🏠 வணக்கம் காப்பகம் நன்றி

தேடல் 🔎புதிய பதிவுகளை பெற ✉பாராட்டுங்க...! பாராட்டப்படுவீங்க...!

நண்பர்களே! என்னுடைய முந்தைய பதிவில் 'மனிதனுக்கு வேண்டிய முதன்மை குணம் என்ன?' என்பதில், பாராட்டும் குணம் தான் முதன்மையாக இருக்க வேண்டும், மற்ற அனைத்து குணங்களும் இதற்குப் பின்னால் தான்! என்று எழுதி இருந்தேன். அதைப் படிக்காதவர்கள் இங்கே செல்லலாம் இனி இதைப் பற்றி விரிவாக...


முதலில் வீட்டிலிருந்தே ஆரம்பிப்போம். எத்தனைப் பேர் தங்களின் மனைவியின் சமையலைப் பாராட்டுகிறீர்கள்? நாம் பாராட்டினாலும் பாராட்ட விட்டாலும் நமக்கு என்னென்ன சாப்பாடு பிடிக்கும் என்பது அவர்களுக்குத் தெரியும். சாப்பாடு மட்டுமா? நம்மைப் பற்றி எல்லா விசயங்களையும் தெரிந்து வைத்துக் கொண்டுள்ளார்கள். அதைப் போல் அவர்களுக்கு என்னென்ன சாப்பாடு பிடிக்கும் என்பது கூட, நம்மில் எத்தனைப் பேருக்குத் தெரியும்? ஆனாலும், மற்றவர்களிடம் நம்மை விட்டுக் கொடுக்காமல் பேசுகிறார்கள். நம் பெயரையும் காப்பாற்றுகிறார்கள்.
நம்ம திருவள்ளுவர் வாழ்க்கைத்துணைநலம் அதிகாரத்தில், குறள் எண் 59-இல் என்ன சொல்கிறார் என்றால்.....
புகழ்புரிந்த இல்இலோர்க்கு இல்லை இகழ்வார்முன்
ஏறுபோல் பீடு நடை.
பொருள் : புகழைப் காப்பாற்ற விரும்பும் மனைவி இல்லாதவருக்கு, இகழ்ச்சியாகப் பேசுபவர் முன்னே ஏறுபோல் நடக்கும் பெருமித நடையும் இல்லை.

எல்லோரும் சொல்கிற மாதிரி 'ஒவ்வொரு மனிதனின் வெற்றிக்குப் பின்னால் ஒரு பெண் இருக்கிறார்.' அவர்கள், 'எனது தாய் அல்லது மனைவி அல்லது சகோதரி அல்லது மகள்'-இப்படி அவரவர் நிலைக்கேற்ப கூறுவார்கள். அது அந்தக் காலம்...! இந்த நவீன உலகில் வெற்றி பெற்றவர்களையே அவர்கள் தேர்ந்தெடுக்கிறார்கள் என்பது! இது வரவேற்கத்தக்கது. பாராட்டப்பட வேண்டிய உண்மை! அடுத்து.....

நீங்கள் பிறரைப் பாராட்ட ஆரம்பித்தால், அவர்கள் இயல்பாகவே மேற்கொண்டு பேசத் தயாராகி விடுவார்கள். உண்மையாகச் சொல்லப் போனால் நீங்கள் ஒருவரைப் பாராட்டியே அவரை எதையும் செய்வதற்கு ஊக்கப்படுத்தி விடலாம். உங்கள் குழந்தையை ஓர் உதாரணமாக எடுத்துக் கொள்ளுங்கள். உங்கள் குழந்தையைப் பாராட்ட ஆரம்பிப்பது அதன் ஆரம்ப வளர்ச்சிக்கு மிக மிக நல்லது மற்றும் பாராட்டு எவ்வளவு முக்கியம் என்பது எல்லாருக்கும் தெரிந்த உண்மை. நமது சொந்த மதிப்பு, அவர்கள் மீது நாம் கொண்டுள்ள அக்கறை, மரியாதையை அது உறுதிப்படுத்தும். 'பசங்க' படத்தின் முக்கியக் கதைக் கருவாக அமைந்ததே இது தான் நண்பர்களே! குழந்தைகள் சிறிது தவறு செய்தால் கூட எல்லோர் முன்னிலையும் சொல்லாமல், தனியாக அழைத்து அறிவுரையோ ஆலோசனையோ கூறுங்கள். அது அவர்களை நூறு முறை பாராட்டுவதற்குச் சமம். இது போல் நம் குடும்பத்தார்களிடம், உறவினர்களிடம், நண்பர்களிடம், முன்பின் தெரியாதவர்களிடம் நடந்து கொண்டால், உங்களின் மதிப்பே தனி நண்பர்களே! பிறகு உங்களுக்கு விரோதிகளே இல்லை. அதே சமயம் பாராட்டுபவர்கள் யாராக இருந்தாலும் (வயது வித்தியாசம் பார்க்காமல், அவர்களைப் பற்றி ஆராயாமல்) பாராட்டை ஏற்றுக் கொள்ள வேண்டும். இது மிகவும் முக்கியம் நண்பர்களே!

