🏠 வணக்கம் காப்பகம் நன்றி

தேடல் 🔎



புதிய பதிவுகளை பெற ✉



மக்களின் கண்ணீரே ஆட்சியை அழிக்கும் ஆயுதம்...

அனைவருக்கும் வணக்கம்... நல்லாட்சி எப்படி இருக்க வேண்டும்...? கொடுமையான ஆட்சி இருந்தால்...? என்பதைப் பற்றிய பதிவு... எனது மனதுடன் ஒரு உரையாடலாக...

அமைதியாக வெளிமனம் நல்லாட்சியைப் பேசுகிறது...
அதை எதிர்த்துக் கொந்தளிப்பான உள்மனம் கொடுமையான ஆட்சியைக் கேள்வி கேட்கிறது... + வெறுப்புடன் சில பாடல்களும் பாடுகிறது...!

முக்கிய குறிப்பு :- நீங்கள் விரும்பும் ஆட்சியை நினைத்துக் கொண்டு நீல வண்ண வரிகளையும், விரும்பாத ஆட்சியை நினைத்துக் கொண்டு சிகப்பு வண்ண வரிகளையும் வாசிக்கலாம்... உங்கள் விருப்பப்படி நேர்மாறாகவும் இருக்கலாம்...! மனதில் தோன்றுவதைக் கருத்துரையிலும் சொல்லலாம்... மத்திய அரசு / மாநில அரசு மட்டுமல்ல, உலகத்தில் உள்ள எந்த அரசிற்கும் இப்பதிவுகள் பொருந்தும் என்பதை விட, உலகப் பொதுமறையாம் திருக்குறள் என்பதைக் கூறிக்கொண்டு...

முந்தைய பதிவின் இணைப்புகள் :-
1) எல்லா பணத்தையும் எடு...!
2) உலகத்தில் கோழைகள் தலைவன்...

பதவி, அதிகாரம் இவையெல்லாம் வைத்துக்கொண்டு, எதையும் சாதிக்கிறது தான் வெற்றின்னு ஒரு நல்ல அரசு என்றைக்கும் நினைக்காது... குடிமக்களை வாழவைக்கும் எந்தவொரு செயலும், நேர்மையான ஆட்சியையும் தான் சிறந்த வெற்றி என்று தொடர்வது தான், சிறந்த அரசாங்கத்திற்கு அழகு...

வேலன்று வென்றி தருவது மன்னவன்
கோலதூஉங் கோடா தெனின் (546)



வாழ வைச்சா பரவாயில்லை... சாகுற நிலைமைக்குக் கொண்டு போனா...? ஆட்சி அழகா இருந்தா ரசிப்பாங்க... அலங்கோலம் ஆச்சுன்னா ஆப்பு தான் வைப்பாங்க...! எந்தக் காலத்திலும் சரி, தப்புத்தப்பான ஆட்சியால் துன்பப்பட்டுத் துயரப்பட்டு வருத்தப்பட்டு மக்கள் விடும் கண்ணீர், விரைவில் ஒரு நாள் ஆட்சியாளரின் செல்வத்தையும் அழிக்கும்... ஆட்சியையும் அழிக்கும்...

அல்லற்பட் டாற்றாது அழுதகண் ணீரன்றே
செல்வத்தைத் தேய்க்கும் படை (555)


கோவில் காக்க வந்தவனே பாவி என்று மாறிவிட்டா - சாமி எங்குக் குடியிருக்கும்...? செங்கோல் பிடிக்கும் ஒருவன் கன்னக்கோல் பிடிக்கும் கள்வனென்றால் - நீதியெங்கு குடியிருக்கும்...? பாதுகாவல் போர்வையிலே, ஜாதி இன பேதம் சொல்லி, ஊர்ப் பகையை வளர்ப்பவன் நீ, ஊரில் உள்ளவரை மோதவிட்டு, குள்ளநரி போலிருந்து, ரத்தமெல்லாம் குடிப்பவன் நீ... நீதிக்குத் தலை வணங்கு படத்தில், புலமை பித்தன் அவர்கள் எழுதிய பாட்டை இணைத்திருந்தேன்... முந்தைய பதிவில் கோமதி அரசு அம்மா அவர்கள் ஒரு பாடலை கருத்துரையில் சொல்லி இருந்தார்கள்... 1961 ஆம் ஆண்டு ஜனவரியில் திறப்புவிழா கண்ட நடிகர் திலகத்தின் சாந்தி தியேட்டரில் முதன்முதலாகத் திரையிடப்பட்ட "தூய உள்ளம்" படத்தில் வரும் சிறப்பான பாடல் இதோ :

