தோன்றின் _____?_____ தோன்றுக

"அபியும் நானும்" திரைப்படத்தில் வரும் ஒரு காட்சி... அந்தப் படத்தை பார்க்காதவர்களுக்குக்காக ஓர் விளக்கம் :- தெருவில் திரியும் ஒரு பிச்சைக்காரனை அழைத்து வந்து, "நம்முடனேயே இருக்கட்டும்" என்று தன் தந்தையிடம் சொல்கிறார் மகள்... அந்த மகளின் மனதில் எந்த உணர்வு மிகுந்திருக்கும்....? சிலரை "குழந்தை மனசுய்யா அவங்களுக்கு" என்கிறோமே அது என்ன...? வேறு மாதிரி சிந்திப்போம்...

கொலை, பொய், களவு, மது அருந்துதல், குரு நிந்தை ஆகிய பஞ்சமாபாதகம் உட்பட மேலும் பல கொடுஞ்செயல்கள் செய்பவரை, "இவனெல்லாம் மனுசனா...? இவனுக்கு __ + _____ எல்லாம் இருக்காதா...?" என திட்டுகிறோம்... அறிந்து விட்டீர்களா...? ஆம் அதே தான்...! இனி படிப்படியாக தெரிந்து கொண்டு, புரிந்து பேசுவோம் வாங்க...

முந்தைய பதிவை வாசிக்காதவர்கள் →இங்கே சொடுக்கி← பின்னூட்டங்களையும் வாசித்து விட்டு தொடர வேண்டுகிறேன்...

எனது மனதுடன் ஓர் உரையாடல்...

தோன்றின் _____?_____ தோன்றுக அஃதிலார்
தோன்றலின் தோன்றாமை நன்று (குறள் எண் : 236)

என்னடா இது... ஒரு குறளுக்கு இவ்வளவு அக்கப்போரா...? படிச்சவுன்னே விளக்கம் புரிய வேண்டாமா...? இப்படி எல்லா பதிவர்களையும் அலைக்கழிக்கிறே, இது நியாயமா ? நான் ஒரு முடிவுக்கு வந்துட்டேன் !

படிச்சவுன்னே புரியிறதுக்கு இது கதையல்ல... உண்மையை தெரிஞ்சிக்கணும்ன்னா மெனக்கெடனும்... பின்னூட்டங்களை பார்த்தே இல்லே... அலைக்கழிப்பா அது...? இல்லை, ஆர்வமாக, உண்மையை தேடும் தேடல்... நானென்ன எல்லா குறளையுமா படிக்கச் சொன்னேன்...? அந்த அதிகாரத்திலே உள்ள குறள்களைத் தானே சொன்னேன்... இருட்டிலே மோதிரத்தை தொலைச்சிட்டு, "வெளிச்சத்தில் தேடுவோம் வாங்க"-ன்னு முல்லா கதை மாதிரி சொல்றே...!

ஹேஹே... நீயும் சொல்லிட்டே...! குறள் விளக்கத்தை 'வாசிக்கிறவங்க தான் சொல்லணும்'கிற வீராப்பை விட்டுடு... எனக்கு ரொம்ப இளகிய மனசு, "புகழ்"ன்னா என்னான்னு சொல்லிடப் போறேன்...! என்னால முடியலே...!

கொஞ்சம் பொறுத்தால் பலபேர் இன்னும் சிந்திப்பாங்க இல்லே... பலரின் சிந்தனைகளால் நம் சிந்தனை மேம்படும் இல்லே... இப்படி பண்ணிட்டியே...! ஏனிந்த இரக்கம்...?

நீ என்ன புதிரா போட்டே, அவங்க விடை சொல்றதுக்கு...? கருத்துரை சொன்னவங்க சில பேரு, கிட்டக்க கிட்டக்க வந்துட்டாங்க... சொன்னவிதம் தான் வேறு... முடிவிலே அர்த்தம் - நாம நினைச்சது மாதிரி இருக்குல்லே...! அதுவுமில்லாமே, அடுத்த மாசம் ஊர் ஊரா சுத்தணுமில்லே...?!

வீராப்பு கேன்சல்...! "ஆடிக்கு ஒரு தரம், அமாவாசைக்கு ஒரு தரம்" பழமொழி போல, நடுவே வெள்ளிவிழா பதிவை தவிர போன வருசம் ஆடியிலே பதிவு போட்டது, இந்த ஆடியிலே தொடங்கியிருக்கு...!

வியாபாரத்திற்காக எப்போ ஓடுவோம்-ன்னு தெரியாது... அப்போ நேரம் கிடைக்குமா...? இந்தளவு சிந்தித்து எழுத முடியுமா...? அதனாலே..........

ம்... பார்ப்போம்... சரி, "புகழ்"ன்னா என்னான்னு நீயே சொல்லு...

என்னத்த மறுபடியும் சொல்றது... நாம பேசியதிலேயே இருக்கே...! நீ ஆரம்பி... தகராறு பண்ண பாட்டு வரிகளோடு வர்றேன்...!

வணக்கம் நண்பர்களே... முந்தைய பதிவில், 'தேடி தேடி' கருத்துரை சொன்னவர்களுக்கும், சிந்தித்தவர்களுக்கும் எனது நன்றிகள் பல... புகழ் எனும் சொல்லுக்கு, மனதின் ஈரம் அல்லது இரக்கம் என்கிற பொருளே சரி... நடைமுறை பேச்சு வழக்கில் புகழ் என்பதற்கு என்ன சொல்வார்கள்...? பெருமை அல்லது சிறப்பு என்பார்கள்... சரி "புகழ்தல்" என்றால் என்ன...? அனைத்து பெருமைகளையும் விளக்கமாக விரிவாக போற்றிச் சொல்லும் "பெருமை பேசுதல்" ஆகும்... இந்தப் பெருமை எனும் சொல் உணர்த்தும் முதல் நிலைப் பொருள் 'இரக்கம்' என்பதே... இரக்கமில்லா மனிதருக்கு பெருமையே கிடையாது, பொறுமையும் கிடையாது...

புகழ் அதிகாரத்தில், ஐந்து முறை வரும் புகழ், நான்கு முறை வரும் இசை எனும் சொற்களும், ஒரு முறை வரும் வித்து எனும் சொல்லும், இரக்கப் பொருளில் தான் திருவள்ளுவர் சொல்லியுள்ளார்... அதை வரும் பதிவுகளில் சிந்திப்போம்... இப்போது நம் குறளுக்கு (236) பொருத்திப் பார்ப்போம் :-

ஒவ்வொரு செயலும் முயற்சியும் தோன்றும்போது இரக்கம் எனும் புகழ் நோக்கம் கொண்ட உயிர்கள் பிறக்க வேண்டும்... அவ்வாறு நோக்கம் இல்லாமல் தோன்றுவதினும் பிறக்காமல் போவதே நல்லது...

தன் பிள்ளைகளுக்காக எவ்வித தியாகமும் செய்யும் தந்தை, "நீயெல்லாம் பிறக்காமலே இருந்திருக்கலாம்..." என்பதையும், தன்னையே தியாகம் செய்யும் தாயோ, "உன்னையெல்லாம் பெத்ததுக்கு நான் செத்திருக்கலாம்..." என்பதையும் இன்றைக்கு அதிகமாக பார்க்கிறோம்... இந்தக் கொடுமையெல்லாம் அந்தக் காலத்திலேயே இருந்திருந்தால் இந்தக் குறளோ...? என்று நினைத்தால், அது மேலோட்டமாக குறளை புரிந்து கொள்வது போல... அதற்காக "யார் மீது தவறாக இருக்கும்" என்றோ, "பெற்றோர்கள் தரும் அறிவுரை / ஆலோசனை / தண்டனை மூலம் சரியாகும்" என்றோ சிந்திப்பது இங்கு முக்கியமல்ல... தன் மகனே தவறு செய்தாலும், அவனை கொல்வதை திரைப்படத்தில் (இந்தியன்) பார்க்கலாம்... ஆனால், நிஜத்தில்...? அப்படிப்பட்ட தந்தையின் வெறுப்பும் தாயின் துயரமும் எப்படி சமாதானம் அடையும் என்பது தான் முக்கியம்... அது :- "நம்ம புள்ளே வேறே எப்படி இருப்பான்...? நம்மளை மாதிரி தான்...!"

ஆக, முதலில் வளர்த்த விதமும், பிறகு அவர்கள் வளர்ந்த விதமும் பொறுத்து தான் அனைத்தும் அமையும் என்பார்கள் பலர்... இன்றைக்கு நினைத்து பார்க்கவே முடியாத பல குற்றங்கள் நடப்பது ஏன்...? பலரும் கல்நெஞ்சர்களாக மாற்றிக் கொண்டிருக்கிறார்கள்... இரக்கமற்ற மனிதர்களின் வழி வந்தவர்கள் எண்ணிக்கை பெருகுகிறது... இப்படிப்பட்ட ஆட்களைத் தான் பிறக்காமல் இருப்பதே நல்லது என்கிறார் திருவள்ளுவர்...

சரி, "இப்படி எல்லாம் எங்கள் குடும்பத்திலேயே... அவ்வளவு ஏன், எங்கள் பரம்பரையிலேயே கிடையாது..." என்றால், ஈவும் இரக்கமும் உடைய தயாள சிந்தனை கொண்டவர்களின் வழி வந்தவர்கள்... அவர்கள் எல்லாம் நெஞ்சில் இரக்கத்துடன் இருப்பார்கள்... ஆக, இரக்கம் என்பது வழிவழியாக தொடரும் ஒரு குலத்தின் பண்பு ஆகும்... இந்த பண்பு தான் அதிகம் பெருகி, உலகம் வளம் பெற வேண்டும், அதனால் இந்த உலகில் உயிர்கள் பிறப்பதானால் இரக்கத்துடனே பிறக்கட்டும் என்று நம்ம தாத்தா விரும்புகிறார்...

எந்தக் குழந்தையும் நல்ல குழந்தைதான் - மண்ணில் பிறக்கையிலே (2) பின் நல்லவராவதும் தீயவராவதும் - அன்னை வளர்ப்பதிலே (2)© நீதிக்கு தலை வணங்கு புலமைப்பித்தன் M.S.விஸ்வநாதன் K.J.யேசுதாஸ் @ 1976 ⟫

அடேய்... வந்துட்டியா...? அன்னைக்கு பதிலா ஆயா...! இன்னைக்கு பல வீட்டிலே அப்படித்தான்...! சரி, அதை விடு... எந்த அம்மாவாவது, "தண்ணியடி, புகைபிடிக்க கத்துக்கோ, திருடு, கொள்ளை அடி, கொலை செய்"-ன்னு சொல்லியா கொடுக்குது...? "நல்ல பண்பு தவறிய பிள்ளையைப் பெற்றவர் - பேர் சொல்லி வாழ்வதில்லை..." பாட்டு முடிவிலே இப்படி இருக்கே... இதை தான் சிந்திக்க வேண்டும்...

