🏠 வணக்கம் காப்பகம் நன்றி

தேடல் 🔎



புதிய பதிவுகளை பெற ✉



இதென்ன புதுக் கதையா இருக்கே...! (ஆ கு மா ?)

"அப்பாடா... மழை நின்று விட்டது... சுற்றுலா வீணாகிப் போய் விடுமே என்று நினைத்திருந்தேன்... வா நண்பா அருவியில் குளிக்கப் போகலாம்... "


"ஒத்தையடி பாதை நண்பா... கவனமாக வா... ஆகா என்னவொரு ரம்மியமான இடம்...! மாசில்லா பரவச காற்று...! மலர்கள் எவ்வளவு அழகு...! அதோ மேகம் இதமாக அந்த மலையை முத்தமிட்டுச் செல்கிறது பார்... "

"அருமை நண்பா... வழியிலே பார்... நாம் செல்ல முடியாதபடி கருவேல முட்செடிகள், பலத்த காற்றுடன் பெய்த மழையால் வேரோடு விழுந்து கிடந்து பாதையையே மறைக்கின்றன... இப்போது பார் என் திறமையை...!"

சிறிது பின்னாடி நடந்து, விறுவிறுவென்று முன்னோக்கி ஓடி, ஒரே தாவாகத் தாவி, முட்செடிக்கு அந்தப்பக்கமாகக் குதித்து விட்டான்.

"திறமைசாலி தான், கொஞ்சம் பொறு; நான் தாவிக்குதிக்க விரும்பவில்லை"

அவன் தன்னுடைய கைகளால் முட்செடிகளை அகற்றத் தொடங்கினான். கைகள் எல்லாம் சிராய்ப்புக்கள். சட்டையில் ஆங்காங்கே கிழிசல்கள். ஆங்காங்கே முட்கள் பட்டு ரத்தக் காயங்கள். முட்செடிகளை முற்றிலுமாக அகற்றி விட்டு, திருப்தியுடன் சந்தோசமாக நடக்கத் தொடங்கினான்.

"தாவிக்குதிக்கப் பயமா...? முதலில் இது உனக்குத் தேவையா...?"

"இந்தக் கேள்வி உனக்குத் தேவையா...?" என்ற வினாவுடன், பின்னால் வந்த ஒரு முதியவர் "உனக்குப் படிப்பு முடிந்து விட்டது; உனது எண்ணம் தொடரட்டும்; அது இந்நாட்டிற்குத் தேவை; பெருமை" என்றார் மகிழ்ச்சியுடன் !

தாவிச் சென்றவனுக்குக் கோபம் பொத்துக் கொண்டு வந்தது... "அது எப்படிங்க முதியவரே, என் சொந்த அறிவைப் பயன்படுத்தி, எத்தனை அடி பின்னே போய், எவ்வளவு வேகமெடுத்து, எவ்வளவு உயரம் தாவினால், முட்காயங்கள் படாமல் தப்பிக்கலாம் என்று யோசித்து, தாவி எக்காயமும் படாமல் இப்பக்கம் வந்த நான் அறிவாளியா...? இல்லை சட்டை கிழிந்து, உடம்பெல்லாம் காயப்பட்டு, முள்ளை அகற்றிக் கடந்து வந்த இவன் அறிவாளியா...?"

"நீ அறிவாளி தான், ஆனால் உன்னுடைய அறிவு உனக்கு மட்டுமே பயன்பட்டிருக்கிறது; நீ தாவினாலும் பாதையில் உள்ள முட்செடிகள் அங்கேயே தான் இருக்கின்றன; ஆனால் இவனோ, தான் காயப்பட்டாலும் பரவாயில்லை, அடுத்து வருகிறவர்கள் இந்தப் பாதையில் துன்பப்படக் கூடாது என்கிற நோக்கத்தோடு செயல்பட்டான்; கல்வியின் நோக்கம், அறிவின் நோக்கம் - தனக்கு மட்டும் பயன்படுவது அல்ல; அடுத்து வரும் தலைமுறைக்கும் பயன்படுமாறு உழைப்பது, செயல் படுவது, தெரிந்து கொள்... வா, என் பின்னே...! இன்னும் பாடம் இருக்கிறது" என்றார்...

