🏠 வணக்கம் காப்பகம் நன்றி

தேடல் 🔎



புதிய பதிவுகளை பெற ✉



தெரியாததை x என்க...!

// தொண்டுக்கென்றே அலைவான் கேலிக்கு ஆளாவான்... கண்டு கொள்வாய் அவனை ஞானத் தங்கமே... அவன் கடவுளின் பாதியடி ஞானத் தங்கமே... ஞானத் தங்கமே... இருக்கும் இடத்தை விட்டு, இல்லாத இடம் தேடி... எங்கெங்கோ அலைகின்றார் ஞானத் தங்கமே...! அவர் ஏதும் அறியாரடி ஞானத் தங்கமே...!


© திருவருட்செல்வர் கண்ணதாசன் K.V.மகாதேவன்🎤 சீர்காழி கோவிந்தராஜன் @ 1967⟫

என்னாச்சி என் இனிய நண்பனே...! என்ன சோகமா இருக்கே...? நீயே கவலைப்பட்டா எப்படி..?

அடப் போப்பா... வாழ்க்கையிலே மகிழ்ச்சியே இல்லாம போச்சி... ம்... இல்லாத ஒன்றில் இருக்கிறதா தேடி என்ன பிரயோசனம்...?

அடேய்... வாழ்க்கையென்னா எல்லோருக்கும் வரைபடம் போல எளிதில் விளங்கி விடுமா என்ன...? வாழ வாழத்தான் வாழ்க்கை என்னான்னு தெரிஞ்சிக்க முடியும்; புரிஞ்சிக்க முடியும்... சரியா...?

அதுசரி...! தினம் தினம் பிரச்சனைகளும் சிக்கல்களும் தான்; விளங்கலே...!

அப்படித்தாண்டா முதல்லே அதெல்லாம் விளங்காதவை போலத் தான் இருக்கும்... கடைசியிலே விளங்காதவற்றை எல்லாம் சிக்கல், பிரச்சனேன்னு உன்னை மாதிரி புலம்ப வேண்டியது தான்... விளங்காதவற்றை விளங்கிக் கொள்ள நீ முயற்சி செய்... வெளிச்சம் கொஞ்சக் கொஞ்சமா தெரிய ஆரம்பிக்கும்... எல்லாத்துக்கும் பொறுமையும், தேடும் ஆர்வமும் அறிவுக் கூர்மையும் இருந்தா, இந்த உலகில் தெரியாதவை, இல்லாதவை அப்படின்னு எதுவுமே கிடையாது...

நல்லாவே பேசுறே... இங்கே குழாயைத் திறந்தால் தண்ணீர் வராத சிக்கல்... மோட்டாரை போடலாம்ன்னு பார்த்தா, சரியா மின்சாரம் போற சிக்கல்... நேரத்திற்குப் பேருந்து வராத சிக்கல்... வந்தாலும் ஏற முடியாத அளவிற்குக் கூட்டம் இருக்கிற சிக்கல்... ஏறிப் போனாலும் வழியில் பிரேக்-டவுன் ஆகிற சிக்கல்... வீட்டிலே-அய்யய்யோ சொல்லவே வேண்டாம்; அவ்வளவு சிக்கலோ சிக்கல்...! ஒன்றா, இரண்டா எடுத்துச் சொல்ல...? இப்படி ஏகப்பட்ட சிக்கல் இருக்கும் போது என்னத்த போய் தேடுவது...?

ம்... ஏதாவது வழி கண்டுபிடிக்கிற எண்ணமே இல்லையா...? இன்னைக்கு நமக்குக் கிடைத்திருக்கிற அறிவுப் புதையல்களும், அறிவியல் வசதிகளும் யாரோ ஒருவர் விளங்காமல் தேடி வெற்றி கண்ட ஆராய்ச்சியின் மூலம் தான் கிடைச்சிருக்கு...! நமது முன்னோர்களின் தேடிய தேடல்களாலும், திக்குமுக்காடிய திசைகளற்ற பயணங்களாலும் தான், இன்னைக்கு நாம வசதியா வாழ்றோம்...!