கழுகு போல விலைகளெல்லாம் பறக்குது இங்கே... கல்வியின்மை கொள்ளை லாபம் வளர்ந்தது இங்கே... வேலையில்லா திண்டாட்டம் பெருகுது இங்கே... வேண்டி நின்ற உண்மையான சுதந்திரம் எங்கே...? இருளில் வீழ்ந்த தேசமானதே - அதை எண்ணிப் பார்க்க வந்த நாளிதே... // பதவி வேட்டை, லஞ்ச ஊழல் மலிந்து விட்டதே... பதுக்கி வைக்கும் கூட்டமிங்கே நிறைந்து விட்டதே...மத விரோதம், ஜாதி சண்டை வளர்ந்து விட்டதே... மனிதனையே மனிதன் தின்னும் காலமானதே... இது சுயநலத்தால் வந்ததல்லவா - இதைத் தொலைப்பது நம் கடமையல்லவா...?© தூய உள்ளம் கண்ணதாசன் பெண்டியாலா 🎤 T.M.சௌந்தரராஜன், P.சுசீலா @ 1961 ⟫

மக்களைப் பேணிக்காப்பதிலும், இயற்கையை வளங்களை மேம்படுத்துவதிலும் பல திட்டங்கள் கொண்டு வருவதில், ஒரு அரசாங்கம் முனைப்போடு இருக்கவேண்டும்... அவ்வாறு தொடர்ந்து செய்தால், அந்த நாட்டில் பருவமழை தவறாது பெய்யும்... அதனால் வளமான விளைச்சலும் அதிகமாகி நாடு சுபிட்சம் பெறும்...

இயல்புளிக் கோலோச்சும் மன்னவன் நாட்ட
பெயலும் விளையுளும் தொக்கு (545)



வருதுப்பா வருது, வருசத்துக்கு ஒருவாட்டி தவறாம புயல் வருது... இன்னும் வருங்காலத்தில் எப்படியோ...? இப்போ ஒவ்வொரு பகுதியா தேர்ந்தெடுத்து, சுடுகாடா மாத்திட்டு இருக்காங்க... ம்... நாடு சுபிட்சம் பெற முனைப்போடு செயல்பட்டால், அந்த நாட்டின் புகழ் உலகம் முழுவதும் பரவும்... ஆனா, யாருக்காகவோ எதற்காகவோ மற்றவர்கள் சுயலாபத்திற்காகத் திட்டம் கொண்டு வந்து செயல்பட்டால் எப்படி...? அதற்காக நிகழ்கால மக்களை, குறிப்பாக விவசாயிகளை வதைக்க வேண்டுமா...? இதனால் வருங்காலத்தில் புகழ் கிடைக்குமா...? அது தான் நிலைக்குமா...?

மன்னர்க்கு மன்னுதல் செங்கோன்மை அஃதின்றேல்
மன்னாவாம் மன்னர்க் கொளி (556)


எத்தனை காலம் தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே... இன்னும் எத்தனை காலம் தான் ஏமாற்றுவார் - இந்த நாட்டிலே, சொந்த நாட்டிலே நம் நாட்டிலே... சத்தியம் தவறாத உத்தமன் போலவே நடிக்கிறார்2 சமயம் பார்த்துப் பல வகையிலும் கொள்ளை அடிக்கிறார்2 பக்தனைப் போலவே பகல் வேசம் காட்டி - பாமர மக்களை வலையினில் மாட்டி... எத்தனை காலம் தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே, சொந்த நாட்டிலே நம் நாட்டிலே...© மலைக்கள்ளன் தஞ்சை ராமையா தாஸ் S.M.சுப்பையா நாயுடு 🎤 T.M.சௌந்தரராஜன் @ 1954 ⟫

பிற்சேர்க்கை : ← இந்த மணியைச் சுட்டியால் (Mouse) சொடுக்கினால் குறளை வாசிக்கலாம்... கைப்பேசியில் வாசிப்பவர்கள் விரலால் சொடுக்கி வாசிக்கலாம்...

