நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்...!

தோன்றின் புகழொடு தோன்றுக அஃதிலார்
தோன்றலின் தோன்றாமை நன்று (குறள் எண் : 236)

நம் மூத்த பதிவர் திரு. G.M. பாலசுப்ரமணியம் ஐயா அவர்கள் "SEARCH FOR TRUTH" என்கிற பதிவை எழுதியிருந்தார்... →இங்கே சொடுக்கி← அவரின் பதிவையும் அதற்கு வந்த பின்னூட்டங்களையும் வாசித்துவிட்டு தொடர வேண்டுகிறேன்... ஐயாவிற்கு நன்றி சொல்லிக்கொண்டு தொடர்கிறேன்...

அனைத்து நண்பர்களுக்கும் வணக்கம்... நடுவுல கொஞ்ச நாள் எனது பக்கத்த காணாமல் தப்பித்து இருப்பீர்கள்...! காரணம் வியாபார வேலைப்பளு காரணமாக மற்ற வலையில் சந்தித்தாலும், எனது வலையில் சந்திப்பதில் மகிழ்ச்சி... திருக்குறள் அதிகாரங்களை அனைவருக்கும் புரியும்படி எளிய உரையாடலாக "குறளின் குரலாக" பகிர்ந்து கொண்டுள்ளேன் என்பதும், சிலவற்றில் குறளுக்கேற்ப திரைப்பட பாடல் வரிகளையும் ரசித்திருப்பீர்கள் என்பது உங்கள் அனைவருக்கும் தெரியும்... சில முக்கிய அதிகாரங்களை குறளின் குரலாக எழுத வேண்டும் என்று முடிவு செய்திருந்தேன்... அவ்வகையில் மேற்கண்ட குறளின் அதிகாரமும் உண்டு... எனது ஆக்கப்பூர்வமான தேடலும் ஆரம்பிக்கிறது என்று நினைக்கிறேன்...

வாழும் வழிமுறைக்கு இலக்கணமானது, மனம் மொழி மெய்யினிக்கே வார்த்திட்ட தேனிது (2) வானகம் போல் விரிந்த பெரும் பொருள் கொண்டது (2) எம் மதத்துக்கும் பொதுவென்னும் பாராட்டைக் கண்டது (2) அறிவுக்கு விருந்தாகும் திருக்குறளே - வள்ளுவர் - ஆக்கி நமக்களித்த அரும் பொருளே... அறிவுக்கு விருந்தாகும் திருக்குறளே...© அறிவாளி அ. மருத காசி S.V.வெங்கட்ராமன் T.M.சௌந்தரராஜன் @ 1963 ⟫

மேலே உள்ள குறளுக்கு, அவரின் பதிவில் ஒரு நான்கு வரிகள் :- // பிறந்தால் புகழுடன் பிறக்க வேண்டும்... இல்லையென்றால் பிறக்காமல் இருத்தல் வேண்டும்... புகழ்பெற முயற்சி செய்தல் அவசியம்... ஆனால் பிறக்கும் போது புகழுடன் பிறப்பது நம் கையிலா இருக்கிறது...? இதை நான் எழுதினால் தர்க்கம் செய்கிறேன் என்பர்... //

தர்க்கம் செய்ய இதில் எதுவுமில்லை... புரிதலில் உள்ள வேறுபாடு... அங்கு சில குறள்களின் வரிகளை பின்'ஊட்டமாக' சொல்லி வந்து விட்டேன்... தனியாக ஒரு பதிவு எழுத வேண்டும் என்று நினைத்து ஆரம்பித்து விட்டேன்... நெல்லைத்தமிழன் அவர்களே... அங்கு தங்களின் கருத்துரையில் கிட்டத்தட்ட இந்த குறளின் விளக்கத்திற்கு அருகில் வந்து விட்டீர்கள் என்று நினைக்கிறேன்...! தங்களின் "கண்ணுடையர்" கேள்விற்கு ஒரு கண் வைத்துள்ளேன்... மனக்கண்ணால் பிறகு பார்ப்போம்...!

புகழுடன் பிறப்பது என்பது ஒருபுறம் இருக்கட்டும்... முதலில் பிறப்பது நம் கையிலா இருக்கிறது...? (அய்யய்யோ... மனம் பாட்டு பாட சொல்லுதே...! இல்லையென்றால் மனச்சாட்சி என்னை கொன்று விடுமே...! ஹிஹி...) ஞாபகம் வந்த இரு திரைப்பட பாடல் வரிகள் :-

தந்தை தவறு செய்தார் தாயும் இடம் கொடுத்தாள் (2) வந்து பிறந்து விட்டோம் வெறும் - பந்தம் வளர்த்து விட்டோம்... மனது துடிக்கிறது மயக்கம் வருகின்றது... அழுது லாபமென்ன அவன் ஆட்சி நடக்கின்றது...! மனிதன் நினைப்பதுண்டு வாழ்வு நிலைக்குமென்று (2) இறைவன் நினைப்பதுண்டு பாவம் மனிதனென்று (2) (படம் :அவன் தான் மனிதன்)

அப்பன் தவறு பிள்ளைக்கு தெரிந்தால் - அவனுக்கு வெட்கமில்லை... அத்தனை பேரையும் படைத்தானே - அந்த சிவனுக்கும் வெட்கமில்லை... இப்போது இந்த உலகம் முழுவதும் - எவனுக்கும் வெட்கமில்லை... எல்லார் கதையும் ஒன்றாய் முடிக்கும் - எ-ம-னு-க்கும் வெட்கமில்லை... (படம் : யாருக்கும் வெட்கமில்லை)

இந்த 2 பாடல்களையும் இயற்றியவர் கவிஞர் கண்ணதாசன்... ஏனிந்த புலம்பலும் எரிச்சலும்...? இவைகளில் என்ன சொல்ல வருகிறார்...? தந்தையர் எல்லாம் தவறு செய்பவர்கள் என்று எடுத்துக்கொள்ள முடியுமா...? பலர், "முழு படத்தையும் பார்க்க வேண்டும்... பாடல் முழுவதையும் கேட்க வேண்டும்... அந்த கதைக்கிற்கேற்ப, கதாபாத்திரத்திற்கேற்ப பாடல் இயற்றியிருக்கக்கூடும்..." என்பர்... சிலர், "கவிஞருக்கு கடவுள் பக்தியும் இருந்திருக்கிறது...!" என்பர்... சுருக்கமாக, அவரவர் எண்ணங்களைப் பொறுத்து சில'பல' விளக்கங்கள் சொல்வார்கள்...!

"என்னடா இது, குறளைப் பற்றிய விளக்கம் கேட்டால், திரைப்பட பாடல்களை பற்றி விளக்கமா...?" என்று நீங்கள் நினைப்பது எனக்கிங்கே கேட்கிறது... இதோ வருகிறேன்... சாதாரண திரைப்பட பாடலுக்கே இப்படி என்றால், திருக்குறளுக்கு...? புரியாத சில குறள் மனதில் பல கேள்விகளை எழுப்பும்... ஆனால், அதற்கான விடை மற்றொரு அதிகாரத்தில் உள்ள குறளில் இருக்கும்... இதை பலமுறை கண்டு ஆச்சரியப்பட்டுள்ளேன்...! குறைந்தபட்சம், அந்த அதிகாரத்தில் உள்ள மற்ற குறள்களின் விளக்கத்தையும் புரிந்து கொண்டு, திருவள்ளுவர் என்ன சொல்ல வருகிறார் என்பதை அறிந்து, தெரிந்து, புரிந்து கொள்ள முயற்சிப்போமா...?

ஒருமுறை சுண்டல் வாங்கிய பேப்பரில், எனக்கு பிடித்தவரின் கதை... கீழே எழுத்தாளரின் பெயரும், மேலே பக்க எண்ணும் இருந்தது... இரு பக்கத்திற்கே சுவாரஸ்யம் இருந்தது... ஆனால், இவரா இப்படி கதை எழுதியிருக்கிறார்...? எனக்கென்னமோ உடன்பாடியில்லை... புத்தக கடைக்கு ஓடி, தேடி எடுத்தேன்...! முழுவதும் படித்தபின் மனமும் சமாதானம் அடைந்தது, ஆர்வமான தேடலும் முடிந்ததில் மனதிற்கு திருப்தி... புரிந்தவர்க்கு நன்றி...

இதோ நம் விசயத்திற்கு வந்துட்டேன்...! மேற்படி குறளை மட்டும் வாசிக்கும் போது, மேலோட்டமாக அனைவருக்கும் தோன்றுவது ஐயாவின் கருத்தே... அதிலேயும் "பிறக்கும் போது புகழுடன் பிறப்பது நம் கையிலா இருக்கிறது...?" என்கிற கேள்வி மனதில் ஒட்டிக்கொள்ளும்... அதனால் என் மனதில் ஏற்பட்ட அழுக்கான ஆர்ப்பாட்டத்தை தான் இவ்வளவு நேரம் வாசித்தீர்கள்...!

அந்த குறள் "புகழ்" எனும் அதிகாரத்தில் வருகிறது... மற்ற ஒன்பது குறள்களின் விளக்கத்தை இந்நேரம், திருக்குறளை எடுத்து அறிந்தவர்களுக்கு நன்றி... புகழ் என்ற சொல், மேலும் 4 இடத்தில் வருகிறது... மற்றொரு சொல்லும் அப்படியே... இவைகளை திருவள்ளுவர் எப்படி பயன்படுத்தி உள்ளார் என்பதை நீங்களும் நானும் யோசித்தால், 236-ன் குறள் விளக்கத்தை சரியாக சொல்லி விடலாம் என்று நினைக்கிறேன்... அறிந்தவர்கள் கருத்துரையில் சொல்லுங்கள்... ஆனால், உங்களின் தேடும் தேடல் முடிவடையாது...! மேலும் உங்களின் குறள் ஆர்வம் வளரும்...!!! அது தான் எனக்கும் முக்கியம்...

"ஆக, கடைசி வரைக்கும் குறள் விளக்கத்தை சொல்ல மாட்டேன்" என்று சொல்கிறீர்களா...? ஆமாம்... "draft"-ல் இருந்த புகழ் அதிகாரத்திற்கான குறளின் குறள் உரையாடல் பதிவை வேறு விதமாக மாற்றிக் கொண்டு இருக்கிறேன்... இந்த பதிவின் தலைப்பை நீங்கள் சொல்லலாம்...! ஏனென்றால், அங்கும் இந்த குறளுக்கு மட்டும், எனக்கு புரிந்த விளக்கத்தை தரப்போவதில்லை... அதை சொல்லப் போவது வாசிக்கும் நீங்கள் தான்...! எனது எண்ணமும்,, உங்களது எண்ணமும் ஒன்றாக இருக்கிறதா...? என்று பார்ப்போம்... சற்று நீண்ட பதிவு என்பதால், இரு பதிவுகளாக வரும்... GMB ஐயாவிற்கு மீண்டும் நன்றி சொல்லிக் கொண்டு, நீங்களும் நானும் என்ன செய்யலாம்...? இதோ :-
தேடினால் ஆவலோடு தேடுக அஃதிலார்
தேடுதல் தேடாமை நன்று...!

உயிர் ஒன்று இல்லாமல் - உடல் இங்கு நிலையாதே... உயிர் என்ன பொருள் என்று - அலை பாய்ந்து திரியாதே... வாழ்க்கையின் வேர்களோ - மிக ரகசியமானது... ரகசியம் காண்பதோ - மிக அவசியமானது... தேடல் உள்ள உயிர்களுக்கே - தினமும் பசியிருக்கும்... தேடல் என்பது உள்ளவரை - வாழ்வில் ருசியிருக்கும்... ஆடல் போல தேடல் கூட - ஒரு சுகமே...© துள்ளாத மனமும் துள்ளும் வைரமுத்து S.A.ராஜ்குமார் P.உன்னி கிருஷ்ணன் @ 1999 ⟫

குறள் எண் 236 பற்றிய தங்களின் விளக்கம் என்ன நண்பர்களே...?

