மறதி மரணத்திற்குச் சமம்...

பட்டாம்பூச்சி பிடித்த நாட்கள் மறக்க முடியவில்லை... பாலும் பழமும் பழைய பாடல் மறக்க முடியவில்லை... முதல் முதலா வைத்த மீசை மறக்க முடியவில்லை... என் முகம் தொலைந்து போன நாளை மறக்க முடியவில்லை... மறக்க முடியவில்லை... மறக்க முடியவில்லை... ⟪ © ஜாதி மல்லி ✍ வைரமுத்து ♫ மரகத மணி 🎤 S.P.பாலசுப்ரமணியம், K.S.சித்ரா @ 1993 ⟫
மனதோடு பேசி பதிவு போடுவதையே மறந்து விட்டாயா...? அதற்குத்தான் பாட்டோடு வந்தேன்...! சரி சரி, கேட்ட கேள்விகளுக்கு நீயே பதில் சொல்...! அதை மூளையில் சேமிப்பதா இல்லை மூலையில் ஒதுக்குவதா என்று நான் தான் முடிவு செய்யவேண்டும்... ஆரம்பி...
எதையும் நினைவில் வைத்துக் கொள்வது மூளையின் வேலை; ஆனால் மறந்து விடுவது மூளையின் வேலையில்லை... அது மனமாகிய உனது வேலை...! சூழ்நிலைக்கும் சூழ்ச்சிக்கும் அடிமையாகாமல், உயர்வுக்குக் காரணமான அவமானத்தையும் ஏளனத்தையும் மறக்காமல் இருக்கலாம்... வெற்றிக்கு வித்திட்ட தோல்வியையும் மறக்காமல் இருக்கலாம்... இன்னும் பலவற்றுக்குக் காரணமானவர்களுடன் பழியுணர்ச்சி அற்று, நமக்கு பற்பல அனுபவங்களையும் மனப்பக்குவம் வளர வைத்தவர்களையும், மறக்காமல் நன்றியுடன் இருந்தால், மறதி ஏற்படும் வயதிலும் மகிழ்ச்சியாக இருக்கலாம்...! சுருக்கமாக இறைவனிடம் கொண்ட நட்பு போல...! சரி, ஒரு விசயம் மூளையில் பதிந்து விட்டால் அது மறக்கவே மறக்காது... ஆனால் நாம் எதை மூளையில் பதிய வேண்டும்; எதைப் பதிவு செய்யக்கூடாது என்பது புரியாமல், மறக்கக்கூடாததை மறந்தும், மறக்கக் கூடியவற்றைப் பதிந்தும், ஒவ்வொரு நாளும் வருத்தும் துன்பத்தில் வாடுகிறோம்... சமீப காலமாக, கேவலம் மதத்திற்காகவும், பணத்திற்காகவும், சுயமரியாதை இழந்த அடிமைகள் பெருகி வருவதை தினந்தினம் காண்கிறோமே...! சரி, ஒரு நிகழ்வைச் சொல்கிறேன் கேள்...
நம் மகாத்மா தனது சகாக்களோடு, மதவெறியும் வன்முறையும், பதட்டமும் சூழ்ந்து காணப்பட்ட நவகாளி பகுதிக்கு, அமைதியை ஏற்படுத்தச் சென்றிருந்தார்... கிராமம் கிராமமுமாகக் காலில் செருப்பு கூட அணியாமல், கல்லிலும் முள்ளிலும் நடந்து சென்று அமைதிப் பணியில் ஈடுபட்டிருந்தார்... அவ்வாறு சென்ற போது தனது செயலாளர்களையும் தொண்டர்களையும், தன்னுடன் வர வேண்டாம் என்று பணித்து விட்டார்... அவர்களை தனித்தனியே கிராமங்களுக்குச் சென்று, உரிய அமைதிப் பணியைச் செய்யவும் கட்டளையிட்டார்... அவருடன் உதவியாக இருந்தவர் இளவயது பேத்தி மட்டும்...! ஒரு கிராமத்தில் பணியை முடித்து மறுநாள் அதிகாலை மற்றொரு கிராமத்திற்கு வந்தார் காந்தியடிகள்...
அங்கு அவர் குளிப்பதற்காக ஒரு பாழடைந்த வீட்டின் கொல்லைப்புறத்தில், சிறிய வாளியில் தண்ணீரும், உட்கார முக்காலியும், துவட்ட ஒரு துண்டையும் வைத்திருந்தனர்... மகாத்மா காந்தி எப்போதும் குளிக்கும் போது அழுக்கை நீக்க, உடம்பில் ஒரு சொரசொரப்பான கல்லை வைத்துத் தேய்ப்பது வழக்கம்... பேத்தியை அழைத்து, "அந்த கல் எங்கே...?" என்று கேட்டார்... "காலையில் கிளம்பும் அவசரத்தில் அந்த கல்லை எடுத்து வைக்க மறந்து விட்டேன்; மன்னித்து விடுங்கள்..." என்றார் பேத்தி... "மறதி என்பது மனிதனுக்கு மரணத்திற்குச் சமானமானது; அந்த கல்லை எத்தனை ஆண்டுகளாக என்னுடன் வைத்திருக்கிறேன் தெரியுமா...? சரி பரவாயில்லை; நான் இங்குக் காத்திருக்கிறேன்... சிரமம் பாராமல் மனதில் தைரியத்தை வரவழைத்துக் கொண்டு, தனியே சென்று அந்த கிராமத்திலுள்ள அந்தக் கல்லை எடுத்து வா..." என்றார் காந்தியடிகள்... வன்முறை சூழ்ந்துள்ள நேரம், அத்துவான காடு, சிறு பெண்ணான மனுசந்த் காந்தி எட்டு மைல் தொலைவு நடந்தே சென்று, அந்தக் கிராமத்திலிருந்த கல்லை எடுத்து வந்து கொடுத்தார்... என்னே துணிச்சல்...!
