🏠 வணக்கம் காப்பகம் நன்றி

தேடல் 🔎புதிய பதிவுகளை பெற ✉நண்பன்...

வணக்கம் நண்பர்களே... விவசாயம் செய்யும் எனது அன்பு நண்பரோடு ஒரு உரையாடலாக ☛ ☚ அதிகாரத்தை இரு பதிவுகளாகப் பகிர்ந்து கொண்டேன்... மீண்டும் அதே போல் இன்று தொடர்கிறது...

? ? ? ? ?

வணக்கம் நண்பா... இயற்கை முறையிலே விவசாயம் செய்வதாலே, எல்லாமே வளமான விளைச்சலா இருக்கு... எல்லா மக்களையும் உங்க குடும்பம் போலவே செழிப்பாவும் வளமாவும் இருக்க வைக்கிறது தான் சிறந்த சாதனை...

வாங்க நண்பா; சாதனை வேதனை எல்லாம் இயற்கை தரும் வரம்... எந்த கேடும் இல்லாமயிருந்தா, சரியான நேரத்திலே சின்னதா உழைத்தாலே போதும்... உலகமே அசந்து போறமாதிரி மண்ணு நமக்கு வேண்டியதை அள்ளிக்கொடுக்கும்...

என்னதான் கஷ்டம் மேலே கஷ்டம் வந்தாலும், எல்லாத்தையும் தாங்கிட்டு மக்களுக்கும் அரசுக்கும் தேவையானதைச் சந்தோசமா தர்ற அந்த மனசு இருக்கே... உங்களுக்கு மட்டும் தான் இயற்கையாகவே அமையுது...

பசியிலே யாரும் வாடக்கூடாதில்லே... அதே சமயம் தீராத எந்த நோயும் வரவே கூடாதுங்கிறதாலே தான் இயற்கை முறையிலே விவசாயம்... பசியும் நோயும் வந்தாலே வீணா சண்டை தான் ஆரம்பிக்கும்...

ஆமாமாம், சண்டை சின்னதா தொடங்கி கும்பலா பெருகிடும்... கும்பலும் குழி பறிக்கும் பல குழுக்களா மாறும்... அப்புறம் சூழ்ச்சிக்கும் வன்முறைக்கும் பஞ்சமே இருக்காது... அப்புறம் கொலையும் கொள்ளையும் தான்...

அப்படியெல்லாம் நடக்கக்கூடாது... ஆனா, கெடுதல் செய்றவங்க இருக்கிறாங்க... அதை பார்த்துட்டு எங்க வேலையைக் கெடுக்க முடியாது... கெடுதல் நடந்தாலும் எங்க வேலையை கெட்டுப்போக விட்றதில்லை...

அது தான் தெரியுதே, ஊற்றுநீரா கிணத்தை வைச்சிக்கிறது, பக்கத்து மலை, ஆறு, மழை, இதுக்கேத்தமாதிரி விவசாயம் செய்றது, சுகமான சுத்தமான தென்றல் காற்று... ஆகா...! இயற்கை சூழ்ந்த வாழ்க்கைன்னா இது தான்...

எங்களைப்போலவே எல்லா மக்களும் நோய்நொடி இல்லாம அன்பா சந்தோசமா பாதுகாப்பா, எல்லா வளத்துடன் வாழ்ந்தாலே எங்களுக்கு போதும்... அதுக்கு எங்களுக்கு விளைச்சல் பெருகினாலே போதும்...

இயற்கையோடு சேர்ந்து வாழ்ந்தாலே, இரக்க மனம் தானா வரும் போல... பொன் விளையும் பூமியும் நீங்களும் இருக்கும் வரை, எல்லா மக்களும் அவசியமான எதையும் அடையத் துன்பப்படவே தேவையில்லை...

நண்பா என்ன ஆச்சி...? பேசு... ஏன் அழுகிறாய்...?

தீநுண்மியால் இன்றைய பிணியை விட, எப்போதும் இருக்கும் பசிப்பிணி அத்தியாயத்திற்கு யார் காரணம் என்பதை அனைவரும் உணர எழுத வைத்தாயோ...?


குறிப்புகள் :
(1) இந்தப்பதிவும் குறளின் குரல் தான்...! பத்தாவது குறளின் விளக்கம் எழுதவில்லை...
(2) ஊழ் அதிகார இரண்டாவது ஆய்வுப் பதிவு எழுதும் போது, அதில் ஒரே ஒரு வரிக்காக எழுதியது இந்தப்பதிவு...!
(3) ஆவலுடன் எதிர்பார்க்கும் கருத்துரைகள் : நினைத்துப்பார்க்கிறேன் | திருமதி பக்கங்கள் | தில்லை அகம் + வாசகர்கள் அனைவரும்...
(4) கருத்துரைகளுக்குக்கேற்ப குறிப்புகள் மற்றும் குறிச்சொற்களை (Labels) புதுப்பிக்கிறேன்...
(5) குறளுக்கேற்ப பாடல்களுடன் ஒரு பதிவு வரும்...
(6) முடிவாக நண்பன் பேசியிருக்கக் கூடியதும் சேர்க்கப்படும்... சென்று அறியலாம்...
(7) நன்றி...

