🏠 வணக்கம் காப்பகம் நன்றி

தேடல் 🔎



புதிய பதிவுகளை பெற ✉



திரு...

அனைவருக்கும் வணக்கம்... இன்றைக்குத் திருக்குறளிலுள்ள "திரு" எனும் சொல்லை எடுத்துக்கொள்கிறோம்... மொத்தம் 11 அதிகாரங்களில் 11 குறள்கள்... இதன் கட்டமைப்பும் ஏழு (7) ஆகும்...
குறள்களின் குரல் சுருக்கமாகத் தொடர்கிறது...


168. அழுக்காறு எனஒரு பாவி திருச்செற்றுத் தீயுழி உய்த்து விடும் : // அங்கே ஒருவனுக்கு மட்டும் செல்வம் குவிந்து கொண்டிருக்கிறதே; இங்கே ஒருவனுக்கு, எக்கேள்விற்கும் பதில் சொல்லும் ஆற்றல் பெற்ற கல்வியறிவு இருக்கிறதே; புகழுக்கு மேல் புகழ் வருகிறதே... ஐயகோ...! // இவை போன்றவற்றைக் கண்டு மனம் புழுங்கி, அவர்களைப் போல நன்கு முயன்று பெறத் தனக்கு ஆற்றல் இல்லாமையால் தோன்றுவது என்ன...? இதனால், சினம், பேராசை, களவு, பொய், பகை, சூது, சூழ்ச்சி, நிறைவின்மை, குறுக்கு வழிகள் போன்ற அனைத்துக் கீழ்மையான எண்ணங்களைக் கிளைத்தெழச் செய்து, எல்லாக் கேடுகளையும் செய்யத் தூண்டும்... மேலும் அவர்களுடைய செயல்களுக்குக் குற்றம் குறைகளைக் கற்பித்தும், களங்கப்படுத்தவும், அவர்களது முன்னேற்றத்தைத் தடை செய்து, அவர்களை முற்றிலுமாக அழிப்பதிலுமே தன் நேரத்தையும் ஆற்றலையும் சிலர் செலவழிப்பார்கள்... ஆனால், தன்னை மேம்படுத்திக்கொள்ளவேண்டும் என்ற எண்ணம் தோன்றுவதில்லை....! இவ்வாறு கொடுஞ்செயல்கள் செய்பவனை "பாவி" என்று இழித்துக் கூறும் வழக்கம் உள்ளது... அந்தப்பாவிக்குப் பெயர் தான் அழுக்காறு, அதாவது பொறாமை எனும் ஒப்பற்ற பாவி, ஒருவனுடைய செல்வத்தையும் கெடுத்துத் தீய வழியில் அவனைச் செலுத்திவிடும்...

179. அறன்அறிந்து வெஃகா அறிவுடையார்ச் சேரும் திறன்அறிந்து ஆங்கே திரு : இப்படிப்பட்ட அழுக்காறு தேவையா...? வேண்டாம்... எவனுக்கும் எப்படி எவ்வகையில் செல்வம் வந்தால் என்ன...? அதை ஏன் நாம் பின்பற்ற வேண்டும்...? அவற்றைக் கவர நினைக்கும் எண்ணங்கள் கூட வேண்டாம்... இத்தகைய அறவுணர்வு உடையாரை தேடி, நிலையான செல்வம் சரியான காலத்தில் சென்றடைந்து கொண்டேயிருக்கும்...

215. ஊருணி நீர்நிறைந்து அற்றே உலகுஅவாம் பேர்அறி வாளன் திரு : இந்த அறவுணர்வினால், பொதுநலம் விரும்பும் ஒப்புரவை நன்கு அறிய முடியும்... பல்லுயிர்க்கும் பொருந்திய பெருங்கொடையே ஒப்புரவு எனப்படும்... அதனால் உலக உயிர்களின் நலம் விரும்பி ஒப்புரவைப் பெரிதும் அறிந்தவர்களிடம் சேரும் செல்வம், ஊரார் அனைவருக்கும் பயன்படும் ஊருணி நீர் நிறைந்து உள்ளது போன்றது...

