🏠 வணக்கம் காப்பகம் நன்றி

தேடல் 🔎புதிய பதிவுகளை பெற ✉ஆழ்வார்...

வணக்கம் நண்பர்களே... தீநுண்மி, தெய்வத்தை அணுகாமல் இருக்க, எல்லாம் வல்ல இயற்கை அன்னையை வேண்டிக்கொண்டு தொடர்கிறேன்... மனித வாழ்விற்குத் திருக்குறளில் அனைத்தும் உண்டு என்றால், ஊழ் அதிகாரத்தில் திருக்குறளே உள்ளது போல...! திருக்குறளை யாராவது ஆய்வு செய்யத் தொடங்கினால், முதலில் இந்த ஊழ் அதிகாரத்திலிருந்து தொடங்கலாம்... ஆய்வின் முதல் சிறு பகுதியைத் தொடர்கிறேன்...


"தனக்கான உணவைத் தானே உருவாக்கிக் கொள்பவனுக்கு, எதைக்கண்டும் அஞ்சத் தேவையில்லை" என்றார் ஆழ்வார்... அவரின் 18 பொன்மொழிகளை மட்டும் படக்காட்சியாக (Slide Show) கீழே கொடுத்துள்ளேன்... தானாக மாறும் தொழினுட்பத்தை மாற்றி, நாம் ⇦ ⇨ இவற்றைச் சொடுக்கி ஒவ்வொன்றாக வாசிக்கும்படி செய்துள்ளேன்...


நமது ஆழ்வாரின் பிறந்தநாள் அன்று ஒரு பதிவைப் பகிர்ந்தேன்... வாசிக்காதவர்களுக்காக இணைப்பு 2015 ஆம் ஆண்டு எழுதி வைத்த சுருக்கமான குறிப்புகளை சொல்லி இருந்தேன்... அவற்றைப்பற்றி இங்கும் எழுதாமல், ஊழ் அதிகாரத்தின் குறள்களைச் சார்ந்தும், இன்றைய சூழ்நிலையைச் சார்ந்தும், எனக்குள் எழுந்த கேள்விகளும் பதில்களும் ஓர் ஆய்வாக, சற்றே சுருக்கமாகப் பகிர்கிறேன்...

விதி, தலையெழுத்து என்று பலவிதங்களில் அறியாமையால் துயரப்படுவதற்குக் காரணமான, ஆசீவகத்தின் ஊழ் கோட்பாடுகளையே குறள் பின்பற்றவில்லை... அதன் பின்னே மக்களை நம்ப வைத்த, சமய - மத வாதிகளின் இதிகாசக் கதைகளும் அவ்வாறே...! ஊழும் வினையும் வேறு என்பதால், ஊழ்வினை என்பதும் குறளில் கிடையாது... ஊழின் வல்லமை சிந்திக்கவே முடியாதது என்பதால் மக்கள் அதை இகழாமல், பற்பல கதைகளை நம்பி, இயற்கையைச் சிறிது சிறிதாக மறக்க ஆரம்பித்தனர்... சிறிது சிறிதாக இயற்கையும் அதை உணர்த்திய போதும், செடி வளர்க்கும் விஞ்ஞானம் மனிதத்தை வளர்க்கும் மெய்ஞானத்தை மறந்ததால், இன்று இயற்கை உலகையே 'சிறிது' அச்சுறுத்தும் நிலைக்கு வந்துள்ளது... குறள்களில் ஆகூழ் – போகூழ், இழவூழ் – ஆகலூழ் என வகைப்படுத்திக் காட்டப்பட்டுள்ளது... 380.ஊழிற் பெருவலி யாவுள மற்றொன்று சூழினுந் தான்முந் துறும் → விதி வலியது...? 620.ஊழையும் உப்பக்கம் காண்பர் உலைவின்றித் தாழாது உஞற்று பவர் → முயற்சியால் விதியை வெல்லலாம்...? 380 vs 620...? உப்பக்கம் காண்பர் என்றால்...? அந்தப்பக்கம் இந்தப்பக்கம் தெரியும்... உப்பக்கம் எந்தப் பக்கம்...? உள்பக்கமா...? ஊழை உள்பக்கத்தில் வைத்துக் கொண்டு வெல்ல முடியுமா...? இதன் அதிகாரத்திற்குச் சென்றால்...

