🏠 வணக்கம் காப்பகம் நன்றி

தேடல் 🔎புதிய பதிவுகளை பெற ✉விதி...

வணக்கம் நண்பர்களே... ஒரு முக்கியமான பதிவு...


பிரிவாற்றாமை மற்றும் கண்விதுப்பழிதல் குறளின் குரல் தொடருவோம் என்று நினைத்தால், அதன் பாடல்கள் எல்லாம் சோக ராகங்கள்... அதைப் பதிவேற்றம் செய்ய முற்பட்டால், Google Site "ஒரு வாரம் கழித்துத் தான் Folder உருவாக்க முடியும்"ன்னு சொல்லி விட்டதால், இந்த விதி பதிவு...?! நான் நினைக்கும் பலரும், "இதை எங்கோ வாசித்த மாதிரி இருக்கே..." என்று சொல்லலாம்...! 2015 ஆம் ஆண்டு எழுதிய குறிப்பை (draft post) 'பட்டி டிங்கரிங்' செய்து இன்று வெளியிட வேண்டும் என்பது விதி...! சரி நான் இங்கு 'எல்லாம் விதி' என்கிறேன், என் மனம் 'அது விதியில்லை' என்கிறது... உரையாடலுக்குச் செல்லும் முன் ஒரு பாடலை கேட்போமா...?

யாருக்கு நான் தீங்கு செய்தேன் இறைவா...? நாட்டில் யார் குடியை நான் கெடுத்தேன் இறைவா...? ஊருக்கு நான் என்ன செய்தேன் இறைவா...? என்னை உனக்குக்கூடப் பிடிக்கலையா இறைவா...? மக்கள் கூடும் மண்டபத்தை இடித்தேனா...? நீதி மன்றத்திலே பொய்யுரைத்து நெறி மறந்தேனா...? கற்றவர் மேல் பழி உரைத்துக் கலங்க வைத்தேனா...? ஒரு கடவுள் இல்லையென்று சொல்லி கருத்தழிந்தேனா...? குழந்தை உண்ணும் பாலினிலே விசங்கலந்தேனா...? ஏழை குடியிருக்கும் குடிசைகளைப் பிரித்தெறிந்தேனா... கொடுத்த கடன் இல்லையென்று மறுத்துரைத்தேனா...? நாளும் கொலை புரியும் பாவிகட்கு கொடிப்பிடித்தேனா...?


© ஆயிரங்காலத்துப் பயிர் கண்ணதாசன் S.M.சுப்பையா நாயுடு T.M.சௌந்தரராஜன் @ 1963 ⟫

ஆகூழால் தோன்றும் அசைவின்மை கைப்பொருள்
போகூழால் தோன்றும் மடி 371
இப்படிப் புலம்பிப் பாடுவதும் கூட விதி தானா...? மாத சம்பளம் வாங்கும் போதும் சரி, இப்போ வியாபார செய்து வாழும் வாழ்க்கையிலும் சரி, திருப்தி மட்டும் குறையல... அதனால மகிழ்ச்சியும் குறையல... தேவைக்கேற்ப வாழ்க்கையிலே எல்லா வளமும் கிடைக்குமென்று தெரிந்த பின்பும், செய்யும் தொழில்லே ஊக்கமும் குறையல... ஆனால், இப்போது இதெல்லாம் காணாமல் போய்விடுமோ என்று நினைச்சா, சோம்பல் உடனே வந்து எதிலும் ஈடுபட முடியலே... அட என்னடா பொல்லாத வாழ்க்கை...