புதிய பதிவுகளை பெறுதல் :


தொடர்புடைய எண்ணங்களின் வண்ணங்கள் சில :


முகநூல் மூலம் கருத்துக்களை பகிர :

கருத்துகள்

 1. குறள், பாடல், செய்தி, சிந்தனை, வழிகாட்டல் அத்தனையும் கொண்ட தங்கள் பதிவைக் கண்டதும் மகிழ்ச்சி. உள நிறைவான பதிவிது

  பதிலளிநீக்கு
 2. "தோன்றில் புகழொடு தோன்றுக" என்பதை ஏன் நாம் 'பிறத்தல்' என்பதை வைத்துத் தீர்மானிக்கிறோம். இதனை 'சபை முன்பு தோன்றுவது, அல்லது மேடையில் ஏறுவது' என்பதாக ஏன் எடுத்துக்கொள்ளக்கூடாது?

  கற்றோர் நிரம்பிய சபையில் நீ தோன்றுவதானால், 'புகழ் பெறும்படியான' வகையில் நீ இருந்தால் தோன்று. உனக்கு 'அறிவுப் பஞ்சம்' என்றால், அத்தகைய சபையில் நீ தோன்றாமல் இருப்பதே நல்லது. அப்படி இல்லை என்றால் நீ 'இகழ்ச்சியைப்' பெறுவாய், என்றும் அர்த்தம் கூறலாமா?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. திரு.நெ.த. அவர்களே... இதையே இந்த அதிகாரத்தின் மற்ற குறள்களுக்கு பொருந்துமா...? என்று பாருங்களேன்... மேலும் தேடல் தொடங்கும்...

   GMB ஐயா பதிவிலிருந்து மேலும் சில வரிகள் :-

   // எதையும் எப்படியும் ஏற்றுக் கொள்ளும் மனோபாவம் எனக்கில்லை... ஆனால், பொதுவாக கேள்வி கேட்காமல் வழக்கத்தில் நிலவி வருவதை ஏற்றுக் கொண்டால் தேடல் எங்கிருந்துவரும்...? உண்மையைத் தேடும்போது அது மனம் கேட்கும் கேள்விகளுக்கு பதில் சொல்ல வேண்டும் - அப்போதுதான் அந்த தேடல் முற்றுப் பெறும்...//

   நீக்கு
  2. கஷ்டப்பட்டு பதில் டைப்பியபின் நெல்லை அதே கருத்தைச் சொல்லி இருப்பதைப் படித்தேன். எனவே அதை வெளியிடுவதற்கு பதில் வழிமொழுந்து விடுகிறேன்!

   நீக்கு
  3. நானும் அதைச் சொல்ல வந்தேன் நெல்லை சொல்லி ஸ்ரீராமும் அதை வழிமொழிய நானும் அதையே வழிமொழிகிறேன்....டிடி.

   மற்றும் நீங்கள் சொல்லியபடி மற்றதையும் படித்து ஒப்பிட்டுப் பார்த்து வருகிறேன் மீண்டும்..

   கீதா

   நீக்கு
  4. ஜிஎம்பி ஸாரின் பதிவில் முதலில் நான் சொல்லிவிட்டுச் சென்றுவிட்டேன். ஆனால் பின்னர் குறளை யோசித்த போதுதான் தோன்றிற் என்பது பிறத்தல் என்றுதான் இருக்க வேண்டுமா என்ன? உடனே தமிழ் ஆசிரியை சொல்லித் தந்தது நினைவுக்கு வந்துவிட்டது. பின்னர் அங்கு கருத்து சொல்ல முடியலை....அதை இங்கு சொல்ல வந்த போதுதான் நெ தவின் கருத்து...

   கீதா

   நீக்கு
 3. நீங்க சொன்னதைக் கொஞ்சம் வேறுவிதமாக யோசிக்கின்றேன். செல்வம், செல்வாக்கு, அதிகாரம், போன்ற அனைத்து செல்வங்களையும் (உங்கள் பாணியில் புகழோடு) பெற்ற குடும்பத்தின் வாரிசுகள் தங்களை நிலைநிறுத்திக் கொள்ளாமல் காலப்போக்கில் மறைந்து விடுகின்றார்களே? இதற்கு என்ன காரணம்?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆகா...!

   ஏன்... மறைந்து போகிறார்கள் என்பதை விளக்கமாக கூறுவதற்கு பதில், இந்த குறளின் விளக்கத்தை கூறி விடலாம்...! ஹா... ஹா...

   செல்வம், செல்வாக்கு, அதிகாரம் - இவைகள் எல்லாம் இல்லாதவர்கள் - மறைந்தும் கூட இன்னும் மக்கள் மனதில் வாழ்கிறார்களே... அப்படியானால் அந்த "புகழ்" என்ன என்பது தான் கேள்வியே...!

   நீக்கு
  2. தி.த - இதுல 'செல்வம்', 'அதிகாரம்' என்ற இரண்டுக்கும் அர்த்தம் இல்லைனு நினைக்கறேன். இரண்டும் குறைந்த ஆயுள் உடையவை. நேற்றைக்கு ராக் ஃபெல்லர், இன்றைக்கு பில் கேட்ஸ், நாளைக்கு யாரோ. அப்படிப் பார்த்தால் நாம் எல்லா தமிழ் மன்னர்கள் பெயரையும் நினைவு வைத்துக்கொள்ள வேண்டுமே. எல்லாருமே செல்வம் மிக்கவர்கள், அதிகாரத்துக்கு எல்லையில்லை. ஆனாலும் ஏன் ராஜராஜன், நரசிம்ம பல்லவன் என்று ஒரு சிலரை மட்டும் நினைவுவைத்திருக்கிறோம்?

   அதேபோல் கல்விச் செல்வம் மட்டுமே ஒருவனுக்கு நீண்ட புகழைத் தந்துவிடாது. அப்படி ஒருவனுக்கு நீண்ட புகழ் வேண்டுமென்றால், சமுதாயத்துக்காக அவன் பெருமிதமிக்க செயல்களைச் செய்திருக்கவேண்டும். அவனால் அந்தச் சமூகம் மேம்பட்டிருக்கவேண்டும், அல்லது அந்தச் சமூகத்துக்காக அவன் கடுமையாக உழைத்திருக்கவேண்டும், அவர்களின்பால் அன்பு செலுத்தியிருக்கவேண்டும். அப்போதுதான் அவர்கள் மனத்தில் அவன் நீடித்து, காலத்தை வென்ற புகழ் உடையவனாக ஆகமுடியும்.

   திருவள்ளுவர் இரண்டடியைக் கூறி அதனை பல்வேறு விதமாகப் பொருந்தும்படி எழுதியுள்ளார்.

   நீக்கு
  3. ஆஹா ஆஹா நான் ஜோதிஜியின் கருத்திற்கு என் மனதில் தோன்றியதைச் சொல்லலாம் என்று வந்தால் இங்கு நெல்லை சொல்லிவிட்டார். அஃப்கோர்ஸ் நான் ராஜராஜன் எல்லாம் என் கருத்தில் சொல்ல நினைக்கலை. ஆனால் பொருள் இதுவே.

   கீதா

   நீக்கு
 4. வணக்கம் தனபாலன் வந்து விட்டீர்களா?
  சினிமா பாடலும், திருக்குறளும் உங்கள் வரவை எதிர்பார்த்து கொண்டு இருந்தது எங்களைப் போல் .

  தேடுங்கள் கொடுக்கப்படும். தேடிவிடுவோம்.

  கர்மவீரர் பிறந்தநாளில் அவரை புகழ் பாடுவோம்.
  அவர் போல் இன்னொரு தலைவர் வேண்டும் என்று அவரிடமே வேண்டுவோம்.

  பதிலளிநீக்கு
 5. கர்மவீரரின் பிறந்தநாளில் பொருத்தமான பாடல்களும், குறளும் சிறப்பு ஜி.

  பதிலளிநீக்கு
 6. வணக்கம் சகோதரரே

  தங்கள் வருகை இனிதாக இருக்கட்டும். அன்புடன் வரவேற்கிறேன். உங்கள் பதிவுகள் இதுவரை எங்கள பார்வையில் படாத நாட்கள் துரதிர்ஷ்டமான நாட்கள். குறளும், பாடலும் இணைந்து ஒளி வீசும் வண்ணமயமான நாட்கள் இனி என்றும் தங்கட்டும். நன்றி.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
 7. நன்றி தி.த.பா. நீண்ட நாட்கள் கழித்து வருகை தந்து ஒரு தேடுதலையும் ஏற்படுத்தி விட்டீர்கள். ஒரு குறளுக்கான விளக்கம் இன்னொரு குறளிலேயே இருக்கும் என நீங்கள் சொல்வதை ஏற்கிறேன். வேதங்களிலும் இப்படித் தான் அதன் உண்மையான பொருள் இதிகாசங்களில் கிடைக்கும் என்பார்கள். திரும்பத் திரும்பச் சொல்லி வரும்போது இந்த இதிகாசத்தில் இந்தப் பருவத்தில், குறிப்பிட்ட அத்தியாயத்தில் பதில் இருக்கேனு மனதில் படுமாம். எங்கள் மானசிக குருநாதர் சொன்னது இது! (அவர் எங்களை விடச் சிறியவர் என்பதால் மானசிகமாக நாங்கள் குருவாக ஏற்றுள்ளோம். உண்மையில் அவர் எங்களை நமஸ்கரிப்பார்) ஆகவே தேடுகிறேன் குறளில். விடை கிடைக்காமலா போயிடும்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. கீதா அம்மா... நீங்கள் எப்படியும் சொல்லி விடுவீர்கள் என்று நினைக்கிறேன்... ஏனெனில், GMB ஐயாவின் அந்த பதிவில் தங்களின் மறுமொழிகள் என்னை வியக்க வைத்தது...!

   நீக்கு
  2. பயமா இருக்கு டிடி! :) நீங்க என்மேல் வைச்சிருக்கும் நம்பிக்கையைக் கண்டு. அவ்வளவுக்கு எனக்குத் தகுதி இருக்கானு யோசிக்க வைக்கிறது. அப்படியே பதிலையும் யோசிக்கிறேன். நன்றிப்பா!

   நீக்கு
 8. டிடி, இதுக்கான பதில் கீதையிலும் இருக்குனு நினைக்கிறேன். சில வருடங்கள் முன்னர் இதே குறள் பற்றி மின் தமிழ்க் குழுமத்திலும் ஓர் உரையாடல் நடந்தது. அதன் விபரங்கள் கிடைக்கிறதானு பார்க்கிறேன். ஜிஎம்பி ஐயாவின் பதிவைப் போய் மீண்டும் பார்த்த பின்னரே இது நினைவுக்கு வந்தது.

  பதிலளிநீக்கு
 9. "புகழ்" என்னும் வார்த்தையும் "இசை" என்னும் வார்த்தையும் நான்கு இடங்களில் வருது.

  ம்ம்ம்ம்ம்> பிறக்கும்போதே புகழ் அடையும் அவாவுடன் பிறக்கவேண்டும். அல்லது அதற்கேற்ற குணநலன்களோடு பிறக்க வேண்டும். கடமையைக் கடமையாகக் கருதி அது எத்தனை கடினமாக இருந்தாலும் செய்தால் அதன் மூலம் கிடைக்கும் புகழ் என்றென்றும் இவ்வுலகில் நிலைத்து நிற்கும். அத்தகைய நிலைத்த புகழைப் பெறுவதற்காகத் தான் உலகில் வாழ வேண்டும். இல்லையெனில் தோன்றாமலே இருந்தால் நல்லது! என வள்ளுவர் சொல்கிறாரோ? இப்படித் தான் நினைக்கிறேன். இதைத் தான் கிருஷ்ணனும் மனச்சோர்வு அடைந்து போர்க்களத்தில் வில்லையும் அம்புகளையும் தூக்கிப் போட்டுட்டு உட்கார்ந்துட்ட அர்ஜுனனிடம் சொல்வான்! "உத்திஷ்ட! யசோ லப!" என கீதை 11-33 (புத்தகம் பார்த்துத் தான் எழுதறேன். அவ்வளவு ஒண்ணும் கீதை விளக்கத்தில் ஞானி இல்லை) இதுக்குப் பொருள் சொன்னால், "அர்ஜுனா! எழுந்திரு! புகழ் அடை!" என வருது! தன் கடமையைச் செய்யாமல் தப்பிக்கப் பார்க்கும் அர்ஜுனனைக் கண்ணன் திருத்துவதைத் தான் வள்ளுவரும் இந்தக் குறள் மூலம் சொல்லி இருக்கணும்! இல்லையா? இது என் மனசில் இப்போப் பட்டது. வேறும் இருக்கலாம். பின்னர் மீண்டும் வரேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. கீதா அம்மா... சரியான விளக்கம் யாரேனும் சொல்லவில்லை என்றால், உங்களின் இந்த கருத்தையும் ஒரு உதாரணமாக சொல்லலாம் என்றுள்ளேன்... (ஒரு வேளை தனி பதிவாக எழுதும் பட்சத்தில்...) நன்றி அம்மா...

