🏠 வணக்கம் காப்பகம் நன்றி

தேடல் 🔎



புதிய பதிவுகளை பெற ✉



முன்னோட்டம்...

வணக்கம் நண்பர்களே... இந்தப் பதிவு ஒரு சிறிய தொழில்நுட்பத்திற்கும் ஒரு முன்னோட்டம்... முதலில் ஒரு பாட்டு கேட்போமா...?


(1) பதிவில் உள்ள வரிகளை மட்டும் பாடும் பாடலை கேட்க ► மற்றும் நிறுத்த
(2) பாடல் வரிகளை வாசிக்கச் சொடுக்குக →  ♥ பா 

கூடுமோ ? | பாடுமோ ? | ஏதடா ? | மானிடா ! → வெண்ணிலவும் பொன்னி நதியும் கன்னியின் துணையின்றி - என்ன சுகம் இங்குப் படைக்கும் பெண்மையின் சுகமின்றி - சந்தனமும் சங்கத் தமிழும் பொங்கிடும் வசந்தமும் - சிந்தி வரும் பொங்கும் அமுதம் தங்கிடும் குமுதமும் - கன்னி மகள் அருகில், இருந்தால் சுவைக்கும் - கன்னி துணை இழந்தால், முழுதும் கசக்கும் - விழியினில் மொழியினில் நடையினில் உடையினில் - அதிசயச் சுகம் தரும் அனங்கிவள் பிறப்பிது தான் - மண்ணில் இந்தக் காதலன்றி யாரும் வாழ்தல் கூடுமோ...? - எண்ணம் கன்னி பாவை இன்றி ஏழு சுவரம் தன் பாடுமோ...? பெண்மை இன்றி மண்ணில் இன்பம் ஏதடா...? கண்ணை மூடி கனவில் வாழும் மானிடா...!© கேளடி கண்மணி கங்கை அமரன் இளையராஜா S.P.பாலசுப்ரமணியம் @ 1990 ⟫


பாடலை கேட்டீர்களா..? மண்ணில் இந்தக் காதலன்றி யாரும் வாழ்தல் கூடுமோ...? அதானே...! சரி, காதல் வெற்றியா ? தோல்வியா ? என்றும், காதலருக்குத் திருமணம் ஆனதா...? இல்லையா...? என்றும் குறள் பேசவில்லை... காமத்துப்பால் முழுதும் காதலர்களுக்குள் நிகழ்ந்த இன்ப உணர்ச்சிகளையும், காதல் உணர்வுகளையும் பற்றி மட்டும் தான் சித்தரித்துக் காட்டுகிறது... இதில் உள்ள ஒரு குறளை அல்லது ஒரு அதிகாரத்தை, அரைகுறையாகவோ அவசரமாகவோ வாசித்து உணர்ச்சி வசப்படலாம்... ஆனால் 25 அதிகாரங்களையும் முழுவதுமாக வாசித்து, ஆங்காங்கே கூட்டிப் பொருள் கொண்டால்தான், திருவள்ளுவர் நடத்திக் காட்டுகிற காதலின் அழகை, பலவாறு பரிணாமங்களை, நவரசங்களை அற்புதமாக உணரலாம்...! (1121-1130) காதற்சிறப்புரைத்தல் அதிகாரத்தைக் குறளின் குரலாக காதல் காவியமானது ! புனிதமானது !! சிறப்பானது !!! என்று பகிர்ந்தேன்... அதைத் தொடர்ந்து பகிரப் போகும் நான்கு அதிகாரங்களின் முன்னோட்டமே இந்தப் பதிவு... தத்தித் தரிகிட தரிகிட ததிங்கிணத்தோம்...!

ஒன்னில்லாம? | ஆணில்லாம? | பெண்ணில்லாம? | துன்பமில்லா? → அலை ஆடிடும் ஆழ்கடல் மட்டும், அதில் முத்து எடுப்பவன் கஷ்டம் - இந்த ஊருக்கு தெரியாது... உள் மனசுல ஆயிரம் பாரம், அது பாட்டுல ஓடிடும் தூரம் - இது யாருக்கும் புரியாது... ஒன்னில்லாம ரெண்டும் இல்லே, ஆணில்லாம பெண்ணும் இல்லே, பெண்ணில்லாம யாரும் இல்லே, துன்பமில்லா பேரும் இல்லே... வாசலில்லா வீடும், ஒரு தாளமில்லா கூத்தும், தத்தித் தரிகிட தரிகிட ததிங்கிணத்தோம்... அட வீட்டுக்கு வீட்டுக்கு வாசல் படி வேணும்... தெரு கூத்துக்கும் பாட்டுக்கும் தாளகதி வேணும்... அட...!© கிழக்கு வாசல் வாலி இளையராஜா இளையராஜா @ 1990 ⟫


