🏠 வணக்கம் காப்பகம் நன்றி

தேடல் 🔎



புதிய பதிவுகளை பெற ✉



அருமையாச் சொன்னீங்க...!

வணக்கம் நண்பர்களே... எழுதுவதற்கு எழுத்துக்கள் பேசுகின்றன... மேடைப் பேச்சிற்கு எழுத்துக்கள் திக்குகின்றன..! பலரின் திறமைகள் தெரியாமலும் போய் விடுகின்றன... என்னவாகும்..? வாங்க கேட்போம்...


(1) அப்படிச் சொல்லுங்க...! (2) சரியாச் சொன்னீங்க...! (3) புறணி-பரணி-தரணி

(1) விழாவில் பேச அதிகாரியிடம் சொல்லி விட்டு, மேலதிகாரி வெளியூர் சென்று விட்டார்... (2) விழாவில் வேறு மாதிரி நடந்ததைத் துணை அதிகாரியிடம் விசாரித்தார்... (3) இதனால் அலுவலகத்தில் அரட்டை... படிக்காதவர்கள் பதிவின் மீது சொடுக்கிப் படித்து விட்டு வந்தால் நன்று... இப்போது நிறுவன முதலாளியும் மேலதிகாரியும் உரையாடுகிறார்கள்...

வணக்கம் முதலாளி... புறணி பேசுறவங்க நம்ம அதிகாரியைப் பற்றி என்ன வேண்டுமானாலும் பேசுவாங்க... அவர் பேசுறசொல்லின் வகைகள் தெரிந்தவர்... வந்தவங்க படித்தவங்களா, இல்லையான்னு பார்த்துட்டு, அதற்கேற்ற மாதிரி பேசுவாறே தவிர, பிழையா பேச மாட்டார்... அதிகாரி மனசு சுத்தம் ஐயா...
721 வகையறிந்து வல்லமை வாய்சோரார் சொல்லின்
தொகையறிந்த தூய்மை யவர்.

அது சரி ஐயா... பயப்படாமல் பேசணுமில்லே, அதே சமயம் தான் படித்ததையெல்லாம், விழாவிலே வந்தவங்க எல்லோருமே ஏற்றுக் கொள்கிற மாதிரி எடுத்துச் சொன்னாத் தானே, அவரு நன்றாகப் படித்தவர் என்று சொல்ல முடியும்...?
722 கற்றாருள் கற்றார் எனப்படுவர் கற்றார்முன்
கற்ற செலச்சொல்லு வார்.

சரிங்க முதலாளி... அவரென்ன போருக்கா போறார்...? பயப்படாம சண்டை போட்டுச் சாகிறதுக்கு ! தேவையில்லாத விசயத்துக்கும் அடிபிடி சண்டை எல்லாம் போட பல பேர் இருக்காங்க... ஆனா பேசுவதற்கு இவர் மாதிரி சில பேர் தான் இருக்காங்க...
723 பகையகத்துச் சாவார் எளியர் அரியர்
அவையகத்து அஞ்சா தவர்.

அதுக்குச் சொல்லலே... பல வகையான நூல்களைப் படித்தவங்க அவையிலே, அவங்களுக்கு மனசுக்குப் பிடிக்கிற மாதிரி சொல்லணும், அதே சமயம் அவங்க சொல்றதையும் கேட்டுக்கணும் இல்லையா...? எல்லாமே தெரிந்த மாதிரி இருந்தா எப்படி...?
724 கற்றார்முன் கற்ற செலச்சொல்லித் தாம்கற்ற
மிக்காருள் மிக்க கொளல்.

இவர் வந்தவங்களுக்குப் பயப்படாம, அங்கே என்னென்ன கேள்வியெல்லாம் கேட்பாங்க, எப்படி பதில்கள் சொல்லணும்னு, விவரமா தயார் செய்துகிட்டு போயிருக்கணும்...
725 ஆற்றின் அளவறிந்து கற்க அவையஞ்சா
மாற்றங் கொடுத்தற் பொருட்டு.