"அப்படியானால் பெண்கள் அனைவரையும் கண்டிப்பாக ஆழ்ந்த நல்ல கல்வியைக் கொடுக்க வேண்டும்... அன்னையாக, சகோதரியாக, மகளாக - அவர்கள் தான் கல்வி உட்பட தனக்கு மட்டும் பயன்படும்படி எதுவும் செய்வதில்லை... ஈன்ற பொழுதிற் பெரிதுவக்கும் தன்மகனைச்
சான்றோன் எனக்கேட்ட தாய்
!

"வாப்பா... மனசாட்சி... இப்படிக் குறள் சொன்னால் தான், படிப்பவர்களுக்குத் தெரியும் நண்பனாக வந்தது மனசாட்சி என்று...! "தனபாலன்" எங்கேயோ கேட்ட குறள், இல்லை குரல் !(ஹிஹி) அன்பான, உரிமையான, கண்டிப்பான, சமீபத்தில் சந்தித்த ஆறாம் வகுப்பு தமிழ் & கணித ஆசிரியை... இல்லை குரு... மறுபடியும் அந்தக் காலம்...? ம்... அவர்களுக்கும் இப்பதிவு சமர்ப்பணம்... விசயத்திற்கு வருவோம்... முதியவர்=குரு; காலம்=குருகுலக் கல்விக்காலம்; 5 வருடங்கள் முடியும் தறுவாயில் 'படிப்பு முடிந்ததா, இல்லையா ?' என்று வினவிய மாணவர்களை ஊருக்கு அனுப்பி விட்டு, சோதனை செய்த குரு..."

"அது அந்தக் காலம்...! இன்று கல்வி சிறந்த தொழில் ஆயிற்றே... இதனால் மருத்துவமும் சக்கை போடு போடுகிறது... 'போட்டது எடுக்கணுமில்லே' சேவை என்பது மாறி பல காலங்கள் ஆகி விட்டன... இன்றைக்கு அங்கங்கே தான் சில குருக்களைப் பார்க்க முடியுது...!"

"ஆசிரியர் பாடங்களை மட்டுமே நடத்துவார்... குரு வாழ்க்கைப்பாடத்தையும் சேர்த்து நடத்துவார்... புத்தகப்பாடத்தில் உள்ளதை மட்டுமே சொல்லித் தருபவர் ஆசிரியர் என்றாலும், அதிலும் வாழ்க்கை நெறிகளைக் கற்றுத் தருபவரே குருவாக உயர முடியும்... ஆசிரியர்கள் எல்லாரும் நமக்குக் குருவாகவும் திகழ வாழ்த்துவோம்..." கண்ணைத் திறக்கும் கல்வி இங்கே குருடாய் போனதே... காசு எறிந்தால் கதவு திறக்கும் வணிகம் ஆனதே... கலைமகள் தனது மகளைச் சேர்க்கப் பள்ளி ஏறினாள்... வீணை விற்றுக் கட்டணம் கட்டி வீடு திரும்பினாள்... சரியா...? சரியா...? ஒரு கல்வி மனித உரிமை என்று காணலையா...? முறையா...? ஒரு ஏழை வீட்டில் கல்வி என்ன பொய்யா...? குடிக்கும் தாய்ப்பாலுக்கு விலையொன்றும் கேட்காதே... படிக்கும் படிப்பை நீ பணம் கேட்டு விற்காதே... (படம் : ரெட்)

"அதெல்லாம் சரி, வாழ்த்துவோம்... படித்ததினால் அறிவு பெற்றோர் ஆயிரம் உண்டு... பாடம் படிக்காத மேதைகளும் பாரினில் உண்டு... கொடுப்பதற்கும் சிரிப்பதற்கும் படிப்பு வேண்டுமா...? என்றும் குழந்தையைப் போல் வாழ்ந்து விட்டால் துன்பம் தோன்றுமா...? (படம் : படிக்காத மேதை) எனக்கு ஒரு உண்மை தெரியணும்... நீ ஆசிரியரா...? குருவா...?"

"கொடுப்பதற்கும் சிரிப்பதற்கும் தேவையில்லை என்பது உண்மை... 'போய்ச் சேரும்' வயதின் போது குழந்தை மனம் வந்தால்...? ஆனால், சிறுகுழந்தை கூட "இது என்னது" என்றால்...? 'கல்வி எங்கே ஆரம்பமாகிறது ?' என்பதை வாசிப்பவர்கள் புரிந்து கொள்வார்கள்...! முதல் பள்ளி நம் வீடு தான்... வாழ்க்கை அனுபவங்களே நல்ல ஆசிரியர்கள் தான்... இந்த உலகம் இரண்டாவது சிறந்த பள்ளிக்கூடம் தான்... மனசாட்சி, நான் அனைத்தையும் ரசிக்க, கற்றுக் கொள்ள, அறிந்து தெரிந்து புரிந்து கொள்ள எப்போதும் மாணவனாக இருக்கவே விரும்புவேன்!"

