🏠 வணக்கம் காப்பகம் நன்றி

தேடல் 🔎



புதிய பதிவுகளை பெற ✉



மறக்க முடியுமா...?

யார் யாரோ நண்பன் என்று... ஏமாந்த நெஞ்சம் உண்டு2 பூ என்று முள்ளைக் கண்டு புரியாமல் நின்றேன் இன்று... பால் போலக் கள்ளும் உண்டு... நிறத்தாலே இரண்டும் ஒன்று2 நான் என்ன கள்ளா...? பாலா...? நீ சொல்லு நந்தலாலா.... உனக்கென்ன மேலே நின்றாய்... ஓ நந்தலாலா... உனதாணை பாடுகின்றேன்... நான் ரொம்ப நாளா... (படம் : சிம்லா ஸ்பெஷல்)



© சிம்லா ஸ்பெஷல் வாலி M.S.விஸ்வநாதன் S.P.பாலசுப்ரமணியம் @ 1982 ⟫

ஏனிந்த சோகம்...? நண்பனின் நண்பன் நமக்கும் நண்பன் அல்லவா...?

அது சரி தான்... ஒருவேளை பகைவனின் நண்பன் நமக்கு நண்பனாக இருந்து, அந்த பகைவனை ஏன் நண்பனாகிக் கொள்ள முடியாது...? குழப்பமில்லாமல் கேட்கிறேன்...! என் நண்பனுக்கு நல்லவனாக நடக்க முடியும்... ஆனால் என் பகைவனுக்கும் எப்படி நல்லவனாக நடக்க முடியும்...?

அப்படிக் கேளு மனசாட்சி...! நண்பர் நம்மோடு அல்லது நம் நல்லெண்ணத்தில் இருப்பவர்... அவருக்கு நாம் நல்லவராக இருப்பதால் தான் அவர் நம்மிடம் நட்போடு இருக்கிறார்... ஆமா இந்த பகைவர் என்பது யார் ?

ம்... பகைவர் என்பவர் நாம் எது சொன்னாலும் விதண்டாவாதம் செய்பவர்... நம் செயல்களைப் பிடிக்காதவர்... எப்போதும் நமக்கு எதிராகச் சிந்தித்துக் கொண்டிருப்பவர்... நாம் நல்லபடியாக நடந்தாலும் அதை ஏற்றுக் கொள்ள மறுப்பவர்... இப்படிச் சொல்லிக் கொண்டே போகலாம்...

அப்படிப் பார்த்தா நீ தான் முதலில் வந்து நிற்கிறாய் மனசாட்சி ! ஹா...ஹா...

பதிவு முடிஞ்சி போச்சி ! பகைவர் என்பவரை நாம் உருவாக்கவில்லை... அவரை அவராகவே உருவாக்கிக் கொள்கிறார்ன்னு சொல்றேன்...

அப்படியானால் பகைமை எண்ணம் நம்மிட்டே இல்லை... அவரிடம் மட்டுமே இருக்குன்னா, நம்மிடம் உள்ள நல்லெண்ணத்தின் மூலம் அவரையும் நண்பராக்கிக் கொள்ளலாமே...?

கேட்கிறதுக்கு நல்லாத் தான் இருக்கு ! அம்மா இல்லேன்னா - அன்பு போச்சி, அப்பா இல்லேன்னா - அறிவு போச்சி, கூடப் பிறந்தவர்கள் இல்லேன்னா-ஆதரவு போச்சி, சம்சாரம் இல்லேன்னா-சகலமும் போச்சி, இத்தனையும் போனாலும், கடைசிக் காலத்திலே நல்ல நண்பன் இல்லேன்னா வாழ்க்கை நாசமாப் போச்சி..! என்ன சொல்றே நீ...?

சும்மாவா...? நட்பு குறித்து 50 குறள்கள்...! அவைகளில் கருத்துரை இடும் இடத்தில் வைத்திருக்கும் ஒரு சிறந்த குறள் தான் இப்பதிவிற்கு அடித்தளம்...!

சரி இந்த எதிர்மறை எண்ணங்கள் கடைசிக் காலத்தில் தானே காணாமல் போகுது...? ம்... அதனால், அதன் பின் நட்பிருந்தும்... ம்ஹீம்... பயன்...?

