும் உங்கள் பாணியிலேயே...    வாழ்த்துகளும், பாராட்டுகளும்.

    பதிலளிநீக்கு
  8. நான் தான் முதல் நபரா? இல்லை இன்னமும் கருத்துக்களை வெளியிடாமல் வைத்து இருக்கீங்களா? உங்கள் பதிவு, ஸ்ரீராம் பதிவு, தேவகோட்டைகாரர் பதிவுகளுக்குள் உள்ளே வந்தால் இடம் பிடிக்க பந்திக்கு செல்ல வேண்டும் என்கிற அளவுக்கு விமர்சனம் களை கட்டுமே.

    பதிலளிநீக்கு
  9. எனக்கு இந்த தொழில் நுட்பம் தெரியும். புரியும். ஆனால் நான் இப்போதைக்கு இதனை விரும்பவில்லை. காரணம் தொழில்நுட்பத்தை விட என் விரல்கள் நர்த்தனமாடும். ஆரோக்கியம் குறையும் போது இதனை பயன்படுத்திக் கொள்கிறேன். இந்தப் பதிவு வித்தியாசமாக நகைச்சுவையுடன் நன்றாக வந்துள்ளது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நடந்து முடிந்த இணையத் தமிழ்ப் பயிற்சி முகாமில் கலந்து கொண்ட புதியவர்கள் மற்றும் சில மூத்தவர்களுக்கு பயன்தரும் என்று நம்புகிறேன்... உங்கள் வேகத்திற்கு தட்டச்சு தான் சரி... நன்றி...

      நீக்கு
  10. அருமை வழக்கம்போல் டிடி யின் அதிரடி.நான் அவ்வப்போது பயன் படுத்தி வருகிறேன். தவறின்றி அழகாகப் பதிவு செய்கிறது. கூகுளின் ஆச்சர்ய்ம். கூகுள் ந்ம்மை முழு சோம்பேறியாக்கிவிட்டுத்தான் ஒயும் போலிருக்கிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பதிவில் குறிப்பிட்ட இரண்டாவது முறையை, சிலசமயம் பயன்படுத்துவேன்... (translate.google.com) --->இது சற்று வேகமாக எழுதும்... உங்களின் கருத்து உண்மை தான்... நன்றி...

      நீக்கு
  11. இந்த புலனச்சுட்டி இயங்கவில்லை. எப்படி என்னை இணைப்பது?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. புலனத்தை உங்கள் கணினியில் கொண்டு வந்து விட்டு, மேற்கண்ட புலனத்தின் இணைப்பை சொடுக்கவும்... இல்லையென்றால் என்னை புலனத்தில் தொடர்பு கொள்ள : 9944345233 நன்றி...

      நீக்கு
  12. பயனுள்ள பதிவு.. இந்த பதிவு குரல்வழி பதிவு மூலம் செய்யப்பட்டதா அல்லது கைவிரல் நடனாமடி பதிவிடப்பட்டதா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹா... ஹா... தொழிற்நுட்ப பதிவு எல்லாம் இந்த முறையில் எழுதுவது சிரமம்...! ஆனால், கொடுத்துள்ள பாடல் வரிகளை அவ்வாறு தான் செய்தேன்... நிஜ பாடலை ஒரு பக்கம் கேட்டுக் கொண்டே, வரிகளை மாற்றி பாடினேன்...! நன்றி...

      நீக்கு
  13. மிக சிறப்பான பதிவு ...

    கடைசியாக எங்கள் blog க்கு அனுப்பிய சிறுகதை இந்த docகில் குரல் வழியே பதிவு செய்தேன்..

    நீங்கள் சொல்லுவது போல google translater இன்னும் எளிமையே தேவையான பொழுது உபயோகம் செய்கிறேன் ....எழுத்துப்பிழை கருத்து பிழையும் பல நேரம் வருகிறது ...

