🏠 வணக்கம் காப்பகம் நன்றி

தேடல் 🔎



புதிய பதிவுகளை பெற ✉



படைப்புகளை படிப்பதா...? படைப்பாளிகளை சிதைப்பதா...?

நல்லாட்சி எப்படி இருக்க வேண்டும்...? கொடுமையான ஆட்சி இருந்தால்...? என்பதைப் பற்றிய 5 பதிவுகள் உருவான விதத்தைச் சொல்கிறேன்... மூன்று ஆண்டுகளுக்கு முன் இதே நாளில் உருவான சிந்தனைகளை, இரு வருடங்களுக்குப் பிறகு பகிர்ந்து கொண்டது... இன்றைய நாள் அவ்வளவு முக்கியம் அல்லவா...!?


ஜோதிஜி அவர்களின் 5 முதலாளிகளின் கதை வாசித்து விட்டீர்களா... நன்றி...


எனது சிந்தனை மற்றும் தேடல் தொடங்கியதைச் சுருக்கமாகச் சொல்கிறேன்... "சிலம்பு கூறும் அறம்" என்பதில் தொடங்கி, அதிலேயே முடிந்தன (கடந்த 5 பதிவுகளும்)... அரசியல் பிழைத்தோருக்கு அறம் கூற்றாகும் - அதாவது அரசியலில் பிழை செய்தவர்களை யார் தண்டிப்பது...? அறம் தண்டித்தே தீரும்... அடுத்து → அறன் வலியுறுத்தல் அதிகாரத்தின் குறள்கள் → அமைச்சு அதிகாரத்தில், குறள் எண் 552 - அதை உறுதிப்படுத்திய புறநானூறு பாடல் 184 → இறைமாட்சி அதிகாரத்தின் குறள்கள் → முடிவாகத் தேர்ந்தெடுத்த அதிகாரங்கள் :-

55.செங்கோன்மை (குறள் 550 முதல் 541 வரை) !
56.கொடுங்கோன்மை (குறள் 551 முதல் 560 வரை)

முதலில் குறளின் குரலாக எழுதியது, "ஒரு அரசாங்கம் எப்படி இருக்கக்கூடாது" என்பது பற்றித் தான்... அதன் அதிகாரம் 56.கொடுங்கோன்மை... இன்றைய காலத்தின் கோலத்தால், 'அனைத்து குறள்களின் விளக்கமும் கேள்விகளாகவே அமைகிறதே' என்று யோசித்துக் கொண்டிருக்கும் போது, தாத்தா திருவள்ளுவர் "இதற்கு முந்தைய அதிகாரத்தைப் பற்றி யோசிக்க மாட்டாயா...?" என்று முறைத்தார்...! முந்தைய அதிகாரம் 55.செங்கோன்மை... 'நல்லாயிருக்கே...! இருமுறை உள்ள குறிப்பறிதல் அதிகாரங்களை இணைத்தது போல, (அங்கவியலையும் களவியலையும்) இவ்விரு அதிகாரங்களையும் இணைத்தால்...?' என்று யோசிக்க ஆரம்பித்து விட்டேன்... தாத்தா சொன்னபடியே கேள்வியாக எழுதிய 551-ன் குறளுக்கு, 541-ன் குறள் விளக்கம் பொருந்தவேயில்லை... 'இதை உரையாடலாக எழுத முடியாதோ' என்று நினைத்துக் கொண்டிருக்கும் போது, நங்...! "அனைத்து குறள்களையும் பொறுமையாகப் படி, முடி..." என்று தலையில் கொட்டினார் நம்ம தாத்தா...!

