🏠 வணக்கம் காப்பகம் நன்றி

தேடல் 🔎



புதிய பதிவுகளை பெற ✉



நான் யார்...?

உறவார் பகையார்... உண்மையை உணரார்... உனக்கே நீ யாரோ...? வருவார் இருப்பார் போவார் - நிலையாய் வாழ்வார் யார் யாரோ...? நான் யார்...? நான் யார்...? நீ யார்...? நாலும் தெரிந்தவர் யார் யார்...? நான் யார்...? நான் யார்...? நீ யார்...? (படம் : குடியிருந்த கோவில்)

பாட்டிலே கேள்வியை ஆரம்பிச்சுட்டியா மனசாட்சி...?




© குடியிருந்த கோவில் புலமைப்பித்தன் M.S.விஸ்வநாதன் 🎤 T.M.சௌந்தரராஜன் @ 1968 ⟫

சமீபத்தில் ஒரு தத்துவ கட்டுரையும் படித்தேன்... பாடலும் வந்தது... கூடவே கேள்வியும் பிறந்து விட்டது...! ஆமா நான் யார்...? நான் யார்...?

க்கும்... வலையுலகில் "எங்கள் Blog" ஸ்ரீராம் ஐயா வைத்த பெயர் DD... உனது தாய் தந்தை பெயர் தனபாலன்... உங்கள் மனைவி மக்கள் பெயர்கள் இவை... நீ பிறந்த ஊர் இது... நீ படித்த படிப்பு இது... நீ பார்க்கும் வேலை இது... மகிழ்ச்சி தரும் உறவுகள்... கணக்கிலடங்கா அன்பான நட்புகள்... உன்னைப் பற்றி... உன்னைச் சுற்றி... இவ்வளவு இருக்க, இதென்ன புதுக் கேள்வி...?

நீ சொன்ன இவையெல்லாமா நான்...? இல்லை இவையெல்லாம் தவிர்த்த "நான்" தனியாக இருக்கிறதா...? எதுவும் புரியலையே சாமீ...!

அடேய்... கேள்விக்குப் பதில் சொல்லலாம்... கேள்விகளையே பதில்களாகக் கேட்டால் என்ன செய்வது...?

உன்னால் முடியும் தம்பி தம்பி... உனக்குள் இருக்கும் உன்னை நம்பி...2 தோளை உயர்த்து... தூங்கி விழும் நாட்டை எழுப்பு2 எதையும் முடிக்கும் இதயம் உன்னில் கண்டேன்... உன்னால் முடியும் தம்பி தம்பி...

சரி மனசாட்சி தம்பி... என்னுள் இருக்கும் உன்னை நம்பி ஆரம்பிக்கிறேன்... வானம் உங்கள் கைகளில் உண்டு... ஞானம் உங்கள் நெஞ்சினில் உண்டு... நான் என்று எண்ணாமல் நாம் என்று உறவு கொள்ளணும்... பாட்டின் முக்கிய வரி இது தான் தம்பி... "நான் யார்...?" என்கிற இந்தக் கேள்வி நீ மட்டும் புதிதாகக் கேட்ட கேள்வியில்லை... "நான் யார்?" என்னும் தேடலில் விளைந்த "அகந்தையாகிற நான்" என்கிற மூலம் ஏது...? என்பதை அறிவதற்கான முயற்சியை மதுரை திருச்சுழியில் வாழ்ந்த ரமணர், பல கேள்விகளைத் தனக்குள் கேட்டுக் கொண்டு தான் திருவண்ணாமலைக்கு ரயிலேறினார்... திருவண்ணாமலையில் வாழ்நாள் முழுவதும் தவமிருந்து, "நான் யார்..?" என்ற கேள்விக்கு விடை காண முயன்றார்... "நான் யார்..?" சொல்வதற்கும் கேட்பதற்கும் எளிய பதம் தான்... ஆனால் அதன் பொருள் ஆழம் அறிந்து தெரிந்து புரிவதற்கு அருந்தவம் செய்ய வேண்டும்...

இதோ பார்... இந்த விளையாட்டிற்கெல்லாம் நான் வரலே... ஒவ்வொரு மனிதனும் ஒவ்வொரு செயலின் போதும் "நான் யார்..?" எனக் கேட்டுக் கொண்டே முன்னேற வேண்டும் என்று சொல்கிறார்கள்... அதாவது தன்னை உணர்ந்தவனால் மட்டுமே தரணியை ஆள முடியும் என்று சொல்கிறார்கள்... தவம் அப்புறம்... புரிகிற மாதிரி "நச்"ன்னு ஒரு கதை சொல்லு...

