இருப்பவர்கள் இதயத்திலே இரக்கமதை விதைக்கணும்...

நாம் இப்போது இந்தப் பதிவின் தலைப்பை மனத்தில் கொண்டு தொடருவோம் வாங்க... முந்தைய பதிவுகளை வாசிக்காதவர்கள் இணைப்பை (→ ←) சொடுக்கவும்...

                          ஆரம்ப தேடல் : → இணைப்பு 1
        236       - குறள் விளக்கம் : → இணைப்பு 2
231,232,233 - குறள் விளக்கம் : → இணைப்பு 3

முந்தைய பதிவுகளை வாசிக்காதவர்களுக்கு மட்டுமல்ல, நம் நினைவிற்காக மீண்டும் ஒரு முறை விளக்கம்... புகழ் எனும் சொல்லுக்கு, மனதின் ஈரம் அல்லது இரக்கம் என்கிற பொருளே சரி... நடைமுறை பேச்சு வழக்கில் புகழ் என்பதற்கு என்ன சொல்வார்கள்...? பெருமை அல்லது சிறப்பு என்பார்கள்... சரி "புகழ்தல்" என்றால் என்ன...? அனைத்து பெருமைகளையும் விளக்கமாக விரிவாக போற்றிச் சொல்லும் "பெருமை பேசுதல்" ஆகும்... இந்தப் பெருமை எனும் சொல் உணர்த்தும் முதல் நிலைப் பொருள் 'இரக்கம்' என்பதே... புகழ் அதிகாரத்தில், ஐந்து முறை வரும் புகழ், நான்கு முறை வரும் இசை எனும் சொற்களும், ஒரு முறை வரும் வித்து எனும் சொல்லும், இரக்கப் பொருளில் தான் திருவள்ளுவர் பயன்படுத்தியுள்ளார்... சிந்திப்போம் சிறப்படைவோம் வாங்க...

அறத்துப்பால் - இல்லற இயல் - அதிகாரம் 24. புகழ்

(1) குறள்
(2) சுருக்கமான குறள் விளக்கம்
(3) குறளின் குரல் + பாடல் வரிகளோடு மனம்
(4) குறளுக்கேற்ப பாடல்...

"எழுதிக் கொண்டிருக்கும் 'அரசியல்' பதிவில் உதவும்" என்கிற நம்பிக்கையோடு, புதியதொரு வலைநுட்பத்தை இதில் முயற்சி செய்துள்ளேன்... பாடலை வாசிக்க + கேட்க நினைப்பவர்கள், ஒவ்வொரு குறள் விளக்கத்திற்கு பின்னும் இப்படி சுற்றிக்கொண்டு இருக்கும்... அதை சுட்டியால் (Mouse) சொடுக்கவும்... மற்றபடி & பட்டன்களையும் சொடுக்கி பயன் பெறலாம்...!

நிலவரை நீள்புகழ் ஆற்றின் புலவரைப்
போற்றாது புத்தேள் உலகு (குறள் எண் : 234)


இரக்க உணர்வினால் ஒருவன் இந்த உலகத்தின் எல்லைவரை பரவிநிற்கும் புகழுக்குரிய செயல்களை செய்தால், வானுலமும் அவனையல்லாமல் வேறு யாரையும் விரும்பிப் போற்றாது...

மனிதர்கள் வாழும் இடத்தை பகுதியை பூமி என்றும், தேவர்கள் வாழும் இடத்தை புத்தேள் உலகு என்றும் பிரித்துக் கூறுகிறார் வள்ளுவர்... இந்தப் பூமியில் எங்கும் இரக்கமே காட்டப்படுமானால், தேவர்கள் கூட அவர்கள் வாழும் உலகத்தை விட்டுவிட்டு, பூமியிலேயே வந்து வாழத் துவங்கிவிடுவதாக இரக்கத்தின் சிறப்பை சொல்கிறார்... "புத்தேள்" என்பதை (58,213,290,966) மற்ற குறள்களிலும் அறியலாம்... "விண்ணுலகம் சென்று விட்டாலும் அவர் நம்முடனேயே இன்னும் வாழ்கிறார்" என்று சிலரை சொல்கிறோம்... முக்கியமாக பெற்றோர்களை... நம்மிடம் நடந்து கொண்டதை விட, மற்றவர்களிடம் நடந்து கொண்டதை நினைத்து...! காரணம், அன்பும் பாசமும் பொழிந்ததற்கு காரணமான இரக்கமனதை... அவ்வாறானால் மீண்டும் அவர்கள் உருவாக்கப்படுகிறார்கள் என்பது உண்மை...

"திருந்தாத உள்ளங்கள் இருந்தென்ன லாபம், வருந்தாத உருவங்கள் பிறந்தென்ன லாபம்... இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும், இவர் போல யார் என்று ஊர் சொல்ல வேண்டும்... கண் போன போக்கிலே கால் போகலாமா...? கால் போன போக்கிலே மனம் போகலாமா...?" அப்படி போனால் பின்வரும் சந்ததியினரும் அப்படியே... உடல் குறைபாடு உள்ளவர்களிடம் இரக்கப்படுவது மனித இயல்பு... மனக்குறைபாடு உள்ளவர்க்கு இதோ பாட்டு :-நெஞ்சில் எழும் அலைகளுக்கு கண்கள் உண்டு... அதில் நீந்தும் உயிர் கனவுக்கெல்லாம் செவிகளும் உண்டு (2) அன்பு மனம் படைத்தவர்கள் இன்ப வாழ்வு கொடுப்பவர்கள்... எங்கிருந்த போதும் அவை அறிந்து சொல்லாதா...? (2) கண்ணிரண்டும் தேவை இல்லை காண்பதற்கு... காதிரண்டும் தேவை இல்லை கேட்பதற்கு... உண்மை அன்பு இருந்தால் போதாதா...? நாம் உள்ளத்தினால் உணர்ந்து கொள்ள முடியாதா...?© மாடப்புறா கண்ணதாசன் K.V.மகாதேவன் சூலமங்கலம் இராஜலட்சுமி @ 1962 ⟫நத்தம்போல் கேடும் உளதாகும் சாக்காடும்
வித்தகர்க் கல்லால் அரிது (குறள் எண் : 235)


நத்தை இறந்தபின் தனது ஓட்டினை (கூடு) விட்டுச் செல்வது போல, இரக்கத்தினால் பெற்ற புகழுடம்பை விட்டுச் செல்லும் இறப்பும் வித்தகர்களுக்கே மட்டுமேயன்றி மற்றவர்களுக்கு அரிதாகும்...

