புரணி - பரணி - தரணி


வணக்கம் நண்பர்களே... (1) விழாவில் பேச அதிகாரியிடம் சொல்லி விட்டு, மேலதிகாரி வெளியூர் சென்று விட்டார்... (2) விழாவில் வேறு மாதிரி நடந்ததை துணை அதிகாரியிடம் விசாரித்தார்... இந்த இரு பகிர்வின் இணைப்புகள் (1) அப்படிச் சொல்லுங்க...! (2) சரியாச் சொன்னீங்க...! (படிப்பதற்கு தலைப்பின் மேல் சொடுக்கவும்) இப்போது "நடந்தது என்ன...?" என்று அறியாமல் அலுவலகத்தில் அதைப் பற்றி என்ன பேசுகிறார்கள்...?


181 : "இந்த துணை அதிகாரி அறத்தைச் சொல்லாமல் பாவமே செய்தாலும், இரு கோடுகள் தத்துவம் தெரியாததால், மனதில் இருக்கும் கஷ்டங்களை வைத்துக் கொண்டு "எனக்குத் தான் ரொம்ப வேலை... என் துயரம் தான் உலகத்தில் மிகப் பெரியது" என்று புலம்பித் திரியுறாரு... ஆனால் நம் மனதில் உள்ள நமது அதிகாரியின் அன்பை பூட்டி வைக்க முடியுமா...? கண் கலங்குதுப்பா... துணை அதிகாரி புறம் பேசாமல் இருந்தால், அதுவே அவருக்கு நல்லது..."
அறங்கூறான் அல்ல செயினும் ஒருவன்
புறங்கூறான் என்றல் இனிது.

182 : "நமது அதிகாரி இல்லாத போது, அவரைப் பற்றிப் பொல்லாங்கு பேசுவது அறவழிக்கு எதிரான காரியங்களைச் செய்வதை விடக் கொடுமை ஆச்சே... இந்த துணை அதிகாரி, நமது அதிகாரியிடம் பொய்யாகச் சிரித்துச் சிரித்துப் பேசுவது பெருங்கேடு..."
அறனழீஇ அல்லவை செய்தலின் தீதே
புறனழீஇப் பொய்த்து நகை.

183 : "...ம்... இப்படி நேரில் ஒரு மாதிரியும், அவர் இல்லாத போது வேறு மாதிரியும் புறங்கூறிப் பொய்மையாக நடந்து உயிர் வாழ்வதை விடச் செத்துப் போகலாம்... அவ்வளவு கோபம் வருதுப்பா... அது தான் அற நூல்கள் சொல்கிற ஆக்கத்தைத் தரும்..."
புறங்கூறிப் பொய்த்துயிர் வாழ்தலின் சாதல்
அறங்கூற்றும் ஆக்கத் தரும்.

184 : "நமது அதிகாரி இருக்கும் போது நேருக்கு நேராகக் குறைகளைக் கடுமையாகச் சொல்ல வேண்டியது தானே...? பின் விளைவுகளை எண்ணிப் பார்க்காமல் ஒருவரைப் பற்றிக் குறை கூறுவது ரொம்பத் தவறு... தைரியம் இல்லாத துணை அதிகாரி..."
கண்நின்று கண்ணறச் சொல்லினும் சொல்லற்க
முன்னின்று பின்நோக்காச் சொல்.

185 : "சின்னப் பிள்ளைத்தனமா இருக்கே... இதில் இருந்தே தெரியலையா...? துணை அதிகாரி அறவழி நிற்பவர் அல்ல என்பதைப் புறங்கூறும் இழிவான செயலால் தெளிவாகப் புரிகிறது..."
அறஞ்சொல்லும் நெஞ்சத்தான் அன்மை புறஞ்சொல்லும்
புன்மையாற் காணப் படும்.

186 : "இவர் என்னென்ன சொன்னாரோ யாருக்கு தெரியும்...? அவர் சொன்னதிலேயே கொடுமையானவைகளை ஒரு நாள், இவர் மேலே திரும்ப வரும் பாரு..."
பிறன்பழி கூறுவான் தன்பழி யுள்ளும்
திறன்தெரிந்து கூறப் படும்.