நம் எல்லோருக்கும் ஒரு நேர்மறை எண்ணம் உண்டு... நம்முடைய பகைவரிடம் மட்டுமே எதிர்மறை எண்ணங்கள் உள்ளன... நம்மிடம் இல்லை என்பதே அது... இந்த நேர்மறை எண்ணத்தை முதலீடாக்கி பகைவரையும் நண்பனாகிக் கொள்ளலாம்...! துணிச்சலான ஒரு நிகழ்வு :

நம்ம காந்திஜி தென்னாப்பிரிக்காவிலிருந்து இந்தியா திரும்பிய போது, பல்வேறு தேசிய ஆக்கப் பணிகளில் ஈடுபடத் தொடங்கினார்... பீகாரில் வெள்ளைக்கார தோட்ட முதலாளிகள் பிடியில் எண்ணற்ற விவசாயிகள் கொத்தடிமைகளாக வருந்துவதாகக் கேள்விப்பட்டார்... நேராகப் பீகார் சென்றார்... வெள்ளைக்கார தோட்ட முதலாளிகளுக்கு எதிராக விவசாயிகளைத் திரட்டினார்... அவர்கள் அமைதி வழியில் போராடுவதற்குத் திட்டங்கள் வகுத்தார்... அநீதிக்கு எதிராகப் போராட்டங்கள் நடத்தினார்...

இதைக் கண்ட வெள்ளைக்கார தோட்ட முதலாளிகளுக்கு மகாத்மாவின் மீது ஏகப்பட்ட வெறுப்பு உண்டானது... அவர்களின் ஒருவருக்கு மகாத்மாவின் மீது எல்லையற்ற கோபம் ஏற்பட்டது... அவரைக் கொன்று விட வேண்டும் என்றும் கூட திட்டமிட்டார்... அந்தளவிற்குப் பகைமை உணர்வு இருந்தது... இதைக் கேள்வியுற்றார் மகாத்மா காந்திஜி... ஒரு நாள் நள்ளிரவு நேரத்தில் அந்த வெள்ளைக்கார தோட்ட முதலாளி வீட்டிற்குச் சென்று கதவைத் தட்டினார்... வெள்ளைக்காரர் படித்துக் கொண்டிருந்த புத்தகத்துடன் கதவைத் திறந்து, "யார் நீ...?" எனக் கேட்டார்... அவர் அதுவரை காந்திஜியைப் பார்த்தது கிடையாது... "நான் தான் காந்தி... என்னை நீங்கள் தேடிக்கொண்டு இருக்கிறீர்களாமே..."

தான் பகைமை உணர்வோடு பழி வாங்கத் துடித்துக் கொண்டிருக்கும் மனிதர், இப்படி நிராயுதபாணியாக அமைதியாக நள்ளிரவு நேரத்தில், இப்படி நேருக்கு நேராக வந்து நிற்பார் என்று எதிர்பார்க்கவில்லை அந்த வெள்ளை முதலாளி...! திடுக்கிட்டுப் போய் கையிலிருந்த புத்தகம் நழுவிப் போய்க் கீழே விழுந்தது... காந்தியின் சாந்த சொரூபம் கண்டு அதிர்ந்து போனார்... "ஒன்னுமில்லை... உங்களிடம் கோபம் இருந்தது உண்மை... ஆனால் உங்களை நேராகப் பார்த்ததும் அந்த கோபம் மறைந்து போனது...! உங்களின் துணிச்சலும், எளிமையும், அமைதி தோற்றமும் என்னை மாற்றி விட்டது... உங்களை நான் சரியாகப் புரிந்து கொள்ளவில்லை என்பதற்காக வருந்துகிறேன்... வீட்டின் உள்ளே வாருங்கள்... மகிழ்ச்சி..." என்று மரியாதையாகப் பேசத் தொடங்கினார்... பகைவர் நண்பரானார்...

நண்பர்களே, நம்மிடம் தவறில்லை என்றால் எந்தப் பகைவரையும் நாம் நண்பராகிக் கொள்ளலாமே...! தங்களின் கருத்து என்ன...?



© தளபதி வாலி இளையராஜா S.P.பாலசுப்ரமணியம், K.J.யேசுதாஸ் @ 1991 ⟫

பந்தம் என்ன ? சொந்தம் என்ன ? போனால் என்ன ? வந்தால் என்ன ? உறவுக்கெல்லாம் கவலைப்பட்ட ஜென்மம் நானில்லை... ஹ.ஹா...! பாசம் வைக்க நேசம் வைக்கத் தோழன் உண்டு வாழ வைக்க, அவனைத் தவிர உறவுக்காரன் யாரும் இங்கில்லே...! உள்ள மட்டும் நானே - உசிரைக் கூடத்தானே - என் நண்பன் கேட்டால் வாங்கிக்கன்னு சொல்லுவேன்...! என் நண்பன் போட்ட சோறு நிதமும் தின்னேன் பாரு... நட்பைக்கூடக் கற்பைப் போல எண்ணுவேன்... சோகம் விட்டு, சொர்க்கம் தொட்டு, ராகம் இட்டு, தாளம் இட்டு, பாட்டுப் பாடும் வானம்பாடி நான் தான்...! (படம் : தளபதி)

இருப்பா, கொஞ்சம் பொறு... எல்லோருக்கும் நல்லவனாக நடப்பதை விட + நடிப்பதை விட, நமக்கு நாமே நல்லவனாக இருப்பது மட்டுமே சாத்தியம் ! அதுவே உத்தமமும் + சிரமமும் கூட...! என்று இங்கே சபாஷ்..! நீங்க சொல்லப் போறதும் சரி...! ← பேசி விட்டோமே...! மறந்து விட்டாயா...?

