🏠 வணக்கம் காப்பகம் நன்றி

தேடல் 🔎புதிய பதிவுகளை பெற ✉வெங்கோலனும் மூடர் கூடமும்...

அனைவருக்கும் வணக்கம்... // சட்டம் போட்டு திருடுற கூட்டம் திருடிக் கொண்டே இருக்குது, அதைத் திட்டம் போட்டுத் தருகிற கூட்டம் வருடிக் கொண்டே இருக்குது... திருந்தாதே தலைவா திருத்தாதே... கெடுக்கிற காலம் நெருங்குவதால் இனி வாழ்கிற அவசியம் இருக்காது... இருக்கிறதெல்லாம் ஏலத்திற்குப் போனா ⚊ சிரிக்கிற வேலையும் இருக்காது, அழுகிற வேலையும் இருக்காது... // முந்தைய பகுதியை வாசிக்காதவர்களுக்காக இது போல் உள்ள வெங்கோலனின் தலைமையைத் துதித்து நாட்டையே கெடுத்துக் கொண்டிருக்கும் சில மனித உயிர்களை ஐயன் என்னவாக குறிப்பிடுகிறார்...? ஐயனே அரசியல் களத்தில்...!


பொருட்பால் - இயல்: 5.அரசியல் - அதிகாரம்: 57.வெருவந்தசெய்யாமை (566-570)

566. கடுஞ்சொல்லன் கண்ணிலன் ஆயின் நெடுஞ்செல்வம் நீடின்றி ஆங்கே கெடும் : மக்களிடம் வெறுக்கும் சொல்லைக் கூறுபவனாய், இரக்கமே இல்லாதவனாக ஆகி விட்டால், நாட்டில் நீண்டகாலமாகக் காக்கப்பட்டு வரும் மரபுகள், புகழ் பெற்ற மற்றும் புகழ் அடையப் போகும் பல மேம்பாடுகள் தொடர இயலாமல் உடனே அழிந்து போகும்...

567. கடுமொழியும் கையிகந்த தண்டமும் வேந்தன் அடுமுரண் தேய்க்கும் அரம் : அடிக்கடி மக்களைக் கொல்லும் கடுஞ்சட்டம் இயற்றியும், அதற்கேற்றவாறு சட்டக் கூறுகளைத் திருத்தியும் நாட்டை சீரழிப்பதையே முக்கிய நோக்கமாகக் கொண்டால், உமது அன்பை மறந்த குடிமக்கள் மட்டுமில்லாது, உனக்குத் துணையாக இருப்பவர்களும் அச்சமுற்று, கடுஞ்சட்டங்கள் மீது சினம் கொண்டு உமது அரசிற்கே பகையாகி விடுவர்... இவையே உனக்கு எதிராக அமைந்து, வலிமையைக் குன்றச் செய்து, இரும்பைத் தேய்த்து அறுக்கும் அரம் போலச் சிறிது சிறிதாக அழித்து விடும்...

568. இனத்தாற்றி எண்ணாத வேந்தன் சினத்தாற்றிச் சீறிற் சிறுகும் திரு : பொய், ஏமாற்று, கடத்தல், கொலை, கொள்ளை, பிறன்மனை நோக்குபவர்கள், பெண்வழிச்சேறல் என அனைத்து தீயவற்றைச் செய்தவர்களா உமது அமைச்சர்கள்...? அதனால் தான் அவர்களுடன் கூட கலந்து ஆலோசிப்பதில் நாட்டமின்றி, அவர்களே அஞ்சத்தக்க வகையில் சினத்தினால் செயல் முடிக்கமுடியும் என்றெண்ணிச் சீறி ஆட்சி நடத்துகிறாய்... இருக்கின்ற வளங்கள், வளரவேண்டிய அரசின் வளங்கள் எல்லாம் சிறுகச் சிறுக குறைந்து மறைந்து விடும்...

569. செருவந்த போழ்திற் சிறைசெய்யா வேந்தன் வெருவந்து வெய்து கெடும் : செருக்குத் தோன்றும்போது குடிகளைப் பாதுகாப்பான இடத்தில் வைத்துக் காப்பாற்ற வேண்டிய கடமையைத் தவறவிட்டு, தன்னினத்தொடு அரணிற் புகுந்து மக்களைக் காட்டிக் கொடுத்து மாற்றானிடம் தப்பிக்க நினைப்பவனே... நீர் சடுதியிலே கெடுவாய் வெங்கோலனே... குடிமக்களை அச்சம் வரச் செய்தமையால், உனக்கே அச்சம் வர நேரும், கெட்டழியவும் காலம் வரும்...

