🏠 வணக்கம் காப்பகம் நன்றி

தேடல் 🔎



புதிய பதிவுகளை பெற ✉



என்றும் குழந்தையைப்போல் வாழ்ந்துவிட்டால்...

அனைவருக்கும் வணக்கம்... இறைவன் அனைவரையும் காக்க வேண்டும் எனும் வேண்டுதலோடு தொடர்கிறேன்... திருக்குறளின் ஊழ் அதிகாரத்தைக் குறளின் குரலாகப் பகிர்ந்து கொண்டேன்... அதை வாசிக்காதவர்களுக்காக இணைப்பு ☛



அதில் குறள் விளக்கங்களை மனதுடன் நடத்திய உரையாடலாகப் பகிர்ந்து விட்டேன்... இந்த அதிகாரம் திருக்குறளின் வேர் என்றே தோன்றும்... இதன் ஆய்வை பிறகு பகிர்வேன்... சரி, குறளுக்கேற்ப ஒரு பாடல் நினைக்க, அந்தப் பாடலுக்குப் பல பாடல்கள் பதிலாக வர... ம்... குறளும், பாடல்களும் இன்றைய நிலையைச் சிறிது மறக்க எனக்கு ஒரு மருந்து...!

இந்தப்பதிவில் குறள், விளக்கம் மற்றும் திரைப்படப் பாடல்கள் என முழுவதும் கேட்பொலியாக... திரைப்படப் பாடல்கள் ரசிகர்களுக்கு ஒரு ஊகித்தல் தேர்வு : குறளும் அதன் விளக்கமும் வாசித்து விட்டு, அதற்கேற்ப மனதில் தோன்றும் பாடலை ஊகித்து விட்டு, கேட்பொலி (►) பொத்தானைச் சொடுக்கிக் கேட்கலாம்... பாடல் வரிகளை வாசிப்பதற்கான பொத்தானும் உள்ளது... நீங்கள் கணித்த பாடலுள்ள குறள் எண்ணையும் கருத்துரையில் தெரிவிக்கவும்... நன்றி...


ஆகூழால் தோன்றும் அசைவின்மை கைப்பொருள்
போகூழால் தோன்றும் மடி 371

ஒருவருக்கு நல்வினையால் முயற்சியும், தீவினையால் சோம்பலும் உண்டாகும்...
வாழ்க்கை என்றால் ஆயிரம் இருக்கும்... வாசல் தோறும் வேதனை இருக்கும்... வந்த துன்பம் எதுவென்றாலும் - வாடி நின்றால் ஓடுவதில்லை... எதையும் தாங்கும் இதயம் இருந்தால் இறுதி வரைக்கும் அமைதி இருக்கும்... ⟪ © சுமைதாங்கி கண்ணதாசன் விஸ்வநாதன்-ராமமூர்த்தி 🎤 P.B.ஸ்ரீனிவாஸ் @ 1962 ⟫நல்ல பொழுதையெல்லாம் தூங்கிக் கெடுத்தவர்கள் நாட்டைக் கெடுத்ததுடன் தானும் கெட்டார்... சிலர் அல்லும் பகலும் தெருக் கல்லாய் இருந்து விட்டு, அதிர்ஷ்டம் இல்லை என்று அலட்டிக்கொண்டார்... விழித்துக் கொண்டோரெல்லாம் பிழைத்துக் கொண்டார்... உன்போல் குறட்டைவிட்டோரெல்லாம் கோட்டைவிட்டார்... தூங்காதே தம்பி தூங்காதே - சோம்பேறி என்ற பெயர் வாங்காதே... ⟪ © நாடோடி மன்னன் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் S.M.சுப்பையா நாயுடு, S.M.பாலகிருஷ்ணன் 🎤 T.M.சௌந்தரராஜன் @ 1958 ⟫