கோழைகளுக்குக் கையிலே வாள் இருந்தும் பிரயோசனமில்லேயா... நுட்பமான அறிவு உள்ளவங்க இடத்திலே, படிச்ச எந்தப் புத்தகமும் பயன் தரவே தராது...
726 வாளொடென் வன்கண்ணர் அல்லார்க்கு நூலொடென்
நுண்ணவை அஞ்சு பவர்க்கு.

நல்லாச் சொன்னீங்க முதலாளி... படிச்சவங்க கூடிய அவையிலே, பயந்துகொண்டே பேசுறவங்க மனசிலே, இல்லேன்னா கையிலே இருக்கிற நூல், பகைவரின் போர்க்களத்திலே நடுங்கும் பேடியின் கையிலே இருக்கும் வாளுக்குச் சமம்...
727 பகையகத்துப் பேடிகை ஒள்வாள் அவையகத்து
அஞ்சு மவன்கற்ற நூல்.

ஆமா இப்ப சொல்லுங்க... நல்லவங்க அவையிலே, அவங்க ஏற்றுக் கொள்ளும்படி நல்ல பொருள்பற்றிப் பேசத் தெரியாதவங்க, எத்தனை புத்தகம் படித்திருந்தாலும் பயன் இல்லாமல் போகும்... இது உங்களுக்கும் தெரியும் தானே....?
728 பல்லவை கற்றும் பயமிலரே நல்லவையுள்
நன்கு செலச்சொல்லா தார்.

தெரியும் முதலாளி... என்ன படிச்சாலும், நல்லாப் படிச்சவங்க அவையிலே பேசும்போது பயந்தா, படிக்காதவங்களை விட கேவலமா போயிடுவோம் என்கிறதும் தெரியும்...
729 கல்லா தவரின் கடையென்ப கற்றறிந்தும்
நல்லா ரவையஞ்சு வார்.

சரியாச் சொன்னீங்க... இப்படி அவைக்குப் பயந்து, தான் படித்ததை எல்லாம் கேட்கிறவங்களைக் கவரும்படி பேசத் தெரியாதவங்க, அறிவுள்ளவங்களா இருந்தாலும், அறிவில்லாதவர்களுக்கே சமம்... இதையும் தெரிஞ்சு வச்சிக்குங்க...
730 உளரெனினும் இல்லாரொடு ஒப்பர் களன்அஞ்சிக்
கற்ற செலச்சொல்லா தார்.

"சரிங்க முதலாளி
அருமையாச் சொன்னீங்க...!"

என்ன நண்பர்களே... சொல் வன்மையும், அவை அறிதலும் வேண்டும்... புறங்கூறுதலை புறந்தள்ளி விட்டு, தெளிவான திடமான மனதை உருவாக்கிக் கொண்டால் அவை அஞ்சாமை (73) மிகவும் எளிதானதும் முக்கியமானதும் அல்லவா...? குறள்களின் விளக்கங்களைக் குறள்களின் குரலாக மேலே ஓரளவு சொல்லி உள்ளேன்; சரியா இருக்கா ?-சொல்லுங்க...

"சொல்லாத சொல்லுக்கு விலை ஏதும் இல்லை" என்று கண்ணதாசன் பாடல்வரிகளைக் கேட்டிருப்போம்... மௌனம் சிறந்த மொழி என்பதும் அனைவருக்கும் தெரியும்... 'அப்படிச் சொல்லுங்க' என்று நீங்கள் வரவேற்க, அப்படி ஆரம்பித்த இந்த தொடர் (திருக்குறளை அதிகாரங்களாக எழுதுவது) அனுபவங்கள் இருந்தாலும், உங்களின் ஊக்கம் தான் முக்கியக் காரணம்...