குழந்தையும் தெய்வமும் குணத்தால் ஒன்று - குற்றங்களை மறந்து விடும் மனத்தால் ஒன்று... நடந்ததெல்லாம் நினைப்பதெல்லாம் துயரம் என்று - ஞானிகளும் மேதைகளும் சொன்னார் அன்று...© குழந்தையும் தெய்வமும் வாலி M.S.விஸ்வநாதன் P.சுசீலா @ 1965 ⟫

க்கும்... இதிலேயும் "பிள்ளைகளாய் இருந்தவர் தான் பெரியவரானார் - அந்தப் பெரியவர்கள் கோபத்தினால் சிறியவரானார் (2) கள்ளமில்லா உள்ளத்தினால் பிள்ளைகளெல்லாம் (2) - என்றும் கண்ணெதிரே காணுகின்ற தெய்வங்களானார் (2)" வரிகள் முக்கியம்... சாகப்போற நேரத்திலே ஞானம் வந்தா...? குழந்தைகளா இருக்கும் போது எல்லோரும் தெய்வங்கள் தான்...! பிறகு ஏன் மாறுது...? அப்பா அம்மா செய்ற எல்லாத்தையும் பாக்குது, கேட்குது, பழகுது... வளர வளர, நல்லதோ கெட்டதோ அதுவும் கூடவே வளருது...! இதைத்தான் பிறவிக்குணம்-ன்னு சொல்வாங்க...! மனசுலே ஏதோ ஒன்னு இடறுகிறதே... ம்,சரி... நான் பாட்டு பாடினா தான் நீ அடங்குவே...!

திட்டும் வாயை பூட்டி வச்சாலும், திருடும் கையை கட்டி வச்சாலும், தேடும் காதை திருகி வச்சாலும், ஆடும் கண்களை அடக்கி வச்சாலும் (2) - மாறாதையா மாறாது... மனமும் குணமும் மாறாது...© குடும்பத்தலைவன் கண்ணதாசன் K.V.மகாதேவன் T.M.சௌந்தரராஜன் @ 1962 ⟫


ஓ... பெற்றோரும் எப்போ மாறுவாங்க-ன்னு கேட்கிறியா...? அப்பாவை மீண்டும் இரக்கத்தை கற்றுக் கொடுக்கும் காட்சியும் உண்டு... தெருவில் திரியும் ஒரு மனநிலை சரியில்லாத பெண்ணிற்கு, பர்ஸோடு தனது சட்டையும் கொடுத்து விட்டு, வீட்டிற்கு பனியனோடு நடந்து போகும் அப்பாவின் பெருமித காட்சி...! இன்றைக்கு குழந்தைகளிடமிருந்து(ம்) பெற்றோர்கள் கற்றுக் கொள்ள வேண்டும் என்பதை ஆழமாக சொல்லும் திரைப்படம்... நல்லவர் நட்பு, இரக்கக் குணம், கொடைப் பண்பு, இன்னும் பல நல்ல நல்லொழுக்கங்களும் பிறவியிலேயே பதிந்திருந்தால்தான் வரும் என்பார்கள்... இந்த மாதிரி குழந்தை இருந்தால், பிறவிக்குணமும் மாறலாம்... மனசே, இடறல் சரியாச்சி... தெளிவா இன்னொன்றும் சொல்லியாகணும்...

இப்படியும் உண்டு... சிலர் மிகவும் ஈகையுடனும் இரக்கத்துடனும் வாழ்கிறார்கள்... இதற்கு எதிர்மறையாக வாழ்ந்தவர்கள் அவர்களின் பெற்றோர்கள்...! சமீபத்தில் அந்த நண்பரை சந்தித்தேன்... குறள் விளக்கத்தில், "இரக்கமற்ற மனிதர்களின் வாரிசுகள்... தயாள சிந்தனை கொண்டவர்களின் வாரிசுகள்..." என்று சொல்லாமல், இரு வரிகளிலும் "வழி வந்தவர்கள்" என்று சொன்னதற்கு காரணம் இது தான்... இரக்கத்திற்கு உதாரணமான விவசாயி மழையை வேண்டுவது போல் நாமும் வேண்டுவோம் :-

இரக்கமே இரங்கி வந்து உலகை சூழ்...

மேலும் தங்களின் விளக்கம் என்ன நண்பர்களே...?

புதிய பதிவுகளை பெறுதல் :


தொடர்புடைய எண்ணங்களின் வண்ணங்கள் சில :


முகநூல் மூலம் கருத்துக்களை பகிர :

கருத்துகள்

 1. அருமை ஜி கேள்வியும், பதிலுமாக அழகிய விளக்கம்.

  நம்மைப் பார்த்துதான் குழந்தைகள் வளர்கிறது என்பதை அப்பாமார்கள் உணர்தார்கள் எனில் அவர்களை விட்டே கடையில் சிகரெட் வாங்கி வரச்சொல்வார்களா ? வீட்டில் மது அருந்துவார்களா ?

  விதைத்ததே விளையும், ஆகவே குழந்தைகள் மனதில் நல்லவைகளை விதைப்போம்.

  பதிலளிநீக்கு
 2. இப்படி வயசானவனை இப்படி சிந்திக்க வைக்கிறீங்களே தனபாலன்

  பதிலளிநீக்கு
 3. புகழை விளக்கும் இரு பதிவுகளையும் வாசித்தேன் அண்ணா,
  பாடல்கள் அத்தனையும் அருமை,அபியும் நானும் படம்
  பார்த்து ரொம்பநாள் ஆச்சு,

  பதிலளிநீக்கு
 4. தங்களுக்கே உரித்தான உத்தியில் குற்ள் விளக்கம்.. குறள் இரண்டடியாக இருப்பினும் அது சொல்லும் செய்திகள் ஏராளம்.மீண்டும் வலைப் பக்கம் புத்துணர்வு பெறுவதில் மகிழ்ச்சி

  பதிலளிநீக்கு
 5. இரக்கத்தோடு தோன்றி இரக்கத்தோடு வாழ்வோம்.
  அத்தனை பாடல்களும் அருமையான பாடல்கள்.
  உண்மைதான் பெற்றோரைப் பார்த்தே பிள்ளைகள் வளர்கிறார்கள்.

  ஒரு போதும் மாறாத நன்னடத்தை கொண்ட பெற்றோரின் பிள்ளைகளூம்
  மாறுவதில்லை.
  இனிய காலை வணக்கம் தனபாலன்.

  நற்செய்தியைப் பதிவிட்டதற்கு மிக நன்றி.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இக்காலத்தில் பெற்றோர்கள் மட்டும் நன்னடத்தை உள்ளவர்களாக இருந்தால் மட்டும் போதாது. தங்கள் குழந்தைகளையும் அவ்வாறு கண்காணித்து நல்ல பண்புகளுடன் வளர்க்க வேண்டும். இன்று பல குடும்பங்களில் பார்க்கின்றோம். இவ்வளவு நல்லவர்களுக்கா இது போன்ற பிள்ளைகள் என்று

   நீக்கு
  2. வணக்கம் ஐயா... தங்களின் கருத்துரைக்கு மிக்க நன்றி...

   "நம்ம புள்ளே வேறே எப்படி இருப்பான்...? நம்மளை மாதிரி தான்...!" என்று கடந்து போவது மிகப்பெரிய தப்பு...

   ஐந்தில் வளையாதது ஐம்பதிலே வளையாது... பழமொழி சரி தான்... ஐந்துக்குள்ளேயே வளைக்க, முயற்சிப்பதில்லையே ஏன்...?

   நீக்கு
  3. குழந்தைகள் மீது கண்மூடித்தனமான பாசம் வைத்திருக்கும் பெற்றோர்கள் குழந்தைகள் தவறுகள் செய்யும்போது கண்டித்து திருத்துவதில்லை. ஒழுங்கையும் ஒழுக்கத்தையும் 7 வயதிற்குள் குழந்தைகளுக்கு கற்பித்துவிட்டால். அவர்கள் வாழ்நாள் முழுவதும் தவறான வழிக்கு செல்லமாட்டார்கள். அவ்வாறு செய்ய தவறினால் இருவருமே பாதிக்கப்படுவார்கள்.

   நீக்கு
  4. என்னைப் பொருத்தவரை 5 வயது வரை... அதுவரை கண்காணிப்பு... அதற்கு அடுத்த 5 வயது வரை கட்டுப்பாடு... அதற்கு அடுத்த 5 வயது வரை நல்லது கெட்டதை கற்பித்தல்...

   பிறகு நாம் அவர்களிடமிருந்து கற்றுக் கொள்ளலாம்...

   நீக்கு
 6. எனக்கு ஒரு ஆச்சரியமும் வருத்தமும் என்னவென்றால் அனைத்து விதமான தேவைப்படுகின்ற நல்ல குணங்களை, கருத்துக்களை நம் குழந்தைகளுக்கு கற்றுக் கொடுத்தாலும் அவர்களைச் சுற்றியுள்ள பெரும்பான்மையினர் கொண்ட குணங்களை, அதன் பாதிப்புகளைத்தான் அவர்கள் பெற்று வருகின்றார்கள். இது குறித்து எழுதவும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இன்றைய நிலைமைக்கு சொல்லவே வேண்டாம்... கண்டிப்பாக பாதிப்புகள் அதிகம்... அதிலிருந்து மீள வைப்பதே நமக்கு வேலை... அதை விட தோல்விகளையும், அவமானங்களையும் எப்படி எடுத்துக்கொள்ள வேண்டும் என்று புரிய வைப்பது பெரிய வேலை...

   "பிறவிக்குணம் மாறவே மாறாது" என்பார்கள்... அதில் எனக்கு உடன்பாடியில்லை... மாறி வாழ்பவர்கள் பலர் உண்டு (பல விசயங்களில் என்னையும் சேர்த்து...!)