"துணிச்சல் மகாத்மாவிற்கா...? பேத்திக்கா...?" என்று விவாதம் செய்வோமா...? இல்லை "இன்றைக்கு ஒரு ஆண் தனியாக நடு ராத்திரியில் தனியாக நடந்து போக முடியுமா...?" என்று பேசுவோமா...? இன்றைய தொ(ல்)லைக்காட்சி விவாதம் விட நல்லாயிருக்கும்பா... சரி, விடு... இது தீநுண்மி காலம்... காந்தியடிகள் தன் பேத்திக்கு வழங்கியது தண்டனை இல்லை, பேத்தியின் மறதிக்கு விதித்த தண்டனையென்று புரிகிறது... இன்றைய குழந்தைகளின் நிலைமையை நினைத்தால், மன அழுத்தம் வந்து வந்து வந்து... என்னவோ சொல்ல வந்தேன்... மறந்து போச்சே...!
நினைப்பிற்கே மன அழுத்தமா...? அப்புறம் இது தீநுண்மி காலம் அல்ல; திணிக்கும் காலம்...! எதையும் கட்டாயப்படுத்தித் திணித்து குழந்தைகளுக்கு மனநலம் பாதிக்கப்பட்டால்...? பல வளங்களை மேம்படுத்தாமல், பாலைவனமாக்கும் காலம் என்றும் சொல்லலாம்... தாய்மொழியின் சிறப்பை முழுவதும் அறிந்தவர்களுக்கு மற்ற எந்த மொழியும் கற்றுக்கொள்ள எளிது... சரி, மறதியைப் பற்றி மட்டும் பேசுவோமா...? வளர்ந்தவர்களை விட வயதில் சிறியவர்களுக்கு ஞாபக மறதி குறைவு... ஆனால் அவர்களையே மனப்பாடம் செய்யும் இயந்திரங்களாக மாற்றி, எல்லாவற்றையும் எளிதில் மறக்கடிக்கச் செய்து விடுகிறோமே... எதிலும் ஆர்வமற்றவர்களாக மாணவச் செல்வங்களை ஆக்குவதால் உண்டாகும் பலன் இது...!
அதற்கு நாம் முதலில் தெளிவாகச் சிந்திக்கவேண்டும்... எப்போது பார்த்தாலும், எரிகிற கொள்ளியில் எந்தக் கொள்ளி நல்ல கொள்ளியென்றோ, பிரேதப் பரிசோதனை போல இப்போது வருகிற பொய்க் கட்டுரைகளை வாசித்தோ, தீமைகளை ஒப்பீடு செய்யும் பேச்சுக்களைக் கேட்டாலோ, எரிகிற நெருப்புக்குப் பயந்து கொதிக்கிற எண்ணெய்க் கொப்பரையில் தான் குடும்பம் முழுக்க விழவேண்டிவரும்... நேர்மையான சிந்தனை இருந்தால், செய்யும் தொழிலில் அல்லது எந்த வேலையிலும் ஆர்வமும் இருந்தால், எதையுமே நம்மால் மறக்க முடியாது...! இவற்றை இன்றைய காலத்துத் தெளிவான குழந்தைகளுக்குக் கற்றுக் கொடுக்க சிரமமும் இருக்காது...! ஆனால், "எது பெரிய விசயம்...?; எது சிறிய விசயம்...?" என்று நமக்கு நாமே ஒரு பகுப்பாய்வு செய்யத் தவறிவிட்டு, பெரும்பான்மையை மறதிக்குத் தின்னக் கொடுத்து விடுகிறோம்...! இறந்த வெகுளியின் தீதே சிறந்த உவகை மகிழ்ச்சியிற் சோர்வு 531 → சுதந்திரம் என்று கொண்டாட வேண்டிய நேரத்தில், அங்குச் சென்றாரே மகாத்மா; அதற்குத் தான் இந்தக்குறள்... ஆமா, நீ எதுவும் குறள் சொல்லலையா...? பள்ளிப்பருவத்திலே இயந்திரமா மாறி, குறள்களை ஒப்புவிக்க அல்லது மதிப்பெண் பெற மனப்பாடம் செய்த ஏதாவது ஒரு குறளை எடுத்து விடு...!
அடேய் பதிவு எழுதுவதே குறளுக்காகத் தான்...! அடங்காத கோபத்தைக் காட்டிலும் மறதியானது அதிக தீமை தரும் என்பதையும், நீ சொன்ன குறள் சொல்கிறது... குறளையே மறக்கக்கூடாது என்று நினைக்கிற 538-ஆம் குறளை மறந்தால், எப்போதும் நமக்கு நன்மையே இல்லை... இருந்தாலும் நாம ஏறுகிற வாழ்க்கைப் படகிலே ஒன்று தான் மறதி...! நண்பர்களே... மீதமுள்ள மூன்றை இங்கே சொடுக்கிச் சென்று வாசிப்பதற்கு முன்...
புதிய பதிவுகளை பெறுதல் :
தொடர்புடைய எண்ணங்களின் வண்ணங்கள் சில :
நீண்ட நாட்களுக்குப் பிறகு ஒரு வித்தியாசமான பதிவு.
பதிலளிநீக்குமறதியைக் குறித்த பதிவு அருமை.
பதிலளிநீக்குஓர் அழுக்கு தேய்க்கும் கல்லுக்காக தனது பேத்தியை மீண்டும் போய் எடுத்து வரச்சொன்னது அன்றைய சூழலுக்கு சரியாக இருந்திருக்கலாம்.