ஓஹோ...! வருங்கால தலைமுறை பற்றி கொஞ்சம் கூட நினைக்காம ரொம்பத்தான் வசதியா வாழ்றோம்...! கூடவே சோம்பேறித்தனம் நல்லாவே வளர்ந்திருக்கு...!! என்னதாண்டா சொல்ல வர்றே... புரியலே... தெரிந்தவற்றிலிருந்து தெரிந்து கொள்வதும், இருப்பதிலிருந்து இருப்பதை அறிந்து கொள்வதிலும் நீ சொல்லித்தான் எனக்கு தெரியணுமாக்கும்...?

அது எல்லோருக்கும் ரொம்ப எளிது தான்... தெரியாத பலவற்றாலும், இல்லாத பலவற்றாலும் தான் நமக்குத் தினமும் பிரச்சனைகள் வரும்... சாதனையாளர்கள் மட்டுமே தெரியாதவற்றைகளிடமிருந்து தெரிந்து கொள்ளும் தெளிவும், இல்லாத சூனியத்திலிருந்து பல இருப்புகளைக் கண்டு கொள்ளும் ஆற்றல் பெற்றவர்கள்... படிக்கும் போது நம்ம கணக்கு வாத்தியார் என்ன சொல்வார்...? "தெரியாததை x என்க...!" அப்படிச் சொல்லி எப்படியோ முடிவில் விடையைக் கண்டு பிடித்து விடுவார்... வாழ்க்கை கணக்கும் அப்படித்தான்... தெரியாதவை இல்லை...! இல்லாதவை இல்லை...! கற்பிதமாக ஒன்றை உருவாக்கி கணக்குப் போடத் தொடங்கினால், தெரியாதவற்றிலிருந்தும் தெரிந்து கொள்ள முடியும்...! இல்லாதவற்றிலிருந்தும் இருப்பதைக் கண்டு கொள்ள முடியும்...

ஐயா சாமீ...! நான் சாதனையாளர் எல்லாம் கிடையாது சாதாரண ஆள்...! காசு பணம் நிறைய இருந்தா என்ன...? தினம் தினம் அறுசுவை உணவு சாப்பிட்டா என்ன...? வசதிக்குக் குறையே இல்லாமல் இருந்தா என்ன...? ஆனா, மனசிலே தான் மகிழ்ச்சியே இல்லை... நான் மட்டுமில்லே... நாட்டிலே பல பேரும் இப்படித்தான்... ஒரு முடிவுக்கு வந்துட்டேன்... இதைப் பாரு எல்லாப் பணத்தையும் நகைகளையும் மூட்டை கட்டி வைச்சிருக்கிறேன்... எல்லாத்தையும் விட்டுட்டு சாமியாரா போகப் போறேன்...

இந்த திருப்தி திருப்தின்னு ஒன்னு இருக்கே... தெரியுமா...? அந்த மூட்டையைக் கொடு... ஒரு நிமிசம், இதோ வர்றேன்... டுர்.டுர்..டுர்ர்ர்ர்ர்ர்...

ஏய் ஏய்... DD--யை பிடிங்கப்பா... என்ன வேகமா ஓடுறான்... ஐயோ ஐயோ... இவ்வளவு நாள் கஷ்டப்பட்டுச் சேர்த்த சொத்து... முந்தைய அளவோடு அடக்குவதே வெற்றியின் குணம்...! பதிவுலே கடவுள்கிட்டே வலதுகை சுண்டு விரல் வேண்டுமென்னு கேட்க வச்சான்... நில்லு... டேய் நில்லு... அப்பாடா நின்னுட்டான்... யம்மாடி... ம்ம் ஸ்ஸ்ஷு...!

இந்தாப்பா உன் சொத்து... கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி இதே செல்வ மூட்டை உங்கிட்டே இருந்தது... ஆனா மகிழ்ச்சி இல்லை... இப்போது இதே மூட்டையை வாங்கியவுடன் இவ்வளவு முகத்தில் பரவசமும், நிம்மதியும், மகிழ்ச்சியும் வருகிறதே... இந்த மகிழ்ச்சி எங்கிருந்து வந்தது...? மகிழ்ச்சி என்பது வெளியிலிருந்து வருவதில்லை... அது நமக்குள்ளே தான் இருக்கிறது... அதை நாம் தான் வெளிக் கொணர வேண்டும்... இல்லாமல் இருப்பதிலிருந்து இருப்பதைக் கொண்டு வருவதே வாழ்க்கை... மகிழ்ச்சியும் அப்படித்தான்; இன்னும் பலவற்றும் அப்படித்தான்... சரியா மனமே...?!!!
இது தான் சரி :
பற்றுக பற்றற்றான் பற்றினை அப்பற்றைப்
பற்றுக பற்று விடற்கு

