🏠 வணக்கம் காப்பகம் நன்றி

தேடல் 🔎



புதிய பதிவுகளை பெற ✉



இசையை தேடி ஒரு பயணம்...

அனைவருக்கும் வணக்கம்... உலகத்தில் யாருக்குத் தான் புகழ் பிடிக்காது...? நானும் தேடினேன், ஆனால் புகழை அல்ல...! வாங்க பேசுவோம்...!

புகழ் அதிகாரத்தின் விளக்கத்தைக் குறளின் குரலாக வந்த பகிர்வுகளை வாசித்திருப்பீர்கள்... என்னைப் பொறுத்தவரை இசை என்பது, எவ்வாறு இரக்கம் என்று தீர்மானித்த பயணம் இது...! எனக்குள் நடந்த பல சிந்தனைகளை ஒரு பயணமாகச் சொல்கிறேன்... பல வருடப் பயணத்தைச் சுருக்கமாகக் கொடுத்துள்ளேன்...(!) முதல் குறளிலுள்ள 'இசைபட' என்றவுடன் ஞாபகம் வந்த பாடல் :-
© மன்னாதி மன்னன் கண்ணதாசன் விஸ்வநாதன்-ராமமூர்த்தி 🎤 T.M.சௌந்தரராஜன் @ 1960 ⟫ கனகவிஜயரின் முடித்தலை நெறித்து, கல்லினை வைத்தான் சேர மகன்... இமய வரம்பினில் மீன்கொடி ஏற்றி, இசைபட வாழ்ந்தான் பாண்டியனே... ஒருவேளை பாண்டியனுக்கு இசை (Music) ஆர்வம் நிறைய இருக்குமோ...? இது போல் ஏதாவது ஒன்றில் சிறந்து விளங்கினால், புகழ் வந்து விடுமோ...? இந்த எண்ணம் சரியில்லையே... ம்... வாழ்ந்தவர் கோடி மறைந்தவர் கோடி, மக்களின் மனதில் நிற்பவர் யார்...? மக்கள் மனதில் நின்றால் தானே 'புகழ்'...? "இசைபட வாழ்ந்தான்" என்றால்...? அன்பா...? உயிரினும் மேலான ஒழுக்கமா...? ஒரு வேளை...

'ஈதல் இசைபட' என்பதை 'இசைபட ஈதல்' என்று, எடுத்துக்கொள்ள வேண்டுமோ...? மனதார உதவி செய்து வாழ்ந்தால் தான், வாழ்வதற்கான அர்த்தமோ...? மனதார உதவி என்றால் என்ன...? இது சரியில்லை... 'பாத்திரமறிந்து பிச்சையிடு' என்கிற பழமொழிக்கு வேண்டுமானாலும் ஓரளவு இது சரிப்பட்டு வரும்... இதைவிடச் சிறப்பாகப் பலவிதங்களில் "ஈகை" அதிகாரத்தில் சொல்லி விட்டாரே வள்ளுவர்... அடுத்த அதிகாரத்தில் மீண்டும் எதற்கு...? அதே சமயம் இசை எனும் சொல், முடிவில் உள்ள மூன்று குறள்களிலும் வருகிறது... அங்கும் விளக்கம் சரிப்படவில்லை... ம்...

தொலைத்த இடத்தில் தேடுவது தான் சரி, இசையை மற்ற குறள்களிலே தேடுகிறேன்... படைச்செருக்கு அதிகாரத்தில் ஐந்தாவது முறையாக வருகிறது... சுழலும் இசைவேண்டி வேண்டா உயிரார் கழல்யாப்புக் காரிகை நீர்த்து (777) விளக்கம்:- உலகைச் சூழ்ந்து பரவும் புகழையே விரும்பி, தன் உயிரைப் பற்றிக் கவலைப்படாமல் போரிடும் ஆண்மையுள்ள மறவரின் காலிலே, விளங்கும் சுழல்களே அழகு உடையதாகும்... உலகத்தையே ஆட்கொள்ளும் பெருமை அல்லது சிறப்பு என்று புரிகிறது... அப்படியென்றால் 'புகழ்தல்' எனில்...