நத்தை, தான் செல்லும் இடமெல்லாம் தனது ஓட்டினைத் தானே தாங்கிச் செல்லும்.. இறந்த பின் தனது ஓட்டினை பூமியில் விட்டுச் செல்கிறது... அது போல எல்லோரும் ஒருநாள் சாகத்தான் போகிறோம்... ஆனால் சிலபேர் மட்டும் 'புகழ்' என்னும் கூட்டினை, தனக்கு தெரியாமலே சுமந்து கொண்டு செல்கிறார்கள்... முடிவில் தன்னுடைய இரக்கத்தினால் பெற்ற புகழை நிலைநாட்டி விட்டு சாகிறார்கள்... மன்னிக்கவும், மறைந்து போகிறார்கள்... "முல்லைக்கு தேர் கொடுத்தான் பாரி” இப்படிப்பட்ட வள்ளல் தான் வித்தகர்...! அதென்ன வித்தகர்...? வித்து + அகர்... வித்தினை அகத்தில் (மனதில்) உடையவர்.. வித்து என்றால்...? விந்து என்னும் சொல்லின் வலித்தல் விகாரம்... விந்து என்பதின் முதல் நிலை பொருள் : நீர் மற்றும் நீர் போன்ற பசைத் திரவம்... அதாவது ஈரப்பசையைக் குறிக்கும். வித்தகர் = வித்து + அகர் = ஈரமான நெஞ்சு... வித்து எனும் சொல்லும் இங்கே இரக்கப் பொருளில் பயன்படுத்தப்பட்டுள்ளது...

விதைக்KALAM← வாங்க... அன்னை தந்தை ஆனவர்க்கு → தம் பொறுப்பை விதைத்து, பின் வரும் சந்ததியை → பேணும் முறை வளர்த்து, இருப்பவர்கள் இதயத்திலே→இரக்கமதை விதைக்கணும், இல்லாதார் வாழ்க்கையிலே → இன்பப் பயிர் வளர்க்கணும் என்று வாழ்பவர்களுக்கு ஒரு பாட்டு :-பத்துத் திங்கள் சுமந்தாளே அவள் பெருமைப் படவேண்டும்... உன்னைப் பெற்றதனால் அவள் மற்றவராலே போற்றப்பட வேண்டும்... கற்றவர் சபையில் உனக்காக தனி இடமும் தர வேண்டும்... உன் கண்ணில் ஒரு துளி நீர் வந்தாலும் உலகம் அழ வேண்டும்... நான் ஏன் பிறந்தேன், நாட்டுக்கு நலம் என்ன புரிந்தேன் - என்று நாளும் பொழுதும் வாழும் வரையில் நினைத்திடு என் தோழா, நினைத்து செயல்படு என் தோழா, உடனே செயல்படு என் தோழா...© நான் ஏன் பிறந்தேன் வாலி சங்கர் கணேஷ் T.M.சௌந்தரராஜன் @ 1972 ⟫புகழ்பட வாழாதார் தந்நோவார் தம்மை
இகழ்வாரை நோவது எவன் (குறள் எண் : 237)


வாழும் காலத்தில் ஒருத்தருக்கும் இரக்கம் காட்டாமல் வாழ்பவர்கள், தனக்கு முடியாத காலத்தில் "தன் மீது இரக்கம் காட்ட யாரும் இல்லையே" என்று நொந்து கொள்வது ஏன்...?

இதற்கு என்னத்த சொல்ல...? உடம்பும் மனமும் திடகாத்திரமாக இருக்கும் போதே, துன்பப்படுவோர்க்கு இரக்கம் காட்டி உதவி செய்ய வேண்டும்... அவ்வாறு இல்லாமல் அவர்களை "உன் தலையெழுத்து" என்பது போல பல இகழ்ச்சிகளை மகிழ்ச்சியுடன் செய்தால், "நீங்கள் துன்புறும் நேரத்தில் உங்கள் மீது இரக்கம் காட்டி உதவிசெய்ய யாரும் முன்வர மாட்டார்கள், ஜாக்கிரதை..." என்று நம் தாத்தா எச்சரிக்கை விடுக்கிறார்... சுருக்கமாக, முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்...!

"பாய் விரித்துப் படுப்பவரும், வாய் திறந்து தூங்குகிறார்... பஞ்சணையில் நான் படுத்தும், நெஞ்சிலோர் அமைதியில்லை... கொஞ்சிவரும் கிளிகளெல்லாம் கொடும்பாம்பாய் மாறுதடா... கொத்தி விட்டு, புத்தனைப் போல் சத்தியமாய் வாழுதடா... இல்லாத மனிதருக்கு இல்லையென்னும் தொல்லையடா... உள்ளவர்க்கு வாழ்க்கையிலே உள்ளதெல்லாம் தொல்லையடா... ஆஆஆஆஆஆ... சொன்னாலும் வெட்கமடா, சொல்லாவிட்டால் துக்கமடா... துக்கமில்லாமல் வெட்கமில்லாமல் வாழுகிறேன் ஒரு பக்கமடா... சொன்னாலும் வெட்கமடா... ஆஆஆஆஆஆ" இந்த அலறல் தேவையா...? மனச்சாட்சி கொடுக்கும் தண்டனைக்கு நிகரேது...? மனதில் உள்ள இருள் எப்போது நீங்கும்...? என்பதை சொல்லும் பாட்டு :-மாடா உழைச்சவன் வாழ்க்கையிலே பசி வந்திடக்காரணம் என்ன மச்சான்...? அவன் தேடிய செல்வங்கள் வேறு இடத்திலே சேர்வதினால் வரும் தொல்லையடி... பஞ்ச பரம்பரை வாழ்வதற்கே இனி பண்ண வேண்டியது என்ன மச்சான்...? தினம் கஞ்சி கஞ்சி என்றால் பானை நிறையாது சிந்திச்சு முன்னேற வேணுமடி... வாடிக்கையாய் வரும் துன்பங்களை இன்னும் நீடிக்க செய்வது மோசமன்றோ...? இருள் மூடிக் கிடந்த மனமும் வெளுத்து சேகரித்து இன்பம் திரும்புமடி... பாடலில் இல்லாத வரிகள் :- நல்லவர் ஒன்றாய் இணைந்துவிட்டால் மீதம் உள்ளவரின் நிலை என்ன மச்சான்...? நாளை வருவதை எண்ணி எண்ணி அவர் நாழிக்கு நாழி தெளிவாரடி...© நாடோடி மன்னன் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் S.M.சுப்பையா நாயுடு T.M.சௌந்தரராஜன், பானுமதி @ 1958 ⟫'இசை' தொடரும்...

மேலும் தங்களின் விளக்கம் என்ன வாசகர்களே...?