உத்தம வில்லலான மனசாட்சியே, அப்பதிவின் தொடர் சிந்தனை பதிவு தான் இது...! அப்புறம் அது தான் சாத்தியம்ன்னு உத்தமமாக முடிவான பின் எதிர்மறை எண்ணங்கள் தோன்றலாமா...? மற்றவர்களுக்கு நல்லதை மட்டும் செய்து கொண்டிருந்தால், அவைகள் மறந்து போவது சகஜம் தான்... ஆனால் அந்த மற்றவர்கள் மறக்க மாட்டார்கள்... நிதர்சனமான உண்மை ஒன்று தெரியுமா...? அது வாழ்வில் ஏற்படும் சில பல சங்கடங்களையும், துயரங்களையும் மறப்பதற்குத் தான் நாம் முயன்று தோற்று, நாமும் துன்பப்பட்டு மற்றவர்களையும் துன்பப்படுத்துகிறோம்... எந்த ஒரு விசயத்தையும் நாம் கொடுக்கும் முக்கியத்துவம் பொறுத்து அது மனதில் தங்கும்... தீவிரமாக மனதில் படியும் பகைமை எண்ணத்தையும் விரைவாக மறப்போம்... மன்னிப்போம்... மனநலம் + உடல்நலம் காப்போம்...

நன்றி நண்பர்களே... இப்போது தங்களின் கருத்து என்ன...?

புதிய பதிவுகளை பெறுதல் :


தொடர்புடைய எண்ணங்களின் வண்ணங்கள் சில :


முகநூல் மூலம் கருத்துக்களை பகிர :

கருத்துகள்

  1. பழிவாங்கும் உணர்வை மனதில் இருந்து நீக்குவது கடினம். ஒரு வேளை நீக்கப் பழகிவிட்டால் வாழும் வாழ்க்கை சொர்க்கம்.

    பதிலளிநீக்கு
  2. மனசாட்சியின் கேள்விக்கு பதில் சொல்வது சிரமம்தான். பகைவர்களை நண்பர்கள் ஆக்கிக்கொள்ளும் துணிவு காந்தியை போல் நம்மிடம் இருக்கிறதா..? அதனால்தான் அவரை மகாத்மா என்றார்கள். சிந்திக்க வைக்கும் பதிவு.

    த ம 6

    பதிலளிநீக்கு
  3. நடப்பிற்கு இலக்கணம் அன்பு. அன்பிற்கு எதிர்ப்பதம் தலைகனம். ஒருவரின் தலைகனம் குறைந்தாலே போதும் நடப்பு நீடிக்கும். நல்ல பதிவு. வாழ்த்துக்கள் நண்பரே..

    பதிலளிநீக்கு
  4. பழி வாங்கும் உணர்வென்பதெல்லாம் என்றுமே கிடையாது.. நல்ல எண்ணங்களினால் செயல்களினால் - நான் பலருக்கும் பகைவனாகி விட்டேன்.. ஆனால், எனக்கு பகைவர் என்று யாரும் கிடையாது..

    பதிலளிநீக்கு
  5. எட்டிக்காய் இனிக்க வேண்டும் என்று விரும்ப வேண்டாம்..
    அதற்காக வீணாக உழைத்து வருந்த வேண்டாம்..

    நாம் நமக்கென விதிக்கப்பட்ட அறத்தினைப் பேணுவோம்!..
    மனநலம் + உடல் நலம் காப்போம்!..
    வாழ்க நலம்!..

    பதிலளிநீக்கு
  6. பகைவனுக்கும் நல்லவனாக இருக்க வேண்டும் என்றுதானே பெரியவர்களும். அறநெறியர்களும் கூறி இருக்கிறார்கள் .