பேதைப் படுக்கும் இழவூழ் அறிவகற்றும்
ஆகலூழ் உற்றக் கடை 372

தீவினை ஒருவனின் அறியாமைக்கும், நல்வினை அறிவின் விரிவுக்கும் காரணங்கள் ஆகும்...
மனிதராகப் பிறந்ததினால் மனிதரில்லை - பெரும் மாளிகையில் வசிப்பதனால் உயர்வுமில்லை... குணத்தால் சிறந்தவரே உயர்ந்தவராம் - அந்தக் கொள்கையுள்ள நல்லவரே மனிதர்களாம்... எண்ணத்திலே தாழ்ந்துவிட்ட மனிதர்களால் - இந்த உலகத்திலே பிறருக்கென்ன சுகங் கிடைக்கும்...? மண்ணிலே பொன் கிடைக்கும், மரத்திலே கனி கிடைக்கும்... ⟪ © நல்லவன் வாழ்வான் அ.மருதகாசி T.R.பாப்பா 🎤 P.சுசீலா @ 1961 ⟫மண்குடிசை வாசலென்றால் - தென்றல் வர வெறுத்திடுமா...? மாலை நிலா ஏழையென்றால் - வெளிச்சம் தர மறுத்திடுமா...? உனக்காக ஒன்று எனக்காக ஒன்று - ஒருபோதும் தெய்வம் கொடுத்ததில்லை... கொடுத்ததெல்லாம் கொடுத்தான் - அவன் யாருக்காகக் கொடுத்தான்...? ஒருத்தருக்கா கொடுத்தான்...? - இல்லை ஊருக்காகக் கொடுத்தான்...? ⟪ © படகோட்டி அ.மருதகாசி விஸ்வநாதன்-ராமமூர்த்தி 🎤 T.M.சௌந்தரராஜன் @ 1956 ⟫


நுண்ணிய நூல்பல கற்பினும் மற்றுந்தன்
உண்மை யறிவே மிகும் 373

உயரிய நூல்களை ஒருவன் கற்றாலும், அவனுக்கு இயற்கை அறிவே மேற்படும்...
கொடுப்பதற்கும் சிரிப்பதற்கும் படிப்பு வேண்டுமா...? என்றும் குழந்தையைப்போல் வாழ்ந்துவிட்டால் துன்பம் தோன்றுமா...? படித்ததினால் அறிவுப் பெற்றோர் ஆயிரம் உண்டு... பாடம் படிக்காத மேதைகளும் பாரினில் உண்டு... ⟪ © படிக்காத மேதை கண்ணதாசன் K.V.மகாதேவன் 🎤 M.S.ராஜேஸ்வரி @ 1960 ⟫ஜனத்தொகை மிகுந்ததாலும் பசித்துயர் மலிந்ததாலும், பணத்தொகை மிகுந்தோர் மேலும் பணம் சேர்க்க முயல்வதாலும், உழைத்தால்தான் பற்றாக்குறையை ஒழிக்க முடியும்... மக்கள் ஓய்ந்திருந்தால் நாட்டின் நிலைமை மோசமாக முடியும்... எதற்கும் படிப்பு தேவை - அதோடு உழைப்பும் தேவை - முன்னேறப் படிப்புத் தேவை... ⟪ © சங்கிலித் தேவன் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் T.G.லிங்கப்பா 🎤 T.M.சௌந்தரராஜன் & குழுவினர் @ 1960 ⟫


இருவேறு உலகத்து இயற்கை திருவேறு
தெள்ளிய ராதலும் வேறு 374

பொருளாளி ஆவதும், அறிவாளி ஆவதும், வேறுவேறு முறைகளைக் கொண்டுள்ளன...
அறிவிருக்கும் அன்பிருக்கும் பண்பிருக்கும் சிலரிடம்... அழகிருக்கும் பணமிருக்கும் பகட்டிருக்கும் பலரிடம்... இது தெரியும் - அது தெரியாது...! கனதனவானின் நெஞ்சில் எந்நாளும் கபடம் பொறாமை எனும் அழுக்கிருக்கும்... கள்ளம் அறியாத பாட்டாளி மேனியில் உள்ளபடி வேர்வை அழுக்கிருக்கும்... இது தெரியும் - அது தெரியாது...! ⟪ © அல்லி பெற்ற பிள்ளை அ.மருதகாசி K.V.மகாதேவன் 🎤 T.M.சௌந்தரராஜன் @ 1959 ⟫பொருளேதுமின்றி கருவாக வைத்து உருவாக்கி விட்டுவிட்டான்... அறிவென்ற ஒன்றை மரியாதை இன்றி இடம் மாற்றி வைத்து விட்டான்... கடவுள் செய்த பாவம் - இங்குக் காணும் துன்பம் யாவும் - என்ன மனமோ என்ன குணமோ - இந்த மனிதன் கொண்ட கோலம்... ⟪ © நாடோடி கண்ணதாசன் M.S.விஸ்வநாதன் 🎤 T.M.சௌந்தரராஜன் @ 1966 ⟫


