🏠 வணக்கம் காப்பகம் நன்றி

தேடல் 🔎



புதிய பதிவுகளை பெற ✉



மிதப்பின்மை (பகுதி 2)

அனைவருக்கும் வணக்கம்... முந்தைய பகுதியை வாசிக்காதவர்களுக்காக இணைப்பு
முதலில் இந்தப்பகுதிக்கு ஒரு பாடல் கேட்டு விடுவோமே...



© நாடோடி மன்னன் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் S.M.சுப்பையா நாயுடு, S.M.பாலகிருஷ்ணன் T.M.சௌந்தரராஜன் @ 1958 ⟫

நல்ல பொழுதையெல்லாம் தூங்கிக் கெடுத்தவர்கள் - நாட்டைக் கெடுத்ததுடன் தானும் கெட்டார் - சிலர் அல்லும் பகலும் தெருக் கல்லாய் இருந்து விட்டு - அதிர்ஷ்டம் இல்லை என்று அலட்டிக்கொண்டார் - விழித்துக் கொண்டோரெல்லாம் பிழைத்துக் கொண்டார் - உன்போல் குறட்டைவிட்டோரெல்லாம் கோட்டைவிட்டார் - தூங்காதே தம்பி தூங்காதே - நீ சோம்பேறி என்ற பெயர் வாங்காதே | போர்ப் படைதனில் தூங்கியவன் வெற்றி இழந்தான் - உயர் பள்ளியில் தூங்கியவன் கல்வி இழந்தான் - கடைதனில் தூங்கியவன் முதல் இழந்தான் - கொண்ட கடமையில் தூங்கியவன் புகழ் இழந்தான் - இன்னும் சில பொறுப்புள்ள மனிதரின் தூக்கத்தினால் - பல பொன்னான வேலையெல்லாம் தூங்குதப்பா...

பொருட்பால் - இயல்: 5.அரசியல் - அதிகாரம்: 54.பொச்சாவாமை (536-540)

மேலும் இந்த அதிகாரத்தில் இழுக்காமை (மறவாமை), வழுக்காமை (தவறாமை), இகழ்ச்சி போன்றவற்றை ஐயன் குறிப்பிடுகிறார்... காலிங்கர் அவர்கள் பொச்சாப்பு என்பதற்கு இகழ்ச்சி என்று பொருள் கொள்கிறார்... இகழ்ச்சி என்பது புகழ்ச்சிக்கு எதிர்ப்பதமானது அல்ல... புறக்கணிக்கும் அலட்சிய மனப்பான்மை... தனது உருவம், கல்வி, அழகு, அதிகாரம், பதவிச் செருக்கு, இன்னும் பல அற்ப காரணங்களாலும், சில மனிதர்களுக்கு இறுமாப்பு வந்து விடுகிறது... துன்பத்தில் ஒருவன் தன் நிலை இழப்பது போல, மிகுந்த மகிழ்ச்சியிலும் தன்நிலை மறந்து போகிறான்... வெற்றி - தோல்வி இரண்டிலும், மனத்தில் சம நிலையோடு இருப்பவர்களே எதிலும் கவனமாக இருக்க முடியும்... அதாவது உண்மையை மெதுவாக உணர்த்தும் உள்மனம், கெடுதலை விரைவாகச் செய்யும் வெளிமனத்தை வென்று சமப்படுத்த வேண்டும்... அவ்வாறானால் வாழ்வில் வெற்றியும் தோல்வியும் வெறும் சொற்களே... இனி குறளின் குரல் :

536 : இழுக்காமை யார்மாட்டும் என்றும் வழுக்காமை வாயின் அதுவொப்பது இல்
உலகத்திலேயே ஈடு இல்லாத பல நன்மைகள் பெற வேண்டுமென்றால், யாரிடத்திலும் எப்பொழுதும் அலட்சியம் காட்டாமல், இகழ்ந்து பேசாமல் இருக்கும் நிலை ஒருவருக்கு வாய்த்தாலே போதும்...

537 : அரியஎன்று ஆகாத இல்லைபொச் சாவாக் கருவியால் போற்றிச் செயின்
அதற்குச் சோர்வு இல்லாமை என்னும் கருவியை, உறுதியுடன் மனதில் வைத்துக் கொண்டு கருத்துடன் செயலாற்றினால், "இது செய்வதற்கு அரிய செயல்" என்று முடிக்க முடியாத செயல் எதுவும் இல்லை...

538 : புகழ்ந்தவை போற்றிச் செயல்வேண்டும் செய்யாது இகழ்ந்தார்க்கு எழுமையும் இல்
முதல் செயலாக, புகழ் பெற்றவர்கள் அறிவுறுத்திய புகழப்படும் செயல்களை இகழாமல், அவற்றை விடச் சிறப்பாகச் செய்ய முயற்சி செய்து சாதிக்க வேண்டும்... அப்படிச் செய்யவில்லை என்றால் எப்போதும் நன்மையே இல்லை...