ஆனால் இன்றைய சூழலாயிருந்தால் காந்திஜி அனுப்பி இருக்க மாட்டார்.
பதிவை ரசித்த தருணத்தில் ஸிக்னலுக்கும் சென்று வந்தேன் ஜி.
Signal-க்கு சென்று வந்ததற்கு நன்றி ஜி... "எப்போது ஒரு பெண் நடு ராத்திரியில் தனியாக நடந்து போக முடிகிறதோ, அப்பொழுது தான் உண்மையான சுதந்திரம் கிடைத்ததாக அர்த்தம்..." என்று அதனால் தான் சொன்னாரோ...? இன்றைய சூழலில் பேரனைக் கூட அனுப்ப மாட்டார்கள்... ஆனால், பதிவில் சிந்திக்க வேண்டிய விசயங்கள் இதைப்பற்றி அல்ல... வேறு பல உள்ளன... நன்றி ஜி...
நீக்குவலைப்பூ ஆரம்பத்திலிருந்து சென்ற வருடம் வரை, இங்குள்ள முகநூல் கருத்துரைப் பெட்டியில் பல நண்பர்களின் கருத்துரைகள் இப்போது இல்லை... காரணம் இந்த வருட ஆரம்பத்தில் Blogger theme மாற்றியதே... அதுமட்டுமில்லாமல், இப்போதும் Settings-ல் Mobile view அல்லது Desktop view தேர்வில் மாற்றம் செய்தாலும், முகநூல் கருத்துரைப் பெட்டி வலைப்பூவில் தோன்றாது... விரிவாகத் தொழினுட்பப் பதிவு வரலாம்...! இதை எடுக்காமல் வைத்திருக்கக் காரணம், முகநூல் நண்பர்களுக்காக மட்டும் அல்ல... நம் நண்பர் பரிவை குமார் அவர்களுக்காகவும்... சரி, சிலவற்றை ஒரு சேமிப்பாக இங்கு பதிவு செய்கிறேன்... அங்கு இட்ட நண்பர்களின் சில கருத்துரைகள் தொடர்கிறது...
பதிலளிநீக்குதிருமிகு → ஜெயக்குமார் சந்திரசேகரன் ← அவர்கள் :- பதிவின் தலைப்பை பார்த்தவுடன் " இரண்டு மனது வேண்டும்" பாடல் தான் நினைவுக்கு வந்தது. நீங்கள் கூறிய "சேமிப்பது மூளையின் வேலை, மறப்பது மனதின் வேலை" என்பதில் உடன்பாடில்லை. விளக்கம் பின்வருமாறு.
பதிலளிநீக்குBrain is hardware. Mind is OS and application programs combined. God boots the system when you are born. Mind gathers information through 5 input systems (eye, mouth, nose, skin, and ear) and process them. Mind acquires natural intelligence through knowledge thus acquired, and uses that for future solutions. If either of them ceases to function then we become "BODY".
ஆகவே மனம் வேறு மூளை வேறு என்பது சரியல்ல என்பது என் கருத்து. இதில் ஒன்று இல்லை என்றால் மற்றதும் இல்லைதான். சரி மறதி ஏன் தேவை எனப் பார்ப்போம்.
சாதாரண கைபேசியிலேயே ஒரே சமயம் பல செயலிகள் வேலை செய்யும் போது திறன் குறைவதைக் காண்கிறோம். அப்போது சிலவற்றை நிறுத்தி அதன் data வையும் நீக்கி விடுகிறோம். அது போலத்தான் மறதியும். ஆனால் மனது வேண்டாத சில சங்கதிகளை மூளையில் உள்ள trash binஇல் கொண்டு போய் வைக்கிறது. ஆனால் திரும்ப வேண்டும் என்பதற்கு வசதியாக சில keywords and reference ஐ தக்கவைத்துக்கொள்கிறது. இது ஒரு பேஜ் ரோல்லவுட் போலத்தான். இதுவே மறதி எனப்படுகிறது. ஆக system துரிதமாக வேலை செய்ய மறதி தேவை தான்.
மனதிற்கும் cache memory உண்டு. தண்டு வடம் அனிச்சையாக செயல்படுவது இந்த cache memory இல் சேமிக்கப்பட்ட action reaction solutions தான். சிந்திக்க வைத்த பதிவு என்பதால் பின்னூட்டமும் நீண்டு விட்டது.
நீங்கள் மறக்க வேண்டியவற்றை மறக்காமலும் மறக்கக் கூடாதவற்றை மறந்து அல்லல் படுகிறோம், மனஅழுத்ததில் ஆழ்கிறோம் என்று கவலைப் படுகிறீர்கள் என்பது புரிகிறது. ஆனால் இவ்வாறு நினைப்பதுவும் உங்கள் மனம் என்பதை மறக்க வேண்டாம். அதனால் "இரண்டு மனம் வேண்டும். இறைவனிடம் கேட்பேன்." தான்...
சிந்திக்க வைக்கும் கருத்துரைக்கு நன்றி ஐயா... நீங்களே நல்லதொரு பதிலையும் சொல்லி விட்டீர்கள்... இரண்டு மனம் வேண்டும்... ஆனால் இறைவனிடம் கேட்கத் தேவையில்லை... நம்மிடமே உள்ளது... அவை உள்மனம், வெளிமனம்... இங்கே வெளிமனத்தை மூளையாகப் பாவித்துள்ளேன்... பல சிந்தனைகளில், செயல்களில், உள்மனம் தப்பு என்று எச்சரிக்கை செய்யும்... ஆனால் வெளிமனம் எதையும் கண்டுகொள்ளாமல் செயல்படுத்தத் துவங்கிவிடும் → அது பெரும்பான்மை மற்றவர்களுக்காக...!