   "சமீபத்தில் அந்த நண்பரை சந்தித்தேன்" என்று பதிவின் முடிவில் சுருக்கமாக முடித்து விட்டேன்... விளக்கமாக எழுத வேண்டுமெனில் தனி பதிவு எழுத வேண்டி வரும்... இப்போதும் சுருக்கமாக சொல்கிறேன்...

   "இவனா இப்படி...?" என்னை வியக்க வைத்த நண்பர்கள் உண்டு... ஏனெனில் அவர்களின் பெற்றோர்களை பற்றி நன்றாகவே அறிவேன்... அதில் ஒரு நண்பன் பட்ட துன்பங்கள் கொஞ்ச நஞ்சமல்ல... அதை விளக்கமாக சொல்ல விரும்பவில்லை... அவன் முடிவாக சொன்னதை சொல்கிறேன்... "எனது பெற்றோர்கள் அப்படி, ஆனால், நான் இப்படித்தான் வாழ்வேன்" என்பது...! அதனால் தான் பிறவிக்குணம் கூட மாறும் என்றேன்...!

   மேலும் விளக்கம் இந்த அதிகாரத்தின் முதல் குறளில் வரும்... வரும் 2/3 பதிவுகளில், இந்த அதிகாரத்தின் அனைத்து குறள் விளக்கங்களுக்கும் எனது அனுபவத்தில் நடந்தவைகளையே கொண்டு எழுதப் போகிறேன்... நன்றி...

   நீக்கு
  2. தனபாலன் சார்... 'பிறவிக் குணம்' என்பது 'நம்முடன் பிறக்கும்போது நமக்கு இருக்கும் குணம்'. இதனைப் பெற்றோருடைய குணத்துடன் தொடர்புபடுத்தத் தேவையில்லை. தந்தை நல்லவனாக இல்லாதபோதும் பையன் மிக நல்லவனாக இருப்பது சகஜம்தான். அந்தக் குணம் அவன் குடும்பத்தில் வேறு ஒருவருடைய குணத்தை ஒத்திருக்கும். நாமே இதனை நம் பசங்கள்ட கண்டுகொள்ளலாம். சிலர், ரொம்ப நல்லவங்களாக இருப்பாங்க, சிலர் செண்டிமெண்டலா இருப்பாங்க, சிலருடைய குணம் நம் மனைவியின் வீட்டாரை ஒத்து இருக்கும். இது எல்லாம் ஜீன் பெர்முடேஷன் காம்பினேஷன் தான். ஹா ஹா.

   இன்னொன்று, அனுபவமும் நம் குணத்தை மாற்றும். குடிகாரனின் மகன், தந்தை குடித்ததால் குடும்பம் எவ்வளவு பாதிக்கப்பட்டது என்பதைப் புரிந்துகொண்டு, குடி பக்கம் மறந்தும்கூட போகாமலிருப்பதை நாம் பார்த்திருக்கிறோமே. இன்னொன்று, அப்பாவின் அடக்குமுறை தாங்காமல், மனதளவில் எதிர்ப்பு தெரிவிப்பதாக எண்ணிக்கொண்டு, கெட்ட வழக்கங்களில் ஈடுபட்டு தன்னை அழித்துக்கொள்பவர்களும் உண்டல்லவா?

   நீக்கு
  3. இதைத் தான் எதிர்பார்த்தேன்... அருமையாக சொன்னீர்கள்... நன்றி...

   நீக்கு
 7. சுவாரஸ்யமான பதிவு... நல்ல குணங்களையும் புகழின் அளவையும் சமுகமே தீர்மானிக்கிறது

  பதிலளிநீக்கு
 8. ஜோதிஜி... நீங்கள் சொல்வதை ஆழ்ந்து சிந்தித்தாலே தெளிவுபட்டுவிடும்.

  இரண்டு குடும்பங்கள் மட்டுமே உலகில் இருந்து, நல்லவனின் பையன், கெட்டவனைப் பாத்துக் கற்றுக்கொண்டு, கெட்டவனாகி.... இப்படியே பல்கிப் பெருகித்தான் உலகில் கெட்டவர்கள் அதிகம் என்ற பொது எண்ணம் மனதில் உருவாகிறது. உண்மையில் அப்படி இருக்க சாத்தியம் இல்லை. பொதுவாக நல்ல எண்ணங்கள் குறைவாகவும் கெட்ட எண்ணங்கள் மிகுந்து இருப்பதுதான் உலக இயல்பு. பெற்றோர் நல்லன சொல்லி வளர்க்கும்போது பையன் தடம் மாறினாலும் ஒரு சமயத்தில் பெற்றோர் சொல்லிக்கொடுத்தபடி நடக்க ஆரம்பிப்பான். அது, அவனுக்கும் குழந்தை பிறந்து அதற்காக மாறும்படியாகவோ இல்லை தானே தவறுகளைப் புரிந்துகொண்டதினாலேயோ இருக்கும்.

  என் தந்தை எப்போதும் சொல்வது, சேர்க்கை சரியாக இருக்கணும் என்றுதான்.

  பொதுவாக பதின்ம வயதில் பெற்றோர் சொல்வதை மீறணும், உலகம் பெற்றோர் சொல்லிக்கொடுத்தபடி இல்லை, என்று நினைப்பது உலக இயல்புதான். (அதைத்தான் 20களில் கம்யூனிசச் சிந்தனையும் 60களில் ஆன்மீகச் சிந்தனையும் வராதவர்கள் கிடையாது என்று சொல்வார்கள்)

  தனபாலன் என்ன எழுதுகிறார் என ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. 'உன் நண்பனைக்காட்டு உன்னைத் சொல்கிறேன்' என்பதும் இது போலதான் என்று நினைக்கிறேன். கோபப்படும் பெற்றோருக்கு சாந்தமான மகன் இருப்பான். போதைப் பழக்கம் உடைய தந்தையின் மகன் அந்தப் பழக்கத்தையே வெறுப்பவனாயிருப்பான். அவை அவனுக்கு நேரும் அனுபவங்களால் அமைகிறது.

   நீக்கு
  2. உண்மை உண்மை... ISO Consultant - ஆக இருந்தபோது, நீங்கள் சொன்னது போல் ஒரு தொழிலாளி பயிற்சி வகுப்பில் இருந்தார்... அவரின் நற்குணங்களை மற்ற தொழிலார்கள் மூலம் அறிந்து வியந்தேன்... என்றும் மறக்க முடியாத முதலாளி அவர்...

   நீக்கு
 9. அந்த குழந்தைக்கு காருண்யம், கருணை, அன்பு ஈரம் இருக்கிறது.

  பதிலளிநீக்கு
 10. கொடுஞ்செயல்கள் செய்பவரை நெஞ்சில் ஈரமே இல்லையா என்று கேட்போம்.

  பதிலளிநீக்கு
 11. தனபாலன், தோன்றில்.. குறளுக்கு உங்கள் விளக்கம் பொருந்தினாலும் ரொம்ப stretch செய்து, அதாவது வலிந்து பொருள் கொள்வதைப்போல் எனக்குத் தோன்றுகிறது.

  இரக்கம் மிக முக்கியமான குணம் என்பதில் சந்தேகமில்லை. அதுதான் மனிதப் பிறவியின் ஆதார குணம். ஆனா இந்தக் குறள் அதைச் சொல்வதுபோல் தெரியலை.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இன்னும் இந்த அதிகாரத்தில் ஒன்பது குறள்கள் மீதம் உள்ளன... அவற்றில் மேலும் சிந்திப்போம்...

   அவற்றையும் இந்தப் பதிவு போல் எழுத வேண்டும் என்று நினைத்தேன்... சொந்த காரணங்களால் முடிவை மாற்றிக் கொண்டேன்... கருத்துரையில் பேசிக் கொள்வோம் என்கிற முடிவிற்கு வந்து விட்டேன்... நன்றி...

   நீக்கு
 12. கீழே உள்ளதை படிக்காமல் பதில் சொல்லி விட்டு கீழே படித்தேன்.அருமையான பதிவை முழுதும் படித்து விட்டு வருகிறேன்.

  பதிலளிநீக்கு
 13. இரக்கம் என்ற குணம் பிறப்பின்மூலம்தான் வருமா இல்லை கற்றுக்கொடுத்தலின் மூலமும் வருமா? மாரல் சயின்ஸ்வகுப்புகள் இல்லாத்தும் இரக்கம் குறைந்ததற்குக் காரணமாகச் சொல்லலாமா?

  நீரளவே ஆகும் நீராம்பல் செய்யுளின் உங்கள் புரிதலையும் நேரம் கிடைக்கும்போது எழுதவும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. (நீர் அளவே ஆகுமாம் நீர் ஆம்பல்) மூதுரையில் - அவ்வையார் சொன்னது இந்த குறள் போல...

   வெள்ளத் தனைய மலர்நீட்டம் மாந்தர்தம்
   உள்ளத் தனையது உயர்வு (குறள் எண் 595)


   இதற்கு பதில் சொல்ல வேண்டும் என்றால், இதற்கு முன் அவ்வையார் சொன்னதே பதில்...

   அட்டாலும் பால் சுவையில் குன்றாது அளவளாய்
   நட்டாலும் நண்பு அல்லார் நண்பு அல்லர்
   கெட்டாலும் மேன்மக்கள் மேன்மக்களே சங்கு
   சுட்டாலும் வெண்மை தரும்.


   நற்பண்பு இல்லாதவர்களிடம் பழகினாலும், அவர்கள் நண்பர்களாக மாட்டார்கள்... தன் நிலை எவ்வளவு தாழ்ந்து இருந்தாலும் நற்பண்பு உள்ளவர்கள் சிறப்பாக பழகி நட்பு கொள்வார்கள்... அந்த நட்பு எவ்வளவு காய்ச்சினாலும் சுவை குன்றாத பாலைப் போன்றது... மேலும் அந்த நட்பு தீயிலிட்டு சுட்டாலும் மேலும் மேலும் வெளுக்கும் சங்கினைப் போன்றது...
   என்று சொல்லி விட்டார் அவ்வையார்... அதன் பிறகு தான் சொல்கிறார் :-

   நீர் அளவே ஆகுமாம் நீர் ஆம்பல்; தான் கற்ற
   நூல் அளவே ஆகுமாம் நுண் அறிவு-மேலைத்
   தவத்து அளவே ஆகுமாம் தான் பெற்ற செல்வம்
   குலத்து அளவே ஆகும் குணம்


   நீரின் அளவு எவ்வளவு இருக்கிறதோ, அல்லிப்பூ அவ்வளவே வளரும்... நாம் கற்ற நூல்களின் அளவே நம் அறிவு...