539 : இகழ்ச்சியின் கெட்டாரை உள்ளுக தாந்தம் மகிழ்ச்சியின் மைந்துறும் போழ்து
அவ்வாறு செய்த சாதனையின் மகிழ்ச்சியிலே திளைத்து மயங்கி ஆணவம் வந்து சேரும்போது, இதே போல் அற்ப சாதனை செய்துவிட்டு, சோர்வினால் நற்பெயர் கெட்டுக் காணாமல் போனவர்களை நினைக்க வேண்டும்...

540 : உள்ளியது எய்தல் எளிதுமன் மற்றுந்தான் உள்ளியது உள்ளப் பெறின்
அதே நினைவுடன் சோர்வினை தூக்கித் தூரப் போட்டு விட்டு, அடுத்து அடைய நினைத்ததைத் தொடர்ந்து நினைத்துக் கொண்டே செயல் ஆக்கம் செய்து கொண்டிருந்தால், எண்ணியதை எளிதாகவே சாதித்துக் கொண்டே இருக்கமுடியும்...


இந்த அலட்சியப் போக்கு ஒரு நாட்டின் தலைமைக்கோ அல்லது வீட்டின் தலைமைக்கோ நீடித்தால் என்னவாகும் என்பதையே இந்த பொச்சாவாமை அதிகாரம் விவரிக்கிறது... இதற்குப் பின் வரும் அதிகாரங்களில் மடியாண்மை (சோம்பலுடைமை), அசாவாமை (சோர்வடையாமை) எனப் பல சொற்களும் உள்ளது... விதியை நம்பும் அலட்சிய மனப்பான்மை உடையவர்களுக்கு, விதி முன் சென்று வென்று விடும் → குறள் 380 | மிதப்பின்மை உடையவர்களுக்கு விதியின் வழியை மாற்றி வெல்லும் திறன் வாய்க்கும் → குறள் 620 | மேலும்....... இணைப்பு

புதிய பதிவுகளை பெறுதல் :


தொடர்புடைய எண்ணங்களின் வண்ணங்கள் சில :


முகநூல் மூலம் கருத்துக்களை பகிர :

கருத்துகள்

  1. அரசியல் குறித்த குறள் விளக்கங்கள் அருமை ஜி.

    நம்மாழ்வரை கண்டு வந்தேன்.

    பகிர்வுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  2. வணக்கம் சகோதரரே
    பதிவு அருமை. அருமையான பல கருத்துக்களை முன் வைத்து சிறந்த பதிவாக உருவாக்கி தந்துள்ளீர்கள். பல வார்த்தைகளுக்கு அர்த்தங்கள் தெரிந்து கொண்டேன். குறள்களும் விளக்கங்களும் ஒரு படிப்பை தருகிறது. இந்தப் பாடல் எனக்கு பிடித்தமான பாடல்.

    விதியே என நொந்து போகாமல், நம்மால் இயன்ற வரை முயற்சிப்பது அதன் பலனை தரும்.... சோர்ந்து கிடக்கும் நம் மனதுக்கும் ஒரு உற்சாகமும் தரும் என்பதை ஆணித்தரமாக உணர வைக்கும் இந்தப்பதிவுக்கு நன்றி. பல நல்ல கருத்துக்களை தந்த உங்களுக்கு மனமார்ந்த வாழ்த்துகளுடன் கூடிய பாராட்டுக்கள். நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  3. வள்ளுவரின் ஓவியம் அவரின் அழியாத கருத்துக்களுக்கேற்ப மிக கம்பீரமாக இருக்கிறது! அதனால் பதிவும் கம்பீரமாக இருக்கிறது!

    பதிலளிநீக்கு
  4. சிறப்பான பதிவு. குறள்களுக்கான விளக்கமும் நன்று. தொடரட்டும் குறளமுதம்.

    பதிலளிநீக்கு
  5. பதிவு அருமை.
    பொச்சாவாமை அதிகாரம் மூலம் ஐயன் சொல்லும் கருத்துக்களை அழகாய் விளக்கமாய் சொன்னீர்கள்.
    பகிர்ந்த பாடல் அருமை.

    இழுக்காமை, வழுக்காமை, இகழ்ச்சி போன்றவற்றை ஐயன் சொன்னதை விரிவாக அருமையாக புரியும்படி சொன்னீர்கள். மீண்டும் பொச்சாவாமை அதிகாரத்தை படித்தேன்.


    இப்போது உள்ள கால கட்டத்தில் ஏற்படும் சோர்வை , மனகலக்கத்தை உதறி விட்டு அடுத்து என்ன செய்ய வேண்டும் என்பதை ஒவ்வொருவரும் சிந்திக்க வேண்டும் .