நீக்குஉள்மனம் வெளிமனம் இரண்டையும் சமமாக்கி விட்டால், மூளையும் மனமும் ஒரே போல் செயல்படும்... அதற்குத்தான் முயன்று கொண்டிருக்கிறேன்...!
திருமிகு → ஞானசேகரன் M ← அவர்கள் :- காலையில் எழுந்ததும் மிக அருமையான இந்தப் பதிவினைப் படிக்கும் பேறு பெற்றேன்... மறதிக்கு மட்டுமே இந்தப் பதிவு... மக்களின் மனங்களும் மகாத்மாவின் செய்கையும் குழந்தை வளர்க்கின்ற முறையையும் அருமையாக விளக்கியிருக்கிறீர்கள்... பகிர்விற்கு நன்றி...
பதிலளிநீக்கு// மறதிக்கு மட்டுமே இந்தப் பதிவு... // சரியான புரிதலுக்கு நன்றி ஐயா...
நீக்குதிருமிகு → குமரேசன் லீலா ← அவர்கள் :- தண்டனை அல்ல மறதி கூடாது என்று வலிந்து உணர்த்துவது... அந்த மறவா உணர்வுதான் இன்று வரை எல்லோர் நெஞ்சிலும் நிறைந்திருக்கிறார்...
பதிலளிநீக்குஆம் அதை உணர வேண்டுவதற்காகவே இந்தப் பதிவு... ரொம்ப நன்றிங்க...
நீக்குதிருமிகு → துரை செல்வராஜு ← அவர்கள் :- பாவம்... அந்தப் பெண்... கல்லை மறந்ததற்காக இத்தனை பெரிய தண்டனை கொடுத்திருக்க வேண்டாம்...
பதிலளிநீக்குஅது மறதிக்கு கொடுத்த தண்டனை... ஆனால், பதிவில் சிந்திக்க வேண்டிய விசயங்கள் இதைப்பற்றி அல்ல... வேறு பல உள்ளன... நன்றி ஐயா...
நீக்குபதிவு அருமை. வேதாத்திரி அவர்கள் சிந்தனைகள் சில.
பதிலளிநீக்கு"மனம் ஒரு பொக்கிஷம் "
//ஒவ்வொரு செயலுக்கும் ஒரு விளைவுண்டு, அநத விளைவிலிருந்து யாருமே தப்ப முடியாது.
ஒவ்வொருவரும் தனக்கோ, பிறர்க்கோ, தற்காலத்திலோ, பிற்காலத்திலோ, உடலுக்கோ , உயிருக்கோ தீங்கு நேராவண்ணம் நடந்து கொள்ள வேண்டும்.
அப்போதுதான் அமைதியும், இன்பமும் ஏற்படும்.
தன்னை அறியாதவரை மனதுக்கு அமைதி இல்லை.பிறவி எடுத்ததின் நோக்கமே தன்னை அறிவதற்காக எடுக்கப்பெற்றதே!
மாணவ , மாணவிகள் தன்னை அறிவதை மேற் கொண்டால் அறிவுத் தெளிவும், கடமையுணர்வும் பெறலாம். படிப்புக்கு நன்மை தரும், பிற்கால வாழ்க்கையின் உயர்வுக்கு இப்போதே அஸ்திவாரம் அமைத்தாகும்.
நாம் ஒரு முறை ஒரு செயலை செய்து விட்டால் அது நமது உடலுறுப்புக்களில் பதிந்து மீண்டும் அதையே செய்ய தயாராகிவிடும், இந்த பதிவு எண்ண அழுத்தமாக மூளையிலும் பதிந்து விடுகிறது.
உலகில் நட்புணர்ச்சியை விட வெறுப்புணர்ச்சிதான் தான் அதிகமாகக் காண்ப்படுகிறது. கட்சிப்பற்று காரணமாக , சாதிப்பற்றுக் காரணமாக
நாட்டுப்பற்று, குடும்பபற்று, காரணமாகவும் வெறுப்புணர்ச்சியே வளர்க்கப்பட்டு வருவதை காண்கிறோம்.இந்த வெறுப்புணர்ச்சி பெரிதும் கருத்து வேறுபாடுகள் காரணமாகவே எழக் காண்கிறது.
ஒருவர் செய்கிற காரியமோ பேசுகிற பேச்சோ நமக்கு பிடிக்காத காரணத்தால் கோபம் எழும் போதே அது மூளையிலுள்ள சிற்றரைகளத் தாக்கி வெறுப்புணர்ச்சியைப் பதிவு செய்து விடுகிறது.
மனிதனை மனிதன் நேசிக்க வேண்டும், மதித்து நடக்க வேண்டும்.//
ஒருவரை ஒருவர் வாழ்த்திக் கொண்டு இருக்க வேண்டும்.
--வேதாத்திரி மகரிஷி
நீங்கள் சொன்னது போல் ஒளியவும் முடியாது தப்பவும் முடியாது.
இடையில் ஏற்பட்ட சலிப்பை போக்கி , தடைகளை தகர்த்து முன்னேற நமக்கு தேவை எது என்று குழந்தைகள் முடிவு எடுக்கட்டும். அதற்கு பெற்றோர்கள் ஆதரவாய் இருந்தால் போதும்.
செய்யும் வேலையில் கவனம் இருந்தால் மறதியால் வரும் சோர்வு இருக்காது.
நீங்கள் சொல்வது போல் இக்காலத்து தெளிவான பிள்ளைகள் புரிந்து கொள்வார்கள்.
ஆம் மகிரிஷி பற்றிய நூல்களில் அதிகம் இடம் பிடிப்பது மனமே... எதையும் தளராமல் சாதிக்கும் திறமை, இன்றைய குழந்தைகளுக்கு உண்டு... சரியான பாதையை மட்டும் காட்டுவதே பெற்றோர்களின் வேலை... நன்றி அம்மா...