செங்கோன்மை அதிகாரத்தை முழுவதையும் எனக்குள்ளே வாங்கிக்கொண்ட பிறகு... ஆகா...! குறள் எண் 551-ன் குறளின் குரலுக்கு, சரியான பதில் குறள் எண் 550-ல் கண்டேன்... முதலில் "எப்படி இருக்கவேண்டும்" என்று நீதிகளை சொல்லிவிட்டு, அடுத்த அதிகாரத்தில், அதன் தொடர்ச்சியாக "எப்படி இருக்கக்கூடாது" என்று அநீதிகளையும் எச்சரிக்கிறார் தெய்வப்புலவர்...! இதை எப்படி ஒரு கேள்வி பதில் உரையாடலாகப் பதிவு செய்வது என்பதில் ஒரு சிக்கல்... ஆனால், மறுபடியும் தாத்தாவிடம் கொட்டு வாங்கப் பிடிக்கவில்லை...!

செங்கோன்மையின் குறள் விளக்கங்களை, தனியாக ஒரு பதிவாக எழுதினேன்... ஆனால் தலைகீழாக...! (முதலில் 550 முடிவில் 541) இவற்றை நீல வண்ண எழுத்துக்களாக மாற்றி, அமைதியாக - வெளிமனமாக - நல்லாட்சியைப் பேசினேன்... இதற்குப் பதில்கள்...? அவை ஏற்கனவே எழுதிய கொடுங்கோன்மையின் குறள் விளக்கங்கள்...! அவற்றை சிகப்பு வண்ண எழுத்துக்களாக மாற்றி, கொந்தளிப்பான-உள்மனமாக-கொடுமையான ஆட்சியைக் கேள்வி கேட்கச் செய்தேன்.

குறள்களில் உள்ளவற்றை எளிமையான முறையில் விளக்கமாகச் சொல்லி விட்டேனே தவிர, மனதில் உண்டான வேதனை, வருத்தம், கோபம் ஆகியவற்றை, ஓரளவு குறளுக்கேற்ப திரைப்படப் பாடல் வரிகள் மூலமாக என்னுடைய கருத்தாகச் சொன்னேன்... சிந்தித்த / தேடின / கிடைத்த பாடல்களை எல்லாம் எழுதினால், பல பதிவுகள் எழுத வேண்டும்...! எனக்குள் இருக்கும் திருவள்ளுவர் ஏதோ சொல்ல வருகிறார், கேட்போம்...

பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா
செய்தொழில் வேற்றுமை யான் (972)

இதற்கு எல்லோருக்கும் பொருள் தெரியலாம் ஐயனே... என்னது இதில் தொழில் எனும் சொல்லுக்கு விளக்கம் வேண்டுமா...? கவிஞர் கண்ணதாசன் வரிகளில் பாட்டாவே பாடி விடுகிறேனே... // கொடுப்பவன் தானே மேல் ஜாதி... கொடுக்காதவனே கீழ் ஜாதி... படைத்தவன் பேரால் ஜாதி வைத்தான் - பாழாய்ப்போன இந்த பூமியிலே... நடப்பது யாவும் விதிப்படி என்றால், வேதனை எப்படித் தீரும்...? உடைப்பதை உடைத்து வளர்ப்பதை வளர்த்தால், உலகம் உருப்படியாகும்... // இந்தியாவும் உருப்படியாகும்... (?) // சாதி இரண்டொழிய வேறில்லை சாற்றுங்கால், நீதி வழுவா நெறிமுறையின் மேதினியில், இட்டார் பெரியோர் இடாதார் இழிகுலத்தோர், பட்டாங்கில் உள்ள படி - பாட்டுக்கு உதவின ஔவை பாட்டிக்கும் நன்றி... சிந்தித்துப் புரிந்தவர்களுக்கும் நன்றி...

