இரக்க மனத்தை கெடுக்கும் அரக்கன்...

திரைப்படம் : பிச்சைக்காரன் - பார்க்காதவர்களுக்கு ஒரு விளக்கம் : சொந்த ஆலையில் நடந்த விபத்தில் தன் தாய் பிழைக்க, ஒரு மண்டலம் பிச்சை எடுத்து தாயை மீட்பதாக கதை... முடிவில் ஒரு காட்சி தான் மேலே உள்ள படம்...! தாய் பிச்சை கொடுத்து விட்டு, தன் மகனிடம் சொல்வது, "நமக்கு ஆயிரம் வேலை இருக்கலாம்... ஆனால், நமக்காக யாரும் காத்திருக்கக்கூடாது... விருப்பமிருந்தால் பிச்சை போடு, இல்லையென்றால் உடனே அனுப்பி விடு... ஒரு மனிதன் இன்னொரு மனிதனிடம் கையேந்தும் நிலைமை யாருக்கும் வரவேகூடாது" என்பார்... அதற்கு முன்பு தன்னுடன் பிச்சை எடுத்தவர்கள் அனைவரும் ஆலையில் வேலை செய்வதாக காட்சிகள் இருக்கும்... அந்தத் தாயின் உணர்வோடு சிந்திப்போம் - பேசுவோம் வாங்க...

முந்தைய பதிவுகள் : இணைப்பை (→ ←) சொடுக்கவும்...
ஆரம்ப தேடல் : → நடுவுலே கொஞ்சம் பக்கத்த காணோம்...!
கிடைத்த பக்கம் : → தோன்றின் _____?_____ தோன்றுக

முந்தைய பதிவுகளை வாசிக்காதவர்களுக்கு மட்டுமல்ல, நம் நினைவிற்காக மீண்டும் ஒரு முறை விளக்கம்... புகழ் எனும் சொல்லுக்கு, மனதின் ஈரம் அல்லது இரக்கம் என்கிற பொருளே சரி... நடைமுறை பேச்சு வழக்கில் புகழ் என்பதற்கு என்ன சொல்வார்கள்...? பெருமை அல்லது சிறப்பு என்பார்கள்... சரி "புகழ்தல்" என்றால் என்ன...? அனைத்து பெருமைகளையும் விளக்கமாக விரிவாக போற்றிச் சொல்லும் "பெருமை பேசுதல்" ஆகும்... இந்தப் பெருமை எனும் சொல் உணர்த்தும் முதல் நிலைப் பொருள் 'இரக்கம்' என்பதே... புகழ் அதிகாரத்தில், ஐந்து முறை வரும் புகழ், நான்கு முறை வரும் இசை எனும் சொற்களும், ஒரு முறை வரும் வித்து எனும் சொல்லும், இரக்கப் பொருளில் தான் திருவள்ளுவர் பயன்படுத்தியுள்ளார்... சிந்திப்போம், சிறப்படைவோம் வாங்க...

அறத்துப்பால் - இல்லற இயல் - அதிகாரம் 24. புகழ்

(1) குறள்
(2) சுருக்கமான குறள் விளக்கம்
(3) குறளின் குரல் + பாடல் வரிகளோடு மனம்
(4) குறளுக்கேற்ப பாடல்...

ஈதல் இசைபட வாழ்தல் அதுவல்லது
ஊதியம் இல்லை உயிர்க்கு (குறள் எண் : 231)


மனிதன் என்பவன் ஈகையுடனும் இரக்கத்துடனும் வாழ வேண்டும்... இதைவிட சிறப்போ, வாழ்வதற்கான அர்த்தமோ, வேறு எதுவுமேயில்லை...

திருவள்ளுவர் 'ஈகை'யை முடித்து, இரக்கத்தின் சிறப்பை ஆரம்பிக்கிறார்... நாமும் "ஈவு இரக்கம் இல்லையா...?" என்று, இன்றைய நாட்டின் நிலைமைக்கு பலமுறை புலம்ப வேண்டிய அவலநிலையில் உள்ளோம்... ஈகை அடுத்து இரக்கம் என்று தலைப்பு வைக்காமல், "புகழ்" என்று தலைப்பு வைத்து, என்னை சிந்திக்க வைத்த தாத்தாவிற்கு நன்றி... இந்தக் குறளில் இசை எனும் சொல், இரக்கம் என்னும் பொருளில் பயன்படுத்தியுள்ளதை ஆராய்வோம்... இந்த இரக்கம் "அனைத்து உயிர்களுக்கும்" என்பதையும் நினைவில் கொள்வோம்...