அனைத்து பெருமைகளையும் விளக்கமாக விரிவாகப் போற்றிச் சொல்லும் "பெருமை பேசுதல்" என்பதே... ஆனால், இன்னும் இசை என்பதற்குச் சரியான பொருள் பிடிபடவில்லை... (நண்பர்களே... இத்துடன் புகழ் அதிகாரத்தை உரையாடலாக எழுத வேண்டும் என்கிற எண்ணத்தை விட்டுவிட்டேன்... சில வருடங்கள் கழித்து மீண்டும் சிந்தனை...) சிந்தனையில் ஓடும் பாடலில், விடை ஏதேனும் கிடைக்குமா...?

உறங்கையிலே பானைகளை உருட்டுவது பூனை குணம்... காண்பதற்கே உருப்படியாய் இருப்பதையும் கெடுப்பதுவே குரங்கு குணம்... ஆற்றில் இறங்குவோரைக் கொன்று இரையாக்கல் முதலை குணம்... ஆனால்...? இத்தனையும் மனிதரிடம் மொத்தமாய் வாழுதடா...! பொறக்கும்போது பொறந்த குணம் போகப் போக மாறுது...!2 எல்லாம் இருக்கும்போது பிரிந்த குணம், இறக்கும்போது சேருது...!2 - மனிதன் பொறக்கும்போது, மனிதன் பொறக்கும்போது பொறந்த குணம் போகப் போக மாறுது...!© சக்கரவர்த்தித் திருமகள் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் G.ராமநாதன் 🎤 சீர்காழி கோவிந்தராஜன் @ 1957 ⟫

இறக்கும்போது சேர்வதால் என்ன பயன்...? பிறப்பின் பயன் தான் என்ன...? அதற்குள் "தோன்றின் புகழொடு தோன்றுக அஃதிலார் தோன்றலின் தோன்றாமை நன்று" 236-வது குறளுக்கு வந்து விட்டோமே...! முதல் குறளிலுள்ள இசை என்பதற்கே இன்னும் அர்த்தம் பிடிபடவில்லையே, அதற்குள் புகழ் எனும் சொல்லிற்கு விடை தேடுவதா...? குழப்பம்... மனம் செல்லும் பாதையிலே சிறிது சென்று பார்த்தால் குழப்பம் தீருமோ...?

திருக்குறளுக்கு முதலில் உரை எழுதிய மணக்குடவர் "இஃது இவர் பிறப்பதினும் பிறவாமை நன்றென்றது" என்று இந்த குறளுக்கு, உரை எழுதவில்லையே...! அது :- ஈட்டம் இவறி இசைவேண்டா வாடவர் தோற்றம் நிலக்குப் பொறை (1003) எப்போதோ படித்த ஞாபகம் வருதே... அடடா...! ஏற்கனவே குறளின் குரலாக எழுதிய அதிகாரம் ஆச்சே...! (இணைப்பைக் கொடுக்கிறேன்... இங்கே சொடுக்கி பிறகு வாசியுங்கள்... நம் விசயத்திற்கு வருகிறேன் !) அப்போது ஏன் இசைவேண்டா என்னவென்பதை ஆழமாகச் சிந்திக்க மறந்தேன்...? ம்... இப்போது சிந்திக்க நேரம் வந்து விட்டது... ஆறாவது முறையாக இங்கு "இசை" எனும் சொல் வருகிறது...! 1330 குறள்களில் வேறு எங்கேனும் "இசை" எனும் சொல் இருக்கிறதா...?

நசைஇயார் நல்கார் எனினும் அவர்மாட்டு இசையும் இனிய செவிக்கு (1199) தனிப்படர்மிகுதி அதிகாரத்தில் வருகிறது... "குடும்பத்திற்காகப் பொருள் தேடிச் சென்ற என் இனியவர், விரைந்து வந்து அன்பு காட்டவில்லை என்றாலும் அவரைப் பற்றிய புகழைக் கேட்டாலும் செவிக்கு இனிமையாக உள்ளது..." என்கிறார் தலைவி... அந்தப் புகழ் என்னவென்று தெரிந்தால் தானே எனக்கும் இனிமையாக இருக்கும்...? சரி, இசை எனும் சொல் ஏழு குறள்களில் வருகிறது... (இசைபட, இசைஎன்னும், இசையிலா, இசையொழிய, இசைவேண்டி, இசைவேண்டா, இசையும்) இசை தான் புகழா...? ஆமாம், இந்த அதிகாரத்திற்கு ஏன் 'புகழ்' என்று பெயர்...? புகழ் பெற்றவர்கள் அனைவரும் புகழ் என்பதையே அறியாதவர்கள்... அறிந்தாலும் அதைப்பற்றி தெரிந்து புரிந்து கொள்ள முயற்சிக்காமல் புறம் தள்ளியவர்கள்... அப்படியென்றால் அவர்களின் எந்த உணர்வு குணமாக மாறுகிறது...? அந்த குணமே ஒரு பண்பாகவும் அமைந்து விடுகிறதே...! திரைப்படப்பாடல் வரிகளும் சிறிது தானே சிந்தனையைக் கொடுக்கிறது... ம்... அடப்போங்கப்பா, இசையும் வேண்டாம், புகழும் வேண்டாம்...!