நீக்குடிடி வழக்கமானதிலிருந்து மிகவும் வித்தியாசமான பதிவு! அருமையான பதிவும் கூட.
பதிலளிநீக்குஇதைப் பற்றி எழுத வேண்டுமென்றால் நிறைய எழுதலாம். ஏனென்றால் நீங்கள் சொல்லியிருக்கும் அனைத்தும் நம் உடலின் மிக மிக முக்கியமான பகுதியான மூளை பற்றியது. அதற்குள் நடப்பது பற்றி.
மறதியைப் பற்றிச் சொல்ல வேண்டுமென்றாலும் நிறைய சொல்ல வேண்டிவரும். ஏனென்றால் இதுவும் மூளைக்குள் நடப்பதுதான். மனம் எனும் பகுதியும் அதற்குள் இருப்பதுதான் ஆனால் ப்ராசஸ் தான் வேறு. மூளையில் ஒரு பகுதி எல்லாவற்றையும் சேமிக்கும். ஒவ்வொரு படிமானத்திலும். (சுஜாதா இதைப்பற்றி எழுதியிருக்கிறார்) . இது ரோபோட்டிக். சேமிப்பதை அப்படியே செய்வது. அல்லது கட்டளைகளுக்கு ஏற்ப செய்வது. இங்குதான் இதோ அடுத்த வேலை. மனம். அதை ஆர்கனைஸ் செய்து எது முக்கியம் எது முக்கியமல்ல, எதை முதலில் செய்ய வேண்டும் எதைக் கொஞ்சம் தள்ளிப் போட்டு பின்னால் செய்யலாம் என்ற வேலைகள், எதை நினைவில் வைக்கணும் கூடாது, மன்னிப்பு, பழிவாங்கல் இவை எல்லாம் மனதின் ஆட்சி. மூளையையும் அதாவது இல்லை இது செய்யாதே என்று எச்சரிக்கையைஉம் மழுங்கடிக்கும் டாமினேஷன். இதுவும் மனதின் ஒரு பகுதி. அதாவதுமூளையின் ப்ராசசிங்கின் ஒரு பகுதி. அது பழுதடைவதற்குக் காரணம் நம் வளர்ப்புச் சூழல், பகுத்தறியும் அறிவு, கோபம், பொறாமை, மனம் பக்குவப்படாமை, சுற்றி இருப்பதிலிருந்து கற்பது. இதை ஆராய்ப போனால் மனம் சிதிலமடைவது/சிதைவது வரை போக வேண்டும்.
மறதி - இதுவும் மேலே சொன்னதன் பகுதி. ப்ராசஸ் செய்யும் பகுதி சரியாகத் தன் பணியைச் செய்தால் எதை மறக்காமல் முதலில் செய்ய வேண்டும் என்பதைச் செய்துவிடும்.
உதாரணத்திற்கு : இன்று டிடி யின் பதியைப் பார்த்ததும் அட இது நம் சப்ஜெக்ட் ஆச்சே (மறதிக்குப்ப் பெயர் போன கீதா!!!!) என்று மனது இதைப் பற்றியே யோசித்துக் கொண்டிருக்க, இடையில் வழக்கமாக காபி குடிக்கும் நேரம் அது மூளையின் பெல்லைத் தட்ட, காபிக்கு அடுப்பில் பாலை வைத்துவிட்டு வந்தாலும் அது அனிச்சையாக நடந்ததால், மூளையை டாமினேட் செய்த இந்த சப்ஜெக்ட் இங்கு கருத்திட......காபியை மறந்து போக ஹா ஹா ஹா ஹா என்ன நடந்திருக்கும்!!!!?? இப்படித்தான் எந்த எண்ணம் நம்மை ஆக்ரமிக்கிறதோ அப்போது இடையில் செய்யும் வேலை மறக்கும். அதற்குத்தான் ஒரு வேலை எடுத்தால் அதைச் செய்து முடிக்கும் வரை வேறு எதிலும் மனம் (ப்ராசஸ்) செல்லக் கூடாது என்று சொல்வது. அஷ்டாவதானி என்பதெல்லாம் ஒரு சில மூளைக்கே! அதற்குத்தான் மனம் ஒருநிலைப்படுத்தல், மூச்சுப்பயிற்சி என்பதெல்லாம் இங்கு தேவைப்படுகிறது.
கீதா
நீங்கள் சொல்வது போல, சுற்றி நடப்பதிலிருந்து கற்பது தான் அதிகம்... மனம் சிதையும் பொழுது ஆறுதல் வார்த்தைகள் அமிர்தம்... அருமையான கருத்திற்கு நன்றி...
நீக்குசுற்றி நடப்பதிலிருந்து கற்றாலும் எது சரி எது தவறு என்று ஆராயத் தெரிய வேண்டும். இந்தப் பகுத்தறியும் ஒன்று சிறு வயதிலேயே போதிக்கப்பட வேண்டியது. அல்லது வளர்ந்து வரும் போது சுய சிந்தனை வளர்த்துக் கொள்ளத் தெரிய வேண்டும். அப்படியே சுய சிந்தனை வளர்ந்தாலும் அதில் மற்றவர் சொல்வதைச் செவிமடுக்கவும் தெரிய வேண்டும். நம் அனுபவம் தரும் பாடத்திலிருந்து கற்பதும் அதிகம் அதையும் ஆராய்ந்து கற்கத் தெரிய வேண்டுமே.