பரந்த உள்ளம் என்பதும் பரிவான உள்ளம் என்பதும் வேறுவேறு... அது போல ஈகையும் இரக்கமும் வேறுவேறு... ஈதல் = ஈகையுடனும், இசைபட = இரக்கத்துடனும்... தன்னிடம் உள்ள செல்வத்தை மற்றவர்களுக்கு கொடுத்து உதவுவதால் ஒருவர் பெருமை அடையலாம்... அதனால் புகழும் பெறலாம்... இது ஈகை... "பணம் இருக்கும் மனிதரிடம் மனம் இருப்பதில்லை... மனம் இருக்கும் மனிதரிடம் பணம் இருப்பதில்லை..." மனசே, இரக்க குணம் இருக்கா...? யோசி... "எந்த நிலை வந்தால் என்ன ? நல்ல வழி நான் செல்வது - இரக்க மனத்தை கெடுக்கும் அரக்கன் → பணம் பணம் பணம்... ஆ...! பணம் என்னடா பணம் பணம்... குணம் தானடா நிரந்தரம்..." 100% சரி... பணம், மனதை மட்டுமல்லாது பலவற்றை கெடுக்கும்...! உழைப்பதோடு கொடுக்கும் எண்ணமும் உறுதி ஆயிட்டா, கெடுக்குற நோக்கம் வளராது....! எதையும், 'எப்படியும் மாற்றும் சக்தி' பணத்திற்கு உண்டு... ஆனால்...

செல்வ வளமே இல்லாதவர்கள் என்ன செய்வார்கள்...? பிற உயிரின் துன்பத்தைக் கண்டு மனம் பொறாமல், தன்னிடம் உள்ளதை பகுத்துக் கொடுத்து, தன்னால் முடிந்தவரை உதவி செய்து கொண்டே இருப்பார்கள்... இப்போது விவசாயிகள் நம் மனதில் வந்தால், நாட்டிற்கு நலம்...! நன்றி... "பிற உயிர்களிடத்து இரக்கம் காட்டி உதவுவதற்கு பணம் பொருள் தேவையில்லை, முடியாதவர்கள் இரக்கமாவது காட்டுங்கப்பா..." என்று வலியுறுத்துகிறார் நம்ம வள்ளுவர்... இரக்க உணர்வு இருந்தால், ஈகை தானே வரும்... ஈகையோடு இருப்பது நல்லது என்றாலும், இறக்கும்வரை இரக்கத்தோடு வாழ்வதே சிறப்பு... ஆனால், இவ்விரண்டும் இன்பமில்லை என்கிறார் ஒருவர் → பாடலில் :- அட...! இந்தப் பதிவின் திரைப்படத்திற்கும் பொருந்துகிறது !

இரப்போர்க்கு ஈதலிலும் இரந்துண்டு வாழ்வதிலும் (2) - இன்பம் உண்டாவதில்லை என் தோழா (2) அரிய கைத்தொழில் செய்து அனைவரும் பகிர்ந்துண்டு, அன்புடன் வாழ்வதின்பம் என் தோழா (2) அன்புடன் வாழ்வதின்பம் என் தோழா© நாடோடி மன்னன் ந.மா.முத்துக்கூத்தன் S.M.சுப்பையா நாயுடு சீர்காழி கோவிந்தராஜன் @ 1958 ⟫

உரைப்பார் உரைப்பவை எல்லாம் இரப்பார்க்கொன்று
ஈவார்மேல் நிற்கும் புகழ் (குறள் எண் : 232)


புகழ்பவர்கள் புகழ்வது எல்லாம் உதவி செய்பவர்களின் உள்ளத்தில் இருக்கும் இரக்கப் பண்பை மட்டுமே... அது எக்காலமும் நிலைத்து நிற்கும்...

செல்வ வளம் இருப்பவரோ இல்லாதவரோ, கைம்மாறாக எதையும் எதிர்பார்க்காமல், தாராதரம் பார்க்காமல், மனதார உதவுவதே உண்மையான புகழ் எனும் இரக்கத்திற்கு மூலாதாரம்... அதைத்தான் உதவி பெறுபவர்களும் நினைத்து புகழ்வார்கள்... இரக்கப் பண்பினையே பலவாறாகக் கூறி நிற்கும் → சங்க கால ஆற்றுப்படை நூல்களில் ← இதைக் காணலாம்... இங்கும் புகழ் என்பது இரக்கத்தையே குறிக்கும்...

"நம்மகிட்டே தான் நிறைய இருக்கே, கொஞ்சூண்டு கொடுத்தா நாலு பேரு பாராட்டுவாங்க..." என்பதும் தவறு... "இன்னைக்கு நாம் செய்வோம், பின்னாடி நமக்கு புண்ணியமா திரும்பி வரும்..." என்று மொய் பணம் போல் நினைப்பதும் தப்பு...! "இதனால் பெருமை, கௌரவம் எல்லாம் வரும்..." என்பதெல்லாம் நிலைக்காது...

"ஆளை ஆளு புகழ்வதெல்லாம் பணத்துக்காகத் தான் - பணம் அகன்று விட்டால் புகழ்ந்த கூட்டம் இகழும் உண்மை தான்... ஏழ்மை நிலை வந்தால் நேசர் யாரும் இல்லை (2) - இதை எண்ணிப் பார்த்து நடக்காதவன் அடைவான் தொல்லை... பணம் பந்தியிலே, குணம் குப்பையிலே - இதைப் பார்த்து அறிந்து நடக்காதவன் மனிதனில்லே... பிழைக்கும் மனிதனில்லே..." அடேய் இந்த பொழைப்பே வேண்டாம்...! இன்றைக்கு "செய்ந்நன்றி கொன்ற மகற்கு" கூட்டம் அதிகமாகி விட்டதால், அறிவுரை அல்லது ஆலோசனை கூட குறைந்து கொண்டே வருகிறது... 'எவன் எக்கேடு கெட்டுப்போனால் எனக்கென்ன...?' என்பவரை விட்டு விடுவோம்... பணம், பொருள்களையும் மறந்து விடுவோம்... துன்ப நிலையில் இருக்கும் போது, அதைக் கண்டு மனம் பொறுக்காமல், அந்த துன்பத்தில் பங்கு கொண்டு, மனமாற்றம் ஏற்படுத்தி மீண்டும் வாழ்வதற்கான அர்த்தத்தை உணர வைத்தவரை, யாராவது மறக்க முடியுமா...? அவரின் இரக்ககுணத்தை நினைத்து, இறக்கும்வரை மனம் புகழ் பாடும்...! நமக்கு என்றும் எதற்கும் குறளே துணை...!