187 : "மகிழ்ச்சியாகப் பேசி நட்புக் கொள்ளும் நன்மை தெரியாத இவருக்கு, இருக்கிற கொஞ்ச நண்பர்களைக் கூடப் பழித்துப் பேசியே பிரித்து விடுவார்... எதுக்கும் நாம ஜாக்கிரதையாக இருக்கணும்..."
பகச்சொல்லிக் கேளிர்ப் பிரிப்பர் நகச்சொல்லி
நட்பாடல் தேற்றா தவர்.

188 : "ஆமா... எனக்கு ஒரு சந்தேகம்... இப்படி நெருங்கிப் பழகுபவர்கள் கிட்டே குறையைக் கூடப் புறம் பேசித் தூற்றுகிறாரே, பழகாதவர்கள் கிட்டே எப்படி மோசமாக நடந்து கொள்வாரோ....? இதிலே அடுத்த வாரம் கல்யாணம் வேற, பொண்ணு வீட்டார் பாவம்..."
துன்னியார் குற்றமும் தூற்றும் மரபினார்
என்னைகொல் ஏதிலார் மாட்டு.

189 : "பொண்ணு மட்டுமா...? பிறக்கப் போகிற குழந்தைகளும் இப்படித் தானே வளரும்... இப்படி ஒருவர் நேரில் இல்லாதபோது பழிச்சொல் பேசும் இவர்களைப் போல ஆட்களின் பாரத்தைச் சுமப்பதே அறம் என்று, இந்த நிலம் எப்படித் தான் சுமந்து கொண்டிருக்கிறதோ...?"
அறன்நோக்கி ஆற்றுங்கொல் வையம் புறன்நோக்கிப்
புன்சொல் உரைப்பான் பொறை.

190 : "அது சரி...! /// சுட்டும் விரலால் எதிரியை காட்டி குற்றம் கூறுகையில்.... மற்றும் மூன்று விரல்கள் உங்கள் மார்பினை காட்டுதடா... மூடர்களே, பிறர் குற்றத்தை மறந்து முதுகை பாருங்கள்... முதுகினில் ஆயிரம் அழுக்கு அதனைக் கழுவுங்கள்.../// கண்ணதாசன் பாடல் தெரியுமில்லே... யாருக்கும் வெட்கமில்லை - இது படத்தோட பேரு... அடுத்தவங்க குற்றம் கண்டுபிடிப்பதற்கு முன்னாடி, தனது குற்றத்தைப் பார்த்தார்கள் என்றால் இந்தப் புறங்கூறும் பழக்கம் ஓடிப் போயிடும்... வாழ்க்கையும் நிம்மதியாகச் சந்தோசமாக இருக்கும்..."
ஏதிலார் குற்றம்போல் தங்குற்றங் காண்கிற்பின்
தீதுண்டோ மன்னும் உயிர்க்கு.

" அமைதி...அமைதி... "
என்று சொல்லிக் கொண்டே உள்ளே நுழைந்தார் மேலதிகாரி... என்ன பேசியிருப்பார்கள் என்று அவருக்குத் தெரியாததா...? அதிகாரியை அழைத்துப் பேசவேண்டும் என்று நினைத்துக் கொண்டிருந்த போது... /// அழகுக் குட்டிச் செல்லம், உன்னை அள்ளித் தூக்கும் போது, உன் பிஞ்சுவிரல்கள் மோதி, நான் நெஞ்சம் உடைந்து போனேன்... ஆளைக் கடத்திப் போகும், உன் கன்னக்குழியின் சிரிப்பில், விரும்பி மாட்டிக் கொண்டேன், நான் திரும்பிப் போக மாட்டேன்... அம்மு நீ... என் பொம்மு நீ... மம்மு நீ... என் மின்மினி.../// என்று கைபேசி அழைக்க, மேசையில் (மேலே) உள்ள படத்தைப் பார்த்துக் கொண்டே, தன் செல்ல மகளிடமும், மனைவியிடமும் பேசிய மகிழ்ந்த அவருக்கு, மனதில் நினைவுக்கு வந்த குறள் :
குழல்இனிது யாழ்இனிது என்பதம் மக்கள்
மழலைச்சொல் கேளா தவர். (66)

