🏠 வணக்கம் காப்பகம் நன்றி

தேடல் 🔎



புதிய பதிவுகளை பெற ✉



பெண்ணின் பெருமையே பெருமை...

வணக்கம் நண்பர்களே... முதலில் ஒரு பாட்டு கேட்போமா...?


துணையில்லாத வாழ்வினிலே சுகம் வருமா...? மனத் துயரமெல்லாம் தனிமையிலே மறைந்திடுமா...? மனமிருந்தால் வழி இல்லாமல் போகுமா...? உயிர் வாழும் வரைக்கும் நெஞ்சம் மறந்திடுமா...? தனிமையிலே... தனிமையிலே இனிமை காண முடியுமா...?© ஆடிப் பெருக்கு கே.டி. சந்தானம் A.M.ராஜா A.M.ராஜா @ 1962 ⟫ || எங்கிருந்து நீ வாடுகின்றாயோ...? துன்ப கீதமே பாடுகின்றாயோ...? இந்த நிலை இன்று மாறுமோ...?2 - உனை காணும், இன்ப நாளுமே வந்து சேருமோ...? நினைந்து நினைந்து நெஞ்சம் உருகுதே - உன்னை - நினைந்து நினைந்து நெஞ்சம் உருகுதே, நீங்கிடாத துன்பம் பெருகுதே...© சதாரம் அ.மருதகாசி G.ராமநாதன் T.M.சௌந்தரராஜன் @ 1956 ⟫

மேலுள்ள வரிகளை மட்டும் பாடுவதைக் கேட்க → சொடுக்குக ►

கேட்டீர்களா...? காதலன் மடலேறி, இப்படி மாறிமாறி பாடிக்கொண்டே இருக்கிறான்...! அந்த வயதில் துணையில்லாத வாழ்வினிலே சுகம் சிரமம் தானே...? அப்புறம் எப்படித் தனிமையிலே இனிமை காண முடியும்...? அறனெனப் பட்டதே இல்வாழ்க்கை (49) என்று, அறம் சிறப்பித்துச் சொல்லப்பட்டதல்லவா...? நெஞ்சம் மறக்காமல் அடுத்து நெஞ்சுருகி, காதலியும் தன்னைப் போல வாடிப்போய், துன்ப கீதம் பாடுவாள் என்று நினைந்து நினைந்து உருகும் காதலன் மடலேறுதலை, நாம் நினைத்து நினைத்து, அறிந்து தெரிந்து கொள்ள வேண்டும்...

அது, சங்க கால இலக்கியங்களில், மடலேறுதல் என்பது ஆண்களுக்கு மட்டுமே உரிய மரபு என்று உள்ளது... பெண்கள் மடல் ஏறுதல் இல்லை என்பதும் தொல்காப்பியரின் கூற்றே... ஆனால், பக்தி இயக்கக் காலத்தில் வாழ்ந்த திருமங்கை ஆழ்வார் இயற்றிய சிறிய திருமடல், பெரியதிருமடல் ஆகிய நூல்களில், தலைவனாகிய இறைவனை அடைவதற்குரிய முயற்சியாகத் தலைவி மடல் ஏறப் போவதாகக் கூறுகிறாள்... பக்திக் கால இலக்கியங்களில் கடவுளர்கள் முதன்மை... எனவே இறைவனைத் தலைவனாகவும் தம்மைத் தலைவியாகவும் கொண்டு பல பாடல்கள் இயற்றப்பட்டு உள்ளன... சங்க இலக்கிய அகப்பொருள் மரபுகளைச் சில மாற்றங்களுடன், பக்தி இலக்கியத்துள் புகுத்த முயன்றதில் விளைவாக, இந்த மடல் இலக்கியம் படைத்தது எனலாம்... அந்தப் பற்று ஒரு பேரின்பக் காதல்...! சரி, நம் ஐயன் என்ன சொல்கிறார்...?