கங்கை நதி பொங்கி வரும் நாட்டிலே, பலர் கண் கலங்கி வாழுகின்றார் வீட்டிலே (2) சில பேர்கள் கோடி செல்வம் கொண்டனர், பலர் தெருவோரம் கோடியிலே நின்றனர் (2) ஓர் உயிர் தான் யாவருக்கும் உள்ளது, அது ஒருமுறை தான் நம்மை விட்டு செல்வது (2) செல்வம் இன்றுவந்து நாளை போவது, செய்த சேவை என்றும் மக்கள் நெஞ்சில் வாழ்வது© நவரத்தினம் குன்னக்குடி வைத்தியநாதன் குன்னக்குடி வைத்தியநாதன் S.P.பாலசுப்பிரமணியம், வாணி ஜெயராம் @ 1977 ⟫

ஒன்றா உலகத்து உயர்ந்த புகழல்லால்
பொன்றாது நிற்பதொன் றில் (குறள் எண் : 233)


உலகத்தில் உள்ள ஒவ்வொரு மனிதருக்கும் உள்ள கருத்து வேறுபாடுகளால் பிரிந்து இருந்தாலும், அவற்றை ஒருங்கிணைத்து ஒற்றுமையாக வாழ வைப்பது அவர்களின் மனதில் இருக்கும் இரக்க குணமே...

"இப்படிப்பட்ட ஆட்கள் இருப்பதினால் தான் மழையே பெய்கிறது..." எனவும் "இந்த பூமி அழியாமல் இருப்பதற்கு இப்பேர்ப்பட்ட ஆட்கள் தான் காரணம்..." எனவும் நாம் பலரை மனதார பாராட்டுகிறோம்... காரணம் அவர்களின் ஒன்றுபட்ட இரக்கமனம்... சுனாமி போல இயற்கை சீற்றங்கள் வந்து பலரையும் தூக்கி செல்லும் போது தான், 'இரக்கம் என்பதென்ன' என்று பலருக்கும் கண்கூடாகத் தெரிகிறது... இரக்கம் என்பதற்கு பொருள் இல்லை, ஒரு உணர்வு என்பதை உணர வேண்டும்... அதற்கு இந்த உலகமே ஒரு உதாரணம் என்பதை திருவள்ளுவர் ஒரு கு.ற..ளி...ல்..........

"கைகளை தோளில் போடுகிறான், அதை கருணை என்றவன் கூறுகிறான்...! பைகளில் எதையோ தேடுகிறான், கையில் பட்டதை எடுத்து ஓடுகிறான்...! போயும் போயும் மனிதனுக்கிந்த புத்தியை குடுத்தானே, இறைவன் புத்தியை குடுத்தானே... அதில் பொய்யும் புரட்டும் திருட்டும் கலந்து, பூமியைக் கெடுத்தானே - மனிதன் பூமியை கெடுத்தானே..." மனசே பொறு... நீயும் அவசரப்பட்டு பாடிட்டு ஓடாதே...! இரக்கத்தைத் தவிர மற்றவைக்கு பொறுமை தேவை... 'இரக்க உணர்வோடு இருக்கும்வரை இந்த உலகம் அழியாது, அதை உணர்ந்தவர்களுக்கு வாழ்வில் இன்பமும் துன்பமும் ஒன்றே' என்பதை இதன் அடுத்த அதிகாரத்தில் சொல்கிறார் திருவள்ளுவர் :-

அல்லல் அருளாள்வார்க்கு இல்லை வளிவழங்கும்
மல்லல்மா ஞாலங் கரி (குறள் எண் : 245)
அதே சமயம் இரக்கம் குறையத் தொடங்கினால் இவ்வுலகம் என்னவாகும் என்பதையும் வரும் பதிவில் அறிவோம்... ஆன்மீகம் = கீழே உள்ள முதல் இரு வரிகள்...

தன்னைப்போல பிறரை எண்ணும் தன்மை வேண்டுமே - அந்த தன்மை வர உள்ளத்திலே கருணை வேண்டுமே (2) பொன்னைப்போல மனம் படைத்தால் செல்வம் வேறில்லை (2) - இதை புரிந்து கொண்ட ஒருவனை போல் மனிதன் வேறில்லை... ஒண்ணா இருக்க கத்துக்கணும் - இந்த உண்மையை சொன்னால் ஒத்துக்கணும்...© அன்புக் கரங்கள் வாலி R.சுதர்சனம் T.M.சௌந்தரராஜன் @ 1965 ⟫

இசை-புகழ்-வித்து-தொடரும்...

