மிதப்பின்மை (பகுதி 1)

வணக்கம் நண்பர்களே... கேள்வி கேட்டேன்... ஒருவர் முதல் வரியிலேயே பதிவிற்கான பொருளைச் சொல்லி விட்டார்கள்... அதற்கு மறுமொழி எழுதுவதற்குப் பதிலாக இந்தப்பதிவு...!


முந்தைய பதிவின் கேள்வி : // பொச்சாவாமை அதிகாரத்தில் உள்ள அனைத்து குறள்களுக்கும், பொச்சாப்பு என்பதை மறதி என்று பொருள் கொண்டிருக்கும் பலரின் உரைகளும் ஏற்புடையதாக இல்லை... பொச்சாப்பு என்றால் என்ன பொருள்...? // →திருமிகு கோமதி அரசு← அம்மா அவர்கள் முதல் ஒரு வரியிலேயே சொல்லி விட்டார்கள்... முடிவிலும் ஒரு வரி... நன்றி... அவர் சொன்னது எங்கெல்லாம் வருகிறது என்று, இன்று வாசிக்கப் போகிறோம்... கருத்துரை இருக்கும் இடத்திற்கே செல்ல →இங்கே← சொடுக்குக...!

ச.தண்டபாணி தேசிகர் அவர்கள் : பொச்சாப்பு சோர்வாய் வெளிப்பட்டுக் காலத்தோடு செய்யவேண்டிய செயலையும் இது என்னாற்றற்குத் தாழ்ந்தது; இலேசானது; என்று எண்ணச் செய்யும் ஆலசியம் ஆகும்... "இப்போதென்ன அவசரம்...?" என்ற அலட்சியறிவு தான் இது... இதுவே பொச்சாப்பு... மறதியன்று... கடமைகளைச் செய்வதில் ஆர்வமில்லாமல், ஈடுபாடில்லாமல் இருப்பதால், அதை ஒரு பொருட்டாகவே மதிக்காமல் இருப்பதே பொச்சாப்பு... மறதி என்பதும் ஒரு அறிவு...! மறதி அறிவு தேவையான நேரத்தில் வெளிப்படாமையும் குறிப்பது தான்... சுயநலத்திற்காகப் பொய் வளர்ப்பதற்கும், பலவற்றிலிருந்து தப்பித்தலுக்கும் மாறி விட்டது... யாரால்...? என்றையிலிருந்து...? - தெரியவில்லை... ஒருவேளை, இந்த அதிகாரம் அரசு இயலில் வருவதால், ஐயன் காலத்தில் இப்படி ஒரு அரசரும், அவருக்குத் துதி பாடும் மூடர் கூட்டமும் இருந்திருக்கக்கூடும்...! ம்... சரி, இந்தப் பகுதிக்கேற்ப ஒரு பாடலைத் தொடர்ந்து 'மனதின் குரல்' ஐயகோ... குறளின் குரல் ஆரம்பமாகும்... கீழுள்ள பாடலின் சில சொற்களும் மாறியது காலத்தின் கோலம்...!


©பச்சை விளக்கு கண்ணதாசன்(மன்னிப்பாராக) விஸ்வநாதன்-ராமமூர்த்தி T.M.சௌந்தரராஜன் @1964⟫

ஆண்டான் அடிமை மேலோர் கீழோர், என்பது மாறாதோ...? பொய்கள் இல்லாமல், மனங்களை ஆளும், காலமும் வாராதோ...? என்றொரு காலம் ஏங்கியதுண்டு, இன்று கிடைத்தது பதில் ஒன்று... இன்று எவனும், பேதம் வளர்த்தால், ஐந்து வருடம் துட்டுண்டு... ஐயன் பிறந்தது அன்று, நல்ல குறளும் கிடைத்தது என்றும்... வாழப் பிறந்தது அன்று, யாவும் கெட்டது இன்று... பலரும் வாழும் இனிய நாடு, கோவிலுக்கிணையாகும்... குறை தெரியாமல் உறவு கொண்டாலே வாழ்வும் சுவையாகும்... படித்த கீழோர் நிறைந்த நாட்டில், பார்க்கும் யாவும் "ஒரே" மடமை...
கெட்ட மனமும் அரக்கக் குணமும், கெடும் நாட்டின்
தனி உடைமை...