புதிய பதிவுகளை பெறுதல் :


தொடர்புடைய எண்ணங்களின் வண்ணங்கள் சில :


முகநூல் மூலம் கருத்துக்களை பகிர :

கருத்துகள்

 1. இவர்போல் யார் என்று ஊர் சொல்ல வாழ்வதுதான் வாழ்க்கை
  அருமை ஐயா
  நன்றி

  பதிலளிநீக்கு
 2. திரைப்படப்பாடல்களை குறள்களோடு இணைக்க முடியும் என்பதை உங்களால்தான் எல்லோரும் அறிந்து கொள்ள முடிகிறது ஜி.

  பொருத்தமான பாடல்கள் டெக்னிக்கல் பிரமிக்க வைக்கிறீர்கள்.

  தொடர்ந்து பொழியுங்கள் இசைமழை.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வழக்கம் போல் மறைத்து வெளியிடும் தொழிற்நுட்பத்தை, எனது பல பதிவுகளில் ரசித்திருப்பீர்கள்... ஆனால், அவ்வாறு மறைந்துள்ளதை கைபேசியில் பதிவை வாசிப்பவர்களுக்கு தெரியும்...

   எங்கள்Blog-ல் இன்றைய பதிவை வாசித்து இருப்பீர்கள்... (அதைப்பற்றி தான் எனது அடுத்து பதிவுகள்...) அதில் உள்ள கேள்வி பதில்களை, உரையாடலாக மாற்றும் போது, நடுவே பாடல் வரிகள் இருந்தால் வாசிப்பவர்களின் சிந்தனை மாறக்கூடும்...

   ஆகவே, அடுத்து வரும் 'அரசியல்' பதிவுகளில், இந்த தொழிற்நுட்பம் நன்றாக இருக்கும்... இந்தப் பதிவை கைபேசியிலும் வாசித்தேன்... தொழிற்நுட்பம் நன்றாகவே வேலை செய்கிறது என்பதில் திருப்தி...

   பாடல் வரிகளை வாசித்து விட்டு, குறள் விளக்கத்தை மறுபடியும் வாசித்து உள்ளீர்கள்... மிக்க நன்றி ஜி...

   நீக்கு
  2. கணினி அறிவு உள்ளவர்கள் கூட இப்படி செய்ய முடியுமா? என்று ஆச்சரியமாக உள்ளது தனபாலன். வாழ்த்துகள்.

   நீக்கு
  3. ஆம் அலைபேசியில்தான் படித்தேன், காணொளி கண்டு இரசித்தேன் ஜி.

   நீக்கு
 3. திருக்குறளை திரைப்படலோடு சேர்த்து தரும் உங்கள் விளக்கவுரை அருமை

  பதிலளிநீக்கு
 4. பத்து குறள்களுக்குமான உங்கள் விளக்கத்தை வாசித்த பின்பு என் கருத்தைத் தெரிவிப்பேன் .வலைச் சித்தராகிய உங்களுக்கு " திரைப்பாடல் களஞ்சியம் " என்னும் பட்டம் சூட்டி மகிழ்கிறேன்

  பதிலளிநீக்கு
 5. திருக்குறள் - திரைப்பாடல் நல்ல பதிவு சகோதரா. தொடருங்கள்
  வாழ்த்துகள்
  https://kovaikkothai.wordpress.com/

  பதிலளிநீக்கு
 6. அவரவர் பார்வை, அவரவர் கண்ணோட்டம் என்று உணர்வதே ஒரு சிறப்பு. நான் சொல்வதை யாரும் உணரவில்லை, புரிந்து கொள்ளவில்லை என்று சொல்வதற்கு எல்லோருக்கும் தனிக்கண்ணோட்டம் உண்டு என்பதை உணர்ந்தாள் சிறப்பு. சினிமாப பாடல்களுக்கே ஒவ்வொருவருக்கு ஒவ்வொரு அர்த்தத்தில் புரியும்போது...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. உதவிக்கு அல்லது உறுதுணைக்கு தான் திரைப்படப்பாடல் வரிகளே தவிர, குறளுக்கான விளக்கத்தை தான் அதிகம் சிந்திக்க வேண்டும்...

   நீக்கு
  2. அவரவர் பார்வை, கண்ணோட்டம் என்று நான் இருப்பது சினிமா பாடலுக்கு அல்ல! பொதுவான பொருளில். ஒரு சினிமாப பாடலுக்கு ஒவ்வொருவருக்கு ஒவ்வொரு கோணம் இருக்கும்போது எல்லா விஷயங்களுக்கும் அப்படி இருக்கும் என்று சொல்லவந்தேன்!

   நீக்கு
 7. என் கணினியில் ஸ்பீக்கர் வேலை செய்யாததால் பாடல்களைக் கேட்க முடியாத நிலை. சரிசெய்ய வேண்டும்!

  வித்தகர் சொல்லுக்குப் பொருள் புதிதாக இருக்கிறது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இதைப் பதிவை மறுமுறை நினைப்பீர்கள் / அல்லது மறுமுறை வாசிப்பீர்கள்... ஆனால், அது எப்போது என்று என்னால் சொல்ல முடியவில்லை...

   நீக்கு
 8. வித்தியாசமான முறையில் எங்கள் தளத்தில் உங்கள் கேள்விகள் அமைந்திருந்தன.

  கைபேசியில் அப்புறம் முயற்சித்துப் பார்க்கிறேன்.

  பதிலளிநீக்கு
 9. தொழில் நுட்பங்களை பார்த்து வியக்கிறேன் வழக்கம் போல் குறளும்திரைப்பாடல்களும்சொல்ல வருவதற்கு துணை போகின்றன பாராட்டுகள்

  பதிலளிநீக்கு
 10. திரைப்படப் பாடல்களைப் பொருத்தி, குறள்களுக்கு விளக்கம் தருவது முதல் முயறசி மட்டுமல்ல, முற்றிலும் புதிய முயற்சியும்கூட. D.D.யின் இப்பணி பெரும் பாராட்டுக்குரியது.

  பதிலளிநீக்கு
 11. காணொளி சொல்லும் நீதி அருமை.

  புத்தர் சொன்னது போல் அன்புதான் அனைத்தும்.
  என்ன இருந்தாலும் அன்பு இல்லையென்றால் அனைத்தாலும் பயனில்லை.
  ஆசை அலைகள் என்ற படத்தில் அன்பு என்பதே என்ற பாடல் நன்றாக இருக்கும் அந்த பாடல் கூகுளில் தேடினால் கிடைக்கவில்லை.
  அந்த படம் சினிமாவில் வந்த போது தொலைக்காட்சியில் வந்த போது அலைபேசியில் பதிவு செய்தேன்.
  மாடப்புறா பாடலும் நன்றாக இருக்கிறது. உலகத்தின் எந்த மூலையில் இருந்தாலும் நம் அன்பு அவர்களை போய் சேரும் நம் எண்ணத்தால் அன்பை அனுப்பலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் சொல்கிறார்கள்.
  குறலும் பாடலும் மிக பொருத்தம்.