ஆள்வினையுடைமை எனும் விடாமுயற்சி உடைமை அதிகாரத்தில், முயற்சி திருவினையாக்கும் என்று அற்புதமாகச் சொல்லிக் கொண்டே வந்தவர், முடிவில் குறள் 620-ல் ஊழைப் பற்றி ஏன் சொல்ல வேண்டும்...? சொல்லா விட்டால் → ① எல்லாம் விதிப்படி தான் நடக்குமென்பதால், வருத்திக்கொண்டு உழைக்கத் தேவையில்லை...! ② என்ன முயன்றாலும் தோற்றுவிடுவேன்...! ③ விதியோடு உடன்பிறந்த ஜாதகம் ஜோதிடம் சொல்வதை நம்பியே உழைப்பேன்...! ④ எல்லாம் அவன் செயல்...! இப்படிப் பல எண்ணங்கள் எழுந்து தனிமனிதன் கெட்டு, சமுதாயத்தையும் கெடுத்து, எந்த முன்னேற்றத்தையும் காணவே முடியாது... ஊழினால் மனித சமுதாயத்தை முடக்கும் வன்மையுடையதாக ஆக்காமல், அதை வெல்லும் ஆற்றலை மக்கள் பெறவேண்டும் என்றும், விடாமுயற்சி எவ்வாறு இருக்க வேண்டும் என்றும் தாத்தா சொன்னார்... 620 குறளின் குரல் → ∬ மனதில் சிறிது கூட தளர்ச்சி இல்லாமல் இடைவிடாது முயற்சி செய்து உழைத்துக் கொண்டிருக்கின்றேன்... எளிதாக உள்ளே நுழைந்து விடலாம் என்றோ, என்னை முந்தி சென்று விடலாம் என்றோ நினைக்காதே விதியே... சிறிது ஒதுங்கியே பக்கவாட்டில் வா...∬ 380 & 620 இரு குறள்களின் குரல் → ∬ விதியை மதியால் வெ╱ல்╲வ╱தி╲ல் வெல்ல நினைப்பதில் விடாமுயற்சியே சிறந்தது... முயற்சிப்பவனுக்கு திருவினையாக்கும், முயலாமைக்கு விதி வலியது...∬ எந்நேரமும் விதியை பக்கவாட்டில் வைத்துக் கொண்டு உழைக்க வேண்டியது யார்...?

அடுத்து ஊழ் வேறெந்த அதிகார குறளில்...? → ஊழி பெயரினும் தாம்பெயரார் சான்றாண்மைக்கு ஆழி எனப்படு வார் (989) ∬ கடல் அளவு நிறை குணம் கொண்ட சான்றோர்கள், ஊழிப்பேரலை வந்து கரைகளே இல்லாமல் போனாலும், உலகமே பெயர்ந்து போனாலும், தனது நற்குணங்களிலிருந்து சிறிதும் பிறழமாட்டார்கள்...∬ நற்குணங்களை ஆளுமை செய்யும் சான்றாண்மை பெற்றவர் யார்...? ①+② எந்நேரமும் விதியை பக்கவாட்டில் இருந்தும் உழைத்துக் கொண்டே, நற்குணங்களை ஆளுமை செய்யும் சான்றாண்மை பெற்றவர் யார்...?