ஒரு விவசாயி காட்டு வழியே போய்க் கொண்டிருந்த போது, ஒரு மரக்கிளையில் கழுகுக்கூடு ஒன்றைப் பார்த்தான்... அதற்குள் கழுகு முட்டை ஒன்று இருந்தது... தொட்டுப் பார்த்தான்... அப்போது தான் அதில் இடப்பட்டிருப்பதற்கான அடையாளமாக முட்டை கதகதப்பாக இருந்தது... கையோடு கழுகு முட்டையை வீட்டுக்கு எடுத்து வந்தான் விவசாயி... வீட்டில் கோழி முட்டைகளோடு அதையும் சேர்த்து வைத்து அடை காக்க விட்டான்... கோழி அடை காத்தது... கோழிக் குஞ்சுகளோடு கழுகுக் குஞ்சும் வெளியே வந்தது... கோழிக் குஞ்சுகளோடு குஞ்சுகளாய் அதுவும் இரை தேடிச் சென்றது... தானியங்கள், புழு பூச்சிகள் எனத் தின்று, கோழிகளோடு கோழியாய் கழுகும் வளர்ந்து வந்தது... அதற்குப் பறக்கத் தெரியவில்லை... கழுகுக்கான குணங்கள் ஒன்று கூட அதனிடம் இல்லை... இப்படியே வளர்ந்து முதுமைப் பருவத்தையும் அடைந்தது கழுகு... ஒரு வைக்கோல் போரின் ஓரத்தில் படுத்து ஒரு நாள் தலையை மட்டும் தூக்கி வானத்தைப் பார்த்தது... அங்கே வானத்தில் மிக உயரத்தில் மிக லாவகமாக ஒரு கழுகு வட்டமிட்டுப் பறந்து கொண்டிருந்தது... கீழே படுத்திருந்த கோழிக் கழுகு மனதிற்குள் பெருமூச்சு விட்டுக் கொண்டு சொன்னது : "ம்... நானும் கழுகாகப் பிறந்திருந்தால் இந்நேரம் அதைப் போல வானத்தில் உன்னத உயரத்தில் சுழன்று சுழன்று பறந்து கொண்டிருப்பேன்...! இப்படி அப்பாவி கோழியாகப் பிறந்து விட்டேனே...! எல்லாம் என் தலையெழுத்து...!"

பார்த்தாயா மனசாட்சி... கழுகாகப் பிறந்திருந்தும், தான் கழுகு என்பதை உணராத கழுகு, வானத்தில் பறக்கும் கழுகைப் பார்த்து ஏக்கப் பெருமூச்சு விடுகிறது... இது தான் தன்னை உணராத தன்மை... கழுகாகப் பிறந்திருந்தும், கழுகின் வலிமை தன்னிடம் இல்லை என்று உணராத நிலை...

ஒன்று மட்டும் நன்றாகப் புரிகிறது... வளரும் விதமும், வளர்த்த விதமும் தான் ஒருவரின் குணங்களையும் பண்புகளையும் தீர்மானிக்கிறது என்று...! ஒரு பரிசோதனைக்குக் கழுகு குஞ்சைப் போல, ஒரு குழந்தையையும் மாற்றி வளர்த்தால்... இந்தப் பாழாப் போன சாதியும் மதமும் மாற வழி பிறக்குமோ...?

ஏண்டா... பதிவு நல்லாத்தானே போயிட்டுயிருக்கு...? "நான்" என்பதை "நாம்" என்றாலே எல்லா வழியும் திறக்கும்...! பதிவின் விசயத்திற்கு வருவோமா...? வாழ்க்கையில் நம்மிலும் பலர் இப்படித்தான் தன் பலம் தெரியாமல் தடுமாறிக் கொண்டிருக்கிறோம்... ஒவ்வொரு வினாடியும் தன்னை உணர்ந்து கொண்டே இருப்பவன் மட்டுமே, செயல்களைச் செம்மையாகவும் வெற்றிகரமாகவும் செய்ய முடியும்... நம்மில் பலர் பலமிருந்தும், வளமிருந்தும் தோற்றுப் போவதற்கு முக்கியமான காரணம் என்ன தெரியுமா...? தன்னை உணராமையே ஆகும்... என்ன சொல்றே நீ...?