பொருட்பால் - இயல்: 5.அரசியல் - அதிகாரம்: 54.பொச்சாவாமை (531-535)

531 : இறந்த வெகுளியின் தீதே சிறந்த உவகை மகிழ்ச்சியிற் சோர்வு
அளவிற்கு மீறிய கோபம், அதிக கேடு உண்டாக்குவதை விட, மிகுந்த மகிழ்ச்சிக் களிப்பால் வரும் அலட்சிய மனப்பான்மை, செய்ய வேண்டிய கடமைகளைச் செய்யவிடாமல் தளர்வு அடையச் செய்து, அதிக துன்பங்களை வாரி வழங்கும்...!

532 : பொச்சாப்புக் கொல்லும் புகழை அறிவினை நிச்ச நிரப்புக்கொன் றாங்கு
இதற்குக் காரணமான பாராட்டு மழையோ எதிர்பாரா வெற்றிகளோ, மிதப்பிலேயே மிதக்க வைக்கும்... அவ்வாறே திரிந்தால், தொடர்ச்சியான வறுமை ஒருவரின் அறிவினை அழிப்பது போல, அவரின் நற்பெயரையும் கெடுக்கும்...!

533 : பொச்சாப்பார்க் கில்லை புகழ்மை அதுஉலகத்து எப்பால்நூ லோர்க்கும் துணிவு
அதோடு மிகுந்த மகிழ்ச்சிச் சோர்வுடையவருக்கு நற்பெயர் பொருந்திய வாழ்வும் இல்லை... "அடுத்து என்ன...? அடுத்தது என்ன...?" என்று சென்று சாதித்த, உலகத்திலுள்ள எத்துறை சார்ந்த அறிஞர்களும் சொன்னது...

534 : அச்ச முடையார்க்கு அரணில்லை ஆங்கில்லை பொச்சாப் புடையார்க்கு நன்கு
மனதில் பயம் இருக்கிறவருக்கு எத்தனை பாதுகாப்பு இருந்தும் பயனில்லாதது போல, மிகுந்த மகிழ்ச்சியால் ஆணவம் வந்து கடமையைச் செய்யாதவருக்கு, நல்ல நிலைமைகள் வாய்த்தும் அவற்றால் நன்மை இல்லை...

535 : முன்னுறக் காவாது இழுக்கியான் தன்பிழை பின்னூறு இரங்கி விடும்
கடமையில் கருத்துடன் இல்லையெனில், இவ்வாறாகி விடுமென்று முன்னாடியே தன்னை காத்துக் கொள்ளாதவர், தீமைகள் வரவர கடமைகளைப் புறக்கணித்த குற்றத்திற்குப் பலமடங்கு வருந்துவார்...


இங்குள்ள 3 குறள்களில் வருவது போல், மற்ற அதிகாரங்களில் 4 குறள்களில் 'பொச்சாப்பு' என்பதின் பொருளை முந்தைய பதிவில் வாசித்திருப்பீர்கள்.... பொச்சாவாமை என்பதை மிதப்பின்மை எனலாம்... இரண்டாவது பகுதியில் இன்னொருவர் உரையில் சொன்ன பொருளின் விளக்கங்களோடு, அடுத்த பதிவில் சந்திப்போம்...! நன்றி... (பிற்சேர்க்கை : நேற்று திருமிகு வே. நடனசபாபதி ஐயா சொல்லி விட்டார்... கருத்துரை : →இங்கே← நன்றி ஐயா...)

புதிய பதிவுகளை பெறுதல் :


தொடர்புடைய எண்ணங்களின் வண்ணங்கள் சில :


முகநூல் மூலம் கருத்துக்களை பகிர :

கருத்துகள்

 1. கோமதி அக்காவுக்கு வாழ்த்துகளும், பாராட்டுகளும்.

  பதிலளிநீக்கு
 2. விளக்கம் நன்று.

  சுட்டியை சொடுக்கினால் பதிவுக்கு சென்றாலும், சரியாக கோமதி அரசு அவர்களின் கருத்துரைக்கு செல்கிறதே... அருமை.

  பாடல் வரிகளை மாற்றி தந்தது சிறப்பாக இருக்கிறது ஜி

  தொடரட்டும் தங்களது பதில் பதிவுகள்.

  பதிலளிநீக்கு
 3. ஓ! டிடி சென்ற பதிவில் உங்கள் கேள்வியை எப்படியோ மிஸ் செய்திருக்கிறேன். இல்லை என்றால் குறள் போய்ப் பார்த்திருந்திருப்பேன்.