அனைவருக்கும் மிக்க நன்றி... மேடைப்பேச்சு ஒருபுறம் இருக்கட்டும்... அதைப்பற்றி வரும் பதிவில் அலசுவோம்... இதுவரை எழுதிய அதிகாரங்களின் பதிவுகளை மூன்று பிரிவுகளாகப் பிரிக்கிறேன்... அந்தந்தப் பதிவுகளைப் படித்தவர்கள் மேலும் சிந்திக்கலாம்... தினமும், யாரிடமும் எதைப்பற்றியும் பேசும் போது :


(1) உண்மையா ? → சொல் வன்மை → அப்படிச் சொல்லுங்க...!
(2) பேசலாமா ? → அவை அறிதல் → சரியாச் சொன்னீங்க...!
(3) தேவையா ? → புறங்கூறாமை → புறணி-பரணி-தரணி

இந்த மூன்றையும் கவனத்தில் கொண்டால், கேட்பவருக்கு மட்டுமல்ல... நமக்கே நாம் செய்து கொள்ளும் உதவி இதை விட ஏதும் உண்டோ...?

பேசுங்கள் ! பேசுங்கள் ! ஆனால்...? இங்கே சொடுக்கித் தொடர்வதற்கு முன் இந்தப் பதிவைப் பற்றி...

நண்பர்களே... தங்களின் கருத்து என்ன ?

புதிய பதிவுகளை பெறுதல் :


தொடர்புடைய எண்ணங்களின் வண்ணங்கள் சில :


முகநூல் மூலம் கருத்துக்களை பகிர :

கருத்துகள்

  1. நல்ல பதிவு. படித்தது மனதில் நிற்க வேண்டும். நின்றதைச் செயலில் காட்ட வேண்டும்.. (அதுதானே கஷ்டம்)

    பதிலளிநீக்கு
  2. அசத்தல்! மனப்பாடம் செய்யாமே இப்படி இரண்டு பேர் பேசற மாதிரி எளிமையான உரைநடையில படிச்சிருந்தா சுலபமா எல்லாக் குறளும் பள்ளி நாட்கள்லயே மனசுல பதிஞ்சிருக்கும். சூப்பர் தனபாலன்!

    பதிலளிநீக்கு
  3. மாணவர்களுக்கு பயன்படும் செய்திகள், ஏன் நமக்கும்.. நன்றி..

    பதிலளிநீக்கு
  4. எல்ல்லோருக்கும் பயன்படும் விஷயத்தை குறள் மூலமா அருமையா சொன்னீங்க நண்பா..!

    பதிலளிநீக்கு
  5. ‘அவை அஞ்சாமை’ பற்றி திருக்குறளை மேற்கோள் காட்டி மிக எளிய நடையில் அருமையாய் சொல்லியிருக்கிறீர்கள்.பணி தொடரட்டும்.வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  6. பேச்சு ஒரு சிறந்த கலை...
    எந்த இடத்தில் எப்படி பேசவேண்டும்...
    என்று அறிந்து தெளிந்து பேசுதல் அவசியம்...
    அழகழகான குறள் விளக்கங்கள்
    நடைமுறை உரையாடல்களுடன்
    விளக்கியமை மிக அழகு நண்பரே...

    பதிலளிநீக்கு
  7. அனைவரும் மனதில் பதிந்துகொள்ளவேண்டிய அற்புதமான கருத்துகள்..பாராட்டுக்கள்..

    பதிலளிநீக்கு
  8. தனபாலன் குரல் விளக்கம் அருமை, சுவையா சொல்கிறீர்கள், தொடருங்கள். த.ம 7

    பதிலளிநீக்கு
  9. அருமையான கருத்துக்க்ள். பதிவுக்குப் பாராட்டுக்கள். நன்றிகள்.

    பதிலளிநீக்கு
  10. If you have time to write for all the "Thiru Kural" , you can release your own "urai" for "Thiru Kural". Good one. Thanks.