மடலேறுதல் ஆண்கள் மட்டுமே என்பது மட்டுமல்லாமல், அதை ஒரு ஆண் மூலமாக, பெண்ணின் பெருமையை இந்த உலகத்திற்குச் சொல்கிறார்... இந்த அதிகாரத்தின் சிறப்பே இது தான்...! மேலும் பசப்புறுபருவரல் அதிகாரத்தின் இரு குறள்களிலும் (1189&1190), பெண்ணின் உயர்ந்த உள்ளத்தை இனிமையாகக் கூறுவார் ஐயன்... இனி தொடர்வோம்... மடலேறுதல் பற்றிய விளக்கம் அறிய "முன்னோட்டம்..." என்கிற பதிவை வாசிக்காதவர்கள் இங்கு சொடுக்கிச் சென்று வாசித்து விடவும்...
அதிகாரம் 114 ♥♥♥ நாணுத்துறவுரைத்தல் ♥♥♥ (1135-1137)

நாணத்தையும் நல்லாண்மையையும் இழந்து கொண்டிருக்கும் எனக்கு, வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல மாலைநேரம் வேறு வருகிறது... மலர்ச்சரம்போல் சிறிய வளையல்களை அடுக்காக அணிந்த என்னவள், மாலைப் பொழுதின் மயக்கத்திலே வரும் காதல் நோயையும், மடலேறுதல் வேலையையும் அடுக்கடுக்காக எனக்குத் தந்து, நொந்து நோக வைக்கிறாள்...

தொடலைக் குறுந்தொடி தந்தாள் மடலொடு
மாலை உழக்கும் துயர் 1135


கண்ணுக்கொரு வண்ணக்கிளி, காதுக்கொரு கானக் குயில், நெஞ்சுக்கொரு வஞ்சிக்கொடி நீதானம்மா... தத்தித் தவழும் தங்கச் சிமிழே, பொங்கிப்பெருகும் சங்கத் தமிழே, முத்தம் தர நித்தம் வரும் நட்சத்திரம்... யாரோடு இங்கு எனக்கென்ன பேச்சு...? நீதானே கண்ணே நான் வாங்கும் மூச்சு... ராசாத்தி உன்ன காணாத நெஞ்சு - காத்தாடி போலாடுது... பொழுதாகிப் போச்சு விளக்கேத்தியாச்சு - பொன்மானே ஒன்னத் தேடுது... ராசாத்தி உன்ன காணாத நெஞ்சு - காத்தாடி போலாடுது...

© வைதேகி காத்திருந்தாள் வாலி இளையராஜா P.ஜெயச்சந்திரன் @ 1984 ⟫

இப்பொழுதுள்ள நிலைமையில் எவ்வளவு நொந்துபோனாலும், மடலேறுதல் ஒன்றுதான் ஒரே தீர்வு... என்னவளை நினைத்து என் கண்கள் இரவெல்லாம் உறங்காது... அதே சமயம் மடலூர்தலை உறுதியாக நள்ளிரவிலும் நினைத்துக் கொண்டிருப்பேன்...

மடலூர்தல் யாமத்தும் உள்ளுவேன் மன்ற
படல்ஒல்லா பேதைக்கென் கண் 1136


உலகமெல்லாம் சிரிக்கையிலே அழுதிருக்கும் அந்த நிலவு... பாதையிலே வெகுதூரம், பயணம் போகின்ற நேரம்... காதலை யார் மனம் தேடும்...? இதில் நான், அந்த மான் நெஞ்சை நாடுவதெங்கே கூறு... ஓடும் மேகங்களே ஒருசொல் கேளீரோ - ஆடும் மனதினிலே ஆறுதல் தாரீரோ...2

© ஆயிரத்தில் ஒருவன் கண்ணதாசன் விஸ்வநாதன்-ராமமூர்த்தி T.M.சௌந்தரராஜன் @ 1965 ⟫

ஆமாம், நான் மட்டுமே காதல் நோயால் வருந்துகிறேனா...? எனது காதலிக்கும் அது வருத்துமே...? அவள் என்ன செய்வாள்...? சுனாமி போலக் காதல் நோய் எழுந்து தாக்கினாலும், மடலேறாது பொறுத்துக் கொள்ளும் பெண் பிறவியைப் போலப் பெருமையான பிறவி, இவ்வுலகத்தில் வேறு இல்லை...

கடலன்ன காமம் உழந்தும் மடலேறாப்
பெண்ணின் பெருந்தக்க தில் 1137


ஆண்டவன் உலகத்தைப் படைத்து விட்டான், அன்றுடன் பணியை முடித்துக் கொண்டான்... அவன் - படைத்த உலகத்தைக் காத்திடவே2 - பண்புள்ள பெண்களை அனுப்பி வைத்தான்... பெண்ணின் பெருமையே பெருமை... அன்புடன் பண்பும் ஆசையும் பாசமும்2 அழகு முகமும் இயற்கையில் அமைந்த -

© மனைவி மாயவனாதன் K.V.மகாதேவன் P.சுசீலா @ 1969 ⟫



மேலிருந்து ஒவ்வொரு இதயத்தையும் சொடுக்கி வாசிக்கவும்... கேட்டும் ரசிக்கலாம்... நன்றி... முந்தைய பகிர்வான "நான் என் செய்வேன் ?" வாசிக்காதவர்கள் இங்கு சொடுக்கவும்...
தொடரும்...