"இதென்ன...! புதுக் கதையா இருக்கே...!"

"மனசாட்சி... வரும் ஆடி மாத பௌர்ணமி : வியாச பூர்ணிமா திருநாள் - வியாசர் உட்பட அனைத்து குருமார்களை அன்று மட்டும் வழிபடுவது மட்டுமல்லாமல் நம் வாழ்வில் ஒவ்வொரு நிலையிலும், தாய் தந்தை உட்பட நமக்கு வழிகாட்டிய, பிடித்த பல குருக்கள் உள்ளார்கள்... அவர்கள் நம் மனதில் வாழ்க்கை முழுவதும், நம் கூடவே சொற்களால், அறிவுரைகளால், ஆலோசனைகளால் பயணப்பட்டாலே போதும்... (நண்பர்களே... சுட்டியின் துணை கொண்டு கீழுள்ள வரிகளை வாசிக்கவும். நன்றி : wesmob.blogspot.com)

அதாவது எரியும் தீபத்தைப் போல, எப்போதும் தன்னுடன் சிலவற்றைச் சேர்த்துக் கொண்டும் சிலவற்றை இழந்து கொண்டும், திசை எதுவென்றாலும், தலைகீழாகப் பிடித்தாலும், மேல் நோக்கி
எரிவதைப் போல - நம் வாழ்வில் இன்ப துன்பங்கள், வெற்றி தோல்விகள், ஏற்றத்தாழ்வுகள் மற்றும் என்ன நடந்தாலும், நம்
மனதின் எண்ணங்களும் செயல்களும், தீபத்தைப் போல
மேல் நோக்கித் தான் பிரகாசிக்க வேண்டும்...!"

"என்ன இருந்தாலும் உன் சிறந்த பத்து நண்பர்கள் போல் ஆகுமா...? சிரியரா...? குருவா...? மாணவனா...? ஹிஹி"

அவங்க யாரு... அறிந்து கொள்ள இங்கே சொடுக்கித் தொடர்வதற்கு முன் இந்தப் பதிவைப் பற்றி...

நண்பர்களே நீங்க எப்படி - ஆ...? கு...? மா...?

புதிய பதிவுகளை பெறுதல் :


தொடர்புடைய எண்ணங்களின் வண்ணங்கள் சில :


முகநூல் மூலம் கருத்துக்களை பகிர :

கருத்துகள்

  1. அந்த மனித முகம் மரம் அருமையா இருக்கே...!

    பதிலளிநீக்கு
  2. ஒவ்வொரு செயலும் தனக்கு மட்டுமல்லாது மற்றவர்களுக்கும் பயன்படும் வண்ணம் இருக்க வேண்டும் என்ற வள்ளுவரின் கருத்தை திறம்பட விளக்கினீர்.. நன்றி தனபாலன்..

    பதிலளிநீக்கு
  3. தனபாலன் சார்...!!!
    நல்ல சிந்தனை. நீங்க நெறைய படிக்கிறிங்க அப்படின்னு உங்க பதிவுகளை படிக்கும்போதெல்லாம் நெனப்பேன். அது ரொம்ப சரிதான்.

    பதிலளிநீக்கு
  4. நிச்சயமா நீங்க ஒரு ஆசிரியரா இருந்திருக்க வேண்டியர்தான். ஆசிரியர்கள் உங்களிடமிருந்து பாடம் கற்றுக் கொள்ளவேண்டும். மிக சிறப்பான கதை. கல்வி என்றால் என்ன என்பதை தெளிவாக விளக்கி விட்டீர்கள்.
    இடர்களை வெல்லக் கற்றக் கொடுப்பது கல்வி அல்ல. அந்த இடர் மற்றவர்களுக்கு வாராமல் தடுக்க உதவுவதே கல்வி. பிரமாதம் தனபாலன் சார்.

    பதிலளிநீக்கு
  5. உங்கள் கதை எல்லோருக்கும் ஆகாமல் போகாது !இதைப் படித்ததும் என் நினைவுக்கு வந்தது ...ஒருமுறை இதுபோல்தான்நேருஜி தாண்டினாராம் ,காந்திஜி தாண்டாமல் சென்றுவிட்டு சொன்னாராம் ,,,'மூன்றடியை தாண்ட நான்கடி பின்வைக்ககூடாது ' என்று !
    போகக்கூடாத குரு'தட்சணை ' போய்விட்டது ,வேண்டாத வரதட்'சணை 'வாழ்ந்துக் கொண்டிருக்கிறது!