முந்தைய பதிவுகளில் பலரும் சொல்லி விட்டார்கள்... அவை செங்கோன்மை மற்றும் கொடுங்கோன்மை அதிகாரங்களில் உள்ள குறள்களின் குரல்கள்... இணைப்பை பிறகு சொல்கிறேன்... மற்றபடி உங்கள் மனதில் வேறு பாடலும் நினைவுக்கு வரலாம்... அதை மட்டும் கருத்துரையில் சொல்லாம, மேலே சொன்ன முக்கிய குறிப்புடன்.............




?

அரசியல் அதிகாரங்கள் தொடரும்... நன்றி...

புதிய பதிவுகளை பெறுதல் :


தொடர்புடைய எண்ணங்களின் வண்ணங்கள் சில :


முகநூல் மூலம் கருத்துக்களை பகிர :

கருத்துகள்

  1. உண்மை ஐயா
    மக்களின் கண்ணீர் ஒரு நாள் கனலாக மாறும்

    பதிலளிநீக்கு
  2. இந்த முறை நிறைய மாற்றங்கள் நடக்கும் என்று நம்புகிறேன். சாதி மதம் பணம் மூன்றும் ஆட்சி செலுத்தினாலும் இப்போது உருவாகி உள்ள கூட்டணியின் தரத்தைப் பற்றி மக்கள் தாங்கள் உணர்ந்ததை இந்த தேர்தலில் உணர்த்துவார்கள் என்று நம்புகிறேன்.

    பதிலளிநீக்கு
  3. ஒவ்வொரு தேர்தலிலும் மக்கள் மாறி மாறி வாக்களித்துதான் பார்க்கிறார்கள். ஆனால் ஆட்சிக்கு வருபவர்கள் எல்லோரும் ஒரே மாதிரி அல்லவா இருக்கிறார்கள்... ஆட்சி மாறினாலும் காட்சி மாறுவதில்லையே...

    ஏங்குது வீடுங்க ... எரியுது வயிறுங்க... ஏறும் விலைக்கும் காரணம் யாருங்க...

    "இந்த விலைவாசி எல்லாம் ஏறுவதற்கு.. யாரு மாமா காரணம்?"

    "அதுல ஒரு பெரிய கதையே இருக்கும்மா..."

    ஏறு பூட்டி சோறு போட்டான் கிராமத்து விவசாயி... அதை மூட்டை கட்டி பூட்டி வச்சான் நகரத்து வியாபாரி... கூட்டம் போட்டு கொடியும் பிடிச்சா வாட்டம் தீராது...ஒரு சட்டை எடுத்து அடிச்சாலும் என் நிலைமை மாறாது... நினைப்பது நானுங்க... இதைச் செய்வது யாருங்க...பதவி கொடுத்தால் ஊழலை ஒழிப்பேனுங்க.." (சிரிப்பு)

    பதிலளிநீக்கு
  4. மக்களின் கண்ணீர் நிச்சயம் ஒருநாள் அரசியல்வாதிகளை செல்வம் இழக்க வைக்கும்.

    ஆனால் ???

    இந்த கண்ணீர் வடிக்க வேண்டிய அவசியம் என்ன ? மக்கள் தனது வாக்குரிமையின் பலத்தை அறியாதபோது...

    குரங்கு கையில் இரும்பை கொடுத்தால் என்ன ? தங்கத்தை கொடுத்தால் என்ன ?

    என்றுதான் தோன்றுகிறது மாறவேண்டியது அரசியல்வாதிகள் அல்ல! மக்கள்தான்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அதே கில்லர்ஜி...இப்ப இருக்கற வியாதிங்களை மாத்தவா முடியும்? மக்கள்தான் மாறணும்...புரட்சி செய்யணும்...

      கீதா

      நீக்கு
  5. கில்லர்ஜி அவர்களின் கருத்து சிறப்பு - மாற வேண்டியது மக்கள் தான்!

    ஒரு விஷயம் - எல்லா அரசியல்வியாதிகளும் ஒரே மாதிரி தான். இங்கே நல்ல அரசியல்வாதி என்று யாருமே இல்லை. இருக்கும் திருடரில் எந்தத் திருடர் நல்லவர்!

    பதிலளிநீக்கு

  6. நான் சொன்ன பாடல் உங்கள் பதிவில் இடம்பெற்றது மகிழ்ச்சி.

    அன்றும் இன்றும் மக்களின் நிலை மாறவில்லை. 1961 ல் அப்படி 2019ல் இப்படி.