ஏன் பாராட்டு ? என்பதை உங்கள் மனதில் ஒரு முறை கேட்டுக் கொள்ளுங்கள். ஏன்?-அறிவு ஆராய்ச்சி போலத் தோன்றும். எனது முந்தையப் பதிவில் மெய்ப் பொருள் காண்பது அறிவு - ஏன்? என்று முடித்திருந்தேன். ஏன்? என்ற கேள்வி நம் மனதிற்குள் கேட்காமல் வாழ்க்கையே இல்லை என்பது எல்லாருக்கும் தெரியும். ஏன்? என்பதற்குப் பிறகு 'என்ன? எப்போது? எங்கே? யாருக்கு?.....' இப்படிப் பல கேள்விகள் உங்கள் மனதில் பிறக்கட்டும். முடிவாக 'எப்படி?' என்று முடியட்டும். ஆனால் ஏன்? என்பதைச் சரியாக உபயோகித்தால் மற்றவர்களையும் வெற்றி பெறச் செய்து நாமும் வெற்றி பெற்று விடலாம்.

இன்னொரு வகை மனிதர்களும் இருக்கிறார்கள். அவர் யாரையும் எதுவும் பாராட்ட மாட்டார். ஏனெனில் அவர் தான் தலைசிறந்தவர் என்று நினைப்பார். மற்றவர்கள் அற்புதமான ஒரு யோசனையைக் கூறினால் கூட, அவர் அதை ஏற்கனவே தான் முயற்சி செய்ததாகக் கூறுவார். முதன்முதலில் அப்போது தான் அவர் அதைக் கேள்விப்பட்டிருப்பார். ஆனால், அவர் தலையை ஆட்டியவாறே அது ஒன்றும் பெரிய விசயமல்ல, நான் அது மாதிரி பலமுறை செய்திருக்கிறேன் என்பது போல நடந்து கொள்வார். அவர்களிடம் தான் நாம் கவனமாக இருக்க வேண்டும். இவர்கள், நாம் சிறிது தவறு செய்து விட்டால் 'தண்டோரா' போடும் ஆசாமிகள்! இவர்களோடு சேர்ந்து 'ஜால்ரா' ஆசாமிகளும் சேர்ந்து விடுவார்கள். இவர்களைத் திருத்த முடியாது. தானாகத் திருந்தினால் உண்டு. நாம் ஒதுங்கிக் கொள்வது நல்லது.
நம்ம திருவள்ளுவர், புகழ் அதிகாரத்தில் குறள் எண் 237-இல் ஒரு கேள்வி கேட்கிறார்.
புகழ்பட வாழாதார் தந்நோவார் தம்மை
இகழ்வாரை நோவது எவன்?
பொருள் : தமக்குப் புகழ் உண்டாகும்படி வாழாதவர்கள், தம்மை நொந்து கொள்ளாமல், தம்மை இகழ்கின்ற உலகத்தாரை நொந்து கொள்வது எதற்காகவோ?