நல்லவை எல்லாஅந் தீயவாம் தீயவும்
நல்லவாம் செல்வம் செயற்கு 375

நல்லது தீயதாவதும், தீயது நல்லதாவதும், தீவினை நல்வினை செயல்களினாம்...
வாலிபம் என்பது தணிகின்ற வேடம் - அதில் 'வந்தது வரட்டும்' என்பவன் முழு மூடன்... வருமுன் காப்பவன்தான் அறிவாளி - புயல் வருமுன் காப்பவன்தான் அறிவாளி - அது வந்தபின்னே தவிப்பவன்தான் ஏமாளி... துடுப்புகள் இல்லா படகு - அலைகள் அழைக்கின்ற திசையெல்லாம் போகும்... தீமையைத் தடுப்பவர் இல்லா வாழ்வும் - அந்த படகின் நிலை போலே ஆகும்... ⟪ © பூம்புகார் மு.கருணாநிதி R.சுதர்சனம் 🎤 K.B.சுந்தராம்பாள் @ 1964 ⟫நடக்கும் என்பார் நடக்காது - நடக்காதென்பார் நடந்துவிடும்... கிடைக்கும் என்பார் கிடைக்காது - கிடைக்காதென்பார் கிடைத்துவிடும்... ⟪ © தாயைக் காத்த தனயன் கண்ணதாசன் K.V.மகாதேவன் 🎤 T.M.சௌந்தரராஜன் @ 1962 ⟫

புதிய பதிவுகளை பெறுதல் :


தொடர்புடைய எண்ணங்களின் வண்ணங்கள் சில :


முகநூல் மூலம் கருத்துக்களை பகிர :

கருத்துகள்


  1. வணக்கம் ஜி
    அனைத்துமே கருத்தாழமிக்க நல்ல பாடல்கள். பாடலை சொடுக்கினால் இயங்கவில்லை பாடல் வரிகளை படித்தேன்.

    பகிர்வுக்கு வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கைபேசியில் இணைய இணைப்பின் வேகம் பொறுத்து தான் செயல்படும் ஜி... அதுமட்டுமில்லாமல், பகல் நேரம் அதிகம் பயன்படுத்துவதால், மாலை நேரமே வேகம் குறைய ஆரம்பிக்கும்...

      நீக்கு
    2. உங்கள் பதிவுகளை மட்டும் எப்போதும் கணினி வழியே மட்டும் தான் படிப்பேன். காரணம் பல ஆச்சரியங்களை உள்ளே வைத்திருப்பீர்கள்.

      நீக்கு
  2. எல்லோரும் நலமாக வாழவேண்டும். வந்த ஆபத்துகள் நீங்கவேண்டும். பிரார்த்தனைகள்.

    பதிலளிநீக்கு
  3. குறளுக்குப் பொருத்தமான பாடல்களை அவற்றை வாசிக்காமல் என்னால் யூகிக்கவே முடியவில்லை. உங்கள் முயற்சி, திறமை பாராட்டத் தக்கது.

    பதிலளிநீக்கு
  4. குறள்களுக்குத் தேர்ந்தெடுத்த பாடல்கள் சிறப்பு. தொடரட்டும் உங்கள் சிறப்பான பதிவுகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. குறட்பாக்களுக்கு பொருத்தமான பாடல்கள் அருமை நன்றி

      நீக்கு

  5. எனது கருத்துரை என்னாச்சு ?

    பாடல்களும், குறள்களும் கேட்டேன் ஜி

    பதிலளிநீக்கு
  6. குறள்களும் அதற்கான பாடல்களும் அருமை.
    தலைப்பு அருமை. சில கடினமான காலகட்டங்களில் , நான் இவ்வாறு யோசித்தது உண்டு.

    பதிலளிநீக்கு
  7. வள்ளுவன் குறளுக்கு இணையான தமிழ் திரையிசை பாடல்கள். அல்ல வள்ளுவரை கற்றவர்கள் எழுதிய அருமையான பாடல்கள். தங்கள் தேடல்கள் தொடரட்டும்

    பதிலளிநீக்கு
  8. ஒவ்வொன்றையும் பார்த்துப் பார்த்து செதுக்கியிருக்கின்றீர்கள்...
    சிறப்பான பதிவு...

    பதிலளிநீக்கு
  9. நீண்ட நாட்களுக்குப் பிறகு தங்கள் உழைப்பின் பயனை இன்று பெற்றேன். அழகிய குறள்களையும் அவற்றோடு ஒத்த கருத்துள்ள திரைப்பாடல்களையும் காதோரம் கேட்டு மகிழ்ந்தேன். இன்றளவும் நீங்கள் வலைப்பதிவை நிறுத்தாமல் எழுதிவருவது, அடிக்கடி எழுதச் சோர்ந்துபோகும் என் போன்றவர்களுக்கு ஊக்க மருந்தாக விளங்குகிறது என்றால் மிகையில்லை.