© உள்ளம் கேட்குமே வைரமுத்து ஹாரிஸ் ஜெயராஜ் 🎤 ஹரிஹரன் @ 2005 ⟫

இன்பத்தில் பிறந்து இன்பத்தில் வளர்ந்து... இன்பத்தில் மடிந்தவன் யாருமில்லை... துன்பத்தில் பிறந்து துன்பத்தில் வளர்ந்து... துன்பத்தில் முடிந்தவன் யாரும் இல்லை... இன்பம் பாதி துன்பம் பாதி... இரண்டும் வாழ்வின் அங்கம்... நெருப்பில் வெந்து நீரினில் குளித்தால் - நகையாய் மாறும் தங்கம்...! தோல்வியும் கொஞ்சம் வேண்டுமடி... வெற்றிக்கு அதுவே ஏணியடி...! ஒ மனமே... ஒ மனமே... (படம்: உள்ளம் கேட்குமே)

கேட்கிறேன் : தன்னை உணர்ந்தால்... தன்னை உணர்ந்து கொண்டே இருந்தால்... வாழ்வில் எல்லாச் செயல்களிலும் வெற்றியைத் தவிர வேறு என்ன வாய்க்கப் போகிறது...? ஆமா, ஏதோ ஒரு சின்ன செயலில் நம் பலத்தை உணர்கிற அந்த நேரம், கூடவே அகந்தை உட்படப் பல பலவீனங்கள் உடனே நமக்குத் தெரியாமல்-கவனி-நமக்குத் தெரியாமல் ஒட்டிக் கொள்கிறதே ஏன்...? பலவீனத்தையும் அறிய வேண்டாமா...? தன் பலவீனங்களையும் பலமாக்குவதே தான் வெற்றியின் ரகசியம்...?

எவ்வித துன்பங்கள் வந்தாலும், கடமை கண்ணியம் கட்டுப்பாட்டோடு தன்னிலை மாறாதவர்கள் சான்றாண்மை எனப்படும் கடலைப் போன்றவர்கள்... இது நம்ம ஐயனின் ரகசியம் :-
ஊழி பெயரினும் தாம்பெயரார் சான்றாண்மைக்கு
ஆழி யெனப்படு வார். (989)

உன்னை அறிந்தால்... நீ உன்னை அறிந்தால்... உலகத்தில் போராடலாம்... உயர்ந்தாலும் தாழ்ந்தாலும் தலை வணங்காமல் நீ வாழலாம்...

நண்பர்களே... நமக்குள் சொல்லவே கூடாத ரகசியம் இருக்கிறது... அது என்ன...? அறிய இங்கே சொடுக்கி வாசிப்பதற்கு முன் இப்பதிவைப் பற்றி தங்களின் கருத்து என்ன...?

புதிய பதிவுகளை பெறுதல் :


தொடர்புடைய எண்ணங்களின் வண்ணங்கள் சில :


முகநூல் மூலம் கருத்துக்களை பகிர :

கருத்துகள்

  1. வணக்கம்
    அண்ணா

    உண்மையான விடயங்கள் தான் தங்களுக்கு DDஎன்ற பெயர் யார்வைத்தது யார் என்ன காரணத்துக்காக என்பதைபுரிந்து கொண்டேன்.. நல்ல குறள்கள் கதைகள் எல்லாம் சொல்லி அசத்தி விட்டீர்கள் பகிர்வுக்கு நன்றி த.ம 2
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
  2. ரமணரே சொல்லிட்டார் ,நான் யார் என்பதை உணர்வது அவ்வளவு எளிதில்லை என்று ...எதுக்கு நாம ரிஸ்க் எடுக்கணும் :)

    பதிலளிநீக்கு
  3. அருமையான பதிவு DD . அந்த "கோழி கழுகு கதை" மிகவும் அழகு ....ரசிக்க வைத்தது. அதே நேரத்தில்.. எத்தனை நாட்கள் நானும் அந்த கழுகை போல் அலுத்து இருப்பேன் என்பதையும் நினைவூட்டியது.

    பதிலளிநீக்கு
  4. //வளரும் விதமும் வளர்த்த விதமும் தான் ஒருவரின் குணங்களையும் பண்புகளையும் தீர்மானிக்கிறது.//
    உண்மை. உண்மை.

    பதிலளிநீக்கு
  5. சொல்ல வந்த கருத்துச் சரிதான். பெரியவாள் படம்தான் இன்றைய சுப்பிரமணியை நினைவு படுத்துகிறது... ஏன் இப்படி அய்யா?

    பதிலளிநீக்கு
  6. எனக்கு தனிப்பட்ட முறையில் சரியான நேரத்தில் அற்புதமான பதிவு.