சலிப்பு வரக்கூடாதே... தேடுதலுக்குச் சலிப்பு ஒரு முற்றுப்புள்ளி ஆயிற்றே... ஆமாம், இசைக்கு மயங்காதவர்கள் யாரும் உண்டோ...? "இசையால் வசமாகா இதயம் எது...? இறைவனே இசை வடிவம் எனும் போது - தமிழ் இசையால் வசமாகா இதயம் எது...?" அதானே...?! "இசை கேட்டால் புவி அசைந்தாடும், அது இறைவன் அருளாகும்" எனும் பாடல்கள் மனதில் ஒலிக்கிறது... "அடியேனுக்கு அருள் கிடையாதா தெய்வப் புலவரே... இசைந்து கேட்கிறேன், பதில் சொல்...!" ஹா... ஹா... எனது புலம்பலிலேயே சிறிது வெளிச்சம் தெரிகிறது...! மனிதன் உட்பட அனைத்து உயிரினங்களையும் இசைய வைக்கும் அல்லது பணியவைக்கும் கலை, இசை...!

அப்படியென்றால் 'இசைந்து' என்பதற்கு 'ஒத்துப் போவது' அல்லது 'பணிந்து போவது' என்று பொருளா...? பணிந்து போவதால் ஒருவருக்கு 'பணிவு' இருப்பதாகச் சொல்ல முடியாதே... ஒரு மனிதன் எந்த விசயத்திலும் எவ்வளவு உயர்ந்தாலும், பணிவு அதையும் தாண்டி மேலே இருக்க வேண்டுமே...! ஒருவர் நம் பதிலை ஏற்றுக் கொண்டாலோ அல்லது ஒருவருக்கு ஆலோசனையோ / அறிவுரையோ / தருமமோ அல்லது சிறு உதவியோ செய்து விட்டால், அகந்தை தானாக வந்து ஒட்டிக் கொள்ளுமே...! அப்படிப்பட்ட அகந்தையை அழிக்க ஒன்றே ஒன்று தான் பணிவு... "பணியுமாம் என்றும் பெருமை" என்று வேறு தாத்தா சொல்லி உள்ளாரே... பெருமைகளைப் போற்றிச் சொன்னால் தானே புகழ்...? ஆமாம், ஒருவர் மீது அக்கறை ஏற்பட்டால் தானே, பணிவுடன் எதையும் செயலில் செய்ய முடியும்...? இப்போது ஆர்வத்துடன் அக்கறையை யோசிக்கிறேன்...!

ஒரு மனிதன் தன் அலைபாயும் மனதையும், உடம்பை ஆட்டிப்படைக்கும் நாக்கையும், பணிய வைப்பதே பெரும்பாடு ஆயிற்றே... பிறகெப்படி மற்றவர்களிடம் அக்கறை வரும்...? ஏன் இல்லை...? தனது குடும்பத்திற்காக, தூணாக இருந்து எதையும் தாங்கும் தந்தை செய்யாத தியாகம் ஏதும் உண்டோ...? அந்த தூணையும் தன் குழந்தைகளோடு குழந்தையாக நினைத்து, தன் நலத்தையும் காக்கும் அதே வேளையில், அனைவரின் நலத்தையும் காக்கும் வகையில் தனது மனதை அமைத்துக் கொண்டு, தன்னையே அர்ப்பணித்துக் கொள்ளும் தாய் செய்யும் தியாகத்திற்கு ஈடுயிணை எதுவுமே இல்லையே... அதுதானே உண்மையான அக்கறை... இதுவல்லவோ வித்தகம்...!