374. இருவேறு உலகத்து இயற்கை திருவேறு தெள்ளியர் ஆதலும் வேறு : நேர் முரணான அறமும்-மறமும், அருளும்-பொருளும் எதிர்நிலைகள்... ஆனால் நேர் முரணானவை அல்லாத செல்வமும் அறிவும் இரு வேறு நிலைகள்...! செல்வம்-அறிவு என்ற இருவேறுலகுமும் பல்வேறுபட்ட ஒற்றுமை வேற்றுமைகளிடையே இயங்கிவரும் இயல்புகள் கொண்டன... இவற்றிற்கிடையே ஏற்றத் தாழ்வுகள் பல உண்டு... செல்வப் பெருக்குடையவர் அறிவாற்றல் கொண்டவராகவும் இருக்கின்றனர்... தெளிந்த அறிவினர் செல்வம் படைக்கவும் முடியும்... அதனால் செல்வம் உடையராதல் வேறு; தெளிந்த அறிவினை உடையராதல் வேறு...! ஊழ் என்கிற இயற்கை ஒருவனது செயல்களுக்கும் எண்ணங்களுக்கும் ஒத்தும் வரலாம், அல்லது ஒவ்வாதும் போகலாம்... அதாவது பொருளும் காலமும், சூழலும், செயற்படும் தகுதியும், மற்றவையும், ஒருவன் செயல்களுக்கு ஒத்தும் வரலாம்; ஒவ்வாமலும் போகலாம்... இந்த ஊழின் இயக்கம் பற்றி அறிந்தவர்கள் உலகில் யாருமில்லை...! மனிதரின் எல்லாக் கணிப்பிற்கும் கட்டுப்பாட்டிற்கும் அப்பாற்பட்டு, இயற்கை செயல்பட்டுக் கொண்டிருக்கிறது... ஆனால் மக்களின் அறியாமையை வைத்து, கடவுளையே மந்திரத்தால் கட்டுப்படுத்துவதாக எண்ணும் கயவர்கள் "கல்லா" கட்டுவதுண்டு...!

408. நல்லார்கண் பட்ட வறுமையின் இன்னாதே கல்லார்கண் பட்ட திரு : செல்வத்தின் திறனறிந்த பேரறிவாளன் இடத்தில் இருக்கும் செல்வம், அதை ஆக்க வழியில் பயன்படுத்துவதால், அச்செல்வம் ஊருணியில் நீர் நிறைந்தாற்போல் பலர்க்கும் நன்மை விளைவிக்கும்... வறுமை வருகிறது; தன்னிடம் கல்விச்செல்வம் இருக்கிறது... அதனால் வறுமையிலும் செம்மையராய், சுடச்சுடரும் பொன்போல் வறுமைப் பிணி வருத்தினாலும், நற்குண நற்செயல்களின் சிறிதும் நீங்காமல் ஒளியுடன் விளங்குவான்... சரி, கல்லாத ஒருவனிடம் செல்வம் குவிந்துவிட்டால்,..? கிடைத்த செல்வத்தைப் பயனற்றதாக ஆக்கி. அதை அழிவு சக்தியாக மாற்றிவிடுவான்... இதை நம் நாட்டின் அரசியலில் காண்கிறோம்...! அதனால் நல்லவர்களுக்கு வரும் வறுமையைக் காட்டிலும், கல்லாதவனிடமுள்ள செல்வம் மிகப்பெரிய கேடு விளைவிக்கும்...

482. பருவத்தோடு ஒட்ட ஒழுகல் திருவினைத் தீராமை ஆர்க்கும் கயிறு : கொட்டும் மழைக் காலம் - உப்பு விக்கப் போனேன்... காற்றடிக்கும் நேரம் - மாவு விக்கப் போனேன்... தப்புக் கணக்கைப் போட்டுத் தவிக்கக் கூடாது தங்கங்களே - நாளை தலைவர்களே...! 'ஆடிப்பட்டம் தேடி விதை', 'பருவத்தே பயிர் செய்' ஆகிய வேளாண்மை பழமொழிகள் நினைக்க வேண்டும்...! மாறிவரும் காலச் சூழ்நிலைகளுக்கேற்ப பொருள் செய்யும் முயற்சிகளை மேற்கொண்டால், இருக்கும் செல்வம் தம்மை விட்டு நீங்கிச் செல்லாமல் தங்கும்...