    பதிலளிநீக்கு
  11. திருக்குறளை உங்களை விட சிறப்பாக யாரும் விளக்க முடியாது

    பதிலளிநீக்கு
  12. மிகவும் சிறப்பான பதிவு. அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டியது.நன்றி பகிர்வுக்கு.

    பதிலளிநீக்கு
  13. பயனுள்ள மென்பொருள்களை இலவசமாக பதிவிறக்கம் செய்துகொள்ளுங்கள் .....

    ஒரிஜினல் AVG Internet Security 2013 மென்பொருள் ----- http://mytamilpeople.blogspot.in/2013/01/avg-internet-security-2013-free-download.html

    கோப்புகளை அதிவேகமாக பதிவிறக்கம் செய்ய! ----- http://mytamilpeople.blogspot.in/2013/02/internet-download-manager-v614-build-5.html

    பதிலளிநீக்கு
  14. வழக்கம்போல் உங்கள் பதிவு அருமையான
    அனைவர்க்கும் பயன்படும் பதிவு. அதுவும் இளைய தலைமுறையினருக்கும் மிகவும் தேவையான பதிவு
    பாராட்டுக்கள்.

    பேச்சு பேச்சாத்தான் இருக்கணும்
    இல்லாவிடில் ஏச்சுத்தான் கிடைக்கும்

    எல்லாம் அறிந்திருந்தும் சிலர் தாழ்வு மனப்பான்மையால் தான் மற்றவரை நிறைய செய்திகள் அறிந்திருந்தும்
    பிறர் முன் எடுத்து பேசுவதற்கு அஞ்சி
    அப்படியே மங்கிபோய் விடுகிறார்கள்

    தன்னம்பிக்கை யுள்ளவன் பிறர் பேசுவதிலிருந்தே
    விஷயங்களை கிரகித்து. தன் சரக்கை கொஞ்சம் சேர்த்து பெயர் வாங்கி விடுவான்.

    பல துறைகளில் வெற்றி கொடி நாட்டியவர் பேச அழைத்தால் நழுவி ஓடிவிடுவார். அப்படை பேசவேண்டி இருந்தாலும் யாராவது. எழுதித்தந்தால் தான் பேச இயலும். அதற்குள் வியர்த்துவிடும் அவருக்கு. பேசுவதில் பாதியை விட்டுவிடுவார்.

    இந்த அவல நிலைக்கு காரணம் பெற்றோர்களும் சுற்றங்களும்தான்

    சிறுவயதில் சிறுமைபடுத்தியே
    வளர்க்கப்பட்டவர்கள்.
    வளர்ந்த பிறகும் அந்த தாழ்வு மனப்பான்மையிலிருந்து வெளிவருவதற்கு பல ஆண்டுகள் ஆகும். அதற்க்கு கடுமையாக பயிற்சி செய்ய வேண்டும்.

    வெட்கப்படாமல் பல இடங்களில்
    பேசினால்தான் அந்த பயம் விலகும்.

    பதிலளிநீக்கு
  15. இளைஞர்களுக்கு மன உறுதியும் தன்னம்பிக்கையையும் வளர்க்க உதவும்

    பதிலளிநீக்கு
  16. அருமையான பதிவு. . .அணைவரும் படிக்கவேண்டிய பதிவு. . .

    பதிலளிநீக்கு
  17. அருமையா சொன்னிங்க.. பள்ளி பயிலும் என் பெண்ணிற்கு பயனாக இருந்தது இந்த பதிவு. மிக்க நன்றி!

    பதிலளிநீக்கு
  18. நடந்து முடிந்த பதிவர் சந்திப்பு இதற்கு
    ஒரு நல்ல உதாரணம்.
    பகிர்வு சிறப்பு.

    பதிலளிநீக்கு
  19. அருமையான கருத்துகள் நிறைந்த பதிவு, ஒவ்வொருவரும் தெரிந்திருக்கவேண்டும். பகிர்வுக்கு நன்றி நண்பரே!