வேறு விதமாக யோசிப்போம். அவர்கள் ஏன் உங்கள் பாராட்டை ஏற்றுக் கொள்ள வேண்டும்? சிந்தியுங்கள்..... உங்களின் பாராட்டுக்கள் அவர்களை உற்சாகப்படுத்துகிறதா? அல்லது ஊக்கப்படுத்துகிறதா? உங்களின் பாராட்டு வார்த்தைகள் உங்களின் செயல்களை நிரூபிக்கிறதா? நீங்கள் பாராட்டுவது எதுவானாலும் அதை எளிதில் மற்றவர்கள் பிரதி எடுக்கும் படி இருக்க வேண்டும். அப்படிச் செய்தால் உங்களின் பாராட்டுக்கள் உண்மையானவை, உங்களது சிறந்த பாராட்டு வார்த்தைகளை அவர்களும் பின்பற்றுவார்கள்.

ஒவ்வொரு வார்த்தையும் உண்மையாக இருக்க வேண்டும். நினைவு இருக்கட்டும். ஒன்றுக்கு இருமுறை புகழ்ந்தால் 'ஐஸ் வைக்கிறான்' 'காக்கா பிடிக்கிறான்' 'எதையோ எதிர் பார்க்கிறான்' 'ஜால்ரா' - இப்படி உங்களைப் பற்றித் தவறாக எடுத்துக் கொள்ள வாய்ப்புண்டு. ஒரு வேளை அதீதமாகப் புகழ்ந்தால் நீங்கள் போலித்தனமான ஆசாமி என்று அடையாளம் கண்டு கொள்வார்கள். பாராட்டு வார்த்தைகள் உங்கள் வாயிலிருந்து வராமல், உங்களின் இதயத்திலிருந்து வந்தால்..... நீங்கள் வெற்றி பெற்று விட்டீர்கள். அவர்களையும் வெற்றி பெறுவதற்கு நீங்கள் ஏணியாகி விட்டீர்கள்!

எனது → முந்தைய ← பதிவில் சொன்ன கதை : அந்தக் காலத்தில் குருவின் பாட சாலையில் வகுப்புகள் முடியும் தறுவாயில், அவரது மாணவர்களின் பெற்றோர்கள் காத்திருந்தார்கள். வகுப்பு முடிந்தவுடன், ஒரு மாணவனின் தாய், "இது எங்கள் தோட்டத்தில் விளைந்த முதல் இரண்டு மாம்பழம், இதுவரை யாரும் உண்ணவில்லை, தாங்கள் தான் முதலில் சாப்பிட வேண்டும் என்று கொண்டு வந்தேன்." என்று மாம்பழத்தை அன்போடு குருவிடம் கொடுத்து உண்ணச் சொன்னார். குருவும் சீடர்களை அழைத்து அந்த மாம்பழத்தைக் கத்தியால் வெட்டி கொடுக்கச் சொன்னார். செக்கச் செவலென்று இருந்த பழத்தைப் பார்த்து சீடர்களுக்கு எச்சில் ஊறியது. ஆனால், குரு ஒரு பழத்தைச் சாப்பிட்டு முடித்தவுடன், அந்தத் தாயிடம், "பழம் மிகவும் நன்றாக உள்ளது, நன்றி" என்று சந்தோசமாக தெரிவித்தார். ஆனால், அந்தத் தாய் தன் தோட்டத்து மாம்பழத்தை விரும்பி சாப்பிட்ட குருவைப் பார்த்து, "இன்னொரு பழமும் தாங்களே சாப்பிடுங்கள்" என்று கூறியவுடன் இரண்டாவது பழத்தையும் சாப்பிட்டார். அந்தத் தாய் மிக்க மகிழ்ச்சியோடு, மன நிறைவோடு வீட்டுக்குச் சென்றார். பிறகு சீடர்கள் குருவைப் பார்த்து, "குருவே, ஒரு பழத்தைச் சாப்பிட்டு முடிந்தவுடன், இன்னொரு பழத்தை பிறகு சாப்பிட்டுக் கொள்கிறேன் என்று அந்தத் தாயிடம் சொல்லிருக்கலாமே? இரண்டு மாம்பழத்தையும் நீங்களே சாப்பிட்டு விட்டீர்களே?" என்று கேட்டனர். அதற்குக் குரு, "சீடர்களே, அந்தத் தட்டில் மீதம் உள்ள சிறிய துண்டுகளைச் சாப்பிடுங்கள்" என்று கூறினார். அதைச் சாப்பிட்ட சீடர்கள் புளிப்பு தாங்க முடியாமல் துப்பினார்கள். குரு சிரித்துக் கொண்டே, " சீடர்களே, இதைத் தான் நீங்கள் அந்தத் தாயின் முன்பு செய்திருப்பீர்கள். தாயின் மனது எவ்வளவு கஷ்டப்பட்டிருக்கும். அதனால் தான் உங்களுக்கு நான் தரவில்லை. நான் முதல் துண்டு சாப்பிடும் போதே எனக்குத் தெரியும். ஆனால் எனது சிறிய முக மாற்றமே அவர்களுக்குச் சங்கடத்தை ஏற்படுத்தி விடும்." என்று கூறினார்.