    பதிலளிநீக்கு
  6. ஆசிரியருக்கும் குருவுக்கும் உள்ள வேற்றுமை சூப்பர். காமராஜரின் பிறந்தநாள் அன்று படிக்காத மேதை படப் பாடல் இணைத்திருப்பது (ஹிஹி) அருமை.

    பதிலளிநீக்கு
  7. வாரம் ஒண்ணுன்னாலும்
    காரம் குறையாம
    நேரத்தைச் செலவுசெய்து
    நேர்த்தியாக பதிவிடும்
    தூரத்து இடிமுழக்கம்
    திண்டுக்கல் தனபாலனின்
    படைப்புகள் சோரம்போனதில்லை
    சிந்தனைக்கும் பஞ்சமில்லை.
    கணினி படிக்காமலே
    கணினிக்கே கதைசொல்லும் நீ
    மக்களின் மனதை மயக்கும்
    வித்தைக்காரன் என்பது உண்மைதான்.
    தருகின்ற படைப்புகள் தங்கம்தான்.
    வாழ்த்துக்கள் நண்பரே

    பதிலளிநீக்கு
  8. மிக அருமையான கதை. மறக்கவே கூடாத படிப்பினைக் கதை

    பதிலளிநீக்கு
  9. அற்புதமான பதிவு. எரியும் தீபத்தைக் கொண்டு படிப்பித்த கருத்து அபாரம். ஆசிரியருக்கும் குருவுக்கும் உள்ள வேறுபாடு அறிந்தேன். ஒரு மாணவன் தான் கற்ற வழியில் எவ்வாறு நடக்கவேண்டுமென்பதை எளிய விளக்கத்துடன் எடுத்துரைத்த பதிவுக்கு நன்றி தனபாலன். தொடர்ந்து பகிருங்கள் ஆக்கபூர்வ சிந்தனைகளை.

    பதிலளிநீக்கு
  10. அருமையான கருத்துகொண்ட பதிவு இது. வாழ்த்துக்கள்! உங்களின் கேள்விக்கான பதில்....நான் குருவாகவும் இருந்திருக்கிறேன். ஆனால் இன்னும் மாணவனாகவும் இருக்கிறேன்!

    பதிலளிநீக்கு
  11. @ஸ்ரீராம். அவர்களுக்கு முந்தைய சில பதிவுகளில் உள்ளது போல் mp3 இணைக்கலாம் என்றால் சின்ன Technical Problem... பொற்காலக் கல்வியின் குருவைப் பற்றி எழுதுவதற்கு பதில் "படிக்காத மேதை" திரைப்படத்தின் சிறப்பான பாடல்... எரியும் தீபம் இணைக்கத் தான் நேரம் அதிகமானது...! நன்றி...

    பதிலளிநீக்கு
  12. முற்செடி அகற்றியவன் வாழ்க்கையை படிக்கிறான்.... நல்ல செய்தி.

    பதிலளிநீக்கு
  13. சொல்ல வந்த செய்தியும் அதை சொன்ன விதமும் அருமை.

    அண்மையில் முக புத்தகத்தில் படித்த சில வரிகள் "படிச்சவன் பாடம் நடத்துறான்; படிக்காதவன் பள்ளிக்கூடம் நடத்துறான்." கல்வி வணிகமானதன் பின்னணியில் இதுவும் இருக்கலாமோ.....

    பதிலளிநீக்கு
  14. வாழ்க்கை நெறிகளை கற்றுத் தருபவரே குருவாக முடியு்ம். அருமை! எத்தனை உபயோகமான விஷயங்களை எவ்வளவு அருமையாச் சொல்லியிருக்கீங்க. உங்களைப் பாத்தா மெல்லிசா ஒரு பொறாமையே வருது டி.டி. எனக்கு!

    பதிலளிநீக்கு
  15. எங்கேயோ கேட்ட குறள்,
    இல்லை குரல் சிந்திக்கவைக்கும் சிறப்பான எரியும் தீபம் போன்ற பகிர்வுகள்..பாராட்டுக்கள்..!!