© மானமுள்ள மறுதாரம் அ. மருதகாசி K.V.மகாதேவன் 🎤 சீர்காழி கோவிந்தராஜன் @ 1958 ⟫

இன்றிருப்போர் நாளை இங்கே இருப்பதென்ன உண்மை - இதை எண்ணிடாமல் சேர்த்து வைத்துக் காத்து என்ன நன்மை...?2 இருக்கும் வரை இன்பங்களை அனுபவிக்கும் தன்மை - இல்லையென்றால் வாழ்வினிலே உனக்கு ஏது இனிமை...? இன்பம் எங்கே இன்பம் எங்கே என்று தேடு; அது எங்கிருந்த போதும் அதை நாடி ஓடு...! இன்பம் எங்கே இன்பம் எங்கே என்று தேடு...! மது, மாது, மயக்கம் இதுவா இன்பம்...? மாடி மனை கோடி பணம் வாகனம் - இவையா இன்பம்...?

இனி குழப்பமே இல்லை...! அப்படியா... ? அறிய → இங்கே ← சொடுக்கித் தொடரலாம். அதற்கு முன் இந்தப் பதிவைப் பற்றி தங்களின் கருத்து என்ன...?

புதிய பதிவுகளை பெறுதல் :


தொடர்புடைய எண்ணங்களின் வண்ணங்கள் சில :


முகநூல் மூலம் கருத்துக்களை பகிர :

கருத்துகள்

  1. செல்வத்தால் வருவதல்ல மகிழ்ச்சின்னு நிரூபிக்க மூட்டைய பிடிங்கிட்டு ஓடுறதெல்லாம் கொஞ்சம் ஓவர்.. ஹிஹிஹி..

    த.ம.2

    பதிலளிநீக்கு
  2. சாமியாரா போகப் போறேன் என்பதைப் படித்தாலே ,பேராசை பிடித்தவனாய் இருப்பான் போலிருக்கிறதே என்று நினைக்க தோன்றுகிறது ...நம் காலத்து சாமியார்கள் அப்படி !

    பதிலளிநீக்கு
  3. வணக்கம் அய்யா
    வாழ்க்கையின் எதார்த்தத்தை உணர்ந்தவர்கள் நீங்கள். துன்பத்திலும் கற்றுக் கொள்ளும் மனம் தங்களிடமிருந்து நாங்கள் கற்றுக் கொள்ள வேண்டியது. இன்பத்திற்கான தேடல் வேண்டும் என்று சொல்லும் பதிவு உனக்குள்ளேயே இருக்கிறது எனும் விடையையும் தருகிறது. படம் மற்றும் பாடல் தேர்ந்தெடுப்பு அருமை அய்யா. சிந்தனையைத் தூண்டும் பதிவுக்கு நன்றீங்க அய்யா.

    பதிலளிநீக்கு
  4. நிம்மதி... என்பது
    நமக்கான தேடல்களின் முடிவே...
    இவைதான் எமக்கு..
    இவைதான் எனக்கு இயலும்..
    என்ற கொள்கை அவசியமே..
    ஆயினும் திடமும் நம்பிக்கையும் கொண்டு
    போராடவேண்டும்..
    ஆயினும் கிடைக்கவில்லை எனில் சோர்ந்துபோய்
    துவண்டுவிடக்கூடாது
    என உரைக்கும் அழகிய பதிவு நண்பரே...

    பதிலளிநீக்கு
  5. திருப்திகரமான தகவல்களைத் தாங்கி சிக்கலில்லாத அருமையான பகிர்வுகள்..பாராட்டுக்கள்..!

    பதிலளிநீக்கு
  6. வணக்கம் சார் நலமா?
    அருமையான பதிவு. ஆச்சர்யமாக உள்ளது எளிமையாக ,தென்றலாய் ,மனதை வருடுகின்றன.நன்றி.