நண்பர்களே... தங்களின் கருத்து என்ன...?

புதிய பதிவுகளை பெறுதல் :


தொடர்புடைய எண்ணங்களின் வண்ணங்கள் சில :


முகநூல் மூலம் கருத்துக்களை பகிர :

கருத்துகள்

  1. மடலேறுதல் ஆண்களுக்கு மட்டுமே என்பதே பெரும்பான்மைக் கருத்தா? பதிவு வழக்கம்போல சிறப்பு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தொல்காப்பியம் : அகத்திணையியல் : எத்தினை மருங்கினும் மகடூஉ மடன்மேல் பொற்புடை நெறிமை இன்மையான்

      நீக்கு
  2. பிரமாதம் அண்ணா. எப்பொழுதும்போல் திருக்குறளுக்கு இனிமையான பாடல்களையும் இணைத்து அழகாகப் படைத்து விட்டீர்கள்.

    பதிலளிநீக்கு
  3. வலைத்தளத்தின் வடிவ மாற்றம் அழகு. ஆனால் பல தெரிவுகள் இல்லை என நினைக்கிறேன். மாற்றம் ஒன்றே மாறாதது அல்லவா? நிற்க, பதிவு சிறப்பு. திகட்டாத பழைய பாடல்களையும் திருக்குறளையும் இணைத்துத் தந்திருக்கிறீர்கள். சிறப்பு. தொடர்ந்து வாசித்துக் கொண்டிருக்கிறேன். வாசிப்பிற்கு அருமையான பதிவுகள். தொடருங்கள், தொடர்வோம்...

    தமிழ்மணத்துக்கு மாற்றாக வலைத்திரட்டியை உருவாக்கும் புதிய முயற்சி. உருவாகியது புதிய இணையத்தளம்: வலை ஓலை .
    இதேநேரம் நமது, வலை ஓலை இணையத்தளத்தில் பரீட்சார்த்தமாக ஆறு வலைத்தளங்கள் இணைக்கப்பட்டுள்ளன. அத்துடன் தங்களது பெண்ணின் பெருமையே பெருமை…! பதிவும் எமது தளத்தில் இணைக்கப்பட்டுள்ளது. அத்துடன், அடுத்த மாதம் முதல் தமிழ்மணம் போல தனிப்பதிவுகளாக அனைத்து வலைத்தளங்களையும் இணைக்கவும் நடவடிக்கை எடுத்துள்ளோம். உங்கள் மேலான ஆதரவை வழங்க கேட்டுக் கொள்கிறேன்.

    பதிலளிநீக்கு


  4. வணக்கம் ஜி வழக்கப் போல அற்புதமான பாடல் வரிகளை இணைத்த குறள்களோடு பதிவு அருமை.

    தளத்தின் வடிவை மாற்றி விட்டீர்களே...
    விளம்பரங்கள் படுத்துகிறது ஜி

    பதிலளிநீக்கு
  5. ஓவியம், திருக்குறள், பகிர்ந்த பாடல்கள் அனைத்தும் மிக அருமை.
    விளம்பரத்தால் எப்படி பின்னூட்டம் போட கொஞ்சம் குழம்பி விட்டேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இனிய நண்பர் கில்லர்ஜி அவர்களுக்கும், கோமதி அரசு அம்மா அவர்களுக்கும், விளம்பரங்கள் வருவதை வேறு இடத்தில் மாற்றம் செய்துள்ளேன்... எங்கு வருகிறது என்று கவனிக்கிறேன்...

      நீக்கு
  6. திருக்குறளுக்கு பொருத்தமான திரைப்படப் பாடல்களை தேர்வு செய்து வழக்கம்போல் எங்களை பிரமிக்க வைத்துவிட்டீர்கள்! வாழ்த்துகளும் பாராட்டுகளும்!