    பட்டுக்கோட்டையார் பாடல் நினைவுக்கு வருது.
    அவர் பாடிய வீரசிந்து என்ற பாடலில்

    ஒன்று கூடி நின்று வீர சிந்து
    பாடுவோம்- வெற்றி
    சூடுவோம்
    நேர்மையற்ற பேர்கள் வீழ நின்று
    வாட்டுவோம் -நீதி
    நாட்டுவோம்.

    மக்கள் எல்லோரும் ஒன்று பட்டு தான் நல்லாட்சி கொண்டு வர முடியும்.

    மக்களை எத்தனை காலம் தான் ஏமாற்ற முடியும்?
    அதையும் பட்டுக்கோட்டையார் பாடி இருக்கிறார்.

    உண்மை ஒரு நாள் வெளியாகும்
    உள்ளங்களெல்லாம் தெளிவாகும்
    பொறுமை ஒரு நாள் புலியாகும் - அதற்குப்
    பொய்யும் புரட்டும் பலியாகும்.


    ஏமாத்தும் போர்வையிலே
    ஏழைகளின் வேர்வையிலே
    எக்காளம் போடுகிற கூட்டம் -நாட்டில்
    எக்காளம் போடுகிற கூட்டம் - மக்கள்
    எதிர்த்துக்கிட்டா எடுக்கனும் ஓட்டம்

    மக்கள் நினைத்தால் எல்லாவற்றையும் மாற்றலாம்.








    பதிலளிநீக்கு
  7. தூங்குக தூங்கிச் செயற்பால தூங்கற்க
    தூங்காது செய்யும் வினை.

    காலத்தாழ்த்திச் செய்யக் குடியவற்றைக் காலம் தாழ்ந்தே செய்ய வேண்டும்; விரைந்து செய்ய வேண்டிய வற்றைக் காலம் தாழ்த்தக் கூடாது.

    மக்கள் தேர்தல் காலத்தில் இலவசங்களை கண்டு ஏமாறாமல் ஒவ்வொருவருக்கு ஒவ்வொரு மாதிரி பேசும் வார்த்தை ஜாலத்தைக் கண்டு மயங்காமல் நல்லாட்சி மலர செய்வது மக்கள் கையில்.
    தங்கள் பலத்தை நல்லபடியாக காட்ட வேண்டும்.

    பதிலளிநீக்கு
  8. எல்லா நல்ல குணங்களும் உடையொரும் இல்லை எல்லா தீய குணமுடையோரும் இல்லை நாம் எப்படியோ அதற்கேற்றவாறுதான் நமக்கு அரசு அமையும் முதலில் நமக்குத் தேவை மனிதரிடம் வேற்றுமை காணாத உள்ளங்கள் பாடல்களில் காணும் வரிகளும் என்றைக்கும் பொருந்துமாறு இருப்பதே நல்ல பாடலின் அறிகுறி

    பதிலளிநீக்கு
  9. டிடி வணக்கம்...

    மக்களின் கண்ணீரே ஆட்சியை அழிக்கும் ஆயுதம்...டிடி தலைப்பு நல்லாத்தான் கீது...ஆனா இத்தனை நாள் மக்கள் அழவே இல்லைன்னு சொல்றீங்களா டிடி? அழுதுகிட்டுத்தானே இருக்காங்க...எந்த ஆட்சி அழிஞ்சுச்சு சொல்லுங்க? அட போங்கப்பா....நம்ம அரசியல்வியாதிங்க ஒழியும்னு நினைக்கறீங்க? அதுக்கு இந்த அழறாங்கனு சொல்லிருக்கீங்க பாருங்க அந்த மக்கள்தான் மாறணும்...மக்கள் புரட்சி பண்ணினாத்தான் (தெருல இறங்கி ஆர்பாட்டம் பண்ணனுன்னு சொல்லலை.) சத்தமே இல்லாம தங்க கைல கொடுத்துருக்கற ஆயுதமான அந்த ஓட்டுச் சீட்டைத் துருப்புச் சீட்டா பயன்படுத்தி எல்லா அரசியல்வியாதிங்களையும் பயமுறுத்தணும். அவங்க மக்களைக் கண்டுப் பயப்படனும்..சட்டம் பயங்கரமா கிடுக்கிப் பிடி போடணும்...இதெல்லாம் நடந்தாதான்.இது நடந்தா மட்டும்தான் மாற்றம் வரும் டிடி.....இல்லைனா இவங்க மாறி அவங்க, அவங்க மாறி இவங்க....இம்புட்டுத்தான்...