570. கல்லார்ப் பிணிக்கும் கடுங்கோல் அதுவல்லது இல்லை நிலக்குப் பொறை : குடிகளை அன்பு வழியாலும் அறவழியாலும் அறிவுவழியாலுந்தான் ஆள வேண்டும்... இனத்தோடு எண்ணாமல் அற்ப மத செருக்கோடு செயலாற்றுகின்ற உமது ஆட்சி முறையில், உன்னைத் துதி பாடும் அறிவில்லாத கீழ்மக்களின் கூட்டமே சேரும்... அந்தக் கூட்டம் மூடர்களும் மூர்க்கர்களும் நிறைந்ததாக இருக்கும்... இவர்களோடு அரசியலில் அதிகாரம் செலுத்தி நாட்டைப் பாழ் படுத்துவதால் எந்தவிதமான வளமும் நாடு எய்த முடியாது... இப்பெருஞ்சுமையைத் தாங்க இயலுமா உமது ஆட்சியமைத்துள்ள பூமி...? வெங்கோலனே... நீயும் உமது மூடர் கூடமும் இந்த பூமிக்கு பாரமே...

© நான் சொல்லும் ரகசியம் அ.மருதகாசி G.ராமநாதன் T.M.சௌந்தரராஜன் @ 1959 ⟫

பொல்லாத உலகத்திலே நல்லதுக்கு காலமில்லே, போலி எல்லாம் போடுதண்ணே கொண்டாட்டம், இந்த போக்கு மாற செலுத்த வேணும் கண்ணோட்டம்... கள்ளர்களும் கயவர்களும் கண்ணியவான் போர்வையிலே, கொள்ளையிட்டு பணத்தை சேர்த்து குவிப்பதா...? நல்ல மனம் உள்ளவங்க - சில்லறைகள் பார்வையிலே - நாணயம் இல்லாதவராய் தவிப்பதா...? வெள்ளை சொள்ளையாய் இருந்தால்தான் மதிப்பதா...? - அது இல்லையின்னா காலில் போட்டு மிதிப்பதா...? - இனி இந்த நிலை மாறிடவே இன்பநிலை நேர்ந்திடவே ஒன்றுபட்டு உறுதியோடு உழைக்கணும்... உள்ளபடி வயிறெரியும் உதடு மட்டும் பழம் சொரியும் - தில்லுமுல்லு திருட்டு காளைக்கூட்டமே, பல்ல பல்லக் காட்டிகிட்டு பாடிகார்டா சுத்திக்கிட்டு, குல்லாப் போட்டு செய்யுது ஆர்ப்பாட்டமே... மொள்ளமாரி கும்பல் குணம் மாறணும், அதன் மூளையிலே சொரணை கொஞ்சம் ஏறிடணும், அது நல்லபடி நடந்திடணும், நம்ப நிலை உயர்ந்திடணும், நல்லவங்க இதுக்கு நாளும் உழைக்கணும்...

புதிய பதிவுகளை பெறுதல் :


தொடர்புடைய எண்ணங்களின் வண்ணங்கள் சில :


முகநூல் மூலம் கருத்துக்களை பகிர :

கருத்துகள்

 1. நிகழ்கால அரசியல் நிலையை சொல்லும் குறளும், பாடலும் அருமை.

  பதிலளிநீக்கு
 2. வெங்கோலனையும் அவனது மூடர் கூட்டத்தையும் அழிக்கவல்ல.... உபாயத்தை ஐயன் சொல்லாமலா இருந்திருப்பார்..!! பட்டுக்கோட்டை சொல்லிருக்கும்போது....

  பதிலளிநீக்கு
 3. நல்லவங்க நாளும் அதற்கு உழைக்கணும்..முத்தாய்ப்பான வரி அண்ணா, நம்ம என்ன செய்ய முடியும் என்று வாழாதிருத்தல் கேடு!!
  இன்றையச் சூழலை ஐயனைக் கொண்டு உங்கள் பாணியில் சாடுவது அருமை அண்ணா. மருதகாசி பாடல் வேறு!! 59இல் இப்படித்தான் இருந்ததா!!