    பதிலளிநீக்கு
  7. வணக்கம்
    தனபால்(அண்ணா)

    அருமையாக பதிவை எழுதியுள்ளிர்கள் வாழ்த்துக்கள் தொடருகிறேன் பதிவை.

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
  8. வாழ வாழத்தான் தெரியும் வாழக்கை... மிக அருமையான வரிகள்...யோசிக்க வைக்கின்ற சொற்கள்...

    பதிலளிநீக்கு
  9. அளவோடு அடக்குவதே வெற்றியின் ரகசியம்//

    சூப்பருய்யா....!

    பதிலளிநீக்கு
  10. சிந்திக்க வைக்கும் வார்த்தை பிரயோகம் உங்களுக்கே உங்களுக்கு கைவந்த கலைபோல ரசித்தேன்.

    பதிலளிநீக்கு
  11. //இல்லாமல் இருப்பதிலிருந்து இருப்பதை கொண்டுவருவதே வாழ்க்கை.//
    சரியான மதிப்பீடு.
    பதிவை இரசித்தேன். சீர்காழி அவர்களின் பாட்டையும் தான்! வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  12. கணிதத்தில் தெரியாதததை கற்பிதமாக x என்று வைத்து விடை காணுவதைப் போல வாழ்க்கையில் தெரியாத, புரியாத பிரச்னைகளுக்கும் நிச்சயம் தீர்வு உண்டு என்பதை யதார்த்தமான, தங்களுக்கே உரிய நடையில் கொடுத்திருப்பது பாராட்டத்தக்கது. வழக்கப்போல பதிவுடன் இணைந்து வரும் துணைக்கருத்துகளும், அதற்கு மகுடம் வைத்தாற்போன் பாடல் தேர்ந்தெடுப்பும் அருமை.. வாழ்த்துகள் ஐயா.. !

    பகிர்வினிற்கு மிக்க நன்றி. !!1

    பதிலளிநீக்கு
  13. மிகவும் அருமையான பகிர்வு. வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  14. சிக்கலில்லாத வாழ்க்கை எது? வாழ வாழாத்தானே வாழ்க்கை.

    நல்லபதிவு டி.டி.

    பதிலளிநீக்கு
  15. தகவல்களில் சங்கமம், எங்கள மாதிரி கணித ஆசிரியர்கள் தான் தெரியாத மதிப்பை x எங்க என்போம்.

    பதிலளிநீக்கு
  16. ரொம்ப சிக்கலா இருக்கும் போல இருக்கே ...
    அட வாழ்க்கையைச் சொன்னேன்...

    பதிலளிநீக்கு
  17. நமக்குப் புரியாததை, தெரியாததை X என்று வைத்துக் கொள்ளுவதுபோல வாழ்க்கை சிக்கலும் X. மகிழ்ச்சியை நமக்குள்ளே இருந்து தேடி எடுத்தால் வாழ்க்கை சிக்கல் விடுபடும் இல்லையா?

    உங்களயே மையப்படுத்தி எழுதுவது ரசிக்க வைக்கிறது. DD-யின் இடத்தில் எங்களை வைத்துப் பார்ப்பதும் எளிதாகிறது.

    பதிலளிநீக்கு
  18. சாமி யார் என்று தேடித் போகிறவன்
    முடிவில் அவனே சாமியாக மாறி
    சாமிஆட்டம் ஆடுகிறான் குறி சொல்லுகிறான்
    ஏமாறுபவர்களை குறிவைத்து
    சிறிது காலத்திற்கு பிறகு நெறி கெட்டு அலைகிறான்
    அவனிடம் ஏமாந்தவர்கள் நீதிகேட்டு அலைகிறார்கள்
    இன்பம் என்பது அவரவர் மனதில் உள்ளது. பிறரிடம், பிற பொருட்களில் தேடுவது அறியாமை.
    நல்ல பதிவு DD

    பதிலளிநீக்கு
  19. மாடியும், காரும், பணமும் வேணும்.... ஆனால் அளவோடு...

    நல்ல கருத்துக்கள்... ஆனால் இவற்றை கடைபிடிப்பதுதான் சற்று சிரமம்.