519. வினைக்கண் வினைஉடையான் கேண்மை வேறுஆக நினைப்பானை நீங்கும் திரு : ஒருவன் ஒரு செயலுக்கான பொறுப்பை ஏற்றவுடன், தான் செய்யும் வேலையிலேயே குறியாய் இருப்பான்... தன்னால் முடிந்த அளவைவிட மிகையாகப் பணிகளை மேற்கொண்டு, மிகையான நேரத்தைச் செய்யும் செயலுக்காகச் செலவழிப்பான்... மேலும் தான் மேற்கொண்ட செயலுக்காக உரிமையோடு பல செயல்களைச் செய்வார்... இப்படிப்பட்டவரைக் கெடுக்கவே சுற்றியுள்ள சிலர் (அப்-"பாவிகள்") இருப்பதுண்டு... "பிறக்கும்போதே மூளை வலிமை அதிகம்" என எண்ணும் காரணத்தினால், கூடுதலாக அந்த செயலை கொடுத்த தலைமையின் மனதையும் கெடுத்துவிடுவது உண்டு... அப்படிப்பட்ட தலைமைக்கு, பொறுப்புடன் கருமமே கண்ணாகச் செயல்படுபவனின் தொடர்பை வேறுவிதமாகக் கருதுகின்றவனை விட்டுச் செல்வங்கள் நீங்கும்...!

568. இனத்துஆற்றி எண்ணாத வேந்தன் சினத்துஆற்றிச் சீறின் சிறுகும் திரு : சினங்கொண்டு ஒரு பித்தலாட்ட காரியத்தைச் செய்து அதில் தோல்வியுற்றால், அமைச்சர்களையும், புல்லறிவு கொண்ட தொண்டர்களையும், சீறிவிழும் தலைமை உண்டு... கலந்து ஆலோசிப்பதில் நாட்டமும் அதற்கேற்ப அறிவும் இருப்பதில்லை; வெறும் சினத்தினால் செயல் முடிக்கமுடியும் என்று எண்ணிச் சீறி விழுந்தால் என்னவாகும்...? ஆட்சிச் செல்வம் சுருங்கி, நம் நாட்டின் இவறல் தலைமையாக மாறி நாட்டை கெடுக்க ஆரம்பிக்கும்...!

616. முயற்சி திருவினை ஆக்கும் முயற்றுஇன்மை இன்மை புகுத்தி விடும் : செல்வத்தினை உண்டாக்க அயராத தளராத முயற்சி செய்ய வேண்டும்... அம்முயற்சியானது, செயல்திறன் அறிந்து குற்றமின்றி வரும் செல்வமானது அறத்தையும் கொடுக்கும், இன்பத்தையும் கொடுக்கும்... இல்லையெனில் ஒருவனை வறுமையுள் செலுத்திவிடும்...!

920. இருமனப் பெண்டிரும் கள்ளும் கவறும் திருநீக்கப் பட்டார் தொடர்பு : செல்வத்தை இழக்கப்போகிறவர்களின் நண்பர்கள் : கள்ளுண்டல், சூதாடல், இவற்றுடன் தேடி வந்தாரைத் தம்வயப்படுத்தும் ஆற்றல் மிக்க பொதுமகளிர்; மனத்தில் பொருளாசை + அதனால் முகத்தில் மகிழ்ச்சி, மனம் வேறு செயல் வேறு = இருமனப் பெண்டிர்...