    பதிலளிநீக்கு
  20. எனக்கும் அதே பிரச்சினைதான், எழுதச் சொன்னா எழுதிடுவேன் பேசச் சொன்னா, அதோ கதிதான் அண்ணாதுரை மாதிரி ஆளுங்க எல்லாம் பேசியே நாட்டை ஒழிச்சாங்க. கள்ளச் சாமியார் ரஞ்சிதானதா கூட பேசியேதான் இன்னமும் ஜனங்களை ஏமாத்திகிட்டு இருக்கான் வாயுள்ள பிள்ளை பிழைச்சுக்கும்னு அதுக்குத்தான் சொன்னாங்க.

    பதிலளிநீக்கு
  21. இங்கே வந்து எனக்கு கற்றுத் தாங்க

    பதிலளிநீக்கு
  22. நான் பல மேடைகளில் பேசியவன்.

    நெஞ்சில் எவ்வளவுதான் தைரியத்தை நிரப்பிக்கொண்டு போனாலும் லேசான பதற்றம் இருந்துகொண்டே இருக்கும்.

    இன்றைய மேடைப் பேச்சாளர்களுக்கு இப்பதிவு பேருதவியாக இருக்கும்.

    பதிலளிநீக்கு
  23. இப்படி அழகாகக் தொகுத்துச்சொல்ல உங்களால்தான் முடிகிறது தனபாலன் சார்!

    மிகமிக அருமையாக ’அட நமக்கு இதுநாள்வரைக்கும் இதுபுரியாமல் போச்சேன்னு’ நினைக்க வைக்கிறமாதிரி எழுதும் உங்கள் ஆற்றல் போற்றுதலுக்குரியது.

    யாவருக்கும் உகந்த நல்லபதிவு சார்! வாழ்த்துக்கள்!

    பகிர்வுக்கு மிக்க நன்றி!

    பதிலளிநீக்கு
  24. இந்த முறையை பாடசாலைகளில் கையாண்டிருந்தால் பிள்ளைகள் குரல் கற்க மண்டையை பித்துக் கொண்டு அலைய வேண்டியதில்லையே

    பதிலளிநீக்கு
  25. மேடைல பேசுபவர்கள் எப்படி தங்களை தயார் செய்துகொள்ள வேண்டும், எதைபேசலாம்,எதைப் பேசக்கூடாது, எப்படிப் பேசினால் கேட்பவர்கள் நம்மை மதிப்பார்கள் என்று மிக அருமையாச் சொன்னீங்க!நீங்க சொல்றது எல்லாம் அருமையா இருக்கு!

    எளியமுறையில் குறள் விளக்கம் அருமையிலும் அருமை!

    பதிலளிநீக்கு
  26. அண்ணே நீங்க தமிழ் ஆசிரியரானே

    பதிலளிநீக்கு
  27. பேசுவது மிக சிறப்பான கலை ஆனால் எனக்கு கைகூடவில்லை.. மிக அருமையான பகிர்வுக்கு நன்றி...

    பதிலளிநீக்கு
  28. அருமை தனபாலன்;பேச்சும் ஒரு கலைதான்
    “கேட்டார்ப் பிணிக்கும் தகையவாய் கேளாரும்
    வேட்ப மொழிவதாம் சொல்” என்பார் அய்யன் வள்ளுவர்!

    பதிலளிநீக்கு
  29. சிந்தனையில் தெளிவும் எண்ணத்தில் உண்மையும் இருந்தால் சொல்ல நினைத்ததை சொல்ல முடியும். குறைந்த நேரத்தில் நினைத்ததைச் சொல்ல சிரமப் படவேண்டும். வள வளவென்று பொருளே இல்லாமல் பேசுவதைவிட குறைந்த நேரத்தில் தெளிவாகச் சொல்வது கடினம். விஷய ஞானம் இருந்தால் பயத்தை அகற்ற முடியும். குறள் கள் மூலம் பதிவைத் தெளிவாக்கியதற்குப் பாராட்டுக்கள் தனபாலன். வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  30. அழகான கருத்துக்கள்.. மீண்டும் மீண்டும் படித்து மனதில் ஏத்தோணும்.