(1131-1140) நாணுத்துறவுரைத்தல் : காதல் வயப்பட்டவன், எவ்வளவோ முயன்றும் தனது காதலியைச் சந்திக்க முடியவில்லை... அந்த துயரைப் பொறுக்கமாட்டாத காதலன், இறுதி முயற்சியாக தன் காதலை ஊராருக்குச் சொல்லி, காதலியை மணப்பதற்காகத் தன் நாணத்தை விட்டு, மடல் ஏறுவேன் என்பதைக் கூறுவது தான் இந்த அதிகாரம்... மடலேறுதல் என்பது, இரண்டு பக்கங்களிலும் கூரிய முள் கொண்ட, பனை மரத்தின் கிளையான பனை மட்டையில் செய்யப்பட்ட குதிரை போன்றது... அதில் பீலி (மயில் தோகை), பூளைப்பூ, ஆவாரம்பூ, எருக்கம்பூ ஆகிய பூக்களால் தொடுத்த மாலை இருக்கும்... இதில் அரைகுறை ஆடையுடன் உடம்பு முழுதும் திருநீற்றைப் பூசியிருக்கும் காதலன் ஏறி அமர்ந்திருப்பான்... இதன் கீழ் உருளை பொருத்தப்பட்டிருக்கும்... இதில் கயிற்றைக் கட்டி இழுத்துச் செல்வார்கள்... கையில் ஒரு கிழி... கிழி = தனது காதலியின் ஓவியம் வரையப்பட்ட துணி...! சும்மா கிழி அல்ல...! பஞ்சவர்ணக்கிளி போல் இருக்கும் தன் அழகுப்பதுமை காதலி யார் என்று ஊரார் அறிய, காதலனின் பார்வை முழுவதும் கிழியில் மட்டுமே...! மழை, புயல், வெயில், தீ என்று எதைப் பற்றியும் கவலைப்படாமல், காதலியைப் பற்றிப் பாடிக் கொண்டேயிருப்பான்... அதை வரும் பகிர்வில் கேட்போம் ! 'இப்போதை'-க்கு 1:

ம்ம்ஃம்ம்ம் - ம்ம்ம்ம் - ம்ம்ம் - ம்ம் - ம் → வெள்ளிப் பனியுருகி மடியில் வீழ்ந்தது போலிருந்தேன்... பள்ளித்தலம் வரையில் செல்லம்மா பாடம் பயின்று வந்தேன்... காதல் நெருப்பினிலே எனது கண்களை விட்டு விட்டேன்... மோதும் விரகத்திலே2 செல்லம்மா... ம்ம்ம்ம்ம் - ம்ம்ம்ம் - ம்ம்ம் - ம்ம் - ம்© மீண்டும் கோகிலா கண்ணதாசன் இளையராஜா K.J.யேசுதாஸ், S.P.சைலஜா @ 1980 ⟫

கவனிக்க வேண்டிய ஒன்று : இந்த அதிகாரத்தில் பெண்ணிற்குப் பெருமை தரும் ஒரு குறளும் உள்ளது... அதைப் பக்திக் கால இலக்கியங்களில் எவ்வாறு மாறியது என்பதையும் பிறகு அறிவோம்... அலறாமல் அடுத்து அலர் அறிவோம்...