அட, அறிந்து தெரிந்து புரிந்து விட்டது... அக்கறை → பரிவு → கருணை → இரக்கம்... ஆமாம், இதை எப்படி உறுதிப்படுத்துவது...? இசை, புகழ் தவிர வேறு ஏதும் சொல் இருக்கிறதா...? 235-ல் வித்தகர் என்று இருக்கிறதே... (அதன் மற்ற விளக்கங்களை முந்தைய பதிவில் அறிந்திருப்பீர்கள்... அறியாதவர்களுக்கு இணைப்பு இங்கே) அந்த குறளின் வரும் "வித்தில்" இருந்து தான் "இரக்கம்"
இல்லையென்போர் இருக்கையிலே - இருப்பவர்கள் இல்லையென்பார்2 மடிநிறையப் பொருளிருக்கும் - மனம் நிறைய இருளிருக்கும்... எதுவந்த போதும் பொதுவென்று வைத்து - வாழ்கின்ற பேரை வாழ்த்திடுவோம்...© படகோட்டி அ. மருத காசி விஸ்வநாதன்-ராமமூர்த்தி 🎤 T.M.சௌந்தரராஜன் @ 1956 ⟫ எதுவந்த போதும் பொதுவென்று வைத்து வாழ்கின்றவர்கள் என்றால், எனக்குத் தெரிந்து தாய்தந்தை தான்... நன்றி...

மறைந்தாலும் என்னுள் இருக்கும் தாய்க்கும், தாயாக வாழும் எனது தந்தைக்கும், இயற்கையாகவே வித்தக உள்ளத்தோடு வாழும் விவசாயிகளுக்கும் மற்றும் வித்தகர்களாக வாழும் அனைவருக்கும் இப்பதிவைச் சமர்ப்பிக்கின்றேன்... நன்றி...
இசை என்பது, எவ்வாறு இரக்கம் என்று தீர்மானித்த 'இசைப் பயணம்' இனிதே முடிந்தது...! தங்களின் வித்தக கருத்து என்ன...?


பயணத்தின் விளக்கங்களை அறிய, கீழுள்ள இணைப்புகளை ஒவ்வொன்றாகச் சொடுக்கிப் பயணிக்கலாம்... (தோன்றின் புகழொடு தோன்றுக - இணைப்பு எண் 2)


புதிய பதிவுகளை பெறுதல் :


தொடர்புடைய எண்ணங்களின் வண்ணங்கள் சில :


முகநூல் மூலம் கருத்துக்களை பகிர :

கருத்துகள்

  1. அற்புதமாக உள்ளது தனபாலன். மிக சிறப்பு.

    பதிலளிநீக்கு
  2. குறளில் மூழ்கி மூழ்கி முத்தெடுத்துக் கொண்டிருக்கிறீர்கள்.

    பதிலளிநீக்கு
  3. ஈதல் இசைபட வாழ்தல்
    மனிதர்களுக்கு வள்ளுவர் காட்டும் நெறி.


    கொடுப்பவரெல்லாம் மேலாவார் -கொள்பவரெல்லாம் கீழாவார்--கர்ணன் திரைப்பட பாடல்.
    கொடுக்க கொடுக்க இன்பம் பிறக்குமே --நான் ஆணையிட்டால்.
    இசைபட வாழ்தல் என்றால் இனிமையான இசை காதில் விழுந்துகொண்டிருக்கவேண்டும்.

    இயற்கையில் தோன்றும் ஒலிகளெல்லாம் இசையே ஆகும்.
    இறைவன் நாத மயமாகத்தான் விளங்குகின்றான்.
    இசையால் இறைவனை எளிதில் உணர்ந்து கொள்ளலாம்
    இசைபட வாழ்தல் என்றால் அனைவரையும் அனுசரித்து போவது.
    எதற்கெடுத்தாலும் எதிர் வினையாற்றாமல்.