புதுப்பித்தல் - வாசகர்கள் அனைவரும் சிந்தித்து குறளின் அதிகாரத்தை சொல்லலாம்... கருத்துரைகள் :-

(1) கோமதி அரசு அம்மா அவர்கள் : 1.1 // விவசாய நண்பர் கண்ணீருக்கு அரசு தான் காரணம் // சரியே... 1.2 // வேந்தன் வேந்தர்க்கெல்லாம் ஒளிமிக்க விளக்காவான் // ஆனால் இங்கு வேந்தர்க்கு ஒளி இல்லையென்றால்...?

(2) தில்லை அகம் சகோதரி கீதா அவர்கள் : // மாநில அரசு நிறைய திட்டங்களை அறிமுகப்படுத்தியிருக்கிறது. ஆனால் அவை உழவர்ளை சென்று அடையவில்லையா அல்லது இடைத்தரகர்களின் வேலையா எங்கு தவறு...? // இதற்கும் மேலே ஒரு மூலவர் உள்ளார்... அவர் மக்களிடையே பொய்யுரைக்காமல் ஒரு சேவகனாக செயல்பட்டிருந்தால், நண்பருக்கு மட்டுமல்ல, யாருக்குமே துயர் இருந்திருக்காது - பல நூற்றாண்டுகளாக...!

(3) கமலா ஹரிஹரன் அம்மா அவர்கள் : // துயரை அன்றன்று அரசன் போக்க வேண்டும்... // கண்டிப்பாக... ஆனால், "அரசன் அவ்வாறு போக்கா விட்டால், அனைத்தும் பாழ் ஆகிவிடும்" என்று ஐயன் சொல்கிறார் கடைசி குறளில்...

புதிய பதிவுகளை பெறுதல் :


தொடர்புடைய எண்ணங்களின் வண்ணங்கள் சில :


முகநூல் மூலம் கருத்துக்களை பகிர :

கருத்துகள்

 1. உண்மைதானே விவசாயிகள் இல்லை எனில் நாமும் இல்லை, எவ்வளாவு வசதி படைத்தவராயினும், பணத்தால் எதை வாங்க முடியும்.. விவசாயிகள் விவசாயம் செய்தால்தானே நமக்கு உணவு....

  பதிலளிநீக்கு

 2. //பசியும் நோயும் வந்தாலே வீணா சண்டை தான் ஆரம்பிக்கும்...ஆமாமாம், சண்டை சின்னதா தொடங்கி கும்பலா பெருகிடும்... கும்பலும் குழி பறிக்கும் பல குழுக்களா மாறும்... அப்புறம் சூழ்ச்சிக்கும் வன்முறைக்கும் பஞ்சமே இருக்காது... அப்புறம் கொலையும் கொள்ளையும் தான்...///


  சமுக வலைத்தளங்களும் ஊடகங்களும் மேல் தட்ட மக்களை பற்றியே பேசிக் கிண்டிருக்கின்றன... அடிதட்டு மக்களை பற்றி கவலைபடுவதாக தெரிவதில்லை இவர்களுக்காக அர்சும் என்ன திட்டங்களை வைத்து இருக்கிறது என்பதிலும் வெளிப்படை தனமை இல்லை. இப்படி இருந்தால் கொரோனா காலக்கட்டிதில் நீங்கள் சொன்னபடி நடந்துவிடுமோ என்றுதான் மனம் பதைபதக்கிறது

  பதிலளிநீக்கு
 3. நானும் நண்பர்களின் விளக்கங்களுக்காகக் காத்திருக்கிறேன்.

  பதிலளிநீக்கு
 4. தீநுண்மி என்ற வார்த்தையை வாசிக்கும் போது இது எப்படி இப்போதுள்ள மாணவர்களுக்குப் புரியும். அவர்களுக்கு சென்று சேரும் என்று நினைத்துக் கொள்வதுண்டு. ஒரு பதிவு எழுதி முடிக்க உங்களுக்கு எத்தனை மணி நேரம் ஆகும். உள்ளே நுழைந்தால் மாயக் கோட்டை மந்திரவாதி மாதிரி என்னன்னவோ செய்து வச்சுருக்கீங்க?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இந்த பதிவில் எந்த தொழினுட்பமும் செய்யவில்லை... இதோ எழுதிக் கொண்டிருக்கும் ஊழ் அதிகார ஆய்வு பதிவுகள் எழுத கிட்டத்தட்ட 5 வருடங்கள் ஆகியிருக்கு...! ஆய்வு இன்னும் நிறைய இருக்கு... எனக்கு தெரிந்து 2 மணி நேரத்தில் எழுதிய ஒரே பதிவு "வலியறிதல்" பற்றிய குறளின் குரல் பதிவு... இன்று வரைக்கும் வியப்பு அளிக்கும் ஒரே பதிவும் அதுவே... இணைப்பு : → என் வலி... தனி வழி...!

   நீக்கு
 5. நோய் நொடி இன்றி அனைவரும் வாழ் வேண்டும் - அதுவே எல்லோருடைய பிரார்த்தனைகளும்.

  பதிலளிநீக்கு
 6. உரையாடல் அருமை. நண்பா என்ன ஆச்சு என்பதற்கான பதில் உச்சம்.