(1141-1150) அலரறிவுறுத்தல் காதல் என்றால் கிசுகிசு, வதந்தி, கப்சா விடுதல், கடலை போடல், கலாய்த்தல் என்று இந்தக்காலத்தில் பல விமர்சனம் உண்டு...! அந்தக்காலத்தில் கெளவை, அம்பல், அலர் என்று ஓரளவு ஒத்த பொருளைத் தரும் இவற்றை, நீதி நூல்களின் காலமாகிய சங்கம் மருவிய காலத்திலும், அதன்பின் பக்தி இலக்கியக் காலத்திலும் உள்ளது... கெளவை = உணர்ச்சிகளுக்கு எதிராகப் பேசும் பழிச்சொல் || அம்பல் = சிலராகக் கூடிப் பேசுவது, அலர் = பலராகக் கூடிப் பேசுவது || அம்பல் = மொட்டு நிலை, அலர் = மலர்ந்த நிலை || அம்பல் = கோழி, நாரை ஆகியவற்றின் ஒலி, அலர் = சூரிய ஒளி, காட்டுத்தீ, முரசின் ஒலி, களிற்றின் ஆரவாரம், அருவியின் ஓசை, பறையோசை, போர் வீரர்களின் ஆரவாரம் ஆகியவற்றின் ஒலி... 'அலர் தூற்றுவோர் பெண்களே' என்கிறது சங்க இலக்கியங்களில்...! வெவ்வாய்ப் பெண்டிர் கௌவை (கு.தொ.373) | அலரே அன்னை அறியின் (நற்.4) | அலர் வாய்ப் பெண்டிர் (நற்.36) | மறுகில் பெண்டிர் அம்பல் தூற்றச் சிறுபோல் | (நற்.149) | அம்பல் மூதூர் அலர்வாய்ப் பெண்டிர் (நற்.143) | அலர்வினை மேவல் அம்பல் பெண்டிர் (அகம் 203) - சரி, அலர் என்றால் தான் என்ன...?

காதலனும் காதலியும் மறைவாகக் காதல் கொண்டு இருக்கும் செய்தியைப் பற்றிப் பேசுவது தான் அலர்... அதைக் காதலர்களுக்குத் தெரிவிப்பது அலரறிவுறுத்தல்... திருமணத்தை வலியுறுத்தும் இந்த அலர், இவர்களுக்கு மட்டுமில்லாமல் இவர்களுடைய பெற்றோர்களுக்கும் மற்றவர்களுக்கும் கூட, விரைவில் இவர்களுக்கு மணமுடித்துவிடவேண்டும் என்பதையும் அறிவுறுத்துகிறது... களவு வாழ்வு மாறி கற்பு வாழ்வாக மலரவே, அலர் மிகவும் துணையாக இருந்துள்ளது... அடுத்துச் சொல்லப்போகும் இரு அதிகாரங்களுக்கும் சேர்த்து ஒரு பாட்டு :-

காதல் | குடும்பம் | துயரம் | மௌனம் → ஒருத்தி ஒருவனை நினைத்து விட்டால் அந்த உறவுக்குப் பெயர் என்ன...? – காதல்... | அந்த ஒருவன் ஒருத்தியை மணந்து கொண்டால், அந்த உரிமைக்குப் பெயர் என்ன...? – குடும்பம்... | நினைத்தவன் அவளை மறந்து விட்டால் அந்த நிலைமையின் முடிவென்ன...? – துயரம்... | பிரிந்தவர் மீண்டும் சேர்ந்து விட்டால், அங்குப் பெண்மையின் நிலை என்ன...? – மௌனம்...© சாரதா கண்ணதாசன் K.V.மகாதேவன் P.B.ஸ்ரீனிவாஸ், P.சுசீலா @ 1962 ⟫

கவனிக்க : இதுவரை களவியல் அதிகாரங்கள் முடிந்தது, இனி கற்பியல் ஆரம்பம்...

(1151-1160) பிரிவாற்றாமை அன்பின் மிகுதி பிரிவில் தான் நன்கு தெரியும் என்பார்கள்... பணி காரணமாகத் தலைவன் தலைவியைப் பிரிய நேரிடுகிறது... குடும்பத்திற்கான கடமைகளைச் செய்வதற்காகத் துன்பங்களைப் பகிர்ந்து கொள்கின்றனர் என்று புரிந்து கொண்டாலும், தலைவி படும் பாட்டையும், பாடும் பாட்டையும் வரும் பகிர்வில்..!

உறங்க | தவிக்க | காலம் | கடவுள் → ஒரு மனதை உறங்க வைத்தான், ஒரு மனதைத் தவிக்க விட்டான் - இருவர் மீதும் குற்றமில்லை, இறைவன் செய்த குற்றமடி2 உன்னைச் சொல்லி குற்றமில்லை, என்னைச் சொல்லி குற்றமில்லை... காலம் செய்த கோலமடி, கடவுள் செய்த குற்றமடி... கடவுள் செய்த குற்றமடி...© குலமகள் ராதை கண்ணதாசன் K.V.மகாதேவன் T.M.சௌந்தரராஜன் @ 1963 ⟫


(1171-1180) கண்விதுப்பழி(த்)தல் பிரிந்து சென்ற தலைவனை மீண்டும் எப்பொழுது காணப்போகிறோமோ என்று தவிக்கும் தலைவியின் மனநிலையை இந்த அதிகாரம் சொல்கிறது... புலம்பல், எரிச்சல், கோபம், இயலாமை, நகைத்தல், கதறல் என பலவகைகளில் தனது கண்களுடன் சண்டையிடுவதை வரும் பகிர்வில் அழுவோம்...