    அனுசரித்து போவது அடிமைத்தனம் அல்ல
    விட்டுக் கொடுப்பது/விட்டுப் பிடிப்பது
    இவை இரண்டையும் வாழ்வில் கடைபிடிப்பவன்
    என்றென்றும் மகிழ்ச்சியாக இருப்பான்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இசையோடு நண்பராக வாழ்த்து கொண்டிருப்பவர்கள் வகையில் நீங்களும் ஒருவர் ஐயா... உங்கள் பதிவுகளே அதை சொல்லும்... தங்களின் கருத்துரைக்கு பெருமிதம் கொள்கிறேன்... மிக்க நன்றி ஐயா...

      நீக்கு
    2. வலிகளை மறந்து வலிமையோடு உலகில்
      உலகில்வலம் வர எனக்கு இசை மிகவும் பேருதவியாய் இருக்கிறது என்பது உண்மை. இசையின் வெவ்வேறு ராகங்களை பாடல்கள் மூலம் பயிற்சிசெய்வதால் என்னுடைய சுவாசமும் நினைவாற்றலும் அதிகரிக்கிறது என்பதே நான் கடந்த 3 ஆண்டுகளாக கண்டுணர்ந்த உண்மை. உங்கள் கருத்துக்கு நன்றி. DD

      நீக்கு
  4. படிக்கும்போது குறளை மனப்பாடம் செய்ததோடு சரி.

    அதுக்கப்புறம் பிள்ளைகளுக்கு சொல்லிக்கொடுக்கும்போது படிச்சதுதான்.

    உங்களைப்போல் திருக்குறளை புரட்டி போட்டு ஆராய்ச்சி பண்ணுமளவுக்குலாம் பொருமையும் இல்ல. ஆர்வமுமில்ல. எல்லாம் சரி, எல்லா பாட்டுமே எம்.ஜி.ஆர் பாட்டாவே இருக்கே!

    பதிலளிநீக்கு
  5. மிக அருமையான பதிவு.
    பாடல்கள். தேடல் சிறப்பு

    பதிலளிநீக்கு
  6. இரக்கம் உள்ள நெஞ்சில் தான் இறைவன் இருக்கிறான்.

    பதிலளிநீக்கு
  7. உங்கள் உழைப்புக்கும் நல்லதை தேடி தரும் உங்களுக்கு வாழ்த்துக்கள், பாராட்டுக்கள்.
    இரக்கம் இருந்தால்தானே ஈதல் சாத்தியமாகும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. // இரக்கம் இருந்தால் தான் ஈதல் சாத்தியமாகும்...// ஆகா...!

      பதிவின் (புகழ் அதிகாரத்தின் பதிவுகளின்) மொத்த கருத்தே இது தான் அம்மா... மிக்க நன்றி...

      நீக்கு
  8. இசைதல் என்றால் இரக்கம் என்பதற்கான விளக்கம் அருமை டிடி! ஆழ்ந்த ஆராய்ச்சி! சூப்பர் டிடி!

    கீதா

    பதிலளிநீக்கு
  9. இசைதல் இருந்துவிட்டால் ஈதலுக்குக் காரணமே தேவையில்லை. நல்ல விளக்கம் டிடி.

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. // ஈதலுக்கு காரணமே தேவையில்லை //

      ஆகா...! இந்த புரிதல், பலருக்கும் புரிவதில்லை என்பது தான் உண்மை...

      இந்த தொடர் முழுவதையும் வாசித்தவர்களை விட்டுவிடுங்கள்... ஒவ்வொரு பதிவிற்கும் கருத்துரை சொன்ன, அவரவர் கருத்துரைகளை அவர்களே வாசித்தால், ஈதலுக்கு காரணமே தேவையில்லை என்பதை அறிந்து தெரிந்து புரிந்து கொண்டால் மகிழ்ச்சி...

      நன்றி... மிக்க நன்றி சகோதரி...

      நீக்கு
  10. உங்களின் இசைப்பயணம் வழியாக விடை காண இயலாத பல கேள்விகளுக்கு விடை கிடைத்தது போல ஒரு தெளிவினை உண்டாக்கியது. முனைவர் பட்ட ஆய்வு மேற்கொண்ட ஆய்வாளர்கள்கூட உங்களிடம் சில நுணுக்கங்களைத் தெரிந்துகொள்ள வேண்டும் என்ற ஒரு உணர்வை இப்பதிவு உண்டாக்கியுள்ளது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஏதோ எனக்கேற்பட்ட ஆர்வமும், தங்களுக்கு உண்டானது போல் ஒருவித உணர்வும் (தொலைபேசியில் உரையாடியது) தான் காரணம் என்று எண்ணுகிறேன் ஐயா...