என்ன நண்பர்களே... 'சொல் வன்மையும்' வேண்டும். 'அவை அறிதலும்' வேண்டும். இவைகளை விட முக்கியமாக அறிந்து கொள்ள வேண்டியது 'புறங்கூறாமை' அதிகாரத்தில் (19) உள்ள பத்து குறள்களும்... அதனின் விளக்கங்களைக் குறள்களின் குரலாக மேலே ஓரளவு சொல்லி உள்ளேன்... இரண்டும் சரியாக இருக்கா என்று பாருங்க...

"/// பதவி வரும்போது பணிவு வர வேண்டும்... துணிவும் வரவேண்டும் தோழா... பாதை தவறாமல் பண்பு குறையாமல் பழகி வரவேண்டும் தோழா... அன்பே உன் அன்னை... அறிவே உன் தந்தை... உலகே உன் கோவில்... ஒன்றே உன் வேதம்... மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும்... அது முடிந்த பின்னாலும் பேச்சிருக்கும்... உள்ளம் என்றொரு ஊர் இருக்கும்... அந்த ஊருக்குள் எனக்கொரு பெயர் இருக்கும்... கடமை அது கடமை... கடமை அது கடமை.../// இப்படியெல்லாம் இருக்க முடியுமாப்பா...?"

மனமே... உண்மையும் மூன்றேழுத்து தான்... உள்ளம் அறிய உண்மை பேசுபவன், தவமும் தானமும் செய்பவரைக் காட்டிலும் உயர்ந்தவன் ஆவான்.
மனத்தொடு வாய்மை மொழியின் தவத்தொடு
தானஞ்செய் வாரின் தலை. (295)

"சரி... நேரில் போய்ப் பேசினால்...?"

கடக்க முடியாத அரணும், பிற சிறப்புகளும் இல்லாத மனிதர்கள் என்றாலும், அவர்கள் இருக்கும் இடத்திற்கே சென்று தாக்குவது கடினம்.
சிறைநலனும் சீரும் இலரெனினும் மாந்தர்
உறைநிலத்தோடு ஒட்டல் அரிது. (499)

"சிவப்பு எண்களைப் பார்க்கும் போது 19 (1)(A), 66 A, 295 A, 499 பிரிவு ஞாபகம் வருதே... ஏதேனும் உள்நோக்கம்...? சரி அதை விடு... தலைப்பைப்பற்றி...?"

மனமே... முதல்லே நம் மனதை புறங்கூறாமல் இருக்கணும்...! தலைப்பின் விளக்கம் : சுயசிந்தனையற்றவர்களின் தொடர் ஊக்கத்தினால் ஒருவர் பேசும் தேவையற்ற, உண்மையற்ற பேச்சுக்கள்... இல்லை என்றால் கோபத்தால் வரும் திட்டுக்கள்... பரணில் தங்கி, (பேசுபவரின் மனதில் தங்கி) ஒரு நாள் அவருக்கே திரும்ப வருமென்று பெரியவங்க சொல்வாங்க...

புரணி பேசாமலும் கேட்காமலும் இருந்தால் தரணி பேசும்...

தரணி பேசுவது இருக்கட்டும்... நாம் எவ்வாறு பேச வேண்டும் என்பதை அறிய இங்கே சொடுக்கி தொடர்வதற்கு முன் இந்தப் பதிவைப் பற்றி...

நண்பர்களே... தங்களின் கருத்து என்ன ?

புதிய பதிவுகளை பெறுதல் :


தொடர்புடைய எண்ணங்களின் வண்ணங்கள் சில :


முகநூல் மூலம் கருத்துக்களை பகிர :

கருத்துகள்

 1. நண்பரே பதிவு அருமை !