    பதிலளிநீக்கு
  7. அய்யா வலைச்சித்தரே நீவீர் உள்ளதைச் சொல்லும் நிலை சித்தர்

    பதிலளிநீக்கு
  8. கொஞ்சம் காலமாக என்னுள்ளும் சுழன்று கொண்டிருக்கும் கேள்வி 'நான் யார்?' ஒவ்வொரு கணமும் ஒவ்வொரு விதமாக உணர்கிறேன். அழித்தழித்து எழுதுகிற மனசுடன்.

    உங்கள் பதிவு சில திறப்புகளைத் தருகிறது.

    பதிலளிநீக்கு
  9. ரொம்பச் சிந்திக்கிறீங்க, DD, ஒடம்பு தாங்காது, சொல்லிப்புட்டேன், அப்புறமா சொல்லலையேன்னு வருத்தப் படக்கூடாது.

    பதிலளிநீக்கு
  10. பாழாய்ப் போன சாதியையும் மதமும் மாற நீங்க யோசித்தது அருமை.

    பதிலளிநீக்கு
  11. கோழிக் கூட்டத்தில் வாழ நேர்ந்தது - கழுகின் பிழை அல்லவே..
    ஆனாலும் - காலம் போன பிறகு ஆகப்போவது ஒன்றுமில்லை!..

    தங்களுடைய பதிவுக்குப் பின் - நிறைய சிந்தனைகள் தோன்றுகின்றன..

    வாழ்க நலம்!..

    பதிலளிநீக்கு
  12. பதிவு அருமை, கழுகு கதையும் சுவாரசியமாக இருந்தது.

    பதிலளிநீக்கு
  13. குட்டிக் கதையில் உள்ள கழுகைப் போலவே பலரும் தலை எழுத்தின்மீது பழியைப் போடுகிறோம்

    பதிலளிநீக்கு
  14. நான் யார் நான் யார் நீ யார்? என்று புலமைப்பித்தனின் கேள்வியில் தொடங்கி சிந்தனையை வெகு ஆழத்திற்குக் கொண்டு சென்றிருக்கிறீர்கள். கழுகுக்கோழி கதையும் அழகு. இதனையே வேறு வடிவங்களில் வேறு சான்றுகளுடன் சொல்வோரும் உண்டு. புலமைப்பித்தன் ஒரு நாத்திகவாதி. ஆனாலும் நான் யார் என்ற அகத்தேடல் அவருக்கு இருந்திருப்பதும் திரைப்படத்திற்குத்தான் என்றாலும் கொஞ்சம் சமரசங்களோடு அவர் தனக்குள் புகுந்து தன்னையே தேடியிருப்பதையும் இந்தப் பாடல் உணர்த்துகிறது. உங்களின் மற்ற பாடல்கள் உதாரணங்களும் நன்று.

    பதிலளிநீக்கு
  15. நல்ல கருத்தை சொன்ன பதிவும் பாடல்களும் வழக்கம்போலவே அருமை

    பதிலளிநீக்கு
  16. மனசாட்சிக்கும் தங்களுக்குமான போராட்டத்தில் எங்களுக்குத்தான் நிறைய நன்மை. பல நேரங்களில் அது ஒரு தெளிவை ஏற்படுத்துகிறது. கழுகு கதை அருமை.

    இந்த கருத்தோடு தொடர்புடைய அறிவியல் பதிவு ஒன்றை தன்னுடன் இணைத்துள்ளேன். நேரம் இருந்தால் படித்துப் பாருங்கள்.

    http://mdumsp.blogspot.com/2015/01/blog-post_22.html

    பதிலளிநீக்கு
  17. ஆம் டிடி உண்மைதான் நம்மை அறிந்தால் நலமாக வளமாக வாழலாம். :)

    கழுகு கதை அருமை. ஆனா நாம்தான் கோழின்னு நினைச்சுட்டமே அதை எப்பிடி மாத்துறது :)

    பதிலளிநீக்கு
  18. உன்னை அறிந்தால்... பாடலோடு முடித்த விதம் அருமை. கழுகு கதை சிந்திக்க வைத்தது.