மேலும் தங்களின் விளக்கம் என்ன வாசகர்களே...?

புதிய பதிவுகளை பெறுதல் :


தொடர்புடைய எண்ணங்களின் வண்ணங்கள் சில :


முகநூல் மூலம் கருத்துக்களை பகிர :

கருத்துகள்

 1. பிச்சைக்காரன் திரைப்படம் பார்த்தேன். அதன் இறுதிக்காட்சி இப்பதிவின் முதல் பத்தியாகக் கொண்டுவந்த விதம் பதிவின் முக்கியத்துவத்தை உணர்த்தியது. நற்குணங்களைப் பற்றிய உங்களின் அலசல் எங்களை வியக்க வைக்கிறது.

  பதிலளிநீக்கு
 2. ஆஹா அருமையாக குறள் விளக்கம் தந்தீங்க அண்ணா...!
  சூப்பர்.!சூப்பர்..!!சூப்பர்...!!!

  பதிலளிநீக்கு
 3. பணம் இருப்பவர் இல்லாதவர், முதல் தலைமுறையில் அதிகமாகப் பெற்றவர்கள் பற்றி எழுத என்னிடம் நிறைய உள்ளது. நிச்சயம் எழுத வேண்டும். உங்கள் பதிவுகளை சேமித்து வைத்து ஒவ்வொன்றாக ரசிப்பதுண்டு.

  பதிலளிநீக்கு
 4. அருமையான தொகுப்பு ஜி ஈகை குணம் இல்லாதவன் மிருகத்துக்கு ஒப்பானவன்.

  தகுந்த பாடல் ஒலிகள் ஸூப்பர்.

  பதிலளிநீக்கு
 5. பிச்சைக்கார்ன படத்தையும், குறள்களையும், அதை ஒட்டிய பாடல்களையும் சேர்த்து அருமையாத் தந்திருக்கீங்க திண்டுக்கல் தனபாலன். உங்கள் உழைப்பைப் பாராட்டறேன்.

  இதனையே மூன்று வெவ்வேறு இடுகைகளாக வெளியிட்டிருக்கலாம். அப்போதான் ஒரு குறளின் பொருளில் ஆழ்ந்து, பலருடைய பின்னூட்டங்களையும் எண்ணத்தையும் படிக்க வாய்ப்பு கூடுதலாக இருக்கும். இடுகை ரொம்பப் பெரியதாகத் தோன்றுகிறது.

  இதில் அவ்வையாரின் மொழிகளையும் இணைக்கலையே நீங்க.

  பணமிருக்கும் மனிதரிடம் மனம் இருப்பதில்லை.. மனம் இருக்கும் மனிதரிடம் பணம் இருப்பதில்லை - இதுவும் சிந்திக்கத்தகுந்ததுதான். ஆனால் பொதுப்படுத்தமுடியாது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. முதலில் → தோன்றிற் _____?_____ தோன்றுக ← பதிவைப் போலத்தான் எழுதினேன்... அதுவே சிறிது நீண்டு விட்டது... இந்தப் பதிவில் கூட பலவற்றை நீக்கி விட்டேன்... கருத்துரையில் பேசிக்கொள்வோம் என்று விட்டுவிட்டேன்...

   இதற்கு முன் இந்த புகழ் அதிகாரத்தை ஒரு உரையாடலாக எழுதி இருந்தேன்... அது மிகவும் வித்தியாசமாக, கேள்விற்கு பதிலாக, ஒரு குறளுக்கு அடுத்து வரும் குறள் என ஒரு தொடர்பு இருக்கும்... ஆனால் இந்தளவு கூட அதில் விளக்கம் மற்றும் பாடல் வரிகள் இருக்காது...

   ஆனாலும், தங்களின் கருத்துரை இப்போது மீண்டும் சிந்திக்க வைத்து விட்டது...

   மற்றபடி நீங்கள் குறிப்பிட்ட பாடல் உட்பட, பல அருமையான பழைய பாடல்கள் உண்டு... ஆனால் அவரை பலரும் அறிந்திருக்கவும் வேண்டும்... அவை எல்லாம் எனக்கு உறுதுணையாக இருக்கின்றன... நான் நினைத்த கருத்துக்கள் பலதும் பாடலிலே இருக்கும் போது, அவற்றை தனியாக எழுத வேண்டியதில்லை என்பதால், சில பாடல் வரிகளை மட்டும் சேர்த்தேன்... நன்றி ஐயா...

   நீக்கு
  2. டிடி கிட்டத்தட்ட ஒரு மாதம் மேல் வர இயலாததால் பதிவு மொபைலில் பார்த்து வாசித்தும் கருத்து இட முடியவில்லை. பதிவையே அன்று கொஞ்சம் அதன் பின் கொஞ்சம் இன்று கொஞ்சம் என்றுதான் வாசித்தேன். நெல்லை சொல்லுவது போலத் தோன்றியது. ஏனென்றால் அத்தனையும் பொருள் மிக்கவை என்பதால் ஆழ்ந்து படிப்பதற்காகச் சொன்னேன் டிடி. டக்கென்று நெல்லையின் இக்கருத்து பட்டதால் இங்கு கொடுத்தேன்.