இந்தக் கதை மூலம் நாம் அறிந்து கொள்வது என்ன? அந்தத் தாய் சந்தோசப்பட, குரு முகத்தைக் கூடச் சுழிக்காமல் சிரித்துக் கொண்டே சாப்பிட்டு விட்டு, நன்றாக உள்ளது என்று பாராட்டினாரே, அந்தப் பாராட்டும் குணம் தான் மனிதனுக்கு முதன்மையாக இருக்க வேண்டும். நம்ம திருவள்ளுவர் விருந்தோம்பல் அதிகாரத்தில் நம் வீட்டிற்கு வரும் விருந்தினர்களை எவ்வாறு கவனிப்பது என்பதைப் பற்றிப் பத்து குறள்களில் சொல்லிருப்பார். இதில் விருந்தினர்கள் என்பதை நான், நாம் பாராட்டும் மனிதர்களாக எடுத்துக் கொண்டுள்ளேன். குறள் எண் 90-இல்
மோப்பக் குழையும் அனிச்சம் முகந்திரிந்து
நோக்கக் குழையும் விருந்து.
பொருள் : அனிச்ச மலர் மோந்தவுடனே வாடி விடும். அது போல் நம் முகம் மாறுபட்டு நோக்கிய உடனேயே விருந்தினரும் (நாம் பாராட்டும் மனிதர்கள்) உள்ளம் வாடி விடும்.

அன்புக்கும் நம்பிக்கைக்கும் பாராட்டு தான் அடிப்படை. அது எப்படி என்பதைப் பெற்றோர்கள் மூலம் பார்ப்போம். முதலில் அப்பா. நிறையப் பேர்கள் அவர்களின் முதல் பாராட்டுக்காக ஏங்குகிறார்கள். அவர்களிடமும் அல்லது நம்மிடமும் 'புரிந்து கொள்தலில்' சிறிது கருத்து வேறுபாடோ அல்லது தவறுகளோ இருக்கலாம். அவற்றைப் பற்றிப் பிறகு அலசுவோம் நண்பர்களே! அப்பாவின் அறிவுரைகளும், ஆலோசனைகளும் சிறிது கண்டிப்புடன் கலந்த பாராட்டுகளாக இருக்கலாம். ஆனால் அவை எல்லாமே நம்முடைய முன்னேற்றத்திற்காகத் தான் இருக்கும். நமக்கு நம்பிக்கை வர வேண்டும், தன்னம்பிக்கை வளர வேண்டும் என்பதிற்காக இருக்கும். "அவர்கள் நம்மை ஜெயிக்க வைத்துப் பாராட்ட வேண்டும், தோற்றால் தட்டிக் கொடுக்க வேண்டும்" என்பது என் கருத்து நண்பர்களே! இதை எழுதும் போது '7G ரெயின்போ காலனி' படத்தில் ஒரு காட்சி என் மனதில் வந்து போனது. அது :