    பதிலளிநீக்கு
  19. அன்பின் டிடி, கோழிகழுகு கதைக் கேட்பதற்கு சுவையாக இருந்தாலும் கோழியிடம் வளரும் கழுகு தன் இயற்கைக் குணங்களை இழக்குமா... எனக்கு சந்தேகமே. என்னில் இருக்கும் நானை அறிந்தால் உலகத்தில் போராடலாம்.. ஆனால் இல்லாமலேயே வாழ்க்கைப் போராட்டம்தானே. எதையொ புரிந்து கொண்டு எழுதுகிறமாதிரி இருந்தாலும் புரியாத ஒன்றை தேடுவதே தெரிகிறது. வெற்றி பெறவாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  20. இன்பத்தில் பிறந்து இன்பத்தில் மடிந்தவன் யாருமில்லை, துன்பத்தில் பிறந்து துன்பத்தில் மடிந்தவன் யாருமில்லை.
    உண்மை, அதனை உணர்ந்தால் போதும்,
    அருமையான பதிவு. நன்றி.

    பதிலளிநீக்கு
  21. கழுகு/கோழிக்கதை அருமை. ஆங்காங்கே சினிமா பாடல்கள் பொருத்தம். நல்ல பகிர்வு.

    ‘நான்’ யார் என பலரும் சிந்திக்க ஆரம்பித்து விட்டால், பிறகு நம் பதிவுகளுக்கு யாரும் பின்னூட்டம் அளிக்காமல் போகும் பேராபத்தும் இதில் உள்ளது. :)

    அதனால் யாரும் எதுவும் சிந்திக்காமல், அவரவர் போக்கினில் எப்போதும்போல இருக்கக்கடவது !

    ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹாபெரியவர் அவர்களின் படம் இந்தப்பதிவுக்கு வந்து எட்டிப்பார்க்க என்னைத் தூண்டியது.

    பகிர்வுக்கு நன்றிகள் DD Sir.

    பதிலளிநீக்கு
  22. இந்த குறள் உங்கள் கருத்துக்கும் 989ஆம் குறளுக்கும் ஒத்து வருகிறதா என்று பாருங்கள்.
    கேடும் பெருக்கமும் இல்லல்ல நெஞ்சத்துக்
    கோடாமை சான்றோர்க் கணி.
    ஒருவர்க்கு வாழ்வும், தாழ்வும் உலக இயற்கை; அந்த இரு நிலைமையிலும் நடுவுநிலையாக இருந்து உறுதி காட்டுவதே பெரியோர்க்கு அழகாகும்.

    பதிலளிநீக்கு
  23. kகோழிகழுகு கதை மிகவும் நேர்த்தி. அந்தக் கழுகு கொஞ்சமாகிலும் தன்னுடைய புத்தியைக் காட்டி இருக்கலாம்.. கோழி ஸஹவாஸத்தில் அது பெரியதாக மதிக்கப்படாமற் போயிருக்கும்.. ஓஹோ கோழியாக இருப்பதுதான் நல்லது என்று அதன் குணத்தை மேலும் அது கடை பிடித்திருக்கும். ஆனாலும் கடைசியில் கழுகாகப் பிறக்கவில்லையே என்ற எண்ணம் ஏன் தோன்றியது. உடம்பில் கழுகின் குணம் இருப்பதால்தான். என் எண்ணம் எப்படி?
    அழகானகதை. அருமையாக எழுதியுள்ளீர்கள். நான் வேறுவிதமாக சிந்தித்துப் பார்த்தேன். அவ்வளவாக ப்பொருத்தமில்லை.. நன்றி. அன்புடன்

    பதிலளிநீக்கு
  24. அருமையான பதிவு டிடி! நீ உன்னை அறிந்தால் உன்னை அறிந்தல் இந்த உலகத்தில் போராடலாம்.....நாம் யார் என்பதை அறிந்து கொண்டால் நமது பாதை எளிதாகப் புரிந்து விடும்.

    ராமாயணத்தில் கூட அனுமாருக்குத் தன் பலம் தெரியாமல் இருக்க, ஜாம்பவான் அதை எடுத்துக் கூறி அவரை இலங்கைக்குத் தூது அனுப்ப உற்சாகமளிப்பார். உன்னால் முடியும் தம்பி என்று சொல்லி...

    ரமண மகரிஷி கூட நான் யார் என்ற தேடலில் தான்....

    கழுகு கதை மிக மிக அருமை! டிடி....அருமையான பதிவு...

    பதிலளிநீக்கு
  25. பாட்டும் குறளும்,, நம்மை உணர வைப்பவை..
    அர்த்தமுள்ள பதிவு...