    பதிலளிநீக்கு
  10. குறளும் பாடலும் மிக அருமை. நல்வினையால் முயற்சியும், தீவினையால் சோம்பலும் வருவது உண்மை.

    அறியாமைக்கும், அறிவின் விரிவுக்கும் எடுத்துக் கொண்ட பாடலும் அருமை.

    படிக்காவிட்டாலும் பல நூல்களைகளை கற்று
    இயற்கை அறிவை மேம்படுத்திக் கொள்ளலாம். இயற்கை அறிவுக்கு பாடல் தேர்வு அருமை.

    இப்போது உழைக்க முடியவில்லை, பற்றாகுறை வரப்போகிறது நாட்டில் அதற்கு கொடுத்த பாடலும் அருமை.

    பொருளாளி, அறிவாளி பாடலும் அருமை. வேறு வேறு உலகம் தான்.மனிதன் கொண்ட கோலம் மாறும். மனிதன் இப்போது உணர்ந்து கொண்டு இருப்பான்.

    நல்லது கெட்டதை உணர்ந்து வரும் முன் காப்போம்.

    எல்லாவற்றையும் இறைவன் நடத்தி காட்டுவார் என்று நம்புவோம்.

    பதிவு அருமை, குறள் படித்து, குறள் பாடலை , விளக்கத்தை கேட்டேன்.
    நன்றி, வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  11. விரைவில் எல்லாம் நலம் பெற வேண்டும் இயல்பு நிலை திரும்ப வேண்டும்.

    அருமையான குறள்கள் விளக்கமும் பார்த்தேன். பாடல் வரிகளையும் பார்த்தேன் ஆனால் எனக்கெல்லாம் பாடல் வரிகளை வைத்து என்ன பாடல் என்றுகூடச் சொல்லத் தெரியாது ஒரு சில மிக மிகக் குறைந்த அளவு பாடல்களைத் தவிர. ஆனால் பாடல்கள் கேட்க முடியலை கணினியிலுமே கூட. இணையம் அந்த அளவிற்குப் படுத்தல்.

    அருமை டிடி. உங்கள் திறமைக்கு வாழ்த்துகள்

    கீதா



    பதிலளிநீக்கு
  12. இந்த முறை படத்தின் பேர், பாடல் ஆசிரியர், படம் வந்த வருடம் எல்லாம் போடவில்லையே!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. "பாடல் வரிகளை வாசிக்க இங்கே சொடுக்குக" என்பதை சொடுக்கினால், அங்கு பாடல் வரிகளுக்கு அடுத்து, படத்தின் விளக்கங்களையும் கொடுத்து உள்ளேன் அம்மா...

      நீக்கு
    2. அன்பு தனபாலன்,
      திக்குமுக்காடிப் போகிறேன்.
      குறள்கள் வள்ளுவர் இந்தத் தினங்களுக்கும் எந்தத் தினங்களுக்கும் பொருந்துமாறு
      அள்ளிக் கொடுத்துவிட்டுச் சென்றார் என்றால் அவைகளைச் சரம் கோர்த்து இங்கே கொடுக்க ஒரு தனபாலன். எப்படிப் பாராட்டுவது என்றே தெரியவில்லை.
      குறள், பாடல், விளக்கம் எல்லாம் கேட்டு மகிழ்ந்தேன்.

      இந்த இனிமையை மீண்டும் மீண்டும் அனுபவித்து அந்த உண்மையில் தோயும் ஆசை
      எழுகிறது. மிகவும் நன்றிமா.
      உயரிய எண்ணங்களை விதைப்பதும் நல்ல வினை. நன்மையே தரும். உங்கள் வாழ்வு மென்மேலும் பொலிய வேண்டும்.

      நீக்கு
  13. நன்றி தனபாலன்.
    பாடல் வரிகளை வாசிக்க இங்கே சொடுக்குக என்பதை கவனிக்கவில்லை. இந்த முறை இது புதிது என நினைக்கிறேன்.
    கவனிக்காமல் கேட்டதற்கு மன்னிக்கவும்.

    தலைப்பு பாட்டு மிகவும் பிடித்த பாட்டு.
    தலைப்பு போல குழந்தையாக இருந்து விட்டால் துன்பம் இல்லைதான்.

    பதிலளிநீக்கு
  14. சும்மா சொல்லக்கூடாது. மிரட்டுறீங்க.