   இதுவரை அவ்வையின் கருத்தை ஏற்கிறேன்... அடுத்து :-

   முற்பிறப்பில் செய்த புண்ய காரியங்களின் அளவே, நாம் இப்போது அனுபவிக்கும் செல்வம்... குணம் என்பதும் நாம் தோன்றிய குலத்தின் அளவே...

   இதை தான் என்னால் ஏற்க முடியவில்லை... ஜோதிஜி அவர்களுக்கு கொடுத்த மறுமொழியை வாசிக்க வேண்டுகிறேன் ஐயா...

   நம்ம பாட்டியையும் நினைக்க வைத்தமைக்கு நன்றி...

   நீக்கு
  2. 'வெள்ளத்தனைய மலர் நீட்டம்' - என் மனதிலும் வந்தது. இதை, 'உள்ளுவதெல்லாம் உயர்வு உள்ளல்' என்ற குறளோடும் தொடர்பு படுத்தலாம்.

   'சங்கு சுட்டாலும் வெண்மை தரும்' மனதில் இருக்கு ஆனால் 'அட்டாலும் பால் சுவையில்' ஞாபகம் இல்லை (ஆரம்ப வரிகளெல்லாம்).

   'குலத்தளவே ஆகுமாம் குணம்' என்பதை, 'சாதி, மதம்' வைத்துப் புரிந்துகொள்ளத் தேவையில்லை. ஒவ்வொரு குடும்பத்தையும் 'குலம்' என்றுதான் சொல்வார்கள் (எங்கள் குலக்கொடி என் பெண், பத்து வருடங்கள் கழித்து எங்கள் குலம் தழைக்க வந்தவன் இந்த மகன் என்ற தொடர்களைக் கேள்விப்பட்டிருப்பீர்களே). மேன்மைக் குணங்கள் இருக்கும் குலத்தில் வந்தவர்கள், மேன்மைக் குணங்கள் பொருந்தியவர்களாகவே இருப்பார்கள் என்பதுதான் அவ்வை சொல்லவந்தது.

   இதை எழுதும்போது தமிழ்த் தாத்தா எழுதிய 'கவிராயர்' ஒருவரது வரலாறு நினைவுக்கு வருகிறது (பெயர்கள் மறந்துவிட்டது). பெரிய கொடை குலத்தில் பிறந்த ஒருவன், அவன் பிறக்கும் முன்பே குலம் பணமில்லாது ஏழையாகிவிட்டது, இவர், வண்டி ஓட்டிப் பிழைக்கிறார். அதில் கவி ஒருவர் ஒரு நாள் ஏறிச் செல்கிறார், கூலியாக பணமும், காலையில் சாப்பாடும் போடுவதாகப் பேச்சு. இரவில் வண்டியில் சென்றுகொண்டிருக்கும்போது கவிராயர் தன் கதையைச் சொல்லுகிறார் (தன் முன்னோர்களை அந்தப் பணக்காரர் ஆதரித்தார், இப்போது நல்ல நிலையிலிருக்கிறோம் என்று). மறுநாள் கவிராயர் வீடு வந்ததும், கூலியும் சாப்பாடும் பெற்றுக்கொள்ளாமல் வண்டியோட்டி திரும்புகிறார், காரணம், கொடுத்த கொடையிலிருந்து பணத்தைப் பெற்றுக்கொள்வது முன்னோருடைய குணத்துக்கு ஏற்றதல்ல என்று (நால் சுவையாகச் சொல்லலை). அதைத்தான் 'குலத்தளவே ஆகுமாம் குணம்' என்று புரிந்துகொள்கிறேன்.

   நீக்கு
  3. கெட்டாலும் மேன் மக்கள் மேன் மக்களே - பொருள் குறைவினால், ஏழையானாலும், 'மேன்மை உடையவர்கள்' எப்போதும் 'மேன்மைப் பண்புகள்' குன்றாதவராய் இருப்பார். (அதேபோல் பணம் மிகுந்து வந்தாலும் மேன் மக்கள் தங்கள் நற் பண்புகளை விட்டுவிட மாட்டார்கள்).

   எனக்கு இதற்கு உதாரணமாக மனதில் தோன்றுவது எஸ்.எஸ்.வாசன் (விகடன் அதிபர்) அவர்கள். தேவர் மறைவுக்குப் பின்பு, அவர் மகன் தண்டபாணி அவர்களும், தன் தந்தையால் வளர்ந்தவர்களிடம் உதவி கேட்க மிகவும் கூச்சப்படுகிறார். இதுவும் மேன்மைக் குணம்தான்.

   நீக்கு
  4. சிறு சூதாட்டத்தில் வந்த பணமோ, தவறான வழியில் வந்த பணமோ, மற்றவர் மனம் நொந்து கொடுத்த பணமோ, மற்றவர்களிடம் நம் அறிவுத்திறமையால் (அப்படி நினைத்துக் கொண்டு) புடுங்கிக் கொண்டு வந்த பணமோ.... ஆரம்பத்தில் நம் வாழ்வு இனிக்கும்... பிறகு துயரம் தான்... ஆனால் அப்போது, "ஏன் இவ்வாறு ஆனது...?" என்று நினைக்கக் கூட தோன்றாது... அது தான் நமக்கு உலகம் கற்றுக் கொடுக்கும் பாடம்... இதுவும் என் அனுபவத்தில் கண்ட உண்மை...

   நீக்கு
  5. உங்கள் அனுபவத்தையே ஒரு பதிவாக எழுதுங்களேன் சார்.. உங்கள் பாணியில், 'அழக் கொண்ட எல்லாம் அழப்போம்' என்பதோடு சேர்த்து.

   நீக்கு
  6. வலையுலகில் முதல்முதலாக குறளின் குரலாக பதிவு செய்தது "சொல் வன்மை" அதிகாரம்... இதன் அடுத்த வினைத் தூய்மை அதிகாரத்தில் வருவது தான் தாங்கள் குறிப்பிட்ட "அழக்கொண்ட எல்லாம் அழப்போம் (659)" எனும் குறள்... ஆனால் அவ்வாறு தொடரவில்லை... சென்னை Binny Ltd, B&C Mills- ல் பணி செய்து கொண்டு இருந்த போது, எனக்கு ஏற்பட்ட அனுபவத்தை குறளின் குரலாக எழுதினேன்... அவை :

   அதிகாரத்தின் பெயரும் / பதிவின் தலைப்பும் :-
   1) சொல்வன்மை / அப்படிச் சொல்லுங்க...! - சொல்வன்மை மட்டும் உதவாது என்பதால் அடுத்து
   2) அவைஅறிதல் / சரியாச் சொன்னீங்க...! - இதற்காக நம்மிடம் இருக்கக்கூடாததை... அடுத்து
   3) புறங்கூறாமை / பரணி-பரணி-தரணி - இதற்கு மேலும் பயம் இருக்கக்கூடாது... ஆகவே அடுத்து
   4) அவை அஞ்சாமை / அருமையாச் சொன்னீங்க...!

   இனிய நினைவுகளை நினைவு படுத்தி விட்டீர்கள்... தங்களின் விருப்பப்படி கண்டிப்பாக எழுதுவேன்... நன்றிகள் பல...

   நீக்கு
 14. இரக்கத்தோடு தோன்றுவதும் முன் ஜென்மம் பாலபலன்களை பொறுத்து என்று சிந்தாந்தம் சொல்லுதே!

  பதிலளிநீக்கு
 15. வானம் இரங்கி வந்து இப்போது மழை பொழிந்து உயிர்களை வாழ வைத்து அனைவரையும் இரக்கத்தோடு ஈரநெஞ்சோடு வாழ வைக்கட்டும்.

  பதிலளிநீக்கு
 16. காலத்துக்கு ஏற்ற பதிவு.
  சமூகமும் வளர்ப்பில் பங்கு கொள்ள வேண்டும்.அதற்கும் பொறுப்பு இருக்கிறது.

  பதிலளிநீக்கு
 17. நல்ல பதிவு. பாடல் பகிர்வு அருமை.
  இப்படி நல்லவைகளை பகிர்ந்து கொள்ள நேரம் ஒதுக்கி வாருங்கள் தனபாலன்.

  பதிலளிநீக்கு
 18. சிறிய இடைவெளிக்குப் பின்னரான உங்களது நீண்ட, ஆழமான பதிவு மறுபடியும். உங்களுடைய சிந்தனையும், ஒப்புநோக்கலும் எங்களுக்கு புதிய செய்திகளை மாறுபட்ட பரிமாணத்தில் தருகின்றன. நன்றி.

  பதிலளிநீக்கு
 19. நிறைய வார்த்தைகள் அந்தக் காலத்துக்கும் இந்தக் காலத்துக்கும் மாறுபட்ட பொருளைத் தருகின்றன. அதில் இதுவும் ஒன்று போலும்.

  பதிலளிநீக்கு
 20. //தன் மகனே தவறு செய்தாலும்.... //

  மதனந்தபுரம் ஹாசினி கொலைகாரனை நினைவுக்கு வரவில்லை? தனது மகன் மேல் இரக்கப்பட்ட அந்தத் தாயின் நிலை என்னவானது?

  எந்த அம்மாவாவது "தண்ணியடி, திருடு, புகை பிடிக்கக் கத்துக்கோ என்றெல்லாம் சொல்வதில்லைதான். அதே சமயம் தன் மகன் பள்ளியிலிருந்து பேப்பரையோ பென்சிலையோ கொண்டுவந்து விட்டால் கண்டித்துத் திருப்பிக் கொடுக்கச் சொல்லுவதும் இல்லை.விடுப்பு போட பொய்க்காரணங்களையும் கற்பிக்கிறார்கள் பெற்றோர்!