  பதிலளிநீக்கு
 7. வணக்கம் வலைச்சித்தரே!
  குறள்சித்தர், வேளாண்சித்தர் ஆகிய விருதுகளையும் ஒருசேரப் பெறத் தகுதியானவர் தாங்கள்.
  இப்படிக் குறள் பரப்பும் பணியைத் தமிழாசிரியர்கள் கூடச் செய்ததில்லை! அதுவும் கரோனா காலத்தில்!
  தொடரட்டும் தங்கள் வலைத்தமிழ்ப் பணிகள்.
  (ஆமா டிடி, இந்த வலைப்பதிவர்கள் எல்லாம் இந்த நேரத்தில் கூட வலைப்பக்கம் அதிகம் புழங்காமலிருப்பதை என்னவாவது செய்து மடைமாற்றணுமே! என்ன செய்யலாம்? யோசியுங்கள். முன்னொரு முறை ஒவ்வொருவரும் பத்துப்பத்துப் பேரை இழுத்துவிட்டு ஒரு தொடர்பதிவு போடுவமே அதுபோல ஏதாவது யோசித்துத் தொடங்குங்களேன்... நானும் தொடர்கிறேன்!) நன்றி வணக்கம்.
  பி.கு.வீட்டில் தங்கள் இணையர் மகள் எல்லாரும் பாதுகாப்பாக இருக்கிறீர்கள் தானே? கவனம் நண்பா!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஐயா வணக்கம்... தங்களின் கருத்துரை கண்டு மிகவும் மகிழ்ச்சி... நீங்கள் சொல்லும் யோசனையும் நன்றாக உள்ளது... இணைந்து செயல்படுவோம்... நலமாக இருக்கிறோம் ஐயா...

   நீக்கு
 8. இயற்கையோடு சேர்ந்து வாழ்ந்தாலே!
  இரக்க மனம் தானாய் வரும் போல!!

  ஆமாண்ணே! தோட்டம், தொறவு, வாய்க்கா, வரப்புகளுக்கு நடுவில் ஒற்றை வீடு, காவலுக்கு நாய், வயல்வெளிக்கு நருவில் எலித்தொல்லை இருக்கும்ன்னு பூனை வளர்ப்பு, வீணாய் சிதறி குப்பைக்கு போகும் தானியங்களை சாப்பிட கோழி, எருவுக்கு ஆடு, பசு, பாலுக்கு எருமை, உழவுக்கு எருதுன்னு வாழ்ந்தவங்கதானே நாம்?!

  பதிலளிநீக்கு
 9. நல்ல பதிவு.
  படங்கள் சொல்லும் செய்திகள் கவலை அளிக்கிறது.


  சரியான நேரத்தில் சரியான பயிர் செய்து மண்ணில் உழைத்தால் போதும் தான். சில பயிர்களுக்கு அதிக நீர் வேண்டும், சிலபயிர்களுக்கு கொஞ்ச நீர் போதும். மண்வளம் பார்த்து அதற்கேற்ற பயிர்களை தேர்வு செய்து இயற்கை விவசாயத்தை பயன்படுத்தி விவசாயி பயிர் செய்தால் எல்லாம் நலமே!

  தன் குடும்பம் போலவே விவசாயி மக்களுக்கும் அரசாங்கத்திற்கும் உணவு பொருட்களை உற்பத்தி செய்து கொடுத்து வந்தார்கள்.

  விரைவாக பெருகிவரும் மக்கள் தொகையால் உணவு தேவையை பூர்த்தி செய்ய சிலரின் போதனைகளால் உற்பத்தியை அதிகபடுத்த
  இயற்கை விவசாயத்தை மறந்து பசுமை புரட்சி என்று அதிவேக விவசாயம் வளர்ச்சி செய்தார்கள். குறுகிய கால பயிர்கள், கண்டுபிடிப்பால் , வீரிய விதைகள், ஊட்ட சத்து உரங்கள் என்று பயன்படுத்தப்பட்டது.

  கஷ்டங்களை தாங்கி கொண்டு நன்செய், புன்செய் என்று மாற்றி மாற்றி விவசாயம் செய்தவர்கள் பழக்கத்தில் இல்லாத உணவுபொருட்களை பற்றாகுறையை போக்க என்று விவசாயம் செய்தார்கள்.

  அறுவடை செய்த உணவுப் பொருட்கள் வீடு வந்து சேரும் முன் 25 சதவீதம் வீணாகிறது. பூச்சிகளால், எலிகளால் பூஞ்சான்களால், உழுதவன் கணக்குப் பார்த்தால் உழக்கு கூட மிஞ்சாது என்பார்கள்.

  இவ்வளவு கஷ்டபட்டு வயிற்றை கட்டி, வாயைக் கட்டி விவசாயி பாடு பட்டு விவசாயம் செய்தால் இயற்கை சில நேரம் அதிகம்மழை, காற்று இவற்றால் அழிந்து போகிறது. மழை பெய்தும் கெடுக்கும், மழை பெய்யாமலும் கெடுக்கும்.