    மேலும் இந்த google translater app போட்டால் எந்த மொழியில் இருந்தாலும் அதை photo எடுத்தோ ஸ்கேன் செய்தோ கொடுக்கும் போது இன்னும் எளிமையாக மொழி மாற்றம் செய்கிறது... பசங்களின் படிப்பிற்கு மிக உபயோகமானது ..பசங்களுக்கு இங்கு hindi யும் கன்னடா வும் அதனால் பல நேரம் இவை தான் உதவுவார்கள்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நீங்கள் சொல்வது உண்மைதான்... translate.google.com-ல் நாம் தேர்ந்தெடுத்த மற்றொரு மொழி வலதுபுறம் உள்ள பெட்டியில் வரும்... அவை பசங்களுக்கு மிகவும் உதவும்... நன்றி...

      நீக்கு
  14. குரல்வழி பதிவுகள் எழுதுவது சற்று சிரமம்தான் என்றாலும் முயன்று பார்க்க வேண்டும். பகிர்வுக்கு நன்றி டிடி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. குரல்வழி பதிவு செய்வது மிகவும் எளிதாகவே உள்ளது.இந்த கருத்துரை குரல் வழியாக செய்யப்பட்டது டிடி அவர்களுக்கு மிகவும் நன்றி

      என்னைப் போன்று செல்பேசி தட்டச்சு செய்ய சிரமப்படுபவர்கள் குரல் வழியாகவே பதிவு எழுதி கருத்துரைகளையும் பதிவு செய்வதற்கு மிகவும் எளிதாக உள்ளது.

      நீக்கு
    2. அட...! மிகவும் மகிழ்ச்சி... எத்தனைவிதமான கருத்துரைகள்... இதற்கெனவே ஒரு சிந்தனை பதிவு எழுதலாம் அல்லது பேசலாம்...? மிக்க மிக்க நன்றி ஐயா...

      நீக்கு
  15. தங்கள் பாணியில் கலக்கியிருக்கிறீர்கள். தொழில்நுட்பம் என்றாலே சட்டென்று ஞாபகத்திற்கு வருவது திண்டுக்கல் தனபாலன் அவர்களைத்தான். வலைப்பக்கத்தில் ஏதேனும் உதவிகள் தேவைப்பட்டால் தேடுவதும் நாடுவதும் தங்களைத்தான்.

    பதிலளிநீக்கு
  16. வணக்கம் ஜி
    நல்லதொரு விளக்கமான பதிவு  (புதியவர்கள் அதாவது தட்டச்சு தெரியாதவர்கள் மற்றும் சோம்பல் படுபவர்களுக்கு) பல பதிவர்களுக்கு'ம் இப்பதிவு மிகவும் பயனளிக்கும்.

    விஞ்ஞான வளர்ச்சியை கண்டு நான் மெச்சுபவன் அல்லன் அதனைக்கண்டு தொலைநோக்குடன் அச்சமடைகிறேன்.

    காரணம் குரல்வழியில் பதிவெழுதி (குறள்வழி எழுதுவது வளர்ச்சிக்கு வழி வகுக்கும்) தட்டச்சு செய்வதை நிறுத்தினால் ??? காலப்போக்கில் நமக்கு தமிழ் எழுதும் பழக்கமே மறைந்து விடும் நிலை உண்டாகலாம்.

    தட்டச்சு செய்வதை தமிழர்கள் விரும்புவதில்லை என்பதை உறுதியாக அறிந்து கொண்டால் தொழில் நுற்ப வல்லுனர்கள் அலைபேசியில் தட்டச்சு செய்யும் வழிமுறைகளையே நிறுத்தி விட்டு அலைபேசி தயாரிக்கும் சூழலும் வரலாம் ? என்று சொல்லவில்லை நிச்சயமாக வரும் என்றே சொல்கிறேன் இதுவும் தமிழ் அழிவுக்கு ஓர் சிறு வழியே

    இவ்வழியை நான் என்றுமே உபயோகப்படுத்த மாட்டேன்

    காரணம் நான் இறுதிவரை எம் தமிழை எழுதிக்கொண்டு இருத்தல் அவசியம்  பிறகு அதை எமது சந்ததிகளுக்கு கைமாற்றி விடுதல் அதைவிட அவசியம்

    நன்றி
    கில்லர்ஜி தேவகோட்டை

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்கள் இந்த கருத்துரைக்காக காத்திருந்தேன்... உங்கள் மூலமாக இதை அறிவிப்பதில் பெருமையும் அடைகிறேன்... மிக்க நன்றி ஜி...