பேதைப் படுக்கும் இழவூழ் அறிவகற்றும்
ஆகலூழ் உற்றக் கடை 372
அடேய் இதுக்குப் போய் அலட்டிக்கலாமா...? இப்படி நினைச்சிகிட்டே இருந்தா, உனக்குள்ளே இருக்கும் நானும், அறியாமைங்கிற விதியில் மூழ்க வேண்டியது தான்... வீதியில் சுற்றினால் விதி முடியும் என்பது இன்றைய விதி... பொறு... அழிவைத் தர்ற இன்றைய நிலை, ஆக்கம் தர்ற நிலையா மாறும்... அப்போ மட்டும் அறிவு விரிவடைந்து யோசிச்சு பயனில்லை... இப்போ தான் நிறைய யோசிக்கணும்... புத்தகங்களைப் படிக்கலாம்... பாடல்களைக் கேட்கலாம்... சோம்பலைத் தோற்கடிக்க இதுபோல் ஒரு அரிய வாய்ப்பு வராது...

நுண்ணிய நூல்பல கற்பினும் மற்றுந்தன்
உண்மை யறிவே மிகும் 373
புத்தகங்களைப் படித்தால் மட்டும் அறிவு...? என்னதான் வாழ்நாள் முழுக்க நுட்பமான கருத்துக்கள் உட்பட, பலதரப்பட்ட புத்தகங்களைப் படிச்சாலும், நமக்கு விதித்த விதிப்படி தான் இயல்பான அறிவு இருக்கும்...!

இருவேறு உலகத்து இயற்கை திருவேறு
தெள்ளிய ராதலும் வேறு 374
அதாவது இருந்துட்டுப் போவுது...! புத்தகங்களைப் படிக்கிறதாலே அறிவு பெருகுதோ இல்லையோ, அதனாலே நம் வாழ்வு முறை மேம்பட்டு இருக்குல்லே...? என்னதான் படிச்சாலும் மத்தவங்களுக்கு பயனா இருக்குறது தான் முக்கியம்... உலகத்திலே இருவேறு நிலை தெரிஞ்சிக்கோ... ஒன்னு பணம் படைத்தவன், இன்னொன்னு அறிவு படைத்தவன்... உன்னோட சிந்தனையிலே கேட்கிறேன், இதிலே எந்த விதி நமக்கு வேணும்...?

நல்லவை எல்லாஅந் தீயவாம் தீயவும்
நல்லவாம் செல்வம் செயற்கு 375
எந்த விதியும் வேண்டாம்... அளவிற்கு மேல் ஆசைப்படாம, இருக்கிறதை வைச்சிட்டு சந்தோசமா வாழலாம், நல்லதே நடக்கும்னு நினைச்சா கெட்டது நடக்க ஆரம்பிக்குது... கெட்டது நடந்து விடுமோன்னு பயந்தா உடனே நல்லது நடக்குது... அதனாலே இறைவன் வகுத்த தலைவிதியே போதும்...! என்னத்த சம்பாதித்து, என்னத்த கொண்டு போகப் போறோம்...?

பரியினும் ஆகாவாம் பாலல்ல உய்த்துச்
சொரியினும் போகா தம 376
ஐஐ... இந்த 'விதி'கதை எல்லாம் வேண்டாம்... நாம என்ன தான் எல்லாவற்றையும் கட்டிக் காத்தாலும், போகணும்னு இருந்தா போயே தீரும்... அதே சமயம் நாமே வேண்டவே வேண்டாம்னு வெளியே தள்ளினாலும், எதுவும் நம்மை விட்டுப் போகாது...! எத்தனை பாத்திருக்கோம்...? இப்போ என்ன, இதிலே உயிரையும் சேர்த்துக்க வேண்டியது தான்...!

வகுத்தான் வகுத்த வகையல்லால் கோடி
தொகுத்தார்க்கு துய்த்தல் அரிது 377
இதைத்தான் 'விதி'ன்னு சொல்றேன்...! கோடானுகோடி செல்வ வளங்கள் இருந்தாலும், இறைவன் விதித்த விதிப்படிதான் நாம் அதை அனுபவிக்க முடியும்... அதுவும் வாழ்க்கை நெறிப்படி நாம் நடக்கா விட்டால், ஓரளவு கூட நம் விருப்பப்படி அனுபவிப்பது கடினம் தான்... நடப்பது எல்லாம் அவன் செயல்...