இன்றைக்கு அவ்வாறு வேலை செய்து கொண்டிருக்கும் மருத்துவத்துறை, காவல்துறை, சுகாதாரத்துறை என்று பல துறைகளைச் சொல்வதை விட, சேவையே முதன்மை எனும் தெய்வங்கள் என்றும் உண்டு... தெய்வமாகப் போற்றப்படும் இவர்கள், இன்றைய தொற்றினால் இறப்பது நாட்டிற்கு மேலும் ஆபத்து... இதைவிட நம் முன்னறி தெய்வங்களான கோவிலை விடச் சிறந்த தாயும், மந்திரத்திற்கு மேலான சொல்மிக்க தந்தையும் உட்பட, அனைவரின் உயிரைக் காக்கும் தெய்வம் ஒன்று உண்டு... நற்குணங்களில் முதன்மையான, இரக்கமே உருவான அந்த தெய்வமும், எதைப்பற்றியும் கவலைப்படாமல் உழைத்துக் கொண்டிருக்கிறது... இந்த தொற்று அந்த தெய்வத்தை அணுகாமல் இருக்க, எல்லாம் வல்ல இயற்கை அன்னையை வேண்டுகிறேன்... நம் நாட்டில் ஒரு கருமத்தால், நான்காம் இடத்துக்குத் தள்ளப்பட்ட உழவன் தான் அந்த தெய்வம் எந்தக் காலத்திலும், எந்த துறையானாலும், எந்த தொழிலைச் செய்பவராயினும், 'தொழுதுண்டு பின்செல்பவர்' என்றும், உழவனை முதல்வனாக்கி, 'இல்வாழ்க்கை வாழும் உழவன்தான் எல்லோரையும் விடத் தலை சிறந்தவன்' என்றும் உணர்த்தினார் ஐயன்... இவற்றை குறள் 47 மற்றும் ஊழ் 378, 379 குறள்களின் உட்கருத்திலும் உணரலாம்... உழவனைக் கடவுளாக மதிக்கச் சொன்னவர், "பிச்சை எடுத்துத் தான் உயிர்வாழ வேண்டும் என்ற நிலையிருந்தால், உலகைப்படைத்த இறைவன் அங்கும் இங்கும் அலைந்து கெட்டழியட்டும்" என்று தாத்தா, இறைவனை சபித்ததாக சொல்லப்படும் கட்டுக்கதை அடுத்த பதிவில்...!

'உழைப்பே' தெய்வங்களுக்கு ஊழினால் எவ்வித தாக்கமும் அடையக்கூடாது, நல்லூழ் சிரிக்கும்போது நன்மையையும் மகிழ்ச்சியையும் அடைந்து, தீயூழ் வரும்போது ஏமாற்றமும் துன்பமும் அடையாமல், மன அமைதியுடன் இருக்க வேண்டும் என்பதே ஐயனின் விருப்பம்... ஊழுக்கு 'உலகத்தியற்கை' என்றும் பெயருண்டு... அது ஓர் ஒழுங்குக்கு உட்பட்டுத்தான் உருப்பெறுகின்றது... அந்த 'இயற்கை' ஊழ் அதிகாரத்தில் எங்கு வருகிறது...? இதனால் நம் நாட்டின் நிலை என்னவாகும்...? மேற்சொன்ன கட்டுக்கதையுடன் தொடர்புள்ள இதுவும் அடுத்த பதிவில்...!


மனதை வருடும் ஒரு இனிமையான மெல்லிசைப் பாடல்... ⟪ © ஈசா இசைத் தொகுப்பு @ 2013 ⟫

நம்மாழ்வாருக்கே பாடியது போல உருக வைத்தது...

