🏠 வணக்கம் காப்பகம் நன்றி

தேடல் 🔎



புதிய பதிவுகளை பெற ✉



அன்பின் கருவி...

வணக்கம் அன்பு நண்பர்களே... அன்புடைமை அதிகாரத்தைக் குறளின் குரலாக எழுதி வைத்திருந்தாலும், கணக்கியல் பதிவில் சொன்னது போல், எவரின் குறள் வைப்பு முறை முறைப்படி எழுதலாம் எனும் குழப்பம் இருந்தாலும், இதுநாள் வரையில் எழுதியது போலவே தொடர்கிறேன்... முதலில் ஒரு பாட்டு கேட்போமா...?


உன்னையெண்ணிப்பாரு உழைத்து முன்னேறு, உண்மையைக் கூறு செம்மை வழி சேரு... | அன்புக்கு வணங்கு, அறிந்த பின் இணங்கு, பண்புடன் விளங்கு, பசித்தவர்க்கு இரங்கு | பேதங்கள் தீர்த்து பெருமையை உயர்த்து, நீதியைக் காத்து நேர்மையை வாழ்த்து... | பொன் மொழி கேட்டு பொய்மையை மாற்று, பொறுப்புகள் ஏற்று பொதுப் பணியாற்று... | திருக்குறள் நூலை சிறந்த முப்பாலை, கருத்துடன் காலை படிப்பதுன் வேலை...

மேலுள்ள பாடல் வரிகளை மட்டும் கேட்க → சொடுக்குக ►

© மகனே கேள் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் M.S.விஸ்வநாதன் 🎤 சீர்காழி கோவிந்தராஜன் @ 1965 ⟫




அறத்துப்பால் - அதிகாரம் 8. அன்புடைமை (71-73)

குறளுக்கேற்ப திரைப்படப் பாடலை ஓரளவு தேர்ந்தெடுத்துக் கொடுத்துள்ளேன்... பாடலில் வரும் மூன்று சொற்களையும் கொடுத்துள்ளேன்... ஊகித்த விதத்தைக் கருத்துரையில் சொல்லலாம்... இந்த நுட்பத்திற்குக் காரணம், சில வலை நுட்பங்களை மீண்டும் பயன்படுத்தாமல் இருந்தால், அதன் அன்பை அடியேன் மறந்து விடுவேன்...! சரி குறளையும் பாடலையும் வாசிக்க, கேட்க இதயத்தைச் சொடுக்கி, குறளின் மேன்மை கூடுவதையும் உணரலாம்... நன்றி...

தன்னைப் போலப் பிறரை எண்ணும் தன்மையுடையவர்கள், பிறரின் துன்பத்தைக் கண்டாலோ, நினைத்தாலோ, அவ்வளவு ஏன் அதைப் பற்றிய செய்தியைக் கேட்கும்போதே, கண்ணில் பெருகும் நீரைக் கட்டுப்படுத்த முயற்சி செய்தாலும், அது அவர் அறியாமலேயே உடைத்துக் கொண்டு வரும்... ஏனென்றால், உள்ளத்தில் இருக்கும் உண்மையான அன்பை, உலகப்புகழ் பெற்ற திண்டுக்கல் பூட்டினாலும் பூட்டி அடைத்து வைக்க முடியாது...!

நிறைந்ததாலே | அமைந்ததாலே | வாழ்வதாலே
(அனைத்து வளத்துடன் வாழும் இப்படிப்பட்ட குடும்பம் இன்னும் இருக்கிற'தப்பா'...?...!)

அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ் ஆர்வலர்
புன்கணீர் பூசல் தரும் 71


கொஞ்சு மொழி குழந்தைச் செல்வம் நிறைந்ததாலே - நல்ல குணமுள்ள'தாய்' மனைவி வந்து அமைந்ததாலே2... தம்பி தமையன் ஒன்று சேர்ந்து வாழ்வதாலே2... சம்சாரத்திலே எந்த நாளும் மனசுபோலே... அன்பினாலே உண்டாகும் இன்ப நிலை - அதை அணைந்திடாத தீபமாக்கும் பாசவலை... பாசவலை2... அன்பினாலே உண்டாகும் இன்ப நிலை...
© பாசவலை அ.மருதகாசி விஸ்வநாதன்-ராமமூர்த்தி 🎤 C.S.ஜெயராமன் @ 1956 ⟫


அப்படிப் பூட்டி வைத்துக் கொள்பவர்கள், பொன் பொருள் செல்வாக்கு அறிவு திறமை, என எதையும் யாரிடமும் பகிர்ந்து கொள்ளாத சுயநலம் கொண்டவர்கள்... ஆனால், அன்புள்ளம் கொண்டவரோ தனது உடம்பின் துன்பத்தையும் நினைக்காமல், உடல் பொருள் ஆவி, என அனைத்தையும் பிறருக்கென பகிர்ந்து கொள்ளும் எண்ணம் உடையவர்கள்...