படைப்புகளைப் படிப்பதும் ஆய்வு செய்வதும், அதன்படி வாழ்வதற்கு முயல்வதும் தான் நோக்கமாக இருக்க வேண்டும்... சாதாரண படைப்பாக இருந்தாலும், விமர்சனம் இருக்க வேண்டும்... ஆனால், விமர்சனம் என்பது படைப்பாளியைச் செதுக்க வேண்டும், படைப்பாளியைச் சிதைக்க அல்ல... ஆனால் இது உலகப் பொதுமறை...! அறிவுப் புதையல்... தினம் ஒரு குறள் வாசித்துக் கொண்டாடலாம்... அது உடல் நலத்திற்கும் மன நலத்திற்கும் நல்லது... புரியாததை ஆய்வு செய்து விவாதிக்கலாம்... ஆனால், உலகப் பொதுமறையாம் திருக்குறள் என்று சொல்லிவிட்டு, அதில் ஆங்காங்கே உள்ள சொற்களை வைத்து புதுக்கதை எழுதலாமா...? அப்படி எழுதுபவர்கள், அந்த அதிகாரத்தின் முழு விளக்கத்தோடு உங்களின் கதையை நிரூபியுங்கள் → முடிவில் உள்ள மூன்று கேட்பொலிகளை முழுவதும் கேட்டு விட்டு √... வள்ளுவரே, உங்களின் 'வெகுளாமை' அதிகாரத்தால் அமைதியாகிறேன்... இப்படியாவது 'ஏழெட்டு குறள்களையாவது வாசித்தார்களே' என்று மகிழ்ச்சியடைகிறேன்... நன்றி ஐயனே...

"இந்தப் பதிவின் தலைப்பு, 'குறள்களை இணைத்தது எப்படி...?' என்றல்லவா இருக்க வேண்டும்" என்று நீங்கள் நினைக்கிறது எனக்கிங்கே கேட்கிறது...! இதுவும் மாறினது இன்றைய காலத்தின் கோலம்... சரி, தலைப்பு அவ்வாறு இருந்தாலும், பதில் இதோ :-
தொட்டனைத்து ஊறும் மணற்கேணி மாந்தர்க்குக்
கற்றனைத்து ஊறும் அறிவு (396)
← குறள்களும் இவ்வாறே...! திருக்குறள் அதிகாரங்களின் தலைப்பு கூட பல சிந்தனைகளைத் தூண்டும்... உதாரணமாக கள்ளுண்ணாமை அடுத்து சூது, அடுத்து மருந்து, குடிமை, மானம், பெருமை இப்படி...!

             ← இவை தான் அந்த 5 பதிவுகளின் இணைப்புகள்... வாசிக்காதவர்கள் ஒவ்வொன்றையும் சொடுக்கி வாசிக்கலாம்... "பேய் அரசாண்டால் பிணம் தின்னும் சாத்திரங்கள்" - நன்றி மகாகவி... இருபது குறள்களில் இருப்பது படி உலகில் எந்த அரசும் அரசாங்கமும் இருந்தால், நல்லாட்சியே...! ம்...

பேராசிரியர் கரு.ஆறுமுகத்தமிழன் அவர்களின் உரை : இந்து மதம் ? / அறிவு களவு / நான்கு எப்படி மூன்றாகும் ? / சனாதனம் vs வள்ளுவம் / முதல் அதிகாரத்தில் அடி 7 அடி / வள்ளுவனே சொன்னாலும் யோசி / வேள்வி / ஆசை / கர்மா / இன்னும் பல...


நண்பர்களே... தங்களின் கருத்து என்ன...?

புதிய பதிவுகளை பெறுதல் :


தொடர்புடைய எண்ணங்களின் வண்ணங்கள் சில :


முகநூல் மூலம் கருத்துக்களை பகிர :

கருத்துகள்

  1. உங்கள் எண்ணங்களை நன்கு வெளிப்படுத்தியுள்ளீர்கள்.  பாராட்டுகளும், வாழ்த்துகளும் DD.

    பதிலளிநீக்கு
  2. மனதில் உள்ள(க்குமுறலை)தை குறள் வழியாக வெளிப்படுத்திய விதம் வழக்கம் போலவே அழகு ஜி

    காணொளி பிறகு காண்பேன் ஜி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பேராசிரியர் திரு.ஆறுமுகதமிழன் அவர்களின் காணொளி இப்பொழுதுதான் முழுமையாக கேட்டேன் அருமை ஜி

      நீக்கு
  3. மாங்காய்ப் பாலுண்டு மலை மேல் இருப்போர்க்குத்
    தேங்காய்ப் பால் எதற்கடி குதம்பாய்!..
    தேங்காய்ப் பால் எதற்கடி!..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. குதம்பைச் சித்தர் ஞாபகம் வந்தது :-

      முத்தமிழ் கற்று முயங்குமெய்ஞ் ஞானிக்குச்
      சத்தங்கள் ஏதுக்கடி..? குதம்பாய்... !
      சத்தங்கள் ஏதுக்கடி...?