1070. நன்றுஅறி வாரின் கயவர் திருவுடையார் நெஞ்சத்து அவலம் இலர் : கண்டதே காட்சி, கொண்டதே கோலம் என கீழ்மைக்குணமுடையோர் எதைப்பற்றியும் தம் நெஞ்சில் கவலைப்பட்டுக்கொள்வதில்லை... எடுத்துக்காட்டாக நமது அரசியல்வாதிகள், அவர்களின் வணிகர், சேவை மனமில்லாத கல்வியாளர் மற்றும் மருத்துவர், இன்ன பிறர் எனத் தொழில் வேறுபாடின்றி கயமைத்தனத்தால் பொதுப்பணத்தைச் சூறையாடி செல்வம் சேர்த்து, நெஞ்சத்து அவலமின்றித் திரிகின்றவர்கள் எக்காலத்திலும் உள்ளனர்... ஆனால் எப்பொழுதும் நல்லது நடக்கவேண்டும் என்று எண்ணுபவர்கள், தனது செயற்பாடுகளால் ஒழுக்கம், நற்பெயர், குடிச்சிறப்பு போன்றவை குன்றிவிடக்கூடாதே என்பது பற்றிச் சிந்தித்துக் கொண்டிருப்பார்களாதலால் அவர்கள் மனதில் கவலை குடியிருந்து உறுத்திக்கொண்டிருக்கும்.... ஆனால் பழி, தீவினை போன்ற எவை பற்றியும் மனதிலே போட்டுக்கொள்ளாமல் அலைகிற கயவர்கள் எந்தவித பயமும் இல்லாமல் செயல்படுவர்... எனவே அவர்கள் 'கொடுத்து வைத்தவர்கள்'; தன்மானம், சுயமரியாதை இல்லாத, செல்வவளம் குறையாத, பேறு பெற்றவர்கள்...!

திருக்குறள் கணக்கியல் பயிற்சி ஒன்று (1) பதிவிலிருந்து ஒரு கேள்வி :

// குறளில் வரும் ஒரு சொல்லுக்குச் சரியான பொருளை அறிந்து கொள்ள ஐயம் வருகிறது; அதே சொல் முப்பால் முழுவதும் உள்ளதைத் தேடித் தெரிந்து கொள்வது; அதன்பின் அனைத்து குறள்களிலும் ஒரே பொருளில் ஆளப்பட்டுள்ளதா? இல்லையா? என்பதைப் புரிந்து கொள்வது... தொல்லாசிரியர்கள் முதல் இன்றைய உரையாசிரியர்கள் வரை, நாம் தேடிய சொல்லுக்கு வெவ்வேறு பொருள் கொண்டு உரைகள் இருந்தால், நம் ஐயங்களின் எண்ணிக்கை கூடும்...! இதற்குத் தீர்வு என்ன...? எழுத்துக்களின் கணக்கியல் மட்டுமே...! எடுத்துக்காட்டாக : திரு எனும் சொல்லை எடுத்துக்கொள்வோம்... திரு என்ற சொல் குறளில் செல்வம், மேன்மை, சிறப்பு, பொலிவு, அழகு, தெய்வத்தன்மை, செல்வக் கடவுள், கண்டாரால் விரும்பப்படும் தன்மை, போன்ற பலபொருள்களில் உரையாசிரியர்கள் எடுத்துக் கொள்கிறார்கள்... அதிகாரம்: 92. வரைவின்மகளிர் - 920. இருமனப் பெண்டிரும் கள்ளும் கவறும் திருநீக்கப் பட்டார் தொடர்பு - இக்குறளில் வரும் திரு என்பதற்கு, மணக்குடவர், காலிங்கர், பரிமேலழகர், மு.வரதராசனார் ஆகிய பலரும் செல்வக் கடவுளாக, அதாவது திருமகளாகப் பொருள் கொள்கின்றனர்... இல்லை திரு என்றால் செல்வம் என்று சொல்பவர்கள் பலரும் உண்டு... எது சரி...? //
அதற்குப் பதில் : இந்தப்பதிவு... நன்றி...

புதிய பதிவுகளை பெறுதல் :


தொடர்புடைய எண்ணங்களின் வண்ணங்கள் சில :


முகநூல் மூலம் கருத்துக்களை பகிர :

கருத்துகள்

  1. கிழைத்து -
    எழுத்துப் பிழை போலத் தெரிகின்றது..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மாற்றி விட்டேன் ஐயா... நன்றி... // மாமரம் இப்போது நன்றாகக் கிளைக்கத் தொடங்கியுள்ளது // என்பது போல, மனதின் எண்ணங்கள்...

      நீக்கு
  2. //இருவேறு உலகத்து இயற்கை திருவேறு தெள்ளியர் ஆதலும் வேறு//

    எனக்கும் பிடித்தமான குறள்.

    திரு என்பதின் பொருள் நானும் அறிந்து கொண்டேன் ஜி

    பதிலளிநீக்கு
  3. நல்ல விளக்கங்கள். அனைத்தையும் ரசித்தேன்.