  அப்படி கஷ்ட பட்ட விவசாயிகளை கைகொடுத்து காப்பற்றவேண்டும்.
  மதிக்க வேண்டும் . அவர்களுக்கு உரிய மதிப்பு கொடுக்கவேண்டும்.

  ஏற்கனவே பொருளாதார சீர்குலைவால் உணவு பொருட்களை பதுக்க ஆரம்பித்து விட்டார்கள். இயற்கை வேறு மழை காற்றை கொடுத்து பயிர்களை அளிக்கிறது. அரசாங்கம் கொள்முதல் செய்யாமல் உணவு மூட்டைகள் மழையில் நனைந்து எலிகள் குதறி மழையில் நனைந்து வீணாவதைப் பார்த்தால் மனசு பதறுகிறது.

  வாழைபயிர்கள் எல்லாம் அளிந்து விட்டது,பூக்கள் பறிக்க ஆள் இல்லாமல் மடக்கி உழப்படுகிறது டிராக்டாரல் .

  வீட்டை விட்டு வெளியே போக கூடாது என்பதால் வேலை செய்யா ஆட்கள் இல்லை அறுவடை செய்ய முடியாமல் நெற்கதிர்கள் காய்ந்து போகுது.

  நெற்றி வேர்வை சிந்தினோமே முத்து முத்தாக அது நெல்மணியாய் விளைந்து இருக்கு கொத்து கொத்தாக என்று குழந்தை போல் பயிர்களை பார்த்து கொண்ட விவசாயி இப்போது இரத்த கண்ணீர் வடிக்க வேண்டிய காலமாக இருக்கிறது.

  பதிலளிநீக்கு
 10. பசியும் நோயும் வந்தாலே சண்டையும் பூசலும் வரும்தான்.
  நீங்கள் சொல்வதை கற்பனை செய்யவே பயமாய் இருக்கிறது.

  அப்படி நடக்க விடாமல் இயற்கை விவசாயம் செய்து மக்களை காப்பாற்ற இயற்கை அன்னை ஒத்துழைக்க வேண்டும்.
  நோய் நம்மைவிட்டு விலகி ஓட வேண்டும். இயற்கை விவசாயம் செய்ய எல்லோரும் முன் வர வேண்டும். பக்கத்து மலையை காப்பாற்ற வேண்டும், ஆறு, குளத்தை காப்பாற்ற வேண்டும் இயற்கை தரும் மழை நீரை சேமிக்க வேண்டும்.

  பதிலளிநீக்கு
 11. படைத்தவனை நொந்து கொள்ளும் காலமும் ஆச்சோ!

  உலகிற்கு உயிர் கொடுத்தவர்கள் ஏர்முனை நேர் எதுவும் இல்லை என்று வாழ்ந்தவர்கள் இன்று அரசாங்கத்தின் உதவிகளை கேட்டு கையேந்தி நிற்பது இயற்கை செய்யும் சதியா? படைத்தவன் செய்த சதியா?
  இயற்கையை நாம் பாழ் படுத்தியதியதால் இயற்கை கொடுத்த பரிசா?

  இரந்தும் உயிர்வாழ்தல் வேண்டின் பரந்து
  கெடுக உலகியற்றி யான்.

  இவ்வுலகை படைத்தவன் சில உயிர்களுக்கு இரத்தலையும், ஒரு தொழிலாகப் படைத்திருபானாயின் அத்தீவினையால் அவனும் அங்ங்கனம் பிச்சை எடுத்து அலைவானாக.
  என்று வள்ளுவரே நொந்து இருக்கிறார்.

  கடவுள் மனிதனாக பிறக்க வேண்டும் மக்கள் படும் வேதனையை பார்க்க வேண்டும் என்று என்ன தோன்றுகிறது.
  இறைவன் தான் இதற்கு நல்ல வழி காட்ட வேண்டும்.
  படைத்த உயிர்கள் அனைத்துக்கும் நல்ல வழி காட்ட வேண்டும்.
  பசிப்பிணியால் கொலை, களவு ஏற்படாமல் சச்சரவு இல்லாமல் எல்லோரும் அவன் நிழலில் அமைதியாய் ஆனந்தமாய் வாழ அருள்புரிவாய் கருணை கடலே.

  பதிலளிநீக்கு
 12. ஆவலுடன் எதிர்ப்பார்க்கும் கருத்துரை என்று சொல்லி விட்டீர்கள்.எனக்கு தெரிந்த மாதிரி கருத்து சொல்லி இருக்கிறேன்.
  உங்கள் எதிர்பார்ப்புக்கு ஏற்றமாதிரி இல்லை என்றால் மன்னிக்கவும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. என்ன அம்மா இப்படி சொல்லி விட்டீர்கள்... மன்னிப்பு எல்லாம் பெரிய வார்த்தை... தங்களின் கருத்துரைகள் எல்லாம் ஊக்கம் தருபவை... ஒரு சின்ன ஊகித்தல் தேர்வு அவ்வளவே... மேலே உங்களின் கருத்துரையில், அதை ஒட்டிய குறளை சொல்லி விட்டீர்கள்... ஆனால், "உலகியற்றியான்" என்பது இறைவன் அல்ல... அப்படியென்றால் நண்பனின் அழுகைக்கு யார் காரணம்...? அல்லற்பட்டு ஆற்றாது அழுதகண் ணீரன்றே செல்வத்தைத் தேய்க்கும் படை (குறள் 555) இந்தக் குறளுக்கேற்ப, தூய உள்ளம் படத்திலிருந்து ஒரு பாடலை நீங்கள் தான் தந்தீர்கள்... அதை முன்பு எழுதிய பதிவிலும் இணைத்தேன்... சரி, அங்கு யார் காரணம்...? என்பதை யோசித்தால், இங்கு விடை கிடைத்து விடும் அம்மா... நன்றி...