   கீதா

   நீக்கு
 6. 'அரிய கைத்தொழில் செய்து அனைவரும் பகிர்ந்துண்டு' - இது ஒரு சமுதாயத்தில் எப்படி நடைபெற முடியும்? இதற்கு உதாரணம் எங்கேனும் இருக்கிறதா? இது சாத்தியமற்றது என்றே நான் நினைக்கிறேன், அந்த சமூகத்தில் எல்லோரிடமும் இரக்க குணம் மிகுந்து, தனக்கு உள்ளதையும் பிறருக்கு வழங்கும் உன்னத குணம் இருந்தால் மட்டுமே இது சாத்தியம். அதனால் மனிதர்களிடத்தில் இதற்கு சாத்தியக் குறைவு என்றே நான் கருதுகிறேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நானும் பல ஆலைகளில் (Textiles / Mills) வேலை செய்து உள்ளேன்... ISO Consultant-ஆகவும் இருந்துள்ளேன்... சில வருடங்களில், பணம் கொடுத்தால், ISO Certificate எளிதாக கிடைத்தது... அவ்வாறு என்று ஆனதோ, அன்றே வேறு தொழில் பார்க்க சென்று விட்டேன்(டோம்...) ஆம், எனக்கு 'ISO' கற்றுக் கொடுத்த வாத்தியார் அப்படி...!

   பணம் ஒன்றே குறிக்கோளாக இருக்கிற பல நிறுவனங்கள் உண்டு... ஆனால், 'பிச்சைக்காரன்' படத்தில் வரும் நூல் ஆலைப்போலவும் உண்டு... அதை எனது அனுபவத்திலேயும் கண்டுள்ளேன்...

   நீக்கு
 7. காலத்துக்கேற்ற அருமையான விளக்கவுரைகள்!! பாடல்கள் மனதில் ஓட கருத்துக்களோடு சுலபமாக ஒன்ற முடிகிறது. நன்றி!

  பதிலளிநீக்கு
 8. ஆகா....மீண்டும் எழுக...எழுதுக வலைச்சித்தரே...வசீகரமான வண்ண எழுத்துகள் உங்களுடையத்

  பதிலளிநீக்கு
 9. இன்றைய காலக்கட்டத்தில் தானம் தர்மம் எல்லாம் விளம்பரத்திற்காகவே செய்யப்படுகிறது....

  5000 ரூபாய் நன்கொடை தர 50000 ரூபாய் செலவு செய்து விழாஎடுக்கிறார்கள்... என்னத்த சொல்லறது../

  சிறந்த பதிவு

  பதிலளிநீக்கு
 10. உங்கள் பதிவுகள் மிகவும் பயனுள்ளவை. எண்ணுவனவற்றை எழுதுங்கள். எதையும் நீக்க வேண்டாம்.

  பதிலளிநீக்கு
 11. நீண்ட வியக்கம் விளக்கங்கள் டிடி.
  அருமை வாழ்த்துகள்.
  https://kovaikkothai.wordpress.com/

  பதிலளிநீக்கு
 12. மிகவும் சிறப்பான பதிவு...

  ஈதலும் இரங்குதலும் பிறருக்காக உழைத்தலும் -
  எனது தந்தையார் எனக்குக் கற்றுக் கொடுத்தவை...

  நான் இவற்றை என் மகனுக்குக் கற்றுக் கொடுக்கவில்லை...
  ஆனால், அவனாகவே செய்து கொண்டிருக்கின்றான்!...

  வாழ்க நலம்!...

  பதிலளிநீக்கு
 13. சிறப்பான விஷயங்களைச் சொல்லும் உங்கள் பாணி தொடரட்டும். சமீபத்தில் தான் பிச்சைக்காரன் படம் பார்த்தேன். நல்ல படம்.

  பதிலளிநீக்கு
 14. முன் பதிவுச் சுருக்கத்தை ஸ்க்ராலிங்கில் கொடுத்திருப்பது சிறப்பு.

  பிச்சைக்காரன் படம் பார்த்ததில்லை.

  பணத்தால் மெத்தையை வாங்கலாம் தூக்கத்தை வாங்க முடியுமா? பொருளை வாங்கலாம். பெற்றவர்களை வாங்க முடியுமா? சொந்த பந்தம் சேர்ந்திருந்தால் சொத்து சுகம் தேவையில்லை. ஊருக்கும் பேருக்கும் காருக்கும் இஷ்டப்பட்டு வாழ்கின்ற வாழ்க்கைக்கு என்றென்றும் அர்த்தமில்லே..

  பதிலளிநீக்கு
 15. பாடலும் உரையும் என்னும் என்பதிவே ஏனோ நினைவுக்கு வருகிறது தமிழின்பெருமையோஅது

  பதிலளிநீக்கு
 16. பிச்சைக்காரன் படம், வந்த உடனேயே பார்த்திட்டேன். பார்க்கக்கூடிய படம்.

  பதிலளிநீக்கு
 17. அருமையான பாடல் வரிகள் அனைத்தும் மனதைக் கவருது..

  ஆனா எனக்கென்னமோ இதில மட்டும் உடன்பாடில்லை..

  “பணமிருக்கும் மனிதரிடம் குணம் இருப்பதில்லை.. குணமிருக்கும் மனிதரிடம் பணமிருப்பதில்லை:)”.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நிலையாமை என்று பலரும் புரிந்து கொள்வதில்லையே...