      நீக்கு
  17. அருமையான பதிவு.
    நீங்கள் சொல்வது சரிதான் .கல்லூரியில் படிக்கும் குழந்தைகள் மட்டுமல்ல பள்ளியில் படிக்கும் குழந்தைகளும் சொல்லி தருகிறார்கள். பாடங்களை அவர்கள் இதில் தான் படிக்கிறார்கள்.
    அனுபிரேமும் இதை உண்மை என்கிறார்.

    பாட்டொன்று பாடினேன் பரவசம் ஆனேன் என்றபாடலை மாற்றி பாடியதை ரசித்தேன்.

    பாடல்கள் தேர்வு அருமை.

    பதிலளிநீக்கு
  18. நீங்கள் அடிக்கடி பதிவெழுத வேண்டும்.பாடல் வரிகளை அழகாக மாற்றி பாடியதை ரசித்தேன். பாடல்களையும் கேட்டேன்.
    நன்றி. வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  19. டிடி நாம் வேலை செய்து கொண்டிருக்கும் போது நடைப்பயிற்சி செய்யும் போது பல கருத்துகள், எண்ணங்கள், வசனங்கள் மண்டையில் முட்டி மோதும். ஆனால் வீட்டிற்கு வந்து தட்டச்சும் போது மறந்து விடும். கோர்வையாக வராது. எபியில் கூட புதன் பதிவொன்றில் இது பேசப்பட்ட போது கேஜிஜி அண்ணா மொபைல் ரெக்கார்டிங்க் பயன்படுத்தலாம் என்று சொல்லியிருந்தார். அப்படியானவற்றை நாம் கைப்பேசியில் பதிவு செய்ய நான் இப்போது அவர் சொன்னது போல வாய்ஸ் ரெக்கார்டர் இருக்குது இல்லையா அதைப் பயன் படுத்தத் தொடங்கியுள்ளேன்.

    வாட்சப்பில் இதை செய்ய முடியுமா. சில சமயம் நான் என் மகனிடம் சொல்லிவிட்டு அதிலும் வாய்ஸ் மெசெஜ் போல போட்டு வைத்துக் கொள்வேன். ஆனால் அது மகனுக்கும் செல்லுமே. நமக்கே மட்டும் பயன்படுத்துவது போல? வாய்ஸ் அல்லது மெசேஜ் டைப் செய்து வைத்துக் கொள்ள...ஏனென்றால் இந்த கூகுள் டாக்குமென்ட் ஒரு வேளை இப்படிச் செய்வது முடியலைனா இப்படி வாட்சப் உதவும் இல்லையா? நீங்கள் சொன்னதை இங்கும் பதியலாமே பலருக்கும் பயன்படும் இல்லையா டிடி...

    மிக்க நன்றி டிடி...

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்களது கைப்பேசியில் contact-ல் உங்களது (வாட்ஸ்-அப் நம்பர்) எண்ணை பதிவு செய்து கொள்ளுங்கள்... பதிவு செய்தபின் அதன் கீழே உள்ள வாட்ஸ்-அப் என்பதனை சொடுக்குங்கள்... இனி, உங்களுக்கு நீங்களே பலவற்றை அங்கு எழுதியோ பேசியோ சேமித்து வைத்துக் கொள்ளலாம்...

      உங்களை நம் பதிய குழுமத்தில் இணைத்து விட்டேன்... அங்கும் இதே கேள்வியை கேட்கவும்... இதனால் பலரும் பயன்பெறுவார்கள் நன்றி...

      நீக்கு
  20. டிடி பதிவுகள் வரும்...பதிவுகள் எழுதுவதிலும் படங்கள் கோர்ப்பதிலும் பிரச்சனைகள் வருகின்றன. நேரம், சூழல், மனம் ஒத்துழைப்பு எல்லாம் காரணமாக. இடையில் வலையே வேண்டாம் எல்லாம் நிறுத்திவிடலாம் என்றும் நினைத்தேன். இங்கு வந்து நட்புகளுடன் கலகலப்பாக உரையாடுவது கருத்துகள் போடுவது கொஞ்சம் மகிழ்வாக இருப்பதால் கருத்துகள் நீ......ளமாக நிறைய போட்டுக் கொண்டிருந்தேன். அதுவும் இப்ப குறைந்துவிட்டது. இப்ப மீண்டும் கொஞ்சம் பதிவுகளுடன் வரத் தொடங்கியுள்ளேன். பார்ப்போம். நண்பர் துளசியும் ரொம்பவே வேலைப் பளுவில். அவரும் மீண்டும் எழுதுகிறேன் இன்னும் ஒரு மாதத்தில் என்று சொல்லியிருக்கிறார். பார்ப்போம்.