    பதிலளிநீக்கு
  7. பகைவர்களை நண்பர்கள் ஆக்கிக் கொள்வது நல்ல விடயம் தான் ஆனால் அது அவ்வளவு எளிது இல்லை சாத்தியம் கொஞ்சமும் இல்லை என்று தான் சொல்லவேண்டும். அது பாம்புக்கு பால் வார்ப்பது போலவும் , கல்லில் நார் உரிப்பது போன்றதும் என்றே நான் எண்ணுகிறேன். அப்படி பகைவர்களை நண்பர்களாகக் கொண்டால் அதை விட மகிழ்ச்சி வேறு இல்லை. பகை கொண்ட உள்ளம் துயரத்தின் இல்லம் தான். உண்மை தான். ஆனால் பகைவனுக்கும் நல்லவனாக இருப்பதில் தப்பொன்றும் இல்லை. ஆனால் அதுவே தப்பாகிவிடும் . ஆகையால் விலகி இருப்பதே மேல்.

    பதிலளிநீக்கு
  8. நாம் கொடுக்கும் முக்கியத்துவம் வைத்தே மனதில் தங்கும் ..மறப்போம் மன்னிப்போம். பகிர்வுக்கு நன்றிங்க.

    பதிலளிநீக்கு
  9. அந்தகாலத்து அஹிம்சையை எடுத்துச் சொன்னீர்கள். இந்த காலத்திற்கு இது பொருந்துமா என்று தெரியவில்லை.
    த.ம.10

    பதிலளிநீக்கு
  10. இருப்பது சில நாட்கள். இதில் ஏன் பகைமை. எனவே ‘மறப்போம் மன்னிப்போம்’ என்ற கொள்கையை ஏற்றால் வாழ்க்கை வசந்தமே.

    பதிலளிநீக்கு
  11. நேர்மறை எண்ணங்கள் எதிர்மறை எண்ணங்களை ஜெயித்து விடும் நன்றி.

    பதிலளிநீக்கு
  12. பகைவனுக்கு அருள்வாய் நன்னெஞ்சே...!

    நன்றி.

    பதிலளிநீக்கு
  13. பதிவு அருமை ...ஆனால் ஓரே மாதிரியான தத்துவம் ,உறவுகள் சார்ந்ததாக இருக்கிறது. வயதாகிவிட்டது என நினைக்கிறேன்

    பதிலளிநீக்கு
  14. இப்ப எல்லாம் எதிரி முன்னாடி போய் நிக்க முடியாது. போட்டு தள்ளிட்டு போய்ட்டே இருப்பாங்க. மனசாட்சிங்குரதே மறுகிப் போச்சு

    பதிலளிநீக்கு
  15. எதிரி என்பவன் நமது விருப்பத்துக்கு, நமது எண்ணங்களுக்கு, நமது கொள்கைகளுக்கு எதிரான செயல்படுபவன்.
    எண்ணங்கள் தொடர்ந்து அதே நிலையில் நமக்கு மட்டுமல்ல, அந்த "எதிரிக்கும்" இருக்கும் காலத்தில், அது மட்டுமல்ல, அதே உச்சத்தில் இருக்கும் வரை தான், எதிரி எதிரியாக பகைவனாக தோன்றுவான்.

    காலப்போக்கில், நாம் நம் எண்ணங்களை மாற்றிக்கொள்ளலாம். நமது " எதிரி" யும் தமது எண்ணங்களை மாற்றிக்கொள்ளலாம்.

    ஒரேயடியாக மாற்றிக்கொள்ளாவிடினும், இரு எதிரிகள் ,தம்மை என்னென்ன பிரிக்கின்றன என்பதை விட, எது எது எம்மை சேர்க்க வைக்க இயலும் என்பதில் கவனம் செலுத்த துவங்கினால்,
    பகைமை குறைந்து நட்பு துவங்கிட வாய்ப்பு இருக்கும்.

    இருந்தாலும் இது ஒரு நாளில், முடிந்துவிடக்கூடிய சமாசாரம் அல்ல.

    பாருங்கள். கிட்டத்தட்ட 60 ஆண்டுகட்கு பின்பு, க்யூபாவும் அமெரிக்காவும் பேசத்துவங்கி இருக்கின்றன.

    ஈரானும் அமெரிக்காவும் பேசி ஒரு ஒப்பந்தம் கொண்டு வர இயலுமா என்று பார்க்கின்றன.

    இந்த நிலை அரசியலில் மட்டுமல்ல, சமூக தளங்களிலும், அலுவலகங்களிலும் கூட
    ஏற்படுவதை பார்க்கக்த்தான் செய்கிறோம்.

    யாரும் நிரந்தர விரோதியும் அல்ல. யாரும் நிரந்தர ந்ணபனும் அல்ல.

    நட்பும் விரோதமும் நமது எண்ணங்களின் தீவிரத்தின் பிரதிபலிப்பே.

    சுப்பு தாத்தா.