அம்மா | அப்பா | ஆசான்
(தெய்வம் யார்...? கடவுள் யார்...?)

அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார்
என்பும் உரியர் பிறர்க்கு 72


இயற்கை கொடுக்கும் செல்வத்தையெல்லாம் பொதுவாய் வைத்திட வேண்டும்... இல்லாதவர்க்கும் இருப்பவர் தமக்கும் பகிர்ந்தே கொடுத்திட வேண்டும்2... ஒருவருக்காக மழையில்லை, ஒருவருக்காக நிலவில்லை2... வருவதெல்லாம் அனைவருக்கும், வகுத்தே வைத்தால் வழக்கில்லை... அம்மா என்றால் அன்பு, அப்பா என்றால் அறிவு, ஆசான் என்றால் கல்வி, அவரே உலகில் தெய்வம்... மொழியும் நாடும் முகத்துக்கு இரண்டு விழிகள் ஆகும் என்று - உணரும் போது உனக்கும் எனக்கும் நன்மை என்றும் உண்டு2... வாழும் உயிரில் உயர்வும் தாழ்வும், வகுத்து வைப்பது பாவம்2... கருணை கொண்ட மனிதரெல்லாம், கடவுள் வடிவம் ஆகும்...
© அடிமைப்பெண் வாலி K.V.மகாதேவன் 🎤 ஜெயலலிதா @ 1969 ⟫


அவ்வாறு தனது உழைப்பையும் கூடத் தரத் தயங்காதவர்கள், அன்புக்கும் வாழ்க்கைமுறைக்கும் உள்ள தொடர்பை முழுவதுமாக அறிந்து தெரிந்தவர்கள்.... அதோடு அன்பிற்கான உயிருக்கும் உடலுக்கும் உள்ள தொடர்பின் பயனைப் புரிந்தவர்கள்...

அடியார் | நல்லவர் | அன்பின் கருவி
(அந்த மனசு இருக்கே - அதான் கடவுள்...!)

அன்போடு இயைந்த வழக்கென்ப ஆருயிர்க்கு
என்போடு இயைந்த தொடர்பு 73


ஆத்திகம் பேசும் அடியார்க்கெல்லாம் சிவமே அன்பாகும்... நாத்திகம் பேசும் நல்லவருக்கோ அன்பே சிவமாகும்... அன்பே சிவம் அன்பே சிவம் என்போம்... அன்பே சிவம் அன்பே சிவம்... இதயம் என்பது சதைதான் என்றால் எரிதழல் தின்றுவிடும்... அன்பின் கருவி இதயம் என்றால் சாவை வென்றுவிடும்... அன்பே சிவம் அன்பே சிவம் என்போம்... அன்பின் பாதை சேர்ந்தவருக்கு முடிவே இல்லையடா... மனதின் நீளம் எதுவோ அதுவே வாழ்வின் நீளமடா... அன்பே சிவம் அன்பே சிவம்...
© அன்பே சிவம் வைரமுத்து வித்யாசாகர் 🎤 கமல்ஹாசன், கார்த்திக் @ 2003 ⟫


அன்பின் பாதை தொடரும்...
நண்பர்களே... தங்களின் கருத்து என்ன...?

புதிய பதிவுகளை பெறுதல் :


தொடர்புடைய எண்ணங்களின் வண்ணங்கள் சில :


முகநூல் மூலம் கருத்துக்களை பகிர :

கருத்துகள்

  1. சிறப்பு.  முதல் குறள் பற்றிய வரிகளை படிக்கும்போது எனக்கு அன்புக்கரங்கள் பாடல் வரிகள் நினைவுக்கு வந்தன.  இரண்டாவது குறளுக்குமே அது பொருந்தும் போல தோன்றியது!

    பதிலளிநீக்கு
  2. வணக்கம் திருக்குறள் பதிவு அருமை. இது நாள் வரை எழுதியது போலவே தொடர்வது மிக அருமை.
    ஓவியம் மிக அருமை.
    பகிர்ந்த பாடல்களும் குறள்களும் மிக மிக அருமை.
    அன்பின் பாதை தொடரட்டும்.
    வாழ்த்துக்கள்.

    திருக்குறளும் பாடல்களும் கேட்கும் போது மனதுக்கு நிறைவு.
    எல்லா பாடல்கள் தேர்வும் அருமை,
    முதல் பாடலும், கடைசி பாடலும் தேர்வு மிக மிக அருமைஅருமை.

    பதிலளிநீக்கு
  3. இதயத்தை சொடுக்கி குறளின் மேன்மையை அறிந்து கொண்டேன்.
    தொழில் நுட்பம் மறக்காது . இருந்தாலும் தொடர்வது நல்லா இருக்கிறது.