   நீக்கு
 13. வேதாத்திரி மகரிஷியின் பாடல் ஒன்று நினைவுக்கு வருது
  அந்தக்காலம் பொற்காலமாக இருந்தது என்று கூறுவார்கள் பெரியவர்கள். (இரண்டு கை அளவு அரிசியை கொடுத்து ஒரு முறம் கீரை வாங்கி இருக்கிறோம் 1964ல்)

  பண்டமெல்லாம் தானியத்தால் மதித்த காலம்
  பயிரிடுவோன் உயர்வாகக் கருதப்பட்டான்
  பண்டங்கள் பணமதிப்பைப் பெற்ற பின்னர்
  பாட்டாளி பலவிதத்தும் சுரண்டப்பட்டான்
  பண்டங்கள் பண்முடையோரிடத்தில் சேர
  பாடுபடுவோர் அடிமையானார் அந்தோ
  பண்டங்கள் தொழில் நிலையம் அரசு மூன்றும்
  பண்முடையோர் பிடியின் கீழ் வந்ததாங்கே.

  பதிலளிநீக்கு
 14. உழைத்தால் தான் பற்றாகுறையை போக்க முடியும் எனும் போது உழைக்க போக முடியாமல் வீட்டுக்குள் முடங்கி கிடக்கிறோம்
  தொற்றுக்கு பயந்து. அப்போ பற்றாகுறை இருக்கும். இருப்பவர்கள் மேலும் மேலும் பொருட்களை வாங்கி குமிக்காமல் எல்லோருக்கும் எல்லாம் கிடைத்திட வழி செய்தால் வழிபறி கொள்ளை, கொலை இருக்காது . அண்டை வீட்டார் பசித்திருந்தால் கொடுத்து உதவலாம்.

  பதிலளிநீக்கு
 15. விவசாய அன்பர் கண்ணீருக்கு அரசுதான் காரணம். அவர்களுக்கு தகுந்த உதவி செய்து விவசாயத்தை, விவசாயிகளை காப்பதும் அவர்கள் கடன் தான்.
  விவசாயம் இல்லையேல் எதுவும் இல்லை.

  பதிலளிநீக்கு
 16. நீங்கள் பத்தாவது குறளின் விளக்கம் எழுதாததன் காரணம்….அது

  ஊழிற் பெருவலி யாவுள மற்றொன்று
  சூழினுந் தான்முந் துறும்.

  சொல்லுவது விதியை விட வலியது எது இருக்கு? விதியை வெல்ல நினைத்து செய்யும் முயற்சிகளிலும் முன்னே நிற்பது இந்த விதிதான் என்று. அதுதானோ?

  இதனால் தான் என்று என் யூகம் அல்லது இதற்கும் விடையாக ஐயன் சொல்லியிருக்கும் குறள் இருக்கும் என்று நினைக்கிறேன்…

  உங்கள் முந்தைய பதிவில் நான் சொல்லிய கருத்தில் கூட இதைப் பற்றி அதாவது ஒருவரின் சாதனைகளுக்குப் பின்னில் இருக்கும் கஷ்டங்கள் கூட அவனுக்கு அப்படி நடக்கணும்னு இருக்கு என்று எளிதாகச் சொல்லுவதும் நடக்கிறது என்று..
  உங்கள் பதிலையும் பார்த்தேன் டிடி ஆசீவகம்/ஊமைக்கனவுகள் விஜு ஜோசப் அவர்கள் எழுதிய பதிவுகளை வாசித்திருக்கிறேன். அவர் கடைசியாக எழுதியது .

  இன்னும் அடுத்த கருத்திற்கு வருகிறேன்...

  நீங்கள் எதிர்பார்த்தது இதுதானா என்று தெரியவில்லை என் சிற்றறிவிற்கு எட்டியதை அடுத்த கருத்தில் தருகிறேன்

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஊழ் அதிகாரம் தான் எழுதி விட்டேனே... உழவனை கடவுளாக மதிக்கச் சொன்னார்... ஆனால், அந்த உழவனுக்கு ஒரு துயரம் வருவதற்கு கடவுளே காரணம் என்று ஐயன் சொல்ல மாட்டாரே...