    பதிலளிநீக்கு
  26. அருமையான சிந்தனை நண்பரே கோழிக்கழுகு கதை அற்புதம் ஒரு மதத்து குழந்தையை வேற்று மதத்து குழந்தையோடு குழந்தையாக வளர்த்தால் வளரும் சிந்தையே மனதில் படியும் 80தை அழகாக கொண்டு சென்ற விதம் ஸூப்பர் அதே குழந்தையை காட்டில் கொண்டுபோய் வளர்த்தாலும் இந்த சமூக சிந்தனை வராத நல்ல மனிதனாக வளர்க்கவும் முடியும் 80ம் புரிகிறது
    மனிதன் தன்னை அறிந்தால் யாவும் நலமே...
    நல்ல பாடல்களோடு முடிவில் குறளும் அருமை

    உயர்ந்த சிந்தனைக்கு எமது வாழ்த்துகள் தொடரட்டும் இவ்வகைகள்.

    பதிலளிநீக்கு
  27. நீங்கள் கூறியதற்கு மாற்றான கதை ஒன்று ஒன்பதாம் வகுப்பு ஆங்கிலப்பாடத்தில் இருக்கிறது.

    சிங்கம் துரத்திய பட்டாம் பூச்சியின் கதை.

    பட்டாம்பூச்சியைத் துரத்திய சிங்கக் குட்டி ஒன்று ஆட்டு மந்தையில் வளரும்.

    ஆடுகளைப் போல பயந்து சாகும்.

    தான் யார் என்று அறியும் தருணத்தில் அதன் கர்ஜனையில் காடதிரும்.

    நினைவிற்கு வந்தன.

    அருமையாகக் கொண்டு போகிறீர்கள் டி.டி சார்.

    நன்றி

    பதிலளிநீக்கு
  28. D என்ற பெயர் வைத்தது நான்தானோ?அருமையான பதிவுகள்.நல்ல நடை.உயர்ந்த கருத்துகள்.குட்டி கதைகள். நிறைய எழுதுங்கள்.
    அன்புடன் கார்த்திக் அம்மா

    பதிலளிநீக்கு
  29. வணக்கம் சகோதரரே.

    நான் யார் என்ற கேள்வியோடு ஆரம்பித்து,அதற்கு விளக்கமளித்து அருமையான திரைப்பட பாடல்கள், கதையுடன் பதிவு பிரமாதமாக ஒவ்வொரு வரியையும் ரசிக்கும்படியாக இருந்தது.

    தன் வலிமையை உணராத கோழி கழுகு கதையின் மூலம் தன்னை, தன் பலத்தை எப்படி உணர்ந்து நடந்து கொள்ள வேண்டுமென சுட்டிக் காண்பித்தது, வளரும் ,வளர்த்த விதங்களில் மனிதரின் குணாதிசயங்கள் மாறி விடும் உண்மைகள், ஒவ்வொருவரும் தன்னை உணர்ந்தால், வெற்றி அடையலாம் அதிலும் இடையில் ஏற்படும் பலஹீனங்களை பலமாக்கி கொண்டால் முழு வெற்றியென்ற வெற்றியின் ரகசியங்கள், என பதிவு முழுவதும் பல நல்ல விசயங்களை பகிர்ந்தது பாராட்டப்படவேண்டிய ஒன்று.
    சிறப்பான பதிவு. அதை எங்களுடன் பகிர்ந்து கொண்டமைக்கும் நன்றி.

    நன்றியுடன்,
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  30. அன்புள்ள வலைச்சித்தரே!

    புலவர் படிப்பு படித்துவிட்டு புலமைப்பித்தன் கோவையில் தமிழாசிரியராக வேலை பார்த்துக் கொண்டிருந்தவரை 1966-ம் வருடம் இயக்குநர் கே. சங்கர் சென்னைக்கு அழைத்து யார் யாரோ எழுதி சரி வராமல் போக, கடைசியில் புலவரை எழுதச் சொல்ல, மாம்பலம் பவர்ஹவுஸ் அருகில் ஒரு பெட்டிக்கடை வாசலில் நின்றுகொண்டே 'குடியிருந்த கோயில்' படத்துக்காக அவர் எழுதிய பாடல்தான் -

    நான் யார்? நான் யார்? நீ யார்?
    நாலும் தெரிந்தவர் யார்- யார்?
    தாய் யார்? மகன் யார்? தெரியார்;
    தந்தை என்பார் அவர் யார்- யார்?
    உறவார்? பகை யார்?
    உண்மையை உணரார்;
    உனக்கே நீ யாரோ?
    வருவார்; இருப்பார்;
    போவார்; நிலையாய்
    வாழ்வார் யார் யாரோ?
    'ஒரு பைத்தியக்காரன் பாடுவது போல அமைந்த ஓர் அருமையான பாடலில் தாங்கள் ஆரம்பித்து... ‘நான் யார்...?’ என்பதை நன்றாக உணரவைத்தீர்கள்!