   இசை என்பதையும் கண்டுபிடித்து விட்டீர்கள்... அந்தந்த குறளில் அதன் விளக்கத்தை சிந்தித்தால், புகழ் என்ற சொல்லும் என்னவென்று தெரிந்து விடும்... நன்றி...

   நீக்கு
  2. நானும் வாழ்ந்தேன் என இல்லாமல் வாழ்க்கையில் ஒரு பொருளோடு கடமையைத் தன்னலம் கருதாது பிறருக்காகச் செய்து பற்றற்று அப்படிச் செய்வதும் தன் கடமை என்பதையும் நினையாது அனைத்தையும் விடுத்து வாழ்வதைச் சொல்கிறாரோ? பிறருக்கு நலன் விளைவிக்கக் கூடியதை மட்டுமே செய்வது! இகழ்ச்சிக்கு உள்ளாகாமல் இருப்பது! அத்தகைய புகழ் நோக்கம் இல்லாதோர் சபை நடுவினில் காட்சி அளிக்காமல் இருக்க வேண்டும் என்னும் பொருளோ? அத்தகைய புகழைப் பெற்று என்றென்றும் தன் பெயர் நிலைத்து நிற்கச் செய்பவனே "தோன்றிற் புகழொடு தோன்றுக! என்றானதோ? இன்னிக்கு இந்தக் குறல் படுத்தும் பாடு! :)))) மனசிலே அதுவே சுத்திச் சுத்தி வருது! அப்படி இல்லைனா அவன் பிறந்து உயிர் வாழ்ந்தும் எவ்விதமான தகுதியும் இல்லாதவன்.

   நீக்கு
  3. மனிதன் இல்வாழ்க்கையிலும் நல் அறத்தைக் கடைப்பிடித்து ஒழுக வேண்டும். அதனால் இந்தக் குறள் அறத்துப் பாலில் வந்துள்ளது என நினைக்கிறேன். அறம் அதன் பின்னரே பொருள், அதன் பின்னரே இன்பம் எனச் சொல்லி இருக்கிறார்கள் அல்லவா? ஆகவே இது அறத்துப்பாலில் வந்திருப்பதால் ஒருவனுடைய அறவொழுக்கத்தைக் கூடச் சொல்லி இருக்கலாம். கூகிள் தேடலில் இவை கிடைத்தன! இப்போ இதைப் படித்த பின்னர் தோன்றிய யோசனை அறம் என்பது முதலிலும் பொருள் என்பது இரண்டாவதாகவும் வந்து கடைசியில் இன்பத்தை வைத்திருப்பதால் அறம் என்னும் சொல்லுடைய பொருளையே நான் இன்னும் சரியாப் புரிஞ்சுக்கலைனு நினைக்கிறேன். நான் நினைப்பது தான் அறம் எனில் இது ஒரு விதத்தில் இல்வாழ்க்கையில் கடைப்பிடிக்கவேண்டிய நெறிகளைச் சொன்னாலும் இன்னொரு பக்கம் யோக வழியில் வேறு பொருளைத் தரும். யோசிக்கணும். பின்னர் வரேன். அத்தகைய அறத்தினால் பொருள் என்பது வருது எனில் அது எத்தகைய பொருள்? நாம் எல்லோரும் நினைக்கும் சொத்துக்கள் உள்ளடங்கிய பொருளைச் சொல்லலைனு நம்பறேன். ஆகவே இன்பம் என்பதும் வேறே!

   நீக்கு
  4. கீதா அம்மா... அருமை... நீங்கள் சொல்லிய கடமை என்பது கிட்டத்தட்ட சரி தான்... அதற்கு இன்னொரு சிறப்பான அர்த்தமும் உண்டு... ஒரு குறளுக்கு சரியாக பொருந்தும்...

   நீக்கு
  5. வணக்கம் ஐயா.
   அக்குறள் ஒப்புரவு என்னும் அதிகாரத்தில் உளதாகலாம்.
   அனுமதிப்பின் விளக்கமளிக்கிறேன்.
   நன்றி.

   நீக்கு
  6. ஒப்புரவறிதல் என்பது சரியான தலைப்பு.
   பிழை பொறுக்க.
   நன்றி

   நீக்கு
  7. பரிமேலழகியம் ஐயா அவர்களுக்கு மேலும் தொடருங்கள்... அனுமதியே வேண்டாம்... நன்றி...

   நீக்கு
  8. ஐயா வணக்கம்.
   மீண்டும் வருகிறேன்.
   புகழ் என்பது பெரும்பான்மையும் ஈகையால் விளைதற் காரணம் பற்றி ஈகை என்னும் அதிகாரத்தை அடுத்து புகழ் வைக்கப்பட்டிருப்பினும், முந்தைய பின்னூட்டத்தில் கூறியுள்ளபடி ஈகை என்னும் அதிகாரத்திற்கு முந்தைய அதிகாரமான ஒப்புரவறிதல் என்னும் என்னும் அதிகாரத்தின் கண்ணியோடு ஈகைக்கும் அதனோடு புகழுக்கும் உள்ள தொடர்பு பற்றி கருத்து நீட்டுகிறேன்.
   ஒப்புரவு அறிதல் என்னும் தலைப்பே உலக இயல்பினை அறிந்து தம் கடமையாற்றுதல் என்னும் பொருள்பயப்பது.
   ஒப்புரவு செய்தல் என்று சொல்லாமல் ஏன் ஒப்புரவு அறிதல் என்று வள்ளுவர் தலைப்பினை அமைத்தார் என்ற ஆராய்ச்சிக்குள் பரிமேலழகர் முதலில் செல்கிறார்.
   நாம் செய்ய வேண்டியன எவை எனவும் தவிர்க்க வேண்டியன எவை எனவும் கூறுவன அறநூல்கள். அவற்றைக் கற்றுக் கற்றபடி ஒழுகுதல் ஒப்புரவு செய்தல். ஆனால், அந்நூல்களுள் கூறப்படுவன அல்லாமல், உலகநெறி உணர்ந்த ஒருவன் தானே அறிந்து செய்யக்கூடிய தன்மையை உடையதாகையால் ஒப்புரவுசெய்தல் எனப்படாமல் ஒப்புரவறிதல் எனப்பட்டது என்று காரணம் கூறுவார்.
   இங்குப் பரிமேலழகரைவிட மணக்குடவர், ஒப்புரவறிதல் என்பதன் பொருளை அழகுற விளக்குவார்.
   “ ஒப்புரவறிதலாவது இல்லென (இல்லையென) இரந்து வந்தார் யாவர்க்கும் வரையாது (அளவில்லாது) கொடுக்கும் ஆற்றலிலர் ( ஆற்றல் இல்லாதவர்கள் ) எனினும், தம் அளவிற்கும் தம் வருவாய் அளவிற்கும் ஒக்க(ஏற்ப)த் தக்கார்க்குத் தக்கன அறிந்து கொடுத்தல் ” என்பார் அவர்.
   ஈகை என்பதனோடு ஒப்புரவறிதல் என்பதன் தொடர்பை விளக்கும் நுண்மை விளக்கம் இது.
   இவ்வதிகாரத்தின் முதற்குறள் “ கைம்மாறு ” எனத் தொடங்கும்.
   நாம் ஒருவருக்குச் செய்த உதவி அவர் கையிலிருந்து மீண்டும் நம் கைக்கு மாறுவது கைம்மாறு. ( ஈகை என்னும் அதிகாரத்தில் வரும் குறியெதிர்ப்பு என்னும் சொல்லோடு சற்றே நெருக்கமுடையது இச்சொல் )
   அதாவது இவ்வுதவியை இன்னார்க்குச் செய்தால் அதனால் இன்ன பலன் ஏற்படும் என்று அறிந்து செய்யும் உதவி. பலனில்லாத இடத்து உதவும் வழி இருந்தும் ஒதுங்கி / ஒதுக்கிச் செல்வது.
   ஒப்புரவு என்பது கைம்மாறு கருதாதது. பாரபட்சமில்லாமல், எவ்விடத்தும் யாவர்க்கும், பிரதிபலனை எதிர்பாரமல் பெய்யும் மழையைப் போன்று மாந்தர் தமக்குரியதெனக் கொள்வதனைத்தும் யாவர்க்குமளிப்பது போன்றது என்பார் அவர் முதற்குறளில்.
   ஒப்புரவு என்ற சொற்கு வரைவிலக்கணமே இம்முதற்குறள்.
   இக்குறளுரையில், ஒப்புரவு என்பது என்ன என்றால், அது கைம்மாறு கருதாத கொடை என்பர் மணக்குடவர்.
   அடுத்த குறளில் ஒப்புரவு என்னும் அதே பொருளுடைய இன்னொரு சொல்லை ஒப்புரவு என்பதற்குப் பதிலாகப் பயன்படுத்துவார் வள்ளுவர். அச்சொல் வேளாண்மை என்பது. இன்னொரு சொல்லும் ஒப்புரவு என்னும் சொல்லுக்கு மாற்றாக இவ்வதிகாரத்தில் வரும்.
   ஒப்புரவு என்பது தனிமனிதனின் சமுதாயக் கடன் என்பதால் நீங்கள் மேற்குறித்த பின்னூட்டத்தில் குறிப்பிட்டது ஒப்புரவென்பதாய் இருக்கலாம் எனக்கருதி இவை குறிக்கிறேன்.
   ஒப்புரவறிதல் என்னும் அதிகாரத்தில் அமைந்த கருத்துகள் ஈகை என்னும் அதிகாரப்பொருண்மையோடு தொடர்புடையானவாகத் தோன்றினும் இரண்டனுக்கும் வேறுபாடுண்டு. விரிப்பின் பெருகும் என்பதால் நிறுத்துகிறேன். அனுமதிக்கு நன்றி.

   நீக்கு
 10. நான் சொன்ன மாதிரி அர்த்தத்தில் பார்த்தால் கர்மவீரர் காமராஜர் தோன்றிற் புகழொடு தோன்றியவர் ஆவார்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. கீதாக்கா அசத்திட்டீங்க கருத்துகள்!!! ஆமாம் காமராசரை அதனால்தானே கர்ம வீரர்னு சொல்லறோமோ...

   கீதா

   நீக்கு
  2. ________ மட்டுமே அவரிடம் மேலோங்கி இருந்தது... அதனால் அவர் கர்மவீரரும் ஆனார்... பெருந்தலைவரும் ஆனார்...!

   நீக்கு
  3. வறுமையில் வாடுவோர் உயர வேண்டும் என்ற எண்ணமும், கல்வி அவர்களுக்கு மிகவும் தேவை அதற்கு முதலில் வயிற்றுக்கு ஈந்தால்தானே என்பதை உணர்ந்து கொண்டு வந்தாரே...வறியோரும் நன்றாக வாழ வேண்டும் என்ற அந்த நல்லெண்ணம்...அன்பு கருணை ஈகை...

   கீதா

   நீக்கு
  4. மற்றொன்று அந்த ஈகையும் எதிர்பாரா ஈகையாக இருக்க வேண்டும்.