  பதிலளிநீக்கு
 21. குழந்தைகள் கீழே விழுந்தால் கூட "அழாத கண்ணு.. இந்த தரையை அடிச்சுடுவோம்" என்று தரை மீது எதிர்ப்பை வளர்த்து வெறுப்பை வளர்க்கும் பெற்றோரும் காரணர்களே!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆமாம், அதே போல் பாட்டி, தாத்தா வீட்டில் இருந்தால் குழந்தைகள் தவறு செய்தால் கண்டிப்பதில்லை. இது தப்பு,இப்படிச் செய்யக் கூடாது எனச் சொல்லுவதில்லை. மாறாக அம்மா வந்தா அடிப்பா, என்பார்கள். இதை என் அனுபவத்திலேயே சொல்கிறேன். படிக்க உட்காருங்க என்றும் சொல்ல மாட்டாங்க! படிக்காமல், வீட்டுப் பாடம் எழுதாமல் இருந்தால் அம்மா அடிப்பா என்றே சொல்லிக் கொடுப்பாங்க! குழந்தைக்குப் படிப்புத் தனக்குத் தேவை, தன் முன்னேற்றத்துக்குத் தேவை என்பது புரியாது. அம்மாவுக்காக, அம்மாவின் கட்டாயத்துக்காகப் படிக்கிறோம்னு நினைச்சுக்கும். இதிலே எங்க பையர் தான் சின்ன வயசில் இருந்து புரிந்து கொண்டு நடந்தார். பெண் ஏற்கெனவே ரொம்பச் செல்லம். இப்படிச் சொன்னால் படிக்க மாட்டேன் போ! எனச் சொல்லிட்டுப் போயிடுவா! :(

   நீக்கு
  2. கீசா மேடம் - நீங்க பொதுப்படுத்தறீங்கன்னு நினைக்கறேன்.

   பெற்றோரா இருக்கும்போது படபடப்பு, தன் குழந்தைகள் என்னவாக ஆகப்போகிறார்களோ என்று இருக்கும். அதனால் ஓரளவு அல்லது அதீத கண்டிப்பு காண்பிப்பார்கள், பலவற்றை மறுப்பார்கள் (ஹோட்டல்ல சாப்பிடலாம், பிட்சா சாப்பிடலாம் அப்படீன்னு கேட்டா, ஐயோ, அந்தப் பழக்கம் வந்துடுமோ, உணவில் மாறுதல் ஏற்பட்டுவிடுமோ என்பதுபோன்று). அப்புறம் பசங்க வேலைக்குப் போனபின், கல்யாணம் ஆனபின், 'நம்ம கண்டிப்பு இதெல்லாம் அர்த்தமே இல்லாதது, அவரவர் விதிப்படிதான் நடக்குது' என்பதைப் புரிஞ்சுக்குவாங்க. நாம கண்டித்த விஷயங்கள் அல்பமானது என்பதையும் புரிஞ்சுக்குவாங்க.

   இன்னொண்ணு, வேலைக்குப் போவதாலும், மற்ற வேலைகளினாலும், தன் குழந்தைகள்ட அவ்வளவா கொஞ்சி இருக்க மாட்டார்கள்.

   இந்த இரண்டு காரணங்களால்தான், தாத்தா/பாட்டி, பெயரன்/பெயர்த்தியை ரொம்ப கண்டிப்பதில்லை, ரொம்பக் கொஞ்சுவாங்க.

   இன்னொரு, சிறுபான்மையான காரணம், தாத்தா/பாட்டி ஸ்டேஜில், பையன்/மருமகள்ட உறவு கொஞ்சம் சலனமா இருக்கும். அப்போ இணைக்கும் பாலமா இருப்பது பெயரன்/பெயர்த்திதான். அவங்க முன்னால தன் பெற்றோரிடம் கடுமையா நடந்துகொண்டால், நாளைக்கு நமக்கும் அந்த நிலைமைதான் என்பது அவர்களைத் தடுக்கும். இந்த பாலமா இருக்கறதுனால, தேவையில்லாமல் பதின்ம வயதுக்குள் நுழையும் பெயரன்/பெயர்த்தியை கொஞ்சமா அன்பா கண்டிப்பதுடன் நிறுத்திக்குவாங்க இந்த தாத்தா/பாட்டி.

   நான் சொல்வது சரியா?

   நீக்கு
  3. இல்லை. சரி இல்லை!ஏனெனில் உங்களால் உண்மை நில்வரத்தைப் புரிஞ்சுக்க முடியாது. புரிந்தால் அதிர்ச்சியாக இருக்கும்! இதை நான் இங்கே சொல்லி இருக்கக் கூடாதோ! சொல்லி பதிலும் வந்திருக்கு! ஆகவே அப்படியே ஆகட்டும்!:)))))

   நீக்கு
  4. நெல்லைத்தமிழன் ஐயா அவர்களுக்கு : நீங்கள் சொன்னபடி நடந்தால் மிகவும் மகிழ்ச்சி... ஆனால் பல தாத்தா + பாட்டிகள், வீடுகளில் அதிகம் காணப்படுவதில்லை... அனைவரும் கடத்தப்பட்டு விட்டார்கள்...! ஆசிரமம் / முதியோர் இல்லம் / மறுவாழ்வு இல்லம்

   படித்ததில் சிந்திக்க வேண்டியது : ஒரு பெண் தனது முகநூல் பக்கத்தில் எழுதியது :- பெண்களுக்கு தனது அம்மா மற்றும் அப்பாவை கவனித்துக் கொள்ளும் உரிமை கிடைத்திருந்தால் நமது தேசத்தில் முதியோர் இல்லம் இருந்திருக்காது...!.

   இதற்கு ஒரு ஆண் எழுதியிருந்த கருத்துரை :- பெண்கள் தனது மாமியார் மற்றும் மாமனாரை தனது அம்மா அப்பாவாக நினைத்திருந்தால், இந்த தேசத்தில் என்ன ? உலகத்தில் எந்த மூலையிலும் முதியோர் இல்லமே இருக்காது...!

   நீக்கு
  5. தனபாலன் சார்.. ஈழத் தமிழர்களின் பொதுவான வழக்கம், மாப்பிள்ளை, மாமனார் வீட்டோடு இருந்துவிடுவது. தங்கள் பெண்ணுக்கு வீடு வாசன் வாங்குவது தந்தை. பிற்காலத்தில் தன்னோடு இருப்பார்கள் என்று. அதேபோல், பையன், அவன் மனைவி வீட்டுக்குச் சென்றுவிடுவான். பொதுவா மாமனார் வீட்டுல, மாப்பிள்ளைக்கு மரியாதை உண்டு. அவனும் பெண்ணை மரியாதையாக வைத்துக்கொள்வான். தங்கள் கடைசி காலத்தில் பெண் தங்களைக் கவனித்துக்கொள்வாள்.

   இந்த முறை நல்ல முறையாகப் பட்டது.

   நம்ம சமூகத்தில், (பொதுவா), மாமியார், வருகிற மருமகளை அதட்டி, கண்டிப்பு காட்டுவது, முடிந்த அளவு, அடிமைபோல் நடத்துவது, அதாவது, மகன் எனக்கு முதல் உரிமை, உனக்கு அப்புறம்தான் என்பதுபோல. அதனால், திருமணமான ஆரம்பத்திலேயே கடும் நெருடல் வந்துவிடுவதால், மாமியார் நிலை தாழும்போது அவர்கள் உதவ வருவதில்லை.

   இதைத் தவிர, இப்போது சுயநலம் பெருகிவிட்டது. தன் ஆசைகள், தன் நேரம் என்று எல்லோரும் தன்நலத்திலேயே குறியாக இருப்பதால், மாமியார்/மாமனாரைப் பார்த்துக்கொள்ள மனதோ நேரமோ விருப்பமோ இருப்பதில்லை.

   நீக்கு
 22. ஒரு பதிவு search for truth ஒரு ஆரோக்கிய சிந்தனைக்கு வழி வகுத்திருக்கிறது மகிழ்ச்சி தருகிறதுஎன் பதிவுகளை வாசிப்பவர்களிடம் எனக்கு ஒரு குறை அல்லது ஆதங்கம் உண்டு நானென்ன எழுத முனைந்தேனோ அவற்றை விட்டு விட்டு அவர்களாகவே சில கற்பிதக்களை உண்டு பண்ணி பின்னூட்டமிடுகிறார்கள் என்றுதோன்றுவது உண்டு எப்படியானால் என்ன பதிவு சிந்திக்கவைத்தால் நன்று என் தேடல் பதிவு அதைச்செய்திருக்கிறது குறள் ஒன்றை க் குறிப்பிட்டு இருந்தேன் அதுவே விவாதப்பொருளாகும் என்று நினைக்கவில்லை மிகவும்மெனக்கெட்டு ஒரு பதிவுஎழுதி இருக்கிறீர்கள் பாராட்டுகளும் வாழ்த்துகளும்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வழக்கம் போல் சுருக்கமாக எழுதி இருந்தால், குறளின் குரலாக ஓரிரு பதிவுகள் வந்திருக்கும்... இப்போது எத்தனை பதிவுகள் ஆகும் என்று தெரியவில்லை... இந்த பதிவில் கூட பலவற்றை நீக்கி விட்டேன்... தங்களுக்கு மிக்க மிக்க நன்றி...

   நீக்கு
 23. இரக்கம் தேவை தான். ஆனால் தகுதி வாய்ந்த நபரிடம் காட்டணும்! திரும்பத் திரும்ப நம்மை அவமானம் செய்பவர்களிடம் இரக்கம் காட்டலாமா என்பது என் கேள்வி! அதே போல் இரக்கமே இல்லாத தந்தையையும் பார்த்தது உண்டு. தன் குழந்தைகள் என்னும் எண்ணம் இல்லாமல் அவர் மட்டும் நெய், பால், தயிர், அப்பளம், காஃபிக்குச் சர்க்கரை எனப் போட்டுச் சாப்பிடுவார். சாப்பிட்டதும் பீரோவில் பூட்டி வைத்துவிட்டுச் சாவியைத் தன்னிடமே வைத்துக் கொள்வார். குழந்தைகளுக்கு வெறும் சாதம், மாவடு போட்ட ஜலம், நீர்க்கக்கரைத்த மோர் தான். அப்பளம் கூடக் கிடைக்காது. அந்தத் தாய் எப்படியோ அரும்பாடுபட்டுக் காசு சேர்த்து ரகசியமாகக் குழந்தைகளுக்கு வாங்கிப் பண்ணிப் போடுவார்! அது வெளியே தெரிஞ்சால் அன்னிக்கு வீட்டிலே பிரளயம் தான்! ஆனால் அந்தத் தாயும் சரி, அந்தக் குழந்தைகளும் சரி தகப்பன் இப்படி இருந்ததால் தங்கள் ஈகைக்குணத்தையோ, இரக்க சுபாவத்தையோ இழக்கவில்லை. பெரியவங்களா ஆனதும் அவங்களால் முடிஞ்ச அளவுக்குப் பலருக்கும் உதவி வருகின்றனர்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இப்படியும் இருப்பாரா தந்தை... அன்னையே தெய்வம்...