   நீக்கு
  2. புரிந்தது ஆனால் அதற்கான குறள் சொல்ல வில்லை ஆனால் அடுத்த கருத்தில் குறள் அடுத்து சேர்த்திருந்த லைன் விட்டிருக்கு அந்தக் குறள் சொல்லி அதன் கீழ் கொடுத்திருந்த லைன் விட்டிருக்கு வேர்டில் டைப் செய்து காப்பி பேஸ்ட் செய்வதால்....அரசு உழவர்களுக்கு உதவ வேண்டும். என்பது. ஆனால் எனக்கு இதில் சில மாற்றுக் கருத்து உண்டு. மாநில அரசு நிறைய திட்டங்களை அறிமுகப்படுத்தியிருக்கிறது. ஆனால் அவை உழவர்க்ளை சென்று அடையவில்லையா அல்லது இடைத்தரகர்களின் வேலையா எங்கு தவறு என்பது எனக்குத் தெரியவில்லை. டிடி

   கீதா

   நீக்கு
 17. உழவு அதிகாரம்….ஒட்டிய கருத்துகள் சரியா டிடி?!!
  இவ்வுலகம் எந்த தொழில் செய்து இயங்கியானலும் உழ்வுத் தொழிலின் பின் தான் நிற்கின்றது. அதில் எத்தனை இடர்கள் வந்தாலும் அத் தொழில் தான் ஆகச் சிறந்த தொழில். இதில் இருக்கும் இடர்களை நினைத்து பல உழவர்களும் வேறு தொழில் பார்க்க த் தொடங்கினாலும் இவ்வுலகமே இதன் பின் தான் இயங்குகிறது. என்ன இடர் வந்தாலும் இத்தொழில் தான் முதன்மையானது.
  எத்தொழில் செய்தாலும் எல்லாரையும் தாங்குபவர்கள் இந்த உழவர்கள் தானே உழவுத் தொழில் தானே எனவே இதுதான் அச்சாணி. இவ்வுழவர்களின் பின்னே தானே அவர்களைத் தொழுது செல்கிறோம்…
  பலகுடை நீழலும் தங்குடைக்கீழ்க் காண்பர்
  அலகுடை நீழ லவர்!!!!!!!!!!!!!
  அருமையான குறள். உழவினால் வளம் பெறச் செய்யும் உழவர்கள் தங்கள் ஆட்சியாளர்களின் குடை நிழலை அயலக ஆட்சியாளரின் கீழ் வாழும் மக்களும் விரும்பும் படி செய்வர். உலகமே வியந்து திரும்பிப் பார்க்கும் எனலாமா?!! தம் கையால் உழுது வாழ்ந்து பிறருக்கும் அளித்துவந்தவர்கள் யாரிடம் கை ஏந்த மாட்டார்கள் ஆனால் இன்று?!!?? உழவுத் தொழில் நசுங்கிவிட்டால் உணவின் மீதான பற்றையே துறந்தோம் என்று சொல்லும் துறவியரும் கூட நிலை குலைந்து போவார்கள். நிலத்தைக் கவனிக்காவிட்டால் அந்த நிலம் கூட நம்மைப் புறக்கணித்துவிடும். இவ்வளவு நிலம் இருக்க அந்த நிலத்தை வைத்து என்ன செய்ய? வழி எதுவும் இல்லை என்று நாம் நினைத்தால் இந்த நிலமகள் கூட நம்மைக் கண்டு சிரிப்பாள்.
  இந்த இடத்தில் அந்த நிலத்தைக் கொண்டு எப்படி வளம் பெறலாம் எனும் உழைப்பு, தன்னம்பிக்கை, விடா முயற்சி, இவை இருந்தால் வளம் பெறலாம்…அந்த நிலம் அம்புட்டுத்தான் தலைவிதி என நினைத்தால்?!!!!
  நிலமகள் சோம்பி இருப்பவரைக் கண்டு ஏளனமாய்ச் சிரிப்பாள். அல்லது உன்னிடம் எல்லாம் இருக்கு அதைப் பயன்படுத்தத் தெரியவில்லை என்றால் அது உன் அழிவு…..இங்கு இதை விதி என்பதா? சோம்பேறித்தனம் உழைப்பின்மை என்பதா? ஊழின் பத்தாவது திருக்குறள்?!!

  கீதா


  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. உழவு அதிகாரத்தையும் முன்பே (2014-ஆம் ஆண்டு) எழுதி விட்டேன்... அதன் இணைப்பை பதிவின் ஆரம்பத்தில் கொடுத்துள்ளேன்...

   நீக்கு

 18. இயற்கையை மறந்தோம் செயற்கையில் மூழ்கினோம் அதன் பலனை அனுபவிக்கிறோம். இதிலிருந்து மீண்டபிறகாவது நாம் திருந்த வேண்டும்.