  பதிலளிநீக்கு
 12. நந்தை பாட்டும், நான் ஏன் பிறந்தேன் பாடலும் அதன் விளக்கமும் அருமை.
  மற்றவர்கள் இகழாத வாழ்க்கை வாழ வேண்டும்.

  பதிலளிநீக்கு
 13. தாத்தா சொல்லும் எச்சரிக்கை, பட்டுக்கோட்டையார்
  பாடல் இரண்டும் அருமை.

  பதிலளிநீக்கு
 14. மீண்டும் சிந்திக்க வருகிறேன்.
  திரைப்படபாடல் அருமையான தேர்வு,
  குறளும் மற்க்காது.
  உங்கள் தொழில்நுட்பமும் வியக்க வைக்கிறது.
  பாராட்டுக்கள், வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 15. அலைபேசியில் பாடல்களை கேட்டு மகிழ்ந்தேன்.
  அதிலிருந்து கருத்தும் சொல்லி விட்டேன்.

  பதிலளிநீக்கு
 16. குறள் பதிவுகளும் காணொளி பதிவும் பாராட்டுக்குரியது

  பதிலளிநீக்கு
 17. தனபாலன் உங்கள் பதிவுகளை வாசிப்பதே பேரின்பமாக இருக்கிறது. முக்குஇயமாகக் குறள்கள்.
  பாரி முல்லைக்குக் கொடுத்த தேர். மாணவர்களின் கருத்துகள்.

  நத்தையும் கூடும்.
  மனிதர்கள் இருக்கும்போது தள்ளிவிட்டு
  இல்லாதபோது அழுவது கொடுமை.
  மனதைத் தொடும் குறலும், மேற்கோளும், பாடல்களும் மிக மிக இனிமை.
  தொடர்ந்து இந்த எழுத்தைச் சுவைக்க இறைவன் அருளட்டும்.

  பதிலளிநீக்கு
 18. வணக்கம் சகோதரரே

  எப்போதும் போல் தங்கள் தொழிற்நுட்பங்கள் நிறைந்த பதிவு மிகவும் நன்றாக உள்ளது.
  எந்த ஒரு விஷயங்களும் அவரவர் கண்ணோட்டதில்தான் அலசி மாறுபட்ட முடிவை சொல்கிறார்கள். அதில்தான் உறுதியாகவும் வாதிடுகிறார்கள். அதில் நீங்கள் சொன்ன வித்தகர், ஈர நெஞ்சம் இவை நல்லதொரு முடிவை, அதுவும் குறள் வழி முடிவை அழகாக, விளக்கமாக விளக்குகிறது.மிகவும் ரசித்தேன்.

  குறள்களும்,அதன் விளக்கங்களும், அதன் சம்பந்தமாக எழுந்த திரை இசைகளும் என் கைபேசியில் அழகாக கண்டு களித்தேன். சென்ற தடவை கணினியில்தான் விளக்கமாக காண முடியுமென்றீர்கள். ஆனால் கொஞ்ச காலமாக நான் என் கைபேசி மூலமாகத்தான் என் வலைத்தள பதிவிடுதல், பிற தளங்களை பார்வையிடுதல் கருத்திடுதல் எனச் சுற்றி வருகிறேன். அதனால் தாங்கள் கூறியபடி கைப்பேசியில் தங்கள் பதிவை கண்டு படித்து மகிழ்ந்தேன். தங்களது புதுமை மிகுந்த பதிவுகள் தொடரட்டும். படிக்க மிகவும் உவகையாக இருக்கிறது. மிகவும் அருமையான விளக்கங்களுடன் கூடிய பதிவு. பகிர்வுக்கு மிக்க நன்றி.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
 19. மிகவும் பொறுமையாக உட்கார்ந்து யோசித்து பதிவு எழுதி இருக்கீங்க போல இருக்கு குட்

  பதிலளிநீக்கு
 20. படித்தேன். முழுமையா என்ன சொல்றீங்க என்றும் புரிந்துகொண்டேன்.

  எந்த ஒரு செயலுக்கும் பல்வேறு கோணங்கள் இருக்கும். அதை நாம் புரிந்துகொள்வது, பெரும்பாலும் சொல்பவர்களைப் பொறுத்தே, அல்லது நம் மனத்தில் நாம் வைத்திருக்கும் முன் யோசனைகளை (Prejudice) பொறுத்தே. இதனால்தான், பதிவையோ, மறுமொழியையோ நாம் படிக்கும்போது தவறுதலாகப் புரிந்துகொள்கிறோம், புரிந்துகொள்ளப்படுகிறோம்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. என்னைப் பொறுத்தவரை சொல்பவர்கள் யாராக இருந்தாலும் ஏற்றுக் கொள்வேன்... அதே சமயம் சில பல விசயங்களில் புரிந்து கொள்வதில் வேறுபாடு இருந்தால், "அவர் நிலையில் நான் இருந்தால்...?" - என்று நினைத்தும் சமாதானம் அடைவேன்...

   நீக்கு
 21. திண்டுக்கல் தனபாலன்... உங்களுக்கு ஒரு யோசனை.

  குறள்களை எடுத்துக்கொண்டு, நீங்கள், அதிகாரம் அதிகாரமாக, நீங்கள் புரிந்துகொண்ட அர்த்தத்தையும், அதற்குத் துணையாக திரைப்பாடல்களையும், தனித் தனிக் குறள்களாக இடுகைகள் போடவேண்டும். ஆரம்பத்தில் மலைப்பாக இருந்தாலும், கிட்டத்தட்ட 800+ குறள்களுக்கு தெளிவான அர்த்தத்தை ஒரு சில ஆண்டுகளுக்குள் முடித்துவிடலாம் (காமத்துப்பாலைத் தவிர... ஏனென்றால் அதில் மாணவர்கள் புரிந்துகொள்ள பெரிய செய்தி இல்லை). இது ஒரு பெரிய சாதனையாக இருக்கும். எல்லோரும் சில வரிகளுக்குள்ளேயே அர்த்தத்தைச் சொல்லிவிடுகிறார்கள். வெகு காலத்துக்கு முன்பு, நாமக்கல் கவிஞர் வெ.இராமலிங்கம்பிள்ளை அவர்கள் இதனைச் செய்ய முயற்சித்தேன் என்று எழுதியிருந்தார் (1940-50கள்ல). அவர் முடித்தாரா என்று தெரியவில்லை. ஆனால் அவர் விளக்கியிருந்த இரு குறள்களைப் படித்த ஞாபகம் இருக்கு (அவரது சுய சரிதத்தில்).