      உச்சிக்கு மேற்சென்று உயர்வெளி கண்டோர்க்கு
      இச்சிபிங்கு ஏதுக்கடி...? குதம்பாய்...!
      இச்சிபிங்கு ஏதுக்கடி...?

      உடுமலை நாராயண கவி பாடலும் ஞாபகம் வந்தது :-

      தேசம் ஞானம் கல்வி ஈசன் பூசையெல்லாம் காசுமுன் செல்லாதடி - குதம்பாய் காசுமுன் செல்லாதடி... ஈசனும் ஈசனார் பூசையும் தேசத்தில் காசுக்குப் பின்னாலே - குதம்பாய் காசுக்குப் பின்னாலே...! காட்சியான பணம் கைவிட்டுப் போனபின் சாட்சி கோர்ட்டு ஏறாதடி - குதம்பாய் சாட்சி கோர்ட்டு ஏறாதடி...! பைபையாய்ப் பொன்கொண்டோர் பொய் பொய்யாய்ச் சொன்னாலும் பொய் மெய்யாய்ப்போகுமடி - குதம்பாய் பொய் மெய்யாய் ஆகுமடி...! நல்லவரானாலும் இல்லாதவர் தம்மை நாடு மதிக்காது - குதம்பாய் நாடு மதிக்காது...! - கல்வி இல்லாத மூடரைக் கற்றோர் கொண்டாடுதல் வெள்ளிப் பணமடியே - குதம்பாய் வெள்ளிப் பணமடியே...!

      நன்றி ஐயா...

      நீக்கு
    2. காசுக்குப் பின்னாலே!...

      காசு என்ற சொல்லுக்குக் குற்றம் என்ற பொருளும் உண்டு..

      நீக்கு
    3. தனபாலன் எழுதிய பதிவுக்கு உங்களைப் போன்றவர்களின் விமர்சனங்கள் மணி மகுடமாக உள்ளது. நன்றி.

      நீக்கு
  4. வள்ளுவரே சொல்லியிருந்தாலும் மெய்ப் பொருளை உய்த்து அறிக!...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அதே... காணொலியிலும் அதே சொல்லியுள்ளார்... தொழில் பற்றிய எனது சிந்தனையும் அவ்வாறு தான் சொல்லியுள்ளேன்... நன்றி ஐயா...

      நீக்கு
    2. மெய்ப்பொருள் காண்பதறிவு. தனபாலன் இதுவரையிலும் ஆண்டு ஆட்சியாளர்களை ஒப்பிட்டு இப்போது ஆட்சி புரிந்து கொண்டிருப்பவர்களையும் வைத்து புரிந்து கொள்வார் என்பதனைத் தானே சுட்டிகாட்டுறீங்க?

      நீக்கு
  5. விமர்சனம் என்பது படைப்பாளியை செதுக்க வேண்டும் சிதைக்க அல்ல ..////மிக உண்மையான வரிகள் ஆனால் இப்போது நாட்டில் நடப்பது என்னவோ படைப்பாளிகளை சிதைப்பதுதான்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தனபாலன் மற்றும்உங்களின் கருத்துக்கள் தவறு. படைப்பாளிகளை சிதைக்கின்றார்கள் என்பது உண்மை. அதன் மூலம் சம்மந்தப்பட்ட படைப்பாளிகளுக்கு புதிய வெளிச்சம் கிடைக்கின்றது. தற்போது திருவள்ளுவர் குறித்த விமர்சனங்கள் போல. சமீப காலமாக தொலைக்காட்சியில் இது வரையிலும் எவருக்கும் குறிப்பிட்ட நபரின் முகம் தெரியாமல் இருந்தது. இப்போது ஏதோதே பேசிப்பேசி அவர்கள் அனைவரும் இப்படித்தான் பிரபல்யம் ஆகி உள்ளனர்.