துறப்பார்மன் துப்புர வில்லார் உறற்பால
ஊட்டா கழியு மெனின் 378
நடப்பதெல்லாம் நன்மைக்கே...? நம்மளாலே...! நீ சொல்லும் விதியால், துன்பங்கள் எல்லாம் பறந்து விடும் என்றால், வறுமையால் தினந்தினம் துயரப்படுபவர்கள் எல்லாம் எப்போதோ துறவிகள் ஆகியிருப்பார்களே...! துறவு வாழ்க்கைக்கும் விதி உதவ வேண்டும் என்று சொன்னால் ஏற்றுக் கொள்கிறேன்... ஏன்னா, மெய்ப்பொருளை நாடுபவர்களின் துறவு, உலக நோக்கம் கொண்டது, தூய ஒழுக்கங்களும் நிறைந்தது... மானம் | குலம் | கல்வி | வண்மை | அறிவுடைமை | தானம் | தவம் | உயர்ச்சி | தாளாண்மை | காமம் | இந்த பத்தும், எது வந்தால் பறந்தே போகும்...?

நன்றாங்கால் நல்லவாக் காண்பவர் அன்றாங்கால்
அல்லற் படுவ தெவன் 379
புரியுது, துறவியானாலும் சோறு தான் முக்கியம்...! சரி, வாழ்க்கையில் நன்மையும் தீமையும் மாறி மாறி வந்தால் தானே வாழ்க்கை...? இதில் ஒன்று மட்டும் தொடர்ந்தால், வாழ்வு முடியப்போகிறது என்று அர்த்தம் தானே...? நன்மை வரும்போது மட்டும் நல்லதாக ஏற்றுக்கொண்டு மனம் மகிழ்வது போல், விதியால் தீமை வரும்போது அதை ஏற்றுக்கொள்ளாது மனம் வருந்துகிறதே... ஏன்...?

ஊழிற் பெருவலி யாவுள மற்றொன்று
சூழினுந் தான்முந் துறும் 380
செய்வதெல்லாம் செய்து விட்டு, பழியை விதியின் மீது போட்டால் எப்படி...? 'விதியை மதியால் வென்று விடலாம்' என்று எந்த வழியிலும் சென்று முயற்சி செய்தாலும், "வணக்கம் நலமா...?" என்று நம்முன் வந்து சிரித்துக்கொண்டே நின்று, வந்த வேலையை முடிக்கும்...! அதை விதி என்பதை விட, இயற்கையின் பேராற்றல் என்று சொல்ல வேண்டும்... அத்தகைய இயற்கை நிலையை மாற்றி மற்றொரு செயற்கை நிலையை அமைத்திட நினைத்தால், விதி வலியது தான்...! வெள்ளப் பெருக்கு, எரிமலை வெடிப்பு, நில நடுக்கம், மண்சரிவு என எத்தனையோ இயற்கைப் பேரழிவுகளை வென்ற தடுத்த மனிதன், இப்போது வந்துள்ள துயரத்தையும் மனம் தளராமல் இடைவிடாத முயற்சி செய்து, தடுத்து விடலாம்... ஆனால், இயற்கை செய்யும் விளையாட்டை யாராலும் கணிக்க முடியாது... அது, அரசியலில் பிழை செய்தவர்களை அறம் தண்டிப்பதை எவ்வாறு என்று, இதுவரை யாரும் அறுதியிட்டுச் சொல்லவே முடியாதது போல... இயற்கைக்கு எதிராக எதையும் செய்யக்கூடாது... செய்யவும் முடியாது என்பதையும், அதை எந்தக்காலத்திலும் மனிதன் வெல்லவே முடியாது என்பதை, அவ்வப்போது உணர வைப்பது தான் இயற்கையின் விதி...!

பிற்சேர்க்கை : குறள்களை வாசிக்கச் சுட்டியைச் சூரியன் பொத்தானுக்கு மேல் கொண்டு செல்லவும்...
அதைச் சொடுக்கினால், குறளின் விளக்கத்தையும் கேட்கலாம்...