  பொச்சாப்பு/பொச்சாவாமை என்பதைப் பற்றித் தெரிந்து கொண்டேன். குறள்களின் விளக்கமும் சிறப்பு. வரிகளை மாற்றிப் போட்டு எழுதியிருப்பதும் பொருந்திப் போகிறது டிடி.

  நீங்கள் மறதி என்று தலைப்பிட்டு எழுதியதால் சற்றுப் புரியாமல் நான் அதைப் பற்றியே யோசித்தேன்.

  நல்ல பதிவு டிடி

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. "என்னது மறதியா...?" என்கிற தலைப்பைப் பார்த்து சற்றே குழப்பம் அடைந்து விட்டீர்கள்... சரி அதை விடுங்கள்... சில அதிகாரங்கள் மற்றும் குறள்கள் - அதற்கான உரைகள் - சில + பல முரண்பாடுகள் உள்ளன; உரைகளில் தான் - குறள்களில் இல்லை... இது போலச் சிலவற்றைக் குறித்து வைத்துள்ளேன்... இந்த அதிகாரத்தின் பலரின் உரைகள் உறுதியாக என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை... ஆனால் இருவரின் உரைகள் தெளிவாக இருந்தன... அவை "பொச்சாப்பு" என வரும் மற்ற அதிகாரங்களில் உள்ள குறள்களில் சரியாகவே உள்ளன... பிரபலமான உரைகளை மட்டும் வருங்காலத்தில் வாசிப்பவர்கள் நிலை...? ம்...

   நீக்கு
 4. இங்கே என்பதைத் தொட்டால் கோமதிக்காவின் கருத்திற்குப் போகுது அட!

  கோமதிக்காவின் கருத்து சூப்பர்.

  கீதா

  பதிலளிநீக்கு
 5. குறள்களும், பொருள்களும் சிறப்பு.  கோமதி அக்கா கமெண்ட்டுக்கு நேராகச் செல்லும் வண்ணம் அமைத்திருக்கும் திறமைக்குப் பாராட்டுகள்.  அதேபோல "வே. நடனசபாபதி ஐயா சொல்லி விட்டார்" என்பதை அழுத்தி அழுத்திப் பார்த்தேன்.   இங்கு அங்கு செல்லவில்லை!  (ஆனால் அது வெளியிடப் பட்டபோதே படித்துவிட்டேன் என்பது வேறுவிஷயம்) 

  காலை நான் இட்ட பின்னூட்டத்தை வெளியிடவேண்டாம் என்று விட்டு விட்டீர்கள் போல!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஸ்ரீராம் சார் அப்படியெல்லாம் இல்லை... வழக்கமாகக் கருத்துரை மின்னஞ்சல் மூலமாக கருத்துரைக்கான தகவல் கைப்பேசிக்கு(ம்) வந்துவிடும்... உடனே வெளியிட்டு விடுவேன்... முதல் கருத்துரை வரவில்லையே என்று நினைத்துக் கொண்டிருந்தேன்... கைப்பேசியில் Google Chrome-ல் Bookmark செய்து வைத்துள்ள வலைப்பூ பக்கம் பார்த்திருந்தால் அனைத்து கருத்துரைகளும் தெரிந்திருக்கும்... அதைச் செய்யவில்லை, மன்னிக்கவும்... இப்போது வெளியிட்டு விட்டேன்... ஆம், VNS ஐயாவின் கருத்துரை இணைப்பையும் இணைக்க வேண்டும்... ஏனென்றால் அவர் சொன்ன ஒரு முக்கியமான சொல் தான், அடுத்து 5 குறள்களில் இரு இடத்தில் வரும்... அடுத்த பகுதிக்கும் மிகவும் உதவும்... இப்போது அதையும் இணைத்து விட்டேன்... சுட்டிக் காட்டியமைக்கு மிக்க நன்றி...

   நீக்கு
 6. சுட்டி என் பின்னூட்டத்திற்கு போகும் படி அமைத்து இருக்கும் தொழில் நுட்பம் அருமை.

  உங்கள் திறமைகளை வளர்த்து கொண்டே போகிறீர்கள்.

  எல்லோரும் பாராட்டும் படி நான் ஒன்றும் சொல்லவில்லை திருக்குறளில் திருவள்ளுவர் சொன்னதை சொல்லி இருக்கிறேன். நீங்கள்
  பொச்சாமை அதிகாரம் என்று சொல்லி விடதால் அதை படித்தேன்.
  5 குறள்களின் விளக்கமும் அருமை.

