🏠 வணக்கம் காப்பகம் நன்றி

தேடல் 🔎புதிய பதிவுகளை பெற ✉ஓடவும் முடியாது... ஒளியவும் முடியாது...

என்னடா பொல்லாத வாழ்க்கை...? அட என்னடா பொல்லாத வாழ்க்கை...! யாரை நெனச்சு நம்மை பெத்தாளோ அம்மா... அட போகும் இடம் ஒன்னு தான் இருந்ததா சும்மா...? இதுக்கு போய் அலட்டிக்கலாமா...? அஹா... இதுக்கு போய் அலட்டிக்கலாமா...? (படம் : தப்புதாளங்கள் / இசை : MSV / வரிகள் : கவிஞர் கண்ணதாசன்)


அதான் பாட்டிலே சொல்லிட்டியே... இதுக்குப் போய் அலட்டிக்கலாமா...?

அது சரி... இந்த உலகத்திலே மனிசனைத் தவிர வேறெந்த உயிரினமும் சலிப்பே அடையலே... பறவைகளும், விலங்குகளும் மகிழ்ச்சியா வாழ்ந்து கொண்டிருக்கு...! நமக்கு மட்டும் ஏம்ப்பா சலிப்பு வருது...?

வேறென்ன...? எந்த வயதிலும் முதல்லே சோம்பேறித்தனம் தான்... ஒரு வேலையையும் உருப்படியா செய்றதில்லே... காரணம் ஆர்வமில்லாம செய்றது... தப்பித்தவறி ஆர்வமா செய்றப்போ சின்ன தடை வந்துருச்சின்னா, சோர்ந்து போய் அதை அப்படியே விட்டுறது... இப்படியே வாழ்க்கையை ஓட்டினா, தன்னம்பிக்கை குறைந்து கவனக்குறைப்பாடு அதிகமாகும்... இந்த கவனக்குறைப்பாடு தான் சலிப்பை உண்டாக்கும் விதை-ன்னு பல ஆராய்ச்சிகள் உண்மையை நிரூபிக்குது...

ஆமா, ரொம்ப சிந்திக்கிற அறிவாளிகளும், திறமைசாலிகளும் மட்டுமே அடிக்கடி அலுத்துப் போறாங்கன்னு கேள்விப்பட்டேன்...

அய்யய்யோ... அப்படியா...?! அடியேன் இந்த விளையாட்டிற்கு வரலே... ஆனா, முக்காவாசி வலைப்பதிவர்கள் "வாட்ஸ்அப் பக்தர்களாக + முகநூலே சரணம்" ஆவதை நினைச்சா அப்படித்தான் தோணுது...! ஹா... ஹா...

எல்லாத்திலேயும் கலக்குற கில்லாடிகள் இருக்காங்க... சரி விசயத்திற்கு வா... யாருக்குத் தான் இந்த அலுப்பு சலிப்பு எல்லாம் ஏற்படாது...?

புதிய அல்லது வித்தியாசமான சிந்தனைகள் செய்பவர்களுக்குத் தான்... உண்மையை சொல்லணும்ன்னா, சாதாரண பாமர மக்களுக்கு இந்த அலுப்பு சலிப்பு எல்லாம் ஏற்படாது... ஏன்னா தன்னோட குடும்பத்தோட முன்னேற்றத்திற்கும், திருப்தியா வாழ்றதுக்கு ஏத்த மாதிரி சம்பாதிக்கிறதுக்கும் அவங்க மூளை செயல்படுது... அதைவிட முக்கியமா சின்ன சின்ன மகிழ்ச்சியிலே தன் குடும்பத்தோடு மகிழ்ச்சியில் திளைப்பவங்க..., அவங்களுக்கு எப்படி சலிப்பு வரும்...? சின்னஞ்சிறு கூட்டுக்குள்ளே சொர்க்கம் இருக்கு...! - அட சின்ன சின்ன அன்பில்தானே ஜீவன் இன்னும் இருக்கு... பட்டாம்பூச்சிக் கூட்டத்துக்குப் பட்டா எதுக்கு...? - அட பாசம் மட்டும் போதும் கண்ணே காசு பணம் என்னத்துக்கு...? (படம் : இந்தியன் / இசை : A.R. ரஹ்மான் / வரிகள் : கவிஞர் வைரமுத்து)

ஒருவேளை நாம சலித்துப் போறோம்ன்னா வாழ்க்கையோட அர்த்தமற்ற நிலையை அல்லது பயனற்ற நிலையைப் புரிந்து கொண்டோம் என்று அர்த்தமா...? அப்படின்னா வாழ்க்கையை எப்படி எதிர்கொள்வது...?

இரண்டே இரண்டு விதம் தான்... ஒன்னு அதிலிருந்து விலகி ஓடிப் போவது அல்லது தப்பித்துக் கொள்வது - காரணம் பயம்..! இரண்டாவது ஓடவும் முடியாது... ஒளியவும் முடியாது-ன்னு எதையும் நேருக்குநேர் எதிர்கொள்வது - பயம் என்பதே என்னவென்று தெரியாதவர்கள்... துணிவு மட்டும் இருந்தா, எந்த வயதிலும் வாழ்க்கையிலே சுவாரசியம் வரும், ஆர்வம் வரும், உண்மையையும் அறிந்து தெரிந்து புரிந்து கொள்ள முடியும்...!© நான் மகான் அல்ல நா. முத்துக்குமார் யுவன் ஷங்கர் ராஜா ஹரிசரண் @ 2010 ⟫

கவலை நம்மைச் சிலநேரம் கூறுப்போட்டு துண்டாக்கும்... தீயினை தீண்டி வாழும்போதே தீபத்தில் வெளிச்சம் உண்டாகும்... கடலை சேரும் நதி யாவும் தன்னை தொலைத்து உப்பாகும்... ஆயினும் கூட மழையாய் மாறி மீண்டும் அதுவே முத்தாகும்... ஒரு வட்டம்போலே வாழ்வாகும் - வாசல்கள் இல்லா கனவாகும்... அதில் முதலும் இல்லை முடிவும் இல்லை - புரிந்தால் துயரம் இல்லை... வா வா கட்டலாம் அன்பால் படிக்கட்டு...

