🏠 வணக்கம் காப்பகம் நன்றி

தேடல் 🔎



புதிய பதிவுகளை பெற ✉



கலாம்... சலாம்...

அனைவருக்கும் வணக்கம்... முதலில் இரு நிகழ்வுகளை வாசித்து விடுவோமா...?


ஒரு ஓவியர் ஒருவரிடம், "உங்களை ஓவியமாக என்னால் அச்சு அசலாக வரைய முடியும்... அதற்கு 100 £ (பவுண்டு) தாருங்கள்... நான் வரையும் ஓவியத்தில் உங்களுக்குத் திருப்தி இல்லையென்றால் பணம் தர வேண்டாம்..." என்று சொல்லி தத்ரூபமாக வரைந்து காட்டினார்... பரம திருப்தி ஆனவர், பேசிக் கொண்டபடி 100 £ பணத்தைக் காசோலைகளாக வழங்க முடிவு செய்து, 5 காசோலைகளில் 20, 20 £-களாக எழுதிக் கையொப்பமிட்டு ஓவியரிடம் தந்தார்... "ஏன் 5 காசோலைகள்...? ஒரே காசோலையில் 100 £ தரலாமே...?" என்ற ஓவியருக்கு, அவர் சொன்ன பதில் தான் குறிப்பிடத்தக்கது :-

"ஓவியரே, எனது கையெழுத்திற்காக என்னுடைய ரசிகர்கள், 30 £ கொடுக்கக் காத்திருக்கின்றனர்... ஒவ்வொரு காசோலைக்கும் 30 £-களாக மொத்தம் உங்களுக்கு 150 £ கிடைக்கும்... நாம் பேசியதை விட 50 £ கூடுதலாகப் பெறுவீர்கள்... அது தவிர, நான் கொடுத்த காசோலைகளில் என்னுடைய கையெழுத்து இருப்பதால், எனது ரசிகர்கள் வங்கியில் செலுத்தி காசு பெற மாட்டார்கள்... எனவே வங்கியில் இருக்கும் எனது பணமும் குறையாமல் இருக்கும்... உங்களுக்கு 150 £ வரவு... எனக்கு ஒரு £ கூட செலவில்லை... இருவரும் சந்தோசமாக இருக்கலாம்..." என்றார் அவர்...!


கணக்குப் பார்ப்பதில் கூட சந்தோசங்களை வாரி வாரி வழங்கியவரை அறிவதற்கு முன், இன்னொரு நிகழ்வு :-

ஒருவர் அன்பளிப்பாக எதைக் கொடுத்தாலும் வாங்கிக் கொள்ள மாட்டார்... அப்பேர்பட்ட உறுதியான குணம் அவருக்கு...! ஒரு பெரிய நிறுவனம் அவருக்கு நினைவுப் பரிசாக ஒரு பொருளை மகிழ்ச்சியோடு கொடுத்தார்கள்... தேவையில்லாத பொருளையும் வாங்கிக் குவிக்கும் எண்ணமும் அவருக்குக் கிடையாது... ஆனால் அந்தப் பரிசுப் பொருள் அச்சமயம் அவருக்குத் தேவையாய் இருந்தது... அதனால் ஒரு முடிவோடு, "இந்தப் பொருளுக்கான விலையை வாங்கிக் கொண்டால் மட்டுமே, நான் வாங்கிக் கொள்வேன்..." என்கிறார்... அந்த நிறுவனத்திற்குச் சிறு வருத்தம் என்றாலும், அந்தப் பொருளுக்கான விலையைச் சொல்லி, அவரிடம் காசோலையும் வாங்கிக் கொண்டு பரிசுப் பொருளைக் கொடுத்தார்கள்...

அந்த நிறுவனம், அவர் கொடுத்த காசோலையை வங்கியில் செலுத்தி பணம் எடுக்கவே இல்லை... ஏனென்றால், அந்தக் காசோலையை அரிய பொக்கிஷமாக நினைத்துப் பத்திரப்படுத்திக் கொண்டு விட்டார்கள்... ஓரிரு நாட்களில் தன் வங்கிக் கணக்கிலிருந்து பணம் எடுக்கவில்லை என்று தெரிந்தவுடனேயே, அந்த நிறுவனத்தைத் தொடர்பு கொண்டு, "உடனடியாக எனது காசோலையை வங்கியில் செலுத்தி, பணத்தை எடுத்துக் கொள்ளுங்கள் அல்லது நீங்கள் கொடுத்த அந்தப் பொருள் உடனடியாக உங்களுக்குத் திருப்பி அனுப்பி விடுவேன்..." என்கிறார்... அந்த நிறுவனம் உடனே காசோலையை வங்கியில் செலுத்தி பணத்தைப் பெற்றுக் கொண்டார்கள்... அதன் பின் தான் அந்த உன்னத மனிதருக்கு உள்ளத்தில் மகிழ்ச்சி...!