அதிகாரம் 38 ஊழ் (371-380)

புதிய பதிவுகளை பெறுதல் :


தொடர்புடைய எண்ணங்களின் வண்ணங்கள் சில :


முகநூல் மூலம் கருத்துக்களை பகிர :

கருத்துகள்


 1. வணக்கம் ஜி
  தங்களது பதிவுகளில் தலைப்பு சிறியது இதுதான் என்று நினைக்கிறேன் (கே.பாலாஜி பிரச்சனை வராமல் இருந்தால் சரி)

  மனிதன் எவ்வளவுதான் முயற்சித்தாலும் முடிவில் விதி என்ற கோட்பாட்டில்தான் வந்து நிற்க வேண்டியதாகி விட்டது.

  எவ்வளவு உலக அரசியல்வாதிகளின் சித்து விளையாட்டு முடிவு வினையில் வந்து நிறுத்தி விட்டது.

  கொரானாவின் கோரப்பிடியிலிருந்து உலக மக்கள் காக்கப்படல் வேண்டும்.

  நான் பிறப்பதற்கு முன்பு வந்த பாடல் "ஆயிரம் காலத்துப்பயிர்" இன்றுதான் முதன் முறையாக கேட்கிறேன் ஜி

  பதிலளிநீக்கு
 2. புத்தகங்கள் படிக்கிறதால அறிவு மேம்படும் என்பது எல்லோருக்குமே பொருந்தி விடுவதில்லை என்பது என் சமீபத்து அனுபவம்!  

  இத்தாலில தான் சம்பாதிச்ச காசை எல்லாம் வீதியில கொட்டி, இதனால எங்களுக்கு பயனேதும் இல்லை, யாருக்கானும் உதவட்டும் என்று போட்டிருப்பதாய் வாட்ஸாப் தகவல்.  உண்மையோ, பொய்யோ அதன் நிஜம் மனதைச் சுடுகிறது.

  உங்கள் மனநிலையில்தான் நானும் இருக்கிறேன் DD.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. கல்லூரி படிப்பு, புத்தக படிப்பு போன்ற எதற்கும் நிஜ வாழ்க்கை நடவடிக்கைகளுக்கும் எவ்வித தொடர்பும் இல்லை.

   நீக்கு
 3. இயற்கை செய்யும் விளையாட்டை யாராலும் கணிக்க முடியாது.
  உண்மை தான்!
  இருப்பினும் கொரோனா பாதுகாப்பு
  மக்கள் விழிப்புணர்வு போதாமல் இருக்கிறது.

  பதிலளிநீக்கு
 4. இயற்கையின் விதி - உண்மை உண்மை. நான் மட்டும் இல்லை, இங்கு இருக்கும் எல்லோரும் உங்கள் மனநிலையில் தான் இருக்கிறோம்.

  "//துறவியானாலும் சோறு தானே முக்கியம்//" - இந்த ஒத்த வாசகம் என்னுடைய கல்லூரி கால நினவுகளை கிளறி விட்டது.

  பதிலளிநீக்கு
 5. விதி.... விதி விட்ட வழியில் செல்ல வேண்டியிருப்பது உண்மை. இன்றைக்கு பலருடைய நிலையும் இது தான். நல்லதே நடக்கட்டும். நலமே விளையட்டும். நடக்கும் என்ற நம்பிக்கை மட்டுமே கொள்வோம்.