   கீதா

   நீக்கு
  5. காமராஜரிடம் கடமை மட்டுமே இருந்தது எனில் மற்ற குணங்கள் அனைத்தும் பொருந்தி இருக்கணும் என்றாகிறது. மேலும் அவர் இல்வாழ்க்கையில் ஈடுபடவும் இல்லை. ஆகவே இல்வாழ்க்கையிலும் ஈடுபட்டிருக்க வேண்டும், கடமையும் செய்தாக வேண்டும். மற்றவர்க்குப் பலனாகவும் இருக்க வேண்டும். சர்வே ஜனோ சுகினோ பவந்து என்னும் உயர்ந்த நோக்கத்தைக் கொண்டிருக்க வேண்டும் என்றாகிறது. ஈகைக் குணமும் நிறைந்திருக்க வேண்டும். ஈதல், இசை பட வாழ வேண்டும். ம்ம்ம்ம்? உங்களோட அந்தக் குறிப்பிட்ட கருத்தைப் பிடிக்க நினைக்கிறேன். முடியலை! :(

   நீக்கு
  6. சகோதரி கீதா அவர்களுக்கு நல்லெண்ணம் எப்படி எதனால் வருகிறது என்பதை யோசிக்க வேண்டுகிறேன்...

   கீதா அம்மா, ஈகை பற்றிய விளக்கம் சரி... அதற்கு அடுத்து உள்ளதின் விளக்கம்...?

   நீக்கு
  7. இசை என்பதை ஒத்திருப்பது , அதாவது இசைந்திருப்பது, harmony என்னும் பொருளில் பார்த்தால்? நாம் கொடுக்க வேண்டிய ஈகையைச் சரியான நபருக்குக் கொடுக்கணும். தகுதி வாய்ந்த மனிதருக்கு அந்த ஈகை சென்று சேர வேண்டும். தகுதி இல்லாதவர்க்குக் கொடுத்தால் அதனால் பலன் இல்லை. அதாவது அந்த "ஈதல் இசைபட வாழ்தல்" குறளை ஒரே வரியில் சொல்லணும்னால் ஒரு பழமொழி சொல்வாங்களே, "பாத்திரமறிந்து பிச்சை இடு!" அதுவாக இருக்கலாம்.இசை இங்கே ஒத்திசைவு என்னும் பொருளில் கொள்ள வேண்டும் என நினைக்கிறேன்.

   நீக்கு
  8. இங்கே வளாகத்தில் வெள்ளை அடிக்கிறாங்க மூன்று நான்கு நாட்களாக நம்ம குடியிருப்புப் பகுதிப் பக்கம் அடிப்பதால் என்னால் சரியாக இணையம் வர முடியலை! என்றாலும் யோசித்து வருகிறேன். மனதின் ஆழத்தினுள்ளே இருப்பது வெளியே வரணும். :( வரலை!

   நீக்கு
  9. யோசிக்கிறேன் டிடி..தன் நலம் நோக்காதிருந்தால் என்று சொலல்லாம் என்றால் தன் நலம்/சுய நலம் நோக்காது அது எப்படி வரும் என்று யோசிகக்ச் சொல்வீர்களோ என்ற கேள்வியும் எழுகிறதே டிடி...ஹா ஹா ஹா ஹா...

   நீங்க எதைக் கேட்கிறீர்கள் என்று டக்கென்று மூளைக்கு எட்டவில்லை. ஏனென்றால் எதை நாம் சொன்னாலும் அந்த நல்ல எண்ணம் தோன்ற பல வழிகள் இருக்கின்றனவே. அப்போ எதைச் சொன்னாலும் அது எப்படி வரும் என்ற கேள்வி எழத்தானே செய்யும்? அது ஆழமான சப்ஜெக்ட் ஆயிற்றே. சரி இருந்தாலும் ரூம் போட்டு யோசிச்சுட்டு வரேன். ஹா ஹா ஹா

   கீதா

   நீக்கு
  10. டிடி அறன் வலியுறுத்தல் அதிகாரத்தைச் சொல்லலாமா? அதில் விடை உள்ளது போல் இருக்கு என் சிற்றறிவுக்கு...

   மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்தறன்
   ஆகுல நீர பிற.

   இன்னும் பிற குறள்கள் இருக்கு...டக்கென்று இது பாடத்தில் படித்திருப்பதால் நினைவுக்கு வந்துவிட்டது...

   கீதா

   நீக்கு
  11. அறத்தான் வருவதே இன்பம் மற்றெல்லாம்
   புறத்த புகழும் இல.

   கீதா

   நீக்கு
  12. டிடி மெய்யுணர்தல் அதிகாரத்திலும் விடை இருக்கிறது.

   எப்பொருள் எத்தன்மைத் தாயினும் அப்பொருள்
   மெய்ப்பொருள் காண்பது அறிவு.

   இக்குறளும் பாடத்தில் படித்த நினைவு வந்தது. உண்மைப் பொருள் செர்ச் ட்ரூத் என்று ஜிஎம்பி ஸார் மற்றும் நீங்கள் இங்கு சொல்லியதை வைத்து யோசித்த போது இக்குறள் நினைவுக்கு வரவும் அந்த அதிகாரத்திற்குச் சென்றேன்.

   அறியாமை நீங்கி மெய்ப்பொருளை உணர்ந்தால் அறமும் வாய்க்கப்பெறலாம் என்ற நோக்கில் யோசித்தேன் டிடி. இதற்கு மேல் தெரியவில்லை. உங்கள் அடுத்த பதிவிற்கு வெயிட்டிங்க்...

   கீதா

   நீக்கு
  13. கீதா அம்மா...சரியான சிந்தனையில் வந்து கொண்டிருந்த நீங்கள் சிறிது பாதை மாறி வேறு சிந்தனைக்கு போய் விட்டீர்கள்...

   உங்களின் ஆர்வத்தை நினைத்து நானே சொல்லி விடுவேன் போலுள்ளது...! அப்படியானால் என் மனம்...........(?)

   க்ளு 1 : இதோ இப்போது என் மனதில் சட்டென்று தோன்றியதே, அது தான்...

   க்ளு 2 : என்னை கொடூரமானவனாக நினைத்து பலவாறு திட்டுங்கள்... விடை கிடைத்து விடும்... ஆனால், நான் நல்ல பிள்ளை...! ஹா... ஹா...

   மறுமொழிகளை வாசிக்க வரும் அனைவரும் இதை முயற்சிக்கலாம்...

   இப்போது கண்டுபிடித்து விடுவீர்கள் என்று நினைக்கிறேன்... அந்த சொல் (உன்னத பண்பு) சரியென்றால் அனைத்து குறளுக்கும் பொருத்திப் பாருங்கள் அம்மா...

   இதுவரை யாருடைய கருத்துரையும் வெளியிடாமல் இல்லை... உங்கள் கருத்துரை சரியாக இருந்தால், அதை வெளியிட மாட்டேன் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்... பிறகு உங்கள் தேடுதலை நிறுத்திக் கொள்ளலாம்... மற்றவர்களுக்கும் பொருந்தும்... "இந்தப் பதிவின் முடிவில் சரியாக கணித்தவர்கள் = இத்தனை பேர்" என்று போட்டு விடுகிறேன்... நன்றி அம்மா...

   நீக்கு
  14. அல்ல லருளாளர்வார்க் கில்லை நெகிழ்ந்த
   அருளினா லாகும் அறம்.
   இது இருநூலொட்டு :)

   நீக்கு
 11. வணக்கம் ஐயா…!
  வலையுலகில் இருந்து விலகி இருந்த என்னை மீண்டும் உள்ளிழுத்து வந்திருக்கிறது உங்கள் பதிவு முதலில் அதற்கு நன்றி.

  “தோன்றிற் புகழொடு தோன்றுக வஃதிலார்
  தோன்றலிற் றோன்றாமை நன்று”

  என்ற குறளோடு ஒட்டிய என் கருத்துகளைத் தெரிவிக்கும் வாய்ப்பாகவே இப்பின்னூட்டம்….!

  முதலில் நீங்கள் கூறியதுபோல, திருக்குறளிள் உள்ள ஒவ்வொரு குறளும் ஒவ்வொரு அதிகாரமும் தொடர்கண்ணிகளைப் போல வகைப்படுத்தப்பட்டுள்ளன. ஒரு குறளுடன் மற்றொரு குறளுக்கான தொடர்பும், ஒரு அதிகாரத்துடன் மற்றொரு அதிகாரத்தி்ற்கான தொடர்பும் ஒரு இயலுடன் மற்றொரு இயலுக்கான தொடர்பும் ஒரு பாலுடன் மற்றொரு பாலுக்கான தொடர்பும் காரண காரியத்துடன் அமைக்கப்பட்டுள்ளன. உரையாசிரியர்களால் நுட்பமாக எடுத்துக்காட்டப்படுவன. ஊன்றிப் படிப்போர்க்கு நயமாய்த் தோன்றுவன.

  இங்கு, இந்தப் புகழ் எனும் அதிகாரம் அதற்கு முந்தைய ஈகை என்ற அதிகாரத்தோடு தொடர்பு படுத்தப்பட்டுள்ளது. ஏன் ஈகை எனும் அதிகாரத்திற்குப் பின் புகழ் வைக்கப்பட்டது என்பதற்குப் பரிமேலழகர், திருக்குறளின் ஐந்தாம் அதிகாரமாகிய இல்வாழ்க்கை முதல் ஈகை எனும் அதிகாரம்வரை உள்ள பத்தொன்பது அதிகாரங்களில் சொல்லப்பட்ட இல்லற ஒழுக்கங்களில் இருந்து தவறாமல் நடப்பவர்கள் இவ்வுலகில் இறந்து போனாலும், அவர்களைக் குறித்து இறவாமல் இருப்பது புகழ் என்றும் அந்தப் புகழ் ஒருவருக்குப் பெரும்பான்மையும் ஈதல் பற்றி வருவதனால் ஈகை என்னும் அதிகாரத்திற்குப் பின் புகழ் வைக்கப்பட்டதாகவும் விளக்கமளிப்பார்.

  இவ்விளக்கத்திற்கேற்பவே, இவ்வதிகாரத்தின் முதற்குறள் ஈதல் என்பதனோடு தொடங்குகிறது.

  “ஈத லிசைபட வாழ்த லதுவல்ல
  தூதிய மில்லை உயிர்க்கு”
  என்பது அது.

  இங்கு “இசை பட வாழ்தல்” அதாவது புகழ்பெற வாழ்வதற்கான வழிமுறை என்ன என்பதை சொல்லியே இவ்வதிகாரத்தைத் தொடங்குகிறார் வள்ளுவர்.

  ஈக! அதனால் புகழ்பெற ( இசைபட ) வாழ்க!
  சரி…! வறியவர்க்குக் கொடுத்து அதனால் அடையும் இந்தப் புகழ் இல்லாவிட்டால் எனக்கு என்ன நஷ்டம் என்று கேட்பவனுக்கு,
  அந்தப் புகழ் இல்லாவிட்டால் நீ உயிர்பெற்றதன் பயன் ( ஊதியம் ) இல்லை எனச் சொல்லி விடுகிறார்.

  இங்குச் சில கேள்விகள் எழும்.

  ஈதலினால் மட்டும்தான் புகழ் கிடைக்குமா? இங்கு ஈதல் என்பது எதனைக் குறிக்கிறது?

  பிறருக்குக் கொடுக்கும் அளவிற்கு ஒருவனுக்கு செல்வம் இல்லாவிட்டால் என்ன செய்வது?

  இதற்குப் பதில் உரையாசிரியர் கூறுவர்.,

  புகழ்பெற வாழ்வதற்கு, கல்வி, வீரம், செல்வம் என பிற காரணங்கள் இருப்பினும் “ உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே ” என்பதனால் பசி நீங்குதற்கு அளிக்கப்படும் ஈகையே சிறப்புடையதாயிற்று.

  ஒருவனுக்கு பிறருக்கு அளிக்கும் அளவிற்குச் செல்வமின்றேல் என்ன செய்வது…? அவன் புகழ் பெறலாகாதா? அவன் உயிர்பெற்றதன் பயனில்லையா எனில்,
  “யாவர்க்குமாம் உண்ணும்போதொரு கைப்பிடி” என்றிதற்குப் பதிலுரைப்பான் திருமூலன், திருமந்திரத்தில்.
  .......................... தொடர்கிறேன்.