    பதிலளிநீக்கு

  15. மூளைக்கு நல்ல வேலை கொடுத்துவிட்டீர்கள். என்னால் ஒரு குறளுக்குத்தான் பொருத்தமான பாடலை யூகிக்க முடிந்தது.

    நான் யூகித்த பாடலுக்கான குரல் எண் 373. பாடல்: “படித்ததினால் அறிவு பெற்றோர் ஆயிரம் உண்டு”

    பதிலளிநீக்கு
  16. அனைத்தையும் ஒவ்வொன்றாய் கேட்டு ரசித்தேன் .குறள்களை கணீர் குரலில் பாடுவதுபோல் சொல்பவர் யார் (ஆண் குரல் )

    பதிலளிநீக்கு
  17. "உயரிய நூல்களை ஒருவன் கற்றாலும் அவனுக்கு இயற்கை அறிவே வெளிப்படும்" .... இது நூறு சதவீதம் உண்மை.... ஏனெனில் உயரிய நூல்களை கற்றால் அறிவு(ஞானம்) மேம்படும் என்றால் இன்று உலகமே அறிவாளிகளால் நிரம்பி வழிய வேண்டுமே !!! ... நூல்களில் தகவல்களை மட்டுமே பெறமுடியும் ... அறிவை( ஞானம்) அல்ல ... அறிவு ( ஞானம்) என்பது நம் அகத்துக்குள்ளே சுரக்க வேண்டும்... சரிதானே !!!... >> சயின்டிபிக் ஜட்ஜ்மென்ட் <<

    பதிலளிநீக்கு
  18. வழமைபோல ஒவ்வொன்றும் அழகு, மறந்துவிட்ட பல பாடல்களை, நீறுதட்டி வெளியே கொண்டு வந்து விட்டீங்கள்.

    பதிலளிநீக்கு
  19. வணக்கம் சகோதரரே

    இந்த தடவை தங்களின் புதிதான தொழில் நுட்பம். பட்டனை சொடுக்கினால் குறளுக்கேற்ற பாடல்களின் வரிகள் வருவது மிகவும் ரசிக்கும்படி உள்ளது. ஒன்றுக்கொன்று தொடர்புடையது போல் இருபாடல்கள். இரண்டுமே அருமை. இரண்டிரண்டாக கேட்டும் ரசித்தேன். பழைய பாடல்களில்தான் எவ்வளவு கருத்துக்கள் நிரம்பியுள்ளது. அதை நீங்கள் ஐயனின் குறளுக்கேற்றபடி தேர்ந்தெடுத்து பல சித்து வேலைகள் செய்து எங்களுக்கு ரசிக்கத் தருவதற்கு எப்படி நன்றி சொல்லப் போகிறோம். எல்லாமுமே அருமையாக உள்ளது.

    வீட்டின் கொஞ்சம் வேலைகளினால் சற்று தாமதமாக வந்திருக்கிறேன். மன்னிக்கவும். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  20. ஆகா! சீர்காழி சிவ.சிதம்பரம் அவர்கள் குரலில் குறள். அதைத் தொடர்ந்து அதற்குச் சுருக்கமான அழகிய விளக்கம். அடுத்து அதற்குப் பொருத்தமான பாடல்கள்!!

    இவற்றையெல்லாம் நீங்கள் எங்கிருந்து பிடிக்கிறீர்கள் என்பதே வியப்பு! கூடவே இதற்கான உழைப்பு! உண்மையில் மலைப்பு! மிக்க மகிழ்ச்சி ஐயா! உங்களுடைய இந்தப் புது முயற்சியைத் தொடர்ந்து எதிர்பார்க்கிறேன்.

    பதிலளிநீக்கு
  21. மிகுந்த நேரம் செலவிட்டு பாடல்களை ஒப்பிட்டு பதிவேற்றியுள்ளீர்கள். அருமை நண்பரே. உங்கள் உழைப்பு பாராட்ட தக்கது.

    பதிலளிநீக்கு
  22. அழகான பதிவமைப்பு
    குறளுக்கேற்ற பாடலமைவு
    உள்ளத்தை ஈர்த்துக்கொண்ட பதிவு
    அதுவே
    தங்களின் வெற்றியும் கூட,,,

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

நகுதற் பொருட்டன்று நட்டல் மிகுதிக்கண்
மேற்சென்று இடித்தற் பொருட்டு. (குறள் 784)

நட்புச் செய்துகொள்வது நண்பரோடு சிரித்து மகிழ்வதற்காக மட்டும் அல்ல. மிகுதியாகத் தவறு செய்யும்போது, அவரைக் கடிந்து திருத்துவதற்கே ஆகும்.