  538 :அறநூலார் புகழ்ந்து கூறிய செயல்களை விடாமல் செய்ய வேண்டும் என்கிறார்.
  537 : குறளில் மறவாமை என்னும் கருவி கொண்டு கடமைகளை சரிவரச் செய்ய வேண்டும் அப்படி செய்து வந்தால் செய்வதற்கு அருமையானவையென்று கைவிடும் செயல்கள் எவையும் இருக்காது என்கிறார். வள்ளுவர்.
  539 : குறளில்
  மகிழ்ச்சியால் செருக்கடையும் போது, அவ்வாறு சோர்ந்திருந்த காரணத்தால் முறகாலத்தில் அழிந்தவரை நினைத்துப் பார்க்க வேண்டும்.
  என்கிறார்.

  உங்கள் எல்லோருக்கும் நன்றி.

  பழைய பாடலை மாற்றி அமைத்து எழுதி இருப்பது நன்றாக இருக்கிறது.

  பதிலளிநீக்கு
 7. மடி இன்மையில் வரும் 605 வது குறளும்
  அருமையான கருத்தைச் சொல்கிறது.
  சோம்பலும், காலம் நீடித்துக் காரியம் செய்யும் குணமும் , மறதியும் , உறக்கமும் ஆகிய நான்கு குணங்களும் அழியும் இயல்புடையார் விரும்பி ஏறும் மரக்கலமாகும் என்கிறார் திருவள்ளுவர்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இந்தக் குறளுக்கு எழுதிய ஒரு பதிவு (கில்லர்ஜி சொன்ன சிக்னல் பதிவு) தான், கடந்த இரு பதிவிற்கும் காரணம்... நன்றி அம்மா...

   நீக்கு
 8. ஏதோ ஜி.பி.எஸ்., கருவி பொருத்தியதுபோல், நேராகப் போய் சகோதரியின் கருத்துரையில் மிகச் சரியாக நிற்கும் வித்தையைக் கண்டு வியந்தேன்
  அதனால்தான் தாங்கள் வலைச் சித்தர்
  நன்றி ஐயா

  பதிலளிநீக்கு
 9. அன்பு தனபாலன்,
  தங்கள் தொழில் நுட்பம் மீண்டும் மீண்டும் வியக்க வைக்கிறது.

  பொச்சாப்பு ,பொச்சாவாமை
  இரு வார்த்தைகளும் இப்போது புரிகிறது.
  Procrastination.
  எதையும் உடனே செய்யாமல் ஒத்திப் போடுவது.
  அலட்சியப் போக்கு,
  முடிவெடுக்க இயலாமை,முடியாமை
  எல்லா ஆமைகளும் வாழ்வில் நம்மை முடக்கும் செயல்களாகும்.

  இப்போதுதான் முதல் பதிவின் அர்த்தம் புரிகிறது.
  தங்கச்சி கோமதியின் தமிழ்ப்புலமை
  மனதுக்கு மிகப் பெருமை.
  கவிஞர்பாடலும் அதற்கு இன்றைய சீர்கேட்டையும் நீங்கள் கொடுத்திருப்பது
  நல்ல உதாரணம்.
  நிலை மாறும் என்று நம்புவோம்.

  பதிலளிநீக்கு
 10. புதிய புதிய கருத்துக்கள். திருக்குறள் விளக்கங்கள் அருமை. நன்றி

  பதிலளிநீக்கு
 11. குறளுக்கு விளக்கம் கூறும் உங்களின் அறிவைக் கண்டு வியப்பதா? தொழில்நுட்பத்தைக் கண்டு வியப்பதா? முனைவர் பட்ட ஆய்வு மேற்கொள்ளும் அளவிற்கு நுணுகிச் செல்லும் விதத்தை வியப்பதா?....மொத்தத்தில் வளரும் ஆய்வாளர்களும், மாணவர்களும் உங்களிடமிருந்து அதிகம் கற்றுக்கொள்ள வேண்டியுள்ளது, என்னையும் சேர்த்து.

  பதிலளிநீக்கு
 12. உங்கள் பதிவு சிறப்பாக இருக்கிறது. பொச்சாவாமை பற்றிய பொருள் இப்போதுதான் அறிகிறேன். குறள்கள் மற்றும் பாடல் தேர்வு சிறப்பு. நீங்களும் சிறிது மாற்றி எழுதியிருப்பதைப் பார்க்கிறேன். நன்றாக இருக்கிறது.