    பதிலளிநீக்கு
  31. எண்ணுதல் யார்க்கும் எளிதாம் - அரியதாம்
    எண்ணிய வண்ணம் சொலல்
    - என்று பேசுவதற்கு தயக்கம் காட்டுபவர்கள் சொல்லிக் கொண்டிராமல் தங்களின் இந்த குறல் விளக்கத்தைப் படித்தால் புரியும்!

    நல்ல விளக்கங்கள்

    பதிலளிநீக்கு
  32. குறள்களை மேற்கோள் காட்டி அருமையாக மனதில் பதிகிறார்போல சொல்லியிருக்கீங்க ..
    ..எனக்கும் இன்னமமும் மேடை பேச்சு என்றால் கைகால் நடுங்கிடும் ..
    வியர்த்து விறுவிறுத்து ..பள்ளிநாட்களில் மேடையேறி கீழே குனிந்தவாறு ஒப்பித்து வந்திருக்கிறேன் ..
    இந்த அவை அஞ்சாமை குறித்து இவ்ளோ தெளிவா அப்பவே யாராச்சும் சொல்லியிருந்தா ...எவ்வளவு நன்றாகயிருந்திருக்கும் ....இவை நிச்சயம் மாணவ பருவ பிள்ளைகள் படிக்கவேண்டியவை அவர்களுக்கு மிக உபயோகமாயிருக்கும் .

    பதிலளிநீக்கு
  33. சிறப்பான குறள் விளக்கம்! எளிமையாக விளக்கியமைக்கு நன்றி!

    பதிலளிநீக்கு
  34. திருக்குறளுக்கு அருமையான விளக்கம்.

    பதிலளிநீக்கு
  35. பேச்சுக் கலை ஒரு வரப்பிரசாதம்.
    சொல்வனமை, அவை அறிதல், புறங்கூறாமை இந்த மூன்றையும் கடைபிடித்தால் வாழ்வில் வேறு பேறு நீங்கள் சொல்வது போல் இல்லை.

    பதிலளிநீக்கு
  36. அருமையா சொல்லி இருக்கீங்க சார்.. ஒரு குரலில் இருந்து மற்றொரு குரலுக்கு வள்ளுவன் வைத்த இணைப்பும் நீங்கள் கொடுத்த சொல் ஓட்டமும் அருமை

    பதிலளிநீக்கு
  37. அருமையாய்ச் சொன்னீர்கள் தனபாலன் ஐயா.
    வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  38. அருமையான பகிர்வு. செயல்படுத்தினால் நன்மை தான்.

    பதிலளிநீக்கு
  39. அருமையாச் சொன்னிங்க :)

    தொடர வாழ்த்துகள்...

    பதிலளிநீக்கு
  40. ஆஹா! திருக்குறளை இவ்வளவு அழகாக விளக்க உங்களால்தான் முடியும்!
    அருமை! நன்றி!

    பதிலளிநீக்கு
  41. அவை அஞ்சாமை. மிக நன்றாக எழுதப் பட்டுள்ளது.
    நடக்க முயற்சிப்போம்.
    இனிய வாழ்த்து.
    வேதா. இலங்காதிலகம்.

    பதிலளிநீக்கு
  42. உரையாடல் முறையில் குறள் விளக்கம் அருமை.இந்த முறையில் திருக்குறள் முழுமைக்கும் உரை எழுதி விடுங்கள்.நிச்சயம் சிறப்பாமாக அமையும்
    காலையில் முயன்றேன், நீண்ட நேரம் தங்கள் வலைப்பக்கம் திறக்கவில்லை.