  இறுதியில் "நச்"

  தொடர வாழ்த்துகள்...

  பதிலளிநீக்கு
 2. புரணி பேசாமலும் கேட்காமலும் இருந்தால் தரணி பேசும்! அருமையான முத்தாய்ப்பு.

  பதிலளிநீக்கு
 3. அண்ணா! என் சின்ன வயசு போட்டோவை பகிர்ந்தமைக்கு நன்றி.
  நான் எம்புட்டு அழகா இருக்கேன்.

  பதிலளிநீக்கு
 4. எளிய முறையில் அருமையான விளக்கம்.
  வாழத்துக்கள் தனபாலன் சார்...
  வாழ்க வளமுடன்
  வேலன்.

  பதிலளிநீக்கு
 5. உலகப் பொதுமறையின்
  முத்தான சில அதிகாரங்களுக்கு
  நீங்கள் கொடுத்த விளக்கம் நன்று நண்பரே...

  புறங்கூறாமை விடுத்து
  அவையறிந்து ஆங்கே
  சொல்வன்மை கைகொண்டால்
  புரவியேறி வாகைசூடி
  பார்வென்ற மன்னவனாய்
  பாரினில் வலம் வரலாம்....

  பதிலளிநீக்கு
 6. அருமை படமும் எழுத்தும்
  கொண்டையில் தாழம்பூ
  குழந்தையின் முகத்தில் சிரிப்பூ
  கூடையில் என்ன பூ?
  பாராட்டுக்கள்

  பதிலளிநீக்கு
 7. குழல் இனிது யாழ் இனிது
  உங்கள் பகிர்வும் மிக இனிது
  குரலை வைத்தே கும்மி எடுகிரிங்க
  வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 8. நல்ல பதிவு புரணி பேசாமல் இருக்கவேண்டும். புறஞ்சொல்லித் திரியவேண்டாம் என்று அவ்வையார் குறிப்பிட்டது உண்மை. நன்றி நண்பரே

  பதிலளிநீக்கு
 9. உங்கள் பதிவை வாசிக்கவே நேரம் ஒதுக்க வேண்டும் சார். அருமை.

  பதிலளிநீக்கு
 10. குறளுடன் பொருத்தமான வரிகளுடன் பகிர்வு ரொம்ப நல்லா இருக்கு வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
 11. அருமையான விளக்கம் கொடுத்துள்ளீர்கள்...நன்று.. (6 )

  பதிலளிநீக்கு
 12. அருமையான விளக்கங்கள்! முடிவும் அருமை! பகிர்விற்கு நன்றி ஐயா!

  பதிலளிநீக்கு
 13. புரணி பேசாமை பற்றி நல்ல பகிர்வு நன்றிங்க !

  பதிலளிநீக்கு
 14. புறம் சொல்லாமல், கேட்காமல் மட்டுமல்ல அதை பேசுபவர்களின் நட்பைத் தொடர்தலும் கூடாது என்பதே என் கருத்து..

  பதிலளிநீக்கு
 15. அன்பின் தனபாலன் - அருமை அருமை - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

  பதிலளிநீக்கு
 16. அருமையான வடிவத்தில் எளிமையான விளக்கத்தில் மிளிர்கிறது...

  பதிலளிநீக்கு
 17. சொல்ல வேண்டிய கருத்தை அழகாகவும் எளிமையாகவும் சொல்வது தங்களது கை வந்த கலை! அருமையான யாவரும் உணர்ந்து செயல்பட தூண்டும் பதிவு!

  பதிலளிநீக்கு
 18. உங்களின் மற்ற திருக்குறள் கருத்துக்களையும் படித்துவிட்டுத்தான் இங்கு வந்துள்ளேன் .நீங்கள் கூறியபடி சரியாக இருக்கிறதா என பார்க்க அருகிலேயே குறளையும் கொடுத்துள்ளீர்கள்.நீங்க சொன்னா சரியாத்தான் இருக்கும் . நன்றி

  பதிலளிநீக்கு
 19. புடவை கட்டியுள்ள சிறுமியின் படம் அழகோ அழகு. மனம் மகிழ்ந்து போனேன். ;)))))

  மனம் கவர்ந்த பதிவு. பாராட்டுக்கள்.