வேலையில்லாமலிருந்த அந்தப் படத்தின் கதாநாயகனுக்கு ஒரு பிரபல நிறுவனத்தில் வேலை கிடைத்து விடும். அந்த நிறுவனத்தின் நியமன உத்தரவை தன் அப்பாவிடம் சென்று கொடுப்பார். அவர் அதை எடுத்துப் படித்து விட்டு, "நல்லா படிக்கச் சொன்னேன். கேட்டியா? ...ம்... இப்ப மெக்கானிக் வேலை" என்று அலுத்துக் கொண்டு அந்த நியமன உத்தரவைத் தனது மேசையில் தூக்கிப் போட்டு விடுவார். அன்று இரவு தன் மகன் தூங்கி விட்டான் என்று நினைத்துக் கொண்டு மனைவியிடம், "எவ்வளவோ தடவை பையனைத் திட்டி இருக்கேன். ஆனா, இன்னைக்கி காலையிலே நம்ம பையன் Appointment Order கொண்டு வந்து நீட்டினான். 'பக்'குன்னு இருந்திச்சி! இவன் கிட்ட ஏதோ இருக்குடி. எனக்குத் தான் தெரியாமப் போச்சி!" என்று கண்ணீர் வடிக்கக் கூறுவார். அவர் மனைவி, "இவ்வளவு பிரியம் வச்சிரிக்கீறீங்க... ஏன் திட்டுனீங்க... அவனைப் பாராட்டி இருக்கலாமில்லே" என்று சொல்லும் போது, அவர், "அவன் நல்லா படிக்கணும், நல்ல வேலை கிடைக்கணும்-ன்னு தான் திட்டினேன். இப்ப அவனுக்கு வேலை கிடைச்ச உடனே, பாராட்டி சந்தோசப்பட்டா 'அப்பா பணத்திற்காகத் தான் பிரியமா இருக்கிறார்-ன்னு நினைச்சிக்கிவான்' அதனால் தான் அப்போது நான் திட்டினேன். போடி-போ, அது எவ்வளவு பெரிய நிறுவனம் தெரியுமா? என் பையன் இப்ப பெரிய மெக்கானிக்" என்று பெருமையோடு கூறுவார். இது தாங்க அப்பா! இதைத் தூங்காமல் கேட்கும் கதாநாயகன் அழுவதும், காலையில் அப்பாவும் மகனும் கண்களாலே பாராட்டையும் வாழ்த்தையும் பேசிக்கொள்வதாக அமைந்த காட்சிகளும் அருமையாக இருக்கும்.

அடுத்ததாக அம்மா! அம்மாவின் அறிவுரைகளும், ஆலோசனைகளும் அன்போடு தான் இருக்கும். அம்மா என்றால் அன்பு தானே நண்பர்களே! சின்ன சின்னப் பாராட்டுக்கள் மூலம் நம்மை உயர்வடைய, உற்சாகப் படுத்த தன்னையே அர்ப்பணிக்கிறார்கள். நாம் தவறு செய்தாலும், அதைத் திருத்துவதற்குப் பொறுமையாக, விவரமாக, நம் மனது சிறிது கூட சங்கடப்படாதவாறு மாற்றி விடுவார்கள். அதனால், அன்பிற்கும் நம்பிக்கைக்கும் பாராட்டுதான் அடிப்படை. கண்ணதாசன் அவர்கள் எழுத்தில், T.M.S. குரலில், M.S.V. இசையில், வேட்டைக்காரன் (M.G.R.) படத்தில் ஒரு பாடல் :
"மாபெரும் சபையினில் நீ நடந்தால்-உனக்கு மாலைகள் விழ வேண்டும்.
ஒரு மாசு குறையாத மன்னவன் இவனென்று போற்றிப் புகழ வேண்டும்.
உன்னை அறிந்தால் நீ உன்னை அறிந்தால்... உலகத்தில் போராடலாம்.
உயர்ந்தாலும் தாழ்ந்தாலும் தலை வணங்காமல் நீ வாழலாம்." -
இதற்குத் தான் பெற்றோர்கள் பாடுபடுகிறார்கள்.

நம்ம திருவள்ளுவர், இனியவை கூறல் அதிகாரத்தில் குறள் எண் 92-இல் :
அகன்அமர்ந்து ஈதலின் நன்றே முகன்அமர்ந்து
இன்சொலன் ஆகப் பெறின்.
பொருள் : முகமலர்ச்சியோடு இனிதாகச் சொல்லும் இயல்பும் பெற்றவனானால், அது, அவன் மனமகிழ்ச்சியோடு கொடுக்கும் பொருளை விட நல்லதாகும். சரியா நண்பர்களே?