    பதிலளிநீக்கு
  43. வணக்கம்
    தனபால் (அண்ணா)

    அருமையான உரையாடல் கருத்துக்கு ஏற்றால் போல் வள்ளுவரின் நல்ல குறல் வெண்பாக்கள் ஆங்காங்கே மலர் தூவி உங்களின் பதிவுக்கு மகுடம் சூட்டுது வாழ்த்துக்கள் அண்ணா

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன-

    பதிலளிநீக்கு
  44. நல்ல (தேவையான )வழி காட்டல் அருமையான விளக்கங்கள்
    புரிந்தது
    தொடருங்கள்.......
    நன்றி

    பதிலளிநீக்கு
  45. அருமையான பகிர்வு...

    குறளுக்கான விளக்கம் எல்லாரும் படிக்க வேண்டிய ஒன்று...

    அருமை தனபாலன்...

    தொடர்ந்து எழுதுங்கள்... தொடர்கிறோம்...

    பதிலளிநீக்கு

  46. வணக்கம்!

    அவையறிந்தே அஞ்சாமல் பேசும் ஆற்றல்
    அடைந்தவரே கற்றோராய் அகிலம் போற்றும்!
    சுவைஅறிந்தே மொழிகின்ற சொற்கள் தேடிச்
    சொல்பவரே நன்மன்றில் வெற்றி காண்பார்!
    எவையறிந்தே என்னபயன்? எடுத்துக் கூறும்
    இயல்பின்றி இருப்பதனால்? குறளார் சொன்ன
    இவையறிந்தே இப்பதிவைத் தந்த தோழன்
    இன்தனபால் வலையுலகில் வளா்க! வாழ்க!

    கவிஞா் கி. பாரதிதாசன்
    தலைவா்: கம்பன் கழகம் பிரான்சு

    பதிலளிநீக்கு
  47. கலக்கல்...தமிழ்மண மகுடத்தில் இருப்பதற்கு வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  48. அவை பேச்சா? ம் ஹும். முதலில் தவறில்லாமல் எழுதப்பழகவேண்டும் சாரே.!

    பதிலளிநீக்கு
  49. பதிவு அருமை.. நான் முதல் நாளே வந்து படித்து விட்டு தமிழ்மணம், இண்ட்லியில் பரிந்துரை செய்துவிட்டுத்தான் போனேன்.. கொஞ்சம் அவசரமாக போனபடியால்..கருத்துப் பதியாமல் விட்டு விட்டேன்.. மன்னிக்கவும்..
    பதிவு வித்தியாசமாக அமைந்திருக்கு.. இலகுவாக பொருள் உணரக்கூடிய நல்ல வழி

    பதிலளிநீக்கு
  50. இன்று [15.03.13] என் வலைப்பக்கத்திற்கு வருகை தந்து கருத்துத் தெரிவித்ததற்கு நன்றி தனபாலன்.

    பதிலளிநீக்கு
  51. எளிமையான திருக்குறள் விளக்கங்கள் சார் ! இது வரை இவ்வளவு எளிமையாக படித்ததில்லை, மிகவும் பிடித்தது. அதுவும் அந்த குழந்தை படம் ரொம்பவே நன்றாக இருந்தது ! தொடர்ந்து எழுதுங்கள்.....

    பதிலளிநீக்கு
  52. மிக நல்ல அற்புதமான பகிர்வுங்க. பசங்களுக்கு படித்து காண்பிக்க வேண்டும்.

    பதிலளிநீக்கு
  53. நண்பர் தனபாலன் அவர்களுக்கு, வணக்கமும், வாழ்த்துகளும்!

    பாராட்டப்பட வேண்டிய முயற்சி இது. சந்திரகௌரி அவர்கள் கூறியுள்ளது போல் பாடசாலைகளில் பின்பற்ற வேண்டிய வழிமுறை.