அடப்போப்பா...! எனக்கென்னமோ சிலதை முழுசா புரிஞ்சிக்காம இருந்தாலே போதும்ன்னு நினைக்கிறேன்...! நினைக்கிறது உடனே நடக்கலேன்னாலும், நடுவிலே எதாவது இடைஞ்சல் வர்றதும் நம்மை எப்படி ஆட்டிப்படைக்கிறதுன்னு தெரியுமா...?

அடேய் மனசாட்சி, நீ இப்போ பேசாதே... சலிப்படைய ஆரம்பிச்சிட்டே... என்னால் தொடர்ந்து எழுத முடியாது...! சிறு சிறு தாமதங்களும், சிறு சிறு தடைகளும் கூட பெரும் சலிப்புகளாக மாறி, நம்மை எந்த காரியத்திலும் சரிவர ஈடுபட முடியாமல் செய்யும்... ஏன்னா, நமக்குப் பொறுமை அப்படி...! சரி, இப்படிச் சேர்ந்து வரும் சலிப்புகளைத் துரத்தி சந்தோசங்களாக மாற்றுவது எப்படி...? உதாரணத்திற்குக் கற்பனையாக நம்ம கில்லர்ஜியுடன் :-

கடுமையான போக்குவரத்து உள்ள மும்பை நகரம்... சிக்னலில் சிவப்பு விளக்கு எரிந்ததால் வண்டியை நிறுத்தி இருந்தார் கில்லர்ஜி... அவரை சாலை ஓரத்திலிருந்து பார்த்த DD (நானேதான்), விரைவாக ஓடி வந்து நலம் விசாரித்து விட்டு காரில் ஏறிக் கொண்டார்... சிக்னலில் பச்சை விழுந்தவுடன் காரை கிளப்பினார் கில்லர்ஜி...

DD : என் நல்ல நேரம் உங்களை சிக்னலில் பார்த்ததால், காரில் ஏறிக் கொள்ள முடிந்தது... இன்னும் அரை மணி நேரத்தில், ஒரு முக்கிய வியாபாரியைச் சந்திக்க வேண்டும்... கொஞ்சம் சீக்கிரம் போங்க ஜி...

( அடுத்த 5 நிமிடத்தில் அடுத்த சிக்னல் வந்தது... வண்டி நின்றது... நம்ம ஜி கண்ணை மூடி காத்திருந்தார்... சிக்னலில் பச்சை வந்தவுடன் மறுபடியும் கார் கிளம்பியது... அடுத்த பத்து நிமிடத்தில் மற்றுமொரு சிக்னல்... வண்டி நின்றது... இதே போல் இரண்டு முறை ரீப்பீட்டு...! )

DD : சே... ஊரா இது... ஐந்து நிமிடம், பத்து நிமிடத்துக்கு ஒரு சிக்னல், அதுவும் ரெண்டு நிமிடம் , ஐந்து நிமிடத்திற்கு மேலாகக் காத்திருப்பு... என்ன கொடுமை ஜி இது... சே... என்ன பொழப்புடா இது...!

ஜி : சற்று முன் என்ன சொன்னீர்கள் DD, என் காதில் சரியாக விழவில்லை...

( DD மீண்டும் தன் சலிப்பை வெளிப்படுத்தினார்... )

ஜி : தினமும் என் வீட்டிலிருந்து அலுவலகம் போவதற்குள் கிட்டத்தட்ட 20 சிக்னல்களை கடக்க வேண்டும்... ஒவ்வொரு சிக்னலிலும் எவ்வளவு நேரம் நிற்க வேண்டி வரும் என்பதும் மனப்பாடம்...! ஆனால், ஒவ்வொரு முறை சிக்னலில் நிறுத்தும் வாய்ப்பு ஏற்படும் போதெல்லாம், நான் சலிப்பு கொள்வதில்லை... அந்த ஒரு சில நிமிடங்களில், நம் நண்பர்கள் யாராவது ஒருவருக்காக நான் பிரார்த்தனை செய்வேன்... அதனால் சலிப்பு நேரமானது பிரார்த்தனை நேரமாகி, என் மனத்தை உற்சாகமாக்கி சந்தோசத்தை நிரப்பும்...

( மீண்டும் சிக்னல்... வண்டி நின்றது...)

ஜி : சில சிக்னலில், இன்று புதியதாக ஏதாவது ஒன்றை கற்றுக் கொள்ள வேண்டும் என்று யோசிப்பேன் அல்லது என்னால் முடிந்தவரை யாருக்காவது உதவி செய்ய வேண்டும் என்று உறுதி கொள்வேன்... ஒன்றுமில்லையா... உங்களைப்போல உற்சாகம் தரும் பாடல்களைக் கேட்பேன்... கனவில் கூட எனக்குச் சலிப்பு வராது... இன்று கூட பாருங்க DD, நீங்கள் என்னைப் பார்த்ததும் காரில் ஏறியதும், நம் சந்திப்பிற்கும் ஒரு சிக்னலில் தானே...! வாழ்க்கையில் ஆயிரம் தடைக்கல்லப்பா... தடைக்கல்லும் உனக்கொரு படிக்கல்லப்பா...2 வெற்றிக் கொடி கட்டு, மலைகளை முட்டும் வரை முட்டு, லட்சியம் எட்டும் வரை எட்டு - படையெடு DDயப்பா...!