  பதிலளிநீக்கு
 6. இயற்கையின் விதி. அருமையான கருத்து

  பதிலளிநீக்கு
 7. என்ன வழமையை விட துறவி போல் இன்றைய பதிவு வந்திருக்கின்றது. விதி என்று மதியை நோவாதா! விதி விட்ட வழியே தொடர்வதா என்றுதான் இன்றைய நிலை. நினைத்துப் பார்க்காத ஒரு சின்ன வலிமை மிக்க அசுரன் எம்மை எப்படியெல்லாம் கலங்க வைக்கின்றது. கட்டிப் போட்டாலும் வீட்டுக்குள் அடங்காத மனிதன் இன்று அடங்கிப் போய் விட்டான். இதுதான் வாழ்க்கை என்று மகிழ்ச்சியாக எதுவும் வேண்டாம் என்று பொழுதைப் போக்குவோம் என்றால், எதிர்காலம் வந்து கண்ணுக்கு முன் நிற்கிறது. அதுவாக எதுவும் நடக்கும். நாம் நாமாக இருப்போம். காலம் எம்மை வழி நடத்திச் செல்லும் . இதைத்தான் விதி என்கின்றார்கள்.

  பதிலளிநீக்கு
 8. ஐஐ... இந்த 'விதி'கதை எல்லாம் வேண்டாம்... நாம என்ன தான் எல்லாவற்றையும் கட்டிக் காத்தாலும், போகணும்னு இருந்தா போயே தீரும்... அதே சமயம் நாமே வேண்டவே வேண்டாம்னு வெளியே தள்ளினாலும், எதுவும் நம்மை விட்டுப் போகாது...! எத்தனை பாத்திருக்கோம்...? இப்போ என்ன, இதிலே உயிரையும் சேர்த்துக்க வேண்டியது தான்...!

  இதைத்தான் 'விதி'ன்னு சொல்றேன்...!////

  100 வீதம் உண்மை.... எனக்கும் விதியில் நம்பிக்கை உண்டு... வேறு வழி?

  விதி பற்றிய பதிவு இன்று அருமை.

  பதிலளிநீக்கு

 9. பதிவு அருமை.

  பேரன் விடுமுறையில் இருப்பதால் எங்களுடன் விளையாடுகிறான்.
  நிலை இல்லா வாழ்க்கையை சொல்லும் விளையாட்டு விளையாடுகிறான்.

  வெள்ளப்பெருக்கை சுனாமி என்கிறான் , எரிமலை, நிலநடுக்கம், மண் சரிவு அதில், வீடு, மரம், விலங்குகள், மக்கள் அடித்துக் கொண்டு போவது போன்ற விளையாட்டை விளையாடி காட்டுகிறான்.

  கொரானா பயத்தில் எல்லோரும் இருக்கும் போது இவன் இப்படி விளையாடுகிறான் என்றால் இயற்கையின் விதியை யாரும் மாற்ற முடியாது. அவன் புரிந்து கொண்டு இருக்கிறான் என்கிறார்கள் என் கணவர்.

  மகிழ்ச்சியை கொடுக்கும் போது ஏற்று கொள்ளும் நாம் துனபத்தை கொடுக்கும் போது வருந்துவது சகஜம்.

  இயற்கையின் விதியிலிருந்து யாரும் தப்ப முடியாதுதான்.ஆனாலும் இயற்கை அனைவரையும் பாதுகாக்க வேண்டும். இயற்கையை பாதுகாக்கும் அறிவையும் அருளவேண்டும். இயற்கையை அழித்தால் முடிவுகள் விபரீதம் ஆகும் என்ற படிப்பினையை ஒவ்வொரு முறை கொடுத்தாலும் ஏற்று கொள்ள மாட்டீர்களா? என்று இயற்கை கேட்பது புரிகிறது உங்கள் பதிவின் மூலம்.

  பாடல் கஷ்டபடும் மனிதனின் கேள்வியாக ஒலிக்கிறது.

  வீதிக்கு போகாமல் வீட்டில் இருப்போம். பொறுப்போம் நல்லதே நடக்கும் என்ற நம்பிக்கையுடன்.  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பு தனபாலன்,
   மிக மிக அருமையான பதிவு.
   விதி என்பது உண்மை.
   கண்கூடாகப் பார்க்கிறோம்.
   இயற்கையை நாம் அழித்தோம்.
   இன்று இயற்கை நம்மை அழிக்கப் பார்க்கிறது.
   பொறுத்தார் பூமி ஆள்வார் என்பது சித்தாந்தம்.
   பூமியையே பாழடிப்போமானால்
   இதுவே நடக்கும்.
   அருமையான பாடல். இன் யார் இது போல
   எழுதப் போகிறார்கள். தனபாலன் சொல்வதால்
   பழைய பாடல்களின் தத்துவங்கள் வெளிவருகிறது.
   எல்லாம் மாறும்.
   நாமும் சீரடைவோம்.நம்பிக்கை தானே வாழ்க்கை.
   நன்றி மா.