  வாழ்க வையகம்

  பதிலளிநீக்கு
 19. //வாங்க நண்பர், சாதனை வேதனை எல்லாம் இயற்கை தரும் வரம்….அள்ளிக் கொடுக்கும்.
  அதுதான் தெரியுதே ஊற்று நீரா கிணத்தை வைச்சிக்கிறது…….சூழ்ந்த வாழ்க்கைனா இதுதான்…//
  அருமையான வரிகள். மண்ணிற்கும் மனிதனுக்கும் உள்ள பந்தத்தை விளக்குபவை. இயற்கையோடு இயைந்து வாழ்ந்த மனிதனுக்குக் கிடைத்த சொர்க்கத்திற்குச் சமமான சூழல், மன நிறைவு இவையெல்லாம் இனி எட்டாக் கனிகளோ என்று மனம் ஏங்குகிறது.
  விபரீத விஞ்ஞானத்தின் (விபரீத விஞ்ஞானம் லாப நோக்குடனும் அழிவுத் தன்மையுடனும் பொது நலன் கருதாது அடுத்த தலைமுறையைப் பற்றி அக்கறையில்லாது செயல்படுவது) உதவியால் வியாபார நோக்குள்ளோர் விண்ணையும் மண்ணையும் நீரையும் காற்றையும் மாசுபடுத்தி இவ்வுலகை வாழத் தகுதியற்றதாக மாற்றிக் கொண்டிருக்கும் இவ்வேளையில், பட்டினி கிடந்தும் பிறர் பசியைப் போக்க இயற்கையுடன் இயைந்து, இணைந்து பாடுபடும் விவசாயிகளின் சேவை போற்றப்பட வேண்டியது. இக்கருத்தைச் சிந்திக்க வைத்த அருமையான பதிவு.

  துளசிதரன்

  பதிலளிநீக்கு
 20. இறைமாட்சி அதிகாரத்தில்
  கொடைஅளி செங்கோல் குடியோம்பல் நான்கும்
  உடையானாம் வேந்தர்க்கு ஒளி.

  கொடையும் , இரக்க குணமும் , செங்கோன்மையும், ஏழமையான மக்களைக் காத்தாலும் ஆகிய நான்கையும் உடைய வேந்தன் வேந்தர்க்கெல்லாம் ஒளிமிக்க விளக்காவான்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இறைமாட்சி அதிகாரத்தை தான் எழுதியதாக நீங்களும், வே.நடனசபாபதி ஐயா அவர்களும் → 2020 வல்லரசு ஒரு கனவா...? (பகுதி 1) ← பதிவில் சொல்லி விட்டீர்கள்... பகுதி ஒன்றில் "அரசிற்கு" என்று இறைமாட்சியின் முதல் 5 குறள்களை எதிர்மறையாக எழுதியிருந்தேன்... நம் நாட்டின் நிலை அப்படி...!

   அதன் அடுத்த பகுதி இனிமேல் தான் எழுத வேண்டும்... அதில் நீங்கள் சொன்ன குறள் கடைசியாக வரும்... இங்கு "வேந்தர்க்கு ஒளி இல்லையென்றால்...?" என்பதே நண்பனின் கண்ணீருக்கு காரணம்...!

   நீக்கு

 21. நண்பன் அழுததற்கு காரணம் ஊழ்தான் என்பதை வள்ளுவர் அழுத்தம் திருத்தமாக ஊழ் பற்றிய குறளில் ( எண் : 380)

  ஊழிற் பெருவலி யாவுள மற்றொன்று
  சூழினுந் தான்முந் துறும்.

  என்று சொல்லிவிட்டார்.

  விலக்குவதற்குரிய பிற வழிமுறைகள் ஒருவருக்கு இருந்தாலும், அவற்றையெல்லாம் புறந்தள்ளி தானே முந்திக்கொண்டு ஒருவரை அவருக்கு விதிக்கப்பட்ட வகையில் செலுத்தும் தன்மையுள்ளது ஊழ் என்கிறார் வள்ளுவர்.

  விதியை வெல்ல வேறொரு வழியை எண்ணி நாம் செயற்பட்டாலும், அந்த வழியிலேயோ வேறு ஒரு வழியிலேயோ அது நம்முன் வந்து நிற்கும்‌; ஆகவே விதியை விட வேறு எவை வலிமையானவை? என்பதே வள்ளுவரின் கருத்து.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஐயா வணக்கம்... அதை → விதி ← எனும் பதிவில் சொல்லி விட்டேன்... இங்கு நண்பனின் கண்ணீருக்கு, அதாவது உழவனுக்கு எந்த வழி சென்றாலும், மனித வடிவில் ஒரு விதி விளையாடுகிறது பல நூற்றாண்டுகளாக...! யார் காரணமாக இருக்கலாம் ஐயா...? அந்தளவு முக்கியமானவராக ஐயன் யாரை கருதக்கூடும்...?

   நீக்கு
 22. வணக்கம் சகோதரரே
  நல்ல பதிவு. பதிவும். கருத்துரைகளும் ஆழ்ந்த சிந்தனைகள். "ஏர் முனைக்கு நேர் இங்கே எதுவுமே இல்லை" என்பது போல் விவசாயிகள் இல்லாமல், நம் ஜீவனே இல்லை. நம் ஜீவாதாரம் பசிப்பிணி என்ற கவலையின்றி இருக்கவேண்டுமானால் அவர்களின் வாழ்வாதாரத்தை நாம் பராமரிக்க வேண்டும்.