    பதிலளிநீக்கு
  16. கல்வியின் பயன் குறித்த கருத்தை
    விளக்கிய விதம் அருமை
    ஆற்றோட்டமான நடையை மிகவும் ரசித்தேன்
    பகிர்வுக்கு வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  17. கல்வி கற்போம் - கற்பிப்போம் !

    அருமையான தொகுப்பு

    தொடர வாழ்த்துக்கள்...

    பதிலளிநீக்கு
  18. கருத்துடன் கூடிய கதை அற்புதம்... அறி என்பது சுயநலத்திற்காக அன்று பொது நலத்திற்காகவே...

    பதிலளிநீக்கு
  19. ரூபக் ராம் said... என்னைப் போன்ற இந்த தலை முறைக்கு கல்வி ஒரு தொழில் முதலீடாய் மாறியது வருத்தம் தான். உங்கள் பதிவின் மூலம், குருகுல கல்வி பயில, டைம் மெஷின் கிடைத்தால் பின் நோக்கி செல்ல விருப்பம் எழுந்தது.

    பதிலளிநீக்கு
  20. தீபத்தை எரிவதை போல ..... சூப்பர் பாயிண்ட சார்.

    பதிலளிநீக்கு
  21. முள் மரம் வாயிலாக முதியவர் சொல்லும் அறிவுரை அருமை.
    நம் அறிவு, செயல் பிறருக்கு பயன் படும்படியாக இருக்க வேண்டும் என்பது மிக முக்கியம் தான்.
    தீபம் சொல்லும் செய்தியும் அருமை.
    பாடல்கள், திருக்குறள் எல்லாம் மிக அருமை.
    குருக்கள் எல்லாம் நல்ல வழி காட்டியாய் அமைந்து விட்டால் அப்புறம் ஒருவன் வாழ்வு நல்ல தீபமாய் சுடர் விடும் சந்தேகம் இல்லை.
    நல்ல குருக்களை பெற்றவர் திண்டுக்கல் தனபாலன்.
    வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  22. குருவுக்கும் ஆசிரியருக்கும் உள்ள வித்தியாசத்தை மிக அருமையாக விளக்கியிருந்தீர்கள்... எழுதிக்கொண்டே வந்தபோது அங்கும் ரெட் படப்பாடலை உபயோகிப்படுத்தியிருந்தது அருமை... பாடல்களுக்கும் உங்களுக்குமான தொடர்பு மிக ஆழமானது என்று நினைக்கிறேன்... குருவே வணக்கம்...

    பதிலளிநீக்கு
  23. கல்வி வியாபாரம் ஆனதால் ஆசிரியர் இருப்பர் , உண்மையான குருவை பார்க்க முடியாது.

    பதிலளிநீக்கு
  24. சிந்திக்க வைக்கும் அருமையான பகிர்வு. பாராட்டுக்கள். வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  25. அன்பின் திரு தனபாலன்,

    ஒவ்வொரு வார்த்தையும் அனுபவித்து படிக்க முடிந்தது. வாழ்த்துக்கள்.நன்றி.

    அன்புடன்
    பவள சங்kஅரி

    பதிலளிநீக்கு
  26. எப்பொழுதும் உங்கள் பதிவு தனித் தன்மையுடன் சிறப்பாக இருக்கும் .அந்த முத்துச் சரத்தில் இது ஒரு முத்து .
    உங்களில் உயர்ந்தோர் தான் பெற்ற கல்வியை மற்றவருக்கு ஏற்றி வைத்தவரே என்பது நபிமொழி
    நீங்கள் பெற்ற அறிவை மற்றவருக்கும் தருகிறீர்கள் . அதனை தாவி வரும் நிகழ்வோடு அறிவின் நோக்கத்தை விளக்குவது சிறப்பாக உள்ளது

    பதிலளிநீக்கு
  27. வள்ளூவரின் வாக்கை அருமையாக விளக்கி இருக்கிறீர்கள். வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  28. நமக்கு மட்டும் பயன்படுவது
    கல்வியல்ல - அது
    சுயநலம்!
    பிறருக்குப் பயன்பட வைத்தும்
    நாமும் பயன்படுத்துவதே
    உண்மையான கல்வி!
    திண்டுக்கல் தனபாலன் அவர்களே!
    இவ்வாறான
    சிந்திக்கவைக்கும்
    உங்கள் பதிவுகளை வரவேற்கிறேன்!

    பதிலளிநீக்கு
  29. கல்வி கற்போம் - கற்பிப்போம் !
    எவ்வளவு ஆழ்ந்து எழுதியுள்ளீர்கள்!
    சிறப்பு - குறள்- தீபம் மிக மிக நன்று
    இனிய வாழ்த்து.
    வேதா. இலங்காதிலகம்.

