🏠 வணக்கம் காப்பகம் நன்றி

தேடல் 🔎



புதிய பதிவுகளை பெற ✉



பணம் வேண்டுமா...?

தலைப்பைப் பார்த்து, பல கற்பனைகளோடு எதிர்பார்க்கும் நண்பர்களே...! இது கதை... முந்தைய பதிவில் பணம்.பணம்..பணம்... என்ற தலைப்பில் பாட்டுக்களைக் கேட்டோம்... இப்போது பணத்தைப் பற்றி ஒரு சின்ன கதை...!


ஒரு நாள் விவசாயி ஒருவன் தன் ஊரின் பக்கத்தில் உள்ள காட்டின் வழியாகப் போய்க் கொண்டிருந்தான்... அங்கே மிகவும் பெரிய மரம் ஒன்று இருந்தது... அவன் மரத்தின் நிழலை அடைந்ததும், "பணம் வேண்டுமா...பணம்...?" என்று ஒரு குரல் கேட்டது.

விவசாயி சுற்றும் முற்றும் பார்த்தான்... மேலும் கீழும் பார்த்தான்... அவன் கண்ணுக்கு ஒருவரும் தென்படவில்லை... ஆயினும் மீண்டும் குரல் ஒலித்தது... "பணம் வேண்டுமா...பணம்...?" என்று கேட்டது... அது மாயக்குரல்... உருவமற்ற ஒருவனுடைய குரல் அசரீரி.

ஏழை விவசாயி வியப்பு மிகுந்து விழித்தான்... மிரள மிரளப் பார்த்தான்... ஒருவரும் இல்லை என்றாலும் குரலோசை உண்மையாகவே இருந்தது.

"பணம், ஏழு பெட்டி நிறைய என்னிடம் இருக்கிறது... உனக்கு வேண்டுமா...? உடனே சொல்," என்று கொஞ்சம் அதிகாரமாகவே கேட்டது குரல்.

பணம் வேண்டாமென்று சொல்ல மனம் வருமா...? அதுவும் ஏழு பெட்டி பணம்...!

"வேண்டும்..!" என்று மறுகுரல் கொடுத்தான் விவசாயி... உடனே அசரீரி சிரித்தது.

"அப்படியென்றால் வந்த வழியே திரும்பிப் போ... உன் வீடு போய்ச் சேர்... ஏழு பெட்டிகளையும் நான் வைத்தாயிற்று," என்று கூறியது.

விவசாயி திரும்பினான்... வீடு நோக்கி ஓடினான்... நிற்காமல், குடல் தெறிக்க ஓட்டம் பிடித்தான்... அங்கே கண்ட காட்சி அவனை மெய்சிலிர்க்க வைத்தது... மாயக்குரல் பொய் சொல்லவில்லை என்பதை உணர்ந்தான்.

அவனுடைய வீட்டுக் கூடத்தில் ஏழு பெட்டிகள் ஒன்றையடுத்து ஒன்று வரிசையாக இருந்தன... கண்களைக் கவரும் ஒளி வீசின.

விவசாயி முகத்திலும் புன்முறுவல் படர்ந்தது... மகிழ்ச்சி பொங்கி வழிந்தது... அவன் மெதுவாக அடியெடுத்து வைத்தான்... பெட்டிகளை நெருங்கி அவற்றைத் திறந்து திறந்து பார்த்தான்... ஆனால், ஏழாவது பெட்டியைப் பார்த்ததும் அவன் மனம் திடுக்கிட்டது... ஏனென்றால் அதில் பாதியளவு தான் பணம் இருந்தது.

"ஆறு பெட்டியும், அரைப் பெட்டி பணமும் ... இது என்ன கணக்கு...?" என்று நினைத்தான் விவசாயி... அந்த அரைப் பெட்டி நிறைந்தால் தானே, ஏழு பெட்டி பணத்துக்கும் அவன் உரியவன் ஆவான்...? ஆகவே, அவன் ஆறு பெட்டிகளை மறந்தான்... அரைப் பெட்டியையே நினைக்கத் தொடங்கினான்... அதை நிரப்புவதே தன் முதல் வேலையாகக் கருதினான்.

அடுத்த விநாடி, அவன் தன் நகைப் பெட்டியைத் திறந்தான்... அதிலிருந்த ஆபரணங்களை எல்லாம் எடுத்தான்... தன் மனைவியையும் அழைத்து, அவள் அணிந்திருந்த கம்மல், வளையல், அட்டிகை ஆகியவற்றையும் கழற்றிக் கொடுக்கும்படி ஆணையிட்டான்.

விவசாயி அவற்றை உருக்கினான்... பணமாக மாற்றி அந்தப் பெட்டியில் போட்டான்... பெட்டி நிறையவில்லை.

விவசாயி சிந்தித்தான்... வீட்டிலிருந்த நெல் முழுவதையும் விற்றான்... பாத்திரங்களை விற்றான்... பண்டங்களை விற்றான்... தொழுவத்தில் கட்டியிருந்த பசுவும் கன்றும் அவன் கண்களில் பட்டன... உடனே அவற்றை அவிழ்த்துக் கொடு போய்ச் சந்தையில் விற்றான்... எல்லாவற்றையும் பணமாக மாற்றிப் பெட்டியில் போட்டான்... பெட்டி நிறையவில்லை.

விவசாயிக்கு ஆத்திரம் வந்தது... அவனுக்கு வேலை மீது நாட்டம் செல்லவில்லை... உண்ணவும் தயங்கினான்... அவன் உண்ண நினைத்தாலும், ஏமாற்றமே அடைந்திருப்பான்... சமையல் செய்ய ஒரு பிடி அரிசியும் இருக்கவில்லை... பாவம் அவன் மனைவியும் பட்டினி கிடந்தாள்.