பேரறிஞர் பெர்னாட்ஷா அவர்கள்...
டாக்டர் A.P.J. அப்துல் கலாம் அவர்கள்...
கீழுள்ள காசோலையும், பாடலும், மேலும் பெருமை சேர்க்கும்...



வாழை போலத் தன்னைத் தந்து தியாகி ஆகலாம்
உறுதியோடு மெழுகு போல ஒளியை வீசலாம்

© சுமைதாங்கி கண்ணதாசன் விஸ்வநாதன்-ராமமூர்த்தி P.B.ஸ்ரீனிவாஸ் @ 1962 ⟫

எதுவுமே இல்லாதவர்களுக்குக் கொடுப்பது தான் ஈகைப் பண்பாகும்... மற்றது எல்லாம் ஏதேனும் ஒரு வகையில் ஆதாயத்தை எதிர்பார்த்தோ அல்லது கொடுத்ததை வேறு வகையில் திரும்பப் பெறும் நோக்கம் உடையதாகும்... வறியார்க்கொன்று ஈவதே ஈகைமற் றெல்லாம் குறியெதிர்ப்பை நீர துடைத்து (221) இதே சிந்தனையோடு... "அறிவாளியா...? புத்திசாலியா...?" என்று இனி குழப்பமே இல்லை என ISO பதிவும் ஞாபகத்திற்கு வந்தது...! அதில் வீட்டிற்குச் சொல்லி விட்டோமே, நாட்டிற்கு...? ஆனால் நாட்டில் அறிவாளிகளுக்கு - புத்திசாலிகளுக்கு - திறமைசாலிகளுக்கு - இன்னும் பலவற்றுக்கும் பஞ்சமேயில்லை... இவர்களை எல்லாம் வழி நடத்த யார் தேவை...? நிர்வாகி...? வீட்டிலெல்லாம் சரி தான்... ஆனால் நாட்டிற்கு எவ்வாறோ...? தங்களின் பதில் என்ன...?

சரி, மக்கள் அறிவாளியோ - புத்திசாலியோ - எவ்வாறோ இருக்கட்டும், ஈகை அதிகாரத்தின் கடைசிக் குறள் :- சாதலின் இன்னாத தில்லை இனிததூஉம் ஈதல் இயையாக் கடை (230) சாதல்போல் விரும்பத்தகாதது வேறில்லை, ஆனால் இரந்துவந்தவர்க்கு உதவ முடியாத போது, சாதலும் இனிதாகிறது...!

இனி தங்களின் பதில் என்ன...? நன்றி...

புதிய பதிவுகளை பெறுதல் :


தொடர்புடைய எண்ணங்களின் வண்ணங்கள் சில :


முகநூல் மூலம் கருத்துக்களை பகிர :

கருத்துகள்

  1. அற்புதமான இரண்டு சம்பவங்களுடன் அழகான பதிவு.

    பதிலளிநீக்கு
  2. பார்க்கலாம். படிக்கலாம் கேட்கலாம்.
    எல்லாம் உணர்த்திய பதிவு.
    ஷா, அன்பின் உரு திரு கலாம்
    அவர்களின் மதிப்புக்கு எது ஈடு.

    அவரை உணரவைத்த இத்தனை கலாம் சேர்த்த
    பாடல்
    அதைப் பதிவிட்ட அன்பு தனபாலன், சொன்ன கவிஞர்
    யாரைப் புகழ்வது. இல்லை விடுவது.

    நல்ல தமிழ், நல்ல குறள், நல்ல மனிதர்
    இவர்களை எங்களுக்கு அளிக்கும் நீங்கள்
    எல்லாம் வளர்ந்து வளம் பெற வேண்டும்.