    பதிலளிநீக்கு
  30. ஆக்கப்பூர்வமான பகிர்வு.அழகிய படம்.

    பதிலளிநீக்கு
  31. கல்வியின் நோக்கம் அடுத்து வரும் தலை முறைக்கும் பயன்படுமாறு உழைப்பது// உன்மைதான். மிகச் சரியாக சொன்னீர்கள். இந்த புரிதல் இல்லாததால்தான் கல்வி ஒரு வியாபரம் ஆகி விட்டது. பலாப்பழத்தில் மொய்க்கும் ஈக்களைப் போல குறிப்பிட்ட சில படிப்புகளையே அனைவரும் படிக்க விரும்புகின்றனர்.

    ஆசிரியர் , குரு விளக்கம் அருமை..

    பதிலளிநீக்கு
  32. ஆசிரியரும், குருவும் உள்ள வேற்றுமை நன்று..

    பதிலளிநீக்கு
  33. கதை அருமை .
    குரு பூர்ணிமாவில் வேதங்கள் வழங்கிய
    நம் வியாச மகரிஷியையும் நமக்கு பாடம் கற்பித்த ஆசிரியர்களையும்
    நினைவு கூர்ந்து நன்றி செலுத்துவோம் .

    பதிலளிநீக்கு

  34. பதிவுகளில் குறள் நெறியும் திரைப் பாடல்களும் சொல்ல நினைக்கும் கருத்துக்களுக்கு வலு சேர்க்கின்றன. உண்மையான ஈடுபாடு இல்லாமல் இம்மாதிரிப் பதிவுகள் எழுதுவது சாத்தியமில்லை. வாழ்த்துக்கள் தனபாலன்.

    பதிலளிநீக்கு
  35. நல்லதொரு பகிர்வு ! வாழ்த்துக்கள் நண்பரே !

    பதிலளிநீக்கு
  36. ஆசிரியரா குருவா மாணவனா - ஆகுமா - அருமை

    பதிலளிநீக்கு
  37. குண்டுக்கல் போல மிக அருமையான கருத்துக்களை உள்ளத்தில் பதிய வைக்கும் திண்டுக்கல் தனபால் பல்லாண்டு வாழ்க ! நாளும் தருக இதுபோல்!

    பதிலளிநீக்கு
  38. ஒவ்வொரு முறையும் ஒரு ஆச்சரியத்தை தந்துகிட்டே இருக்குறீங்க

    பதிலளிநீக்கு
  39. தீப ஒளியில் பிரகாசிக்கும் கருத்து அருமை. குருவின் மேன்மை போற்றும் முத்தான பதிவு. அருமையான பகிர்வுக்கு நெஞ்சார்ந்த நன்றிகள் பல!.

    பதிலளிநீக்கு
  40. சிந்திக்க வைக்கும் பதிவு. வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  41. கற்றது கையளவுதான் ......
    கற்றுக்கொண்டதை சொல்லித்தருகின்றோம்..
    சொல்லித்தர கற்றுக் கொள்கின்றோம்...
    கல்வியின் நோக்கம் பற்றி உரைத்த உங்கள் பதிவு ஒரு கல்வி....

    பதிலளிநீக்கு
  42. கல்வியின் பயனை சொல்லும் குட்டிக்கதையும் ஆசிரியருக்கும் குருவிற்கும் உள்ள வித்தியாசத்தையும் அருமையாக சொன்னீர்கள்! குறளுடன் நல்ல திரைப்பட பாடல்களும் பொருத்தமாக பகிர்ந்தமை சிறப்பு! இதான் உங்க பதிவின் விசேசமே! பகிர்வுக்கு நன்றி! வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  43. முதல் பள்ளி அவரவர் வீடுதான்!. மறுக்க முடியாதது. தவிர - ஆசியர்கள் அனைவரும் குருவாகத் திகழ்ந்து விட்டால் - உலகம் சொர்க்கம் தான்!...

    பதிலளிநீக்கு
  44. சரிதான்....தீபம் போல நம் எண்ணங்கள் மேல்நோக்கியே இருக்க வேண்டும்...அருமையான கருத்து(14)

    பதிலளிநீக்கு
  45. அனைவருக்கும் பயன்படும் அருமையான பதிவு. வாழ்த்துக்கள் தனபாலன் அண்ணா.