    பதிலளிநீக்கு
  7. மடலேறுதல் ஆண்களுக்கு மட்டுமே என்ற சிந்தனையை மாற்றியது பகிர்வு டிடி. விளம்பரம் தொல்லை கொடுக்குது.

    பதிலளிநீக்கு
  8. குறள் ,மடலேறுதல் அந்த விளக்கப்படம் எல்லாம் அருமை சகோ . ஒரேயொரு சந்தேகம் இப்படி ஓவியமாய் வரைந்து எடுத்து செல்லும்போது பெண்ணின் பெற்றோர் பார்க்க மாட்டார்களா ? அதனால் அக்காலத்தில் பிரச்சினை வராதா ?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பிரச்சனை இல்லாமல் இருக்குமா...? அடுத்தடுத்த பகிர்வுகளில் இன்னும் அதிக தகவல்களை அறிந்து கொள்ளலாம்... ஒன்றே ஒன்றை சொல்கிறேன்... அந்தக்காலத்தில் "சாதி" கிடையாது... அதற்கு முன் சாதி என்பதே தமிழ்ச்சொல் அல்ல...! சங்ககாலத்தில் சாதி என்ற சொல்லோ அல்லது அதைப் பற்றி கருத்துருவாக்கமோ தமிழர்களிடமில்லை...!

      நீக்கு
  9. குறளோடு சேர்ந்த அத்தனையும் அருமையான பாடல்கள்..

    பதிலளிநீக்கு
  10. வணக்கம் சகோதரரே

    அருமை. வழக்கம் போல் இந்த தடவையும் தங்கள் வலை நுட்பம் பிரமிக்க வைக்கிறது. பொருத்தமான ஈரடி குறளுக்கேற்ற திரைப்பட பாடலும், அதன் விளக்கமுமாக பதிவு மிகவும் அமர்க்களமாக நன்றாக உள்ளது.

    நானும் கருத்தை எங்கே போடுவது என கொஞ்சம் தடுமாறினேன். பிறகு தாங்கள் காட்டிய வழியில் வந்து கருத்திடுகிறேன். தங்கள் தொழில்நுட்பத்திற்கு என் அன்பான வாழ்த்துகள். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  11. தளம் மிகவும் அழகாகவும் சிறப்பாகவும் உள்ளது. ஆணின் மூலமாகப் பெண்ணின் பெருமை...நம் இலக்கியப்பெருமைகளில் இதுவும் ஒன்று.

    பதிலளிநீக்கு
  12. சிந்திக்க நல்ல கருத்துகளையும் கேட்டு இன்பமுற இனிய பாடலடிகளையும் தந்தமை பாராட்டுக்குரியது. அடுத்த பதிவை எதிர்நோக்குகிறேன்.

    பதிலளிநீக்கு
  13. சிறப்பான பகிர்வு தனபாலன். ஒவ்வொரு குறளுக்கும் பொருத்தமான பாடல் தேர்வு. பாராட்டுகளும் வாழ்த்துகளும்.

    பதிலளிநீக்கு
  14. மிக அருமை....

    ரசித்து வாசித்தேன்...

    திருமங்கையாழ்வார் பராங்குசநாயகி பாவத்தில் பாடி மடலேறிய பாடல்களை பெரும் வியப்பில் வாசித்து இருக்கிறேன்...

    அது போல இன்று ஐயனின் குறளையும் அறிந்துக் கொண்டேன்...

    பதிலளிநீக்கு
  15. நான் நேற்றுதான் நினைத்துக் கொண்டேன், "டி.டி. அழகாக எழுதுகிறார், இன்னும் கொஞ்சம் எளிமையாக எழுதினால் நன்றாக இருக்குமே, சொல்லலாமா?" என்று, பிறகு அதுதான் உங்களின் பாணி, அதை ஏன் மாற்றிக் கொள்ளச் சொல்ல வேண்டும்? என்றும் தோன்றியது.  எதுவும் சொல்லத்தேவை இல்லாமல் எளிமையாக எழுதியிருக்கிறீர்கள். இடை இணைப்புகள் நன்று. 

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

நகுதற் பொருட்டன்று நட்டல் மிகுதிக்கண்
மேற்சென்று இடித்தற் பொருட்டு. (குறள் 784)

நட்புச் செய்துகொள்வது நண்பரோடு சிரித்து மகிழ்வதற்காக மட்டும் அல்ல. மிகுதியாகத் தவறு செய்யும்போது, அவரைக் கடிந்து திருத்துவதற்கே ஆகும்.