    2013 ஆம் வருட பதிவுக்கும் போய்ப்
    படித்துவிட்டு வந்தேன். வாழி நலம்.

    பதிலளிநீக்கு
  3. 2 கதைகளையும் இப்போதுதான் நான் அறிந்தேன்.... நல்ல கதைகள்..

    பதிலளிநீக்கு
  4. நல்ல பதிவு டிடி.

    கலாம் பற்றியது ஏற்கனவே எங்கோ வாசித்த நினைவு. மீண்டும் இங்கு வாசித்து ரசித்தேன். பெர்னாட்ஷா பற்றியது ஒன்றே ஒன்று புரியவில்லை. அவரது கையெழுத்தை அவர் ரசிகர்கள் ரசிக்கிறார்கள் ஓகே. அதனால் அவரது காசோலை காசாக்கப்படவில்லை. இவரது வங்கியில் பணம் இருக்கும் . அந்த ஓவியர் அந்தக் காசோலையைப் பணமாக்கினால்தானே அவருக்கு 150 லாபம்? இல்லையோ?! இதில் ரசிகர்கள்?!!! ஒருவேளை எனக்குத்தான் என் சிறிய மூளைக்கு அது எட்டவில்லை என்று நினைக்கிறேன்...ஹிஹிஹி.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்களின் சிந்தனையின் படியே 5 ரசிகர்களும் பணமாகத் தராமல், அவர்கள் கையெழுத்திட்ட காசோலைகளை (30x 5 = 150 பவுண்டு) ஓவியரிடம் தருவதாக இருந்தாலும், ஓவியர் அதைத் தனது வங்கியில் செலுத்தி பணமாக மாற்றிக் கொள்வார்...!

      நீக்கு
  5. இது கொடுத்தால் நமக்கு நன்மை சேரும் என்ற எதிர்பார்ப்புடன் செய்யும் ஈகை ஆம் ...எதிர்பார்ப்புடன் செய்வது என்றே எனக்கும் தோன்றும் இது என் தனிப்பட்டக் கருத்து. அதே கருத்துதான். அது போல இல்லாதவர்க்குக் கொடுப்பதே ஆம்.

    எதிர்பார்த்துச் செய்யும் போது ஒரு வேளை நன்மை நடக்கவில்லை என்றால் பொதுவாகச் சமூகம், சுற்றம் எல்லாம் சொல்லுவது இது, "பாரு நீ எவ்வளவோ நல்லது செஞ்சுருக்க உனக்குப் போயி இப்படியா" என்று இது ஒரு எதிர்மறை என்று எனக்குத் தோன்றும். விரக்தி மனப்பான்மை ஏற்படும். போ என்ன செய்து என்ன பலன். இனி ஒன்னும் வேண்டாம் என்பதான ஒரு நிலை. எதிர்பார்த்துச் செய்யும் எதுவுமே இப்படித்தான்.

    நல்லது செய் நல்லது நடக்கும் என்று சொல்லப்பட்டிருப்பது சமூகத்தில் அப்படியேனும் மக்கள் நல்லது செய்ய வேண்டும் என்று உற்சாகப்படுத்தவே. உந்து சக்தி அளிக்கவே. நல்வழியில் நடக்கவே. ஏனென்றால் பொதுவாக மாஸ் சைக்காலஜிப்படி நல்லது செய் என்று சொன்னால் அது எடுபடுவது கொஞ்சம் கஷ்டம்தான். கூடவே ஒரு இனாமாக....ஹா ஹா ஹா நாம் அப்படித்தானே பழகியிருக்கிறோம்....எனவே நல்லது நடக்கும், உன் சந்ததியினர் நன்றாக இருப்பார்கள் என்று சொல்லுவது.

    கீதா

    பதிலளிநீக்கு
  6. பெர்னாட்ஷாவைவிட அப்துல்கலாமின் செயல் உயர்ந்து விட்டது.

    பெர்னாட்ஷா வியாபாரி ஆகி இருக்கிறார்.

    ஆனாலும் இந்தப் பதிவை நம்மூர் திரைப்படக் கூத்தாடிகள் எவனும் படித்து விடக்கூடாதே... என்பதே எமது கவலை.

    இளம் பசிக்காரனுக்கு கஞ்சி ஊற்றாதவன், புளிச்சேப்பக்காரனுக்கு பிரியாணி கொடுத்து மகிழ்கிறான்.