DD : புரிகிறது ஜி... தடைகளையும் தாமதங்களையும் இனி சபிக்க மாட்டேன்... அதைப் பொறுமையுடன் கையாண்டு நம்மை மாற்றிக் கொண்டால், நிச்சயம் அது சந்தோசங்களைத் தரும்... ரொம்ப நன்றி ஜி... மீண்டும் சந்திப்போம்...

ஹலோ கில்லர்ஜி... ரொம்ப நாள் கழிச்சி ஒரு பதிவு எழுதிட்டேன்... பதிவில் நீங்களும் இருக்கீங்க ஜி...!

அட... ம்... எப்படிப் போகுது வியாபாரம்...? மாசத்திலே பாதி நாள் ஊருலே இருந்தாலும், பதிவு எழுதாட்டியும் சலிக்காம வலைத்தளங்களுக்கு வந்துடுங்க DD... நீங்களும் சில வலைப்பதிவர்கள் மாதிரி காணாம போயிடாதீங்க... ம்... ஒன்று அழிந்து போவதற்கு, அதை உருவாக்கினவர்களே காரணம்... சிவசம்போ...! இதைப் பற்றி ரொம்ப சிந்தனை செஞ்சா, எனக்கும் சலிப்பு வந்துடும்...! ஆமா, எதைப் பற்றிய சிந்தனை பதிவு...? திருக்குறள்...?

உங்க பேச்சிலேயே பதிவைப் பற்றிய பதிலும் இருக்கு... அதுக்கேத்த மாதிரி குறளும் இருக்கு... குறள் தான் இப்பதிவின் அடிப்படை... நன்றி ஜி...

சோம்பேறித்தனம், அதனாலே எதையும் தாமதமாக செஞ்சிக்கலாம்ன்னு நினைக்கிறது, அப்புறம் அதை அப்படியே மறந்து போறது, கடைசியிலே ஓஞ்சி போய் அளவுக்கு மீறி தூக்கம் போடுவது - இந்த நாலும் அழிவை நோக்கி ஒருத்தர், விரும்பி ஏறும் படகு-ன்னு நம்ம வள்ளுவர் வலைப்பதிவுலகத்திற்கும் சேர்த்து சொல்றார் :-

நெடுநீர் மறவி மடிதுயில் நான்கும்
கெடுநீரார் காமக் கலன் (605)
© ஆட்டோகிராப் பா.விஜய் பரத்வாஜ் K.S.சித்ரா @ 2004 ⟫

உள்ளம் என்றும் எப்போதும் - உடைந்து போகக் கூடாது... என்ன இந்த வாழ்க்கையென்றே - எண்ணம் தோன்றக் கூடாது... எந்த மனிதன் நெஞ்சுக்குள் - காயம் இல்லை சொல்லுங்கள்... காலப்போக்கில் காயமெல்லாம் - மாறிப்போகும் மாயங்கள்... உளி தாங்கும் கற்கள் தானே - மண்மீது சிலையாகும்... வலி தாங்கும் உள்ளம் தானே - நிலையான சுகம் காணும்... யாருக்கில்லை போராட்டம் ? கண்ணில் என்ன நீரோட்டம் ? ஒரு கனவு கண்டால் - அதைத் தினம் முயன்றால் - ஒரு நாளில் நிஜமாகும்...! (படம் : ஆட்டோகிராப் / இசை- பரத்வாஜ் / வரிகள் : கவிஞர் பா.விஜய்)

அலுக்காம படிச்சி முடிச்சிடீங்களா...? இப்போ சலிக்காம இப்பதிவைக் குறித்து தங்களின் கருத்து என்ன நண்பர்களே...? நன்றி...

புதிய பதிவுகளை பெறுதல் :


தொடர்புடைய எண்ணங்களின் வண்ணங்கள் சில :


முகநூல் மூலம் கருத்துக்களை பகிர :

கருத்துகள்

 1. மிக விரும்பிப் படித்து முடித்தேன்
  பாடல்கள் தேர்வும் இணைத்துச்
  சொல்லிப்போனவிதமும்
  மிக மிக அருமை
  வாழ்த்துக்களுடன்

  பதிலளிநீக்கு
 2. கில்லர்ஜி இணைந்தது அருமை குறள் பொருத்தம சிறப்பு

  பதிலளிநீக்கு
 3. டிடி என்றால் தி கட்டாத தி த்திப்பு தான்.

  பதிலளிநீக்கு

 4. பெத்தாலோ = பெத்தாளோ...

  ஒன்னுதான் = ஒண்ணுதான்

  இதுக்குப் போயி அலட்டிக்கலாமான்னாலும் சொல்லிட்டேன்!

  ​மனிதனைத் தவிர மற்ற உயிரினங்களுக்கு பேராசை இருப்பதில்லை. அதுவும் ஒரு காரணம்.​

  பச்சைக்கிளிகள் தோளோடு பாடல் எனக்கும் மிகவும் பிடித்த பாடல்.

  கில்லர்ஜியுடனான கற்பனை உரையாடல் உற்சாகம் தருகிறது.

  நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஒரு பதிவு. கில்லர்ஜிதான் தூண்டுகோலா! சபாஷ்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஸ்ரீராம் சார் : சில பிழைகளை திருத்தி விட்டேன்...! நன்றி...

   இனிய நண்பர் கில்லர்ஜி அவர்களை பதிவின் சுவாரஸ்யத்திற்காக இணைத்து கொண்டேன்... ஆனால் தூண்டுகோல் எதுவென்று நினைத்துப் பார்க்கிறேன்... ஒரு பதிவில் சொன்னது போல் சிலரின் கருத்துரைகள், எத்தனை வருடம் என்றாலும் மறக்காது... எனக்கு அடுத்த சிந்தனை பதிவுக்கு வழிவகுக்கும்... யோசித்துப் பார்த்ததில் இந்தப் பதிவின் தூண்டுகோல் இருவரின் கருத்துரைகள் :

   1) 2013 வருட பதிவு : →அதிக பக்தர்களைக் கொண்ட ஒரே மதம் எது ?← என்கிற பதிவில் திரு. அப்பாதுரை அவர்களின் கருத்துரை :

   better late than never - இதைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

   2) 2015 வருட பதிவு : →← ஆயுள் தண்டனையும்... மரண தண்டனையும்...← என்கிற பதிவில் திரு. G.M. Balasubramaniam அவர்களின் கருத்துரை :

   சோம்பலும் சலிப்பும் தனியே விழாது... பிடித்துத் தள்ள வேண்டும்...

   நீக்கு
  2. ஸ்ரீராம் சார். ஒன்னு என்பதுதான் சரி என்று முத்து நிலவன் அவர்கள் கூறுவார் காரணம் ஒன்று என்பதின் திரிபுதான் ஒன்னு. கண்ணு என்பதன் எதுகையாக பயன் படுத்துவதால் ஒண்ணு என்று எழுதப் படுகிறது.

   நீக்கு
 5. ஆஹா... உளச்சலிப்பு ஏற்படும்போதெல்லாம் எடுத்துவைத்து வாசித்துக் கொள்ளலாம்.. அருமையான பதிவு தனபாலன். நடைமுறை வாழ்க்கையோடும் நாம் ரசிக்கும் பாடல்வரிகளோடும் தேன் குழைத்துத் தரும் மருந்துபோல வாழ்வின் அம்சங்களை அழகாக எடுத்துரைக்கிறீர்கள். மிக்க நன்றியும் பாராட்டும்.

  பதிலளிநீக்கு
 6. வாழ்வியலைக் கலக்கும் வலை...DD ,நேற்றுத் தான் அதீத சலிப்புடன், நாம நினைத்தால் இந்த உலகத்தை விட்டு ஓடவும் முடியாது...ஒளியவும் முடியாது.இன்னும் கர்மா கணக்கு
  எவ்வளவு கழிந்திருக்கு என்கிற கணக்கு கூட போடத் தெரியாது. படித்த படிப்பறிவு எதுவும் இதற்கெல்லாம் உதவாது.இந்த சுதந்திரச் சிறையினில் ஆயுள் கைதி நான் எனத் தெரிந்தும், சுய ஜாமீனாக பல நல்ல விஷயங்கைச் செய்து கொண்டே முடிவு தெரியாத வாழ்வைக் கழிக்க வேண்டும்,
  ஏதோ இந்தச் சிறையில் மாயையாக பல நாடகங்கள் நித்தம் அரங்கேற்றமாகிக் கொண்டே இருக்கிறது.பங்கெடுக்காமல் பார்த்து ரசிக்கும் மனப் பக்குவம் கிடைத்ததற்கு எனக்கு நானே நன்றி சொல்லிக்கொண்டிருக்கும் நேரத்தில், உங்களது உற்சாக மடல் கண்ணில் விரிய...மனத்துள் எழுந்த தடை கற்கள் தூசியாக உறுத்த ....இதோ.....வாழ்வின் சுழற்சியில் கடல்நீரில் கலந்த ஆறு கூட உப்பாக மாறி மீண்டும் மழையாகி முத்தாக மாறிய வித்தையை எழுத்தில் படித்த போது ....DD ...... ஒரு உப்புக் கல்லைக் கூட முத்தாக்கும் வாய்ப்பை நல்கிய இயற்கையை எண்ணி வியக்காமல் இருக்க முடியவில்லை. எத்தனையோ நட்சத்திரத்தில் இந்தப் பதிவு விடிவெள்ளியாகி ஒளி வீசுகிறது....இந்த இணைய வானத்திலிருந்து தங்களின் எந்தப் பதிவும் யாரிடமிருந்தும் பிடிபடாமால் தப்ப முடியாது. இந்தப் பதிவை மிகவும் ரசித்துப் படித்தேன்,இன்றைய ஊக்க பானம் இந்தப் பதிவு எனலாம்....நன்றிகள்.
  அன்புடன்
  ஜெயஸ்ரீ ஷங்கர்

  பதிலளிநீக்கு
 7. மிக அழகான வரிகள்,டிடி பாடல்கள் தேர்வு அற்புதம்...ரசித்துப் படித்தேன்..படி தேன்

  பதிலளிநீக்கு
 8. நல்லதோர் பகிர்வு டிடி..... கில்லர்ஜியையும் இங்கே இணைத்துக் கொண்டது சிறப்பு.