    என் ஆயுளுக்குத் திருக்குறள் ஒன்று போதும்.

    'Seven habits of highly effective people', 'Monk who sold is ferrari' போன்ற புத்தகங்களைப் படித்த போதெல்லாம் எனக்கு திருக்குறள் தான் தெரிந்தது.

    Twitter இப்போது தான் பிரபலம். இரண்டாயிரம் வருடங்களுக்கு முன்பே என்னமா ட்வீட்டியிருக்கிறார் வள்ளுவர் - இரண்டே வரிகளில். 'T3 (T-cube) : formula for life' (T3 - Tweets of Tamil poet Thiruvalluvar) என்று நானும் என் பெல்ஜிய நண்பர்களுக்காக எழுதி வருகிறேன். பிறகு பகிர்கிறேன்.

    Great initiative! Please continue writing.

    அன்பன்,
    மாதவன் இளங்கோ.

    பதிலளிநீக்கு
  54. எளிமையான வரிகளில், அருமையான திருக்குறள் விளக்கம் அய்யா. நன்றி

    பதிலளிநீக்கு
  55. இந்தப் பதிவையும் பழைய பதிவுகளையும் (சுட்டிகளுக்கு நன்றி) சேர்த்துப் படித்தேன்.
    பல குறட்பாக்கள் எனக்குப் புதியவை.

    குறள் விளக்கம் வித்தியாசமான நடையில் நன்றாக இருக்கிறது.
    இணைத்திருக்கும் பிற பதிவுகளில் குறளுக்கு அருகிலேயே விளக்கத்தைக் கொடுத்திருக்கலாம்.

    பதிலளிநீக்கு
  56. எளிமையான வழக்கில் திருக்குறள். கவனத்துடன் செய்திருக்கிறீர்கள். உங்களால் நிறைய நாட்கள் கழித்து திருக்குறளைப் படித்தேன். நன்றி!

    பதிலளிநீக்கு
  57. அருமையான கருத்துக்கள்,வழக்கம் போல நல்ல பகிர்வு.

    பதிலளிநீக்கு
  58. எனக்குள்ளும் இந்த கேள்வி இருந்தது இப்போது புரிந்தது அண்ணா பகிர்வுக்கு அன்பு நன்றிகள்

    பதிலளிநீக்கு
  59. சிறந்த கருத்துப் பகிர்வு - நல்ல வழிகாட்டலும் கூட...

    பதிலளிநீக்கு
  60. ஸ்ரீராம் சொல்றாப்போல் இந்தக் குறள்களும் அவற்றின் பொருளும் மனதில் நிற்கவேண்டும். அதன்படி நடக்கவேண்டும். அருமையான விளக்கங்கள்.

    பதிலளிநீக்கு
  61. நல்ல பகிர்வு!

    சொல்வதின் ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு குறளா!?

    ஆச்சரியமாக இருக்கு ....
    குறளின் மதிப்பை அறிந்து.....

    பகிர்வுக்கு மிக்க நன்றி

    பதிலளிநீக்கு
  62. குறளை பலரும் பல விதமாக அணுகி, தங்கள் பாணியில் விளக்கியிருக்கிறார்கள் கவிதையாக, இசைப்பாடலாக, கட்டுரையாக ..உரையாடல் மூலம் விளக்கியிருக்கும் தங்கள் முயற்சி பாராட்டுதலுக்குரியது .. அருமையா சொன்னீங்க

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

நகுதற் பொருட்டன்று நட்டல் மிகுதிக்கண்
மேற்சென்று இடித்தற் பொருட்டு. (குறள் 784)

நட்புச் செய்துகொள்வது நண்பரோடு சிரித்து மகிழ்வதற்காக மட்டும் அல்ல. மிகுதியாகத் தவறு செய்யும்போது, அவரைக் கடிந்து திருத்துவதற்கே ஆகும்.