    இப்பதிவு ஒரு பாடலோடு முடிந்து விட்டதே...

    பதிலளிநீக்கு
  7. அறிஞர் பெர்னாட்சாவின் பிறந்த நாள் 26.07.(1856 ) நேற்றுதானே....!!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம்... இன்று நம் நம்பிக்கை நாயகன் டாக்டர். A.P.J. அப்துல் கலாம் அவர்களின் ஐந்தாம் ஆண்டு நினைவு நாள்...

      நீக்கு
  8. மிக அருமையான பதிவு.
    இரு நிகழ்வுகளையும் வாசித்து மகிழ்ந்தேன்.

    பேரிறிஞர் பெர்னாட்ஷா அவர்கள், டாகடர் அப்துல்கலாம் அவர்கள் கொடுத்த காசோலைகள் பற்றி அறிந்து கொண்டேன்.

    //வாழைப் போலத் தன்னைத்தந்து தியாகி ஆகலாம்
    உறுதியோடு மெழுகு போல ஒளியை வீசலாம். //

    அருமை.

    அப்துல்கலாம் அவர்கள் கொடுத்த காசோலை எவ்வளவு உன்னதமானது! இந்த குறளும், பாடலும் மேலும் பெருமை சேர்ப்பது உண்மை.



    எதும் இல்லாமல் இருப்பவருக்கு கொடுப்பதுதான் ஈகை.

    இருப்பவர்கள் ஒருவருக்கு ஒருவர் கொடுத்துக் கொள்வதில் என்ன இருக்கிறது!

    பதிலளிநீக்கு
  9. அப்துல் கலாம் போன்ற உயரிய மனிதர்கள் இனி பிறப்பார்களா, பிறந்தாலும் கலாம் போல தொடர்வார்களா என்பது சந்தேகமே.
    அரிதினும் அரிதாய் பிறந்தவர்
    அவர் நினைவினைப் போற்றுவோம்

    பதிலளிநீக்கு
  10. போற்றத்தக்க அரிய மனிதர்களைப் பற்றிய பதிவு அருமை. நம்மவரான கலாம் சற்று மேலேதான் என்று உணரும் அளவு உள்ளது.

    பதிலளிநீக்கு
  11. வரலாற்று நிகழ்வுகளை
    சிறப்பாகப் பகிர்ந்து
    சிந்திக்கவைக்கிறியள்

    பதிலளிநீக்கு
  12. வணக்கம் சகோதரரே

    அருமையான பதிவு. இரு கதை நிகழ்வுகளும் இன்று படித்து தெரிந்து கொண்டேன். பேரறிஞர் பெர்னாட்ஷாவின் சமயோஜித அறிவை எண்ணி வியக்கிறேன்.

    திரு கலாம் அவர்களின் உயர்ந்த குணம் இந்த நிகழ்வொன்றிலேயே தெள்ளத்தெளிவாக விளங்குகிறது. நல்ல மனிதர் என்பதாலேயே அவரின் புகழ் என்றும் மறையாமல் நீடித்து நிற்கிறது. அதற்கேற்ற குறளும். அருமையான பி. பி ஸ்ரீநிவாஸின் இனிமையான குரல்வளம் மிகுந்த திரைப்படப் பாடலும் பொருத்தமாக இன்று அவர்கள் புகழ் வீசி மணம் பரப்புகிறது.

    ஈகையின் சிறப்பும், குறளும் அருமை. நாட்டுக்காக உழைப்பவர் தம் தலைமை பணியின் சிறப்பை, தமக்கு முன் சிறப்பானதாக செய்தவர்களை முன்னுதாரணமாக கொண்டு அவ்வழியில் உறுதியாக நின்று மேலும் சிறப்பாக்கி கொள்ள வேண்டும். அப்போது செய்யும் எதையும் எதிர்நோக்காத ஈகை அச்செயலை மேலும் சிறப்பாக்கும்.

    பதிவை அருமையாக தொகுத்தளித்ததோடு , தொழில் நுட்பங்கள் வியக்கும் வைக்கின்றன. பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  13. இப்படிப்பட்ட புகழ் பெற்ற மனிதரை மண்ணின் மைந்தருக்கு முத்தமிழ் அறிஞரும் பூரட்சி தலைவியும் இவரின் இறுதி ஊர்வலத்தில் கலந்து கொள்ளவில்லை.