    பதிலளிநீக்கு
  16. மறக்க முடியுமா?
    இது கேள்வி
    பதிலாக ஏதுமிருக்கா என்றால்
    "நம்மிடம் தவறில்லை என்றால்
    எந்தப் பகைவரையும் - நாம்
    நண்பராக்கிக் கொள்ளலாமே!" என்ற
    கேட்பவர் - எடுத்துக்காட்டாக
    காந்தியின் கதையைக் காட்டி
    எல்லோரையும் சிந்திக்க வைக்கிற பதிவு!

    பதிலளிநீக்கு
  17. வணக்கம்
    அண்ணா

    சில மனிதர்களின் மனங்களில் இது தானாக குடிகொண்ட அம்சம் தனாக திருந்தி வாழ்வதே சிறந்தது.
    ஒன்று மனச்சாட்சி அடுத்தது தெய்வத்தின் சாட்சி.. இரண்டும் இருக்கும்மானால் எதுவும்அசையாது
    நல்ல கதை சொல்லி நல்ல கருத்தையும் பகிர்ந்துள்ளீர்கள் வாழ்த்துக்கள்.த.ம13

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
  18. பகைமையை மறந்து மன்னிப்பது நமது உடல்+மனம் ஆரோக்கியமாக இருக்க நாம் செய்ய வேண்டிய முக்கியமான ஒன்று. மிக மிக கடினமான ஒன்று கூட. இதில் ஜெயித்தவர்கள் உண்மையில் இறைவனுக்கு சமம். காந்தியை ஏன் மகாத்மா என்று சொல்லுகிறோம் என்று நீங்கள் சொல்லியிருக்கும் நிகழ்ச்சி மூலம் தெரிகிறது. பகைவனுக்கும் நல்லவனாக இருப்பது முயன்றால் சாத்தியமாகும் ஒன்றுதான்.

    பதிலளிநீக்கு
  19. இப்பவெல்லாம் மனசாட்சி இருக்காங்கிறதே சந்தேகமா போய்விட்டது...
    மறந்து நட்பாகலாம்னா...அவுங்க அடுத்த ஆப்புக்கு நம்மள பயன் படுத்துறாங்க....கஷ்டம்தான்

    நல்ல பதிவு சகோ

    தம + 1

    பதிலளிநீக்கு
  20. எனக்கு எதிரிகள் இருக்கலாம். ஆனால் நான் யாருக்கும் எதிரி இல்லை. அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ். கடினமான கேள்விக்கு என் எளிதான பதில் சிந்திக்க வைக்கிறீர்கள்

    பதிலளிநீக்கு
  21. அவங்க உலகத்துல நம் மேல விரோதமும் குரோதமும் வைச்சிருந்தாலும் நம்ம உலகத்துல அவங்க மேல மாறா அன்பு மட்டும் வைக்க முயற்சிக்கலாம். ஏன்னா இந்த உலகத்துல மாற்றக் கூடியது நம்மை நாம் மட்டுமே. நீங்க நினைப்பது போல் நம் மன உடல் ஆரோக்கியமாவது பெருகும்.

    பதிலளிநீக்கு
  22. காந்தியின் வாழ்க்கை சம்பவத்தைக் கொண்டு பகைவரை நண்பராக்கும் வழியை தங்களுக்கே உரிய பாணியில் பதிவிட்டுள்ளது சிறப்பு
    காந்தியின் துணிச்சல் அபாரமானது. அந்நியத் துணி பகிஷ்கரிப்புப் போராட்டம் நடத்தியதில் ஏராளமனோர் வெளிநாட்டு துணியை புறக்கணித்தனர். விளைவு இங்கிலாந்தில் எதிரொளிளித்தது மில்கள் காற்றாடின ஏராளமானோர் வேலை இழந்தனர், இங்கிலாந்து மக்களின் கோபம் காந்தியின் மீது திரும்பியது . இதை அறிந்த காந்தி வட்ட மேசை மாநாட்டுக்கு சென்றபோது அதிகம் பாதிக் கப்பட்ட லங்கஷையர் பகுதிக்கு சென்று வேலை இழந்தவர்களிடம் தங்கள் தரப்பு நியாயத்தை விளக்கியது ஒரு சரித்திர சம்பவம். இதனை
    தெரிந்த வரலாறு! தெரியாத சம்பவங்கள்! என்ற பதிவில் விவரித்திருந்தேன் .

    பதிலளிநீக்கு
  23. Nanmai seipavargalai nanpanagavum, themai seipavargalai etheriyaga paarpathai vitu naam unmayaga iruthal elorum nam uaravugala. visam endrum therithum undavargal palar. poomi onera.