      நீக்கு
  6. வான்புகழ் வள்ளுவர் வகுத்த நல் வழியில் வையகம் வாழ்ந்திட வரம் அருள்தாயே! என்று பாட தோன்றுகிறது.

    மிக அருமையான பதிவு.
    காணொளி கேட்டேன் .


    பதிலளிநீக்கு
  7. தங்கள் மன ஆதங்கத்தை வெளிப்படுத்தி இருக்கிறீர்கள்

    பதிலளிநீக்கு
  8. உங்கள் கருத்தைச் சொல்லியிருக்கீங்க. பேராசிரியர் அவருடைய கருத்தை அவருடைய புரிதலுக்கு ஏற்றபடி சொல்லியிருக்கிறார். அவ்ளோதான். இதில் இருவரின் கருத்துக்களும் சரியா தவறா என்பது அவரவர்களுக்கே புரியும்.

    பதிலளிநீக்கு
  9. படைப்பாக்கம் என்பது ஒரு கலை. அதனை எல்லோராலும் செய்ய முடியாது. தங்கள் படைப்பாக்கம் வெறும் புனைவாக இருப்பதில்லை. திருக்குறள், திரைப்பாடல், சங்க இலக்கியப் பாடல் எனத் திரட்டி சொல்ல வரும் செய்திக்கேற்ப ஒழுங்கமைத்துத் தருவது மிகவும் இறுக்கமானது. தங்கள் திறனைப் பல அறிஞர்களும் பாராட்டி வருவதை உலகமறியும். எனவே, ஐந்து பதிவுகள் தோன்றிய விதம் தந்திருப்பதும் சிறப்பே!
    பாராட்டுகள்

    பதிலளிநீக்கு
  10. வழக்கம்போல் குறளும் உங்கள் உள்ளக்குமறலும் நல்ல ஜோடி அருமையாக வெளிப்படுத்தியுள்ளீர்கள் பாராட்டுக்கள் தனபாலன்

    பதிலளிநீக்கு
  11. பதிவு மிக அருமை, எனக்குப் புரிஞ்சதுபோலவும் இருக்கு, புரியாததுபோலவும் இருக்கு:).

    மேலே வள்ளுவர் தாத்தாவின் பார்வையே சரியில்லையே:) ஹா ஹா ஹா.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹா... ஹா...

      // முதல் பத்து குறள்களில் "அடி அடி என்று அடித்தாலும்" குறள்களை தவறாக புரிந்து கொண்டவர்கள்,

      "தான் பிடித்த முயலுக்கு நான்கு கால்களை விட்டுவிட்டு மூன்று" என்று பிதற்றும் சில வந்தேறி தமிழன்கள்,

      "காவி என்பது நம் ஆன்மிகத்தின் குறியீடு" எனும் மூடர்கள்,

      "ஔவையார் திரைப்படம் பார்த்து நம்பின" சில ஜந்துக்கள்,

      "அற்ப சனாதனம்" என்பதையே முழுவதுமாக அறியாத அற்பர்கள்,

      இன்னும் பலருக்கு நிறைய சொல்ல வேண்டியதும், ஆனால், அவர்கள் வரமாட்டார்கள் என்பது எனக்குத் தெரியும்...//

      என்று தாத்தா சொல்கிறார்...!

      அவரை கண்டுகொள்ளாமல், இது போல் உள்ளவர்களின் பின்புறம் (பிற்போக்கான சிந்தனை என்பதை அறிக) ஒரு சின்ன தீ வைத்துள்ளதை கண்டித்து, என்னைத்தான் தாத்தா முறைக்கிறார்... அந்தப் பார்வை சரிதான்...

      நன்றி சகோதரி...