    மிக்க நன்றி டிடி

    கீதா

    பதிலளிநீக்கு
  21. அன்பின் தனபாலன்...

    நல்லதொரு பகிர்வு. குரல் வழி பதிவு செய்வது நல்ல விஷயம் தான். ஆனால் ஜோதிஜி சொல்வது போல, எனக்கு தட்டச்சு செய்வது தான் சுலபம். பேசி, பிறகு அதனை சரிபார்த்து என்பதை விட, தட்டச்சு சுலபம் என்று தோன்றுகிறது. ஆனால் நிச்சயம் இந்த வசதி வேறு சிலருக்குப் பயன்படலாம்.

    புதுக்கோட்டை நிகழ்வு மிகச் சிறப்பாக இருந்தது என்று அறிந்து மகிழ்ச்சி. விழாவில் பங்கு கொண்ட, ஏற்பாடு செய்த அனைவருக்கும் வாழ்த்துகளும் பாராட்டுகளும்.

    பதிலளிநீக்கு
  22. நான் சென்னையில் திருசெல்லப்பாவை சந்தித்தபோதுஇந்தகுரல்வழியில் பதிவு எழுதமுடியும் என்றார் அப்போது என்னிடம் கணினியும் இருக்க வில்லை குரல் வழி பதிவு என்றால் எழுத நினைப்பதை கோர்வையாக சொல்ல வேண்டுமல்லவா அது சாத்தியமா தெரிய வில்லை இது பற்றி விளக்கிக்கூற பேரனோ பேத்தியோ அருக்ல் இல்லை அவரவர் ஜோலியில் அவரவர்கள் இருக்கிறார்கள் ஒற்றைவிரலில் தட்டச்சு செய்தேஏறத்தாழ பத்தாண்டுகள் ஓடிவிட்டது நீங்கள் பெங்களூர் வரும்போதுபார்க்கலாம் எனக்கு என்கேள்விக்கு பதில் என்ன என்பதே இப்போது முக்கியம்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஐயா வணக்கம்... தங்களின் மன திடத்தை நன்றாக அறிவேன்...

      இந்தப் பதிவில் தங்களை குறிப்பிட்டதற்கு காரணங்கள் பல உள்ளன... அதில் முக்கியமானது:

      தமிழ் ஆர்வம்...

      அனைவரும் பெருமைப்பட வேண்டிய விசயம் ஐயா... நன்றிகள் பல...

      நீக்கு
  23. அட்டகாசமான பதிவு ..ரொம்ப நாளா நினைச்சிப்பேன் கைவலி க்க தட்டுறதுக்கு இப்படி வாய்ஸ் டைப்பிங் இருந்தா நல்லா இருக்கும்னு ..விரிவா விளக்கமா தந்திருக்கிங்க .மிக்க நன்றி .வாட்ஸாப்ப்புக்கு அழகிய தமிழ்ப்பெயர் ..புலனம் அறிந்துகொண்டேன் .

    பதிலளிநீக்கு
  24. வணக்கம் அண்ணா. எப்பொழுதும்போல் உபயோகமான பதிவு. எழுத்துப்பிழைகளை திருத்துவதற்கு எழுதிவிடலாம் போல என்றும் தோன்றுகிறது. ஆனால் நேரம் குறைவாக இருக்கும் பொழுது குரல்வழி பதிவேற்றம் எளிமையாக இருக்கிறது. பகிர்விற்கு நன்றி அண்ணா.
    மற்றொரு விஷயம், பிள்ளைகளை பயன்படுத்தக்கூடாது என்று சொல்லி இருக்கிறேன். இப்படிப் பயன்படுத்தினால் அவர்களுக்குச் சரியான முறையில் கற்றுக் கொள்ள முடியாமல் போய்விடும் என்பதால்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இதுவும் உண்மை... குறைந்தபட்சம் பத்தாவது வரை, குழந்தைகள் கையில், படிக்கும் புத்தகங்கள் மட்டுமே இருக்க வேண்டும்...