    பதிலளிநீக்கு
  24. பகைவரை நண்பராக்கிக் கொள்வது நல்ல விசயம்தான்
    ஆனால் நடக்கிற காரியமா
    நல்ல சிந்தனை ஐயா
    நன்றி
    தம +1

    பதிலளிநீக்கு
  25. காந்தி போல பகையை ஒதுக்கி நட்பை யாசிக்க முடியுமா நம்மால் என்பது சிந்தனைக்குரியது. அருமையான விளக்கமும் பாடல் தொகுப்பும்.

    பதிலளிநீக்கு
  26. ஏனிந்த சோகம் என்று கேட்க நினைத்தேன். ஆனால்,
    அருமையான கதை. மனம் மாற மனிதம் வாழும். நட்பு என்பது இன்று உண்மையாக இல்லை. உயிரைக் கொடுக்க வேண்டாம். எடுக்காமல இருந்தால் போதும்.

    பதிலளிநீக்கு
  27. நம்முடைய மனசாட்சி நமக்கு நண்பனா? பகைவனா? நல்லது சொன்னாலும் பிடிக்காததைச் சொன்னால் பகைவனாகி விடுமோ?

    பதிலளிநீக்கு
  28. நீங்களே கேள்விகேட்டுவிட்டு, நீங்களே மறுமொழியினையும் சூசகமாகக் கூறிவிட்டீர்கள். எதிர்மறை குணத்தைவிட்டு நேர்மறை குணத்தை மேம்படுத்தினால் பல சிக்கல்கள் தீரும்.

    பதிலளிநீக்கு
  29. எதிரிக்கு எதிரியே நண்பனாகும்போது..நண்பனுக்கு நண்பன் நண்பனாக இல்லாமல் இருப்பாரா...???

    பதிலளிநீக்கு
  30. ஆஹா! நண்பர் வட்டத்தை அதிகரிக்கவும், நிம்மதியாய் அதிகரிக்கவும் அட்டகாசமான ஐடியாவா இருக்கே! நன்றி அண்ணா!

    பதிலளிநீக்கு
  31. ( டாஸ்மாக் ) நண்பனைப் பார்த்தாலே பயமா இருக்கு ,இதிலே எதிரியை எங்கே like க்கிறது :)

    பதிலளிநீக்கு
  32. அருமையான கருத்து. படித்ததும் ""வில்லியம் ப்ளேக் அவர்களின் "பாய்ஸன் ட்ரீ" என்ற ஆங்கில கவிதை நினைவில் வந்தது

    பதிலளிநீக்கு
  33. நெஞ்சில் நிறையும் வன்மமும் கோபமும் பகைவரை விட நமக்கே அதிகம் கேடு உண்டுபண்ணும் என்பதே உண்மை.

    மன்னிப்பதும் மறப்பதும் பகைவனுக்கு அருள அல்ல, நமது நலம் பேணவே.

    நல்ல சிந்தனை.

    God Bless You

    பதிலளிநீக்கு
  34. எதிரியை நண்பன் ஆக்குவதற்து நாம் இறங்கிப்போனாலும் எதரியும் இசைவாக்கம் காட்டவேண்டும் இல்லாவிட்டால் பணிந்துபோவதாக அமைந்துவிடும்.

    பதிலளிநீக்கு
  35. நீங்கள் எழுதியது போல நடந்து கொள்ள ஆசைதான் ...ஆனால் , மற்றவர்கள் நமது விட்டு கொடுக்கும் போக்கை ....அவர்கள் ஆதயத்துக்கு பயன்படுத்தும்போது நமக்கும் ஒரு உள் குரல் கேட்கிறதே ...நீ எவ்ளோ நாளைக்கு நல்லவனாகவே இருப்பை என்று ...அதுக்கு என்ன பதில் ...தெரியவில்லை நண்பரே !

    பதிலளிநீக்கு
  36. அருமை நண்பரே வாழ்வியல் உண்மையை அழகாக சொன்னீர்கள்.
    காந்தியைப்பற்றிய அரியாத விடயம் தந்தமைக்கு நன்றி ஆனால் அவரைப்போல மனம் இன்றைய வாழ்க்கைச் சூழலுக்கு சரியாக வருமா 80தான் ஐயம்.

    அன்று உணர்ந்து கொள்ளும் எதிரிகளும் வாழ்ந்தார்கள்.
    இன்று புரிந்து கொள்ளும் நண்பர்களும் இல்லையே....
    தாமதமான வருகைக்கு வருந்துகிறேன் காரணம் தங்களுக்குத் தெரியும்.

    பதிலளிநீக்கு
  37. ”நட்பு செய்வது கொள்வது நண்பரோடு சிரித்து மகிழ்வதற்க்காக மட்டும் மல்ல... மிகுதியாகத் தவறு செய்யும்போது...அவரை கடிந்து திருத்துவதற்கே ஆகும்...“ நண்பரின் இலக்கணத்துக்கு வேறு சான்று தேவையில்லை...