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நீங்கள் சொன்னது போல் முன்பு நினைத்தேன்... அப்போது வீட்டிலிருந்தே நூல் வியாபாரம் மட்டும் செய்து கொண்டிருந்தேன்... இப்போது சேலைகள் வியாபாரம்... அடிக்கடி வெளியூர் செல்ல வேண்டும்... எதற்கும் ஒரு நேரம் வரும்... பார்ப்போம்...

   நீக்கு
 22. பொருள் ஓரளவு ஒன்றாக இருந்தபோதும், ஒரே இடுகையில் பல குறள்களை வெளியிடுவது, படிப்பதற்கு சிரமம். என் மனவோட்டத்தில், இதனையே மூன்று இடுகைகளாக வெளியிட்டிருக்கவேண்டும். உதாரணமா,

  புகழ்பட வாழாதார் தம் நோவார் - உண்மையான புகழுடன் அல்லது இரக்கத்துடன் வாழ்க்கை நடத்தாதவர், தன்னைப் பற்றி எண்ணி வருந்தாமல், (நாம் இப்படி இரக்கமில்லாமல் அல்லது பிறர் போற்றும் செயல்களைச் செய்யாமல் வீணே இருந்துவிட்டேனே என்று எண்ணி வருந்தாமல்)

  தம்மை இகழ்வாரை நோவது எவன்? - தம்மை இகழுபவர்கள் மீது கோபம் கொள்வதன் காரணம் என்ன?

  தீதும் நன்றும் பிறர் தர வாரா என்ற செய்திதான் இந்தக் குறளில் இருக்கிறது. ஒருவன் வாழும்போது நல்ல செயல்களுடன் வாழ்ந்து தனக்கு புகழ் தோன்றச் செய்யவேண்டும், அல்லது உங்கள் கருத்துப்படி, இரக்கமுடன் வாழ்ந்து அனைவரின் வாழ்த்தையும் சம்பாதிக்கவேண்டும். அப்படி அல்லாது வாழ்ந்ததால், தன்னைப் பிறர் இகழ்ந்தால், அதற்குக் காரணம் தன்னுடைய செயல்கள்தானே தவிர, இகழ்பவர்களை நொந்து பயன் என்?

  'தான் இரக்கம் காட்டாமல், வயதான காலத்தில் தன் மீது பிறர் இரக்கம் காட்டவில்லையே' என்ற அர்த்தம் வலிந்து பொருள் கொள்வதுபோல்தான் எனக்குத் தோன்றுகிறது.

  மற்றவர்கள் கருத்தையும் அறிய விழைகிறேன் (ஆனால் இத்தகைய அறிவுசார் விவாதம், பல குறள்களை ஒரு இடுகையிலேயே வெளியிட்டால், நடப்பது கடினம் என்பது என் கருத்து). இருந்தாலும், நல்லனவற்றையே பதிவாக வெளியிடுகிற உங்கள் முயற்சியைப் பாராட்டுகிறேன்.

  (ஆனாலும் 'அரசியல் பதிவு' ரெடியாகிறது என்று பயம் காட்டியிருக்கிறீர்கள்... பார்க்கலாம்)

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. கண்டிப்பாக இதில் வயது என்பது வராது... நாம் ஒருவருக்கு நல்லது செய்தால், அவர் நமக்கு நல்லது செய்வார் என்று எதிர்பார்க்கவே முடியாது / கூடாது, எதிர்ப்பார்த்தாலும் நடக்காது... ஆனால், முன்பின் தெரியாத ஒருவரிடமிருந்து நாம் துன்பநிலையில் இருக்கும் போது நன்மை கிடைக்கும்... இதை என் அனுபவத்தில் பெற்றுள்ளேன்... இதையே தான் வேறுவிதமாக குறள் எண் 232-ல் சொல்லியிருந்தேன்...

   அவரவர் பெற்ற அனுபவம் பொறுத்து சிறுவயதிலே மனப்பக்குவம் அடைந்தவர்கள் பலர் உண்டு...

   நீக்கு
  2. 'அரசியல் பதிவுகள்' வரும் போது, 'சில அதிகாரங்களை இப்படித்தான் எழுத வேண்டும் போல' என்று நினைப்பீர்கள்...

   நீக்கு
 23. நத்தம் போல் கேடும் உளதாகும் சாக்காடும்
  வித்தகர்க்கு அல்லால் அரிது

  இதனுடைய அர்த்தமும் மாறுபட்டதாகவே தோன்றுகிறது. நீங்கள் 'நத்தம்' என்ற பகுதிக்கு நத்தையை உதாரணமாகக் காட்டியிருக்கீங்க. நான் புரிந்துகொள்வது,

  இந்த உலகியல் வாழ்வில் துன்பத்தினால் அடையும் புகழும், இறந்தபிறகும் அடையும் புகழும், 'வித்தகர்களுக்கு-அறிவில் சிறந்தவர்களுக்கு, அல்லது புத்திசாலிகளுக்கு' இல்லாமல் மற்றவர்களுக்குக் கிடைப்பது அரிது.

  1. துன்பத்தினால் அடையும் புகழ்னா என்ன? உதாரணமா, ஜீவா (கம்யூனிஸ்ட்) வாழ்வு முழுவதும் மிக எளிமையாக ஏழ்மையாக வாழ்ந்தார். ஆனா வாழும்போதே அவர் துன்பப்பட்டாலும் அவரைச் சுத்தி புகழ் இருந்தது. காந்தியடிகளும் ஒவ்வொரு நாளும் சிரமப்பட்டுதான் வாழ்ந்தார். அவர் நினைத்திருந்தால் படாடோபமாக வாழ்ந்திருக்கமுடியும். ஆனாலும் வாழும்போது தன் வேலைகளெல்லாம் தானே செய்துகொண்டும், தன் தேசம், அதன் மக்களுக்காகவும் கஷ்டப்பட்டார். வாழும்போதே அவரைச் சுற்றி புகழ் இருந்தது, அவர் சொந்த வாழ்க்கையில் துன்பங்கள் பட்டபோதும்.

  2. இறந்த பிறகு அடையும் புகழ் - எத்தனைபேர் 'இவன் போய்விட்டானே' என்று உடல் சம்பந்தமில்லாதவர்கள் கூட கதறுகின்ற புகழ் அடைகின்றனர்? இறந்து ஆண்டுகள் பலவாயினும் உயிர்வாழும் மக்களின் உள்ளத்தில் வீற்றிருக்கும் புகழை எத்தனைபேர் அடைகின்றனர்?

  இதன் காரணம் எதுவாகவும் இருக்கலாம். பொதுவாக இரக்க சிந்தனையின்பால் மற்றவர்கள் மீது வெளிப்படும் அன்பு, அவர்களின் நன்மைக்காக தன்னை வருத்திக்கொண்டு உழைப்பது போன்ற செயல்கள்தான் மூலக் காரணம்.