      நீக்கு
  11. குறள் வழிக்குரலாக ஒரு இசைப்பயணத் தேடலா DD? கூடவே, இசைந்துவரும் எம்ஜியார் படப்பாடல்கள்!

    பதிலளிநீக்கு
  12. பாடல்களைக் கோர்த்த விதமும், இசை என்பதற்கான பொருளை குறள் மூலம் தேடிய விதமும் அருமை. மிகவும் ஆழ்ந்து படித்த பதிவு.

    'எது வந்த போதும் பொது என்று வைத்து' - இப்படி இந்த உலகில் யாருமே இருக்க முடியாது. 'எது' என்பதை நீங்கள் ஆழ்ந்து சிந்தித்தால் இது புரிந்துவிடும். நீங்கள் நினைத்தது, 'வரவுகளை' மட்டும்தான். அதையுமே 'பொது' என்று தாய்தந்தையர் வைக்க மாட்டார்கள். தராசு மாதிரி நிறுத்து யாரும் யாருக்கும் எதையும் பங்கிட்டுக் கொடுக்க இயலவே இயலாது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. "எது வந்த போதும்" இன்ப துன்பங்களையும் சேர்த்து...

      பங்கிட்டுக் கொடுப்பது என்பது இதில் வராது ஐயா...

      நீக்கு
  13. வணக்கம் சகோதரரே

    அருமையான குறள் விளக்கம்.மனதினுள் ஆழ்ந்த வரிகளை கொண்ட பாடல்களுடன் இசையின் பயணமுமாக சிறப்பான அலசல்.

    உண்மையிலேயே மனமொப்பி இசைந்து தரும் ஈதல் சிறப்புடையவைதான். மனமொப்பி போவதற்கு இரக்கம் என்ற அந்த வித்து அவரவர் உள்ளத்தில் எழுவதற்கு மூலக்காரணமாக இருப்பவர்கள் அக்கறையாக நம்மை வளர்த்து ஆளாக்கும் நம் பெற்றோர்கள். மனிதனின் வாழ்வில் ஒவ்வொரு கால கட்டத்திலும் இயைந்து வரும் சிறப்புகளின் பெருமைகள் (புகழ்)அவர்தம் தாய், தந்தையையே போய்ச் சேரும்.

    தாய் தந்தையை பற்றி தாங்கள் அருமையாக குறிப்பிட்டதும், மனதுக்கு நிறைவாக இருந்தது. அருமையான பதிவு. தங்களுக்கு மனமார்ந்த பாராட்டுகள். பகிர்வுக்கும் மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  14. குறளும் விளக்கத்தோடு காணொளி யும் சிறப்பு பாராட்டுக்குரியது

    பதிலளிநீக்கு
  15. ஆழமான ஆராய்ச்சி . திருக்குறள் நூல்முழுதையும் ஆய்வுக்கு உட்படுத்தி இருக்கிறீர்கள் . பாராட்டுகிறேன் . பொருத்தமான பாடல்களை இணைத்திருப்பது சிறப்பு. இரக்கந்தான் என்னும் முடிவுக்கு வர நல்ல காரணங்களைத் தந்திருக்கிறீர்கள் .

    பதிலளிநீக்கு
  16. நீங்கள் சொல்வதைப் படிக்கும்போது நல்லாவே இருக்கிறது, ஆனா அடிக்கடி கேள்விக்குறி போட்டுப் போட்டு எழுதுறீங்க.. அதுக்கு விடை சொல்லத் தெரியவில்லை.. வார்த்தை வருகுதில்லை.

    இன்னொன்று, இசை என்பது எவ்வாறு “இரக்கம்”.. என முதல் பராவிலும் கடசியிலும் சொல்லியிருக்கிறீங்க.. அது புரியவில்லை.. “இருக்கும்” என்பதனை மாறி எழுதிட்டீங்களோ என யோசித்தால், முடிவிலும் சொல்லியிருக்கிறீங்க.. “இரக்கம்” எனத்தான் வருமெனில், வசனத்தில் அது பொருந்தவில்லையே.. “எவ்வாறு இரக்கம் ஆகும், என்று தீர்மானித்த”. என வந்தால் ஓகே... சே..சே.. இதுக்குத்தான் தமிழ்ல டி எடுக்கக்கூடாது என ஊரில சொல்லுவினம்:) இப்போ பாருங்கோ டவுட்டு டவுட்டா வருதே:)).