    பதிலளிநீக்கு
  38. வணக்கம் சகோதரரே.

    நட்பு குறித்த நல்ல பதிவு. பகைமையை மறந்து எப்போதும் நட்புடன் இருக்க முதலில் பொறுமையையும், அதனால் நமக்கு என்ன துன்பம் வந்தாலும் பரவாயில்லை என்ற தியாக உள்ளத்தையும், போகும் போது எதைக் கொண்டு போகப் போகிறோம் என்ற சிந்தனையில் நிறைந்த, விட்டுத்தரும் மனப்பான்மையையும், நிறையவே வளர்த்துக்கொள்ள வேண்டும். நாளடைவில் அவை நம்முடன் ஒன்றி விடும். அதேபோல் எதிராளி நண்பனும் அதற்கேற்ற மாதிரி இருந்து விட்டால், பிரிந்த நட்பு கண்டிப்பாக ஓர்நாள் வலுப்படும். தொடரும் நம்முடைய இந்த குணங்களினால் நம் மனமும்,மனம் சார்ந்த உடலின் ஆரோக்கியமும் முழுமையாக காக்கப்படும். உண்மையான தங்கள் கருத்தை நானும் ஆதரிக்கிறேன்.


    பதிவின் கடைசி பத்தியின் ஒவ்வொரு வரியும் உண்மை.! அருமையான சிந்தனையை ரசித்துப் படித்தேன். பகைமையை மறந்து நட்பான சிறந்த கதைக்கும், நட்பைக் குறித்த சிறந்த சிந்தனை பகிர்வுக்கும் நன்றி.

    நன்றியுடன்,
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  39. எதிரிகள் என்பவர்கள் நம்மால் உருவாக்கப்படுகிறார்கள்! பகைவனுக்கும் அருள வேண்டும் என்று சிறப்பான குட்டிக்கதை மூலம் உணர்த்திய பதிவு சிறப்பு! பாடல்களும் அருமை! வாழ்த்துக்கள்! நன்றி!

    பதிலளிநீக்கு
  40. பகைவனை நண்பனாக்குவது கத்தி மீது நடப்பது போலத் தான்
    என்பது என் கருத்து.
    விரும்பியவர் முயலலாம்.
    சிந்தனைப் பதிவு.

    பதிலளிநீக்கு
  41. அன்புள்ள வலைச்சித்தரே!

    ‘மறக்க முடியுமா?’ - மறக்க முடியாத பதிவு இது. அண்ணல் காந்தியடிகள் வெள்ளைக்காரத் தோட்ட முதலாளியிடம் சென்று ”நான்தான் காந்தி... என்னை நீங்கள் தேடிக்கொண்டிருக்கிறீர்களாமே...!” என்று நின்ற பொழுது... பகைவனையும் நண்பனாக மாற்றிய பெருமைக்குச் சொந்தக்காரர்.

    ‘பகைவனையும் நண்பனாக்கு’ என்ற அருமையான கருத்து... நட்பதிகாரத்தையும் அதிகாரமாகக் கூறாமல்... அன்பாலே புத்தி சொன்ன அன்பருக்கு நன்றி.

    த.ம. 24.

    பதிலளிநீக்கு
  42. அன்புள்ள வலைச்சித்தரே!

    ‘மறக்க முடியுமா?’ மறக்க முடியாத பதிவு.

    அண்ணல் காந்தியடிகள் வெளிநாட்டு முதலாளியிடம் நேராக அவரைத் தேடிச் சென்று “நான்தான் காந்தி... என்னை நீங்கள் தேடிக்கொண்டு இருக்கிறீர்களாமே” என்ற பொழுது, அவரைக் கொலை செய்ய வேண்டுமென்று நினைத்த அவரே தன் தவறை உணர்ந்து வருந்தி திருந்தி அவரை நண்பனாக ஏற்றது” -அவர்தான் காந்தி.

    பகைவனை நண்பனாக்கு அருமை...!
    நன்றி.
    த.ம. 25

    பதிலளிநீக்கு
  43. உண்மைதான் சகோ...காந்தி பற்றிய புதிய தகவல் அறிந்து கொண்டேன் நன்றி

    பதிலளிநீக்கு
  44. @Iniyaதங்கள் கருத்துதான் என் கருத்தும். பகைவர்கள் மனிதர்களாக இருந்தால் மன்னித்து மறந்து நண்பராக்க முயற்சிக்கலாம். ஆனால் என்றைக்குமே திருந்தாத மிருகங்களாக இருந்தால் என்ன விலை கொடுத்தாவது அவர்களை விட்டு விலகியிருப்பதே நமக்கு பாதுகாப்பு.