    இன்பத்தில் லயித்து கடமையை மறப்பதும், துன்பத்தில் துவண்டு கடமையை மறப்பதும் கூடாது .


    380 வது குறளில் சொல்வது போல் விதி என்று சோர்ந்து போய் இருக்காமல்620 வது குறளில் சொவது போல் மனதளர்ச்சி இல்லாமல் உழைத்தால் முன்னேறலாம்.
    விதியை மதியால் வெல்லலாம்.
    வாழ்க வளமுடன்.

    பதிலளிநீக்கு
  6. வழக்கம் போல் என்று சொன்னால் அது உங்கள் எழுத்துக்கு கொடுக்கும் மரியாதையில்லை... மிகச் சிறப்பான பகிர்வு...
    ஒவ்வொரு பதிவுக்கும் தங்களின் உழைப்பு வியக்க வைக்கிறது...
    குறள் பற்றி அறியும் முன் தாங்கள் எழுத்தில் செய்யும் ஜாலங்களை அறிந்து கொள்ள வேண்டுமெனத் தோன்றுகிறது.
    அருமை அண்ணா.

    பதிலளிநீக்கு
  7. இந்த எழுத்துரு கவர்கிறது அண்ணா... அலுவலகத்தில் இருந்து கருத்திட்டதால் வருகிறது போலும்... இங்கும் நிரந்தரமில்லை... விரைவில் வேறொரு இடத்துக்கு அனுப்பிருவானுங்க... அரசு அலுவலகம்... இணையமெல்லாம் கொடுக்கமாட்டானுங்க... கண்ணுல எண்ணெய்ய விட்டுக்கிட்டு வேலை செய்யின்னு நிப்பானுங்க... :(

    பதிலளிநீக்கு
  8. வெற்றி தோல்வி இரண்டிலும் மனச் சமநிலை
    அருமை ஐயா

    பதிலளிநீக்கு
  9. அன்பு தனபாலன்
    இனிய காலை வணக்கம்.
    பட்டுக் கோட்டையார் பாடல் எப்போதும் போல் மனதை உற்சாகத்தில்
    அழுத்தி செயல் படு என்று கட்டளை இடுகிறது.
    இழுக்காமை என்று ஒரு சொல் இருப்பதே
    இப்போதுதான் தெரியும்.
    அதுவும் பதிவில் நீங்கள் சொல்லும் ஒவ்வொரு கருத்தும்
    மனத்தின் ஒவ்வொரு நிலையையும்

    அருமையாகப் படம் பிடிக்கிறது.

    அழுக்காறு இல்லாமல்,
    சாதித்தவர்களைப் போற்றுவதும்,
    அவர்களைப் போல நாமும் செய்ய வேண்டும் என்ற உந்துதல்
    பெறுதலும்
    உங்கள் எழுத்தில் வள்ளுவர் ஐய்யாவின் குறளாக
    வருகின்றன.நன்றி தனபாலன்.

    பதிலளிநீக்கு
  10. குறள் விளக்கம் அருமை. வெற்றி தோல்வி இரு நிலைகளிலும் சமமான மன நிலை மிக அவசியம்.

    பதிலளிநீக்கு
  11. கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றத் தவறி மறக்கும் ஆட்சியாளர்களுக்கு ‘பொச்சாவாமை’ அதிகாரம் ஒரு பாடம். வழக்கம் போல் தங்களின் விளக்கம் அருமை.

    பதிலளிநீக்கு
  12. பட்டுக்கோட்டையார் பாடல் எம்ஜிஆருக்குத்தான் பயன்பட்டது..

    பதிலளிநீக்கு
  13. அரியஎன்று ஆகாத இல்லைபொச் சாவாக்
    கருவியால் போற்றிச் செயின்.

    அஹா ...அஹா ... அத்தனை கடின காரியங்களையும் சோர்வில்லாமல் செய்து முடிக்க இந்த ஒரு குறள் போதும் ...

    பதிலளிநீக்கு
  14. குறளில் உள்ள நுணுக்கமான விஷயங்களை தெரிந்ந்து கொள்வதற்கு உதவுகிறது உங்கள் பதிவுகள்.

    பதிலளிநீக்கு
  15. நமது வலைத்திரட்டி: வலை ஓலை

    அருமை. ஊக்கமளிக்கும் பதிவு. மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

நகுதற் பொருட்டன்று நட்டல் மிகுதிக்கண்
மேற்சென்று இடித்தற் பொருட்டு. (குறள் 784)

நட்புச் செய்துகொள்வது நண்பரோடு சிரித்து மகிழ்வதற்காக மட்டும் அல்ல. மிகுதியாகத் தவறு செய்யும்போது, அவரைக் கடிந்து திருத்துவதற்கே ஆகும்.