    பதிலளிநீக்கு
  20. தினம் தேடலும் பிரச்சனைகளின் தீர்வுமே தானே வாழ்வு.
    சிக்கல் தீர்வு விளக்கங்கள் மிக மிக நன்று.
    சல்ல பதிவு. மிக்க நன்றி.
    வேதா. இலங்காதிலகம்.

    பதிலளிநீக்கு
  21. கருத்தும் சொல்லிச் சென்ற விதமும்
    வழக்கம்போல் அதி அற்புதம்
    பகிர்வுக்கும் தொடரவும்
    மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  22. திருப்தியைப் பற்றிய திருப்தியான பகிர்வு :)

    பதிலளிநீக்கு
  23. கொடுத்துப் பார் பார் பார் உண்மை அன்பை
    நினைத்துப் பார் பார் பார் அதன் தெம்பை...
    என்னும் பாடலில் கூறியதுபோல
    அன்பைக் கொடுத்து அன்பை வாங்கி
    அன்போடு இன்பம் கண்டால் அதைவிட
    வேறு என்ன வேண்டும்...

    எல்லாம் எம்முள்ளேயே இருக்கின்றது..
    கண்டுபிடிக்கும் வழியைக் கண்டுபிடித்திட வைத்த
    அருமையான பதிவு சகோ தனபாலன்!

    மனதில் பதிந்துகொண்டேன் நானும்.. மகிழ்ச்சி!
    மிக்க நன்றியும் வாழ்த்துக்களும்!

    பதிலளிநீக்கு
  24. அருமையான பகிர்வு. திருப்தி அளித்தது. திருப்தி வெளியிலிருந்து வருவது இல்லை. தங்கள் பதிவினைப் படித்ததால் வந்தது. சந்தோஷம். நன்றிகள்.

    பதிலளிநீக்கு
  25. வழக்கம்போல சுவையான பதிவு. DD MIX தான் எனக்கு ஓடவே இல்லை!

    பதிலளிநீக்கு
  26. நல்லதொரு பகிர்வு. வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  27. தெரியாததை தெரிந்துகொள்ளும் ஆர்வமும் முயற்சியும் இருந்தால் நிச்சயம் வாழ்க்கையில் முன்னேற்றம்தான்! அருமையானதொரு பதிவு! நன்றி!

    பதிலளிநீக்கு
  28. நெஞ்சுக்கு நிம்மதி ஆண்டவன் சந்நிதி
    நினைத்தால் எல்லாம் உனக்குள்ளே...
    என்ற கண்ணதாசன் வரிகளே நினைவுக்கு வருகின்றன.. அருமையான ஆக்கம் தங்களுக்கே உரிய பாணியில் சிறப்புங்க சகோ.

    பதிலளிநீக்கு
  29. வழக்கம்போல் புதிய சிந்தனையுடன் கூடிய பதிவு !


    வாழ்த்துக்கள்...

    பதிலளிநீக்கு
  30. ஆழ்ந்த தேடல்கள் ஆனால் பதில்கள் அவரவர் வாழ்க்கையில்.

    பதிலளிநீக்கு
  31. இன்பம் எங்கே என்றுணர்த்தும்
    இனிய பாடல் கொண்டே
    இங்கிதமாய் சொன்ன விதம்
    இறைவாக்கு ஆனது இங்கே..!

    அருமை அருமை வாழ்த்துக்கள்
    பாடலை முழுதாய் கேட்டாலே நல்ல விளக்கம்

    பதிலளிநீக்கு
  32. அதிகம் ஆசை வேண்டாம்.அளவோடு மகிழ்வோடு இரு . அருமையான கருத்து. பிறருக்கு உதவுவதில் அதிக ஆர்வம் காட்டலாம். அதுவே பலவிதங்களில் நன்மை தேடித்தரு,. அந்த விதத்தில் உங்கள் பதிவு மிக முக்கியமானது. நன்றி தனபாலன்.

    பதிலளிநீக்கு
  33. வாழ்க்கை ஒரு மலையேற்றம்போலத்தான் முடிவில் மகிழ்ச்சியே .அருமையான கட்டுரை தனபாலன்சார்!