  சகோதரி கோமதி அரசு அவர்களுக்கும், திரு வே நடனசபாபதி அவர்களுக்கும் வாழ்த்துகள்.

  இன்றைய என் பதிவில் உங்கள் கருத்து மிக அழகாகக் குறள்கள் மேற்கோள் காட்டிச் சொல்லியிருக்கிறீர்கள் டிடி

  துளசிதரன்

  பதிலளிநீக்கு
 13. குறளும் அதற்கான விளக்கமும் நன்று.... கேள்வி பிறந்தது... அழகிய பாடல்..

  பதிலளிநீக்கு
 14. வணக்கம் சகோதரரே

  பதிவு அருமை. வழக்கம் போல் குறள்களும், அதன் விளக்கங்களும், நன்றாக உள்ளது.

  கேள்வி பிறந்தது...பாடல் இனிமை. அதன் வரிகளை மாற்றி இக்கால சூழலுக்கு ஏற்றபடி தந்திருப்பதும் அருமை.

  சகோதரி கோமதி அரசு அவர்களின் கருத்துரையை மட்டும் தேடாமல் சென்று காண நீங்கள் தந்திருக்கும் புது விதமான தொழிற் நுட்பம் நன்றாக உள்ளது. ஒவ்வொரு பதிவிலும் ஒவ்வொரு மாற்றங்களாக தங்கள் முயற்சிகள் வியக்க வைக்கிறது. .

  இந்தப் பதிவுக்கு வர எனக்கு கொஞ்சம் காலதாமதம் ஆகிவிட்டது மன்னிக்கவும். பகிர்வுக்கு மிக்க நன்றி.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
 15. எனது பின்னூட்டம் பற்றி குறிப்பிட்டதற்கு நன்றி திரு திண்டுக்கல் தனபாலன் அவர்களே! மடியின்மை அதிகாரத்தில் 605 ஆவது குறளில் அய்யன் வள்ளுவன் மறவி என்று மறதியைக் குறிப்பிட்டிருப்பதை சுட்டிக் காட்டியதற்கு நன்றி!

  அடுத்து ;ஆள்வினையுடைமை; அதிகாரத்தில் வரும் சோம்பலைக் குறிக்கும் அசாவாமை. மடி போன்ற சொற்கள் பற்றி எழுத இருக்கிறீர்கள் என எண்ணுகிறேன். படிக்க காத்திருக்கிறேன்.

  பதிலளிநீக்கு
 16. கண்ணதாசன் பாடல் கேட்பதற்கு நன்றாகத்தான் இருக்கிறது.. நடப்போடு பார்க்கும்போது....சோர்வாக இருக்கிறது

  பதிலளிநீக்கு
 17. பதிவு அருமை.......... நீண்ட காலம் கழித்து வருகிறேன்.... தமிழ்மணத்திற்கு என்ன ஆச்சு அது செயல்படவில்லையா நண்பரே அல்லது என்னை மட்டும் ப்ளாக் ஏதும் பண்ணி வைத்திருக்கிறார்களா? அங்குள்ள பதிவுகளை என்னால் பார்க்க படிக்க முடியவில்லை

  பதிலளிநீக்கு
 18. சிறப்பான பகிர்வு. தொழில்நுட்பத்தில் கலக்குகிறீர்கள். தொடர வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
 19. அருமை. பொச்சாப்பு என்ற சொல் முதல் குறளில் பயன்படுத்தப்படவில்லை. ஆனால் அதன் பொருள் என்ன விளக்கப்பட்டுவிடுகிறது. அதன் பின்னர் அடுத்த குறளில் அவ்வார்த்தையை பயன்படுத்தி இருப்பது சிறப்பு. டிடியின் விளக்கங்களும் தற்காலத்துக்கு ஏறப வழக்கத்தில் உள்ள மிதப்பு என்ற வார்த்தை பயன்படுத்தியதும் புத்தி கூர்மையைக் காட்டுகிறது.

  பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

நகுதற் பொருட்டன்று நட்டல் மிகுதிக்கண்
மேற்சென்று இடித்தற் பொருட்டு. (குறள் 784)

நட்புச் செய்துகொள்வது நண்பரோடு சிரித்து மகிழ்வதற்காக மட்டும் அல்ல. மிகுதியாகத் தவறு செய்யும்போது, அவரைக் கடிந்து திருத்துவதற்கே ஆகும்.