  பதிலளிநீக்கு
 20. அருமையான பதிவு .. அதுவும் கடைசி வரி உண்மை ...

  பதிலளிநீக்கு
 21. நற்கருத்துகள் தாங்கிய பதிவு.. குறட்பாக்களை கையாண்டது சிறப்பு..

  த.ம ன்னு ஏதாவது குறியீடு போடணுமா தலைவரே..

  ஹாஹாஹா..

  பதிலளிநீக்கு
 22. தனபாலன் உங்களுக்கு மட்டுமே இப்படி மேட்டர் எப்படி கிடைக்குது. சூப்பர் நல்லருக்கு.

  பதிலளிநீக்கு
 23. ஏதிலார் குற்றம் போல...மிகவும் பிடித்த குறள்.
  விளக்கங்கள் சிறப்பாக இருக்கின்றன.பல முறை படித்து விட்டேன்.

  நன்றி!

  பதிலளிநீக்கு
 24. அருமை! வாழ்த்துக்கள் தோழரே!

  பதிலளிநீக்கு
 25. அடுத்தவரைப்பற்றி புரணி பேசுபவர்களுக்கு பொதுவாகவே ஒரு கேட்ட பெயர் இருக்கும். ஆகவே அதை தவிர்ப்பதே நல்லது. அருமையான கருத்துக்களை பகிர்ந்தமைக்கு நன்றி நண்பரே

  பதிலளிநீக்கு
 26. ஜம்மா புறங்கூறுதல் பற்றி இவ்வளவு குறளா.....
  அறிந்து கொண்டேன்...
  அருமையான விளக்கத்துடன் கூடிய பதிவு
  நன்றி சார்

  பதிலளிநீக்கு
 27. குறளுடன் கருத்து அருமை.நாம் அடுத்தவர்களை பற்றி புரணி பேசாமல் இருந்தால் தரணி நம்மை புகழ்நது பேசும் தலைப்பும் படமும் அழகாக உள்ளது

  பதிலளிநீக்கு
 28. அருமை.
  தலைப்பிலேயே தாங்கள் சொல்லவந்த கருத்தை அழகாக எடுத்துரைத்துவிட்டீர்கள்..

  நன்று.

  பதிலளிநீக்கு

 29. அன்றாட நிகழ்வுகளில்
  வள்ளுவர் வாழ்கிறார் என்றால்,
  அதற்கு சாட்சி
  தங்கள் பதிவே.

  நிற்க.


  சாம, தான, பேத, தண்டம் என்று சொல்லப்படும் நாலு பிரச்னைகளைத் தீர்ப்பதற்கான வழி முறைகள் இன்றளவில்
  மேனேஜ்மென்ட் டெக்னிக் ஆகவும் செயல்படுவது வெள்ளிமலை.

  பேதம் என்பது நட்பாயிருப்பவரைப் பிரிப்பது. அவரது தோழமை உணர்வைப் பறிப்பது
  அதுவும் அவர்கள் உணர்ந்திலா வண்ணம் செய்வது. அவரிடையே ஒருவரைப்பற்றி மற்றொருவ்ர் மனதில்
  வெறுப்புணர்வை ஓங்கச்செய்வது.

  இதுவெல்லாமே புரணி என்பதில் அடங்கும்.

  அவதூறுப்பேச்சுக்கள், செய்திகள் எல்லாவற்றிற்கும் உதாரணங்கள் வேறு எங்கேயும் தேடவேண்டிய அவசியமே இல்லை.
  இன்றைய தொலைக்காட்சி பெட்டிகளே அதைச் செய்கின்றன.

  நடக்காததை நடந்தது போலவும், நடந்ததை நடக்க இயலாதது போலவும்
  நடக்கவே இல்லை எனவும் நாடகமாடுவது, நடிப்பது எல்லாமே
  இன்று பெரும்பாலான ஊடகங்கள் காட்டும் காட்சிகள்.