    உங்க பதிவு சூப்பர் வழக்கம் போல!!! நல்ல கருத்துகள்.

    கீதா

    பதிலளிநீக்கு
  10. சென்ற பதிவும், இந்தப் பதிவும் மிக அருமை டிடி. யதார்த்த நடப்புகள், ஆட்சிகள் என்று சொல்லி அருமையான பாடல்களையும் தேர்வு செய்து இணைத்து நீலக்கலர் எழுத்துகள் நம் மனதைப் பிரதிபலிப்பதாகவும் மற்ற கலரில் இருப்பது இப்போது நடப்பது என்று சொல்லி அழகான பதிவுகள். தொடர்கிறோம்.

    தமிழ்நாட்டின் நிலைமை ரொம்பவே மோசமாக இருப்பதாகத் தெரிகிறது

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
  11. தக்க சமயத்தில் இடப்பட்ட அருமையான பதிவு. சிந்திக்க வைக்கும் சிறப்பான பாடல்கள். பேய் ஆட்சி செய்தால் பிணம் தின்னும் சாத்திரங்கள் என்னும் பாரதியின் பாடல் வரிக்கு ஏற்பதான் ஆட்சி நடக்கிறது.

    பதிலளிநீக்கு
  12. ￰இடிப்பாரை இல்லாத ஏமரா கெடுப்பரிலானும் கெடும்

    பதிலளிநீக்கு
  13. எல்லா ஆட்சியும் இப்படித்தான் இருக்கு. இதில் நீலவண்ணம், சிவப்பு வண்ணம்னு வேறயா? லஞ்சம், ஊழல், தமிழகத்தை வஞ்சிப்பது, தமிழர்களை வஞ்சிப்பது என்று 10 ஆண்டுகள் இந்தியா சூறையாடப்பட்டதனால் ஆட்சி மாற்றம் நிகழ்ந்தது. இந்த ஆட்சிலயும் விவசாயிகளுக்கு நேரடியான நலன்கள் விளைந்த மாதிரி தெரியலையே.

    மக்களுக்கு அரசியல் புரிதலும், மறதியின்மையும் இருந்தால்தான் நல்ல ஆட்சி வரும். இல்லைனா, அயோக்கியர்களும், ஊழல்வாதிகளும் அவங்க கட்சியிலேயே இல்லாத 'காமராஜர்' ஆட்சியைக் கொண்டுவருவேன்னுதான் சொல்லுவாங்க.

    பதிலளிநீக்கு
  14. பெரியவர் ஜிஎம்பி சொல்லியிருப்பதை யாருமே கவனிக்கவில்லை போல இருக்கிறதே! ஏழை அழுத கண்ணீர் என்பதெல்லாம் எடுபடாத பழைய கதை. நம்முடைய யோக்கியதை என்னவோ அதற்கேற்ற ஆட்சியாளர்கள் தான் அமைகிறார்கள் என்பதில், மாற்றம் எங்கிருந்து தொடங்கியாக வேண்டும் என்பதற்கான பதிலும் இருக்கிறது.

    பதிலளிநீக்கு
  15. மாற்றம் வருமா?! அரசியல்வாதிலாம் வானத்துல இருந்து குதிக்க போறதில்லை. நல்லவங்கலாம் ஒதுங்கி போறதால அரசிய, அநியாயக்காரங்களின் கூடாரமாகிட்டுது

    பதிலளிநீக்கு
  16. மக்கள் அழுதால் அவர்களே துடைத்துக் கொள்ள வேண்டியதுதான். இப்பொழுது நடக்கும் விவகாரங்களும், முன்பு வேறொரு கட்சி இருந்த போதும் சரி யாரும் சுகப்பட்வில்லை.
    விருப்பம் போல தங்கம் சேர்த்துக் கொண்டு தன் புகழைத் தானே பாடிக்கொண்டு தமிழ் எனும் ஆயுதத்தைக் கையில் எடுத்து
    எல்லோரும் இன்னாட்டு மக்கள் என்று பாராமல்
    பிரித்து ஆண்டார்களே. வன்முறையைத் தூண்டிப் பேசாதவர்கள் ஆட்சிக்கு வரவேண்டும்.