   நீக்கு
  2. கீசா மேடம் - நீங்கள் சொல்லியிருப்பது வெகு வெகு அபூர்வம். என் அப்பா, அந்தக் காலத்தில் என்னிடம் சொல்லியிருக்கார் (நான் 20+ வயது). பல வீடுகளில், மனைவிகள், கணவன் பணத்தைத் தங்களிடம் தராததால், வீட்டின் மளிகைச் சாமான்களை விற்று பணம் சேகரிப்பர் என்று. இதுவும் அபூர்வம் என்றே தோன்றுகிறது.

   நீக்கு
  3. இதைச் "சிறுவாடு" என்பர். தாராளமாக இருக்கும் கணவன்மார் வாங்கிப் போடும் சாமான்களையே அக்கம்பக்கம் அவசரத்துக்கு விற்றுப் பணம் சேர்த்து அதையும் வட்டிக்கு விட்டு சம்பாதிக்கும் அம்மாவையும் அவங்களோட சிறு பெண்ணையும் பார்த்திருக்கேன். வீட்டின் அவசரத் தேவைக்குக் கூடத் தங்களிடம் பணம் இருக்கிறது என மூச்சுக் கூட விடமாட்டாங்க இவங்கல்லாம். நெ.த. உங்களுக்கு இத்தகைய அனுபவங்கள் கிடைத்திருக்காது! பிறந்த வீட்டில் வைச்சுக் கொடுக்கும் பணம், தீபாவளி, நவராத்திரி, கார்த்திகை, பொங்கலுக்குக் கொடுக்கும் சீர்ப்பணம் எல்லாவற்றையும் புக்ககக் குடும்பத்தாருக்குச் செலவு செய்யும்/செய்த பெண்களையும் பார்த்திருக்கேன். இதுக்கெல்லாம் அடிப்படைக் குணங்கள் தான் காரணம் என்பது என் கருத்து. வளர்ப்பும் காரணமாக அமையலாம்.

   நீக்கு
 24. ஆகவே இது பெற்றோர் கற்றுக் கொடுப்பது அல்ல! பெற்றோரிடமிருந்து பரம்பரையாக வருவதும் அல்ல!

  பதிலளிநீக்கு
 25. டிடி அட்டகாசமான பதிவு!!!

  இரக்கம்! அருமை. ஆமாம் இரக்கம் இருக்குமானால் சிறு பெண் குழந்தைகளைக் கூட ஈவு இரக்கம் இல்லாமல் சீரழிக்கும் நிகழ்வுகள் நடக்குமா?

  இது பரம்பரை பரம்பரையாக வருவது என்பது இடிக்குதே டிடி...

  நிறைய கேள்விகள் எழுகிறது.

  இரக்கத்திற்கு நல்ல ஒரு எடுத்துக்காட்டு சொல்லிருக்கீங்க. சரிதான். மிகச் சிறந்த எடுத்துக்காட்டு. மறுப்பதற்கில்லை. இரக்கம் இருந்தும் ஒன்றும் செய்ய இயலாதவர்கள் என்ன செய்ய முடியும்? வெறுங்கையால் முழம் போட முடியுமா டிடி.

  அல்லது இரக்கம் தான் புகழ் என்ற அர்த்தமோ. நிறைய கேள்வியள் எழுகின்றன. மீண்டும் வர முயற்சி செய்கிறேன். முடியுமா என்று தெரியவில்லை

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. காலையில் என்னிடம் சொன்னது போல், "கருத்துரைகளை எதையும் வாசிக்கப் போவதில்லை, எனது கருத்துரைகளை சொல்லிவிட்டு பிறகு வாசிக்கிறேன்" என்றீர்கள்... அதே போல் மேலும் தொடர வேண்டுகிறேன்... அவசரமில்லை, நேரம் கிடைக்கும் போது சொல்லுங்கள்...

   முடியவில்லை எனில் கருத்துரைகளை வாசிக்கத் தொடங்கி விடுங்கள்... உங்களின் கேள்விகளுக்கு, சிறப்பாக பல பதில்கள் சொல்லியுள்ளார்கள்... நன்றி...

   நீக்கு
 26. வணக்கம் சகோதரரே

  அருமையான சிந்தனையை தூண்டும் பதிவு. இரக்கம் எனப்படுவது இயல்பாகவே பிறப்பிலிருந்தே வர வேண்டும். சொல்லி வளர்க்கும் போதும், பெற்றோர்,சுற்றமென பார்த்து வ(ள)ருதலும், பின்பு அதனை மெருகூட்டி காட்டும். பெற்றோரைப்பார்த்து நல்லவைகளையும், தீயவைகளையும், கருத்துரைகளில் கூறியிருப்பது போல், கற்றுக்கொண்டவர்களும், வெறுத்து ஒதுக்கியவர்களும் உள்ளனர். விதியின் பலன்களை நாம் வெறுத்தாலும், அது நம்மை முற்றிலுமாக வெறுத்து ஒதுக்காது. அதனுடனேயே நாம் சந்தோஷமாக பயணித்து விட்டால், அந்த சந்தோஷங்களின் காரணமாக, பயணமும் சற்றே மகிழ்வை தந்து விட்டபடியான ஒரு பிரமையை உண்டாக்கும். அவ்வளவுதான்.

  பாடல்களும், அதன் விளக்கங்களும், தாங்கள் கூறியுள்ள கருத்துக்களும் மிக அருமையாக இருந்தது. அனைவரது சிந்தனை விவாதங்கள் நன்றாக உள்ளது. இம்மாதிரியான சிந்தனை பகிர்வுகளை தங்கள் தளத்தில் கண்டு மகிழ்ந்து நாளாகி விட்டது. இனி தடையின்றி தொடருங்கள். படித்துணர காத்திருக்கிறோம். மிக்க நன்றி.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இரக்க உணர்வு இருந்து விட்டால், எதையும் தாங்கும் இதயமும் இருக்கும் என்பது தான் பலரும் உணர்வதில்லை...

   நீக்கு
 27. குழந்தைகளிடம் இருந்தும் பெற்றோர்கள் கண்டிப்பாகக் கற்றுக் கொள்ள வேண்டும். பெற்றோர் ஈகோ பார்த்தால் குழந்தைகள் பெற்றோர் இருவருக்குமான இடைவெளி வரும் என்பதில் ஐயமில்லை.

  நல்ல பண்பு, இரக்கம், கொடைப்பண்பு இவை பிறவியிலேயே இருந்தால்தான் வரும்...என்பது மிகவும் சரியே நான் அடுத்தது சொல்ல வந்ததை நீங்களே அடுத்த லைனில் சொல்லிவிட்டீர்கள்.

  கொடைப்பண்பு என்பது பொருளால்தான் என்றில்லையல்லவா அதாவது இரக்கம் இருந்து பொருளால் செய்ய இயலவில்லை என்றாலும் உடல் உழைப்பாலும் அதை நல்கலாம்தானே! அதுவும் இரக்கம் புகழ் இவற்றிற்கு ஒப்பாகும்தானே!?

  கீதா

  பதிலளிநீக்கு
 28. இரக்க குணத்தினால் தன்னிடம் இருக்கும் அனைத்தையும் எந்தவித எதிர்பார்ப்புமின்றி கொடுத்து இறுதியில் நடுத்தெருவிற்கு வருபவர்களை என்னவென்று சொல்வது? இவ்வுலகம் புகழ்வதில்லையே! புகழ்வதில்லை என்பதை விடுங்கள் புரிந்து கொள்வதில்லையே! உலகத்தை விடுங்கள் நெருங்கிய உற்றார் உறவினர் கூடப் புரிந்து கொள்வதில்லையே. அவர் நல்லவராக இருந்தாலும் கொள்வதில்லையே. அவர் எதிர்பார்க்காவிட்டாலும் அவரிடம் வாங்கியவர்கள் கூடத் திரும்பிப் பார்ப்பதில்லையே! அவரது நல்லெண்ணத்துடனான கொடை அவரைக் காப்பாற்ற வில்லையே! மேலுலகத்தில் கூட புகழப்படுவார்கள் என்பதை எப்படிப் பொருத்திப் பார்ப்பது என்று ஐயம் வருது. ஒரு வேளை எனது புரிதல் தவறாக இருக்கலாம். ஆனால் என் மனதில் எழும் கேள்விகள் இவை...

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. விண்ணுலகம் கூட புகழும் என்பது தான்... அடடா... குறள் விளக்கம் சொல்லி விடுவேன் போலிருக்கே...!

   நீக்கு
  2. என் எஸ் கிருஷ்ணன் (நகைச்சுவை நடிகர்) அப்படிப்பட்ட ஈகை குணம் உடையவர். அவரால் பணம் பெற்றவர்கள் ஏராளம். கடைசி காலத்தில் அவருடைய மனைவி கஷ்டப்பட்டார்கள். பணம் பெற்றவர்கள் யாரும் அவர்களுக்கு உதவவில்லை.

   ஆனால் ஏன் நாம், இதனை வியாபாரம்போல் பார்க்கணும்? இன்றைக்கு நான் செய்தேன், நாளைக்கு அவர்கள் தரணும் என்பதுபோல? அவர்களுக்கு நல்ல கதி உண்டு என்பதுதான் 'விண்ணுலகம் கூட அவர்களைப் புகழும்' என்பது.

   நீக்கு
 29. நீளமான பதிவானாலும் மனம் நிறைவான பதிவு..விளக்கம் குறித்துச் சிந்திக்கிறேன்

  பதிலளிநீக்கு
 30. சகோ டிடி நிறைய விஷயங்கள் சொல்ல ஆசை ஆனா காப்பி பேஸ்ட் முடில அதனால்

  முடிந்தவரை எழுதறேன் ../வளர்ந்தவிதம் வளரும் விதம் ..100 %உண்மை .உறவுக்காரின் பிள்ளை பெற்றோர் யாருக்கும் மரியாதை தரவேணாம்ணே சொல்லி திமிராக வளர்க்கப்பட்ட பிள்ளை இறுதியில் பிள்ளையின் துர் செயல்களே பெற்றோரின் மரணத்துக்கு காரணமாகி வாழ்வை நாசமாக்கி நிற்கிறது :( இப்போ அதன் பிள்ளையும் போதைக்கு அடிமை ..
  பிள்ளைகள் தவறிழைக்கும்போது பெற்றோர்கள் அவர்களின் வாழ்வை திருத்தாதது கூட குற்றமே

  பல பிள்ளைகள் அடக்கி வளர்ப்பதாலேயே கொஞ்சம் இடம் கிடைத்ததும் பறக்க துடிக்கிறாங்க அப்படியே தவறான பாதையிலும் கால் பதிக்கிறாங்க .ஒரு மருத்துவர் அவர் தந்தை பியூன் ஆனால் மகனை கஷ்டப்பட்டு படிக்கவைத்து மருத்துவராக்கினார் ..மகன் என்ன செய்தார் வேலை கிடைத்ததும் குடிக்கு அடிமையானார் எல்லாம் கூடா நட்பு :( சிறுவயதில் அனுபவிக்க முடியாததை அனுபவிக்கறதா நினைச்சி வாழ்வை தொலைத்தார் .