    பதிலளிநீக்கு
  34. ஐயே... என்ன அண்ணா நீங்கள்?

    அவன் வேண்டாம் என்று சொன்ன பணத்தை நீங்கள் வாங்கிக் கொண்டு நிம்மதியாக வாழாமல்... தத்துவம் எல்லாம் சொல்லிகிட்டு....

    பதிலளிநீக்கு
  35. எதிலும் தேடுவது கிடைத்தால் அதைப் பேணும் தகுதி இருந்தால் மட்டுமே எதையும் தேடுவதும் பெறுவதும் சுகம். வித்தியாசமாகச் சொல்லியிருக்கிறீர்கள்.

    பதிலளிநீக்கு
  36. அன்புள்ள தனபாலன்

    உங்கள் பதிவிற்கு வந்தால் நிச்சயம் கவலைகளை மறந்து நிம்மதியாக இருக்கலாம். வெகு எளிமையாக வாழ்க்கையை அனுபவிக்கக் கற்றுத் தருகிறீர்கள் தனபாலன். உங்களிடத்தில் சொல்லுகிற முறையில் அற்புதம் நிகழ்கிறது. இது எல்லோருக்கும் வாய்க்காததது.

    தொடருங்கள். தொடர்ந்துகொண்டேயிருக்கிறோம்.

    பதிலளிநீக்கு
  37. சூப்பர்ர் பதிவு சகோதரரே!!வாழ்த்துக்கள்...

    பதிலளிநீக்கு
  38. நல்ல அருமையான தகவலுடன் இனிய பதிவு!.. நிறைவாக இருந்தது. மகிழ்ச்சி!..

    பதிலளிநீக்கு


  39. நமது முன்னோர்களின் தேடிய தேடல்களாலும், திக்குமுக்காடிய திசைகளற்ற பயணங்களாலும் தான், இன்னைக்கு நாம வசதியா வாழ்றோம்...!


    மிகவும் தெளிவான உண்மை! பதிவு நன்று!

    பதிலளிநீக்கு
  40. எதையும் யோசித்துச் செய்தால் வாழ்க்கையில் இன்பம்தான்...
    அருமையான பகிர்வு...

    பதிலளிநீக்கு
  41. ஈஈஈன்னு மனம் விட்டு சிரிக்க வைத்தமைக்கு நன்றி தனபாலன் :)

    பதிலளிநீக்கு
  42. உண்மையான இன்பம் எங்கே என்பதை எவ்வளவு அழகாக நாசுக்காகக் காட்டித் தெளிவுபடுத்துகிறீர்கள். மிக ஆழமாய் மனத்தில் பதிந்துவைக்கவேண்டிய பதிவு. நன்றியும் பாராட்டும் தனபாலன்.

    பதிலளிநீக்கு
  43. இப்படி ஆழமானக் கருத்துகளை அழகாக மனதில் பதியுமாறு எழுதுவதில் உங்களுக்கு நிகர் நீங்கள்தான்! அருமையான பதிவு, முதலில் இருந்து முடிவு வரை ஆர்வம் குன்றாமல் படிக்கவைப்பது உங்கள் பதிவுகள்! மிக்க நன்றி! ஆனால் வருத்தப்படும் இந்த நண்பரைப்போல பல சிக்கல்கள் புரட்டுகிறதே...நீங்கள் சொல்வது மாதிரி வாழக் கற்றுக்கொள்ளவேண்டும்.

    பதிலளிநீக்கு
  44. உண்மையான இன்பத்தின் விளக்கம் அருமை

    பதிலளிநீக்கு
  45. தெரியாததை x என்க. வாழ்க்கையோடு இணைத்தது டிபிகல் DD ஸ்டைல்
    ஆசிரியர் ஆகவேண்டியவர் நீங்கள். தொடர்க.

    பதிலளிநீக்கு
  46. உண்மைதான் முயற்சி செய்தால் தெரியாதது எதுவுமே இல்லை... பதிவு அருமை-23

    பதிலளிநீக்கு
  47. தெரியாததை X என்க.. அப்போ தெரிந்தது y தானே? :) எப்பூடி என் கண்டுபிடிப்பு?:).

    அனுபவம்தானாமே வாழ்க்கை... நல்ல பதிவு..