  பதிலளிநீக்கு
 9. killerji sagovudanana uraiyadal arputham. ellaarukkum sombal irukku enna seiya. atha meerithan blog post podurom. eethavathu seithu namma uyirpichukanumnuthan sago.

  ondru alinthu povatharku athai uruvakinavangkalee karanam koncham thidukkidavaitha unmai.. hmm.

  padalgalum kuralum arumai. ellaa pattum enakku therincha patungkirathala padiyee padichu parthukiten. nandri DD sago. intha pathivu oru booster :)

  பதிலளிநீக்கு
 10. பெரிய இடைவெளி விட்டு பதிவு பக்கம் வந்திருக்கிறேன்.. சோர்வுக்கு எத்தனையோ காரணங்கள்.. சோம்பேறித்தனம் மட்டும் அல்ல. ஏமாற்றம், துரோகம், அக்கிரமம், அஜாக்கிரதை இப்படி எத்தனையோ நம் உழைப்பை மறைத்துவிடும் போதும் சோர்வு வருகிறது. உங்கள் பதிவு நிச்சயம் புத்துணர்வு தான்.

  பதிலளிநீக்கு
 11. வணக்கம் ஜி
  அருமையான பாடல்களுடனும் பதிவு நகன்ற விதம் அழகு

  சிக்னலில் நிற்கும் பொழுது சலிப்பான நேரத்தை பிரார்த்தனை நேரமாக மாற்றலாம் என்ற (எனது வாயின் வழியாக வந்த) தங்களது கருத்தை ஆமோதிக்கிறேன் ஜி

  அதேநேரம் நான் தற்பொழுது சிக்னலில் நிற்கும் நேரத்தில் மனம் வேதனைப்படுகிறேன் காரணம் அனாதைகளை வைத்து சிக்னலில் பிச்சை எடுக்க வைக்கும் இருள் கூட்டத்தை நினைத்து இவர்களை தடுத்து ஒடுக்க இன்னும் ஒரு மனிதன் கூடவா பிறக்கவில்லை என்று.... ?

  இவர்களை இப்படி வாழ வைத்துவிட்டு ‘’இந்தியா ஒளிர்கிறது’’ என்று சொல்லும் பொழுது நெஞ்சில் பற்றி எரிகிறது.

  அன்று சிக்னலில் சந்தித்ததை பதிவாக்கி விடுவீர்கள் என்று நினைக்கவே இல்லை வழக்கமாக சந்திப்புகளை நான்தான் பதிவாக்குவேன் தாங்கள் முந்தி விட்டீர்கள் வாழ்த்துகள் ஜி

  பதிலளிநீக்கு
 12. எங்க ஊருசிக்னலில் காத்த்திருக்கும் போது..ஆஹா அருமையான ஐடியா.பிடிங்க பூங்கொத்தை💐

  பதிலளிநீக்கு
 13. சலிப்பினை சலிப்பாக்கிவிடும்படி நல்ல தன்னம்பிக்கைப் பதிவு. அனைவரும் எதிர்கொள்ளும் நிலையை அனாயாசமாக விவாதித்த விதம் மிகவும் அருமையாக உள்ளது. நீங்கள் கூறியனவற்றில் சிலவற்றைக் கடைபிடிக்க முயற்சிக்கிறேன், சலிப்பைக் குறைக்க. நன்றி.

  பதிலளிநீக்கு
 14. புதிய முயற்சிகள், சிந்தனைகள், செயல்கள் யாரிடம் இல்லையோ, அவர்கள் மட்டுமே சலிப்பை மனதுக்குள் விதைத்துக் கொள்கிறார்கள். கில்லர்ஜி, சிக்னல், மும்பை, கார் பயணம்... உதாரணங்களுடன் விளக்கம் கலக்கல்.

  பதிலளிநீக்கு
 15. எதிர்பார்த்தால் ஏமாற்றம்தான்
  எதிர்பாராவிடில் எல்லாமே மாற்றம்தான்
  மாற்றம்தான் ஏற்றத்திற்கு வழி வகுக்கும்

  பதிலளிநீக்கு
 16. மிகவும் சிறப்பான, நல்லதோர் பதிவு! அதுவும் கில்லர்ஜி வழியே சலிப்பைப்போக்க வழிகள் சொன்னது மிக அருமை! பாடல்கள் தேர்வு அதனினும் இனிமை!

  பதிலளிநீக்கு
 17. டிடி பின்னிட்டீங்க....உற்சாகம் தரும் பதிவு. நம்ம கில்லர்ஜியுடன் உரையாடல் செம....ஆம் சலிப்பை புறம் தள்ளி....தாமதமானாலும் நினைத்ததை முடிக்க வேண்டும்....அருமை...

  கீதா: அருமை டிடி.... எனக்கும் சுணக்கம் வரும் இடையில்..வருகிறது சோம


  சோம்பேறித்தனத்தால்.அல்ல....பல காரணங்களால்...அதாவது..நான் நன்றாகத்தான் இருப்பேன்...தளர்வு வராது...ஆனால் எழுதுவதில் ஒரு சுணக்கம்..கருத்துகள் மனதில் இருந்தாலும்.புளோ வராமல் எழுதாமல்...இருப்பேன்...நல்லதை நினைத்து, என்னை நானே முடுக்கிக் கொண்டு உற்சாகப்படுத்திக் கொள்ள முனைவேன். நீங்கள் மிக நல்ல கருத்துகளை முன் வைத்துள்ளீர்கள். உற்சாகம் தரும் பதிவு....

  பதிலளிநீக்கு
 18. மிக மிக அருமையான பகிர்வு dd சார்...

  சலிப்படைந்தால் ஒன்றும் நடக்காது....சில நேரங்களில் அத்தகைய எண்ணம் தோன்றும் போது நம்மை நாமே ஊக்குவித்து கொள்ள வேண்டும்..