    பதிலளிநீக்கு
  4. கடவுளை மந்திரத்தால் கட்டி வைக்க / கட்டுப்படுத்த  யாரும் முயல்வதில்லை.  கடவுள் எனும் அந்த அறியாத மாபெரும் சக்தியை போற்றித் துதிக்கிறார்கள் என்று சொல்லலாம்.  தீய சக்திகளை வேண்டுமானால் கட்டி வைக்கிறேன் என்பார்கள்.  பேய், ஆவி, பில்லி சூனியம் போல...

    பதிலளிநீக்கு
  5. கல்லாதவர்களில்டம் உள்ள செல்வம் கேடு விளைவிக்கும் என்பது முற்றிலும் உண்மையல்ல.  ஓரளவுக்கு சொல்லலாம்.  கல்வியறிவு இல்லா விடினும் அவர்களிடமும் ஏதோ ஒரு திறமையினால்தான் செல்வம் சேர்ந்திருக்கிறது.  கேடு விளைவிப்பது என்பது அவரவர் மன மாண்பைப் பொறுத்தது!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இன்மையின் இன்னாதது யாதெனின் இன்மையின் இன்மையே இன்னா தது" என்று செல்லும் வள்ளுவம், வறுமை நல்லாரிடமோ மற்றவரிடமோ யாரிடம் தங்கினாலும் துன்பம் தருவது உறுதி... நல்லார் வறுமையைவிட கல்லாதலன் பெற்ற செல்வம் துன்பம் தருவது என்று சொன்னதற்குக் காரணம், கல்வியறிவின் மேன்மையும் பயனையும், கல்லாமையின் குற்றத்தையும் வலியுறுத்தத்தான்... கற்றவன் வறுமையுற்றால் அவன் பெற்ற கல்வியறிவு அவனுக்குத் துணைநின்று உதவும்; வறுமையிலும் கற்றவர் தீயவழியில் செல்லாமல் காத்து அவனை வறுமைத் துன்பத்திலிருந்து மீண்டுவரவும் வழி வகுக்கும்...

      ஆனால் செல்வம் பெற்ற கல்லாதவன் படிப்பறிவு இல்லாததால் தான், அடைந்த செல்வத்தை நல்லவிதமாக மேலாண்மை செய்யத் தவறிவிடுகிறான்... இதனால் தானும் கெட்டுப் பிறரையும் துன்பத்துக்குள் ஆளாக்குகிறான்... ஆனால் நல்ல நட்பு இருந்தால் இவை மாறும்... கற்றவர்/கல்லாதவர் என்ற முரண் கொண்டு, கற்ற நல்லவர்/கல்லாத தீயவர் என்று பழைய உரையாளர்களின் தவறான புரிதல் கொண்ட விளக்கங்களும் உள்ளது...

      கணக்கு குறிப்பு : இக்குறள் கல்லாமை அதிகாரத்தில் வருகிறது... ஒவ்வொரு குறளின் அதிகாரமும் இங்கே அதிக முக்கியத்துவம் பெறுகிறது... முக்கியமாகப் பதிவின் ஆரம்பத்தில் சொன்ன கணக்கியல்... !

      நீக்கு
  6. இருமனப் பெண்டிர்!  நல்ல சொல்.  நல்ல விளக்கம்.

    பதிலளிநீக்கு
  7. திரு என்கிற சொல்லுக்கு இடத்துக்குத் தக்கவாறு பல பொருள் வரும் என்பதே சரி.  ஸ்ரீ, திரு என்பதற்கு லட்சுமி தேவியைச் சொல்வார்கள்.  வெற்றியின் குறியாக சொல்வார்கள்.  மரியாதையைக் குறிக்க சொல்வார்கள். 

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. திருக்குறளில் வரும் அனைத்து கடவுள்களின் பற்றிய கணக்கும் உண்டு...

      நீக்கு
  8. திரு என்பதற்கான ஒவ்வொரு பொருளும் அதன் இடத்துக்கு ஏற்ப வரும்....ஒவ்வொரு குறளின் விளக்கமும் அருமை. ரசித்து வாசித்தேன் டிடி.