நீக்குமனச்சிதைவு பற்றிச் சொல்ல வேண்டும் என்றால் அது பல வகை ஆச்சே. நாம் கொடுக்கும் ஆறுதல் மொழிகளைக் கூடப் புரிந்து கொள்ள முடியாத வகையும் உண்டே.
மொத்தத்தில் உங்கள் பதிவு ஒரு சிறிய பகுதிக்குள் அடங்குவது அல்ல. மறைந்த நரம்பியல் நிபுணர் ராமமூர்த்தி அவர்கள் சொல்லியபடி மூளை என்பது பற்றி நாம் அறிந்தது மிக மிக மிகக் குறைவு. அது மிக மிக மிகப் பெரியது ஆழமானதும் கூட. டிடி
கீதா
மறதி என்பது மரணத்திற்குச் சமானம் என்பது ஒரு சில விஷயங்களுக்குப் பொருந்திப் போகலாம். எல்லாவற்றிற்கும் என்று சொல்ல இயலாது இது என் தனிப்பட்டக் கருத்து.
பதிலளிநீக்குமறதிக்குக் காரணங்கள் பல. மன அழுத்தம். வீட்டின் பல கஷ்டங்களைத் தீர்க்கும் நிலையில் இருப்பவர்களுக்கு அது அழுத்தும் காரணத்தால் ஒரு சில விஷயங்கள் மறந்து போக வாய்ப்புண்டுதான். மறதிக்குப் பல காரணங்கள் உண்டு. சில விஷயங்களை மறப்போம் மன்னிப்போம் என்று இருந்தால்தான் நம் மனம் மகிழ்வாக இருக்கும்....மனித நேயத்துடனும் வாழ இயலும். இல்லையா?
ஒரு சிலருக்கு ப்ராசஸிங்க் அதாவது மனம் செய்யும் வேலைகளான சிந்திப்பது, பகுத்தறிவது என்பது போன்றில்லாமல் ஏவுகணை போல ஏவுவதற்கு மட்டுமே அல்லது அவர்களாகவே செட் செய்து வைத்துக் கொண்டபடி இயங்குவது என்று இயந்திர மனிதனாக வாழ்பவர்களும் உண்டுதான்.
மரணத்திற்குச் சமானம் என்ப்தை லிட்ரலாகப் பார்க்க வேண்டும் என்றால் அல்ஜிமர் நோய்க்கு உட்பட்டவரளுக்கு அது கிட்டத்தட்ட மரணம் தாம் பாவம்.
உங்களுடைய இன்றைய பதிவு மூளை எனும் பகுதியையும், அதனுள் இயங்கும் ப்ராசஸ் அதாவது மனம் எனும் பகுதியையும் கலந்து கட்டிய ஒன்று. அறிவியல் ரீதியாகவும், மன ரீதியாகவும் கலந்த பதிவு.
கீதா
// மறப்போம் மன்னிப்போம் // அற்புதமான மந்திரச்சொல்...
நீக்குஇன்னாசெய் தாரை ஒறுத்தல் அவர்நாண
நன்னயஞ் செய்து விடல்.
இந்த பதிவு எழுதிக் கொண்டிருக்கும் போது தேடலில், இந்த நோய் பற்றிய சில கட்டுரைகளையும், சிலரின் பாதிப்பையும் அறிந்தேன்... அவர்கள் வாழ்வு எல்லாம் மிகவும் சிரமம்...
நல்ல பதிவு டிடி. ஆராய்ச்சிக்கு உட்பட்ட பதிவு.
பதிலளிநீக்குதுளசிதரன்
மறதி என்பது நாம் முக்கியம் இல்லை என்று நினைக்கும்போது ஏற்படுவது நாம்முக்கியம் என்று கருத்ததவை சீக்கிரம்மற்ந்து போகும் இன்னொரு மறதி வயதாதன் தாக்கம் இதை ஏஜ் ரிலேட்டெட் சிண்ட்ரொம் என்பார்கள் இன்னொரு விஷயம் வயதாகும்போது அண்மைய சமாசாரங்கள் மறக்கும் பழையசிந்தனைகள்நிலைத்து நிற்கும் நேற்று பார்த்த சினிமா ஹீரோயின் பெயர் நினைவுக்கு வராது பழையசினிமா நடிகையர்பெயரெல்லாம் அத்துபடியாய் இருக்கும் மறதியை ஒரு வரமாகவும் கொள்ளலாம் சாபமாகவும்கொள்ளலாம்
பதிலளிநீக்குஅன்பு தனபாலன்,
பதிலளிநீக்குகெட்டதை மறக்கவும் ,நல்லதை நினைக்கவும் பழக
நிறைய பயிற்சி எடுத்துக் கொண்டே இருக்க வேண்டும்.
எப்பொழுதும் பிரார்த்தனைகளிலும்,
நல்ல நிகழ்வுகளிலும்,
குழந்தைகளின் அன்பிலும்
சினத்தைத் தவிர்ப்பதிலும் உள்ள நேர்மறை எண்ணங்களில்
மனதைப் பழக்கி
மூளையை மறதிப் புயலில் இருந்து விடுவிக்க
அன்றாடம் பாடுபடுகிறேன்.
உங்களைப் போன்றவர்களின் நட்பும் அன்பும்
இன்னும் வாழ்வை செம்மையாக்கும்.
மற்றவர்களின் செயல்களுக்கு நாம் பொறுப்பு
எடுக்க முடியாது.
அது நம் செயல்களைப் பாதிக்காமல் இருக்க கற்க வேண்டும்
என்பதே என் வழிபாட்டின் முதல் அம்சம்.
செய் நன்றி மறவாமை இன்னும் முக்கியம்.
சிந்திக்க வைக்கும் எழுத்துகளுக்கு மனம் நிறை நன்றி மா.