   இங்கே சொடுக்கி← இன்னும் பாடலாம் சகோதரி...

   நீக்கு
  2. டொடுக்கிப்போய் வந்திட்டேன்ன் ஹா ஹா ஹா..

   உண்மைதான், நாளை உயிரோடு எழும்புவோமா என்பதுகூட நிலையில்லாமல் இருக்கும் இவ்வுலகில்.. பலர் எதையு நினைத்துப் பார்ப்பதில்லை.

   நீக்கு
 18. பிச்சைக்காரன் படம் பத்தித் தெரியாது. ஆனாலும் ஒவ்வொரு குறளுக்கும் ஏற்ற பாடல் வரிகளை இணைத்து அழகாய்த் தந்திருக்கிறீர்கள். மிகுந்த உழைப்பு! எனினும் ஒரு குறளின் விளக்கத்தோடு அடுத்ததை இன்னொரு பதிவாய்த் தந்திருக்கலாம். மூன்றையும் திரும்பத் திரும்பப் படித்தால் தான் பொதுவான கருத்துப் புரிய வருகிறது. இரக்கம் என்பது மிகவும் அவசியமான ஒரு குணம் என்பதை வலியுறுத்திச் சொல்கிறீர்கள். இன்றைய கால கட்டத்துக்குத் தேவையானது தான்.கொஞ்சம் யோசிச்சுட்டு மறுபடி வரணும். படிக்கணும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. சில விளக்கங்களை நெல்லைத்தமிழன் ஐயாவின் கருத்துரைக்கு மறுமொழி கொடுத்துள்ளேன்... அங்கு சொன்னது போல், குறளின் குரலாக பதிவு செய்து இருந்தால், இரண்டே பதிவுகளில் முடித்திருக்கலாம்...

   குறள் எண் 236-ல் உள்ள புகழ் என்பதற்கு 'இரக்கம்' என்பதே சரி, அதை மற்ற குறள்களுக்கு பொருத்திப் பார்க்கவே இந்தப் பதிவும், வரப்போகிற பதிவுகளும்... அனைத்து அதிகாரங்களிலும் ஏதேனும் ஒரு குறள் நம் மனதில் உடனே படியும்... காரணம் எளிய சொற்கள்... புரிந்து கொள்வதில் தான் கருத்து வேறுபாடு இருக்கும்... ஆனால் ஒரே குறளை, தினமும் வாசிக்க வாசிக்க புதுப்புது சிந்தனைகள் தோன்றும், தேடல்களும் தொடரும்... அவற்றைக் கொண்டு எனது தளத்தில் பல பதிவுகள் எழுதி உள்ளேன்... திரைப்பட பாடல், ஒரு கதை, முடிவில் குறள் - இவ்வாறு இருக்கும்...

   அரசியல் பற்றிய பதிவுகள் வரும்போது, இன்னும் சிலவற்றை புரிந்து கொள்வீர்கள் அம்மா... நன்றி...

   நீக்கு
  2. டிடி இங்கேயே எனது கருத்தையும் சொல்லிவிடுகிறேன். லேட்டாக வருவதால் எல்லோரும் சொன்ன கருத்தைத்தான் சொல்லப் போகிறேன் ஆம் ஸ்ரீராம் சொல்லியிருப்பதையும் கீதாக்கா சொல்லியிருப்பதையும் அதிரா நெல்லை சொல்லியிருப்பதையும் வழி மொழிகிறேன்..உங்கள் உழைப்பு அபாரம்.....

   கூடவே இதுவும் வருகிறது டிடி. இதற்கு ஒரு வேளை உங்கள் அடுத்த பதிவுகளில் எனக்கு விடை கிடைக்கலாம்..

   இரக்கம் மிக மிக அவசியம். ஆனால் அந்த இரக்கத்திற்குச் சில சமயம் வேல்யூ இல்லாமல் ஆகிவிடுகிறதே. ஆற்றில் போட்டாலும் அளந்து போடு என்று சொல்லுவதுண்டு இல்லையா டிடி.

   நாம் இரக்கம் கொண்டு கொடுப்பதும் நல்ல கலனை அடைய வேண்டும் இல்லையா? அப்படித்தான் பல வருடங்களுக்கு முன் என் வீட்டிற்கு எதிரில் இருந்த பெண்மணி என்னுடன் மிகவும் நன்றாகப் பழகும் பெண்மணி, என்னை அழைத்து சுனாமியில் சிக்கிப் பெற்ற்ப்ரை இழந்து தவித்த குழந்தைகள் அவரது மாமியார் வீட்டுப் பக்கத்தில் கல்பாக்கத்தில் இருப்பதாக அக்குழந்தைகளையும் காட்டி பாவம் ஸ்கூல் யூனிஃபார்ம், புத்தகங்கள் வாங்கணும் என்று சொல்லி என்னிடம் ரூபாய் கேட்ட்டு வாங்கிக் கொண்டார். நானோ யாரேனும் கஷ்டப்படுகிறார்கல் என்றால் மனம் இரங்கிவிடும். ஆனால் பின்னர் தெரிந்தது அந்தப் பணம் அவர் தனக்குப் ப்யன்படுத்திக் கொண்டார் என்று.