நல்லவற்றைப் பாராட்டுவதற்குத் தயங்காதீர்கள்! உங்கள் மனதிற்குப் பாராட்டத் தோன்றிய உடனே, பாராட்டி விடுவது மிகவும் நல்லது. பாராட்ட வார்த்தைகள் உடனே தெரியவில்லையா? சிறு புன்னகை போதும். நமது சிறு புன்னகை கூடப் பாராட்டு தான். இந்த உலகில் அதிகம் பாராட்டித்தான் நாம் வாழ வேண்டும். ஏனெனில், ஒருவரை நீங்கள் உண்மையாகவே பாராட்டும்போது உங்களது உண்மையான குணமும் தன்மையும் தானாக வெளிப்பட்டு உங்களின் நட்பு இறுகுகிறது. நட்பு வட்டாரம் பெருகுகிறது. அது தான் நமக்குத் தேவை.....! இல்லையா நண்பர்களே?

சரியான சமயத்தில் பாராட்டுங்கள் - ஆனால், உண்மையிலேயே மனதாரப் பாராட்டுங்கள்!


இவ்வளவு நேரம் பொறுமையாகப் படித்தமைக்கு எனது மனமார்ந்த பாராட்டுக்கள்! நன்றி...!

அனைவருக்கும் இனிய உழவர் திருநாள் நல்வாழ்த்துக்கள்...! இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்...!

சரி... நமது எண்ணங்களை மேம்படுத்த என்ன செய்ய வேண்டும்...? அறிய இங்கே சொடுக்கித் தொடரவும்... அதற்கு முன் இந்தப் பதிவைப் பற்றித் தங்களின் கருத்து என்ன...?

புதிய பதிவுகளை பெறுதல் :


தொடர்புடைய எண்ணங்களின் வண்ணங்கள் சில :


முகநூல் மூலம் கருத்துக்களை பகிர :

கருத்துகள்

 1. நடக்கும் நல்லவைகளுக்கு யார் காரணமாக இருந்தாலும்
  அவர்களை பாராட்ட தயங்கக் கூடாது.
  பாராட்டுதல் நம் மீது ஒரு அபரிமிதமான நல எண்ணத்தை உருவாக்கும்.
  எதிரியாயிருந்தாலும் அவர் நல்லது செய்தால் மனம் திறந்து பாராட்டினால்
  மனம் நெகிழ்ந்துவிடுவார்.

  அருமையானதொரு கட்டுரை நண்பரே.

  இனிய பொங்கல் வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 2. அன்பின் தனபாலன் - அருமையான அறிவுரை - ஆலோசனை - பதிவு நன்று. பாராட்ட வேண்டும் அத்வும் எப்படி - உதட்டின் நுனியில் இருந்து வரும் சொற்களால் அல்ல - இதயத்தின் ஆழத்தில் இருந்து வரும் உணர்ச்சி பூர்வமான சொற்களால். குறள், திரைப்படம், திரைப்படப்பாடல்கள் என பலவற்றில் இருந்து எடுத்துக்காட்டு - தூள் கெள்ப்பிட்டீங்க - வாழ்க வளமுடன் - நட்புடன் சீனா

  பதிலளிநீக்கு
 3. பாராட்டுதல்களைப் பற்றிய பதிவு அருமை.. !!
  ஒவ்வொரு வரியிலும் ஒரு உண்மை நிலையோடு, மனதில் பதியும் வண்ணம் எழுதி,ஒரு சில மேற்கோள்களையும் காட்டி எழுதிய விதத்தில் எங்களின் பாராட்டுகளையும் பெறுகிறீர்கள்..

  பகிர்வுக்கு நன்றி திரு தனபாலன் அவர்களே...!!!

  பதிலளிநீக்கு
 4. நல்ல விஷயங்களை பாராட்டாமல் இருக்கக்கூடாது என்பதினை அழகான பதிவின் மூலம் விளக்கி இருக்கீங்க. அருமை.

  அம்மா,அப்பாவின் பாரட்டுகளை பற்றி நீங்க குறிப்பிட்டு இருப்பது சிறப்பாக இருக்கு.

  பதிலளிநீக்கு
 5. குறள்வழி, அறவழி நின்று, பல பயனுள்ள பதிவுகளை வழங்கி வரும் சகபதிவரும், நண்பருமான உங்களுக்கு எமது பாராட்டுகளும், வாழ்த்துகளும்.!!

  மேலும், மேலும் இதுபோல பல படைப்புகளை எழுதி தமிழுக்கும், தமிழர்களுக்கும் சேவை செய்திட, அன்புடன் வாழ்த்தும் - உங்கள் தங்கம்பழனி.