    பதிலளிநீக்கு
  17. அன்பு தனபாலன், இசைபட வாழ்தல் இனிமையே.
    இசை வரும் என்று ஈதல் வேண்டா என்றும் கேள்விப்பட்டிருக்கிறேன்.
    வசை கேளாத வாழ்வே நல்லிசையாகும். பழைய பதிவுகளைப் படிக்கவில்லை. இந்தப் பதிவு என் மெயிலுக்கே வந்துவிட்டது.
    இசை அதுவும் தத்துவப்பாடல்களின் இசை, குறளொடு ஒட்டிப் போகும்
    வாழ்க்கை தாளம் தப்பாத வண்டியோட்டம் மாதிரி இனிமை.
    உங்கள் பதிவும் அதைதான் சொல்கிறது என்று நம்புகிறேன்.
    பாடல்களுக்கும் கருத்துகளுக்கும் மிக நன்றி.

    பதிலளிநீக்கு
  18. இப்படி அழகாக அலசி ஆராய்ந்து எழுதப் பட்ட ஒரு கட்டுரையை இது வரை நான் கண்டதில்லை.மிகவும் அருமை.
    பாராட்டுக்கள்

    பதிலளிநீக்கு
  19. உங்கள் தேடலுக்கு திரை இசையும் திருக்குறளும் நன்கு துணை போகின்றன

    பதிலளிநீக்கு
  20. அருமைனான தேடல் ஜி வழக்கம்போல பொருத்தமான திரைப்படப்பாடல்கள்.

    நேற்றே படித்தும், பாடல்களையும் கேட்டு விட்டேன் வெகுதூரப் பயணத்தில் ஆகவே கருத்துரை தாமதம்.

    பதிலளிநீக்கு
  21. குறள் சித்தரின் ஆய்வுக்கு பாராட்டுகளும் வாழ்த்துகளும்!

    பதிலளிநீக்கு
  22. அண்ணா...
    அருமை அண்ணா...
    மிகவும் சிறப்பானதொரு பகிர்வு...
    இசையின் பின்னே நீண்டதொரு தேடல்.. அழகு.

    பதிலளிநீக்கு
  23. குறள் வழி இசைப் பயணம் - உள்ளக்
    குரல் மொழி பறை அதிரும் - சொற்கள்
    விரல் விழி இணை செறிவில் சித்தச்
    சுழல் அழி சிந்தை முழுதும் - வண்ணச்
    சுடர் ஒளிர் விந்தை தங்கள் கருத்தே!

    -

    பதிலளிநீக்கு
  24. அண்ணா, உங்களுக்கு முனைவர் பட்டம் கிடைக்கவேண்டும் என்று தோன்றுகிறது. திருக்குறளில் இவ்வளவு ஆழமாக ஆராய்ந்து பல குறள்களை இணைத்துப்பார்த்து, அடடா!!!

    பாடல்களும் சிறப்பு...எப்படி தான் கண்டுபிடித்துச் சரியாக இணைக்கிறீர்களோ!
    பிரமாதம் அண்ணா, நன்றி பல!

    பதிலளிநீக்கு
  25. அருமையான ஆய்வு
    தாய், தந்தை தியாகம்
    போற்றுதற்கு உரிய பணி!

    பதிலளிநீக்கு
  26. அலசல் அருமை! திருக்குறள் சார்ந்து எழுதியவற்றை தொகுத்து நூலாக வெளியிடுங்கள்

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

நகுதற் பொருட்டன்று நட்டல் மிகுதிக்கண்
மேற்சென்று இடித்தற் பொருட்டு. (குறள் 784)

நட்புச் செய்துகொள்வது நண்பரோடு சிரித்து மகிழ்வதற்காக மட்டும் அல்ல. மிகுதியாகத் தவறு செய்யும்போது, அவரைக் கடிந்து திருத்துவதற்கே ஆகும்.