  பதிலளிநீக்கு

 4. ஐயன் குறள் விளக்கம் மிக அருமை.
  மருதகாசி அவர்கள் பாடல் கேட்டேன். படத்திற்கு எழுத பட்ட பாடலாக இருந்தாலும் எக்காலத்திற்கும் மிகவும் பொருத்தமான பாடல்.
  நாட்டை ஆள்பவர்கள் நல்லவர்களாக இருக்கனும், மக்களுக்காக நாளும் உழைக்கணும்

  நல்லாட்சி மலரட்டும், நாடு நலம்பெறட்டும்.

  பதிலளிநீக்கு
 5. வணக்கம் சகோதரரே

  அருமையான பதிவு. வழக்கம் போல் குறளும், அதற்குண்டான விளக்கங்களும் சிறப்பு. நல்லாட்சி அமைய நல்லதொரு பாடல்... பாடலின் வரிகளை இன்றைக்கு ஆட்சி அமைப்பவர்கள் நன்றாக புரிந்து கொள்ள வேண்டும். நல்லாட்சி மலரட்டும். குறள் வழி நல்லதொரு மாற்றங்கள் நிகழட்டும். பகிர்வுக்கு மிக்க நன்றி.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
 6. /மூளையிலே சொரணை கொஞ்சம் ஏறிடனும்//

  மூளை இருந்தால்தானே சொரணை இருக்கும்

  பதிலளிநீக்கு
 7. மருதகாசி பாடல் அருமை. நிதர்சனத்தை வெளிப்படுத்தும் வரிகள்.

  பதிலளிநீக்கு
 8. பல நாள் கழித்து வருகிறேன். புதிய மெருகு நன்றாக இருக்கிறது.
  செருவந்த போழ்திற்.. குறள் இப்பொழுது தான் படிக்கிறேன். வள்ளுவரின் தொலை நோக்கு வியக்க வைக்கிற்து. 2000 வருடங்களுக்கு முன்பே இப்படி ஒரு எண்ணமா! இதை லேசாகப் புரட்டிப் போட்டால் நம் ஊர் அரசியலோ?

  பதிலளிநீக்கு
 9. எழுத்துரு ரகசியம் தெரிந்து கொள்ள ஆவலாக இருக்கிறது.

  பதிலளிநீக்கு
 10. அருமையான பதிவு! ஓவியம் வழக்கம்போல கருத்துச் செறிவுடன் சிறப்பாக இருக்கிறது. மருதகாசியின் பாடல் இணைப்பும் அழகு!

  பதிலளிநீக்கு
 11. ஆமாம் திருக்குறளை எழுதியவர் கம்பரா இளங்கோவா என்பது அனைவருக்கும் தெரியுமா? அரசியல் குறித்த அய்யனின் ஞானம் அளப்பரியது. ஐந்து குறள்களும் அருமையான தேர்வு.

  பதிலளிநீக்கு
 12. அரசியலும் அறிவுரையும் திருக்குறள் மூலம் பிரமாதம் டிடி சகோ.. !!!

  பதிலளிநீக்கு
 13. தேர்தல் காலத்தில் தேவையான பதிவு. சொன்னது அனைத்தும் உண்மை தான். எக்காலத்துக்கும் பொருந்தும் குறள்களை அளித்த வள்ளுவனை வியக்கிறேன். சிறப்பு.

  பதிலளிநீக்கு 14. நல்லாட்சியமைய சிறந்த படைப்பு. வழமைபோல் பாடல் இணைப்பு சிறப்பு

  பதிலளிநீக்கு
 15. இன்றைய கால கட்டத்தில் அரசியல் என்பது வெறுமனே பணத்தின் உபாய மார்க்கமாகவே உள்ளது. திருக்குறள் கூறும் மக்கள் அரசியல் தற்போதைய ஆட்சியாளர்களிடம் இருப்பதே இல்லை. ஒன்று செய்ய வேண்டும். அரசியல்வாதிகளை எப்படியாவது இந்தக் குறள்களைக் காணச் செய்ய வேண்டும். விரைவில் வரும் கடுந்தோல்வியை உணருவார்களா யாமறியேன்...!

  எனது பதிவு:
  என் அழகான நாட்கள்...!
  https://inaiyaidhazh.blogspot.com/2021/04/en-azhagana-naatkal.html

  பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

நகுதற் பொருட்டன்று நட்டல் மிகுதிக்கண்
மேற்சென்று இடித்தற் பொருட்டு. (குறள் 784)

நட்புச் செய்துகொள்வது நண்பரோடு சிரித்து மகிழ்வதற்காக மட்டும் அல்ல. மிகுதியாகத் தவறு செய்யும்போது, அவரைக் கடிந்து திருத்துவதற்கே ஆகும்.