செய்தாயோ? | சென்றாயோ? | வருமோ? | இல்லையோ? → கலையாத காதல் நிலையானதென்று, அழியாத சிலைகள் செய்தாயோ...? ஒன்றும் அறியாத பெண்ணின் மனவாசல் தொட்டுத் திறவாமல் எங்கே சென்றாயோ...? நினைவான தோற்றம் நிழலான நெஞ்சில், நீ ஆழும் நாளும் வருமோ...?2 இந்த நில ஆளும் மன்னன் நீயான போதும், நான் ஆளும் சொந்தம் இல்லையோ...? வந்தோடும் அலைகள் என்றும், என் காதல் பாடும் இல்லையோ...? எந்நாளும் எனது நெஞ்சம், உனைத்தேடி வாராதோ...?© கலங்கரை விளக்கம் பஞ்சு அருணாச்சலம் M.S.விஸ்வநாதன் P.சுசீலா @ 1965 ⟫


நண்பர்களே... முன்னோட்டம் பற்றிய தங்களின் கண்ணோட்டம் என்ன...?

புதிய பதிவுகளை பெறுதல் :


தொடர்புடைய எண்ணங்களின் வண்ணங்கள் சில :


முகநூல் மூலம் கருத்துக்களை பகிர :

கருத்துகள்

  1. உங்கள் திறமை எப்போதும் எனக்கு வியப்பாகவே உள்ளது.

    பதிலளிநீக்கு
  2. உங்களை வலைச்சித்தர் என்பார்கள். நீங்கள் ஒரு திருக்குறள் சித்தரும் கூட.

    பதிலளிநீக்கு
  3. ஒவ்வொரு தலைப்புக்கேற்ப பாடல்கள் அருமை. எவ்ளோ தமிழ்[ஒத்த] சொற்கள்.. பாடமாக்க முடியவில்லை, எழுதி வைக்கோணும்..

    பதிலளிநீக்கு
  4. பாடல் வரிகளை படித்து , பாடலை கேட்டேன்.
    தொழில்நுட்பம் அருமை.

    பதிலளிநீக்கு
  5. என்னால் படித்து புரிந்து கொள்ள முடியவில்லை உங்கள்பதிவுகளே தன் வகை பிறஎருக்குப் புரிய வைக்க வேண்டும் என்படை விட உங்கள் மேதமைதான் வெளிபடுகிறது மன்னிக்கவும் குறை அல்ல என் அறியாமை

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. "மடலேறுதல் மற்றும் அலர் என்றால் என்ன...?" என்று அடுத்து வரப்போகும் பதிவுகளில் சந்தேகம் வருபவர்களுக்கு, இந்தப் பதிவு விளக்கம் சொல்லும்... ஏனென்றால் அந்த குறளின் குரல் பதிவில், இதை சொல்ல முடியாது...

      அப்புறம் இந்த சிறு பாடல் தொழில்நுட்பம் எல்லாம் வேறு...! விருப்பமிருந்தால் அங்கங்கு அந்தந்த பொத்தான்களை சொடுக்கி ரசிக்கலாம்...

      நன்றி ஐயா...

      நீக்கு
    2. நான் எனக்குத் தமிழ் தெரியாது என்னும் ஒரு பதிவின் சுட்டி தருகிறேன் நக்கீரர் உரை யாம் அம்பல் அலர் என்றெல்லாம் வருகிறது http://gmbat1649.blogspot.com/2013/01/blog-post_15.html

      நீக்கு
    3. வாசித்தேன்... அதில் வந்த முதல் கருத்துரையான திருமதி. அருணா செல்வம் அவர்களின் கருத்து அருமை... இருந்தாலும் எனது தேடலில் ஒரு சுட்டி : → இங்கு ←சொடுக்கி சென்று வாசிக்கவும்...

      நீக்கு
  6. தொழில்நுற்பம் வழக்கம்போல் அற்புதம் ஜி.

    காலையிலேயே படித்து விட்டேன் பயணத்தில்...