      நீக்கு
    2. கொன்றன்ன இன்னா செயினும்...

      பிற்போக்கு என்று சொல்லி பிறர் மீது வசை பாடுவதில்
      இப்படியும் சந்தோஷமா!...

      நீக்கு
    3. பிற்போக்கான சிந்தனை உள்ளவர்களுக்கு :-

      சிதையா நெஞ்சுகொள்
      செய்வது துணிந்து செய்
      தீயோர்க் கஞ்சேல்
      தொன்மைக் கஞ்சேல்
      நேர்படப் பேசு
      கொடுமையை எதிர்த்து நில்
      சாவதற்க் கஞ்சேல்
      நையப் புடை
      நொந்தது சாகும்
      பேய்களுக் கஞ்சேல்
      போர்த்தொழில் பழகு

      ரௌத்திரம் பழகு

      நீக்கு
    4. அக்மார்க் இலக்கியவாதியாக மாறீட்டீங்க போல. தூள் கிளப்புறீங்க.

      நீக்கு
  12. அரசியல் செய்வதற்கு ஏதாவது காரணம் வேண்டுமல்லவா..? அதற்கு நல்ல தீனி போடுவது ஹெஜ்.ராஜாவும் பிஜேபியும் தான். அதுபோக வள்ளுவர் வடிவில் பல அவதாரங்களை எடுத்தவர்தான். அதனால் இதுவொரு தேவையில்லாத அரசியல்தான்.

    மற்றபடி உங்கள் பதிவு வழக்கம்போல் அருமை.

    பதிலளிநீக்கு
  13. ஒரு உண்மையைச் சொல்ல வேண்டுமென்றால் வழக்கம்போல் என்புரிதல் மிகக்குறைவு மன்னிக்கவும்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இன்றைய அரசியலைப் புரிந்து கொண்டால், தங்களுக்கு புரியலாம் என்று நினைக்கிறேன் ஐயா... இந்த நேரத்தில் ஒன்றை சொல்வதில் மிகவும் பெருமையும் மகிழ்ச்சியும் அடைகிறேன்... உங்களின் ஒரு சந்தேகத்தால் (பதிவால்) → SEARCH FOR TRUTH ← புகழ் அதிகாரத்தை பற்றி சுருக்கமாக இரு பதிவாக எழுதி வைத்திருந்ததை, 5 பதிவுகளாக எழுதினேன்... தேட வைத்து நிறைய சிந்திக்க வைத்ததை என்றும் மறக்கவே முடியாது... நன்றி ஐயா...

      நீக்கு
  14. என்ன விவாதம் என்பதே இப்போதான் நேற்றிலிருந்து கொஞ்சம் கொஞ்சமா தெரிந்தது . .காணொளி பார்க்கவில்லை நேரம் கிடைக்கும்போது பார்க்கிறேன் .ஆனால் ஒரு விஷயம் மனதை மிக்கவும் வருத்தப்படுத்தியது  ஒரு செய்தி படித்தேன் தாத்தா மீது அழுக்கு வீசியிருக்காங்க எங்கோ ஒரு ஊரில் :(  அவர்கள் அவனமானப்படுத்தியது யாரை ? அன்புக்கும் வாழ்வியலுக்கு நட்புக்கு மற்றும் அனைத்துக்கும் இரண்டடியால் எளிதாய் நமக்குணர்த்திய திருவள்ளுவருக்கு இல்லையா ? 

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பேராசிரியர் கரு.ஆறுமுகத்தமிழன் அவர்களின் முழு உரையை கேளுங்கள்... இன்னும் பலரின் உரைகள் உள்ளன... அதில் ஒன்றை மட்டும் தான் பகிர்ந்து கொண்டுள்ளேன்... திருக்குறளில் மூழ்கி முத்து எடுத்தவர்கள் பலர் உள்ளார்கள்... ஆனால் அவர்களுக்கு கோபம் வராது என்பதும் எனக்குத் தெரியும்... குறளின் அற்புதங்களில் அதுவும் ஒன்று...