      நன்றி சகோதரி...

      நீக்கு
  25. வணக்கம் சகோதரரே

    அருமையான மிகவும் உபயோகமான பதிவு. தாங்கள் சொல்வது எளிதாகவும், நன்கு புரியுபடிய்ம் உள்ளது. என் மகனும் இந்த முறைகளை என்னைக் கற்றுக் கொள்ளச் சொல்கிறார்.நான் கைப்பேசியிலேயே பதிவுகளை உருவாக்கியும், அனைவரின் பதிவுகளுக்கும் கருத்துரை இட்டும் வருகிறேன். இதை எனக்கு கற்றுத் தந்தவரும் என் இளைய மகன்தான். கணினியில் நான் கற்றது ஒரு துளி அளவுதான். இன்னமும் நிறைய கற்க ஆசை உள்ளது. தங்கள் தகவல்களுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  26. அருமையான போஸ்ட், மிக மகிழ்வான விசயம் சொல்லியிருக்கிறீங்க ஆனா இது எந்த அளவுக்கு ஒத்துழைக்கும் எனத் தெரியவில்லை, என் அப்பிள் வோச்சில்.. இப்படி இருக்கிறது, நான் வாயால் சொல்வதை ரைப்பண்ணும், ஆனா இங்கிலிஸ் மட்டும்தான் அதுக்குப் புரியுது:) தமிழில் சொன்னால்.. அதை ஆங்கிலத்தில் கெட்டவார்த்தைபோல எல்லாம் எழுதி அனுப்புது ஹா ஹா ஹா..

    இந்தப் போஸ்ட் ஒரு தடவை படிச்சால் புரியாது.. பல தடவை படிச்சு புரிஞ்சதும் முயற்சிக்கிறேன்.. நல்லபடி அமைஞ்சால் மகிழ்ச்சி.

    நீங்கள் இன்னும் முயற்சிக்கவில்லையோ?

    பதிலளிநீக்கு
  27. கில்லர்ஜி கருத்தை நான் வழிமொழிகிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அவரின் கருத்துரைக்காக மற்றும் அவரே சொல்ல வேண்டும் என்று காத்திருந்தேன்... அவரின் கருத்துரை குறித்து ஒரு பட்டிமன்றமே வைக்கலாம்...! நன்றி ஐயா...

      நீக்கு
  28. அருமையான தொழில்நுட்ப வழிகாட்டல் பதிவு,
    குரல் வழிப் பதிவு சிலருக்கு இலகு, சிலருக்கு இயலாது போகலாம்.
    தொழில்நுட்ப வளர்ச்சி ஓடிக்கொள்கிறது.
    அதற்கேற்ப நாமும் ஓடினால் எட்டிப்பிடிக்கலாம்.
    நாணயத்தின் இரு பக்கங்களாய் நன்மை, தீமை ஒட்டி இருக்கும்.
    எதற்கும் முயன்று பார்ப்போம்.

    பதிலளிநீக்கு
  29. முயற்சி செய்வேன், ஆரம்பிப்பேன். வழக்கம்போல உங்கள் பாணியில் சிறப்பாக படிநிலைவாரியாகக் கூறியுள்ளீர்கள். நன்றி.

    பதிலளிநீக்கு
  30. அருமை ஐயா . முயற்சி செய்வேன். மிக்க நன்றி

    பதிலளிநீக்கு
  31. கேட்க நன்றாகவே உள்ளது.என்னால் செய்வது என்பதுகடினம்.இப்போதுதான் ஒரு நாடகம் பதிவிட்டுள்ளேன்.
    இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  32. இந்தத் தொழில் நுட்பம், கையால் தட்டச்சு செய்ய முடியாதவர்களுக்கும், கைகளில் பிரச்சனை இருப்பவர்களுக்கும் வயதானவர்களுக்கும்தான்.

    கையால் தட்டச்சு செய்வது மொழியை நினைவில் வைத்துக்கொள்ள உதவும். தமிழில் ஓரளவு பரிச்சயம் இருந்தால் ஒழிய, டிரான்ஸ்லேடர் எழுதியிருப்பதை சரி செய்யும் திறமை இருக்காது.