செய் நன்றி மறவாமையை, நம் எதிர்பார்ப்புகளில் மிகவும் முக்கியமாகவே கருதுகிறோம் என்பது உண்மை தான்...
நீக்குவணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குஅருமையான பதிவு. நல்ல அலசலான பதிவும் கூட. காந்தியடிகள் தம் பேத்தியின் மறதிக்கு தந்த தண்டனை வியக்க வைக்கிறது. நம் வாழ்க்கையிலும் இப்படி எத்தனையோ மறதிகள், நமக்கோ, இல்லை மற்றவர்களுக்கோ ஆழ்ந்த துன்பங்களையும், தீராத பிரச்சனைகளையும் தந்திருக்கலாம். இந்த மாதிரி ஒரு தடவையாவது அதற்குரிய தண்டனையை நாம் நமக்கே விதித்துக் கொண்டிருந்தால், அடுத்த மறதி என்பது நம் வாழ்க்கையில் நுழைய சற்று தயக்கம் காட்டியிருக்குமோ என இதைப் படிக்கையில் தோன்றுகிறது.
அளவுக்கதிகமான சேமிக்கும் திறன் கொண்ட நம் மூளையின் தீடிர் கவனச்சிதறல் ஒரு மறதிக்கு அஸ்திவாரமாகிறது.அந்த நேரத்தில் நம்மை நாமே உணராமல் ஒரு அறியாமையை தோற்றுவித்து பின்பு அதனை உணர்ந்து நம்மை வருத்தப்பட வைப்பதும் கண்டிப்பாக அந்த மூளையின் வேலையே..! அதற்குள் மறதி வெற்றி கண்டு விடுகிறது. இது ஒவ்வொரு மனிதர் வாழ்க்கையின் இயல்பு நிலை. இதில் எவ்வித குழப்பங்களும் இல்லாத தெளிவான சிந்தனையும், திடமான தெய்வ பக்தியும் சீராக இருந்தால், நம் மூளை இந்த கவனச் சிதறலுக்குள் அடிக்கடி சிக்கிடாமல் ஒரளவுக்கு தன் வேலையை திறம்பட செய்து நாம் வெல்லும் வகையை மட்டும் தோற்றுவிக்கும் எனவும் தோன்றுகிறது.
சகோதரர் கில்லர்ஜியுடனான சிக்னல் பதிவையும் படித்து வந்தேன். அதிலும் அவரின் எண்ணங்களும், தங்களின் கருத்துகளும் அருமை.
சிறந்த யோசிக்க வைக்கும் வித்தியாசமான பதிவுகளை தருவதற்கு மனமார்ந்த நன்றிகள்.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
இந்தப் பதிவில் குறிப்பிட்டுள்ள இரு குறள்களும் பொச்சாவாமை அதிகாரத்தில் வருகிறது... அதிலுள்ள அனைத்து குறள்களும், மறதியைச் சுட்டிக் காட்டாமல், கடமைகளைச் செய்வதில் ஆர்வமே இல்லாமல் இருப்பது, ஈடுபாடற்றும் இருந்து அவற்றைப் பொருட்டாக மதிக்காமல் இருப்பது எனப் பலவற்றை விளக்குகிறது... மறதியைக் குறிப்பிடும் குறளுக்காகவே முந்தைய பதிவின் இணைப்பைக் கொடுத்தேன்... அங்குச் சென்று வாசித்தமைக்கும் நன்றி...
நீக்குஅருமையான வாத பிரதிவாதங்கள்
பதிலளிநீக்குஎன்ன இன்று ஒரு ஆண் இரவு தனியாக சென்று வர முடியுமா? என கேள்வி எழுப்பியுள்ளீர்கள்.
உண்மைதான்
இன்றைய சூழல் அப்படிதான் கேள்வி கேட்க வைக்கும்
பதிலளிநீக்குகாந்தி மட்டும் இன்றைய கால கட்டத்தில் வாழ்ந்து இருந்தால் அவரது பேத்தி அவரிடம் சொல்லி இருக்கும் தாத்தா நான் செல்போன் சார்ஜரை என் கூட வரும் போது நீங்க ஞாபகமாக எடுத்து வந்திருக்க கூடாதா என்ன? சரி சரி இப்ப போய் நீங்க எடுத்துட்டு வாங்க என்று தாத்தாவை அனுப்பி வைச்சிருக்கும்
மறக்கனும்கறதையே நான் ஞாபகம் வச்சு தான் மறக்கிறேன் நண்பரே.
பதிலளிநீக்குமறதி வரமா அல்லது சாபமா இல்லை வாழ்வின் நலனுக்கு சிறந்த மருந்தா எனக் கேட்டிருக்கிறீர்கள். மறதி ஒருவகையில் வாழ்க்கைக்கு தேவையான மருந்துதான்.
பதிலளிநீக்குதேவையில்லாதவைகளை நினைவில் வைத்துக்கொள்வது நல்லதல்ல.எடுத்துக்காட்டாக ஒருவர் நமக்கு தீமை செய்தால் அதை நினைவில் வைத்திருந்தால் அவரை எப்படி பழிவாங்கலாம் என்ற சிந்தனையே மனதில் குடிகொண்டிருக்கும். எனவே மறப்போம் மன்னிப்போம் என்ற நிலையே அங்கு சிறந்தது.
ஆனால் அதே நேரத்தில் செருக்கு கொண்டு கடமையை மறந்திருப்பது சரியல்ல என்ற 539 ஆம் குறளையும் மறக்கக்கூடாது.