    பதிலளிநீக்கு
  7. வணக்கம் சகோதரரே

    அருமையான பதிவு. ஒவ்வொரு அதிகாரத்திற்கு ஏற்றபடி அழகான விளக்கமும், ஒவ்வொன்றிக்கும் அதனை உணர்த்தும் பாடலுமாக, படித்துணரவும், பொருத்தமான பாடல்களை கேட்கவும் வசதியாக பதிவுக்காக நிறையவே உழைத்திருக்கிறீர்கள். தங்களுக்கு இது கை வந்த கையினால் சுலபமாக இருக்கலாம். ஆனால் எனக்கு பார்க்கவே பிரமிப்பாக உள்ளது. தங்கள் தொழில்நுட்பம் மிக அருமையாக உள்ளது. உங்களுக்கு மனமார்ந்த பாராட்டுக்கள். மேற்கொண்டு தொடர்கிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. "கை வந்த கலையினால்..." என வர வேண்டியது.. தட்டச்சு பிழை வந்து விட்டது. வருந்துகிறேன். நன்றி.

      நீக்கு
  8. ஆஹா அருமையான பாடல்கள் ஒவ்வொரு தலைப்புக்கு ஏற்றவாறு இணைத்திருக்கிங்க .பாடல்கள் பெரும்பாலும் கேட்பதில்லை ஆனால இந்த இணைப்பில் மிக க்ளியரா தெள்ளத்தெளிவா இருக்கு .

    பதிலளிநீக்கு
  9. பொருத்தமான  பாடல் வரிகள் இணைப்பு பிரமாதம் 

    பதிலளிநீக்கு
  10. திரு டி,ஆர் ஜோசப் ஐயா அவர்களின் கருத்தை வழிமொழிகின்றேன் ஐயா

    பதிலளிநீக்கு
  11. அருமை. திருக்குறளும் திரைப்படப்பாடலகளும் என்று ஒரு ஆய்வுக்கட்டுரை எழுதி முனைவர் பட்டம் பெற்று விடலாம். நூலாகவும் வெளியிடலாம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நண்பர் திரு டி.என். முரளீதரன் அவர்களின் கருத்தை நானும் வழிமொழிகின்றேன். வழக்கம்போல் குறட்பாக்களுக்கு ஏற்ற பாடல்களை தேர்வு செய்து வியக்கவைத்திருக்கிறீர்கள். பாராட்டுகள்!

      நீக்கு
  12. குறள் இனிமை. பாடல் எளிமை.
    இதில் நீங்கள் பொருத்தியுள்ள நுட்பமே
    சிறப்பு.
    காதலர்களுக்கான மாதத்தில்
    எல்லா நிலைகளையும் அழகாக எழுதிப் பொருத்தமான பாடல்வரிகளைக் கொடுத்திருப்பது
    வள்ளுவரோடு பயணிப்பது சுலபமாகச் செல்கிறது மிக நன்றி தனபாலன்.

    பதிலளிநீக்கு
  13. தொழில் நுட்பம் தெரிந்தவருக்கு எல்லாம் கூடும்....!!!

    பதிலளிநீக்கு
  14. குறள் விளக்கங்களும் அதற்கேற்ற பாடல்களும் மிகவும் அருமை!

    பதிலளிநீக்கு
  15. விளக்கங்களும் பொருத்தமான பாடல்களும் சிறப்பு. வழமை போல நல்ல பகிர்வு.

    பதிலளிநீக்கு
  16. முன்னோட்டமே சிறப்பாக உள்ளது. பள்ளி மாணவர்க்குக் கூறுவதைப் போல பொருளைக் கூறிய விதம் மிகவும் எளிமையாகவும், புரிந்துகொள்ளும்படியும் இருந்தது.

    பதிலளிநீக்கு
  17. மிக சிறப்பான பதிவு.. திறமையான விளக்கங்கள் நன்தமிழில் - நன்றி!!

    பதிலளிநீக்கு
  18. அருமை. தனபாலன் பதிவு என்றால் தொழிநுட்பத்துக்குப் பஞ்சமுண்டோ? படித்தேன். ரசித்தேன். தொடருங்கள்...

    பதிலளிநீக்கு
  19. நானும் வள்ளுவரை பு(ப)டிக்கனும்முன்னு பார்க்கிறேன். முடியலையே.

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

நகுதற் பொருட்டன்று நட்டல் மிகுதிக்கண்
மேற்சென்று இடித்தற் பொருட்டு. (குறள் 784)

நட்புச் செய்துகொள்வது நண்பரோடு சிரித்து மகிழ்வதற்காக மட்டும் அல்ல. மிகுதியாகத் தவறு செய்யும்போது, அவரைக் கடிந்து திருத்துவதற்கே ஆகும்.