    பதிலளிநீக்கு
  4. அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ் ஆர்வலர்
    புன்கணீர் பூசல் தரும்.
    திருக்குறள் ஓவியம் படம் இந்த திருக்குறளை சொல்லி விடுகிறது.

    பதிலளிநீக்கு
  5. ஈகை, அன்பு, கருணை மூன்றும் வேண்டும். வாழைமரம் அதற்கு நல்ல எடுத்துக்காட்டு என்று சொல்கிறீர்கள் என்று நினைக்கிறேன். வாழை மரம் அனைத்து பயனும் உடையது இல்லையா?

    பதிலளிநீக்கு
  6. வாழை மரத்தின் அனைத்து உறுப்புகளும் பயன் படுவது போல் மனிதனும் பிறருக்கு உதவ வேண்டும்.

    பதிலளிநீக்கு
  7. பதிவு மட்டுமல்ல ஓவியங்களும் அருமை நண்பரே

    பதிலளிநீக்கு
  8. வணக்கம் சகோதரரே

    அருமையான பதிவு. பதிலுக்கு எதையும் எதிர்பாரத அன்பு ஒன்றுதான் உலகில் நிரந்தரமானது. அழகாக அன்பைப் பற்றி, அதன் பூரணத்துவம் பற்றி பண்பான திருக்குறளுகளோடு உவமையுடைய நல்ல நல்ல பாடல்களை பகிர்ந்துள்ளீர்கள். பாடல்கள் அனைத்தும் அருமை. முதல் ஓவியமும், தன் அன்பை தன்னைச் சார்ந்த மக்களுக்கு முற்றிலும் வாரி வழங்கும் வாழை மரத்தின் சம்பந்தபட்ட படமும் மனதை கவர்கிறது. தங்கள் திருக்குறளாய்வு முயற்சிகள் வெற்றியடைய மனமாற பிரார்த்தித்துக் கொள்கிறேன். உங்களுக்கு என் அன்பான வாழ்த்துகளும். பாராட்டுக்களும். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  9. அருமையான பதிவு
    இதுநாள் வரை எழுதியது போலவே, தொடரலாம் ஐயா

    பதிலளிநீக்கு
  10. அன்பின் பாதை தொடரட்டும். வாழ்த்துகளும் பாராட்டுகளும்.

    பதிலளிநீக்கு
  11. தகுந்த பாடல்களைத் தேர்ந்து எடுத்தது சூப்பர் செலக்ஷன் . அதிலும் சீர்காழி கோவிந்தராஜன் பாடல் வெகு நாட்களுக்குப் பிறகு கேட்கிறேன்

    பதிலளிநீக்கு
  12. டிடி பழைய படி தொடர்வது நன்றாக இருக்கிறது. தொழில்நுட்பம் செமை. இதயத்தைத் தொட்டால் (அன்பான இதயம் வற்றாத அருவிக்குச் சமம்) கொட்டுகிறது திருக்குறளின் மேன்மை. போகச் சொன்னால் போய்விடுகிறது!

    அன்பு, கருணை, ஈதல் (?) எனது யூகம் தாய்/அன்னை. அதாவது இங்கு அம்மா ஒரு சிறு வட்டத்துள் விட தாய்/மை எனும் உணர்வு உள்ளவர் யாராக இருந்தாலும்...என்பது என் எண்ணம். அதுதான் முக்கியம்.

    கீதா

    பதிலளிநீக்கு
  13. ஓவியம் சிறப்பு. ஓவியம் அதைத்தான் சொல்கிறது. என் கருத்தில் அதை பரந்த நோக்கில் சொல்லியிருக்கிறேன்

    கீதா

    பதிலளிநீக்கு
  14. அன்பே சிவம் பாடல் மிகவும் பொருத்தம் ஜி

     தொழில்நுற்பம் அருமை பிரமிப்பூட்டுகிறது.

    இப்பாதை தொடரட்டும்...

    பதிலளிநீக்கு
  15. குறள்களும் பாடல்களும் அருமை .... அன்பே சிவம்... அந்த பாசக்கார பயபுள்ள மனசுதான் சார் கடவுள்....

    பதிலளிநீக்கு
  16. குறளையும் பாடலையும் பொருத்தும் விதம் வழக்கம் போல் அருமை ,

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

நகுதற் பொருட்டன்று நட்டல் மிகுதிக்கண்
மேற்சென்று இடித்தற் பொருட்டு. (குறள் 784)

நட்புச் செய்துகொள்வது நண்பரோடு சிரித்து மகிழ்வதற்காக மட்டும் அல்ல. மிகுதியாகத் தவறு செய்யும்போது, அவரைக் கடிந்து திருத்துவதற்கே ஆகும்.