   எனவே அதன் பின் யாரேனும் இப்படிக் கேட்டால் உங்கள் பள்ளியைச் சொல்லுங்கள் நேரே வந்து கட்டிவிடுறோம் என்று சொல்லிவிடுவதுண்டு. அது போல யாசிப்பவர்கள் பலரும் பொய்யர்களாக இருக்கும் போது?!!

   ஆற்றில் போட்டாலும் அளந்து போடு என்பதும், ஒருவருக்குக் கொடுத்துவிட்டால் பின்னர் அதைப் பற்றி யோசிக்கக் கூடாது அது உனது அல்ல. அவர்கள் என்ன செய்கிறார்கள் என்று யோசிக்கக் கூடாது அப்படி என்றால் அது ஈகை அல்ல என்றும் சொல்லப்படும் நல்ல வாசகமும் முரண்பாடுடையதே இல்லையா? இரண்டுமே நம் முன்னோர் சொன்னதுதான்...கஷ்டப்பட்டு உழைத்துச் சம்பாதிப்பது நாமே கஷ்டப்படும் போது கொடுப்பது வீணாகிப் போனால் மனம் அப்படித்தானே சிந்திக்கிறது.

   இரக்கம் என்பது இப்படியும் வெளிப்படலாம் இல்லையா...அதாவது ஒருவர் கஷ்டப்படும் போது பொருள் கொடுப்பதற்குப் பதில் அவரை உழைக்கக் கற்றுக் கொடுத்தால், (நல்ல உழைக்கும் நிலையில் இருந்தால் அதாவது வயோதிகமாக இல்லாமல், நோய்வாய்ப்பட்டு இல்லாமல்) எந்தவிதப் பிரதிபலனும் எதிர்பாராமல்... அதுவும் ஒருவகையில் ஈகைதானே இல்லையா...அது இன்னும் நல்லது இல்லையா...நாம் கொடுப்பது கூட நிரந்தரம் இல்லையே...

   கீதா

   நீக்கு
  3. கடைசியில் நீங்கள் சொன்னதை தான் குறள் எண் :232-ல் சொல்லியுள்ளேன்... அப்புறம்...

   திரிந்துப் போன பழமொழிகள் ஆயிரம் உண்டு... அவற்றில் ஓன்று : // ஆற்றில் போட்டாலும் அளந்து போடு // இதற்கு 'நன்றி மறந்தவர்களுக்கு' என, பலவித கதைகளும் உண்டு...

   விளக்கங்களும் உண்டு, அவற்றில் சில :-
   1) தானம் செய்தாலும் அளவோடு செய்ய வேண்டும்...
   2) குப்பையிலே போட்டாலும் குறிப்பேட்டில் பதிந்து போடு...
   3) குடும்பத்துக்கே செலவு செய்தாலும் கணக்கிட்டு செய்ய வேண்டும்...
   4) அகத்தில் போட்டாலும் அளந்து போட வேண்டும்... அதாவது வயிற்றுக்கு சாப்பிட்டாலும் சரியான அளவு சாப்பிட வேண்டும்...!

   நீக்கு
 19. பிச்சைக்காரன் படம் எனக்கு பிடிக்கும். அந்தம்மா சொல்லும் வரிகள் அனைவரும் கடைப்பிடிக்க வேண்டியதே. பிச்சைன்ற வார்த்தையே இல்லாம போகனும்ண்ணே. எதாவது ஒரு சந்தர்ப்பத்தில் அடுத்தவர் உதவியை எதிர்பார்க்கும்போது எப்படி கூனி குறுகி நிப்போம்ன்னு யோசிச்சா அவர்கள் படும்பாடு தெரியும்.

  பதிலளிநீக்கு
 20. வயித்துக்காக பிச்சை எடுப்பவருக்கு கொடுக்கலாம். ஆனா, உழைக்க சோம்பேறித்தனம் கொண்டு பிச்சை எடுப்பவங்களை ஆதரிக்கவே கூடாதுண்ணே

  பதிலளிநீக்கு
 21. திருக்குறள் கருத்துகளோடு, சினிமா பாடல் வரிகளின் எடுத்துக் காட்டுகள். பதிவுக்கு பாராட்டுகள்.நேரம் கிடைக்கும் போது பாடல்களை கேட்டு ரசிக்கிறேன்.

  பதிலளிநீக்கு
 22. பிச்சைக்காரன் பாடம் பார்த்தேன்.
  தன் தாய்காக பிச்சை எடுக்கும் அந்த தனையன் கலங்க வைத்தான் அவன் படும் இன்னல்கள் அதிகம்.
  எல்லா பாடல்களும் அருமை.
  குறள்களும் அதற்கு தங்கள் விளக்கமும் மிக அருமை.

  ஒவ்வொன்றையும் நிதானமாய் படிக்க வேண்டும்.

  அன்பு, கருணை, இரக்கம், ஈகை குணங்கள் மனிதனுக்கு தேவை.

  குறள் காட்டும் பாதையில் மனிதன் நடந்தால் யாருக்கும் துன்பம் இல்லை.

  நீங்கள் தந்து இருக்கும் குறள்களை படிக்கிறேன் . மீண்டும் வருகிறேன்.