ஜப்பானிய மொழியில் மறதி எனும் குறியீ ட்டின் எழுத்தே மேல் பகுதி மரணம் என்பதற்கான குறியீடும் கீழ் பகுதி இதயத்திற்கான குறியீடும் இருக்கும் . அதாவது மறந்த இதயம் 忘. இது எனக்கு ஜப்பானிய மொழி தெரியும் என்று டம்பம் அடித்துக்கொள்ளச் சொல்லவில்லை . நீங்கள் சொன்ன கருத்தோடு ஒத்துப் போகிறது என்பதைச் சொல்லவே இதை எழுதுகிறேன்
பதிலளிநீக்குஉண்மைதான் ஐயா
பதிலளிநீக்குநேர்மையோடு ஆர்வமோடு செய்கின்ற செயல்கள் ஒருபோதும் மறப்பதில்லை.
மறதியின் மறுபெயர் விருப்பமின்மை என்று சொல்லலாம் அல்லவா.
நன்றி ஐயா
கிட்டத்தட்ட நீங்கள் சொன்ன "விருப்பமின்மை" தான் பொச்சாவாமை அதிகாரத்தில் வேறுவிதமாகச் சொல்லப்பட்டு உள்ளது... ஆனால் தொல்லாசிரியர்கள் முதல் இன்றைய பலரின் குறள் விளக்கங்கள் அனைத்தும், மறதியைப் பற்றியே சொல்கின்றன... எழுதிக் கொண்டிருக்கும் பொச்சாவாமை குறளின் குரல் பதிவில் பேசுவோம்... நன்றி ஐயா...
நீக்குகல்லை மறந்தததுக்கு நடக்க விட்ட தூரம் அதிகம் டிடி. மறதி நல்லது ஒரு புறம் மறுபுறம் சாபம்.
பதிலளிநீக்குஎனக்கும் மறதி இருக்கிறது.... மறதி இருப்பததால் மணம் சீராக இயங்கிறது என்று எனக்கு சொல்வது பற்றி...???
பதிலளிநீக்குமறக்க வேண்டியது நினைவில் இருப்பதும் நினைவில் இருக்க வேண்டியது மறந்துபோவதும்தான் வழக்கமாக இருக்கிறது.
பதிலளிநீக்குஅருமையான சிந்தனை. மறதி ஒரு மனிதனுக்கு கொடுக்கப்பட்ட வர பிரசாதம். எத்தனையோ விடயங்களை மறக்கமுடியாமல் மனம் குழம்பிபோவோருக்கு இந்த மறதி கட்டாயம் வேண்டும் என்று நினைக்கின்றேன்.
பதிலளிநீக்குஅந்த விஷயத்தை இத்தோடு மறந்துவிடு…. பழசப்போட்டு குழப்பிக்காம அதையெல்லாம் மறந்துட்டு புதிய வாழ்க்கையோ ஆரம்பி என்று சொல்வதை கேட்டிருப்போம், எனவே மறதி மனிதனின் மரணத்திற்கு அல்ல அந்த தேவையில்லாத ஞாபக பதிவிற்குத்தான் என நான் நினைக்கின்றேன்.
அழுக்கு தேய்க்கும் கல்லுக்காக தம் இளம் வயது பேத்தியை பதினாறு மைல் தூரம் நடக்கவைத்தவரின் பாடம் புகட்டும் விதம் ஏற்புடையதாக இல்லை. தினமும் குளிக்கும் ஒருவருக்கு ஒரே ஒரு நாள் தேய்க்காமல் குளித்தால் என்னவாகி இருக்கும். அந்த கல் வரும்வரை காத்திருந்து குளித்தாரா மாகாத்மா, எத்தனை நேர விரயம். சில நேரம் மகாத்துமாக்களின் போக்கு புரிந்துகொள்ளமுடிவதில்லை. என்னை பொறுத்தவரையில் செய் நன்றியை மறவாமல் இருப்பதும், நல்லொழுக்க விதிகளை மறக்காமல் இருப்பதும் சிறந்தது, நன்றல்லது அன்றே மறப்பது நன்று என்று வள்ளுவ பெருந்தகையே ஒப்புக்கொண்டுள்ளார்.
கோ.
ஒரு உண்மையை இங்கே பதிவு செய்கிறேன்... வாழ்வில் ஒரு துயரமான நேரத்தில், கொடைக்கானல் பண்பலையில் கேட்ட தகவல்... நிகழ்ச்சியின் தலைப்பு, நேரம், சொன்ன முனைவரின் பெயர் மறந்து விட்டது... ஆனால் தகவல் மனதில் பதிந்து விட்டது... அன்று உங்களைப் போல நினைத்ததும் உண்டு... இது போலப் பல தகவல்கள், கணினி வாங்கிய பின், பல பதிவுகளையும் எழுத வைத்தது... சரி, மகாத்மா நவகாளிக்கு சென்ற இணைப்பும் பதிவில் உள்ளது... குறளை குறிப்பிடும் இடத்தில், மொத்தப்பதிவும் உள்ளது...!
நீக்குஅற்புதமான குறளை சொல்லி உள்ளீர்கள்... அதை எழுதிக் கொண்டிருக்கும் பதிவில், ஒரு வரியில் வரும்... நன்றி... உங்கள் பாணியில் :- அடுத்த பதிவில் மீண்டும் ச(சி)ந்திப்போம்...!
இரண்டு மனம் வேண்டும் தான்
பதிலளிநீக்குமறதி நல்லதுதான் ஆனால் மறக்கவேண்டியது நினைவில் நிரந்தரமாக நின்று தொலைக்கிறது . நிற்க வேண்டியதோ மறந்து போகிறது... ம் ..ம் ..... இந்த விஷயத்தில் நாம் எவ்வளவோ பரவாயில்லை ... "தாமஸ்ஆல்வா எடிசன்" க்கு அவருடைய பெயரே அடிக்கடி மறந்து போகுமாம் ...
பதிலளிநீக்கு