    பதிலளிநீக்கு
  14. இரண்டு நிகழ்வுகள் பற்றி அறியத்தந்ததற்கு மனமார்ந்த நன்றி! இரண்டு மனிதர்களில் யார் உயர்ந்தவர் என்பதை கதைகளே சொல்லி விடுகின்றன‌!

    பதிலளிநீக்கு
  15. மாமனிதர்களுள் மகத்தான மா மனிதர் நமது அப்துல் கலாம் ஐயா. அவரது காசோலை நிகழ்வை அறிந்திருக்கிறேன். மீள் நினைவுபடுத்தியமைக்கு நன்றிகள்.அவரது நினைவுநாளான்று அவரை குறித்த நினைவுகள் பகிர்ந்தமை சிறப்பு. பாடல் பொருத்தம்.

    பதிலளிநீக்கு
  16. அரிய நிகழ்வுகளை அறிந்துக் கொண்டேன் ...நன்றி

    பதிலளிநீக்கு
  17. ஆம். உதவி உதவி வரைந்து அன்று. உதவி செய்தார் சார்பின் வரைத்து என்றார் வள்ளுவர். யார் மரத்தால் விழுவான் நாம் ஓடிச்சென்று தூங்குவோம். பதாகை வைத்துப் படம் எடுத்து முகநூலில் போடுவோம் என்று நினைப்பவர்களுக்கு இது நல்ல பதிவு. வாழ்க்கை பற்றி பாடல்களும் விளக்கமும் என்றும் போல் இன்றும்.

    பதிலளிநீக்கு
  18. சிறப்பான தகவல்கள். இரண்டு நிகழ்வுகளையும் பற்றி படித்திருக்கிறேன்.

    குறளும் பாடலும் நன்று.

    பதிலளிநீக்கு
  19. சிறப்பான எடுத்துக் காட்டு. கலாம் அவர்கள் தமிழ் நாட்டில் பொக்கிஷம். அப்பேர்ப்பட்டவரையும் இரண்டாவது முறையாக தேர்ந்தெடுக்க விருப்பம் இல்லாத அரசியல். குடியரசுத் தலைவர் என்றாலெ நமக்கு நினைவுக்கு வருவது. இரண்டே பேர்தான். ஒருவர் டாக்டர் ராதா கிருஷ்ணன். இன்னொருவர் கலாம் அவர்கள். மற்றவர்கள் எல்லாம் வந்தார்கள் போனார்கள்..

    பதிலளிநீக்கு
  20. பெர்னார்ட் ஷா பற்றிய தகவல் புதிது.
    கலாம் ஐயா அவர்களின் நினைவு நாளில் அவரை நினைவு கூர்ந்து நீங்கள் எழுதியது அருமை நண்பரே.

    பதிலளிநீக்கு
  21. அப்துல் கலாம் சராசரி ஜனாதிபதி அல்லர். ஆனால் மற்ற ஜனாதிபதி கள் அவரைப்போல் நடந்து கொண்டார்களா என்றால் இல்லை. விவி கிரி பற்றி மங்களூரில் கேட்டுப் பாருங்கள்!

    பதிலளிநீக்கு
  22. இருமேதைகளின் வாழ்வில் நடந்த நிகழ்ச்சிகளை அறிந்து கொண்டேன்.
    கலாம், கலாம் தான்!! நன்றி அண்ணா.

    பதிலளிநீக்கு
  23. பேரறிஞர் பெர்ட்னாட் ஷா வை விட முனைவர் அப்துல் கலாம் அவர்களே உயர்ந்தவர். ஏனெனில் அந்த பொருளுக்கான பணத்தை தந்துவிட்டாரல்லவா? தற்போது நாட்டிற்கு அறிவுள்ள புத்திசாலிகள் தான் தேவை.

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

நகுதற் பொருட்டன்று நட்டல் மிகுதிக்கண்
மேற்சென்று இடித்தற் பொருட்டு. (குறள் 784)

நட்புச் செய்துகொள்வது நண்பரோடு சிரித்து மகிழ்வதற்காக மட்டும் அல்ல. மிகுதியாகத் தவறு செய்யும்போது, அவரைக் கடிந்து திருத்துவதற்கே ஆகும்.