  இதை மக்களுக்கு என்று மட்டுமல்லாமல், தன் குடும்பத்துக்கு மட்டும்கூட ஒருவன் உழைப்பானாகில் அந்த குடும்பத்தைச் சேர்ந்தவர்களால் எப்போதும் நினைவுகூரப்படுவான். பிறருக்கு உதவும்போது பலரால் அவன் நினைக்கப்படுவான்.

  3. வித்தகர்களுக்கு - இதில் அறிவில் சிறந்தவர்களுக்கு என்று பொருள் சொல்லப்பட்டாலும், இதற்கும் வாங்கும் பட்டங்களுக்கும் சம்பந்தம் கிடையாது. எவன் ஒருவன், மற்றவர்களுக்கு பலன் கருதாது உதவி செய்தால் மட்டுமே மற்றவர்களது நீங்காத அன்பைப் பெறமுடியும் என்று உணர்கிறானோ அந்த புத்திசாலிக்கு என்றுதான் அர்த்தம் கொள்ளவேண்டும்.

  நீங்கள் வித்து+அகர் என்று பொருள் கொண்டலும், முடிவில், 'இரக்கமுள்ள நெஞ்சுடையவர்கள்' என்ற பொருளை நோக்கியே செல்கிறீர்கள். ஒருவன் மற்றவருக்கு, அதுவும் தான் அல்லாது மற்றவர்களுக்கு உதவுவதற்கே இரக்கம் வேண்டும் (ஐயோ பாவம் அப்பா கஷ்டப்படறாரே.. நாம் கஷ்டப்பட்டாலும் இந்த உதவியை அவருக்குச் செய்வோம் என்பது போன்று. அதுகூட இல்லாதவர் இந்த உலகில் ஏராளம்). அதுவும் தன் உடல் சம்பந்தப்படாத மற்றவர்களுக்கு உதவ நிச்சயம் 'இரக்கம் சுரக்கும் மனது' வேண்டும். அந்த மனது இருந்தால்தான் பிறருக்கு உதவி செய்தல் சாத்தியம்.

  'வாழ்ந்தவர் கோடி மறைந்தவர் கோடி மக்களின் மனதில் நிற்பவர் யார்
  மாபெரும் வீரர் மானம் காத்தோர் சரித்திரம் தனிலே நிற்கின்றார்' (அச்சம் என்பது மடமையடா)

  என்ற பாடலும் மனதில் கொள்ளத் தக்கது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வித்தகன் : "தன் நலத்தை காக்கும் அதே வேளையில், பிறருடைய நலத்தையும் காக்கும் வகையில் தனது மனதை அமைத்துக் கொள்கிற கெட்டிக்காரன்" என்றும் வைத்துக் கொள்ளலாம்...

   ஒரு தகவலை சொல்கிறேன்... இந்த அதிகாரத்தை குறளின் குரலாக எழுத நினைத்த போது, முதலில் ஞாபகம் வந்த பாட்டை தான் நீங்களும் சொல்லியுள்ளீர்கள்... விளக்கத்தை வரும் பதிவில் கண்டு ஆச்சரியப்படுவீர்கள்...! நன்றி...

   நீக்கு
 24. நிலவரை நீள் புகழ் ஆற்றின் - இந்தக் குறளின் பொருளைப் படிக்கும்போது,

  எம்.ஜி.யார் உடல் நிலையால் துன்பப்பட்டுக்கொண்டிருந்தபோது, தமிழகம் எங்கும்,

  'ஆண்டவனே உன் பாதங்களை நான் கண்ணீரில் நீராட்டுவேன்
  இந்த ஓருயிரை நீ வாழ விடு'

  என்ற பாடல் ஒலித்துக்கொண்டிருந்தது நினைவுக்கு வருகிறது. மக்களின் ஒன்றுபட்ட ப்ரார்த்தனையால், இந் நிலவுலகில் இருக்கும்போதே புகழ் ஈட்டிய ஒருவனுக்காக வானுலகமே அசைந்து கொடுத்ததுபோல, அவர் உடல் நிலை முன்னேற்றம் அடைந்து மீண்டும் தமிழக முதல்வராக வரும் வாய்ப்பு அவருக்குக் கிடைத்தது.

  இது யாரும் ஆர்கனைஸ் செய்து நடந்தது அல்ல.

  இதுதான் என் மனதில் தோன்றிய நிகழ்வ, குறளுக்கும் ஓரளவு செம்மையான அர்த்தத்தைக் கொடுப்பது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அருமை... உண்மை... அப்போது ஊரில் நடந்த பல நிகழ்வுகள் நினைத்து நெகிழ்ந்தேன்...

   நீக்கு
 25. மிக அருமையான விளக்கங்கள் டிடி. அதிலும் வித்தகருக்கான பொருளைப் புதியதோர் முறையில் கொடுத்துள்ளீர்கள்! நான் நினைத்துக் கொண்டிருந்தது கெட்டிக்காரர்! குறிப்பிட்ட துறையில் வித்தகர் என்பார்களே! அப்படித் தான்! முந்தாநாளே வாசிச்சேன். ஒண்ணும் தோணலை! மூளையே வெறுமையாக இருந்தது. இன்னிக்கு இரு முறை வாசிச்சிருக்கேன். என்றாலும் மறுபடி வரணும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நெல்லைத்தமிழன் ஐயா அவர்களுக்கு இதையேதான் மறுமொழியாக கொடுத்துள்ளேன்... இந்தக் குறளில் இருந்து 'இரக்கம்' என்பதை உறுதி செய்தேன் அம்மா... இன்னும் ஒரு பதிவை எழுதிவிட்டு, இதற்காகவே ஒரு பதிவு எழுதவேண்டும் என்கிற ஆவல் பிறக்கிறது... நன்றி...

   நீக்கு
 26. இறந்த பிறகு அடையும் புகழ்! இதுக்கு என்னோட ஒரு சித்தப்பா நினைவில் வந்தார். தேனிக்குக் கொஞ்சம் தள்ளிச் சின்னமனூர் என்னும் கிராமத்தில் மருத்துவராகத் தொழில் செய்து கொண்டிருந்த சித்தப்பா திடீரென இறந்து விட்டார். சொந்த வீட்டிலேயே இறந்தாலும் அவர்
  இறந்த செய்தி கேட்ட ஊர் மக்கள் அவர் உடலைத் தங்கள் பொறுப்பில் எடுத்துக்
  கொண்டு போய் அவருக்கு முறைப்படியான ஊர் மரியாதைகளைச் செய்து பின்னர் அவரவர் மதத்துக்கு உரிய சடங்குகளைச் செய்து ஊர்வலமாக எடுத்துச் சென்று (மொத்தச் சின்னமனூரும் அக்கம்பக்கம் மார்க்கையன் கோட்டை, பாளையம் கிராமத்தவர் அனைவரும் திரண்டிருந்தனர்) பின்னர் மயானம் போய்த் தான் பிள்ளைகள் பொறுப்பில் எங்கள் குடும்ப வழக்கப்படி செய்ய வேண்டிய க்ரியைகளைச் செய்ய அனுமதித்தனர். அப்படியும் மக்கள் கூட்டம் அலறிய அலறல்! இப்போ நினைத்தாலும் மெய் சிலிர்க்கும்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. என்னைப்பொறுத்தவரை சிலர் மறைந்து தான் போகிறார்கள்... இதைத்தான் பதிவிலும் குறிப்பிட்டேன்...