    பதிலளிநீக்கு
  45. சம்சாரம் போனா சகலமும் போச்சு என்பது உண்மைதான்.

    மனசாட்சிதானே நமக்கு அனுகூலச் சத்ரு :)

    காந்திஜியின் செய்கை பகைவனுக்கருள்வாய் நன்னெஞ்சேன்னு பாரதி சொன்னதை ஞாபகப்படுத்துது :)

    பதிலளிநீக்கு
  46. உசிர் உள்ளமட்டும் வாழ்வு
    உறவுக்கில்லை கோடு
    பகமை வென்று பண்பை காண
    குற்றம் அற்ற பிறவி எங்கே கூறு
    வேற்றுமைதானே பகைமை
    தூண்டாமணி விளக்கிலும்
    தீண்டாமை இருள் ஒளிப்போம்
    பகைமை ஏது உலகில் - நற்கருத்துகள் நண்பரே மெச்சுகிறேன் உம்மை..

    பதிலளிநீக்கு
  47. வழக்கம்போல நல்ல கருத்துக்களுடன் பதிவு மிகவும் அருமை.

    அன்பினால் உலகையே வெல்லலாம்தான்.

    ஆனால் அஹிம்சை வழிகளை இப்போது யாரும் விரும்பி ஏற்பது போலத் தெரியவில்லையே. :(

    பதிலளிநீக்கு
  48. பகைவனுக்கு அருள்வாய் நன் நெஞ்சே பகைவனுக்கு அருள்வாய்! பகை நடுவினில் அன்புருவான பரமனும் வாழ்கின்றான் நன்னெஞ்சே...தின்ன வரும் புலி தன்னையும் அன்பொடு சிந்தையில் போற்றிடுவாய் என்ற பாரதியின் வரிகள் தான் நினைவுக்கு வருகின்றது.....டிடி..

    இதற்கு எந்த வித எதிர்பார்ப்பும் இல்லாத அன் கண்டிஷனல் லவ் இதை நாம் பின்பற்றத் தொடங்கினால் பகைவரா? அப்படின்னா? என்று கேட்டுவிடலாம்....இந்த உலகமே நம் கையில் தான் நட்புடன்....ஆனால் இந்த அன் கண்டிஷனல் லவ் ...ஹ்ஹ்ஹ்ஹ் அதுதானே சிரமம்...

    நல்ல பதிவு டிடி!

    பதிலளிநீக்கு
  49. பயங்கரமாக சிந்திக்கிறீங்க, சிந்திக்கவும் வைக்கிறீங்க. இடுகை அருமை. நன்றி தனபாலன்.

    பதிலளிநீக்கு
  50. இதை கண்ட வெள்ளைகார தோட்ட முதலாளிகளுக்கு வெறுப்பு உண்டானது ...அட போங்க சார் ...இங்க பதிவு எழுதுறவங்க எல்லாம் என்னமோ பட்டா போட்டு பரம்பர பரம்பரையா எழுதுற மாதிரி கொடுக்குற பில்ட் அப் என்ன ? அவங்க பதிவுல ஒரு கருத்து அவர்களுக்கு சற்று எதிராக எழுதி விட்டால் அவர்கள் ஆடுகிற ஆட்டமென்ன ..எல்லாம் பார்த்து கொண்டுதானே இருக்கிறோம் .....யார் ஒருவனும் எனது பதிவு பற்றி விமர்சிக்க உரிமை உண்டு என்று நினைக்கிறவர்கள் எத்தனை பேர் உண்டு ? என் தளத்தில் வந்து கருத்து சொல்லாதே ....வாந்தி எடுக்காதே என்று சொல்லியதெல்லாம் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறோம்... வேறு என்னென்ன சொல்ல ...மனிதர்களை பற்றி ......என் தளத்தில் யார் வந்து என்ன வேணாலும் சொல்லட்டும் ....அதற்குதான் நான் எழுதுகிறேன் என்ற நினைவில் முதுமை என்று வரும்.... அப்போதுதான் உண்மையான வளர்ச்சி நம் தமிழ் சமூகம் கண்டுள்ளது ...பதிவர்களுக்கே அந்த முதிர்ச்சி இல்லையென்றால் ...மற்ற சாதாரண மனிதர்களிடம் எப்படி எதிர் பார்ப்பது ....யோசியுங்கள்

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

நகுதற் பொருட்டன்று நட்டல் மிகுதிக்கண்
மேற்சென்று இடித்தற் பொருட்டு. (குறள் 784)

நட்புச் செய்துகொள்வது நண்பரோடு சிரித்து மகிழ்வதற்காக மட்டும் அல்ல. மிகுதியாகத் தவறு செய்யும்போது, அவரைக் கடிந்து திருத்துவதற்கே ஆகும்.