  பதிலளிநீக்கு
 12. அடுத்த குறளிலும், கல்வி, செல்வமெனும் ஏனையவற்றைவிட, ஈகையே புகழிற்குக் காரணம், ஈவோர் மேற்றதே புகழ் எனக் கூறுவார் திருவள்ளுவர்.,

  “ உரைப்பா ருரைப்பவை யெல்லா மிரப்பார்க்கொன்
  றீவார்மே னிற்கும் புகழ் ”

  புகழ் என்பது என்ன? பிறரால் பேச்சின் வாயிலாகவும் எழுத்தின் வாயிலாகவும் பரப்பப்படுவது. இங்கு உரை என்பது, பேச்சு என்பதனை முன்பு குறித்துப் பின்பு எழுத்து என்பதற்கும் ஆகிப் பின் இவ்விரண்டற்கும் பொதுப்பெயராய் நின்றது.

  பேச்சாலும் எழுத்தாலும் நிலைபெறும் இப்புகழானது ஏனையவற்றைவிட, இல்லை என்று இரப்பார்க்கு அளிப்பவர் மீதே நிலைபெறும் என்பதை இக்குறளில் வலியுறுத்துகிறார்.
  அடுத்த குறளில், ஏன் இந்தப் புகழ் முக்கியத்துவம் பெறுகிறது என்பதற்கு விடைசொல்வார்,

  “ ஒன்றா வுலகத் துயர்ந்த புகழல்லாற்
  பொன்றாது நிற்பதொன் றில் ”

  தனக்கு இணையில்லாததாய் உயர்ந்து நிற்கும் புகழைவிட இந்த உலகத்தில் இறவாமல் நிற்பது எதுவுமில்லை, அதனால்தான் புகழ் முக்கியத்துவம் பெறுகிறது.

  ஈதலில் அடையும் புகழ் சிறப்புடைத்தது என்ற குறள் கூறும் இப்பண்பாடு, பண்டைய தமிழ் மரபின்று வந்தது என்பதை, புறநானூற்றில் பெருந்தலைச்சாத்தனின்,

  “மன்னா உலகத்து மன்னுதல் குறித்தோர்
  தம்புகழ் நிறீஇத் தாமாய்ந் தனரே;
  துன்னரும் சிறப்பின் உயர்ந்த செல்வர்,
  இன்மையின் இரப்போர்க்கு ஈஇ யாமையின்,
  தொன்மை மாக்களின் தொடர்பு அறியலரே”

  எனும் அடிகள் வலியுறுத்தி அமையும்.

  “நல்லது செய்தல் ஆற்றீ ராயினு மல்லது செய்த லோம்புமின் ” என்றபடி, நல்லது செய்யாவிட்டாலும் கெட்டது செய்யாமல் இருப்பதே நல்லதுதான் என்பார்களே அதுபோல, எங்களால், புகழ் பெற வாழ முடியாவிட்டாலும் பிறரால் இகழப்படுமாறு வாழாமல் இருப்பதே நல்லதல்லவா….?” என்ற கேள்விக்கும் இந்த அதிகாரத்திலேயே பதிலளிக்கிறார் வள்ளுவர்.,

  “ வசையென்ப வையத்தார்க் கெல்லா மிசையென்னு
  மெச்சம் பெறாஅ விடின் ”

  இந்த உலகத்தில் வாழ்கின்ற எவனாயிருந்தாலும், தன் வாழ்நாளுக்குப்பின், இசை ( புகழ் ) என்ற ஒன்றை விட்டுச்செல்லாவிட்டால் அவனுக்கு வசையே! ( இகழ்ச்சியே ) என்று தெளிவுபடுத்தி விடுகிறார்.

  மேலும், புகழில்லாதவனின் உடம்பைச் ( இசையிலா யாக்கை) சுமக்கின்ற நிலம்கூடத் தனது வளத்தை இழக்கும் என்றும் ( 239 )
  வசை நீங்கப் புகழோடு வாழ்பவரே வாழ்பவராவார் என்றும், புகழில்லாத வசையோடு வாழ்பவர் இறந்தவருக்கு ஒப்பாவார் என்றும் ( 240 ) என்றும் கூறி இவ்வதிகாரத்தை முடிக்கிறார் வள்ளுவர்.

  இவற்றினடிப்படையில்,
  புகழின்றேல் இந்த உலகில் பிறந்ததன் பயன் இல்லை. புகழ் என்பது இல்லார்க்கு ஈவதன் பயனாய் விளைவது. பிறர் உரையால் நிலைநிறுத்தப்படுவது. இறந்த பிறகு இவ்வுலகில் அழியாமல் விட்டுச் செல்லக் கூடியது. புகழை இவ்வுலகில் நிலைநிறுத்திச் செல்லாத ஒருவன் இகழ்ச்சிக்குரியவனாகவே கருதப்படுவான். புகழ் என்ற ஒன்றை அடைய இயலாத ஒருவன் பிறந்தாலும் இறந்தவனாகவே கருதப்படுவான். அவனைச் சுமக்கும் நிலம் கூட வளம் குறைந்து போகும்.
  எனவே, ஒருவன் இவ்வுலகத்தில் பிறந்தால், அவன் புகழ்பெற வாழ்தற்கே பிறத்தல் வேண்டும். அத்தகு புகழன்றி இசையிலா யாக்கையாக வாழும் வாழ்க்கையால் எவர்க்கும் பயனின்றி, அஃது இவ்வுலகிற்கும் கேடாகலான், அவன் பிறப்பதைவிடப் பிறவாமல் இருப்பதே யாவர்க்கும் நலம்பயப்பதாகும்.

  ஆகவே,

  “தோன்றிற் புகழொடு தோன்றுக வஃதிலார்
  தோன்றலிற் றோன்றாமை நன்று ”

  என வள்ளுவர் உரைத்திருப்பார் எனக் கருதுகிறேன்.

  வழக்கில் கூட, “ பிறந்தா இவன மாதிரிப் பிறக்கனுண்டா ” என்று சொல்வதில்லையா? கூர்ந்து நோக்கினால், அது பெரிதும் அவன் பிறந்த பொழுதினை அல்லது பிறந்த தருணத்தின் சூழலை ஒட்டிச் சொல்லப்படுவதன்று….! அது அவன் வாழும் வாழ்க்கையை, இருக்கும் வசதிவாய்ப்பை, பிறந்தபின் அவன் அனுபவிக்கும் மகிழ்வை அடிப்படையாகக் கொண்டது.

  இக்குறளும் அதுபோன்றதே!

  புகழ் எய்தும்படியான ஒரு வாழ்க்கையை வாழ்வதானால் இந்த உலகில் பிறக்கவேண்டும். இல்லாவிட்டால், பிறப்பதைவிட பிறவாமல் போகலாம். என்று வள்ளுவன் சொல்வது, இந்த உலகில் பிறந்தோருக்குத்தான். அது சாதிப்பெருமையோ, குல மேன்மையோ, செல்வச் செழிப்போ கொண்டுவரும் புகழல்ல. எளியார்க்கு ஒன்று ஈவதனால், பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதலால், கைமாறு கருதா ஈகையால் கிடைக்கும் புகழ். அது இவ்வுலக உயிர்கள்பால் பேரன்பு கொண்ட வள்ளுவனின் ஏக்கம். ஊக்கமும் முயற்சியும் கொண்ட மற்ற மாந்தர்க்கு அவனளிக்கின்ற உத்வேகம்.

  அன்றி,

  தமிழண்ணல் போன்றோர், தோன்றுதல் என்பதற்கு விளங்கித்தோன்றுதல் எனப்பொருள் கொண்டு “ ஒரு செயலில் ஈடுபட்டால் அதில் சிறந்து புகழ் விளங்கத்தக்க விதத்தில் ஈடுபடவேண்டும். மாறாக, அதற்குரிய ஆற்றலின்றேல் அதில் ஈடுபடாமல் இருந்தல் நலம் ” எனுமாறு பொருள் கொள்வது, இவ்வதிகாரத்தின் ஏனைய குறள்களோடு ஒப்பிடுங்கால் பொருந்துமாறில்லை என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

  நன்றி.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மகிழ்கிறேன்... நன்றி... ஆனால், மனிதனிக்கு வேண்டிய அந்த முக்கியமான "_____" சிந்திப்போம்...

   நீக்கு
  2. வணக்கம்.
   தாங்கள் குறிப்பிடுவது அருளாய் இருக்கக் கூடும்.
   தனக்குத் தொடர்பில்லாதாரிடத்தும், தொடர்பில்லாதன இடத்துடம் இடர் கண்டு மனம் கசியும் இரக்கம்.
   அன்பிற்கும் அருளிற்கும் வேறுபாடுண்டு.
   நன்றி.

   நீக்கு
  3. மன சாட்சி? அறத்துக்குப் புறம்பாக நடக்கலாகாது. ஒவ்வொரு மனிதருக்கும் அது தான் அடிப்படைப் பண்பு. அறத்தோடு ஒன்றிய அதே சமயம் கடமைகளையும் நிராகரிக்காமல் அனைவருக்கும் ஏதுவான குணங்களைக் கொள்ளுதல்? மனசாட்சி சொல்லும் நேர்வழி! வாழ்வியல் தர்மம்!

   நீக்கு
  4. உங்கள் மனம்.........? ஒத்துழைக்கவில்லை எனக் கொள்ளலாமா? அப்போ ஒத்துழைப்பு இங்கே தேவையா? ம்ஹூம், இல்லையே இது சரி இல்லை! :( உங்களைத் திட்டினால் பதில் கிடைக்கும்னு சொல்றீங்க! திட்டவே தோணலை! திட்டவும் தெரியலை! தெரியாது! :))))

   நீக்கு
  5. மன்னித்தல்? பிறரை மன்னிப்பது என்பது எல்லோராலும் இயலாது! இது ஒரு உன்னத பண்பு! ஆகவே மன்னித்தல் இங்கே முக்கியமாய்த் தேவைனு நினைக்கிறேன்.

   நீக்கு
  6. "மன்னிப்பு கேட்குறவன் மனுஷன்... மன்னிக்கிறவன் பெரிய மனுஷன்" (நன்றி MNM தலைமைக்கு)

   உங்களின் இன்றைய பதிவே ஒரு சான்று... அங்கு ஒரு 'மகானின்' கருத்துரை தவிர மற்றவர்களின் கருத்துரையை வாசித்தாலே பரியும்... அந்த கொந்தளிப்பான மனது - என்ன மனது...? எந்த உணர்வு இருந்தால் அப்படி தோன்றும்...?

   நீக்கு
 13. ஒரு சந்தோஷம் காந்திஜி உண்மையை அறியத்தேடுவதுதான் வாழ்வின்லட்சியமென்று சொன்னார் என்று ஒரு பதிவில் எழுதி இருந்தேன் அதைவிளக்க ஒரு நண்பர் கேட்டதால் விளைந்ததே என்பதிவு அதுவே பலரையும் சிந்திக்க வைக்கிறது என்பதுஇரட்டிப்பு மகிழ்ச்சி அந்தப்பதிவில் எழுந்ததே தோன்றிற் புகழொடு தோன்றுக என்னும்குறளும் என்புரிதலும் ஒரு குறளை நேரடியாகப் புரிந்துகொள்வதும் இப்படியா அப்படியா இன்னும் விளக்கங்கள் தேடித்திரிவதுமெல்லாவற்றுக்கும் காரணம் கற்பிப்பதும் பாமரனான எனக்கு உடன்பாடு இல்லை தனபாலன் குறள் கற்றுத்தேர்ந்தவர் திரைப்பாடல்களும் அவருக்கு அத்துப்படி எனக்கு ஒரு கதை நினைவுக்கு வருகிறது. என் ஏதோ பதிவிலும் குறிப்பிட்டு இருப்பேன் பசுமாட்டுக்கதை என்று கூறுவேன் ஆசிரியர் பல கட்டுரைகளைசொல்லிக் கொடுத்தும் ஒரு மாணவன் பசுமாடு பற்றி மட்டுமே படித்திருந்தானாம் தேர்வில் தென்னை மரம் பற்றி எழுத்சச்சொன்னபோதுஅந்தப் பையன் ஒரு தென்னை மரமிருந்தது அதில் ஒருபசுமாடு கட்டப் பட்டிருந்தது என்று தொடங்கி பசுமாட்டைப்பற்றியே எழுதி இருந்தானாம் இந்தக் கதை ஏனோ நினைவுக்கு வந்தது தனபாலனுக்கு திரை இசைப்பாடல்களையும் குறள்களையும் சேர்த்து எழுதுவதில் புலமை உண்டு என் பதிவு உண்மைதேடுவது பற்றியது அது இங்கில்லைஅங்கில்லைஎன்று அலைக்கழிப்பது நியாயமா இருந்தாலும்தேடுகிறர்கள் என்பதே மகிழ்ச்சி எந்த மாதிரி தேடினாலும் மனம் ஒப்பும் பதில் கிடைத்தால் சரி

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. உங்களின் கருத்துரையை மிகவும் எதிர்ப்பார்த்து இருந்தேன்... நன்றி ஐயா...