   நீக்கு
  2. எந்த நிலைமையில் நாமிருந்தாலும் நேரத்தை வீணாக்காமல் உருப்படியான செயல்களை செய்யவேண்டும்.ராபின்சன் க்ரூசோவை நினைவில் கொள்வோம்.

   நீக்கு
 10. ஆஹா இன்று விதி பேசுகிறதா...இதில் பல வரிகள் கருத்துகள் முன்பே பேசியது போலத் தோன்றுகிறது டிடி. அதை இங்கு காப்பி பேஸ்ட் செய்து போட முடியாததால் அதுவும் வாழ்க்கையின் நிலையா தன்மை பற்றி சொல்லியிருக்கும் கருத்துகள் குறிப்பாக ஊழ் வினை பற்றி முன்பு நீங்கள் சொல்லியிருந்த நினைவு. இப்போது உங்கள் பதிவு முழுவதும் ஊழ் பற்றிய திருக்குறள் கள் இல்லையா...

  நுண்ணிய நூல்பல கற்பினும் மற்றுந்தன்
  உண்மை யறிவே மிகும்.

  அத்தனை குறளும் !!!

  டிடி இதுதான் பலரது நிலைப்பாடும் என்றே எண்ணத் தோன்றுகிறது. விதியை மதியால் வெல்லலாம் என்று சொல்லப்படுவது நாம் முயற்சி செய்து கொண்டே இருக்க வேண்டும் என்பதற்காக, விதி என்று விட்டால் நாம் சோம்பேறிகள் ஆகிவிடுவோம் என்பதற்காகத்தானே அல்லாமல் விதியை வென்றிடுவோம் என்று அல்ல. முயற்சி திருவினையாக்கும் என்றும் வள்ளுவர் தாத்தா சொல்லியிருக்கிறாரே!!!

  எல்லாம் விதி என்று இருந்துவிட்டால் பல நோய்களுக்கு மருந்து கிடைத்திருக்காது ஆனால் அப்படி மருந்து கிடைக்க வேண்டும் என்று இருப்பதும் விதிதான்....எனவே விதியைக் கூடியவரை வென்றிட முயற்சி செய்ய செய்ய அது திருவினையாகவும் கூடும் என்பதும் விதி இருந்தால் நடக்கும்.
  ஊழில் முதல் குறள் சரியா..டிடி

  கீதா

  பதிலளிநீக்கு
 11. //அரசியலில் அறம் பிறழ்ந்தவர்களை விதி எவ்வாறு தண்டிக்கிறது என்பது நமக்குத் தெரியாதது போலவே// - நல்ல உணர்ந்த வரி. ஆனால் விதியை மதியால் வெல்லலாம் என்றும் சொல்கிறார்கள். அது ஒருவேளை விதியினால் நிகழ்வுகள் நடந்த பிறகு, இப்படி நடந்துகொண்டிருந்தால் விதியை வென்றிருக்கலாம் என்று சொல்வதைப் போலவோ என்று தெரியவில்லை.

  பதிலளிநீக்கு
 12. புத்தகம் படித்தால் அறிவு மேம்படும் என்பது எல்லோருக்கும் பொருந்திவருமா என்று சொல்வதற்கில்லை. இப்போதுதான் வாட்சப்பில் ஒரு அருமையான செய்தி வந்தது. இப்போதையதிலிருந்து மீண்டு இவ்வுலகிற்கு மீண்டும் வரும் போது நாம் இங்கு இருக்கப் போவது தற்காலிகமாகத்தான் ஒரு விருந்தினராக...இயற்கை நாம் இல்லை என்றாலும் அது நன்றாகவே நலமாகவே இருக்கும். எனவேநாம் இவ்வுலகில் எஜமானர்களாக இருக்கக் கூடாது என்று....