  பதிலளிநீக்கு
 19. அருமையான பதிவு.

  மனசோர்வு வரும் போதெல்லாம் எடுத்து படிக்க வேண்டும், உற்சாகம் தன்னால் வந்து விடும்.

  பாடல்கள் அத்தனையும் அருமை.

  கில்லர்ஜி சொல்வது போல் பயனுள்ள விஷயம் , அருமை.
  சிறப்பு பதிவு.

  பதிவுகளில் திண்டுக்கல் தனபாலன் பின்னூட்டம் இல்லை என்றால் ஏதோ இழந்தது போல் உணர்வு வரும். எத்தனையோ வேலைகளுக்கு இடையே வருகிறார் என்று மனம் சமாதானம் செய்து கொள்ளும்.

  பதிலளிநீக்கு
 20. சலித்துக்கொண்டால் எதுவும் நடக்காது என்பது தத்துவார்த்தமாக வேண்டுமானால் சரியாக இருக்கலாம். ஆனால், சலிப்பு இயற்கையாய் மனிதனுக்கு வாய்த்த தற்காலிக ஓய்வு என்றே நான் கருதுகிறேன். எப்படி உழைப்புக்குப் பிறகு வருகிற களைப்பு எதிர்மறையானதில்லையோ, அதே போல அவ்வப்போது ஏற்படுகிற சலிப்பு, சற்று நிதானிக்க வைத்து. எங்கே எது தவறியது என்று யோசிக்கவும் வைக்கிறது. அளவுக்கு மீறினால் சலிப்பும் நஞ்சுதான். ஆனால், சலிப்பே இல்லாத வாழ்க்கையெல்லாம் சாமானியர்களுக்கு சாத்தியமானதல்ல. அப்படியொரு ஊடோப்பியா உருவானால், அடியெனுக்கும் ஒரு ரேஷன் கார்டு வாங்கித் தரவும். :-)

  பதிலளிநீக்கு
 21. அப்புறம், ‘என்னடா பொல்லாத வாழ்க்கை’ படத்துக்கு இசையமைத்தவர் எம்.எஸ்.வி அல்ல; விஜயபாஸ்கர் ஆவார். கே.பாலசந்தருக்கு அப்போது மெல்லிசை மன்னர் மீது கொஞ்சம் ”சலிப்பு” தோன்றியிருந்தது. :-)

  பதிலளிநீக்கு
 22. கில்லர்ஜி > டி டி சந்திப்பும் உரையாடலும் வெகு சுவை!

  சலிப்பை விரட்டியடிக்கச் சொன்ன வழிமுறைகள் பின்பற்றத்தக்கவை.

  பதிலளிநீக்கு
 23. சலிப்பும் ஒய்வும்..இந்த இரண்டும் தற்கொலைக்கு சமமுன்னு பெரியார் சொன்னதுதான் என் நிணைவுக்கு வருகிறது.. அருமை

  பதிலளிநீக்கு
 24. அருமை !இந்த சோம்பலும் சலிப்பும் நம்மை கீழே தள்ளிவிடும் மாயமான் போல. அழகான பாடல்கள் அருமையான குறள்.

  பதிலளிநீக்கு
 25. காலம் தாழ்த்துதல், மறதி, சோம்பல், அளவுக்கு மீறிய தூக்கம் ஆகிய நான்கும், கெடுகின்ற ஒருவர் விரும்பியேறும் தோணிகளாம் என அய்யன் திருவள்ளுவர் சொன்னதை அருமையாய் பதிவில் இணைத்து, வழக்கம்போல் தரும் அருமையான பாடல்களுடன், துணைக்கு கில்லர்ஜி அவர்களையும் சேர்த்துக்கொண்டு, தங்கள் பாணியில் ஜமாய்த்துவிட்டீர்கள். பாராட்டுகள்!

  பதிலளிநீக்கு
 26. எப்படா நாம போக வழி கிடைக்கும் என்று பச்சை விளக்கை அல்ல சைடு சிக்னலில் மஞ்சள் விளக்கை பார்க்கும் அவசர நேரத்தில் பிரார்த்தனையா ?இதெல்லாம் டூ மச் :)

  பதிலளிநீக்கு
 27. சலிப்பு கூடாது என்கிற உங்கள் கருத்துக்கும் சலிப்பு ஏற்படும் நேரங்களில் நாம் எப்படி அதைத் தவிர்க்கலாம் என்று கில்லர்ஜி வாயிலாகச் சொன்ன யோசனைகளுக்கும் நன்றி தனபாலன் ஐயா!