   தேடல் பற்றி தாங்கள் எழுதிய ஒவ்வொரு வரியும் தான், என்னை பதிவு எழுத (தேட) வைத்தது...

   மேலே உள்ள ஒரு சில கருத்துரையில் 90% பதில் உள்ளது... அதை நிரூபிக்க வேண்டியது எனது கடமையாக உணர்கிறேன்...

   அனைவரின் மனமும் ஒப்பும் என்று நம்புகிறேன்... வரும் இரண்டு பதிவுகளில் சந்திப்போம்...

   நீக்கு
 14. நடுவிலேயே புதிர் போட்டிருக்கிறீர்கள். புரிந்தவர்களுக்கு நன்றி என்றும் சொல்லி இருக்கிறீர்கள். அந்த எழுத்தாளர் யாரோ!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஸ்ரீராம் சார் அவர்களுக்கு, "தேடல் என்பது எவ்வளவு ஆர்வமாக இருக்க வேண்டும்" என்பதற்காக கற்பனையாக எழுதப்பட்டது... திருக்குறள் என்றே வைத்துக் கொள்ளுங்கள்... இது தான் உண்மை... பலரின் குறள் உரைக்காக நிறைய வாங்கி உள்ளேன்... சில குறளின் விளக்கத்திற்கு எதிலும் சரியான விளக்கம் இல்லை... இது எனது புரிதலில் தவறு இருக்கலாம்...

   எழுத்தாளர் சுஜாதா அவர்களின் குறள் உரை இதுவரை வாசித்ததில்லை... அதே போல் (முகநூல்) கவிஞர் மகுடேசுவரன் அவர்களின் குறள் உரையும்...

   நீக்கு
 15. திடீரென்று வந்து திக்குமுக்காட வைத்துவிட்டீர்களே? மனிதனுக்கு வேண்டிய அந்த முக்கியமான ஒன்று மனிதமாக இருக்குமோ? ஏனெனில் இப்போதெல்லாம் மனிதத்தைத் தொலைத்துவிட்டு நாம் நிற்பதாகவே தெரிகிறது.

  பதிலளிநீக்கு
 16. உரைப்பார் உரைப்பவை எல்லாம்இரப்பார்க்கொன்று
  ஈவார்மேல் நிற்கும் புகழ்.

  பிறர் யாசிக்கும் போது அவர்களுக்கு கொடுத்தவர்கள் எல்லாம் புகழ் பெற்று இருக்கிறார்கள்.

  இவ்வுலகில் புகழ் நிலைத்து நிற்பவர்கள் எல்லாம் பிறருக்கு கொடுத்து உயர்ந்தவர்கள் தான் அந்த காலத்து கர்ணன், இந்த காலத்து கலைவாணர், மக்கள்திலகம், கவி சக்கரவர்த்தியை உதவியர் சடையப்ப வள்ளல் இப்படி உதவியவர்கள் காலத்தால் புகழபடுகிறார்கள்.
  ஈகைதான் இப்போது வேண்டியது.

  பதிலளிநீக்கு
 17. பொய்யாமை அன்ன புகழில்லை எய்யாமை
  எல்லா அறமும் தரும்.

  பொய்யாமைப் போல புகழ் தருவது வேறு இல்லை, அதில் தளராமல் உறுதியாய் இருப்பது ,எல்லா அறத்தின் சிறப்பையும் தரும்.

  மக்களாய் பிறந்தால் புகழுக்கு காரணமாகிய குணங்களோடு பிறக்க வேண்டும். அந்த குணம் இல்லாதவர்கள் மக்களாய் பிறப்பதைவிட விலங்காய் பிறத்தல் நன்று .

  நல்ல மனிதராக உலகில் வாழ்வதே சிறப்பு.

  தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன்
  மெய்வருத்தக் கூலி தரும்.

  ஊழினின் காரணமாய் மனிதன் புகழ் சேர்க்க முடியாவிட்டாலும் அவன் எடுக்கும் முயற்சியால் தன் குறைகளை களைந்து மேலும் மேலும் சிறப்புற வாழ்ந்தால் புகழ் வந்து சேரும்.
  புகழோடு வாழ வேண்டும்.
  எந்த வேலையை எடுத்துக் கொண்டாலும் அதை சிறப்பாக செய்ய முயல வேண்டும்.
  முயற்சி உடைவருக்கே இவ்வுலகு.
  தேடல் உள்ளவர்களே புகழை அடைவார்கள்.
  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பொய் சொன்னாலும், சொல்லாவிட்டாலும் _____ இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன்...!

   நீக்கு
  2. அதான் மனசாட்சி, அதுக்குப் பயப்படணும், அது தான் சரினு நினைக்கிறேன். நீங்க அந்தக் கருத்தை வெளியிடாமல் இருப்பதில் இருந்து! இல்லையா டிடி?

   நீக்கு
 18. மாபெரும் சபையில் நீ நடந்தால் உனக்கு மாலைகள் விழ வேண்டும் ஒரு மாற்று குறையாத மன்னவன் இவன் என்று போற்றி புகழ வேண்டும். என்ற பாடல் போல் குணநலன்கள்
  பொருந்தியவனே புகழ் பெற முடியும்.

  பதிலளிநீக்கு
 19. டிடி அந்த பொட்டலத்துல இருந்த எழுத்தாளர் யார்?!! சொல்லுவீங்கதானே...சரி

  புகழ் அதிகாரம் பார்த்துவிட்டேன். ஈதலை மிகவும் உயர்வாகச் சொல்லியிருக்கிறார். ஈதலினால் பெறும் புகழ் வேறு பயனும் இல்லை என்கிறார்.. அடுத்து புகழ்ந்து சொல்லபப்டும் சொல் கூட ஈதல் செய்பவரின் மேல் இருக்கும் என்றும் சொல்கிறார்

  புகழ்தான் ஒருவரை நிலையாக வாழவைக்கும் என்றும் சொல்லுகிறார். அப்படி என்றால் அப்புகழ் எப்படிப்பட்ட ஒன்றாக இருக்க வேண்டும்!!!அப்படியான ஒரு புகழைப் பெற்றால் வானுலகம் கூட புகழும் தேவரைக் கூடப் புகழாது என்கிறார்.
  பிறர்க்கு ஈந்து, தாம் மெய் உணர்ந்து, அவா அறுத்த வித்தகர்க்கு ஆகுமே அன்றி மற்றவர்க்கு ஆவது கடினம். ஆசை இல்லாமல் ஈதல் என்பதே இங்கு சொல்லப்படுகிறது இல்லையா...

  புகழ் பெற வாழ முடியாதவர் தன் தவறை ஒத்துக் கொள்ளாமல் பிறர் சொல்லிக் காட்டுவதை ஏன் குறை சொல்ல வேண்டும் என்றும்சொல்கிறார். இதுதான் இப்போது ஒரு மனிதன் வாழ்வில் வெற்றியடைய வேண்டும் என்றால் தன் தோல்விக்குக் காரணம் தான் தானே அல்லாமல் பிறரைச் சுட்டினால் தோல்விதான் பெறுவான் என்று சொல்லுவதின் அர்த்தம் எனலாம்.

  இறந்த பின்னும் ஒருவரின் புகழ் நிலை பெற்றிருக்க வேண்டும் இல்லை என்றால் பழி கூறுவர் என்றும் சொல்கிறார். இதில் புகழை மிகப் பெரிய செல்வம் என்ற அர்த்தமும் வருகிறது.

  புகழில்லாத உடம்பைச் சுமக்கும் இப்பூமி கூட வளமற்றுப் போகும் என்கிறார்.

  பழியின்றி புகழோடு வாழ்பவரே வாழ்பவர் மற்றவர் இருந்தும் இல்லாதவர் என்கிறார்.

  இப்படி புகழை உயர்த்திச் சொல்லியிருக்கிறார் என்றால் அப்புகழ் சாதாரணமான புகழ் அல்ல என்று தெளிவாகிறது. நற்குணங்கள் பலவும்பொருந்து ஆசையற்று பிறருக்கு உதவி வாழ்தல் எல்லாம் வலியுறுத்தப்படுகிறது. கீதாக்கா சொல்லியிருப்பது போல் எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாத நல்ல எண்ணங்களுடன், எளியவர்க்கு உதவி தன் கடமையைச் செய்பவரின் புகழ் எனலாம்...இல்லையா டிடி.

  ஈதல் என்பது செல்வத்தினால் என்றுமட்டும் கொள்ள வேண்டாம் என்றும் தோன்றுகிறது. எப்படி வேண்டுமானாலும் உதவலாமே. கற்றுக் கொடுத்தல்,நல்வினைகள் எதுவாக இருந்தாலும் எண்ணம் தான் நல்லதாக இருக்க வேண்டும் இல்லையா..

  புகழ் பெறுதல் என்பது நம் நற்செயல்களால், நற் சிந்தைகளால் எனும் போது பிறக்கும் போதே என்ற அர்த்தம் இல்லாமல் இப்பூமியில் வாழும் போது நல்ல மனிதனாக இருத்தலைக் குறிக்கிறது எனலாம் இல்லையா டிடி.

  கீதா

  பதிலளிநீக்கு
 20. இத்தனையும் வாசித்து கருத்திடும் போது ஒரு ஐயம் எழுந்தது.

  புகழ் என்பது நீ தேடிச் செல்லக் கூடாது...அது உன்னைத் தேடி வர வேண்டும் என்று சொல்லப்படுவது.....இதற்கு குறள் உண்டா டிடி. எப்போதோ நான் கல்லூரியில் பேச்சுப் போட்டியில் மேற்கோள் காட்டிய நினைவு. ஆனால் அந்தக் குறள் அல்லது பாடல் டக்கென்று இப்போது நினைவுக்கு வரவில்லை.

  புகழ் பெற வேண்டும் என்பதற்காகச் செய்வது நிலையற்றது. அதே சமயம் நீ உன் கடமையைச் செய்து கொண்டே இரு. நற் சிந்தனைகளுடன். பலனை எதிர்பார்க்காதே. அது தானாக உன்னை வந்தடையும். என்பதைச் சார்ந்திருக்கிறது எனலாம் இல்லையா.

  என் மகனுக்கு நான் இதை அடிக்கடிச் சொல்லுவேன். எதிர்பார்க்காமல் கடமையை நல்ல சிந்தனையுடன் செய்தல்...

  எனவே புகழ் என்பது இப்படியான மேன்மையான புகழ் தானாகத் தேடி வந்தடையும் புகழைத்தான் சொல்லியிருக்கிறார் என்றே தோன்றுகிறது. இன்னும் கருத்து தோன்றினால் வருகிறேன் டிடி.

  மிக மிக மிக நல்ல பதிவு. நிஜமாகவே தேடல் தான்...மிக்க நன்றி டிடி. நிறைய சிந்தனைகள் எழுந்து கொண்டே இருக்கும்...நல்லதை வாசிக்கும் போதும் அதைச் சார்ந்தும் என் அனுபவத்தில் கற்றுக்கொள்வதையும் , சுற்றி நடப்பவற்றையும் சார்ந்து நிறைய சிந்தனைகள் எழும்...ஹா ஹா

  கீதா

  பதிலளிநீக்கு
 21. ஆஆஆ இடையில கொஞ்சம் பக்கத்தைக் காணம்:)... இனி ஒரு பக்கமும் காணாமல் போகாமல் இருக்கக் கடவது:)..