    அந்த அம்மா,இந்த ஐயா எல்லோரும் ஆசைக்கு ஏற்ப ஆட்சி நடத்தி
    மண்ணுக்குள் போயாச்சு.
    இனி அவர்கள் வாரிசுகளும் பூமியில் தோண்டிப் புதையல்
    எடுக்க வழிவிடாமல் மக்கள் தான் விழிப்புக் கொள்ள வேண்டும்.

    பதிலளிநீக்கு
  17. ஆட்சி நிலை

    வாழத் தெரியாதார் பெரும்பாலோர் வாழ் நாட்டில்
    ஆளத் தெரியோதோர் ஆட்சியே நடைபெறும்.
    கோழை கயவர் கொலைஞர் தடியர்கள்
    ஏழை, நோயுற்றோர் எங்குமே காட்சியாம்.
    -- வேதாத்திரி மகரிஷி

    பதிலளிநீக்கு
  18. திருடனாய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது என்பதுபோல மக்களாக பார்த்துதிருந்தாவிட்டால் அரசாங்கத்தை மாற்றமுடியாது...

    பதிலளிநீக்கு
  19. அரசியல் தான் எனக்கு அலர்ஜி:)...பாட்டையாவது கேட்டு மகிழலாம் என நினைச்சால்ல்ல்ல்... எவ்வ்வ்வ்வ்வ்வ்ளோ பழசு:)... நான் பாட்டைச் சொன்னேன். இம்முறையும் போன் ஆடுதே:)..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் சகோதரி

      நானும் கைப்பேசியிலேயே பார்ப்பதால் எனக்கும் ஆடிக்கொண்டேதான் உள்ளது. அதற்குத்தான் சகோதரர் தனபாலன் அவர்கள்" என்னுடைய பதிவுகளை பெரும்பாலும் கணினியிலேயே பாருங்கள்" என விளக்கம் கொடுத்தாரே.! எனினும் என்னால் அது இயலாமல் இருக்கவே இந்த ஆட்டத்தின் நடுவே நானும் பதிவை பார்த்து, ரசித்து தட்டச்சு செய்து வருகிறேன். நன்றி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      நீக்கு
    2. வணக்கம் சகோதரரே

      வழமை போல் தங்கள் பதிவு அமர்க்களம்.அர்த்தமுள்ள பாடல்கள் அருமை. தங்கள் உள்ளத்தின் வேதனைகள் பதிவாக வெளி வருகிறது என்பதை புரிந்து கொள்கிறேன். தங்கள் சொல்படி மக்களின் கண்ணீர் என்றாவது ஒருநாள் சக்தி மிகுந்த ஆயுதமாக மாறும். அதுவரை பொறுத்திருப்போம்.

      அக்கால மன்னர்கள் நீதி நேர்மை தவறாது ஆட்சி செய்தனர். குடி மக்கள் எத்தவறு செய்தாலும், உடனடியாக தகுந்த தண்டனைகளை, (இதில் தங்கள் குடும்பமும் விதிவிலக்கல்ல...) வழங்கி வந்தனர். அதனால், "அரசன் அன்று கொல்வான்." என்ற பழமொழிகளும் பயந்து பயணித்து வந்தது. காரணம்.. அரசன் முதல், குடிமக்கள் வரை தம் மனசாட்சிக்கு மட்டுமல்லாது, மற்றவரின் மனசாட்சிக்கும் மதிப்பு தந்து பயந்து வாழ்ந்து வந்தனர். எனவே சிலசமயங்களை தவிர்த்து நல்லாட்சிகளுக்கும் குறைவில்லாமல் இருந்தது.

      இப்போது அந்த பழமொழிகள் மாறி விட்டது. குற்றங்களுக்கு தண்டனையாக மக்களை, மக்களே மனித நேயமின்றி தண்டித்துக்கொள்கின்றனர். தெய்வம் கொல்லும் போது பார்த்துக் கொள்ளலாமென மன்னனும்,மக்களும் தைரியமாக நிற்க, தெய்வமும் கண்மூடி நின்றபடி வாளாதிருக்கிறது. இப்போதெல்லாம் தெய்வமும் பொறுமையாக "நின்று"தான கொல்கிறது. ஆனாலும் வருந்தும் மக்களின் கண்ணீர் தங்கள் தலைப்பின்படி என்றாவது ஒருநாள் தெய்வத்தின் கைகளில் ஆயுதமாக மாறும். பகிர்வுக்கு மிக்க நன்றி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      நீக்கு
  20. உள் மனமும் வெளி மனமும் போட்டி போடும்போது வெளியில் வருவது யதார்த்தத்தின் முடிவே. உண்மையாகக் கூறிவிட்டீர்கள்.