  பதிலளிநீக்கு
 6. பாராட்டின் முக்கியத்தை
  விளக்கும் உங்கள் பதிவினை
  பாராட்ட வார்த்தைகளே இல்லை
  பாராட்டுக்கள்

  பதிலளிநீக்கு
 7. நல்ல பதிவு! தனபால்!
  திண்டுக் கல்லைபோன்றே கருத்துக்கள் மனதில் குண்டுக் கல்லாக
  பதிந்து விட்டது
  எடுத்துக் காட்டுள் அனத்தும்
  அருமை!

  புலவர் சா இராமாநுசம்

  பதிலளிநீக்கு
 8. பயனுள்ள பதிவு, வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 9. Arumai . Paaraattu vaayilirunthu varaamal ithayathilirunthu vara vendum. Arputhamaana karuthu. Tirukkural, Ponmozhigal, etc.. enru athanai paguthigalum asaththal Sir! Vaalthukkal!

  Tamilmanam vote 5.

  பதிலளிநீக்கு
 10. நல்ல கட்டுரை. உதாரணங்கள் எடுத்துக்காட்டுக்கள் அத்தனையும் நன்றாகப் பதியும் படிக் கொட்டியிருக்கின்றீர்கள். வாழ்த்துகள்

  பதிலளிநீக்கு
 11. நல்லாயிருக்கு அதே நேரத்தில் எழுத்துகளுக்கு நிறம் மாற்றி கொடுத்திருப்பது வேறு பதிவுகளின் தொடர்பு கொடுத்திருப்பது கொஞ்சம் படிப்பதற்கு எரிச்சலாய் இருக்கிறது கண்களுக்கு எளிமையாய் இல்லாமல் இருப்பது போல உணர்வை தருகிறது..

  பதிவின் சாரம்சம் நன்றாகவே இருக்கிறது

  வாழ்த்துகள்

  பதிலளிநீக்கு
 12. பாராட்டுவதற்கு ஒரு நல்ல மனம் வேண்டும். தாராள மனம் வேண்டும்.
  அது உங்களிடம் நிறைய இருக்கிறது. வாழ்த்துகள் தனபாலன்.

  பதிலளிநீக்கு
 13. நல்ல பதிவு. நான் எல்லோரையும் பாராட்டுவேன் ஆனால் பாராட்டுகளை எப்பொழுதும் எதிர் பார்பதில்லை. பொங்கல் வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 14. இன்றைய வலைச்சரத்தில் உங்கள் பதிவு பற்றிப் பேசும் பாக்கியம் எனக்குக் கிடைத்தது.முடிந்தால் பாருங்கள்.

  பதிலளிநீக்கு
 15. பாராட்டுதல் குறித்த தங்கள் விரிவான தெளிவானபதிவு
  அருமையிலும் அருமை
  எப்படிப் பாராட்டுவதேன்றே தெரியவில்லை
  அருமையான அனைவருக்கும் தேவையான கருத்தை
  அழகிய பதிவாக்கித் தந்தமைக்கு நன்றி
  தொடர வாழ்த்துக்கள்
  தங்களுக்கும் த்ங்கள் குடும்பத்தாருக்கும்
  இனிய பொங்கல் திரு நாள் நல் வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 16. ஒரு சின்ன விஷயம் தான் பாராட்டுதல் என்பது ஆனா அதுக்கும் மனசு வேணும்.

  பதிலளிநீக்கு
 17. அருமையா சொல்லிருக்கீங்க சார்..
  பாராட்டுகள்.
  உங்கள் சிந்தனைகளும் எழுத்துகளும்
  கருத்தைக் கவருது. தொடர்ந்து எழுதவும்.
  பொங்கல் வாழ்த்துகள்.
  அன்புடன்,
  பி.ஆர்.ஜெ.

  பதிலளிநீக்கு
 18. மனிதத்தின்
  மகத்துவத்தை
  மணியாய்
  மகிமையாய் சொன்ன
  பதிவு நண்பரே.

  பதிலளிநீக்கு
 19. மனம் திறந்து பாராட்டினால்
  மனம் நெகிழ்ந்துவிடுவார்.
  அருமை.

  பதிலளிநீக்கு
 20. அருமையான கட்டுரை.