திடீரென்று, அவனுக்கு மற்றொரு எண்ணம் தோன்றியது... தான் வேலை செய்த பண்ணையாரிடம் ஓடினான்... கை கட்டி நின்றான்... கூலி போதவில்லை என்று முறையிட்டான்...

பண்ணையார் மிகவும் நல்லவர்... குறை கேட்டதும் மனம் இறங்கி அவனுக்கு இரு மடங்கு கூலி அளந்தார்... ஆயினும் விவசாயியின் வீட்டில் பட்டினி தாண்டவம் ஆடிற்று... அதிகமாகக் கிடைத்த தானியத்தையும் விற்றுப் பணமாக மாற்றிப் பெட்டியில் போட்டான்... பெட்டி நிறையவில்லை.

விவசாயியும் அவன் மனைவியும் எலும்பும் தோலுமாக இளைத்துப் போயினர்... உடுத்திக் கொள்ளக் கந்தல் துணியும் இல்லாமல் திண்டாடினர்... என்றாலும் விவசாயி தன் ஆசையைக் கை விடவில்லை... பிச்சை எடுக்கவும் துணிந்தான்... ஊரார் சிரித்தனர்... மனைவி புலம்பி அழுதாள்.

பிச்சையெடுத்த பணத்தையும் சிறிது சிறிதாகச் சேமித்து, அந்த அரைப் பெட்டியில் போட்டான்... பெட்டி நிறையவில்லை.

விவசாயி நாளுக்கு நாள் மெலிந்து கொண்டே போனான்... காலம் நகர்ந்தது... வாரங்கள் மாதங்கள் ஆயின.

ஒரு நாள் பண்ணையார் அவனை அழைத்தார்... அவனுடைய துயரத்துக்குக் காரணம் கேட்டார்... "ஒரு மடங்கு ஊதியம் பெற்ற போது நீ மகிழ்ச்சியாக இருந்தாய்... இப்போது இரு மடங்கு ஊதியம் அடைகிறாய்... ஆனால், ஏன் இளைத்துத் துரும்பாகி விட்டாய்?" என்றார்.

தலை குனிந்து நின்றான் விவசாயி... மீண்டும் பண்ணையார், "நீ அந்த மரத்தின் அசரீரியின் ஆசை வார்த்தைக்கு அடிமைப்பட்டாயா...? அதன் சொல்லைக் கேட்டு ஏழு பெட்டி பணத்தையும் வாங்கிக் கொண்டாயா...?" என்று வினவினார்... தன்னுடைய ரகசியம் எப்படித் தெரிந்தது என்று தலையைச் சொறிந்த விவசாயியைப் பார்த்து, பண்ணையார், " உன்னிடம் கேட்டதைப் போல என்னிடமும் அந்த மரம் கேட்டது... ஆனால் நான், 'பணமும் வேண்டாம்... சங்கடமும் வேண்டாம்.' என்று தீர்மானமாகச் சொல்லிவிட்டேன்..." என்று தனக்கு ஏற்பட்ட அனுபவத்தைக் கூறினார்...

பண்ணையார் மற்றொரு விபரத்தையும் எடுத்துக் கூறினார்... "அந்தப் பணம் மாயமானது... ஏனென்றால் அந்த பணம் இலவசமாக வந்த பணம்... அதைச் செலவிட ஒருவராலும் இயலாது... மேலும் மேலும் சேர்க்கத் தூண்டுமே தவிர, நல்ல வழியில் ஓர் எள்ளத்தனையும் செலவிட அது இடம் கொடுக்காது..."

விவசாயி கையைப் பிசைந்தான்... தன் அறியாமையை நினைத்து வருந்தினான்... உடனே பண்ணையார் அவனை நோக்கி," ஓடு, ஓடு," என அவசரப்படுத்தினார்.

எங்கே ஓடுவான் அவன்...?

மாயக்குரல் ஒலித்த மரத்திற்குச் சென்று பண்ணையார் சொல்லிக் கொடுத்தபடியே, "எனக்கு ஏழு பெட்டி பணம் வேண்டாம்..." என்று கூவினான்... அசரீரியும் "சரி" என்றது...

விவசாயி வீடு திரும்பினான்... அவன் மனதிலிருந்த சுமை எங்கேயோ பறந்து போயிற்று... கூடத்திலிருந்த ஏழு பெட்டிகளும் மாயமாய் மறைந்தன... அவற்றைப் பின்பற்றி அங்கே குடி கொண்டிருந்த ஆசையும் துன்பமும் ஒழிந்தன.

உண்மையாக உழைக்க ஆரம்பித்தான் விவசாயி... இழந்து போன எல்லாச் செல்வங்களும் அவனை வந்தடைந்தது.

பணத்தைப் பற்றிய பாடல் வரிகளைப் படிக்க இங்கே சொடுக்கித் தொடரவும்... அதற்கு முன் இந்தப் பதிவைப் பற்றித் தங்களின் கருத்து என்ன...?

புதிய பதிவுகளை பெறுதல் :


தொடர்புடைய எண்ணங்களின் வண்ணங்கள் சில :


முகநூல் மூலம் கருத்துக்களை பகிர :

கருத்துகள்

கருத்துரையிடுக

நகுதற் பொருட்டன்று நட்டல் மிகுதிக்கண்
மேற்சென்று இடித்தற் பொருட்டு. (குறள் 784)

நட்புச் செய்துகொள்வது நண்பரோடு சிரித்து மகிழ்வதற்காக மட்டும் அல்ல. மிகுதியாகத் தவறு செய்யும்போது, அவரைக் கடிந்து திருத்துவதற்கே ஆகும்.