    பதிலளிநீக்கு
  21. மக்கள் மனம் மாற வேண்டும்,போலி எது உண்மை எது எனப் புரிந்து கொள்ள வேண்டும். படித்தவர்களே புரிந்து கொள்ளாமல் இருக்கையில் பாமரர்களை என்ன சொல்ல முடியும்!

    பதிலளிநீக்கு
  22. அரசாங்கம் இலவசங்களைக் கொடுத்து மக்களைத் தன் வயப்படுத்துகிறது. மக்கள் டாஸ்மாக்கில் மூழ்கிக் கேவலமான இச்சைகளுக்கு ஆளாகிப் பெண்களையும் சீரழிக்கின்றனர். பெண்களோ தங்களுக்கு சுதந்திரம் என்னும் பெயரில் எப்படி எப்படியோ திசை மாறிப் பயணிக்கின்றனர். கடைசியில் இதில் எல்லாம் அரசாங்கம் நுழைந்து கயவர்களைப் பிடிக்கும்போது நிலைமை கைமீறி விடுகிறது. கண்களைத் திறந்து கொண்டே கிணற்றில் விழும் மக்களையும், ஆசை வார்த்தைகளுக்கு அடிமையாகும் பெண்களையும் அரசாங்கத்தால் திருத்த முடியுமா? தனிப்பட்ட வாழ்க்கையில் நுழைந்து தொந்திரவு கொடுக்கிறது எனச் சொல்வார்கள். அதே தான் மத்திய அரசு மாநிலச் சட்ட ஒழுங்கில் தலையிடுவதும். மாநில உரிமை பறிக்கப்படுவதாகச் சொல்லுவார்கள். எந்த ஒரு தவறுமே நடைபெறும்போது அரசு சார்ந்த உளவுத்துறையினருக்குத் தெரியாமல் போகாது. ஆனால் அவர்கள் மாநில அரசுக்கு எச்சரிக்கை தான் தர முடியும்! நடவடிக்கை எடுக்கும் பொறுப்பு மாநில அரசுக்குத் தான்! இதை மம்தா பானர்ஜியின் அரசாட்சி நடவடிக்கைகள் மூலம் நன்கு தெரிந்து கொண்டிருந்திருக்கலாம்.

    பதிலளிநீக்கு
  23. கொடுங்கோன்மை அதிகாரத்திலிருந்து 555 ஆவது குறளான

    அல்லற்பட்டு ஆற்றாது அழுதகண் ணீரன்றே
    செல்வத்தைத் தேய்க்கும் படை.

    என்ற குறளும்,

    செங்கோன்மை அதிகாரத்திலுள்ள 545 ஆவது குறளான

    இயல்புளிக் கோலோச்சும் மன்னவன் நாட்ட
    பெயலும் விளையுளும் தொக்கு.

    என்ற குறளும் தான் இந்த பதிவிற்கான கருப்பொருள் என நினைக்கிறேன்.

    இதற்குப் பொருத்தமான பாடலை சொல்ல உங்களைவிட்டால் யார் இருக்கிறார்கள்?

    பதிலளிநீக்கு
  24. மாற்றாரைக் கண்ணீர் வடிக்கச் செய்த
    நாமும் மகிழ்வாக வாழ முடியாது
    மக்களைக் கண்ணீர் வடிக்கச் செய்த
    அரசியல்வாதியும் மகிழ்வாக வாழ முடியாது
    மக்கள் கண்ணீர் அரசியல்வாதியைக் கொல்லும்
    என்பதெல்லாம் முன்னோர் கருத்து - அதற்கு
    வீழ்ச்சி கண்ட அரசியல்வாதியே சாட்சி!

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

நகுதற் பொருட்டன்று நட்டல் மிகுதிக்கண்
மேற்சென்று இடித்தற் பொருட்டு. (குறள் 784)

நட்புச் செய்துகொள்வது நண்பரோடு சிரித்து மகிழ்வதற்காக மட்டும் அல்ல. மிகுதியாகத் தவறு செய்யும்போது, அவரைக் கடிந்து திருத்துவதற்கே ஆகும்.