  ஆனால் ஒன்று. நீங்கள் பதிவில் கூறியுள்ளபடி விலங்குகளுக்கும் பறவைகளுக்கும் சலிப்பு வருவதில்லை; மனிதர்கள் மட்டும்தான் சலிப்புக் கொள்கிறார்கள். ஆனால், அதற்கான காரணம் நீங்கள் நினைப்பது போல் சோம்பேறித்தனம் இல்லை. இதன் உண்மையான காரணம் மனிதர்கள் மட்டுமே சிந்தனைத்திறன் உள்ளவர்கள் என்பதுதான் என அறிஞர்கள் கூறுகிறார்கள். எப்பொழுதோ படித்த ஒரு கட்டுரையால் அறிந்தது இது. அதில் கட்டுரையாளர் கூறுகிறார், "நாய்க்கு நாம் நாள்தோறும் மாச்சில் (பிசுகோத்து) அளிக்கிறோம். அன்றாடம் ஒரே மாச்சில்லைத்தான் அளிக்கிறோம். ஆனாலும், ஒவ்வொரு முறை மாச்சில்லோடு நாம் வரும்பொழுதும் நாய் குதூகலமடைந்து வாலை ஆட்டுகிறது. ஒவ்வொரு முறையும் மிகுந்த ஆவலுடன் அதை உண்கிறது. இதையே திரும்பத் திரும்பச் சாப்பிடுகிறோமே என்கிற அலுப்பு அதற்குத் தோன்றுவதில்லை. இதற்குக் காரணம், ஒரே விதயத்தை எத்தனை முறை திரும்பத் திரும்பத் துய்த்தாலும்/செய்தாலும் நாய்க்குச் சலிப்பு ஏற்படுவதில்லை. காரணம், அதற்குப் புதுமை மீதான தேடலோ ஆர்வமோ இல்லை. ஆனால், நாம் அன்றாடம் ஒரே உணவை மீண்டும் மீண்டும் சாப்பிட மாட்டோம். எவ்வளவுதான் சுவையான உணவாக இருந்தாலும் ஒரே உணவைத் திரும்பத் திரும்பச் சாப்பிடக் கொடுத்தால் குறிப்பிட்ட தடவைகளுக்கு மேல் நம்மால் அதைச் சாப்பிட முடியாது. மிகவும் சலிப்பு ஏற்பட்டு விடும். காரணம், மனித மூளை சிந்தனைத்திறன் மிகுந்தது. புதுமைகளின் மீதான தேடலும் ஆர்வமும் நிரம்பியது. எனவேதான் மனிதர்களால் ஒரே விதயத்தை மீண்டும் மீண்டும் துய்க்க/செய்ய முடிவதில்லை" என்கிறார்.

  எனவே, சலிப்புகளை எதிர்கொள்ளப் பழகுவது தவறு. அது நன்றாயிருக்கும் நம் மூளையை நாமே மழுக்குவதற்குச் சமம். எப்பொழுதெல்லாம் சலிப்பு ஏற்படுகிறதோ அப்பொழுதெல்லாம் புதுமைகளை நாடுவோம். மூளைக்கு வேலை கொடுப்போம். வாழ்க்கையும் இனிதாகும். மூளையும் பழுதுபடாதிருக்கும்!

  பதிலளிநீக்கு
 28. இப்போதைய சூழ்நிலையில் எனக்கு எழுதிய பதிவாக உள்ளது.

  பதிலளிநீக்கு
 29. நெடுநீர்...ல வரும் அந்த நாலும் என்னிடம் உண்டு...

  பதிலளிநீக்கு
 30. சிக்னலில் சிந்திப்பது - நல்ல சிந்தனை...செயல்படுத்த முயற்சிக்கலாம்...!

  பதிலளிநீக்கு
 31. சலிப்பு? இண்டியால படிக்கும்போது என் பாஸ் ஒரு உதவாக்கரை ஐடியா கொடுத்து இதை பண்ணு னு சொல்லுவார். என் அறிவுக்கு அது "நேரவிரயம்"னு தோனும். பண்ண இஷ்டமே இருக்காது. ஆனால் அந்தாளு "பாஸ்"! பிரச்சினை என்னனா, அவர் சொன்னதை அவருக்காக செய்து அது சரியா வரலைனா, "உனக்குப் பண்ணத் தெரியலை" னு நம்மல கையைக் காட்டி விடுவார். இதுபோல் மற்றவர்களுக்காக ஒரு விசயத்தில் நம்பிக்கை இல்லாமல் எது செய்தாலும் (கடவுளை வணங்குவதும்தான்) சலிப்பு ஏற்படும் எனக்கு. அதனால், அடுத்த முறை இதுபோல் உப்புப் பெறாத ஐடியா என் பாஸ் கொடுக்கும்போது, "என்னால பண்ண முடியாது!"னு சொல்ல வேண்டிவரும். அப்படிச் சொன்னதும் அந்தாளுக்கு அவமானம் தாங்க முடியாது, கோபம் வரும், பழி வாங்க காத்திருப்பான். இவனை எப்படி கவிழ்த்தலாம்னு. இப்போ எனக்கு சலிப்பு போயிடும். இவன் முன்னால இவனைவிட நம்ம நல்லா பண்ணனும்னு ஒரு மோட்டிவேஷன் வரும். இப்படித்தான் அந்தாளோட என் காலம் கடந்தது. சொல்ல வந்தது என்னவென்றால், சலிப்பு வருவது எதிலும் நம்பிக்கை இல்லாமையால். நமக்கு நம்பிக்கை உள்ள காரியம், நம்மால் முடிந்த காரியம் செய்தால் நேரமும் காலமும் ஓடும். சலிப்பு ஏற்படாது. அப்படித்தான் இப்போ என் வாழ்க்கை ஓடுது. என் பாஸ் மாதிரி மூதேவிகளை எல்லாம் கட்டி அழ வேண்டாம்னுதான் அமெரிக்காவிலேயே குப்பை கொட்டுவதுக்கு இன்னொரு முக்கியக் காரணம்.

  பதிலளிநீக்கு
 32. நல்ல ஆக்கபூர்வமான சிந்தனைகள் கொண்ட பதிவு. கில்லர்ஜியைச் சேர்த்துக் கொண்டதும் அதிலே தேவையான இடத்திலே தேவையான பொருளைச் சுட்டிச் சென்றதும் அருமையாக உள்ளது. நேர்மறைச் சிந்தனைகளோடு இருக்க வேண்டும் என்பதை வலியுறுத்தும் பதிவு. இப்போது எனக்கு இருக்கும் மனச்சோர்வில் இது போன்ற பதிவுகள் வரவேற்கத் தக்கவை.