    பதிலளிநீக்கு
  46. காடு, மலை, வெளியில் நானும் உங்களோடு இணைந்தே ரசித்தேன்...

    அறியாததகவல்களை கற்க துடிக்கும்வரை வாழ்க்கை இனிக்கும்...

    பதிலளிநீக்கு
  47. தல,

    நானும் திண்டுக்கல் தான். நான் பதிவுலகத்துக்கு ரொம்ப புதுசு. உங்களைப் பத்தி இப்போதான் கேள்விப்படுறேன். இனிமே அடிக்கடி வருவோம்ல..!!

    பதிலளிநீக்கு
  48. ஆழமான கருத்துக்கள். பகிர்வுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  49. மரத்தில் மனித முகம் - படம் ஏற்கனவே பார்த்து ரசித்திருக்கிறேன்...

    நல்ல பகிர்வு நண்பரே..... பகிர்வுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  50. முட்செடியை தாண்டியவனுக்கும், தன் வலியைப் பொருட்படுத்தாது அகற்றியவனுக்கும் பெரியவர் கூறும் அறிவுரை எல்லோருக்கும் தேவையான ஒன்று.

    ஆசிரியர் பாடம் நடத்துவார்; குரு வாழ்க்கைப் பாடம் நடத்துவார் - எத்தனை அருமையாகச் சொல்லியிருக்கிறீர்கள்!

    உங்கள் ஒவ்வொரு பதிவும் வைரம்!

    பதிலளிநீக்கு
  51. ஆசிரியருக்கும், குருவுக்கும் உள்ள வேறுபாட்டினை விளக்கிய விதம் அருமை.

    கற்ற கல்வியை தான் மட்டும் வைத்துக் கொள்ளாது, மற்றவருக்கும் பயன்படுமாறு செய்தலே, கல்வியின் உண்மையான நோக்கம் என்பதை அழகாக எடுத்தியம்பும் கதை அருமை ஐயா.

    அருமையானதோர் பகிர்வு. பகிர்ந்தமைக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள் ஐயா.

    பதிலளிநீக்கு
  52. வணக்கம்
    தனபால் (அண்ணா)

    இரண்டுக்கும் இடையில் உள்ள வேறுபாட்டை மிக அழகாக விளக்கியுள்ளிர்கள்
    பதிவு அருமை வாழ்த்துக்கள் அண்ணா

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
  53. ஒவ்வொரு செயலும் தனக்கு மட்டுமல்லாது மற்றவர்களுக்கும் பயன்படும் வண்ணம் இருக்க வேண்டும் ....
    பொது நலம் பேணுவோம்
    மனித முகமுள்ள மரம்
    படம் அருமை

    பதிலளிநீக்கு
  54. உண்மைதானே..... இன்று நாம் எல்லோரும் சுயநலமாக சிந்திக்க தொடங்கிவிட்டோம், நாம் எப்படியாவது சட்டை கிழியாமல் தாவ பார்க்கிறோம், ஆனால் பின்னால் இது போல தாவ முடியாதவர்கள் வந்தால் ? என்னை சிந்திக்க வைத்த பதிவு...... நன்றி, தொடர வாழ்த்துக்கள் !

    பதிலளிநீக்கு
  55. நண்பரே நல்ல பகிர்வு. கற்கும் கல்வி எல்லோருக்கும் பயனுற செய்யும் பொழுது முழுமை பெறுகிறது. உண்மை.

    பதிலளிநீக்கு
  56. மிக அருமை!! ஒருவனின் அறிவு அவனுக்கு மட்டும் பயன்படுவது சிறப்பில்லை, அடுத்தவர்களுக்கும் பயன்படுமாறுச் செய்வதே அந்த அறிவிற்கு சிறப்பு என்று சொல்லியும், பெண்மையை உயர்த்தி எழுதியும், எண்ணங்களும் செயல்களும் எரியும் தீபம் போல சுடர் விட்டு மேல் நோக்கித்தான் பிரகாசிக்க வேண்டும் என்று அழகாய் வலியுறுத்திச்சொல்லியும் அசத்தி விட்டீர்கள்!!

    பதிலளிநீக்கு
  57. அருமையான கருத்துகொண்ட பதிவு இது. வாழ்த்துக்கள்!


    பதிலளிநீக்கு
  58. சிந்திக்க வைக்கும் பதிவு..இந்த பதிவின் மூலம் நீங்கள் நிறைய படிக்கிறீங்கன்னு தெரியுது,எங்களுடன் பகிர்வதில் மிக்க மகிச்சி சகோ!!