இயற்கை என்னும் இறைவன் கண்டேன்... அன்பில் உயிரைக் கண்டேன்... உன்னை உணர்ந்தேன் என்னை மறந்தேன்... உன்னில் என்னைக் கண்டேன்... பொருள் தேட முயலவில்லை... செல்வம் சேர்க்க ஆசையில்லை... அருள் தேடி உன் பாதம் பற்ற, மேகம் தெளிந்த வானம் போல - என்னுள் விடியல் கண்டேன்... அருள் மழையும் பொழியக் கண்டேன்... கல்லும் கசிந்து உருகக் கண்டேன்... நீல வானில் விடியல் போல, எந்தன் உள்ளம் ஒளிரக் கண்டேன்... கரை சேர ஆசை கொண்டேன்... பணிந்து விட்டேன் கரைந்து விட்டேன் - உன்னில் கலந்து விட்டேன்...


புதிய பதிவுகளை பெறுதல் :


தொடர்புடைய எண்ணங்களின் வண்ணங்கள் சில :


முகநூல் மூலம் கருத்துக்களை பகிர :

கருத்துகள்

 1. எனக்கு மிகவும் பிடித்தவர் நம்மாழ்வார் அய்யா அவர்கள் .அவரின் பொன்மொழிகளை தொகுத்து தந்ததற்கு நன்றி .//தண்ணீரை பூமிக்குள் தேடுவது /// ஆழ்துளையால் வரும் ஆபத்தை எவ்வளவு அழகா சொல்லியிருக்கார் எல்லாமே அருமை .
  அந்த உழைக்கும் நமக்கு உணவிடும் உழவர்கள் நோய் நொடியின்றி  நல்லா இருக்கணும் 

  பதிலளிநீக்கு
 2. 18 பொன்மொழிகளும் நன்று....
  பாடலும், பாடுவதும் அழகு

  பதிலளிநீக்கு
 3. தீ நுண்மியிலிருந்து காத்த்துக்கொள்ள வேண்டும்.  அதுதான் முதலில் மனதில் பதிகிறது.    பதிவு வழக்கம்போலவே சிறப்பு.

  பதிலளிநீக்கு
 4. எல்லோரும் உங்களை திண்டுக்கல் தனபாலன் என்று அழைத்து வந்தாலும் என் மனதிற்குள் நான் அழைத்து கொள்வது திருக்குறள் தனபாலன் என்றுதான் திருக்குறளை அதிகம் பயன்படுத்து பதிவர் ஒரு சிலர்தான் அதில் நீங்களும் ஒருவர்

  பதிலளிநீக்கு
 5. ஆழ்வாரின் பொன்மொழிகளில் இரண்டாவது உள்ள பொன் மொழி மிக அருமை அதை படித்த போது கடந்த தினத்தில் எஸ்வி சேகர் நாரயணன் திருப்தி போன்றவர்கள்தான் நினைவுக்கு வந்து போகிறார்கள்

  பதிலளிநீக்கு

 6. நம்மாழ்வாரின் பொன்மொழிகளை அசையும் படங்களாக செய்தது அருமை ஜி

  உலகில் விவசாயம் இல்லையேல் மனிதவாழ்வு கிடையாது. இதை மனிதர்கள் இன்னும் புரிந்து கொள்ளவில்லை.

  கொரோனாவின் மறைவுக்கு பிறகாவது மாற்றம் வரும் என்று நம்புவோம்.

  பதிலளிநீக்கு
 7. இன்றைய நிலைமைக்கு ஏற்ற பதிவு சகோ. விவசாயம் இல்லாவிட்டால் நாம் ஏது ? உணவு மட்டும்தான் இப்போது நம்மை உயிர்ப்புடன் வைத்திருக்கிறது.

  பதிலளிநீக்கு
 8. விவசாயம் மீண்டும் புத்துயிர் பெறவேண்டும். சுத்தமான காய்கறிகள், தானியங்கள், பழங்களை விளைவித்தாலே பாதி நோய்கள் காணாமல் போகும்.

  பதிலளிநீக்கு
 9. தண்ணீரை பூமிக்குள் தேடுவது ஆபத்து என்ற நம்மாழ்வாரின் வரிகள் வியப்பூட்டுகின்றன. இன்று அதைத்தானே செய்து கொண்டிருக்கிறோம்.