    தட்டச்சு செய்வதுதான் சாலச் சிறந்தது என்பது என் கருத்து.

    பதிலளிநீக்கு
  33. நல்ல பகிர்வு.

    உங்களுக்கும் குடும்பத்தினர் அனைவருக்கும் இனிய தீபாவளி வாழ்துகள்.

    பதிலளிநீக்கு
  34. நான் கடந்த ஒரு வருடமாக வே voice typing மூலம் தான் googledocs வழியாக எழுதிக் கொண்டிருக்கிறேன். மிகவும் எளிது.

    பதிலளிநீக்கு
  35. குரல் வழிப் பதிவு பயன்படுத்தத் தெரியும் என்றாலும் அதில் நிறையப் பிழைகள் ஏற்படுவதால் பயன்படுத்துவதில்லை. நீங்கள் இந்தளவுக்கு அதை வழமையாகப் பயன்படுத்துவது வியப்பாக இருக்கிறது. மகிழ்ச்சி ஐயா!

    பதிலளிநீக்கு
  36. தங்களிடம் சிறந்த எழுத்தாற்றல் இருக்கிறது ! நிரம்பவும் செய்திகளைத் தருகிறீர்கள் ! மிக்க மகிழ்ச்சி ! பாராட்டுகள் ! பேச்சுத் தமிழை எழுத்தில் கொண்டுவருவது மொழிச் சிதைவுக்கு வழிவகுத்துவிடும் ! 800 ஆண்டுகளுக்கு முன்பு ஆங்கிலம் தோன்றியது; அப்போதைய ஆங்கிலத்தை இப்போது நாம் புரிந்துகொள்ள முடிவதில்லை !அதுபோன்ற நிலை நம் தமிழுக்கும் வரலாகாது ! பேச்சுத் தமிழும் திருத்தமான தமிழும் அச்சில் ஏறுகையில் காலப்போக்கில் இரண்டும் வெவ்வேறு மொழிகளோ என்னும ஐயப்பாட்டை ஏற்படுத்திவிடும் !பேச்சுத் தமிழை எழுத்தில்கொண்டு வருவதில் எனக்கு உடன்பாடு இல்லை ! தங்கள் நிலையை மறு ஆய்வு செய்தால் மகிழ்ச்சி அடைவேன் !

    வை.வேதரெத்தினம்,ஆட்சியர், தமிழ்ப் பணி மன்றம் & தமிழ்ப் பொழில்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஐயா வணக்கம்... யாருக்கு இது உதவும் என்று, பதிவில் நான் குறிப்பிட்டுள்ளேன் - (சில பதிவர்களுடன் உரையாடல்) நன்றி ஐயா...

      நீக்கு
  37. நன்றி தனபாலன் அவர்களே இதற்கு முன் எழுத முடியாத ஒருவருக்கு நான்தான் முழுவதுமாக எழுதிக் கொடுத்து உதவி செய்வேன். இப்படி ஒரு வசதி இருக்கின்றதா என்று தேடினேன். இப்போது உங்கள்மூலம் பெற்றுக் கொண்டே இதை அவருக்கு அனுப்பினால் நிச்சயமாக சந்தோசப்படுவார். நன்றி

    பதிலளிநீக்கு
  38. குரல்வழி பேசி பதிவேற்றம் பண்ணலாமுன்னு பாத்தா நாக்கு இப்பவே தந்தி அடிக்குதே .... அய்யோ ராமா ... வலைபதிவுக்கு இந்த "ஆப்" ஆப்பு வச்சுடும் போலுருக்கே .... வேணாம் ... நாம் வழக்கம்போலவே தட்டச்சுவையே தட்டுவோம் .... >> சயின்டிபிக் ஜட்ஜ்மென்ட் <<

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

நகுதற் பொருட்டன்று நட்டல் மிகுதிக்கண்
மேற்சென்று இடித்தற் பொருட்டு. (குறள் 784)

நட்புச் செய்துகொள்வது நண்பரோடு சிரித்து மகிழ்வதற்காக மட்டும் அல்ல. மிகுதியாகத் தவறு செய்யும்போது, அவரைக் கடிந்து திருத்துவதற்கே ஆகும்.