    ‘உன்னால் முடியும் தம்பி’ - பாடல் மிகமிக அருமையான கருத்துகளைச் சொல்லும் பாடல் என்றால் அது மிகையில்லை.

    கதை சொல்லும் கருத்து மிக அருமை.... கோழிமுட்டைக்குள் கழுகு முட்டையைவைத்து....... கழுகாய் இருந்தும் தன் நிலை உணராமல் வாழ்ந்து வரும் அந்தக் கழுகு போல எத்தனை எத்தனை பேர் ... ?!

    தன்னை அறியாமலே வாழ்ந்து போகின்றனர்...!

    நமது + எது?, நமது -- எது?, -- யையும் சேர்த்து + ஆக்க வேண்டும் என்ற ஆக்கப்பூர்வமான கருத்துகளுக்கு மிக்க நன்றி.

    த.ம. 13.

    பதிலளிநீக்கு
  31. பாடலில் தொடங்கும் பதிவு
    பயணித்த தூரம் அதிகம் ஐயா
    நன்றி
    தம +1

    பதிலளிநீக்கு
  32. நான் யார் என்னும் கேள்வி மிகவும் சிக்கலானதுதான். எல்லோரும் ரமணர் ஆகி விட முடியுமா/

    ஐ! பதிவில் என் பெயர்! நன்றி!

    பதிலளிநீக்கு
  33. கழுகுக் கதை நல்லபாடம். நான் யார் என்ற கேள்விக்கு பதில் தெரிந்தால் வாழ்க்கை எனும்வரம்பு அகன்று விடும்

    பதிலளிநீக்கு
  34. நான் யார்? உணர்வது கஷ்டம் தான், உணர்ந்துவிட்டால் ..
    அருமையான பதிவு அண்ணா..
    இன்பம் பாதி, துன்பம் பாதி..உண்மைதான்.

    பதிலளிநீக்கு
  35. தன்னை அறிந்தால் யாவும் நலம்.
    நல்ல பதிவு..

    பதிலளிநீக்கு
  36. கோழி கழுகு கதை அருமை. இனிய பாடல்களிண் மூலம் சிந்திக்க வைக்கும் பதிவு.

    பதிலளிநீக்கு
  37. உயர்ந்த எண்ணங்களை
    எளிமையாகச் சொல்லி உள்ளீர்கள்
    சிறந்த வழிகாட்டல்
    தொடருங்கள்

    பதிலளிநீக்கு
  38. மனதில் பதியும்படியாக நல்ல சிந்தனைகளை எங்களுடன் பகிர்ந்தமைக்கு நன்றி. கழுகுக் கதை மனதைக் கொத்திவிட்டது.

    பதிலளிநீக்கு
  39. கழுகுக் கதை ஏற்கனவே கேள்விப்பட்டு இருக்கேன்! சிறப்பான கருத்தை அருமையாக எளிமையாக புரிய வைத்தீர்கள்! சிறப்பான பதிவு! நன்றி!

    பதிலளிநீக்கு
  40. கோழிக் கழுகின் கதை சிந்தைக்கு விருந்து...அருமை !

    பதிலளிநீக்கு
  41. நெருப்பில் வெந்து நீரில் குளித்தால்
    நகையாய் மாறும் தங்கம் ம்..ம்.. அருமையான பாடல்கள் கதையும் தான் தங்கள் நல்ல சிந்தனைகள் எமக்கு வழிகாட்டியே. நன்றி !பதிவுக்கு. நான் யார் என்று தேடி தேடி பார்க்கிறேன் இன்று வரை தெரியலையே. தொடர வாழ்த்துக்கள் சகோ !

    பதிலளிநீக்கு

  42. தன்னை அறிந்தால் தரணியை ஆளலாம்
    துன்பத் தடையைத் தகர்த்து !

    என்னவொரு அருமையான விளக்கம் கழுகுக் கதைபோல்தான் பலர் இங்கே தன்னை அறியாமல்..!

    வாழ்த்துக்கள் வாழ்கவளமுடன்

    பதிலளிநீக்கு
  43. நான் யார் என்பதை அறியாவிட்டால் என்ன ஆகும்? என்ன குறைந்து விடும்? நான் யார் என்ற தேடலினால் கிடைப்பது என்ன?.. என்பதைப் பற்றியும் சொல்லியிருக்கலாமே?