    பதிலளிநீக்கு
  59. அருமையான பதிவு

    கல்வியும் அறிவும் தனக்கு மட்டுமல்லாது மற்றவர்களுக்கும் பயன் கொடுக்கும்போதே முழுமையான அர்த்தத்தைப் பெறுகிறது.

    வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  60. அன்புள்ள தனபாலன்..


    ஒரு ஆசிரியனாக இக்கட்டுரையை வாசித்து மனநிறைவு அடைகிறேன். அருமை. வாழ்த்துக்கள். கட்டுரை செய்நேர்த்தி அழகாக வருகிறது உங்களுக்கு.

    பதிலளிநீக்கு
  61. அருமையான செய்தியுடன் அழகாய் பதிந்துள்ளீர்கள்... நன்றிகள்!

    பதிலளிநீக்கு
  62. உங்கள் வலைப்பூ வடிவமைப்பு போல் ஆகுமா?

    ' ஆகுமா' கட்டுரை வித்தியாசமாக படிக்க தூண்டுவதாக இருந்தது ..

    பதிலளிநீக்கு
  63. மிகச்சிறந்த சிந்தனைகளை கொட்டுகிறீர்கள் பாராட்டுகள்.

    பதிலளிநீக்கு
  64. நல்ல கல்வி முறை எப்படி இருக்க வேண்டுமென்ற உங்கள் பதிவு அருமை...

    பதிலளிநீக்கு
  65. குரவே சர்வ லோகானாம் பிஷஜே பவ ரோகினாம்.

    என்னும் வடமொழி சொல்வடைக்கேற்ப வாழ்வில் ஏற்படும் துயரங்களைத் துடைத்தெறிய நல்லதொரு
    மருந்தைத் தருபவர் குருவே.

    குருவின் நற்பாதங்களைப் போற்றுபவனுக்கு உண்மையான மன நிறைவு கிடைக்குமென்பதிலோர் ஐயமில்லை.

    சுப்பு தாத்தா.
    www.vazhvuneri.blogspot.com
    www.subbuthatha72.blogspot.com

    பதிலளிநீக்கு
  66. சில நாட்கள் இந்த பக்கம் வர இயலாததால் இந்த பகிர்வினை பார்க்க வில்லை. என்ன அற்புதமான பகிர்வு. குருவுக்கும் ஆசிரியருக்கும் உள்ள வேறுபாடு சரியாக விளக்கப்பட்டது.

    பதிலளிநீக்கு
  67. உச்சக் கட்ட கருத்து மழைக்கு நடுவில்
    என் இதயம் கனிந்த வாழ்த்துக்கள் சகோதரரே .ஓர் ஆக்கம் போட்டால் குறைந்தது நாலுபேராவது கருத்திட வேண்டும் .நாங்களெல்லாம் திருவோடு
    தூக்கியே களைத்துப் போனோம் .உங்களின் ஆக்கங்களைப் பாக்கும் போது உள்ள சந்தோசம்எங்களின் வலைத் தளத்தைப் பார்த்ததுமே வறண்டு போய்விடுகிறது .இது உங்கள் உழைப்பிற்குக் கிடைத்த வெற்றி .மீண்டும் மீண்டும் என் வாழ்த்துக்கள்
    சிறப்பான படைப்புகள் அதற்கேற்ப நிறைவான கருத்துக்கள் அனைவரும் பார்வையிட வேண்டிய அருமையான தளம் இது .மிக்க நன்றி சகோதரரே பகிர்வுகளுக்கு .

    பதிலளிநீக்கு
  68. தீபத்தின் விளக்கம் அருமை.குறள்,பாடல்கள் எடுத்துக்காட்டுடன் இன்றைய காலத்திற்கேற்ப மிக அழகாக அருமையான பதிவு சார். முள்கதை அருமை. நன்றி.

    பதிலளிநீக்கு
  69. கருத்துகள் ஒவ்வொன்றும் முத்துகள்..

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

நகுதற் பொருட்டன்று நட்டல் மிகுதிக்கண்
மேற்சென்று இடித்தற் பொருட்டு. (குறள் 784)

நட்புச் செய்துகொள்வது நண்பரோடு சிரித்து மகிழ்வதற்காக மட்டும் அல்ல. மிகுதியாகத் தவறு செய்யும்போது, அவரைக் கடிந்து திருத்துவதற்கே ஆகும்.