  பதிலளிநீக்கு
 10. நம்மாழ்வாரின் கருத்துக்கள் நமக்காக என்றும் வாழும் . நன்றி

  பதிலளிநீக்கு
 11. நம்மாழ்வார் அவர்கள் 18 பொன்மொழிகள் அருமை.
  உண்மை. வானத்திலிருந்து வரவழைக்க வேண்டும் தண்ணீரை
  எவ்வளவு அற்புதமாய் சொல்லி விட்டார்.

  இயற்கையை அழிக்கமால் அப்படி அழிவு ஏற்பட்டாலும் மீண்டும் மரங்களை காடுகளை வளர்ப்பதுதான் மழை பெற வழி.

  பதிலளிநீக்கு
 12. ஊழையும் உப்பக்கம் காண்பர் உலைவின்றித்
  தாழாது உஞற்று பவர்.
  மனதளர்ச்சி இல்லாமல் எத்தகைய குறைபாடும் இன்றி மேன்மேலும் முயன்று உழைப்பவர் யானை பயனை விலக்குவதாகிய விதியையும் வென்று புறம் காண்பார்.

  ஊழின் காரணமாய் செயல் செய்யமுடியாமல் போனாலும் முயற்சிக்கு ஏற்ப கூலியாவது கொடுக்கும்.

  பதிலளிநீக்கு
 13. தாளாற்றித் தந்த பொருளெல்லாம் தக்கார்க்கு
  வேளாண்மை செய்தற் பொருட்டு.

  முயற்சி செய்து ஈட்டிய பொருள் அனைத்தும் தகுதியுடைய சான்றோர்க்கு உபகாரம் செய்வதற்கேயாம்.

  வேளாண்மை, விவசாயம் செழிக்க வேண்டும், விவசாயி வாழ வேண்டும்.
  அவர்கள் இல்லையென்றால் உயிர்கள் வாழ்வது அரிது.

  இயற்கை அன்னை விவசாயிகளை காக்க வேண்டும். தொற்றுகளிலிருந்தும் இயற்கை அன்னை காக்க வேண்டும். இயற்கையை சரண் அடைவோம். இயற்கை காக்கும்.

  பதிவு மிக அருமை. திருக்குறளை எண் கொடுத்தை தேடிபடித்தேன்.
  குறளின் குரலைகேட்டேன்

  இயற்கை எனும் இறைவன் பாடல் கேட்டேன்.
  அருமையான பாடல்.
  இயற்கையோடு இணைந்து வாழ்வோம்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. கிட்டத்தட்ட பல அதிகாரங்களில் உள்ள குறள்களை சொல்ல வேண்டும் அம்மா... அப்படி உள்ளது இந்த ஊழ் அதிகாரம்... அது மட்டுமில்லாமல், திருக்குறளை தவிர்த்து, முந்தைய பதிவிலுள்ள குறிப்புகளையும் படிக்க வைத்து விட்டது... அதை தான் பதிவின் ஆரம்பத்தில் குறிப்பிட்டேன்... நன்றி...

   ஊழ் அதிகாரம் = அட்சயப் பாத்திரம்

   நீக்கு
  2. நெகிழ்ந்து விட்டேன். அதிகாலை முதல் வாசிப்பு. நம்பிக்கையூட்டும் பதிவு. நன்றி.

   நீக்கு
 14. எனக்கு மிகவும் பிடித்த, நான் ஒரே ஒரு முறை சந்தித்த ஆழ்வார் ஐயா அவர்களைக் குறித்து இங்கு சொல்லியிருப்பது கண்டதும் மனம் மகிழ்ந்தது.

  முயற்சி திருவினை ஆக்கும் என்று சொன்னவர் ஊழ் அதிகாரத்தில் ஏன் என்ன சொல்ல வருகிறார் என்ற அர்த்தத்தில் முந்தைய விதி பதிவில் நான் சொன்ன நினைவு. சரியாக நினைவில்லை.