  இதற்குத்தான் இயன்றவரை கஷ்டத்தையும் நன்மை தீமையையும் சொல்லி வளர்க்கணும் .

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. உங்கள் கருத்துரை மிகவும் ஊக்கம் அளிக்கிறது... பல வருடங்களாக நட்பு குறித்து 5 அதிகாரத்தையும் எழுத வேண்டும் என்றிருந்தேன்... அதையும் குறளின் குரலாக பேசுவேன்... நன்றி சகோதரி...

   நீக்கு
 31. அருமையான பதிவு
  சுவைத்தேன் - இதில்
  உளநல வழிகாட்டல் இருக்கு - அவை
  பெற்றோருக்கு மட்டுமல்ல, எல்லோருக்குமே!

  தங்கள் பதிவு தொடர வேண்டும். தாங்கள் பதிவு இடத் தொடங்கியதும் தூங்கிக்கிடந்த பதிவர்கள் விழித்துவிட்டனர். - ஆயினும்
  ஜோக்காளி பகவான்ஜி ஐயா இன்னும் வரவில்லையே!
  இனியெல்லாம் வலைப்பூக்கள் புத்தூக்கம் பெறும்!

  பதிலளிநீக்கு
 32. அருமையான விளக்கம் ஒவ்வொருத்தருக்கும் பிறவிக்குணம் தொடரும் என்பதில் ஜயம் ஏதுமில்லை ! நல்லவனாக வளர்த்தவர்கள் மதவெறி/இனவெறியில் இன்று திசைமாறிப்போய் அரக்கர் போல நடப்பதும் உலக நியதியாகிவிட்டது

  பதிலளிநீக்கு
 33. மீண்டும் பதிவுலகில் காண்பது மகிழ்ச்சி . இருந்தாலும் தங்கள் வியாபாரம் வெற்றியடைய வாழ்த்துக்கள் டிடி!

  பதிலளிநீக்கு
 34. ஆஆஅவ்வ்வ் எந்தாப் பெரிய போஸ்ட்..... அபியும் நானும் பார்க்கவில்லை நான், கொஞ்சம் சோகம் என்பதுபோல சொன்னார்கள் அதனால விட்டுவிட்டேன்.

  புகழ் என்றால் அது.. பெயராகவும் வினையாகவும் வருதெல்லோ.. புகழ்ச்சி, புகழ்தல் ஒன்று. மற்றது பட்டம்..பதவி.. அதுவும் வருமெல்லோ... நேக்கு ஒண்ணும் புரியல்லே:))

  பதிலளிநீக்கு
 35. ஐயா! பொறுத்தருள வேண்டும்! தாங்கள் கூறியிருக்கும் பொருள் மிகவும் பிழையானது. ‘புகழ்’ என்றால் Fame என்பதுதான் பொருள். ‘இரக்கம்’ என ஒருநாளும் பொருளாகாது. ’புகழ்’ அதிகாரமும் அதற்குப் பரிமேலழகர், மணக்குடவர், மு.வ., கருணாநிதி, சாலமன் பாப்பையா ஆகியோர் எழுதியிருக்கும் உரைகளும் முழுக்கப் படித்து விட்டே இதைச் சொல்கிறேன். அவர்கள் யாருமே அந்த அதிகாரத்தில் வரும் எந்தக் குறளுக்குமே எந்த இடத்திலும் ‘புகழ்’ என்பதற்கு ’இரக்கம்’ என்று பொருள் குறிப்பிடவில்லை. ஒருவேளை அந்த அதிகாரத்தின் பல குறள்களிலும் இரக்க உணர்ச்சி, அதனால் ஏற்படும் கொடைத்தன்மை மூலமாகத்தான் புகழைப் பெற முடியும் என வள்ளுவர் மீண்டும் மீண்டும் வலியுறுத்துகிறாரே, அதைத்தான் நீங்கள் இப்படிச் சொல்கிறீர்களோ!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆமாம் ஐயா... உங்கள் பதிலிலேயே சொல்லி விட்டீர்கள்... இன்னும் ஒன்பது குறள்கள் உள்ளன... அவற்றில் மேலும் விளக்கங்களை சொல்கிறேன்... நன்றி...

   தாங்கள் குறிப்பிட்ட பலரின் உரைகளை படித்துவிட்டு தான் சொல்கிறேன்... அதைப் பற்றி விளக்கினால் அது சிந்தனையை மாற்றி வீண்விவாதமாக மாறிவிடக் கூடும்... நீங்களே வேறு ஓர் கண்ணோட்டத்தில் வாசித்து பார்த்தால், அவர்களிடமே பல வேறுபாடுகளை அவரவர் விளக்கங்களில் அறியலாம்... அதற்காக அவர்களை குறை சொல்லவில்லை...

   ஆனால் இவை சரியாக இல்லையே என்று பல வருடங்களாக மனதில் ஒரு தடங்கல் இருந்தது... பின் இதைத்தான் திருவள்ளுவர் சொல்கிறார் என்பதை அறிந்தேன்... இதற்கு முந்தைய பதிவில் பரிமேலழகியம் அவர்களின் கருத்துரையை தவறாமல் வாசிக்கவும்... அசர வைக்கும் விளக்கங்கள் பல உள்ளன... ஓர் இடத்தில் அது என்னவென்றும் சொல்லி விட்டார்...

   நீக்கு
  2. கண்டிப்பாக, இதோ இப்பொழுதே படித்துப் பார்க்கிறேன் ஐயா!

   நீக்கு
 36. வழக்கம் போல சிறப்பான பகிர்வு. பாராட்டுகள்.

  பதிலளிநீக்கு
 37. விளக்கத்துக்கு நன்றி . ஒருவரது நடத்தைக்கு மரபணு , வளர்க்கப்பட்ட விதம் , வளரும் சூழ்நிலை , நண்பர்கள் முதலிய பல காரணங்கள் உள்ளன . ஆகவேதான் நல்லவன் தீயவனாக மாறுவதும் கெட்டவன் திருந்துவதும் காண்கிறோம் .

  பதிலளிநீக்கு

 38. உங்களது பதிவு குறளாழத்தில், தர்க்கிக்கப்படும் அதன் பொருளாழத்தில் எங்களைக் கொண்டுசெல்வது மகிழ்ச்சி அளிக்கிறது. வந்திருக்கும் கருத்துக்களும் அனுபவ அறிச் செறிவுடன் வெளிப்பட்டிருக்கின்றன- நெ.த, கீதா சாம்பசிவம், பரிமேலழகியம் என்று சிலர் வண்ணம் தீட்டிப் பிரகாசிக்கவைத்திருக்கிறார்கள்.

  ’பொறந்தா புகழோடு பொறக்கணும், இல்லாட்டி நீ பொறக்காம இருப்பதே நல்லது!’ - என்று எழுதியிருக்கிறாரே இந்த வள்ளுவர்? இதென்ன அசட்டுத்தனமான கருத்து? இப்படி உளறினதுக்கா இவரத் தூக்கி வச்சிகிட்டு ஆடுறாங்க நம்ப தமிழனுங்க – (அவர் வெவ்வேறு இடங்களில் அபாரமாக, அழுத்தமாக, அழகாக சில உன்னத விஷயங்களை எழுதியிருந்தபோதிலும்) என்று நினைத்ததுண்டு.

  நமது சமகால உலகில் ‘புகழ்’பெற்றவர்களை, அவ்வாறு வர்ணிக்கப்படுபவர்களை/ ’கொண்டாடப்படுபவர்களை’, அப்படியே ஏற்றுக்கொள்பவனல்ல நான். மாறாகக் கடும் விமர்சனக் கண்ணோட்டத்துடன்தான் அவர்களையும் அவர்களது வாழ்வியல் அனுபவங்கள்/ நிகழ்வுகளையும் அவதானித்துவருகிறேன். பெரும் விருதுகள், பட்டங்கள், பதவிகள், புகழ், பிராபல்யம் போன்ற உலகம் மிகவிரும்பும், போற்றும் சங்கதிகள், யார்யாரால், எந்தெந்த காலகட்டங்களில், எந்தெந்த நோக்கங்களுடன் எப்படியெல்லாம் பில்டப் செய்யப்பட்டு, எப்படியெல்லாம் தருவிக்கப்பட்டு, எப்படியெல்லாம் சீன்போட்டுக் காட்டப்பட்டுகின்றன- அதையெல்லாம் அப்பாவி சமூகம் எப்படி அப்படியே உண்மையென நம்பி மெய்சிலிர்த்து, கைதட்டி, ஆர்ப்பரித்து, அகமகிழ்ந்து போகிறது (குறிப்பாக அரசியல், சினிமா துறைகளில் – இதைக் குறிப்பிடுவதற்குக் காரணம் நமது ஜனத்திரளே இந்த மாயையில்தானே காலங்காலமாக முயங்கிக்கிடக்கிறது) என்பதைக் கவனித்தே வருகிறேன். இப்படிச் சொல்வதால் உண்மையான சிறப்பு, அதற்கான நற்புகழ் உடையோரே இல்லை, இருந்ததில்லை என நான் சொல்லவில்லை. அத்தகையோரும் இவ்வுலகில் வருகிறார்கள், ஏதோ இருக்கிறார்கள், போய்விடுகிறார்கள். அத்தகைய மாணிக்கங்களை அப்படி ஒன்றும் நினைவில் வைத்திருப்பதில்லை, போற்றித்திரிவதில்லை இவ்வுலகம். கக்கனை எத்தனைத் தமிழர்களுக்குத் தெரியும், அல்லது எத்தனை இன்னும் ஞாபகத்தில் வைத்திருக்கிறார்கள், எத்தனைபேரால் உன்னதமனிதராக அவர் அறியப்பட்டிருக்கிறார் – அதிகம்பேரில்லை.