  அடிக்கடி எனக்குத் தோன்றும்.
  வள்ளுவரே !!
  தப்பித் தவறியும் இப்ப நீர் பிறந்து விடாதீர் !!

  சுப்பு தாத்தா.

  பதிலளிநீக்கு
 30. அன்பு தனபாலன் குறள் கூறுவதை உங்கள் வழியில் விளக்கி யுள்ளதை ரசித்தேன். வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 31. புறங்கூறாமை பற்றி அழகான பொருத்தமான உரையாடல். வித்தியாசமான முறையில் குரல் விளக்கம்.தொடர்க

  பதிலளிநீக்கு
 32. வலிக்காமல் நல்ல விஷயங்களை சொல்லி விடுகிறீர்கள் தனபாலன் நன்றாக இருந்தது

  பதிலளிநீக்கு
 33. இந்த படத்தை ஏற்கனவே வேறு வித அழகில் கூகுள் கூட்டலில் பகிர்ந்துள்ளேன். நன்றி தனபாலன்.

  பதிலளிநீக்கு
 34. பரணி புரணி, தரணி அருமை! என்ன றூம் போட்டு யோசிப்பீங்களா?
  மிக மிகக் காத்திரமான பதிவு. இனிய நல் வாழ்த்து.
  வேதா. இலங்காதிலகம்.
  http://kovaikkavi.wordpress.com

  பதிலளிநீக்கு
 35. விளக்கங்களுக்கு அருகிலேயே குறளைத் தந்திருப்பது இந்த முறைதானா, முன்னரேயா? எப்படியிருந்தாலும் ஒவ்வொரு பதிவிலும் உங்கள் உழைப்பு தெரிகிறது DD.

  பதிலளிநீக்கு
 36. வணக்கம் தனபாலன் இன்று முதல் உங்களை தொடர்கிறேன் . வலைப்பூ அருமை இனி வருவேன் வாசிப்பேன்

  பதிலளிநீக்கு
 37. வழக்கம் போல் அருமை.

  ரிஷபன் வலைச்சரத்தில் உங்களை பற்றி மிக சரியாக சொல்லியிருக்கார். வாழ்த்துகள்

  பதிலளிநீக்கு
 38. புறம் பேசா மடந்தை இல்லை யென்பேன் தங்களின் பதிவு மிகப்பிரமாதம்

  பதிலளிநீக்கு
 39. எப்படி புரியாதவர்களுக்குக்கூடப் புரிகிறமாதிரி இயல்பாகச் சொல்ல முடிகிறது உங்களுக்கு.அருமை.தொடருங்கள் !

  பதிலளிநீக்கு
 40. புரணி பேசாமலும் கேட்காமலும் இருந்தால் தரணி பேசும்...

  அருமையான கருத்துகளின் பகிர்வுகளுக்குப் பாராட்டுக்கள்..

  பதிலளிநீக்கு
 41. உங்க பதிவுகள் ஒவ்வொன்றும் கணினியில் சேமித்து (மனசிலும்) வைத்துக் கொள்ளுமளவு! கொள்ளும் அளவில் வெல்லும் எம் வாழ்வு. மிக்க மகிழ்வும் நன்றியும் சகோ... சக மனிதர்களுக்காகவும் நேரம் செலவிடும் நன்மனதுக்கு!

  பதிலளிநீக்கு
 42. புறங்கூறி பொய்த்துயிர் / ஏதிலார் குற்றம் போல - மனதில் நீங்கா இடம் பிடித்த குறள்கள்.
  உங்களது உரை நடை பாணி விளக்கம் குறள்களின் பொருளுக்கு மேலும் மெருகூட்டுகிறது.

  பாராட்டுக்கள்!

  பதிலளிநீக்கு
 43. My first visit. So beautiful and nice too.
  இன்று முதல் நானும் உங்க வலைபதிவை தொடர்கிறேன்.நல்ல பதிவு. யாரு அந்த சுட்டி அழகான குட்டி பென்.
  நல்ல அருமையான புரணி பேசாமலும் கேட்காமலும் இருந்தால் தரணி பேசும். அருமை வரிகள். நன்றி.