   நீக்கு
 27. உங்களுக்கு இருக்கும் வேலைப்பளுவில் இத்தனை தொழில்நுட்பங்களையும் புகுத்தி இடுகைகள் தயாரிப்பது உண்மையிலேயே பாராட்டத் தக்கது! ஒரு பதிவாவது தேவையற்றது எனச் சொல்ல முடியாமல் முழுக்க முழுக்க சமூக முன்னேற்றம், மன வளர்ச்சி, மன முதிர்ச்சி ஆகியவற்றை எல்லோரும் பெற வேண்டும் என்னும் நோக்கத்தோடு சிறப்பான முறையில் எழுதி வெளியிடும் உங்களை எவ்வளவு பாராட்டினாலும் போதாது!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இது போல் கருத்துரைகளை வாசிக்கும் போது, மனதில் ஒருவித பயம் என்று சொல்லமுடியாது... சிறிது சங்கோஜமாக இருக்கிறது...

   ஊக்குவிக்க ஆள் இருந்தால், இன்று ஊக்கு விற்பவன் கூட நாளை தேக்கு விற்பான் என்று சொல்வார்கள்... இன்னும் நிறைய சிந்தனை செய்யவேண்டும் என்கிற ஆவல் பிறக்கிறது... மிக்க மிக்க நன்றி அம்மா...

   நீக்கு
  2. நான் இதைச் சொல்லவேண்டாம் என்று நினைத்தேன். உங்களின் சிந்தனை, இடுகையின் நோக்கமாக எடுத்துக்கொள்ளும் தலைப்புகள் (கருப்பொருட்கள்), இனிமை சேர்க்க சினிமாப் பாடல்களைக் குறிப்பிடுவது எல்லாமே மிகவும் பாராட்டத்தக்க வித்த்தில் அமைகிறது.

   சொல்லுக சொல்லில் பயனுடைய. என்பதைத்தான் உங்கள் இடுகைகள் ஞாபகப்படுத்துகின்றன்.

   நீக்கு
  3. ஆரம்ப வருடங்களில் பல பதிவுகளில் உள்ள கருத்துரைகள், எனக்கு அடுத்த பதிவிற்கான ஒரு சிந்தனை தூண்டும்... அதை இன்னார் என்று சொன்னால், மற்றவர்கள் மனதில் சிறிது வருத்தம் ஏற்படும் என்று நினைப்பேன்... ஆனால், அடுத்த இடுகை அதைப்பற்றி பேசும், சம்பந்தபட்டவர்க்கு அது தெரியும்... தங்களின் பாராட்டிற்கு மிக்க நன்றி ஐயா...

   நீக்கு
 28. ஒவ்வொன்றிலும் ஒரு புதுமை. உங்களிடம் நாங்கள் கற்றுக்கொள்ளவேண்டியது அதிகம் உள்ளது.

  பதிலளிநீக்கு
 29. டிடி இந்தப் பதிவையும் மீண்டும் மீண்டும் வாசித்தேன். உங்கள் பதிவுகள் மிக மிக ஆழமான பதிவுகள் இல்லையா..அதான்....தொழில் நுட்பத்தில் செமையா அசத்தறீங்க..புதுசு புதுசா நிறைய செய்யறீங்க.

  கீதா

  பதிலளிநீக்கு
 30. வித்தகர் என்பதற்கு அர்த்தம் புதியதாகத் தெரிந்து கொள்ள முடிந்தது டிடி. அருமை....

  இறந்த பின் புகழ் என்பது எல்லோருக்கும் கிடைப்பதல்ல. இல்லையா? எங்கள் வீட்டில் என் தாயாரை அவரது தாராள மனதிற்கு இன்றளவும் எல்லோரும் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள் எங்கள் ஊரும் தான். அவருக்கு இறுதி மரியாதை செய்யும் போது, வெட்டியான் கூட காசு வாங்க மறுத்துவிட்டான். அம்மாவுக்கா காசு? என் புள்ளைக்கு எத்தனை தடவை அவங்க பேனா பென்சில் சிலேட்டு, ஜியாமெட்ரி பாக்ஸ் எல்லாம் வாங்கிக் கொடுத்திருப்பாங்க...என்னையும் உக்கார வைச்சு தண்ணி சாப்பாடு கொடுத்திருப்பாங்கனு சொல்லிக் கண்ணீர் விட்டாரே தவிர ஒரு பைசா வாங்கிக் கொள்லவில்லை...

  இத்தனைக்கும் என் பிறந்த வீடு ஏழ்மைதான் அத்தனை வசதிகள் இல்லை. ஆனால் என் அம்மா தனக்கு யாரேனும் பணம் கொடுத்தால் அப்புறம் என் தம்பியோ நானோ கொடுத்தாலும் அதை இப்படியான ஏழைக் குழந்தைகளுக்குப் புத்தகம் வாங்கிக் கொடுக்க படிப்பிற்குச் சிறிய உதவி செய்வார்களே அல்லாமல் தனக்கென்று வைத்துக் கொண்டது இல்லை...

  கீதா

  பதிலளிநீக்கு
 31. திருக்குறளுக்கு திரைப்பட பாடல் விளக்கம் அருமை ; புதுமை

  பதிலளிநீக்கு
 32. வழக்கம்போல் குறளையும் திரைப்பாடலையும் தொடுத்து மாலையாக்க முயன்றிருக்கிறீர்கள் படிக்க சுவாரஸ்யம். சிந்தனைத் தூண்டலும் கூடவே.