    எனக்குச் சில கேள்விகள். கல்லாதவனிடம் சேரும் செல்வம் கேடு விளைவிக்கும் என்று....இந்த இடத்தில் கல்லாதவன் என்றால் கல்வி அறிவு முக்கியம் என்று ஐயன் சொல்வதாகக் கொண்டாலும். கல்வி அறிவு பெற்றவர்கள் எல்லாரும் செல்வத்தை ஒழுங்காகக் கையாள்கிறார்களா? படிச்சவன் தானே ஊழல் செய்கிறான். எனவே இங்கு ஐயன் கல்வி அறிவைச் சொல்லியிருக்கமாட்டார் என்பதே என் புரிதல். கல்லாதவன் என்றால் கல்வி அறிவு இல்லை பள்ளி செல்லாமல் நல்ல அறிவு உள்ளவர்களும் உண்டுதானே...கல்லாதவன் என்பது இங்கு நல்ல மனிதனாக இருக்கக் கற்காதவன் என்று கொள்ளலாம் என்றே தோன்றுகிறது. கல்வி அறிவு வேறு கற்றல் வேறு.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அருமையான கருத்து... நன்றி...

      நல்லார், கல்லார் என்பன முரண் கொண்ட சொற்கள் அல்ல... ஒருவேளை முரண் சொற்கள் என்று கொண்டால் கல்வி பெற்றோர் அனைவரையும் நல்லார் என்றும் கல்லாதவர் எல்லோரும் தீயவர் என எண்ண வைக்கும்... இதனால் தான் உரையாசிரியர்கள் எண்ணங்கள் மாறுபடுகிறது...

      கல்லார் கணக்கியல் செய்தால், இதன் உண்மைப் பொருளை அறியலாம்... இதுவே திருக்குறள் கணக்கியல் செய்வதின் சிறப்பு...

      நீக்கு
  9. இருமனப் பெண்டிர் ஆஹா ரொம்பவே மேன்மையான சொல்! தாத்தா தாத்தாதான். இங்கு திரு என்பது செல்வம் என்றோ திருமகள் என்றோ பொருள் வருவதாகத் தெரியவில்லை, மேன்மையை சிறப்பை மரியாதையை இழப்பர் என்றே பொருள் என்பதாக எனக்குப் புரிகிறது. இவர்களிடம் செல்வம் இருந்தாலும் அது சிறப்பாகப் பேசப்படாது ஏனென்றால் மென்மை மரியாதையை இழந்தவர்கள்....(யதார்த்த காலகட்டத்தைச் சொல்லவில்லை டிடி, பொதுவாக ஒரு சமூகம் எப்படி இருக்க வேண்டும் எனப்தற்கான பொருளாக...)

    கீதா

    பதிலளிநீக்கு
  10. திரு விளக்கம் அருமை. ஒருவன் செல்வத்தோடும், ஒருவன் கல்வியோடும் இருக்கிறான். இரண்டும் முன் வினை காரணம் என்று சொல்லி விடுகிறார்கள்.
    திரு என்பதின் பொருள் வெவ்வேறு அர்த்தம் கொடுத்தாலும் அடுத்தவன் நன்றாக இருப்பதை பார்த்து பொறாமை , மற்றும் கீழ் குணங்கள் இருந்தால் திரு அவனை விட்டு விலகிவிடும் என்பது உண்மை.

    பதிலளிநீக்கு
  11. வணக்கம் சகோதரரே

    பதிவு அருமை. திரு என்ற சொல்லில் வரும் குறள்களுக்கெல்லாம் நல்ல விளக்கமாக தந்துள்ளீர்கள். . ஒவ்வொன்றையும் படித்து ரசித்தேன். உங்கள் அருமையான, அபாரமான சிந்தனைகளுக்கு பாராட்டுக்கள்.

    நடுவில் நான் வலைப்பூக்களுக்கு வராமல் விட்டுப் போன பதிவுகளுக்கு தாமதமாக கருத்து தெரிவித்து வருகிறேன். எனவே தாமதத்திற்கு மன்னித்துக் கொள்ளுங்கள். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

நகுதற் பொருட்டன்று நட்டல் மிகுதிக்கண்
மேற்சென்று இடித்தற் பொருட்டு. (குறள் 784)

நட்புச் செய்துகொள்வது நண்பரோடு சிரித்து மகிழ்வதற்காக மட்டும் அல்ல. மிகுதியாகத் தவறு செய்யும்போது, அவரைக் கடிந்து திருத்துவதற்கே ஆகும்.