  பதிலளிநீக்கு
 23. ஈகையின் சிறப்பை விளக்கும் அருமையான பதிவு.
  வாழ்த்துக்கள் தனபாலன்.
  சென்னையில் வெள்ளம் வந்த போது ஈரம் உள்ள நெஞ்சங்களை கண்டோம்.
  இப்போது கேரளாவில் பார்த்துக் கொண்டு இருக்கிறோம்.
  எவ்வளவு கஷ்டம் அதில் தங்கள் உயிரை பணையம் வைத்து காத்து வருபவர்கள், உதவிக்கரம் நீட்டுபவர்கள் எல்லோருக்கும் நெஞ்சில் ஈரம் இருப்பதால்தான்.
  இந்த உலகம் அன்பு உள்ளங்களால் வாழும்.

  பதிலளிநீக்கு
 24. வணக்கம் அண்ணா. மீண்டும் உங்கள் குறள் பதிவுகளைப் படிப்பதில் மகிழ்கிறேன். பொருள் விளக்கமும் பாடலும் பொருத்தமாகப் பிரமாதம் அண்ணா. உங்களுக்கே உரிய தனிச்சிறப்பு. நன்றி அண்ணா.

  பதிலளிநீக்கு
 25. வணக்கம் சகோதரரே

  ஈகையின் சிறப்பைப் பற்றி மிகவும் அழகாக விளக்கியிருக்கிறீரகள். ஒவ்வொரு குறளுக்கும் ஏற்றபடி பாடல் வரிகள் மிக பொருத்தமான தேர்வு செய்து பதிவு மிகவும் அருமையாய் உள்ளது ஈதல் அவசியம். அந்த உணர்வு நம்மிடையே கண்டிப்பாக வளர வேண்டும்.அந்த வகையில் குறள், பாடல்கள் அனைத்தையும் விவரித்து, தொகுத்து வழங்கியிருப்பது மிகச் சிறப்பு. தங்கள் தமிழ் சேவைகள் தொடரட்டும். படிக்க மிகவும் உவகையாக இருக்கிறது.

  பிச்சைக்காரன் படம் முழுமையாய் பார்த்ததில்லை. ஆனால் நடுநடுவில் மனதை உருக்கும்படியாய் இருக்கும் சில காட்சிகளை பார்த்திருக்கிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
 26. இரக்கம்தான் ஈகை, தியாகம் போன்ற நல்ல குணங்களுக்கு அடிப்படை.
  நிறைய உழைத்து ஒரு பதிவை தந்துள்ளீர்கள். பாராட்டுகளும், நன்றியும்.
  நீங்கள் விரிவாக விளக்குவதால் ஒன்று அல்லது இரண்டு பாடல்களோடு நிறுத்திக் கொண்டால் என்னைப் போன்றவர்களுக்கு சுலபமாக இருக்கும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அம்மா, நீங்களே இப்படி நினைத்தால் என்ன சொல்வது...?

   காணொளி பாடல்கள் 3 மட்டுமே... மற்றவை எழுதும் போது மனதில் வந்த சிந்தனைகள் பாடல் வரிகளாக...!

   நன்றி...

   நீக்கு
 27. பிச்சைக்காரன் படம் பார்க்கவில்லை. அடுத்த முறை ஒளி பரப்பினால் பார்க்கிறேன்.

  பதிலளிநீக்கு
 28. அனைத்துத் திரைப்பாடல்களும் எங்களை மிகவும்
  கவர்ந்தவை. திருக்குறளோடு இணைக்கையில்
  இதுவும் அதுவும் சேர்ந்து படிக்கவே மகிழ்ச்சியாக இருக்கிறது. பலன் எதிர்பாராமல் கொடுக்கும் குணமே நம்மை உயர்த்தும்.
  இன்னும் நிறைய குறள்களையும் ,
  பொருத்தமான பாடல்களையும் எதிர்பார்க்கிறேன்.
  நற்சிந்தனை மனதில் ஓட, பதிய இது போன்ற எழுத்து தேவை. நன்றி தனபாலன்.

  பதிலளிநீக்கு
 29. அருமையான கோணத்தில் சிந்தித்து இருக்கிறீர்கள். பாடல்களை தேர்வு செய்த விதம் arumai

  பதிலளிநீக்கு
 30. //மனிதன் என்பவன் ஈகையுடனும் இறக்கத்துடனும் வாழவேண்டும்//,,,,
  சரிதான் ஆனால் அதெல்லாம் இன்று கெட்ட வார்த்தகளாகிப்போனது,/

  பதிலளிநீக்கு
 31. ஈதல் இசைபட வாழ்தல் உண்மைதான் டிடி சகோ. நெல்லைத் தமிழன் சொன்னதையும் வழிமொழிகிறேன். மூன்று இடுகையா போட்டிருக்கலாம்.

  பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

நகுதற் பொருட்டன்று நட்டல் மிகுதிக்கண்
மேற்சென்று இடித்தற் பொருட்டு. (குறள் 784)

நட்புச் செய்துகொள்வது நண்பரோடு சிரித்து மகிழ்வதற்காக மட்டும் அல்ல. மிகுதியாகத் தவறு செய்யும்போது, அவரைக் கடிந்து திருத்துவதற்கே ஆகும்.