  முயற்சி திருவினை ஆக்கும்...

  விதியின் படி நடக்கும் எனும் போது ஒரு சோம்பேறித்தனம் வந்துவிடுகிறது இல்லையா...இப்படித்தான் நடக்கணும் என்று விதி இருந்தால் அப்படித்தான்...ஹூம் என்று.

  ஆனால் அப்படி நினைத்திருந்தால் இன்று உலகில் சாதனை படைத்தவர்கள் இருந்திருக்க மாட்டார்கள். ஆனால் அதற்கும் ஒரு பதில் இருக்கும் ...அவர்களுக்கு அப்படி நடக்கும் என்று தலையில் எழுதியிருக்கு அதனால் அவர் முயற்சிகள் வெற்றி அடைந்து சாதனை ஆகியிருக்கு என்று ஆனால் அந்த முயற்சிகள் அதில் எத்தனை கஷ்டங்கள் தடங்கல்கள் என்பதை உலகம் இந்த வரியைச் சொல்லி பின் தள்ளி விடுகிறது. இது மிகவும் வருத்தமான விஷயம்

  கீதா

  பதிலளிநீக்கு
 15. டிடி திருக்குறளில் ஊழ் அதிகாரம் பற்றி முன்பு தெரியாது. நீங்கள் இங்கு சொல்லியிருப்பது போலத்தான் அடிக்கடி சொல்லிவருவது. நீங்கள் இங்கு சொல்லியிருக்கும் 620 வது குறளின் குரல்... இதுதான் விடா முயற்சி, மனம் தளரா முயற்சி. சிலந்தியைப் பார்த்துக் கற்றுக் கொண்ட ராபர்ட் ப்ரூஸ் கதை என்று..எனவே விதி அது என்ன வேண்டுமென்றாலும் நடக்கட்டும்...சொல்லிவிட்டுப் போகட்டும்..எதிர்மறையாக நடக்கும் என்று சொல்லிவிட்டுப் போகட்டும். மனம் அதில் ஈடுபடக் கூடாது அதை நினைக்கக் கூடாது...நம் முயற்சியை தளரவிடக் கூடாது என்பதே.

  வேளாண்மை இல்லையேல் அதற்கு ஒரு நாடு முக்கியத்துவம் தரவில்லையேல் அந்த நாடு எந்தவிதத்திலும் முன்னேறாது என்பது உறுதி.

  அருமையான கருத்துகள். நான் முந்தைய விதி பதிவின் போதே நான் ஊழ் அதிகாரத்தைப் பார்த்தேன். நிறைய கேள்விகள் எழுந்தன. இனி உங்கள் சிறு ஆய்வின் பதிவுகளைப் படிக்கும் போது அறியலாம் என்று நினைக்கிறேன்.

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆசீவகம் ஊழ் கோட்பாடுகள் என்னவென்று அறியவே பல மாதங்கள் ஆனது... 2016 ஆம் ஆண்டு நம் வலைப்பதிவர் திருமிகு ஜோசப் விஜு ஐயா அவர்களின், ஆசீவகம் பற்றி அவ்வப்போது எழுதிய நான்கு பதிவுகள், மேலும் தேடலை அதிகப்படுத்தியது... அவரின் தளத்தில் கடைசியாக எழுதிய பதிவும் ஆசீவகம் பற்றியே... இணைப்பு → ஊமைக்கனவுகள் ← அங்கு உங்களின் கருத்துக்களும் உள்ளது...

   முடிவில், "கையில் வெண்ணையை வைத்துக்கொண்டு நெய்க்கு அலைவதாக" சிலர் சொல்வது போலவே நடந்தது... ஆம், குறள்களிலே விளக்கங்கள் உள்ளன... // விதி, தலையெழுத்து என்று பலவிதங்களில் அறியாமையால் துயரப்படுவதற்குக் காரணமான, ஆசீவகத்தின் ஊழ் கோட்பாடுகளை"யே" குறள் பின்பற்றவில்லை... // என்று மேலே பதிவில் சொன்னதை புரிந்து கொள்ளவே வெகுநாட்கள் ஆகி விட்டது... அதற்கு பின் தேடியவை எல்லாம் குறிப்புகளாகவே இருக்கட்டும் என்று விட்டு விட்டேன்...