  பதிலளிநீக்கு
 22. எனக்கு இரு பாடல்களுமே ரொம்பப் பிடித்த பாடல்கள்... ஆனா திருக்குறள் வியக்கம்:) சொல்ல வெளிக்கிட்டு என்னை, முட்டாளேதான் என முடிச்ச்சுப் போட விட்டிட மாட்டேனாக்கும் ஹா ஹா ஹா அதனால பொறுமையாகிறேன்.. மற்றோரின் பதில்களைப் படிப்போம்:).

  பதிலளிநீக்கு
 23. உங்களைக் காணாமல் ரொம்பவே தவித்து விட்டோம். மீண்டும் வந்ததில் மகிழ்ச்சி. சிறந்த பதிவு. தொடருங்கள்.

  நமது வலைத்தளம் : சிகரம்
  இலக்கியம் | அரசியல் | விளையாட்டு | பல்சுவை | வெள்ளித்திரை | தொழிநுட்பம் -அனைத்துத் தகவல்களையும் அழகு தமிழில் தாங்கி வரும் உங்கள் இணையத்தளம் - #சிகரம்

  பதிலளிநீக்கு
 24. 95 சதவீதம் வந்து விட்டேன் என்றால் மகிழ்ச்சி. வலது கை கொடுப்பது, இடது கைக்கு தெரியாமல் கொடுக்க வேண்டும் . அடுத்தவர் புகழ வேண்டும் என்று கொடுக்காமல் கொடுக்க வேண்டும்.

  பதிலளிநீக்கு
 25. நயனொடு நன்றி புரிந்த பயனுடையார்
  பண்புபாரட்டும் உலகு.

  நீதியையும் அறத்தையும் விரும்புவாதால் பிறர்க்கும் தமக்கும் பயனுடையவராய் வாழ்பவரின் பண்பினையே உலகத்தார் பாராட்டுவார்.

  பதிலளிநீக்கு
 26. ஆஹா !! கீதாக்காவின் கருத்துக்களும் பரிமேலழகியம் அய்யாவின் கருத்துக்களும் வாசிக்கவே ஆச்சர்யமாக இருக்கு ,நிச்சயம் இதனையளவுக்கு யோசிக்க எனக்கு முடியவே முடியாது . கற்றுக்கொள்கிறேன் ஒவ்வொன்றையும்

  பதிலளிநீக்கு
 27. அன்பிலார் எல்லாம் தமக்குரியார் அன்புடையார்
  என்பும் உரியர் பிறர்க்கு

  அன்பு இல்லாதவர் எல்லாப் பொருள்களையும் தமக்கே உரிமையாக்கிக் கொண்டு வாழும் தன்னலக்காரராய் இருப்பர்.அன்புடையவரோ தம் உடம்பையும் பிறர் நலத்துக்காக ஈந்து மகிழும் இயல்புடையவராக் வாழ்வர்.

  நீங்கள் கர்மவீரரை இந்த பதிவுக்கு கொண்டு வந்தது பொருத்தம்.அவர் போல் தன்னலமற்ற மக்கள்பால் உள்ள அன்பால் தன் உடலில் உயிர் இருக்கும் வரை உழைத்தார்.

  இந்த பதிவின் தலைப்பு "அன்புடையார் எல்லாம் உடையார்"

  பதிலளிநீக்கு
 28. எனக்கு விளக்கம் சொல்லத் தெரியவில்லை என்றாலும், கீதாவின் விளக்கங்கள் ஆச்சரியப்பட வைக்கின்றன. மிகவும் ஆழ்ந்து சிந்தித்தால் ஒழிய இத்தனை கச்சிதமான விளக்கங்களை முன் வைக்க முடியாது. கோமதியும் சிறப்பான விளக்கங்களை முன் வைத்துள்ளார். இத்தனையையும் மீறி நீங்கள் என்ன சொல்லப்போகிறீர்கள் என்று படிக்க ஆவலுடன் காத்திருக்கிறேன். நெல்லைத் தமிழனுக்கு சிறப்புப் பாராட்டு.

  பதிலளிநீக்கு
 29. எட்டிப் பார்க்கிறேன்.
  அகழ்வாராய்ச்சி நடந்துகொண்டிருப்பதாகத் தெரிகிறது. உள்ளே விழுந்துவிடுவோமோ என்றுவேறு பயமாயிருக்கிறது!

  பதிலளிநீக்கு
 30. எனக்கு விளக்கம் சொல்லுமளவுக்கு அறிவு இல்லைண்ணே.

  வெல்கம் பேக்... இனி வலைப்பூ உலகம் களைக்கட்டும்.

  பதிலளிநீக்கு
 31. தங்கள் மீள் வருகைக்கும் கருத்தாழம் மிக்க பதிவை வழங்கியமைக்கும் மிக்க நன்றி தனபாலன்.

  நண்பர்கள் பயனுள்ள விவாதங்களை நிகழ்த்தியிருக்கிறார்கள். மகிழ்ச்சி.

  'போராட்டங்கள் நிறைந்த இன்றைய பரபரப்பான வாழ்க்கைச் சூழலில், புகழை எதிர்பார்த்து வாழ்தல் தேவையற்றது. காரணம், மனப்பூர்வமாய்ப் பிறரைப் புகழும் மனப்பக்குவம் பெரும்பாலோர்க்குக் குறைந்துவருவதே. திருக்குறளில் உள்ள 'புகழ்' என்னும் அதிகாரமே தேவையற்றதோ என்றுகூட எண்ணத் தோன்றுகிறது' என்று கருத்துத் தெரிவித்திருக்கிறார்
  மறைந்த அறிஞர் மு.வரதராசனார்[உரிய ஆதார நூல் நினைவில் இல்லை].

  மு.வ.வின் கருத்து எனக்கும் ஏற்புடையதாகவே தோன்றுகிறது. இளம் வயதில்[30 வரை என்று கொள்ளலாம்?] புகழ் தேவைப்படலாம். அது சாதனைகள் நிகழ்த்தப் பயன்படக்கூடும்[சாதனை நிகழ்த்தப் புகழாசை மட்டும் போதாது. இயல்பான ஆர்வம் உத்வேகம் போன்றவையும் தேவை]. இளமைக்காலம் கழிந்த பிறகு, தம் நலன் பேணியும் பிறர் நலன் போற்றியும் வாழ்ந்து முடித்தாலே போதும் என்று தோன்றுகிறது.

  இது நீண்ட விவாதத்திற்குரிய தலைப்பு என்பதால் இத்துடன் அமைகிறேன். வாய்ப்புக்கு நன்றி DD.

  பதிலளிநீக்கு
 32. அருமையான பதிவு டிடி. நான் தாமதமாகத்தான் வாசிக்க முடிந்தது. தேடலில் பலரும் அருமையான கருத்துகளைச் சொல்லியிருப்பதால் நான் என்ன சொல்ல என்று தெரியவில்லை. சொல்வதற்கு எதுவும் இல்லை என்றே தோன்றுகிறது. எனக்குத் தோன்றியவை எல்லாம் இங்கு சொல்லப்பட்டிருக்கிறது. தொடர்கிறேன் உங்கள் தேடலை அறிய

  துளசிதரன்

  பதிலளிநீக்கு
 33. தோன்றிற் புகழோடு தோன்றுக.. நிச்சயம்தான் ஆனால் புகழ்பெறுவதற்காக உழைக்காமல் உண்மையாக பாடுபட்டால் ஒரு நாள் வெற்றிக்கனியும் புகழ் மாலையும் நிச்சயம்தான். உங்கள் வரவு நல்வரவாகட்டும் டிடி சகோ. தொடருங்கள்.

  பதிலளிநீக்கு
 34. வணக்கம்.
  உங்கள் பின்னூட்டங்களில் இருந்து முயல்கிறேன்.
  தோன்றின் புகழொடு தோன்றுக அஃதிலார்
  தோன்றலின் தோன்றாமை நன்று ( 236 )
  என்ற குறளின் பொருள்தேடித் தேடி இத்துணைபேர் இத்துணைமுறை வந்தும் பதிலளித்தும் சரியான பதிலுக்கென முயன்றும் அதனை நெருங்கியும் விலகியும் போய்க்கொண்டிருப்பதைக் கண்டு அறிவிடையுடனான ஆசிரியப்புன்னகை உங்களின் முகத்தொளிர்வதை அவதானிக்கிறேன். புதிரெழுப்புவோர்க்கும் விடுவிக்க முயல்வோர்க்கும் இடையிலான போராட்டங்களும் வெற்றி தோல்விகளும் எந்நிலையிலும் கொண்டாடத்தக்கவையே ஏனெனில், அறிதோறும் அறியாமை கண்டற்றால் ;)
  நிற்க,
  புகழென்னும் அதிகாரத்தின் (23-6) ஆறாவது குறளாக நாம் இன்று காணும் இவ்வரிசை பரிமேலழகர் உரையைப் பின்பற்றி நாம் வழங்கிவருவது. இம்முறைவைப்பைக் காரணகாரியத்துடன் நியாயப்படுத்திச் செல்வது. அவருடைய காலத்திற்கு முந்தைய உரையாசிரியர்களான ஒன்பது பேரில், மணக்குடவர், காளிங்கர், பரிதியார் என்ற மூவரின் உரைகள் மட்டுமே நமக்குக் கிடைத்துள்ளன.
  இம் மூவரின் உரைகள் எவற்றிலும் புகழ் என்னும் அதிகாரக் குறட்பா முறைவைப்பில், இக்குறள் ஆறாம் இடம் பெறவில்லை. இம்மூவருமே புகழ் என்னும் அதிகாரத்தின் முதற்குறளாக இதனைக் கொள்கின்றனர். இது குறள் வரிசையில் இக்குறள் பெற்றிருந்த முக்கியத்துவத்திற்காக!
  அடுத்து,
  இக்குறளின் ஏழு சீர்களுள் தோன்றின், தோன்றுக, தோன்றலின், தோன்றாமை என்னும் நான்கு சீர்கள் வருகின்றன. இந்நான்கு சொற்களுமே “தோன்று” என்ற பகுதியை உடையவை.
  இங்கு, இந்தத் தோன்றுதல் என்ற சொல்லைப் பிறத்தல் என்ற பொருளில்தான் நாம் பெரிதும் வழங்குகிறோம். அது உரையாசிரியர்கள் நமக்களித்த பார்வை. பழைய உரையாசிரியர்கள் எழுதியதாக நமக்குக் கிடைக்கும் நான்கு உரைகளுமே இக்குறளில் வரும் தோன்று என்னும் பகுதிக்குப் “பிற(த்தல்)“ என்னும் பொருளையே தருகின்றன.
  எனக்கும் அப்பொருளோடு உடன்பாடுண்டு. எவ்வாறேன்பதை எனது முந்தைய பின்னூட்டத்தில் குறிப்பிட்டிருக்கிறேன்.
  இங்கு இனி ஆராய்ச்சி, தாங்கள் மனதில் கருதியிருக்கும் பொருள், அல்லது அதற்கு ஏதுவாக அமைந்த குறள் எது என்பதுதான்.
  அதைக் கண்டறிய இயலாமற் போயினும், இக்குறளைக் குறித்து இன்னும் ஆழமாகச் சிந்திக்கும் வாய்ப்பாகவே இப்பின்னூட்டத்தைத் தொடர்கிறேன்.
  புகழ் இருக்கும் இடங்களைத் தேடி நானுட்பட பல மறுமொழியாளர்களும் இப்பதிவினூடே அலைந்து திரிந்திருக்கின்றனர். புகழ் தேடி அலைவது மனித இயல்புதானே? ;)
  நான் சற்றே திரும்பித் தோற்றம் தேடி அலைந்தேன். அதுவல்லவா ஆராய்ச்சி? ;)
  திருக்குறளில் தோன்று என்பதனைப் பகுதியாகக் கொண்டு வரும் குறட்பாக்கள் இதன்கீழ் நிரலிடப்படுகின்றன. இங்கு ஆய்வுக்குட்படுத்தப்படும் குறள் தவிர மேலும் 15 குறட்பாக்களில் தோன்று என்பதைப் பகுதியாகக் கொண்ட சொற்கள் வருகின்றன. இச்சொல் உணர்த்தும் பொருளும் ஆங்காங்கே கொடுக்கப்பட்டுள்ளது. இங்குக் காட்டப்படும் சொற்பொருள் பரிமேலழகருரை கொண்டு எழுதப்பட்டதாகும்.
  1. மலரன்ன கண்ணான் முகமொத்தி யாயின்
  பலர்காணத் தோன்றன் மதி ( 1119 ) - தோன்று – காட்சியளி-
  2. அளவறிந்து வாழாதான் வாழ்க்கை உளபோல
  இல்லாகி தோன்றாக் கெடும். ( 479 ) - தோன்றா – இல்லாதாதல்.
  3. ஊடிப் பெறுகுவங் கொல்லோ நுதல்வெயர்ப்பக்
  கூடலிற் றோன்றிய வுப்பு ( 1328 ) -தோன்றிய – உளதான
  4. மறைப்பேன்மன் காமத்தை யானோ குறிப்பின்றித்
  தும்மல்போற் றோன்றி விடும் (1253 ) - தோன்றி – வெளிப்பட்டு
  .............................தொடர்கிறேன்.............