    பதிலளிநீக்கு
  48. அருமையாகவும் சுவையாகவும் சொல்லியிருக்கிறீர்கள்
    உள்ளதில் நிறைவு காண்பதிலேதான் மகிழ்ச்சி கிடைக்கும்.

    பதிலளிநீக்கு
  49. "வாழ வாழத்தான் வாழ்க்கை என்னான்னு தெரிஞ்சிக்க முடியும்; புரிஞ்சிக்க முடியும். சரியா...?" என்று ஒரு கேள்வி கேட்டியள்....
    அதில் உண்மை இருக்குத் தான்...
    பட்டறிவை வெல்ல ஏதுமுண்டோ?

    பதிலளிநீக்கு
  50. மகிழ்ச்சி என்பது வெளியிலிருந்து வருவதில்லை. அருமையான பகிர்வு... வாழ்த்துக்கள். பகிர்வுக்கு மனமார்ந்த நன்றி!!

    பதிலளிநீக்கு
  51. அருமையான கருத்துக்களை எளிமையாகச் சொல்லிப் போவதற்கு மனமுவந்த வாழ்த்துக்ள் பாராட்டுக்கள்.

    பதிலளிநீக்கு
  52. மனம் டூ மகிழ்ச்சி...ம்ம்...அடிச்சி இறக்கி இருக்கீங்க....நல்ல பதிவு...நன்றி

    பதிலளிநீக்கு
  53. சிந்திக்க வைத்த பகிர்வு. பாராட்டுகள்.

    பதிலளிநீக்கு
  54. உண்மையான இன்பம், இன்பங்களை அனுபவிக்கும் தனமை என்று விளக்கிய விதம் அருமை.

    இருப்பதை கொண்டு சிறப்பாய் வாழ அழகிய கருத்துக்கள் பாடல் மூலம் எளிமையாக தொழில் நுட்ப கலையுடன் சொல்லி இருக்கிறீர்கள்.
    வாழ்த்துக்கள்.
    வாழ்க வளமுடன்.

    பதிலளிநீக்கு
  55. வணக்கம்
    வலைச்சர அறிமுகத்திற்கு வாழ்த்துக்கள் சென்று பார்வையிட இதோ
    http://blogintamil.blogspot.com/2013/10/blog-post_26.html?showComment=1382753575979#c6458204213020626390

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
  56. வாழ வாழத்தான் வாழ்க்கையை தெரிஞ்சுக்க முடியும் எவ்வளவு தத்ரூபமான வார்த்தை. எல்லாமே அருமை, ரசிக்கக் கூடியதாக சொல்லும் விதமும் அழகு, சொன்ன விடயமும் அழகு. நன்றாக ரசித்தேன்.

    பகிர்வுக்கு நன்றி...!
    தொடர வாழ்த்துக்கள்....!

    பதிலளிநீக்கு
  57. சகோ.தனபாலன் அவர்கட்கு,

    'இன்பம் எங்கே...இன்பம் எங்கே? எத்தனை முறைகள் கேட்டாலும் அலுக்காத பாடல்.வரிக்கு வரி வாழ்வியலை மனதுக்குள் கொண்டு செல்லும் 'மாயச்சாவி' வைத்திருக்கும் சிறந்த பாடல்களில் இதுவும் ஒன்றாயிற்றே. ஆயிரம் பாடல்கள் வரலாம்...கரையலாம். இந்தப் பாடல் அதற்கென ஒரு சிம்மாசனம் போட்டு வைத்துக் கொண்டு இணையத்திலும் மாளிகை கட்டிக் கொண்டது. கணக்குப் பாடம் சொல்லி பாட்டிலும் பாடம் கற்பிக்கும் வித்தியாசமான ஆசிரியர் நீங்கள். நன்றி.

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

நகுதற் பொருட்டன்று நட்டல் மிகுதிக்கண்
மேற்சென்று இடித்தற் பொருட்டு. (குறள் 784)

நட்புச் செய்துகொள்வது நண்பரோடு சிரித்து மகிழ்வதற்காக மட்டும் அல்ல. மிகுதியாகத் தவறு செய்யும்போது, அவரைக் கடிந்து திருத்துவதற்கே ஆகும்.