   மனித வாழ்விற்கு தேவையான "அறம், பொருள், இன்பம்" போன்ற உறுதிப் பொருட்களின் தொடர் சிந்தனைகள் மட்டுமே திருக்குறளில் உள்ளது.... அதை உறுதிப்படுத்தவே அடுத்த பதிவு... நன்றி சகோதரி...

   நீக்கு
 16. அன்பு தனபாலன்,
  இனிய காலை வணக்கம்.
  அருமை நம்மாழ்வார் அவர்களை ஏற்றி மதியாதவர் இருக்கவே முடியாது. அந்தப் பச்சை செழுமையும்,
  அவரது ஒளி வீசும் கண்களும் மறக்க முடியாதவை.
  அவர் கொள்கைகளைப் பின்பற்ற ஒரு குழுமம்
  இருப்பதே நிறைவு,.
  நீங்கள் அவரை அருமையாகப் பதிவு எழுதி
  மகிழ வைத்துவிட்டீர்கள்.
  குறிப்பிடப் பட்டிருக்கும் அத்தனை குறள்களும் அருமை.
  உங்கள் வழியே வள்ளுவரை அறியும்
  நாட்கள் நாங்கள் செய்த புண்ணியம்.
  அதுவும் இந்த ஊழித்தாண்டவம் மனிதனின்
  கெடுபுத்தியால் உண்டான கொடுமை என்னும் நேரத்தில் ஊழ்,விதி
  என்ற சொற்கள் உண்மை உருவில் வந்துவிட்டன. நலம் பெறுவோம். நன்றி அப்பா.

  பதிலளிநீக்கு
 17. வணக்கம் சகோதரரே
  பதிவு அருமை. விஞ்ஞான நம்மாழ்வாரின் உபதேசங்களை தாங்கள் தொகுத்தளித்த விதம் அருமை. அவரின் பொன் மொழிகள் ஒவ்வொன்றும் உண்மைகளை சுமந்து கொண்டுள்ளது. படித்து ரசித்தேன்.

  திருக்குறள்களையும் ,, அதன் உள்ளிருக்கும் அர்த்தம் மிகுந்த கருத்துக்களையும் விரிவாக நாங்கள் உங்கள் மூலம் கற்றுணர்கிறோம். மெல்லிசை பாடலும், நன்றாக உள்ளது. பகிர்வுக்கு மிக்க நன்றி.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
 18. கொரோனா நாமாகவே தருவித்துக்கொண்ட செயற்கை ஊழாகத்தான் இருக்க வேண்டும். பெரியவர் நம்மாழ்வார் போன்றோரின் அறிவுரைகளை ஒதுக்கியதால் ஏற்பட்ட ஊழாக இருக்கலாம். குறளுடன் ஒப்பு நோக்கியது அருமை

  பதிலளிநீக்கு
 19. காற்றிலே மாசு, ஓஸோனில் ஓட்டை, பூமியெல்லாம் ஒரே சூடு என்று அலறிக்கொண்டு அலையும் சூழலியல் ஆய்வாளர்கள், மற்றும் வெட்டிப்பேச்சு வேந்தர்கள் மத்தியில், நம்மாழ்வார் நிறைவாக வாழ்ந்து, நிறையச் செய்து காட்டியிருக்கிறார். இயற்கையோடு இயைந்து வாழ்வதின் முக்கியத்துவம், இயற்கையை அதன் எல்லா பரிமானத்திலும் கவனித்து வளர்த்து, சீராட்டவேண்டியதின் அவசியம்பற்றி என எல்லாம் தெளிவாக, பொதுமக்களுக்கு, ஆள்பவர்களுக்குப் புரியும் அளவிற்கு சொல்லியுமிருக்கிறார். புரிந்துகொண்டானா நம்ப ஆளு என்பது அடிப்படைக் கேள்வி. இந்தக் கேள்வி என்றும் பதில் எனும் துணையடையாக் கேள்வியாகவே நிற்கும் எனத் தோன்றுகிறது.