  ஒன்று எனக்கு சஞ்சலத்தையே தருகிறது. புகழ். புகழ்நோக்கிய செயல்கள். இருக்கும்போது புகழ். இறந்தபின்னிருக்கும் புகழ்.. என்ன இது? இப்படி, நாலுபேர் கைதட்ட வேண்டும், சிலாகித்துப் பேசவேண்டும் என்பதற்காக ஒருவன் வாழ்வில் காரியம் செய்துகொண்டே சென்றானேயானால் (அது இரக்கசிந்தனையினால்தான் என சமூகத்தால் குறிக்கப்பட்டாலும்), புகழ்நாடியே அவன் இப்படியெல்லாம் செய்ததாகத்தானே அர்த்தம்? அதுதானே உண்மை? இது மனித வாழ்வின் மேன்மைநிலை இல்லையே.. சராசரிமனிதர்களின் நற்செயல்கள் என வேண்டுமானால் சொல்லிச் செல்லலாம். இதற்காக தேவலோகமே உருகி கீழே பார்க்கத் தொடங்கிவிட்டது என்று சொல்வது சிறுபிள்ளைத்தனம் என்றே நான் நினைக்கிறேன். இப்படியா வள்ளுவர் சொல்லியிருப்பார்? அல்லது நாம் வகைவகையாக அவர் வார்த்தைகளைப் பிரித்து, திரித்துச் செல்கிறோமா?

  வித்தகர் என வள்ளுவர் குறிப்பிட்டதை விளக்குவதிலும் ஒவ்வொருவரின் வித்தகத்தன்மை மேலோங்குகிறது!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வியாபார பயணத்தில் உள்ளதால், உடனே மறுமொழி கொடுக்க முடியவில்லை... "புத்தேள் உலகு" பற்றி என்ன நினைக்கிறீர்கள்...? பதிவில் குறிப்பிட்ட குறள்களையும் (58,213,290,966) சிறிது சிந்திக்க வேண்டுகிறேன்... நன்றி ஐயா...

   நீக்கு
  2. புத்தேள் உலகு பற்றி நீங்கள் கேட்டதற்கு என் ‘மஹாளம், முன்னோர் வழிபாடு’ கட்டுரைக்குக் கீழே பின்னூட்டமாக நான் கொடுத்திருந்ததை இங்கும் சேர்ப்பிக்கிறேன்:
   //புத்தேள் உலகுபற்றி நம்பிக்கை இருக்கிறது. இறந்தவர் அனைவரும் ஒரே இடத்திற்குத் திரும்புவதில்லை எனவே நான் அறிகிறேன். அவரவர் கர்மாவுக்கேற்றபடி, வாழ்ந்த வாழ்க்கையின் உன்னதம் அல்லது அபத்தத்திற்கேற்றவாறு வெவ்வேறு உலகிற்கு அனுப்பப்படுகிறார்கள் எனவே தோன்றுகிறது. (இது கிறித்தவம் சொல்லும் சொர்க்கம்-நரகம் கதையல்ல)
   (சின்ன வயதில் இம்மாதிரி விஷயங்களைப் பற்றி (Occult, paranormal experiences, NDE (Near Death Experiences) சிலஆங்கிலப்புத்தகங்கள் படிக்கக் கிடைத்தன. )//

   இதுபற்றிக் கற்றது, தெரிந்துகொண்டது விரல்பிடி மண்ணளவுகூட இல்லை. மேலும் தேடவேண்டும். தெரிந்துகொள்ளவேண்டும் எனும் ப்ராப்தம் இருப்பின் தெரியவரும். எல்லாம் அவன் செயல்..

   நீக்கு
 33. சென்றமுறையும் பார்த்தேன். ஏன் பழைய இடுகையே புது இடுகைமாதிரி வெளிவருது? ஏதேனும் சேர்த்திருக்கீங்களா?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. எனது தளத்தில் மறுமொழிக்காக மற்றும் மற்றவர்களின் கருத்துகளை வாசிப்பதற்காக, கருத்துப்பெட்டியில் கீழுள்ள 'எனக்குத் தெரிவி' என்பதில் 'டிக்' மார்க் கொடுத்து இருப்பீர்கள்... நேற்று ஏகாந்தன் ஐயா கருத்துரை இட்டது, உங்களின் mail-க்கு notification வந்திருக்கும்... அவ்வளவே... இந்த அதிகாரத்தை முடிக்க இன்னொரு பதிவும் எழுத வேண்டும்... விரைவில்...

   நீக்கு
 34. ஆஹா இது மீள் பதிவோ? திகதி பார்த்துக் கண்டு பிடிச்சேன்ன்.. இப்படி ஒரு போஸ்ட்டை திரும்ப புதுசாகப் போடுவது எப்படி என இன்னும் நான் கண்டு பிடிக்கவில்லை:)..

  இதை போனதடவை மிஸ் பண்ணியிருக்கிறேன், நல்லவேளை இம்முறை பார்த்து விட்டேன்..

  அந்த முல்லைக்கொடி.. பாரிக்கதை எனக்கு சின்ன வயதிலிருந்தே ஒரு சந்தேகம்.. பாரி செய்தது சரிதானா? முட்டாள்தனமான விசயமாச்சே என என் சிந்தனை ஓடியதால்.. புதன் கேள்விபதிலில் கேட்டபோது.. அது உண்மை இல்லை கற்பனை என கெள அண்ணன் சொல்லியிருந்தார்.. அதன் பின்பே எனக்கு நிம்மதி...

  இப்போ உங்கள் வீடியோவில் எழுந்த வினாக்கள்.. உண்மைதானே... எப்படியும் சிந்திக்க முடியும் ஒரே விசயத்தை.. எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகுமோ:)..

  குறளும் விளக்கமும் அருமை.

  பதிலளிநீக்கு
 35. வலைச்சித்தர் என்றது தங்களுக்கே பொருந்தும்...

  குறட்பாக்களைத் தங்களுக்கே உரிய நடையில் கையாளுகின்றீர்கள்..

  அமுதம் ஊறும் கேணியைப் போன்றது - குறள்...

  சொல்லும் பொழுதும் நினைக்கும் பொழுதும்
  குறள் நெறியை வாழ்வில் கடைப்பிடிக்கும் போதும்
  எத்தனை எத்தனையோ அர்த்தங்கள்.. அனுபவங்கள்..

  அவற்றையெல்லாம் விவரித்துரைக்க நாட்கள் போதாது..

  வாழ்க நலம்!...

  பதிலளிநீக்கு
 36. திரைப் பாடல் திருக்குறள் கலந்ததொரு தித்திக்கும் தேன்தமிழ் பதிவிது. தங்கள் தனிப்பட்ட எழுத்துநடைக்குத் தனியழகு உண்டு. பாராட்டுகள்.

  பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

நகுதற் பொருட்டன்று நட்டல் மிகுதிக்கண்
மேற்சென்று இடித்தற் பொருட்டு. (குறள் 784)

நட்புச் செய்துகொள்வது நண்பரோடு சிரித்து மகிழ்வதற்காக மட்டும் அல்ல. மிகுதியாகத் தவறு செய்யும்போது, அவரைக் கடிந்து திருத்துவதற்கே ஆகும்.