  பதிலளிநீக்கு
 44. அருமையான பதிவு.

  இலகுவாக புரிந்துகொள்ளக்கூடியதான உங்களுக்கே உரிய எழுத்து நடை.

  பகிர்வுக்கு மிக்க நன்றி!

  பதிலளிநீக்கு
 45. "மனச்சாட்சி முதலில் நம் மனத்தைப் புறங்கூறாமல் இருக்கணும்"
  அழகான உண்மையான முத்தாய்ப்பு.

  பதிலளிநீக்கு
 46. எளிமையான குறள் விளக்கம்! வாழ்விற்கு அவசியமானது! பகிர்வுக்கு நன்றி!

  பதிலளிநீக்கு
 47. குறள்களுக்கு அருமையாகவும் மிகவும் எளிமையாகவும் விளக்கம் கொடுத்துள்ளீர்கள். அதையும் நேருக்கு நேர் உரையாடுவது போல் கொடுத்தது மேலும் சிறப்பாக உள்ளது தனபாலன் ஐயா.

  பதிலளிநீக்கு
 48. மிகவும் அருமையான பதிவு தொடருங்கள் நன்றி சகோ!

  பதிலளிநீக்கு
 49. வள்ளுவரின் குறள்களுக்கு எளிமையாக, அருமையாக விளக்கங்கள் கொடுத்திருக்கிறீர்கள்!
  புடவை அணிந்து சிரிக்கும் சுட்டிப்பெண் ரொம்பவும் அழகு!!

  பதிலளிநீக்கு
 50. புரணி பேசாமலும் கேட்காமலும் இருந்தால் தரணி பேசும். //


  அருமையான கருத்து.

  பதிலளிநீக்கு
 51. வணக்கம்
  தனபால் (அண்ணா)

  நல்ல அருமையான படைப்பு விளக்கத்துக்கு ஏற்ற குறள் வாழ்த்துக்கள்
  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்

  பதிலளிநீக்கு

 52. நீங்கள் எங்கிருந்தபோதும் எனது உளங்கனிந்த பொங்கல் நல் வாழ்த்துக்கள்!! .............

  பதிலளிநீக்கு
 53. 190-வது கருத்து எனக்கு ரொம்ப பிடித்தது.

  எதிர் தரப்பினர் மீது குற்றம் சாட்டி ஏதும் எழுதும் போது அல்லது பேசும் போது, எனது கட்சிக்காரரின் நிலை என்ன ? என்பதை ஒரு முறை நான் மதிப்பிடுவது வழக்கம்.

  பதிலளிநீக்கு
 54. குறளுடன், மிகப் பொருத்தமான சம்பவங்களை இணைத்தது புதுமை; அருமை.

  பதிலளிநீக்கு
 55. நிறைய முறை படித்தேன். மிகவும் அழகாக எழுதுகிறீர்கள் உங்கள் பதிவில் வந்து கமென்ட் எழுதவே இன்றுதான் ஸரியாக வருகிரது. எல்லா விஷயங்களும் அருமை. அன்புடன்

  பதிலளிநீக்கு
 56. இதுவும் பழைய பதிவே. இதுக்குக் கருத்திட்ட நினைவும் இருக்கு. :)

  பதிலளிநீக்கு
 57. புறணி பேசாமல் இருந்தால் தரணி முன்னேறும்.
  சரியா என்று நீங்கள் கேட்டால் என்ன அர்த்தம் அண்ணா? :)
  நீங்கள் சொன்னால் சரிதான்.

  பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

நகுதற் பொருட்டன்று நட்டல் மிகுதிக்கண்
மேற்சென்று இடித்தற் பொருட்டு. (குறள் 784)

நட்புச் செய்துகொள்வது நண்பரோடு சிரித்து மகிழ்வதற்காக மட்டும் அல்ல. மிகுதியாகத் தவறு செய்யும்போது, அவரைக் கடிந்து திருத்துவதற்கே ஆகும்.