  பதிலளிநீக்கு
 20. நம்மாழ்வார் ஐயாவின் பொன்மொழிகள் சிறப்பு. பதிவின் வழி நீங்கள் சொல்லிச் சென்ற விஷயங்கள் சிந்தனையைத் தூண்டுபவை.

  பதிலளிநீக்கு

 21. மெய்ஞானத்தை யார் மறந்தார்கள். மறந்ததற்கா இயற்கை அச்சுறுத்துகிறது. அல்ல .
  நம்மாழ்வாரின் 18 கருத்துக்களும் அருமையான நினைவூட்டல். நன்றி

  பதிலளிநீக்கு
 22. நம்மாழ்வாரைப் போன்றோரை நாம் நினைப்பதில்லை. பின்னர் வருந்துகிறோம். இக்காலகட்டத்திற்குத் தேவையானவற்றை உரிய ஆரம்பமாக எழுதிய விதம் சிறப்பாக உள்ளது. (எங்கள் பள்ளி நூற்றாண்டு விழா மலர்ப் பணியில் ஈடுபட்டுள்ளதால் பதிவுகளைப் பார்ப்பதில் சற்று தாமதம் ஏற்படுகிறது.)

  பதிலளிநீக்கு
 23. நம்மாழ்வாரின் பொன் மொழிகளை அருமையாக தொகுத்து தந்தமைக்கு நன்றி! உலகத்தியற்கை 'ஊழ்' அதிகாரத்தில் எங்கு வருகிறது என அறிய தொடர்கிறேன்

  பதிலளிநீக்கு
 24. அனேகமாக தமிழில் எழுதுபவர்களில் எல்லா இணைய சாத்தியங்களையும் பயன்படுத்தி எழுதும் ஒரே பதிவர் நீங்கள் தான் என்று நினைக்கிறன்

  பதிலளிநீக்கு
 25. ஆழ்வாரின் எண்ணங்களை
  அறியத் தந்தமைக்கு நன்றி
  குறள் விளக்கம் அருமை
  நல்லதை எண்ணி
  கெட்டதைக் களைந்தோருக்கு
  அமைதி என்றும் உண்டு.

  பதிலளிநீக்கு
 26. மிக அருமையான ப‌திவு!
  ' முயற்சி என்பது விதை! அதை விதைத்துக்கொண்டே இரு. முளைத்தால் மரம், இல்லையென்றால் மண்ணுக்கு உரம்!' அருமையான வரி!
  அப்புறம் அந்தப்பாடல்! மிக மென்மையான, உயர்ந்த வரிகள் கொண்ட அற்புதமான பாடல்! வரிகளும் இனிமையும் உள்ளுக்குள் உறைந்து போகிறது. இந்தப்பாடலை தந்ததற்காக உங்களுக்கு நன்றி சொல்ல வேண்டும்!
  யுடியூப் சென்று உடனேயே இந்தப்பாடலை தரவிறக்கம் செய்து விட்டேன்.

  பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

நகுதற் பொருட்டன்று நட்டல் மிகுதிக்கண்
மேற்சென்று இடித்தற் பொருட்டு. (குறள் 784)

நட்புச் செய்துகொள்வது நண்பரோடு சிரித்து மகிழ்வதற்காக மட்டும் அல்ல. மிகுதியாகத் தவறு செய்யும்போது, அவரைக் கடிந்து திருத்துவதற்கே ஆகும்.