    நீங்கள் குறிப்பிட்டிருக்கும் குணங்கள் அத்தனைக்கும் நான் யார் என்ற தேடலின் விளைவா பொறுப்பு? ஒன்றுக்கும் உதவாத வெட்டிகள் ஞானிகள் என்ற பெயரில் 'நான் யார்' போன்ற தேடல்களில் பொழுதைக் கழித்து பின்னர் அடுத்தவர்களையும் குழப்பியதாகவே தோன்றுகிறது.

    நான் யார் என்ற தேடலின் உட்பொருள் தன் அறிவை, அறிவினால் ஆக்கக்கூடியவற்றை, ஆக்கியவற்றை அனைவருடனும் பகிர்ந்து கொள்வதைக் குறிக்கிறதா? அப்படியானால், இதில் தேடுவதற்கு என்ன இருக்கிறது?

    பதிலளிநீக்கு
  44. நாமும் அந்த கழுகினைப் போலத்தான்... வானை அண்ணாந்து பார்த்து அங்கலாய்த்துக்கொண்டிருக்கின்றோம்.
    நல்ல பதிவு...
    http://niroashg.blogspot.com

    பதிலளிநீக்கு
  45. எல்லாம் தெரிந்தவர் எவருமிலர், எதுவுமே தெரியாதவர் ஒருவருமிலர். நான் யார் ? என்ற பிறகு தெரிந்து கொண்டது.

    பதிலளிநீக்கு
  46. கோழி கூட்டத்தில் வாழும் கழுகின் கதை அருமை...நான்யார் ? ...மனதிற்கு நேருக்கமான பல தகவல்களை சொல்கிறது நன்றி

    பதிலளிநீக்கு
  47. நான் யார் என்று பாட்டில் ஆரம்பித்து அதை மிக அருமையாக விளக்கி, உதாரணத்திற்கு ஒரு குட்டி கதையையும் துணைக்கு கொண்டு வந்து மனிதனாக பிறப்பவன் நல்லது எது கெட்டது என்பதை தரம் பிரித்து பிறருக்கு துன்பம் விளைவிக்க கூடாது என்பதை உணர்ந்து பழி பாவத்துக்கு அஞ்சி நல்லவையை தொடரச்சொல்லி, அல்லாதவையை அறிந்து ஒதுங்கச்சொல்லும் மிக அற்புத பாடமாக இந்த பகிர்வு சொல்லி இருக்கிறதுப்பா... மனம் நிறைந்த அன்பு வாழ்த்துகள்...

    பதிலளிநீக்கு
  48. அன்பின் இனிய வலைப் பூ உறவே!
    அன்பு வணக்கம்
    உழைக்கும் வர்க்கம் யாவருக்கும்
    இனிய "உழைப்பாளர் தினம்" (மே 1)
    நல்வாழ்த்துகள்
    நட்புடன்,
    புதுவை வேலு
    www.kuzhalinnisai.blogspot.com

    பதிலளிநீக்கு
  49. கழுகு கதை சிறப்பு. நான் யார்..? அப்படின்னு நான் தனியா இருக்கும் போது என்னை நோக்கி,நோக்கி இக்கேள்வி வரும். அதை நாம் நன்றாக கிரகிக்க முடியும். நல்ல மனநிலை மாறும். ஆனா கூட்டத்தோடு சேரும் போது அவ்வியல்பு 1 ,2 நாட்களில் மற்றவரின் செயல் பாடுகளால் நம்மையறியாமல் மாறி விடுகிறது.

    நல்ல பதிவு சகோ

    தம +1

    பதிலளிநீக்கு
  50. நம்மை நாம் உணர்தல் என்பது மிகப் பெரிய காரியம்தான்.

    பலரது வாழ்க்கை இப்படி சூழல் தன்னைச் சுட்டும் அடையாளத்தோடே முடிவதும் உண்மைதான்.

    மிக அருமையான பதிவு.

    பதிலளிநீக்கு
  51. அவரவர் இப்படி தன்னை ஆய்வு செய்தால் பல நன்மைகள் ஏற்படும்!

    பதிலளிநீக்கு
  52. திண்டுக்கல் தனபாலன் அவர்களே நீங்கள் எப்பகுதியில் வசிக்கிறீர்கள்...உங்கள் நான் யார்? அறியமுடிநனததா?

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

நகுதற் பொருட்டன்று நட்டல் மிகுதிக்கண்
மேற்சென்று இடித்தற் பொருட்டு. (குறள் 784)

நட்புச் செய்துகொள்வது நண்பரோடு சிரித்து மகிழ்வதற்காக மட்டும் அல்ல. மிகுதியாகத் தவறு செய்யும்போது, அவரைக் கடிந்து திருத்துவதற்கே ஆகும்.