      சின்ன தகவல் :- திருக்குறள் எனக்கு அனைத்திற்கும் முதன்மை என்பதை, எனது ஆரம்ப பதிவுகள் முதல் பேசும்... (தொழிற்நுட்ப பதிவுகள் தவிர) நன்றி சகோதரி...

      நீக்கு
    2. இது தான் சரியான விமர்சனம். நான் ஒன்றை விரும்புகின்றோம். ஒன்றின் மீது மிகுந்த மதிப்பு வைத்துள்ளோம். யாரோ ஒருவர் வசை பாடுகின்றார்கள். புழுதி வாரி தூற்றுகின்றார்கள். மனம் பக்குவம் அடைந்தவர்கள் அதனைக் கண்டு கொள்ள மாட்டார்கள். எதிரிகள் எப்போதும் உணர்ச்சிகளை தூண்டத் தயாராக இருப்பார்கள். நாம் தான் இரையாகி விடக்கூடாது. ஆனால் நடந்து கொண்டிருப்பது தலைகீழாக உள்ளது.

      நீக்கு
  15. இதுபோன்ற உங்கள் பதிவுகளில் கருத்துகளை உள்வாங்கிக்கொள்வதா அல்லது உங்களுடைய தொழில்நுட்பத்தை ரசித்துக்கொண்டே இருப்பதா என்று எண்ணி இரண்டிலும் லயித்துவிடுகிறோம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஒவ்வொரு முறையும் தனபாலன் பதிவைப் படிக்கும் போது எனக்குத் தோன்றும் எண்ணத்தை சரியான வார்த்தையில் சொல்லியிருக்கீங்க. நன்றி.

      நீக்கு
  16. படிக்கும்காலத்தில் திருக்குறளை படிக்காததின் சுமை தங்களின் பதிவை படிக்கும் போது....இப்போதுதான் புரிகிறது...

    பதிலளிநீக்கு
  17. உள்ளக் குமுறல்கள் வார்த்தைகளால் வரும் போது அதுவும் வள்ளுவன் துணைக்கு வரும் போது அற்புதம்தான்

    பதிலளிநீக்கு
  18. சிந்திக்கத் தூண்டும் சிறப்பான பதிவு.

    பதிலளிநீக்கு
  19. மிக மிக அருமையான பதிவு!
    இந்த அபூர்வமான, கோபமான திருவள்ளுவரின் அழகிய ஓவியம் உங்களுக்கு எங்கிருந்து கிடைத்தது?
    திருவள்ளுவர் இந்த உலகின் பொய்மையைக்கண்ட சீற்றத்துடன் எழுதாமல் நிற்பது போல் உள்ளது!!

    பதிலளிநீக்கு
  20. சரியா சொன்னீங்க. அவ்வப்போது பல குறள்களை இப்படி வாசித்துத்தான் தெரிஞ்சுக்குறோம் :)

    பதிலளிநீக்கு
  21. உங்கள் உள்ளக்கிடைக்கை வெளிவர வள்ளுவரைத் துணைக்கு அழைப்பீர்கள். எவ்வளவு ஆழமாக அவரை உங்கள் பக்கம் வைத்திருக்கின்றீர்கள்

    பதிலளிநீக்கு
  22. அருமை டிடி. திருக்குறள் பதிவுகளை தொழில் நுட்பங்களைப் பயன்படுத்டி வித்தியாசமான மின்னூலாக்கி அமேசானில் வெளியிடுங்கள். நிச்சாயம் நல்ல வரவேற்புகிடைக்கும் என்று நம்புகிறேன்.

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

நகுதற் பொருட்டன்று நட்டல் மிகுதிக்கண்
மேற்சென்று இடித்தற் பொருட்டு. (குறள் 784)

நட்புச் செய்துகொள்வது நண்பரோடு சிரித்து மகிழ்வதற்காக மட்டும் அல்ல. மிகுதியாகத் தவறு செய்யும்போது, அவரைக் கடிந்து திருத்துவதற்கே ஆகும்.