  பாராட்டுங்க! பாராட்டப்படுவீங்க!
  நல்லா சொன்னீர்கள்.

  பாராட்டினால் தான் பாராட்டு கிடைக்கும்.
  தகுந்த நேரத்தில் பாராட்ட வேண்டும். எல்லா கருத்துக்களையும் அழகாய் சொல்லி இருக்கிறீர்கள்.
  பயனுள்ள பதிவு.


  நன்றி.
  வாழ்க வளமுடன்.

  பதிலளிநீக்கு
 21. பாராட்டும் குணம் தான் மனிதனுக்கு முதன்மையான குணம் !
  மிக அழகாக தெளிவாக சொல்லி இருக்கிறீர்கள் சகோதரரே !

  பதிலளிநீக்கு
 22. பதிவில் சொல்லப்பட்ட விஷயம் யதார்தம்.

  நீளத்தை மட்டும் சற்றே குறைத்திருக்கலாமே..

  பகிர்விற்கு நன்றிங்க..

  பதிலளிநீக்கு
 23. மென்மையான வன்மையாக பதியப்பட்ட கருத்துப் பதிவு. பாராட்டுக்கள் தொடருங்கள் உங்களின் அசத்தல் பதிவுகளை!

  பதிலளிநீக்கு
 24. பாராட்டுங்க பாராட்டபடுவீங்க

  உண்மையே

  பதிலளிநீக்கு
 25. அ அ அ அ அ எழுத்தளவை மாற்ற

  பதிவுகளை உங்கள் மெயிலில் பெற

  Delivered by FeedBurner
  sooper

  பதிலளிநீக்கு
 26. தங்கள் பதிவொன்றை வலைச்சரத்தில் பகிர்ந்துள்ளேன் . நேரமிருப்பின் வலைச்சரம் வருமாறு அன்போடு அழைக்கிறேன் .

  பதிலளிநீக்கு
 27. சிறப்பாக அமைதிருக்கிறது கட்டுரை. எழுதி இருக்கும் விதம் வெகு அருமை.

  பதிலளிநீக்கு
 28. தலைப்பு நச்னு இருக்கு...

  தங்கள் கருத்தை அழகா சொல்லிருக்கீங்க,பாராட்டுக்கள் சகோ!!

  பதிலளிநீக்கு
 29. உங்களது இந்த இடுகையையும், நீங்கல் லிங்க் கொடுத்த இதற்கு முதைய இடுகையையும் வாசித்தோம்.! மிக அருமையான பதிவுகள்! கண்டிப்பாக பாராட்டு என்பது ஒருவரைத் தட்டிக் கொடுத்து அவரது தன்னம்பிக்கையை உயர்த்தி வளர்த்து விடலாம்! தாங்கள் கூறியிருந்த்த அனைத்துக் கருத்துக்களும் மிகவும் வலைமையானவை! ஆழமானவை! அதுவும் உலகப் பொதுமறையை மேற்கோள் காட்டி காட்டி, அது சத்தியமாகவே தமிழ் வேதம்தான் என்பதையும் காட்டி வருகின்றீர்க்ள்! உங்களை எப்படிப் பாராட்டுவது என்று தெரியவில்லை, வார்த்தைகள் கிடைக்காததால்!!!!! அகராதியில் உள்ள பாராட்டு என்பதற்குறிய எல்லா வார்த்தைகளையும் எடுத்த்க் கொள்ளுங்கள்!!

  வாழ்த்துக்கள்!

  துளசிதரன், கீதா

  பதிலளிநீக்கு
 30. It is a great and timely writing Mr.Dhanabalan sir.I was looking forward for your speech at the Bloggers meet,but missed.Your writings with appropriate quotes are wonderfull.Appreciation and that too whole heartly is certainly is required.The entire show of Bloggers meet was great success.

  பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

நகுதற் பொருட்டன்று நட்டல் மிகுதிக்கண்
மேற்சென்று இடித்தற் பொருட்டு. (குறள் 784)

நட்புச் செய்துகொள்வது நண்பரோடு சிரித்து மகிழ்வதற்காக மட்டும் அல்ல. மிகுதியாகத் தவறு செய்யும்போது, அவரைக் கடிந்து திருத்துவதற்கே ஆகும்.