  கீதா

  பதிலளிநீக்கு
 13. எல்லாமே விதிப்படிதான் நடக்கும். உண்மைதான் விதி இருந்தால் விதியையும் மதியால் வெல்லலாம்! அந்த விதி இப்போதைக்கு எல்லாருக்கும் உலகை காக்க விதிச்சிருக்கு. விதிப்படியே நடப்போம். பொறுப்புடன் வீட்டினுள் இருப்போம். அவசியமேற்பட்டால் வெளியே செல்லும்போது தகுந்த இடைவெளி விட்டு உலாவுவோம்

  பதிலளிநீக்கு
 14. வணக்கம் சகோதரரே

  விதி பதிவு அருமை.. மிக அழகாக எழுதியுள்ளீர்கள். நீங்கள் கூறுவது அனைத்தும் உண்மைதான்..

  விதி வலியது.. அதை மாற்றலாம் என்று நாம் ( நம் மதியில் கர்வம் கொண்டோ , இல்லை பாஸிட்டிவாக நினைக்க வேண்டும் அப்படி நினைத்தால் நல்லதை தவிர வேறேதும் நடக்காது என்ற நம்பிக்கையின் நிலை பால் அதிகமாக நம்பிக்கை கொண்டோ)
  நினைத்து செயலாற்றும் போது வேறொரு வகையில் அது சென்று முடிவதும் நம் விதிதான். அது தெரியாமல் மனிதரை, மனிதர் இகழ்வதும் மனம் புண்படும்படி பேசுவதும் தொடர்கிறது. என்னைக் கேட்டால் இதையெல்லாம் கேட்க வைத்து அம்மனிதரை நோக வைப்பதும், இல்லை அவ்வாறு பேச வைப்பதும் அந்த விதிதான் என்பேன்.

  விதியின் படிதானே எல்லாமும் நடக்கும். "எனவே நேற்றைய இன்னல்களை எண்ணாமல், நாளைய நிகழ்வுகளில் கவனத்தை சிதறடிக்காமல், இன்றைய இன்பத்தை மட்டும் அனுபவி என்றார் பகவான் கிருஷ்ணர். அந்த இரண்டிலும் உன் விதிகள் பிணைந்திருக்கின்றன. இன்றில் மட்டும் என்னை நீ சந்தோஷத்துடன் பிணைத்துக் கொள். என்றார். " அவர் கூறிய வழியில் நடப்போம். அது ஒன்றே ஆனந்தம். இன்றைய தினத்தில் அனைவருக்காகவும் பிரார்த்திப்போம். அதுவும் இன்றைய ஆனந்தத்தில் அடக்கம். பகிர்வுக்கு மிக்க நன்றி.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
 15. ஓவியம் அருமை.
  ஊழிற் பெருவலி யாவுள மற்றொன்று
  சூழினும் தான்முந் துறும்.

  விதி வலிவுள்ளது என்று சொல்லும் திருக்குறள்.

  பதிலளிநீக்கு
 16. பிறப்பது, இருப்பது, இறப்பது என்று எல்லாமே விதிப்படிதான் என்றாலும், நாம் இருக்கும்வரை விதியை எதிர்த்துப் போராடலாம். அதற்குத் துணை புரிவது நமக்கான ஆறறிவு.

  மிக அருமையான பதிவு. நன்றி தனபாலன்.

  பதிலளிநீக்கு
 17. இது உங்களுடைய கருத்து மட்டும் அல்ல. பலரும் மனசுக்குள்  எண்ணி எண்ணி புழுங்கிக் கொண்டிருக்கும் விஷயம். இதுவும் கடந்து போகும் என்பதுதானே இயற்கையின் விதி.  