  பதிலளிநீக்கு
 33. மிக பொருத்தமான இணைப்புகள் .
  இனிய வாழ்த்துகள் சகோதரா
  tamil manam - 16
  https://kovaikkothai.wordpress.com/

  பதிலளிநீக்கு
 34. பயனுள்ள யோசனைகள் அடங்கிய , வழக்கம்போலப் பாடல்களுடன் கூடிய , திருக்குறளை மேற்கோள் காட்டி எழுதிய கட்டுரையை சுவைத்து வாசித்தேன் ; பின்னூட்டம் தந்தவர்களும் தங்கள் பங்குக்கு அரிய செய்திகளை வழங்கியுள்ளனர் . நன்று .

  பதிலளிநீக்கு
 35. தெம்பேற்றி இருக்கிறீர்கள் எனக்கும். துவண்டு கிடக்கும் போது தோள் கொடுத்துத் தாங்கும் பாசமிகு சகோதரராக! எல்லாவற்றுக்குமான களஞ்சியமாக வள்ளுவம் இருப்பதும் அதில் தங்களின் பாண்டித்தியமும் அடங்கா வியப்பு.

  பதிலளிநீக்கு
 36. உற்சாகமும் அலுப்பும், துறுதுறுப்பும் சோர்வும் எதிர்மறைதான் எனினும், ஒன்று விரும்பத்தக்கது, இன்னொன்று விரும்பத்தகாதது எனினும் அவை - two sides of the same coin தான். வாழ்வெனும் உன்னதத்தின் இருபக்கங்களில் இவை எங்கோ, எப்போதாவது நிகழ்ந்தே தீரும். மாறி மாறி வரக்கூடும்.

  எல்லாவற்றையும் தாண்டி மனிதன் வாழ்வை, தன் வாழ்வை மட்டுமல்ல, இம்மண்ணில் மனித வாழ்வை - எப்படி அவதானிக்கிறான், புரிந்துகொள்கிறான் என்பதைப் பொறுத்து அமையும் அவனது தடம். இருந்தாலும், எல்லோருக்கும் உண்டு இங்கே இடம்!

  பதிலளிநீக்கு
 37. தனபாலன் சார் நினைவு இருக்கா என்னை (நினைவு படுத்தி கொள்ளுங்கள் )ஹான் கொழுப்பு அப்படி நினைச்சீங்கனா
  என் பிளாக் இன்னும் சாகலை அப்ப அப்ப இருக்கானு பார்த்துக்குவேன்.... இந்த பதிவு சூப்பர் ஓடியோடி ஒளிஞ்சாலும் சில விஷயம் இழுத்துட்டு வந்துவிடும் அப்படித்தான் உங்க இந்த பதிவு என்னை போல் உள்ளவர்களுக்கு சொல்ல படைத்து போல் .....பாருங்க இப்பவும் சலிப்பை சல்லடை போட்டு சலிச்சாலும் நிக்குதே கொஞ்சம்....... உங்கள் கில்லர்ஜீயின் சாராம்சம் மிகவும் புதுமை சலிப்புக்கு..... பாடல்கள் மிக பொருத்தம்
  உனக்கு மனகுரல் குறளின் உதவியோடு அருமை ....... இது ஒரு சோம்பேறியின் குரல்

  பதிலளிநீக்கு
 38. பாடல்களுடன் சிறந்த கருத்துக்களும் பகிர்வை சிறப்பிக்கின்றது.

  பதிலளிநீக்கு
 39. நல்லது டிடி நல்ல பதிவு..
  வாழ்த்துகள்
  https://kovaikkothai.wordpress.com/

  பதிலளிநீக்கு
 40. முகநூலே சரணம் என்போரும்
  வாட்ஸ்அப் பக்தர்களும்
  ஒரு நாள் வலைப்பூவே
  தஞ்சமென வருவார்கள்


  தாங்கள் https://seebooks4u.blogspot.com/2017/08/blog-post.html இல் வெளியிட்டுள்ள மின்நூல்களை 10,000,000 வாசகர்களுக்குப் பகிர்ந்து உதவுங்கள். என்னங்க... இந்த உதவியைத் தானே கேட்கிறேன்.

  பதிலளிநீக்கு
 41. வணக்கம் திண்டுக்கல் தனபாலன், வாழ்க வளமுடன்.
  என் பதிவுகளுக்கு வரவில்லை என்றவுடன் ஊருக்கு போய் இருக்கிறீர்கள் என்று நினைத்தேன். நலம் தானே?

  பதிலளிநீக்கு
 42. நலமா நண்பரே? மறந்து விட்டீர்களே!
  உங்களுக்கும் வள்ளுவருக்கும் ஏதோ முற்பிறவி தொடர்பு இருக்கிறது என்று நினைக்கிறேன்.

  பதிலளிநீக்கு
 43. வணக்கம் தனபாலன், வாழ்க வளமுடன்.
  இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

நகுதற் பொருட்டன்று நட்டல் மிகுதிக்கண்
மேற்சென்று இடித்தற் பொருட்டு. (குறள் 784)

நட்புச் செய்துகொள்வது நண்பரோடு சிரித்து மகிழ்வதற்காக மட்டும் அல்ல. மிகுதியாகத் தவறு செய்யும்போது, அவரைக் கடிந்து திருத்துவதற்கே ஆகும்.