  பதிலளிநீக்கு
 35. 5. மனமாணா வுட்பகை தோன்றின் இனம்மாணா
  ஏதம் பலவுந் தரும் ( 884 ) -தோன்றின் – உண்டாயின்.
  6. உறல்முறையான் உட்பகை தோன்றின் இறல்முறையான்
  ஏதம் பலவுந் தரும் ( 885 ) –தோன்றின் – உண்டாயின்.
  7. நலத்தின்கண் நாரின்மை தோன்றின் அவனை
  குலத்தின்கண் ஐயப் படும் ( 958 ) – தோன்றின் – உளதாயின்.
  8. ஆகூழாற் றோன்று மசைவின்மை கைப்பொருள்
  போகூழாற் றோன்று மடி (371) – தோன்றும் – உண்டாகும்.
  9. ஊடலில் தோன்றும் சிறுதுனி நல்லளி
  வாடினும் பாடு பெறும் ( 1322 ) – தோன்றும்- உருவாகும்.
  10. புல்லி விடாஅப் புலவியுட் டோன்றுமென்
  உள்ள முடைக்கும் படை (1324) தோன்றும் – உளதாகும்.
  11. கண்டா ருயிருண்ணுந் தோற்றத்தாற் பெண்டகைப்
  பேதைக் கமர்த்தன கண் ( 1084 ) - தோற்றத்தான் – உருவத்தான்
  12. வானுயர் தோற்ற மெவன்செய்யுந் தன்நெஞ்சந்
  தானுயர் குற்றப் படின் (272) – தோற்றம் – தவவேடம்.
  13. ஈட்ட மிவறி யிசைவேண்டா வாடவர்
  தோற்றம் நிலக்குப் பொறை ( 1003 ) – தோற்றம் – பிறப்பு.
  14. ஈவார்க ணென்னுண்டாந் தோற்ற மிரந்துகோள்
  மேவா ரிலாஅக் கடை ( 1059 ) – தோற்றம் – புகழுக்கு ஆகுபெயர்.
  15. நிலையிற் றிரியா தடங்கியான் றோற்றம்
  மலையினு மாணப் பெரிது (124) தோற்றம் – உயர்ச்சி.
  மேலே எடுத்துக்காட்டப்பட்ட குறட்பாக்களுள், 13 ஆவது இடத்தில் காட்டப்பட்ட குறளின் ஈற்றடியான “ தோற்றம் நிலக்குப் பொறை ” என்பது, புகழென்னும் அதிகாரத்தில் வரும் “ இசையிலா யாக்கை பொறுத்த நிலம் ” என்னும் குறளினோடு ஒத்த கருத்தமைவு உள்ளதாக அமைவது. இங்குவரும் “ ஈவார்கண் என்னுண்டாம் தோற்றம் ” என்பதில் வரும் தோற்றம் என்பதும் பிறப்பு என்பதையே சுட்டுகிறது.
  தோன்று என்னும் பகுதியை திருவள்ளுவர் கையாண்டுள்ள சொற்கள் வரும் வெவ்வேறு இடங்களுக்கு உரையாசிரியர்கள் அளித்துள்ள பொருளை அணுகி மாற்றாகச் சிந்திக்கும் இடத்து,
  தோற்றம் என்பதற்கு,
  நிலையின் திரியாது அடங்கியான் தோற்றம்
  மலையினும் மாணப் பெரிது ”
  என்னும் குறளிடத்து, தோற்றம் என்ற சொல்லுக்கு ‘ உயர்ச்சி ‘ என உரையாசிரியர்கள் கூறும் பொருளினை,
  ” தோன்றிற் புகழொடு தோன்றுக அஃதிலார்
  தோன்றலின் தோன்றாமை நன்று ”
  என்னும் குறளில் பொருத்த,
  ( வாழ்க்கையில் ) உயர்வதாயின் (தோன்றின்) பிறர் புகழுமாறு உயர்க (தோன்றுக). அவ்வாறன்றி, பிறரால் இகழப்படுமாறு ஒருவரது உயர்ச்சி ( வளர்ச்சி ) இருக்குமானால் அதற்குப்பதில், அவர்கள் உயராமல் தாழ்ந்த நிலையிலேயே இருந்துவிடலாம்.(தோன்றாமை நன்று)
  என்னும் பொருள் தருவதாய் அமைந்து பிறப்புச் சிக்கல் நீங்கி விடுகிறது. ;)
  மீண்டும், இதனைக் குறளின் சொல்லாட்சி, அதற்கான பழைய உரைவிளக்கம் இவற்றைக் கொண்டு, இக்குறளுக்கு இப்படியும் பொருள் கொள்ளத்தக்க இன்னொரு வாய்ப்பாகவே இதனைக் கொள்ள வேண்டும் என்பதையும் எனது தனிப்பட்ட கருத்தில் இறுதியாக் கூறிய இப்பொருளினோடு எனக்கு உடன்பாடில்லை என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
  நன்றி.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. உங்களின் தேடலும் சிந்தனையும் என்னை மிகவும் வியக்க வைக்கின்றன... தோன்றும் / தோன்றின் - உண்மையாக இந்தளவு சிந்தனை எல்லாம் செய்யவில்லை... இதுவும் எனக்கு ஒரு பாடம்... நன்றிகள் பல...

   அந்த குறிப்பிட்ட குறளுக்கு, பல உரையாசிரியர்கள் கூறியதை வைத்து எனது சிந்தனை அனைத்தும் ஒருபக்கமாகவே பல வருடம் இருந்தது... அதற்காக அவர்களை குறை சொல்லவில்லை... ஆனால், இது சரியாக இல்லையே என்று மனதில் ஒரு தடங்கலும் தொடந்து கொண்டே இருந்தது... அந்த தடங்கல் பிறகு தெளிவானதால், இந்தப் பதிவு பிறந்தது...

   சரி, நம் பதிவர்கள் சிந்தனைகளை அறிவோம் என்று தான் முயன்றேன்... பலரின் கருத்துரைகள் மூலம், தேடலில் உள்ள பல வழிகளை அறிந்து கொண்டேன்... இன்னும் அறிந்து கொள்ள ஆவலுடன் உள்ளேன்...

   கருத்துரை இட்டவர்கள் அனைவரும் மற்றவரிகள் கருத்துரையும் வாசிக்கிறார்கள் என்பதிலும் மகிழ்ச்சி... புதிய சிந்தனைக்கு அது தான் வித்து... தொடருங்கள்... மீண்டும் நன்றி...

   நீக்கு
 36. வணக்கம் ஐயா ! நீங்கள் சொன்னபடி ஜிஎம்பி அவர்களின் பதிவையும் பின்னூட்டங்களையும் வாசித்தபின் உங்கள் பதிவையும் பிறர் கருத்துகளையும் முழுக்க வாசித்தேன் .மகிழ்ச்சியாக இருந்தது ; எப்படியெல்லாம் சிந்திக்கிறார்கள் !
  நீங்கள் தொடர்வதை எதிர்பார்த்துக் காத்திருக்கிறேன் .

  பதிலளிநீக்கு
 37. ஒரு குறள எடுத்துக் கொண்டு பலவிதமாக விதண்டாவாதம் செய்யலாம். பல விதமாக அர்த்தம் கொள்ளலாம். பலவிதமாக புரிந்து கொள்ளலாம். விளக்கலாம். ஒரு சில விளக்கம் திருவள்ளூவர் சிந்திக்காதகவும் அது அவருக்கும் இன்னும் புகழ் சேர்ப்பதாகவும் அமையலாம். ;)

  கெட்டதுனு ஒன்னு தோணலைனா, நல்லதே இல்லாமல்ப் போய்விடும். சரியா?

  ஒருவர் புகழ் அடைவதே, புகழைடய தகுதியில்லாதர்வர்கள் பிறப்பதால்தானே?

  எல்லோரும் நல்லவராக பிறந்துவிட்டால், கெட்டவர் தோன்றாமலே போய்விட்டால், புகழ், நல்லவர் என்பதெல்லாம் அர்த்தமற்றது. இக்குறளே தோன்றீ இருக்காது சரியா?

  ஒருவர் புகழப்பட வேண்டுமென்றால் இகழப்படுபவர்கள் பிறக்க வேண்டியுள்ளது.

  அதனால்தான் உலகில் பல விதமான மனிதர்கள் இருக்காங்க. எல்லோரும் நல்லவரென்றால் திருவள்ளூவர்க்கு என்ன வேலை அல்லது தேவை???

  கோவிச்சுக் கொள்ள வேண்டாம் இது ஒரு சிந்தனை..

  பதிலளிநீக்கு
 38. பதிவும், பின்னூட்டங்களும் என்னை வியப்பில் ஆழ்த்தின...


  எத்தகைய விளக்கங்கள்...மிக அருமை...

  பதிலளிநீக்கு
 39. சிறப்பான பின்னூட்டங்கள். என்னால் இவ்வளவு ஆழமாக சிந்திக்க முடியுமா என்று தெரியவில்லை.
  நான் கொஞ்சம் எளிமையாக யோசிக்கிறேன். சரியா சொல்லுங்கள். 'தோன்றிர் புகழோடு தோன்றுக' இங்கே தோன்றுதல் என்பது வெளிப்படுதல், அல்லது தன்னை வெளிப்படுத்திக் கொள்ளுதல் என்று கொள்ளலாம். அப்படி தன்னை வெளிப்படுத்திக் கொள்வதை சிறப்பாக செய்ய வேண்டும்.
  தசாவதாரங்களில் மிகவும் சிறப்பாக சொல்லப்படுபவை நரசிம்ம அவதாரமும், வாமன அவதாரமும். காரணம் அவை வெளிப்பட்ட விதங்கள். எதிரிகளை செயலற்று போகச் செய்தது, வாயடைக்க வைத்தது இந்த இரண்டு அவதாரங்களும்.
  தோன்றுதலுக்கும், ஈகை குணத்திற்கும் முடிச்சுப் போடா தேவை இல்லை என்றே நினைக்கிறேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இந்த கோணத்தில் யோசிக்கவே இல்லை... அருமை... நன்றி...

   நீக்கு
  2. மிகவும் அருமை, பானுமதி. எனக்கு அர்ஜுனன் தான் நினைவில் வந்தான். அவனுக்கே இந்தக் குறள் பொருந்தும் எனவும் நினைத்தேன். அதான் கீதையில் தேடினேன்.

   நீக்கு
 40. பாடல் மற்றும் விளக்கம் நன்று பாராட்டுகள்

  பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

நகுதற் பொருட்டன்று நட்டல் மிகுதிக்கண்
மேற்சென்று இடித்தற் பொருட்டு. (குறள் 784)

நட்புச் செய்துகொள்வது நண்பரோடு சிரித்து மகிழ்வதற்காக மட்டும் அல்ல. மிகுதியாகத் தவறு செய்யும்போது, அவரைக் கடிந்து திருத்துவதற்கே ஆகும்.