  நண்பனின் பேச்சு மனதை கலங்கடிக்கிறது. மண்ணின் செழுமையின் பயன் அனைத்தையும், நமக்குத் தந்து, பலன் பாராது உழைக்கும் நண்பர்களின் உள்ளப்பிணியாகிய துயரை அரசன் அன்றன்று போக்க வேண்டும். தெய்வம் உடனிருந்து என்றும் காக்க வேண்டும் என பலனில், பங்கேற்கும் நாம் பிரார்த்தித்து கொள்வோம். பகிர்வுக்கு மிக்க நன்றி.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
 23. விளைச்சல் இருந்தா அன்பா, சந்தோஷமா, பாதுகாப்பா வாழலாம் அதற்கு இயற்கை இயன்ற வரை உதவட்டும்

  பதிலளிநீக்கு
 24. தெரிந்து வினையாடல் அதிகாரம்

  நாடோறும் நாடுக மன்னன் வினைசெய்வான்
  கோடாமைகோடாது உலகு

  தொழில் செய்கின்றவன் தன் கடமையைச் சரிவரச் செய்வானாயின் உலகம் கெடாது. ஆதாலால் மன்னன் நாள்தோறும் அத்தகைவனைக் கவனித்து வர வேண்டும்.

  உலகம் வாழ விவசாயத்தை சரிவர செய்ய அரசு உதவ வேண்டும்
  அப்போது நண்பரின் கண்ணீர் துடைக்கப்படும்.

  பதிலளிநீக்கு
 25. பாரம்பரியத் தொழில்களான பலவற்றில் இருந்தும் அதற்குச் சொந்தக் காரர்கள் ஆனவர்கள் பலரும் வெளியேறக் காரணம் யார்?...

  என்றைக்குத் தனது தொழில் நுட்பத்தை விவசாயி கை விட்டாரோ அன்றைக்கே பிரச்னை பின் தொடர்ந்தது ..
  உடன் நடந்தது...

  இன்றைய விவசாயத்தின் சீர்கேடுகள் அனைத்துக்கும் காரணம் நவீனத்துவமும் பேராசையும் தான்...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இதுவும் உண்மை தான் ஐயா... ஆனால் இயற்கை செய்ய வில்லை... அவ்வாறு ஆக்கப்பட்டார்கள்... சரி, ஆழ்வார் எனும் ஆய்வுப் பதிவில் சொன்னதே இங்கு கேள்வியாக :- ஒரு கருமத்தால், வர்ணம் பூசி உழவனை நான்காம் இடத்திற்கு தள்ளியது யார்...? ஏன்...?

   நீக்கு
 26. இன்னும் நிறைய சொல்லலாம்...
  ஊர் வம்பு ஆகிவிடும் என்பதோடு இணையம் சரியில்லை என்பதே காரணம்....

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆம், சிலவற்றை குறிப்புகளாக கொடுத்து விட்டு பலவற்றை தவிர்த்து விட்டேன் ஐயா... அனைத்து மக்களும் எவ்வித பாகுபாடு இல்லாமல் வாழ வேண்டும்...

   நீக்கு
  2. அன்பு தனபாலன்,
   குறள்களை அறியக் கொடுக்கிறீர்கள். அர்த்தமும்,
   ஆழமும் புரிகிறது.
   மற்றபடி என் தமிழறிவு மிகவும் குறைவே.
   உழவனின் வலியை உணர முடிகிறது.
   ஒவ்வொரு வேளை உணவையும் மிக நன்றியோடே உண்ணுகிறோம்.
   எந்த ஒரு அரசாங்கமும் விவசாயியின்
   துன்பத்தை உணர்ந்ததாகத் தெரியவில்லை.

   ஓட்டு வங்கியாகவே அவர்களைப் பகடை ஆடுகிறார்கள்.
   நன்றி மா.

   நீக்கு
 27. குரல் சேவைப் பதிவுகள் தொடரட்டும் சித்தரே

  பதிலளிநீக்கு
 28. நோயைவிட பசி கொடுமையானதுண்ணே!
  வெளிநாடுகள் அறிவியல் வளர்ச்சியை விவசாயத்திற்கும் பயன்படுத்துறதை வீடியோக்கள், புகைப்பட்டத்தில் பார்த்திருக்கேன். ஆனா, நம்மூரில்?! அறிவியல் வளர்ச்சியில் விவசாயத்தை ஏளனமா பார்த்து கெட்டு சீரழிஞ்சு நிக்குறோம். உடலில் எல்லா பாகமும் வளரனும். ஓரிரு பாகங்கள் மட்டும் வளர்ந்தால் பார்க்க நல்லாவா இருக்கும்?!

  பதிலளிநீக்கு
 29. தங்களின் இந்த பதிவினை நம்மாழ்வார் மேல் உலகிலிருந்து நிச்சயம் கண்டு மகிழ்வார் நண்பரே.

  பதிலளிநீக்கு
 30. மிக அருமை சிறப்பாக எழுதிருக்கிறீர் விவசாயமே நம் மூச்சு வாழ்த்துகள்

  பதிலளிநீக்கு
 31. சகோதரா கருத்தக்களே பெரிய ஆக்கமாக உள்ளது..நன்று நன்று.. எனது பக்கம் இந்தப் பதிவை அழுத்தினால் வரும். நன்றி.

  பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

நகுதற் பொருட்டன்று நட்டல் மிகுதிக்கண்
மேற்சென்று இடித்தற் பொருட்டு. (குறள் 784)

நட்புச் செய்துகொள்வது நண்பரோடு சிரித்து மகிழ்வதற்காக மட்டும் அல்ல. மிகுதியாகத் தவறு செய்யும்போது, அவரைக் கடிந்து திருத்துவதற்கே ஆகும்.