  பதிலளிநீக்கு
 18. விதி என்பது அனைவருக்கும் பொதுவானது என்று கூறி மகாத்மா அவர்கள் எப்படி விதியை மதித்தார் என்று கூறி வீதியை மதிப்பவர்களே தலைமைப் பண்புக்கு ஏற்றவர்கள் என்று கூறிய பதிவைத்தானே இங்கு குறிப்பிடுகிறீர்கள். அதிலே இன்னொரு விதி பற்றியும் கூறி ‘ஊழையும்’ எனத் தொடங்கும் குறளையும் மேற்கோள் காட்டியதும் நினைவுக்கு வருகிறது.

  ‘விதியை மதியால் வெல்லலாம் என்றாலும்’ இயற்கைக்கு எதிராக மனிதன் எக்காலத்திலும் வெல்லமுடியாது என்று முடித்திருப்பது சிறப்பு.

  பதிலளிநீக்கு
 19. உணவு எடுத்துக்கொள்ளவில்லை என்றால் பசிக்கும் இது விதி ... உடனே உணவு எடுத்துக்கொண்டால் அது மதி ... நீர் குடிக்கவில்லையெனில் நாக்கு வரளும் என்பது விதி ... அதற்கு முன்னதாகவே நீர் அருந்த முடிவெடுத்தால் அது மதி ... அவ்ளோதாங்க ... >> சயின்டிபிக் ஜட்ஜ்மென்ட் <<

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இயற்கையின் விதியை யாராலும் வெல்லமுடியாது என்பதை சிறப்பாக விளக்கியிருக்கின்றது இக் கதை..
   தொடரட்டும் உங்கள் குரள் சொல்லும் கதைகள்

   நீக்கு
 20. ஐயா! வள்ளுவரைப் பெரிதும் மதிப்பவன்தான் நான். ஆனால் என்னவோ ஊழ் தொடர்பான அவர் கருத்துக்களைச் சில சமயம் ஏற்க முடிவதில்லை. சில சமயம் அது சரியெனத் தோன்றுகிறது. சில விதயங்களைப் பொறுத்த வரையில் நம்மால் நிலையான ஒரு முடிவுக்கு வர முடிவதில்லை. அவ்வப்பொழுதைய மனநிலையே வெல்கிறது.

  எது எப்படியோ திருக்குறளை அந்தந்த நேரத்துக்கு நாட்டு நடப்புக்கேற்ப விளக்கும் உங்களுடைய இந்தப் புதுமை முயற்சி மட்டும் என்றும் எங்கள் மனதுக்கு நெருக்கமானதே!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஐயா வணக்கம்... இதற்கு அடுத்த பதிவில் சில குறிப்புகள் கொடுத்துள்ளேன்... ஆனால், அவற்றைப் பற்றி விளக்கமாக எழுதப் போவதில்லை... ஏனெனில், குறள்களில் அவை கிடையாது...

   கிட்டத்தட்ட 5 வருடங்களாக எழுத வேண்டும் என்று நினைத்த அதிகாரம் இது... ஊழ் அதிகார ஆய்வுப் பதிவுகளில் சந்திக்கிறேன்...

   நீக்கு
  2. ஐந்து ஆண்டுகளாகவா! சரியான நேரத்துக்காகக் காத்திருந்திருக்கிறீர்கள்! அருமை!

   //ஊழ் அதிகார ஆய்வுப் பதிவுகளில் சந்திக்கிறேன்// - ஆகட்டும் ஐயா! வருகிறேன்.

   நீக்கு

கருத்துரையிடுக

நகுதற் பொருட்டன்று நட்டல் மிகுதிக்கண்
மேற்சென்று இடித்தற் பொருட்டு. (குறள் 784)

நட்புச் செய்துகொள்வது நண்பரோடு சிரித்து மகிழ்வதற்காக மட்டும் அல்ல. மிகுதியாகத் தவறு செய்யும்போது, அவரைக் கடிந்து திருத்துவதற்கே ஆகும்.