  மனிதன் இம்மகத்தான உலகில், தன் கடினமான வாழ்வின்மூலம் ( கடும் சோதனைகளுக்கிடையே அறவழி, நெறிவழி பயணிப்பதன்மூலம்) தன்னைத் தனிமனிதனாக உயர்த்திக்கொள்ளுகையில், அவன் ஆங்காங்கே அடைந்து முன்னேறும் அவனது ஞான வளர்ச்சியின்போது (இங்கே வெறும் மொழிசார்ந்த, துறைசார்ந்த அறிவை, நிபுணத்துவத்தைக் குறிப்பிடவில்லை) - புகழ், பதவி, பிராபல்யம் போன்ற விஷயமெல்லாம் ஒன்றுமே இல்லையே. அப்படியிருக்கையில் வள்ளுவர்போன்ற ஒரு ஞானக்கவிஞர், இந்தப் பாழாய்ப்போன புகழையா பெரிதும் உயர்வென மதித்து, தோன்றிற் புகழொடு தோன்றுக என்று சொல்லிச்சென்றிருக்கிறார் என்கிற சந்தேகம் என்னை நெருடியிருக்கிறது. ஆனால் அதனைத் தொடர்ந்து ஆழத்தில் செல்லவில்லை. நீங்கள் தொடர்கிறீர்கள். பின்னாலேயே நாங்களும் வருகிறோம். என்ன தெரியப்போகிறதெனப் பார்ப்போம்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஏகாந்தன் ஐயா அவர்களுக்கு வணக்கம்... எனது மனதில் எழுந்த சந்தேகங்களில் சிலவற்றை தங்களின் கருத்துரையில் வாசிக்கும்போது, மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது... தங்களின் "மாயை மற்றும் உன்னத மனிதர்கள் " உட்பட ஒவ்வொரு கருத்தும் 100% உண்மை...

   நீங்கள் குறிப்பிட்டது போல் பலர் இவ்வுலகில் வாழ்ந்து மறைகிறார்கள்... மறைந்தாலும் வாழ்கிறார்கள்... இன்றைக்கும் சிலர் வாழ்ந்து கொண்டும் இருக்கிறார்கள்... ஆனால் அவர்கள் இது தான் "புகழ்" என்றே அறியாதவர்கள்... அறியவும் விரும்ப மாட்டார்கள்... அது தான் அவர்களின் "புகழ்"...!

   இதே போல் சில குறள்களுக்கும் சந்தேகங்கள் உண்டு... அவற்றின் தீர்வு வேறு குறளில் கிடைத்தது... தொலைத்த இடத்தில் தேடுவது தானே புத்திசாலித்தனம்...! "இரக்கம் தான்" என்று சொல்வதற்கு தேடலின் சிறப்பை அறிந்தேன்... 2/3 பதிவுகளை முடித்தபின், அதைப் பற்றியும் எழுத வேண்டும் என்றுள்ளேன்... நன்றி ஐயா...

   நீக்கு
  2. ஏகாந்தன் சார்... 'புகழ்' என்பதை தனபாலன் சார் 'இரக்கம்' என்று பொருள்படுத்துகிறார். எனக்கு இது இன்னமும் நிரடலாகத்தான் இருக்கிறது, அர்த்தம் சரியாக வந்தபோதும்.

   காமராசர் அமைச்சரவையில் 5 பேர்களைச் சொல்லுங்கள் என்று யாரைக் கேட்டாலும் முழிப்பார்கள். எளிய, கிட்டத்தட்ட ஏழ்மையில் இருந்த கக்கனை யாரும் மறக்கமாட்டார்கள். அவர் ஒரு பின்னணியும் இல்லாதவர். இருந்தாலும் கக்கன் அவர்களை நாம் நினைவில் வைத்துக்கொள்கிறோம். இதைவிட ஒருவருக்கு புகழ் கிடைக்குமா?

   நீக்கு
 39. இவ்வுலகில் கோடிக்கணக்கான மக்கள் இருக்கிறார்கள். அவர்களை அனைவரையும் யாரும் அறிவதற்கு வாய்ப்பில்லை. ஏதோ ஒரு சிலர்தான் அனைத்து மக்களாலும் ஒரு சில காரணங்களினால் அறியப்படுகிறார்கள்.அது புகழாகவும் இருக்கலாம் இகழாகவும் இருக்கலாம் .அப்படி மக்கள் முன்பே தோன்றினால் புகழோடு மட்டும்தான். தோன்றவேண்டும் இல்லாவிடில் அடங்கி அமைதியாக (நிலையின் திரியாது அடங்கியான் போலும் ) யாரும் அறியாமல் அமைதியாக இருக்கவேண்டும் என்று வள்ளுவர் குறிப்பிடுகிறார் என்பது இந்த சிறியேனின் கருத்து

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. உண்மை தான் ஐயா... இரக்கமுள்ளவர்கள் தன்னிலை மாறாது அடக்கத்துடனேயே இருப்பார்கள்...

   நீக்கு
 40. நாளை உலகில் நீயும் நானும் வாழும் வழிகள் செய்வானவன் என்று தாலாட்டு பாடுவார்களே தவிர, களவாடு, போய் சொல்லு என்று இந்தப் பெற்றோரும் சொல்லிக் கொடுக்க மாட்டார்கள்.

  பாவத்தை கண்டால் விலகி விடு பாதையை பார்த்து நடந்து விடு ஆபத்தை சந்திக்க துணிந்து விடு அழுவதை மட்டும் மறந்து விடு என்றும் அறிவுரை கூறுவார்கள் பெற்றோர்கள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. @ஸ்ரீராம் - 'களவாடு', 'பொய் சொல்லு' என்று எந்தப் பெற்றோரும் சொல்லிக்கொடுக்க மாட்டார்கள். ஆனால் அப்படித் தாங்கள் நடந்துகொள்ளமாட்டார்கள் (எப்போதும்). உதாரணமா கடைக்காரன் தவறுதலா கூட சில்லரை கொடுத்துவிட்டால் கமுக்கமாக வந்துவிடுவார்கள். பையன் லீவு போடுவதற்கு (தங்களுடன் வருவதற்கு) பொய் காரணம் எழுதி கையெழுத்திடுவார்கள். தங்கள் பாஸிடம் பேசும்போது பொய் சொல்வார்கள். இதையெல்லாம் பார்த்துத்தான் பசங்க வளருகின்றனர்.

   அதனால்தான் அவங்க பொய் சொல்லும்போது, நாம் செய்த தவறு ஞாபகத்தில் வரும்.

   நீக்கு
  2. இன்னொன்று ஸ்ரீராம்.. பசங்க 'திருடு'வதற்கு மிக முக்கியக் காரணம் அவங்களுக்குள்ள நியாயமான ஆசைகளை பெற்றோர் நிறைவேற்றாததுதான். அந்த ஆசைகளைக் குறை கூறாமல், நியாயமான ஆசையாக இருந்தால் பணம் கொடுத்து அதனை நிறைவேற்றிக்கொள்ளச் சொல்லவேண்டும், இல்லையென்றால், ஏன் அதற்குப் பணம் இல்லை என்று பொறுமையாக அவர்கள் ஏற்றுக்கொள்ளும்படியான விளக்கம் கொடுக்கணும்.

   இதைத்தான் பெரும்பாலான பெற்றோர்கள் செய்யத் தவறிவிடுகின்றனர். பசங்களையும் 'எனக்கு இவ்வளவு ரூபாய் இதற்கு வேணும்' என்று தைரியமாகக் கேட்கும் சூழ்நிலையையும் வளர்க்கவேண்டும்.

   (நான் சட்டுனு செலவழிக்க காசு கொடுக்கமாட்டேன், எந்த எதிர்பார்ப்பு இருந்தாலும், அது ஏன் வேண்டாம் என்று லெக்சர் கொடுப்பேன், அவர்கள் சிறிய வயதில். நல்லவேளை உடனே ரியலைஸ் பண்ணி, மனைவி எந்தச் செலவுக்கும் அவர்களுக்குப் பணம் கொடுக்கலாம், அவள் நியாயம் என்று நினைத்தால் என்று சொல்லிவிட்டேன். அதனால் நிறைய பலன்களையும் நான் பார்த்தேன்)

   நீக்கு
  3. ஜோதிஜி சொன்னதையும் வழிமொழிகிறேன் டிடி சகோ.

   மேலும் ஆண்குழந்தைகள் அநேகம் அப்பாவையே இமிடேட் செய்கிறார்கள். எனக்கு பெண் குழந்தை இல்லாததால் அதுபற்றித் தெரியவில்லை..

   மிக நல்ல பதிவு.

   நீக்கு
 41. உங்களுடைய விளக்கமும், மற்றவர்களின் பின்னூட்டங்களும் நிறைய யோசிக்க வைக்கின்றன. கோமதி அரசு அவர்கள் கூறியது போல ஈகை குணம் என்பது சென்ற ஜென்ம தொடர்ச்சி என்னும் நம்பிக்கை இருக்கிறதே. 'சித்திரமும் கை பழக்கம், செந்தமிழும் நா பழக்கம்..' என்ற செய்யுளில் அவ்வை, ஈகை, கோடை, தயை போன்றவை பிறவிப் பழக்கம் என்று குறுப்பிடுவதை மறுக்க முடியுமா?
  நம்முடைய இரக்க குணத்தை சிலர் பயன்படுத்திக் கொள்ளும் பொழுது முன்பெல்லாம் கோவம் வரும், இப்போது, "பாவம் ஏதோ இல்லாத கொடுமையில் செய்கிறார்கள், போகட்டும் என்று விட்டு விட தோன்றுகிறது. இது சரியா தவறா?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இதோ தங்கள் மனம் போல் தான் தொடர வேண்டும், அனைவரிடமும் வளர வேண்டும் என்பதே வள்ளுவரின் விருப்பம்...

   மற்ற குறள்களின் விளக்கங்கள் புரியும் போது, இன்னும் வியப்படைவீர்கள் அம்மா... நன்றி...

   நீக்கு
 42. அருமையான பதிவு தாமதமாகப் பார்த்தேன். மிக்க நன்றி டிடி.
  https://kovaikkothai.wordpress.com/

  பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

நகுதற் பொருட்டன்று நட்டல் மிகுதிக்கண்
மேற்சென்று இடித்தற் பொருட்டு. (குறள் 784)

நட்புச் செய்துகொள்வது நண்பரோடு சிரித்து மகிழ்வதற்காக மட்டும் அல்ல. மிகுதியாகத் தவறு செய்யும்போது, அவரைக் கடிந்து திருத்துவதற்கே ஆகும்.